ஞாயிறு, 1 மார்ச், 2015

பஜ்ஜி - சொஜ்ஜி - 77 // எண் எனும் மாயை

நிகழ்வின் எண் – 29 என்று போடுவது அவசியம் தானா என்று தோன்றியது போல் இருந்தது, நேற்றைய டிஸ்கவரி புக் பேலஸ் சிற்றரங்கத்தை யாவரும்.காம் நிகழ்வு நடைபெற்றது. இதுவரை கவிதைகளுக்காகவே அதிகம் கூட்டங்களை நடத்திய நாங்கள் – சிறுகதைக்காகக் கொஞ்ச காலம் ஒதுக்குவோமே என்று நினைத்தபோது, எனக்கு அதில் தனி மகிழ்ச்சி (சிறுகதை என் ஏரியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்).

எண் எனும் மாயை

29ம் நிகழ்வு ஆரம்பிக்கப்படும் வரை இரட்டை இலக்கத்திற்குக் கூட நண்பர்கள் வரவில்லை எனும் போது நேராக விஜய மகேந்திரன் வந்து கேட்டார். ”ஏங்க யாவரும்னு ஒரு 15 பேர் தலைகாட்டுவிங்களே” உங்க ஆட்களைக் கூட காணுமே என்றார். அந்தக் காலம் மலையேறிப் போச்சு என்று அவர் புத்தகத்திற்கு அகநாழிகை ஏற்பாடு செய்தக் கூட்டங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இன்று அவர் சொன்னது போல மீண்டும் ஒரு கூட்டம் சாத்தியமா என்று அவர் சொன்னதில் உண்மையிருந்தது. தினமும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி ஒரு மாதிரியாக அலுப்பு வந்துவிட்டது.

சாத்தப்பன் வராதது ஏன் என்று தெரியவில்லை, கோணங்கிக்கு விளக்கு விருது அளிக்கும் நிகழ்வுக்கு சென்றதால் ஐயப்ப மாதவன் வரவில்லை. திருநெல்வேலி, பாண்டிச்சேரி, சிவகாசி என்று எங்கு நடந்தாலும் – தனது பங்கேற்பு இல்லாவிடினும் கூடப் பார்வையாளனாகவாது சென்றுவிடும் மூத்த எழுத்தாளர் கணேசகுமாரனோ, சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட – அடுத்த நாவலை எழுதிக்கொண்டிருக்கும் ரமேஷ் ரக்சன் அவர்கள் என யாரும் வரவில்லை. அதைத் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட அவர்களை எதிர்பார்த்து இருந்தது என்பது உண்மை தான்.
***
குமாரநந்தன்
நந்தன்ஸ்ரீதரன்

அழைப்பிதழடிக்க கோகுலனிடம் கொடுக்கும் போது தான் எதேச்சையாக இந்தப் பெயரைப் பார்த்தேன் மணமக்கள் போன்ற உணர்வைத் தந்தது. கவிஞர் இந்திரனும் வரமுடியாது போய்விட்டது கூடுதல் இறுக்கத்தைத் தந்தது. வழக்கம் போல அரைமணி நேரத் தாமதமாக ஆரம்பித்தோம். வேடியப்பனின் வரவேற்பு எப்போதும் போல உற்சாக டானிக்.

வேல்கண்ணனின் அறிமுகத்தோடு விஜயமகேந்திரன் இரண்டு நூல்கள் குறித்தும் தன் பார்வைகளை முதலாவதாக முன்வைத்தார். விஜய்மகேந்திரனை இப்போது தான் நாங்கள் OFFICIALஆகப் பேச அழைத்திருக்கிறோம். கடந்த சில மாதங்களில் 12 கூட்டம் வரை பேசியாயிற்று என்கிற களைப்பு தெரியவில்லை அவர் பேச்சில். எந்தப் பூச்சுமற்ற அவர் பேச்சு சிறந்தவைகளை முன்வைத்துப் பின்னர் விமர்சனங்களையும் சொல்லி வந்தார். ஃபேண்டசியாக, மாய யதார்த்த சிறுகதைகள் எழுதும் ஒருவன் ஏன் யதார்த்த வகை – அதிலும் குடிகாரக் கணவன் வீட்டின் நிலையைச் சொல்லும் 80களின் தொனியாக அதைப் பார்ப்பதாக தன் கருத்தினை முன்வைத்தார். தாழி – (நந்தன் ஸ்ரீதரன்) குறித்துப் பேசும் போதும் சிறுகதை நிறைவுறும் இடத்தைச் சுட்டிக் காட்டி அதற்குப் பிந்தைய வரி அவசியம் தானா என்று கேட்டார். ”நண்பர்களாக இல்லாவிடில் நிறைகளை மட்டும் தான் சொல்லியிருப்பேன்” என்றபடி தன் உரையை நிறைவு செய்தார்.

கவிதைக்காரன் இளங்கோ – யாரிடமும் அதிகம் பேசவே மாட்டார் , இளங்கோவின் கண்கள் ஷார்ப், நீங்கள் பார்ப்பதற்கு கன்னடப்பட ஹீரோ மாதிரி இருக்கிங்க என்கிற கலாய்த்தலுக்கு மத்தியில் தனது பிராண்டட் கருப்புச் சட்டையணிந்து மேடையேறினார். இளங்கோ எந்தக் கதைகளையும் உளவியல் பூர்வமாக ரசிக்கக் கூடியவர். நிதானமான – சற்றே நீளமான பேச்சு தான் என்றாலும், கதைகள் எழுதும் ஒருவனுக்கு இத்தகைய வாசிப்புடையவன் இருந்தால் அவன் திருப்தியடையும் தருணம் இளங்கோவை சந்திப்பதாகவே இருக்கும். இளங்கோ கதாப்பாத்திரங்கள் வழியாக, டைம்லைன் வழியாக என்று எறும்பு போல் ஊர்ந்து வந்த உணர்வு. இந்த எறும்பிற்காகவே என் சிறுகதைத் தொகுப்பிற்கான முயற்சியை வெகு விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது.

ஏற்புரை வழங்கவந்த இரு நண்பர்களும் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப் பட்டவர்களாகத் தெரியவில்லை. நிறைவான கூட்டமாகவே இருந்தது. விஜயின் விமர்சனங்களுக்கான அவர்களது பதில் எதிர்ப்பார்த்தது போலவே- அது விஜயின் தனிப்பட்டப் பார்வையாகவே இருந்தது என்கிற பதிலாக வந்தது. இதுவும் கூட ஒரு விமர்சனத்தை எளிதாகக் கடந்துவிடும் SUBWAY பதிலாக இருப்பது பற்றி ஒரு கவலையாகவே இருக்கிறது. ஒருபக்கம் முகம் தெரியாத நபர்களின் கூட்டுமுயற்சி விமர்சனங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கிற வாதம் ஏற்புடையதாக இருக்க, மற்றொரு புறம் நேரிடையாக விமர்சனம் வைப்பவர்களை இப்படி எளிதாகக் கடந்து செல்லும் போக்கு சரிதானா என்கிற ஐயமும் எழுகிறது எனக்குள்.

இந்த நிகழ்வில் – சிறுகதைக் குறித்த விமர்சனங்கள் செய்யும் போது கதைகளைச் சொல்ல வேண்டுமா? நேர்கோட்டுக் கதைகள் என்பதற்கான வியாக்யானங்கள்? முகம் தெரியாத குழுவாத ஃபேக் ஐடிக்களுக்கு ஆதரவு நல்கும் ஆரோக்கியமற்ற போக்குகள் ஆகிய பொதுவான விசயங்கள் குறித்தும் பேசப்பட்டன.


வந்திருந்த நண்பர்களோடு – நிறைவாக ஒரு கூட்டம் நடந்தேறியது இந்த எண்களைப் பற்றிய கவலையை மறைத்தது. இப்போது இப்படி வாசகர்கள் கூட்டம், புத்தக விற்பனை, வரலாற்றில் பெயர் பதிவது, சான்றோர்கள் ஆசி போன்ற எந்த எண்ணிக்கை பற்றிய கவலையும் அல்லாமல் நடத்தப்படும் கூட்டங்கள் தொடரவேண்டுமானால் இந்த எண்ணும் தேவையாயிருக்கிறது. அடுத்தது யாவரும் -30 ??? யாருக்கு

- ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக