வியாழன், 11 மே, 2017

பஜ்ஜி சொஜ்ஜி - கோடை மழை

ரமேஷ் ரக்சனும் நானும் மாலை உணவு முடித்துத் திரும்பும் பொழுது. தேநீர் குடிக்கலாம் போலிருந்தது. அவன் குல்ஃபி சாப்பிடலாம் என்று சொன்னான். உண்மையில் இரவில் வயிறு நிறைய உண்ணும் போது, டெஸ்ஸர்ட் எடுப்பது நல்லதா? அல்லது தேநீர் குடிப்பது நல்லதா எனக் குழம்பினாலும், குல்ஃபிக்கே மனம் திரும்பியது.

மழை தூறிக்கொண்டிருக்க, டாஸ் போட்டுப்பார்த்துவிட்டு அவனோடு தங்காமல் கிளம்பினேன். சரியாக ஆர்காட் ரோட் - லிபர்டி நிறுத்தம் அருகே, சினிமாவிலோ அல்லது ரேஸிலோ வருவது போல வரிசையாக ஒன்பது வாகனங்கள் சரிந்து விழுந்தன. என்னுடைய டோக்கன் நம்பர் ஆறு. ஒரே கூச்சலும் களேபரமுமாக சற்றைக்கெல்லாம் ஒரு எமர்ஜென்சி சூழலை நகரம் எதிர்கொண்டது போன்ற தோற்றம், பேருந்து நிறுத்தத்திலிருந்து volunteerஆக வந்து விழுந்தவர்களைத் தூக்கிவிட, புதிதாகப் போடப்பட்டிருக்கும் சாலையின் அதிகப்படியான வளவளப்புத்தன்மை தான் காரணம் என்று கவனித்து தொடர்ந்து வந்த மற்ற எல்லா வாகனங்களையும் தடுத்து நிறுத்தி மெதுவாகப் போகச் சொல்ல, தியேட்டரில் இல்லாத படிகளில் எட்டு வைத்து நடப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாக தள்ளிச்செல்ல ஆரம்பித்தார்கள்.


நம்மோடு சேர்த்து கூட ஏழு, எட்டு பேர் விழுந்திருக்கிறார்கள் என்பதாலும் அத்தனை ரணகளத்திலும் பெரிதாக ஏதும் நிகழவில்லை என்பதாலும் ஒருவரோடு சிரித்துக்கொண்டோம். காலில் லைட்ட ஒரு கீறல் தான்.

பின்னே என்ன - மாநகராட்சியின் இப்படியான மட்டமான சாலை அமைப்பைக் கண்டித்துப் போராடவா முடியும்? இதில் காலைச் செய்தியில் குப்பை லாரி வழியாக சிந்திய எண்ணெய் கசிவால் தான் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படும்போது என்ன சொல்ல.

குழிகளுக்கு நடுவே ஆங்காங்கே தெரியும் சாலைகள் மட்டுமே மழையிலும் சரி, இரவிலும் சரி நாம் பாதுகாப்பாய் கடக்க உதவுகிறது என்று உணர்ந்ததும் ஐயப்பந்தாங்கல் பகுதி கவுன்சிலருக்கு கீழிருந்து எழும்முன்பே நான் நன்றி சொல்லிக்கொண்டேன். பாக்கெட்டிலிருந்து விழுந்த செல்போனையும் இத்யாதிப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு நன்றி சொல்லி ஒரு சுடச்சுட பதிவு ஒன்றைப் போடலாமென்று பார்த்தால், சென்னையில் மழையிரவு விபத்து ட்ரெண்டிங் ஆகிட. “இந்த சென்னைப் பசங்க அலப்பற தாங்கல”ன்னு கவிஞர் பழனிவேள் திட்டுற மாதிரி ஒரு காட்சியும் வந்து போனது.

இருந்தாலும் உணவிற்குப் பிறகு தேநீர் குடித்திருந்தால் இத்தனை மந்தமாக இருந்திருக்காது என்று தோன்றியது, இப்ப தான் ஏழாயிர ரூபாய் கொடுத்து இஞ்சின் வேலை பார்த்து வைத்த வண்டி பரிதாபமாய் இருக்க, ஒரு நபர் அதை எடுத்து சைடு ஸ்டாண்ட் போட்டார்.
வடபழனி லஷ்மன் ஷ்ருதி அருகே ஒரு தேநீர்கடை இன்னமும் திறந்திருக்கும் என்று சொல்லு ஓரத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை சைடாக எடுக்க, இத்தனை களேபரத்தையும் சல்வார் கொள்ளாத ஒரு யுவதியொருத்தி நேராக தன் ஆக்டிவாவை என் வாகனத்தில் நேராக வந்து மோதினாள். டோக்கன் நம்பர் 10.
அப்போதும் இந்தக் களேபரத்தை எதுவுமே கவனிக்காமல் என் மீது அப்படியான ஒரு கரிசனம் அவளிடமிருந்து
“அறிவு இல்ல?”
ஓ அதுவும் கீழ விழுந்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக