வியாழன், 30 மார்ச், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 1


லெமன் ஜூஸ்

யுகாதித்திருநாள் அன்று சென்னையே விழாக்கோலம் பூண்டது என்று சொன்னாலோ, எழுதினாலோ காழ்ப்புணர்வுடன் தமிழ்தேசியத் தூய்மைவாதி என்று காழ்ப்புணர்வுடன் லைக்கிடும் என்று மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சாப்பிட்ட ஆம்லேட் வயிற்றினுல் தனித்தே இருப்பதன் சோகத்தை ஏப்பமாகப் பாட ஆரம்பித்ததால். ஒரு கடையில் எழுமிச்சை சாறு குடிக்க, வண்டியை ஓரங்கட்டினேன். கொஞ்சம் பந்தாவாக கடைக்குள் வருபவர்கள் லெமன் ஜூஸ் இருக்கா என்று கேட்டால் இப்போதெல்லாம் பெரும்பாலான கடைகளில் ரேஷன் கடை அலுவலரைப்போல் முறைக்கின்றனர். குறைந்தபட்சம் லெமன் மிண்ட் என்றாவது சொல்ல வேண்டும், ஒரு எழுமிச்சையோடு சில புதினா இலைகளும் சேர்க்க முப்பது ரூபாய் கொடுத்தால், ஒகே – நீங்க கஸ்டமர் தான்.

ஆர்டர் செய்த லெமன் ஜூஸை போட்டுக்கொடுத்துவிட்டு, சாப்பிட்டுக்கொண்டிருந்த அவன் வேலையாளை ரொம்ப நேரமாகத் தின்பதாகத் திட்டியபடியே வெளியே கிளம்ப ஆயத்தமானார்.

“இன்னைக்கு தான் கூட்டமே இல்லையே. லீவ் விட்ருக்க வேண்டியது தான” என்றான். அன்றைக்கு கவர்மண்ட் லீவ் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனதாகச் சலித்தார். அது ஒரு குடியிருப்புப் பகுதி தான், கடை விடுமுறை விடுமளவுக்கு அந்தப் பகுதியில் தெலுங்கர்கள் அதிகமா என்று ஆச்சரியமாக இருந்தது. ஹோலிக்கு சவுகார்பேட்டை சென்றால் தான் தெரியும்.

“பாய். எங்க புத்தாண்டுக்காவது லீவு கொடு”

“புத்தாண்டே!! ஒங்களுக்கு எப்ப புத்தாண்ட்டு” என்கிற நக்கல் தொனிக்கு நானே திருதிருவென முழித்தேன் என்னெதிரே வந்தமர்ந்தவரைப் போலவே. நான் ஒரு தேதியைச் சொல்லலாம் என்றும், என்னருகில் இருந்தவருக்கு மற்றொரு தேதியும் தோன்றியிருக்கலாம். எப்படியோ நல்லவிதமாக நாங்களிருவருமே வாய் திறந்து அவமானப்படவில்லை.
“ஏன் ஏப்ரல் 14 தான்” என்றான்.

 “ஓ….அது விஷுடே. இப்படியே எங்க ஃபங்கஷன காப்பியடிச்சு, எங்க செண்ட மேளத்த, எங்க ட்ரெஸ்ஸன்னு எல்லாத்தையும் காபியடிங்க” விழுந்து விழுந்துச் சிரித்தபடி… லுங்கியை மடித்துவிட்டபடி வெளியேறினார்.

“##தா லவுடே கபால்” என்றபடி கைகழுவிவிட்டு கல்லாவில் அமர்ந்தான்.
“இவுங்களச் சொல்லி என்னப் ப்ரயோஜனம். கவர்மெண்ட் எங்க லீவு கொடுக்குது” என்னெதிரே இருந்தவர் அவனைப்பார்த்து.

“தமிழன்னாலே கேணப்பைய தான சார். அந்த ##பீப்## வந்தா நல்லாருக்கும்னு புள்ளையார்மேல சத்தியம் செஞ்சி சொன்னான் ஒரு பாடு” அவன் தன் செந்தூர நண்பன் ஒருத்தனின் புகழ்பாடினான்.

”சரி ஒங்க மொதலாளி, விஷு அன்னிக்காவது லீவு கொடுப்பானா” என்றவர் முடிக்கும் முன்பே.

“###பீப்#### ### கஞ்சப்பைய. அதான் சொன்னான்ல ஒங்க புத்தாண்டு ஜனவரி மாசந்தான். நீ கடைக்கு வந்துடுன்னு சொல்வான். இவனுக்கு மோடியே தேவல”

“இந்த வருஷம் பொங்கலுக்கே லீவு இல்லன்னு சொல்லிட்டாங்கள்ல. எப்படிப்பாத்தாலும் நமக்குன்னு ஒரு மசிரும் இருக்கக்கூடாதுன்னு” என்று எதிருப்பவர் சொல்லும் போதே என்னைப் பார்த்து ஏதோ அவனிடம் சைகையைக் காட்டினார். அவனும் அத்தோடு பேச்சை நிறுத்திக்கொண்டான். அவர்கள் ஏன் பேச்சை நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.

யாருடைய சுவாரஸ்யமான உரையாடலுக்கு இடையூறாக நான் எப்படி இருக்கிறேன் எனத் தெரியவில்லை. நாய்களின் உல்லாசத்தின் போது அவற்றைக் கடந்து செல்லும் மனிதனின் நாகரிகத்தை அவை எப்படிப் பார்க்குமோ தெரியாது, ஆனால் எனக்கு அது நெருடியது. அவர்கள் ஏன் நிறுத்தினார்கள். கல்லாவிற்கு வந்து காசு கொடுக்கும்போது. அங்கேயிருந்த கண்ணாடியில் என் முகந்தெரிந்தது. காலையில் நண்பருடைய புதிய வாகனத்திற்கு பூஜை போட்டபோது, விபூதியும் மஞ்சளும் வைத்துக்கொண்டேன். விபூதித்தடம் மறைந்துவிட, வியர்வையில் மஞ்சள் சந்தனமாகப் பூத்திருந்தது. அதை கவனிக்கையில் சிரிப்பு வந்தது. வேகமாக அவற்றை அழித்தேன், அவன் நம்மிடம் பேச்சுக்கொடுப்பான் என்று தீர்கமாகத் தோன்றியது.

அவன் முகம் ஆக்ரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலையாய் விரிந்தது. அவன் கேள்வியை எதிர்கொள்ளத் தயாரானேன்.

“சார்.. நீங்களும் கேணப்பய கூட்டந்தானா”

ஆமாம் என்று சொல்லிவிட்டு சட்டென நகர்ந்தேன். அந்த கட்சிக்கு தேர்தலில் இந்த முறையும் டெபாஸிட் கிடைக்காது என்று என் நண்பர் பாலாஜி சொன்னதை மனம் ஒப்புக்கொண்டது.

- ஜீவ கரிகாலன்


1 கருத்து:

  1. வெகுஜன கதைக் களமும், அரசியலும் அருமை தோழர். டீக்கடையில் இருந்ததாகவே உணரமுடிந்தது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு