வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பஜ்ஜி சொஜ்ஜி - 76 * நைட்டி அணிந்த தேவதை

சிவகாசி  கந்தகபூமியை குட்டிஜப்பனாக்கி வைத்திருக்கும் மண்ணில், அங்கிருந்து 35 மைல் தூரத்தில் பிறந்த எனக்கு கலைச்சின்னங்கள் பாதுகாப்பு பற்றி பேச வாய்ப்பு கிடைத்திருக்கும் போது, இடிக்கப்பட்ட என் சொந்த வீட்டின் சிதிலங்கள் பற்றிய நினைவு எழாமலில்லை  வெங்கலத்திலான கலைநயமிக்க பல பானைகளும், வித விதமான பாத்திரங்களும் எவர்சில்வர் என்று எளிமையாய் கையாளப் பழகியிருந்த பாத்திரங்களுக்கு விற்கப்பட்டதும் வேறு எந்த அடுக்குமாடி நாகரிக அங்காடிகளிலோ நினைத்துப் பார்க்க முடியா விலைக்கு வாங்கி  என் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் கொடுக்காய் புளியோடு ஒப்பிட்டுப் பேசுவதும் ஒன்று தான். கலையுணர்வு அகன்று விட்ட சமூகத்தில் மிஞ்சியிருக்க ஒன்றுமில்லை. ஆம் இப்போது எங்கள் வீடிருந்த இடம் வெற்று நிலம்.
*
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அருங்காட்சியகம் இருப்பது  அரசாங்கம் அமைக்கும் போது உறுதிமொழியாகச் சொல்லப்படும் ரகசியக் காப்பு பிரமானங்களிலும் வைத்திருப்பார்கள் போல, நான் இருபது வருடமாக வாழ்ந்து வந்த ஊரில் அப்படி ஒரு அரங்கம் இருந்தது எனக்குத் தெரியாமலே போனது. அப்படி அந்த ஊரை விட்டு மாற்றலாகிப் போன பின்பு அவ்வரங்கம் பற்றி அறிய வந்ததும், ஒரு திருமணத்திற்காக அதே ஊருக்கு விடுப்பில் சென்ற போது  அந்த மியூசியத்தின் அரங்க அதிகாரியும் அதற்குப் பக்கத்து மண்டபத்திலுள்ள அவரது நெருங்கிய உறவின் திருமணத்திற்கு சென்றிருப்பதாக அந்த அரங்கத்தின் காவலாளி சொன்னான் சார் !! அப்படி அங்க ஒன்னுமில்லை சார்  வெறும் தூசி தான் படிஞ்சுகிடக்கு” – அரங்கம் பூட்டப்பட்டிருந்தது.

சென்னை அருங்காட்சியத்தில் எங்கள் சொந்தவூரில் வறட்சியின் காரணமாய் ஒரு புதிய கிணறுவெட்ட முனையும் போது கிடைக்கப்பெற்ற ஜக்கம்மாவின் சிலை,கட்டபொம்மனின் பாசறை அங்கிருந்ததற்கான சாட்சியாக கேள்விப்பட்டிருந்த நான், அந்த சிலை அகழ்ந்தெடுக்கப்பட்டதும் அதற்குப் பாத்தியமென்று உரிமை கொண்டாடிய கட்டபொம்மனின் இனத்தை சேர்ந்த மக்களின் கோரிக்கையான அச்சிலையை வைத்து ஒரு கோயில் எழுப்ப முயற்சித்த மக்களிடமிருந்து  தேசியம் மீது நம்பிக்கை கொண்ட கணவான்கள், சென்னை மியூசியத்தில் சேர்த்துவிட்டதாய் சொன்னார்கள். இன்று விசாரித்தால் அப்படியொரு ஆவனமே வரவில்லை என்ற பதில் எனக்கு ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை  ஏனென்றால் வேறென்னவொன்றை எதிர்பார்க்க முடியும். இதற்கு நானும் ஒரு காரணம் என்று என்னிடமிருந்து தான் எண்ணிக்கையைத் துவங்குகிறேன்.

பனமலை ஓவியம் பற்றி கேட்டுக்கொண்டிருந்த நான், அதைத் தேடுவதற்கான முகவரியை திருவண்ணாமலையில் இருந்து தேடிக்கொண்டிருந்த போது அதை இணையத்தில் பதிந்துவைத்தவர்களில் எந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் அல்லது பயணக் கட்டுரை எழுத்தாளர்களின் கட்டுரைகளில் கிடைக்காத தகவலெல்லாம் வாரவழிபாட்டுக் கூட்டத்தில் அங்கத்தினராய் இருந்தவரின் வலைப்பதிவில் மட்டுமே கிடைத்ததும்; திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்கு சஞ்சலத்தை உருவாக்குமென்ற குரங்குச்சிலையின் ஆண்குறியை உடைத்துவிட்டு அதில் ஒரு மின் முரசை அமைத்தவர்கள் செயலும் முரண். அடிப்படைக்கலையுணர்வு என்பது துளியுமற்ற சமூகத்தில் இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வது இயல்பு தான்.
சிவகாசியில் இருக்கும் நமக்கு ஊர் வரலாற்றைச் சொல்லித்தருவதற்கு கோயில் தல வரலாற்றைத் தவிர வேறொன்றுமில்லை என்பது ஆறுதலான சேதி தான். திருத்தங்கலில் இருக்கும் டெரகோட்டா மண்பாண்டங்கள் பற்றியோ அல்லது சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை திருத்தங்கலில் வைத்து நடைபெற்ரது என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். ஆறாம் நூற்றாண்டுக் குடைவரை என்று சொல்கிறார்கள், கோயிலின் நிழற்படங்கள் இணையத்தில் கிடைக்கும் பொழுது அது கவலையளித்தது. குறைந்தபட்சம் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலின் பழமை எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்று. ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவை கேட்பாரற்று சிதிலமாகிவிடுகின்றன என்பது ஒருபுறமும், மற்றொரு பக்கம் அப்படி அவர்களை கையில் சிக்காமல் மக்களோடு இணைந்திருக்கும் கோயில்களை நான் புது வர்ணப்பூச்சுகளாலும், கிராணைட்களைக் கொண்டும் முறையற்ற மறுவுருவாக்க வேலைகளில் தன் தொன்மையை இழக்கின்றது. எத்தனையோ முறையற்ற கிராணைட் குவாரிகளில் லாபக்கணக்கில் கல்வெட்டுகளும், வரலாற்றுச் சின்னங்களும் அழிந்து போகின்றன.

 அர்ஜுனா நதி எனும் நதி இம்மாவட்டத்தில் தான் பாய்கிறது இன்று வரை அதில் அகழ்வாய்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அகழ்வாய்வுகளைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் செய்திகள் வந்தாலும் அது நம்மைச் சேரப்போவதில்லை. ஏனெனில் நாம் தான் வைப்பாறு, அர்ஜுனா நதியை பாதுகாப்பதற்காக நிர்மாணம் செய்யப்பட்ட கோயிலான இருக்கண்குடியில் சாமியின் பெயர் சொல்லியே அதன் வழிகளை அடைத்து விட்டோமே. வேடந்தாங்கள் போன்ற புகழ்பெற்ற சரணாலயங்களுக்கு வரும் வாய்க்காலில் எப்படி புதிய வீட்டு மனைத்திட்டங்களின் வரவு பறவைகளை ஏமாறச் செய்தன என்பது புதிய செய்தி, நம் ஊருக்காக இறக்குமதி செய்யப்பட்ட சீமவேலி மரங்கள் அதையே செய்ய ஆரம்பித்து சில பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

கழுகுமலை தமிழகத்தின் எல்லோரா என்று சொல்லப்படுகிறது, அர்ஜூனா நதியின் ஆற்றுப் படுக்கைகளில் கிடைத்து வரும் டெர்ரகோட்டா (மண்பாண்டங்களின் சிதிலங்கள்) அது கலக்கும் வேம்பார் கடல் பகுதி வரை நீண்டிருக்கலாம் பெரிய பொக்கிஷங்கள் சீமைவேலிக் காடுகளுக்குள் இருக்கலாம் (அவை தான் கொற்கைத் துறைமுகம் வரை நீண்டிருக்கும் நாகரிகத்தின் சுவடுகளாக இருக்கலாம்) ஆனால் சுரண்டப்பட்ட மணல் மாஃபியக்களின் இயந்திர ஓந்திகளின் பெரிய சக்கரங்களில் நசுக்கப்பட்டிருக்கும். தங்கள் காதல் வரலாற்றைச் செதுக்காமல், வரைவதற்கு ஏதுவாய் - கழுகுமலையின் வெட்டுவான் கோயிலில் வெள்ளையடித்தது நற்செயலே என்று சொல்லலாமா??
திருத்தங்கலின் சுதைச் சிற்பங்களில் இருப்பது இயற்கையான வண்ணம் தானா ? என்று அந்தப் பச்சை வண்ணத்தைப் பார்த்தபடி, குடைவரையைத் தேடினேன். ஒருவேளை நமக்குக் கிடைத்தத் தகவல் பொய்தானா ??

அத்தனை பிரம்மாண்டக் கோயில் ஒரு குடைவரையைத் தொடர்ந்து எழுப்பப்பட்டது என்று எனக்குத் தந்த அந்த மனிதர் பொய் சொல்லிவிட்டாரா என்றபடு கதவுகள் பூட்டப்பட்டிருந்த தெப்பத்தின் சிதிலமடைந்துக் கொண்டிருக்கும் படித்துறையை கவனித்தபடி.. இது இயற்கையான குளம் தான், வணிகத்தூது செல்லப் புறப்பட்டிருக்கும் சமணத் துறவி இந்தக் குளக்கரையைக் கடந்திருந்தால், இங்கே நிச்சயம் ஒரு குடைவரையை வைத்திருப்பான் என்று தெப்பத்திற்கு எதிரே இருந்த பள்ளி கொண்ட பெருமாளை மீண்டும் தரிசிக்க சென்றோம். மேற்கூரை மண்டபத்தை பார்த்தபடி சென்றோம், உள்மண்டபம் ஒரு குடைவரையின் தோற்றத்தைத் தந்ததுஅது ஒரு கிராணைட் கோயிலாகப் புதிப்பிக்கப்பட்டிருந்தது. குடைவரைகான எந்தச் சுவடும் பெருமாளை அடித் தொழ வரும் பக்தர்களுக்குக் கிடைக்காது. “சமணன் வெற்றி கண்டான், கடைசியில் சிவகாசி வணிகர்கள் இயற்கையைச் சுரண்டிய பாவத்திற்கு பரிகாரம் தேடியிருப்பார்கள் போலஎன்று சொல்ல, மண்டபத்தின் முதல் தூணில் இருந்து ஒரு பெண் குரலில் சிரித்த ஒலி. அந்தச் சிற்பம் எந்த தேவியோ, யக்‌ஷியோ தெரியவில்லை ஆனால் அவளுக்கு நைட்டி அணிவிக்கப்பட்டிருந்தது.

நைட்டி அணிந்த அந்த தேவதையிடம் விடை பெற்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக