தூக்கம்
ஈஷ்வரின் நடமாட்டத்தை கவனிக்கச் சொல்லியிருந்தேன். அலுவலத்தில் அவனைப்
பார்க்கச் செல்லும் போதெல்லாம், சானுவுக்கும் கண்களால் ஒரு வருகைப்பதிவை செய்துவைப்பதை வருடக்கணக்காக செய்து
கொண்டதால், இவனுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று சுபத்ரா சொல்லும் முன்னரே
இவனை கவனித்தபடி இருந்து வருகிறேன். சானு மெசஞ்சரில் வந்து அவன் ஏதோ ஆன்லைன் ஷாப்பிங்கில்
ஆர்டர் செய்திருக்கிறான், ஆனால் தொடர்ந்து ஒரு வாரமாக வெவ்வேறு நண்பர்களின் ஐடி மூலமாகப்
பெற்றுவந்துள்ளான், இந்த முறை சானுவின் ஐடியைக் கேட்டுவிட்டுப் பிறகு வேண்டாம் எனச்சொல்லியிருக்கிறான்.
ஏதோ மறைத்தபடியும் திருதிருவென வாங்கியதாகச் சொன்னாள். அவனைப் பார்த்துவரச் சொல்லிப்
பணித்தது. அவன் இருக்கும் ப்ளாக்கிற்கு விரைந்தேன். மாடிப்படிகள் வழியாக ஏறலாமா? ஒருவேளை
நான்காம் மாடியிலிருந்து வரும் லிஃபிடில் அவன் வந்தால்.
4
3
2
1 அவன் தான். என்னைப் பார்த்ததும் முகம் வியர்த்தது. இருவருமே
பார்க்கிங் சென்றோம். போனில் எனது அலுவலகத்தில் காரணத்தைச் சொல்லிவிட்டேன்.
என்னடா கார் எடுத்துட்டு வந்துருக்க, பைக் ல தான வருவ
“ம்ம்ம்”
ஆக்ஸிடெண்ட்டா
பதில் சொல்லவில்லை. காரை கிளப்பினான். நானும் உள்ளே அமர்ந்தேன்.
“நான் வீட்டுக்குப் போகலை”
தெரியும்
“நான் பாருக்கும் போகலை”
பின்ன
“கொஞ்சம் தனியா விடுடா”
என்ன ஷாப்பிங் பண்ணுற
முறைத்தான்.
சொல்லுடா
“சுபத்ரா கிட்ட பேசுனியா”
டாக்டர் கிட்டயே பேசினேன். அவுங்க ஏதும் மாத்திரை கூட தரலைன்னு சொல்றாங்க…
நீயா என்ன பண்ணுற. ஆன்லைன்ல ரெண்டு மாத்திர தான் தருவாங்கன்னு, பத்து வெப்சைட்ல பத்து ஐடில ஆர்டர் போடுற அளவுக்கு என்ன ஆச்சு ஒனக்கு.
சிரித்தான்
எங்க தான்டா போற
”ஏதாவது ஒரு பார்க்குக்கு போறேன்”
பார்க்கா?
….
என்ன புது கேர்ள் ஃபிரண்டா
சிரித்தான்.
தூங்கறதுன்னா வீட்ல தூங்குடா, கண்ட இடத்துல போய் படுத்துக்கிட்டு,
ஆன்லைன்ல ஸ்லீப்பிங் பில்ஸ் வாங்குற… என்ன ஆச்சு ஒனக்கு. எதுக்கு எல்லார் ஐடியும் வாங்கி
யூஸ் பண்ணுற. நீயா நெட்ல படிச்சுக்கிட்டு மாத்திரை வாங்குறது. மடத்தனம்.. படிச்சவன்
மாதிரியா பிஹேவ்.
“தற்கொலை பண்ணறேன்னு நெனச்சுயா?”
ஒரேடியா போய்ச் சேர்றது மட்டுந்தான் தற்கொலை இல்ல ஈஷ். வாழ்க்கைய
தெனமும் கொன்னுக்கிட்டு இருக்கற சேடிஸ்ட் நீ. நீ சுபத்ரா கிட்ட என்ன பேசுன.
“உன்னால நான் இந்தோனேஷியான்னு சொன்னென்”
ஏன் இப்படி இறுகிப்போய்ட்ட நாயே. உன் மைண்ட் செட்க்கு கார்லாம்
ஓட்டாத, நான் ஓட்டுறன், எங்கப் போவனும் சொல்லு.
“ஒரு மயிறும்…….”
பிறந்து சில நாட்களே ஆன கன்றுக்குட்டி அது. செவலை நிறத்தில்.
தடுமாறித் தடுமாறி சாலைக்குள் அங்குமிங்கும் ஓடியது நேராக இவன் காரில் மோதி, தூக்கி
எறியப்பட்டு மெரிடியன் கம்பத்தில் பட்டு விழுந்துத் துடித்தது. சிக்னலும் அருகேயே இருப்பதால்,
கூட்டம் கூட ஆரம்பிக்க. வேகவேகமாக வெளியே வந்து பார்த்தோம். மூக்கு வாய் வழியாக இரத்தம்
கொட்டுக்கொண்டிருந்தது. கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் கூடியது.
என்னைக் கோபமாகப் பார்த்தான்.
இங்க ஏதும் பெட் க்ளினிக் இருக்கா சார்.
கொஞ்சம் நடந்து சென்று ட்ராஃபிக் போலிஸிடம் விசாரிக்கக் கிளம்பினேன்.
அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர் முகம் மாறுவதை பார்க்கையில் ஏதோ அசம்பாவிதம்
நிகழ்வதாய் தோன்றியது, திரும்பிப்பார்த்தால் ஈஷ்வரை இரண்டு பேர் அடித்துக்கொண்டிருந்தார்கள்.
நானும் போலீஸ்காரரும் அங்கே விரைந்து வருவதற்கும் அவன் மேல்
சில அடிகள் விழுந்துவிட்டன.
சட்டைக் கிழிந்திருந்தது, அவன் மூக்கிலும் இரத்தம் வந்திருந்தது.
அவர்களை என்னால் அடிக்க முடியாது என்று தெரியும். கன்றுக்குட்டியை வளர்த்தவள் அழுதுக்கொண்டிருந்தாள்.
கன்றுக்குட்டி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.
மோடி புண்ணியத்தில் ஏடீஎம் சார்ஜினைத் தவிர்க்க எப்போதும்
அஞ்சாறு பிங்க் நோட்ஸ் இருந்ததால். அவற்றில் இரண்டைக் கொடுத்துட்டு அவனை மீட்டோம்.
பக்கத்தில் வெட்னரி மருத்துவமனை என்று தெரிந்ததும். அந்தக் கன்றுக்குட்டியை எடுத்து
வரச்சொல்லி காரின் பின் கதவைத் திறந்துவிட்டான். ஸ்லைடு கதவு அதற்குத் தக்கதாக இருந்தது.
அருகிலிருந்த டிஸ்பன்சரியில் அவனுக்கு முதலுதவி செய்தோம்.
மீண்டும் பார்த்துவிட்டு வருவோம் என்று வெட்னரி மருத்துவமனைக்கு செல்வதாகச் சொன்னான்.
எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவனுக்காகச் சென்றேன்.
அவன் மட்டும் உள்ளே சென்றான்.
அரை மணி நேரமாகியது அவன் வரவில்லை.
அவனை அடித்த ஒருவன் ஆஸ்பத்திரியிலிருந்து கீழே நேராக என்னிடம்
வந்தான். நான் கொடுத்த நோட்டுகளை என் பையில் வைத்துவிட்டுச் சென்றான்.
பதட்டமடைந்த நான் மேலே சென்றேன். கன்றுக்குட்டி இறந்து போய்விட்டதாக
அட்டெண்டர் சொல்ல அவனைத் தேடினேன். அவன் அழுது அழுது தூங்கிப்போய்விட்டதாக அவன் தலையைக்
கோதிவிட்டபடி கண்கள் கலங்க அந்த பெண் சொன்னாள்.
சுபத்ராவை அழைத்தேன்.
"இந்தோனேஷியா - நிலைமை சீராகிவிட்டது சுபத்ரா"
ஜீவ கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக