ஞாயிறு, 5 மார்ச், 2017

கனவு மெய்ப்படும் கதை


காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் வெறி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது. பால்ய நண்பன் சிவாவுடன் சேர்ந்து எத்தனை கற்பனைக் கதாப்பாத்திரங்கள் உருவாக்கியிருப்போம். காமிக்ஸில் வரும் ஒவ்வொரு பேனலின் சித்திரத்தையும் மனப்பாடமாக பள்ளி நண்பர்களுக்குக் கதையாகச் சொல்வேன். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில், ஏனோ என் தந்தையும் நாராயணன் மாமாவும் எனக்காக காமிக்ஸ் புத்தகங்களை வாங்கித் தந்த காலக்கட்டம் தான் என்னை இன்றைக்கும் உந்திக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றின் பின்புலம். ஆனால் அவர்களும் காமிக்ஸ் வாசகர்களே, அவர்களுக்கு என்னை வைத்து, அவர்களும் வாசிக்க ஒரு வாய்ப்பாக மாறுகிறது.
கிராஃபிக் நாவலாக புதிய வடிவங்களில், கதைகளில் தீவிரத்தன்மையோடு அறிமுகமாகும் போது. அது நிரப்பிய என் வெற்றிடங்கள் தான் என்னை, என் எழுத்தை ஓவியங்களிடமிருந்து எழுத்தாய் எடுத்துக்கொள்ள உதவுகிறது என்று கூட நம்புகிறேன். சொற்ப அளவிலேயே சினிமாக்கள் பார்க்கிறேன் என்றாலும், காட்சி மொழி கிராஃபிக் நாவல் வழியாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தான் என் கதைகளிலும் PANELகளாகவே அமையுமாறு காட்சிப்படுத்த முயல்கிறேன்.
கிங் விஷ்வாவுடன் நடந்த சந்திப்பும் அதன் வாயிலாக அறிமுகமான கணபதியும் வேறு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என நினைக்கவில்லை.
ஆனால், ட்ராட்ஸ்கி மருதுவிற்கு நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். அவர் தொடர்ச்சியாகக் காட்சிமொழி பற்றியும், கிராஃபிக் மொழி பற்றியும் பேசி வந்த விஷயங்களைப் பதிவு செய்து வருகின்றேன் என்கிற முறையில். கிங் விஷ்வாவுடன் சேர்ந்து யாவரும்.காம் நடத்திய கிராஃபிக் நாவல்கள் பற்றிய முதல் கூட்டத்தில், பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கும் நமக்கு கிராஃபிக் நாவல் என்கிற ஆசையையாவது விதைத்துக்கொள்ள ஒரு நியாயம் கிடைத்தது.
ஆனால் அந்த நிகழ்வுக்கு தான் எத்தனை இடர்பாடுகள் இருந்தன, கிராஃபிக் நாவல் பற்றிய புரிதல் இல்லாமல் சில நட்புகள் என்னை எச்சரிக்க, காட்சிக்கலைகளை போற்ற வேண்டிய பீடங்கள் என நம்பிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து வந்த தீவிரமான விமர்சனம். மிக அதிகமாகவே என்னை பாதித்தது. அதன் கலைத்தன்மை குறித்த கேள்விகளுக்கு அப்போது என்னிடம் பதிலில்லை. ஆனால் ட்ராட்ஸ்கி மருதுவிடம் இருந்தது.
மேற்குலக தாதாயிஸத்தின் முக்கியக் கலைஞர்கள் பற்றிய ஒரு அறிமுக உரையை நிகழ்த்திய மருது சொன்ன விஷயங்களில் புரிந்து கொண்ட DRAUGHTMANSHIP, ஆயிரக்கணக்கான ஓவியங்களை அத்தனை அற்பனிப்புடன் வருடக்கணக்காக வரைந்து கொண்டிருந்த ஓவியர்களின் கலைப்படைப்புகளைத் தெரிந்து கொண்ட இடம், என் பயணத்தை மறுவரையறை செய்தது என்பது முற்றிலும் உண்மை. அதன்பிறகு தான் ஏ கே கூமாரசாமி போன்ற அறிஞர்களின் தத்துவங்களை நான் விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறேன்.

ஆக ட்ராட்ஸ்கி மருதுவிற்கு என் தனிப்பட்ட நன்றி.
கணபதியுடனான சந்திப்பு ஓவியர் செல்லம் அவர்களின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலில் நிகழ்ந்தது. பின்னர் கிராஃபிக் நாவலுக்கான எங்கள் கூட்டத்தில் அவரும் பங்கேற்றார். அவரது ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தேன், பிரமாதமான கோட்டுச் சித்திரங்களிலிருந்து அரூப ஓவியங்களுக்கு பெயர்ந்து கொண்டிருப்பதாக அவரது பயணத்தை அறிந்து கொண்டேன். அவ்வப்போது அவர் எழுதும் மற்றும் மொழிபெயர்க்கும் ஓவிய தத்துவங்கள் குறித்த பதிவுகள் மிக முக்கியமானவைகளாகப்பட்டன.
ட்ரங்குப்பெட்டிக் கதைகள் வழியாகக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக அவரது நட்பு.
அவரோடு ஒருநாள் பெசன்ட்நகரில் சந்திக்கும்போது என் புத்தகத்தை அவர் வாங்கிக்கொள்ளும் சந்திப்பாகத் தான் திட்டமிட்டிருந்தோம். காற்றாட நடந்து கடற்கரையில் அலைகளுடன் நடந்து வந்ததில் தான் தெரிந்துக்கொண்டேன், இரண்டு பேருக்கும் ஒரே WAVE-LENGTH என்று, அவரும் என்னைப் போலவே அல்லது அவரைப்போலவே நானும் சில INITIATIVEகளை நம்பியும், ஏமாந்தும் தாமாக உருவாக்கும் உத்வேகத்தில் இருப்பதையும் பரஸ்பரம் தெரிந்து கொண்டோம்.
GREATMINDS THINK ALIKEபோல இல்லை, ஆனால் உலக வரலாற்றில் ஏதோ ஒன்று புதிதாக உருவாகுவதற்கு முதன்மையான காரணம் அதன் தேவை தான். இது தான் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க PATTERN, எங்களிருவருக்கும் தத்தம் பாதைகளில் இருக்கின்ற ஏதோ ஒரு முக்கியமான தேவை ஒன்று, என்னவென்று எங்கள் சந்திப்பின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் நாங்கள் அதனைத் தொடங்கும் இடமென நிச்சயத்திருந்தது வேறு ஒரு இடமாக இருந்தது. ஆனால் இருவருக்குமான பாதைகளில் அதை ஆரம்பிப்பதற்கான நேரம் சற்றுத் தள்ளிப் போய்கொண்டிருக்க, கிராஃபிக் நாவல் என்கிற வேறொரு வடிவம் சாத்தியமாகியது.
யாவரும் பதிப்பகம் வாயிலாகக் கொண்டுவருவதே பெரிய விசயமென நம்பிய நான், எனது கதையே அதன் ஆரம்பமாக இருப்பது என்கிற ஆச்சரியம் இன்னுமே தீர்ந்துவிடவில்லை. அத்தனைக்கும் காரணம் கணபதியின் DEDICATION தான். கணபதியின் வீட்டிற்கு சென்றிருந்த போது மேற்கிலிருந்து கதையில் இருக்கின்ற ஒரு காட்சியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் , அந்த விநாடிகளை இன்னும் என் மனம் சேமித்து வைத்திருக்கின்றது.
காட்சி - ட்ரங்கு பெட்டிக் கதைகள்
மேற்கிலிருந்து - ட்ரங்குபெட்டிக் கதைகள்
காட்சி எனும் சிறுகதை ஒரு கிராஃபிக் நாவலாகவே கொண்டு வரலாம் என்று சொன்ன மறுகணமே. Y NOT என்கிற ஆரகிள்(அசரீரீ இல்ல ஆரகிள்) இருவருக்குமே வந்திருக்க வேண்டும். செயல்பட ஆரம்பித்துவிட்டோம். இந்தப் பரிசோதனைக்குப் பின்னர் சிறந்த தமிழ் சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவரலாமா என்றும் யோசனை. எப்படியோ அடுத்தடுத்துப் பேசிக் கொண்டிருந்தது, இன்று ஆக்கத்திற்குள் செல்ல வைத்துவிட்டது. இங்கே வா.மணிகண்டனின் நிசப்தத்திற்கும் அதன் வாயிலாகக் கிட்டிய வரவேற்பும், பின்னர் அதுவே தமிழ் இந்துவில் கவனம் பெற்று, பல நண்பர்களின் உற்சாக வாழ்த்துகளோடும், எதிர்பார்ப்புகளோடும் எங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.
FUN AT WORK என்கிற ஒரு தத்துவத்தை FUNஆக எடுத்துக்கொள்ளாமல் படுசீரியஸாக எடுத்துக்கொள்பவன் நான். கணபதியும் அவ்வாறு தான் சர்வேதச அளவிலும் அவரது ஓவியங்கள் கவனம்பெற்று வரத்துவங்கியிருக்கும் காலத்தில், ஆத்ம திருப்தி என்கிற ஒற்றை லாபத்தைத் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பாறாத அவரது கடும் உழைப்பு COMPLIMENTARY ஆக அவரது ஓவியவெளியிலும் அடுத்த இடத்திற்கு அவரைக் கொண்டு செல்வதாக நான் அவதானிக்கிறேன்.
கோடுகளில் நெருக்கமாக ஒரு வெளியிலும், வண்ணங்களோடு விளையாடும் அரூபப் படைப்புகளோடு ஒரு வெளியிலும் என ஒரே சமயத்தில் இருவேறு வேலைகளைச் செய்துவருவது எனக்கு வியப்பாகவும், புதிய திறப்புகளையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
குறிப்பிட்ட அளவு நாம் வேலை செய்தால் போதும், அதுவே அதனை கவனித்துக் கொள்ளும் என்று சொன்னார். (அதுவே அதனை அதுவாக என்று நாங்கள் தெளிவாக மற்றவர்களைக் குழப்பக்கூடாது என்பதால் ஒரு சின்ன இல்லஸ்ட்ரேஷன்{ஆம்} கீழே – ஆனால் என்ன வில்லத்தனம் என்று கேட்கக்கூடாது) 

ALL YOU NEED IS A PUSH

if ur Art = Madness (கண்டிஷன்ஸ் அப்ளை)
அதாவது குறிப்பிட்ட அளவு நாம் தீவிரமாக வேலை செய்தால் போதும், பின்னர் அந்த வேலையே தனக்கானதைத் தேடிக்கொள்ளும் என்கிற பொருள்படும்படியான சொல்லாடல் அது. ஆனால் அதனை மிகவும் நம்புகிறேன். வெற்றி பெற்றவர்களின் Patternகளின் ஒன்றாக இதையும் கவனிக்க முடிகிறது. 
<<Push>>
அவ்வளவு தான்.
இனித்தொடரும் பதிவுகளில் கிராஃபிக் நாவல் எப்படி உருவாகிறது என்கிற கதையையும் எழுத முயற்சிக்கிறேன். 
ஜீவ கரிகாலன்

நன்றி : யாவரும்.காம்
http://www.yaavarum.com/archives/3779

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக