அருள்
என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின்
வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் முதல் சக
பயணி, நண்பன்தானே!
என் பெற்றோரைத் தாண்டி இருக்கும் மனிதர்கள், வேலைகள்,
விவசாயம், கிணறு, சினிமா, ஹோட்டல், கடை, பெண்கள், படிக்கட்டுப் பயணம்... என
எல்லாம் அவனால்தான் அறிமுகம் ஆனது. அவன் ஒரு கோயில் பூசாரியாக இருந்ததால்,
அவனை 'நல்லவன்’ என என் தாய் நம்பினார். ஆகவே, அவனோடு சேர்ந்து ஊர்சுற்றக்
கிளம்புவது எனக்கு எளிதில் சாத்தியம் ஆனது.
நான் வசிக்கும் ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில்
இருக்கும் கட்டையன்குளத்துப்பட்டியில் உள்ள எந்த வீட்டுக்கும் சென்று
'அருள்’ என்ற பெயரைச் சொல்லிக் கேட்டால், மூன்று விதமான பதில்கள் வரும்.
'அட... இதுக்குப் பொறத்தாண்டி இருக்குதுல அதுதாம்பா அவன் வீடு!’
'ஓவ்... யாரு அருளா? இந்த... முன்னாடி இருக்குல்ல, அதான் அவன் வூடு. நீங்க யாரு?’
'ஆமா... அருள் களத்துக்குப் போயிருக்கான். நீங்க அவருக்கு சிநேகிதமா?’
ஆம், அந்த ஊரில் மொத்தம் இருப்பதே மூன்று வீடுகள்தான்.
இவன் பார்ட் டைம் பூசாரி மட்டும் அல்ல, பார்ட் டைம் விவசாயி; பார்ட் டைம்
டிராக்டர் ஓட்டுநர்; பார்ட் டைம் கந்து வசூல் அதிபர்... இதுபோக பார்ட் டைம்
கம்ப்யூட்டர் கோர்ஸும் படித்து வருகிறான்.
அன்றும்
அப்படித்தான்... என்னை வெளியே கூட்டிச்செல்ல அம்மாவிடம் அனுமதி
வாங்கிவிட்டான். அருளின் குலதெய்வத்துக்குக் கிடா வெட்டும் நிகழ்வு அடுத்த
வாரம். அதற்கு உறவினர்களை அழைப்பதற்காகச் செல்கிறான். என்னுடன் படித்த
செந்தமிழ்ச்செல்வி வீட்டு வழியாகத்தான் போகிறேன் என்றான். நான்
'தமிழ்’ப்பற்று உடையவன் என்பதால், அவனுடன் கிளம்பினேன். எங்கள் வீட்டுக்கு
அருகில் இருக்கும் அவனின் ஒன்றுவிட்ட மாமன் வீட்டுக்கு முதலில் போனோம்.
ரத்னம் மாமா இரும்பு வியாபாரம் பற்றி பேசியபடி,
''சமையலுக்கு யாரு? செட்டி இப்பல்லாம் நம்ம ஆளுங்களுக்கு சமைக்க வர்றது
இல்லையாமே?'' என்றார்.
அருள் என்னை முறைத்தபடியே, ''அப்பா எதுக்கும் ஒரு எட்டு போய்ப் பார்க்கச் சொல்லிருக்காரு. போய்த்தான் பார்ப்போமே!'' என்றான்.
''டேய், நாம அந்தத் தவசிப்பிள்ளை வீட்டுக்குமா போறோம்?'' என்றேன்.
பதில் எதுவும் சொல்லாமல், அங்கிருந்து சமத்துவபுரம்
வளைவில் திரும்பி தன் அம்மாவின் சொந்த ஊரான வரப்பட்டிக்கு வண்டியைச்
செலுத்தினான். பீக்காட்டைத் தாண்டியதும் ரயில்வே பாலமும், பின்னர் தனியார்
சிமென்ட் ஆலையின் ரயில்வே கிராஸிங்கையும் தாண்டி வண்டியை நிறுத்தினான்.
அங்கு இருக்கும் அடி பைப்பில் தண்ணீரை அடித்து, பிறகு அதன் முன்னே சென்று
குழாயில் வரும் தண்ணீரைப் பிடித்துக் குடித்தபடி, ''இந்த முறை நீ கொஞ்சம்
பேசாம இருக்கணும்'' என்றான்.
''அப்போ என்னையும் கூட்டிக்கிட்டுத்தான் அங்க போவியாடா?''
அருளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. வண்டி மெதுவாக
மட்டப்பாறையைத் தாண்டி, அடுத்து வரும் நாலு ரோட்டில் நின்றது. நாலு ரோடு
என்றால், நான்கு பக்கமும் சாலைகள் அல்ல; நாங்கள் வந்த சாலை இடதுபுறம்
திரும்புகிறது. வலதுபுறம் திரும்பினால், வெள்ளியணை சின்னக் குளம். நேராகச்
சென்றால், கன்னிமார்பட்டி / வரப்பட்டி கிராமங்களுக்குச் செல்லும் சாலை.
வரப்பட்டியில்தான் அவனுக்கு முக்கியமான சொந்தங்கள் இருந்தன. அவன் அம்மாயி,
பாட்டன், தாய்மாமன், அத்தை, பெரியம்மா, அருகில் இருக்கும் கணேசன் சார்...
என ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி அழைப்புகள். அங்கே வரக்காபி, டீ, மோர்,
இளநீர் என உபசரிப்புகள்; எல்லோர் வீட்டிலும் அரைச் செம்பு தண்ணீர் வேறு.
அங்கிருந்து கிளம்பிய நாங்கள், மூக்கணாங்குறிச்சியில்
உள்ள பெரியப்பா வீடு, அவன் பங்காளிகள் இரண்டு பேர் வீட்டுக்கும்
அழைப்புவிடுத்து, இன்னும் மூன்று லோட்டா தேநீர் குடித்து முடித்திருந்தோம்.
அங்கிருந்து கிளம்பி, திருமக்கம்பட்டியில் அவன் தங்கை திலகா வீட்டுக்குச்
சென்று அங்கேயும் ஒரு வரக்காபி. அப்புறம் அங்கே இருக்கும் அவனது மச்சான்
முறை வீட்டுக்குச் சென்றதும் உபசரிப்பு பலமாக இருந்தது. 'கடைக்குப் போய்
கலரு வாங்கிட்டு வர்றேன்’ எனப் போனார். இதற்கிடையில், அருளுக்குக் கல்யாணம்
கட்டயிருக்கும் பெண் எங்க ரெண்டு பேருக்கும் டம்ளரில் தண்ணீர் கொடுக்க,
அருள் தண்ணீரைக் குடிப்பதும் அவளைப் பார்ப்பதுமாக இருந்தான். கடையில் கலர்
வாங்கிக்கொண்டு திரும்பி வந்த மச்சான், மஞ்ச கலருல இரண்டு பாட்டிலை நீட்ட,
எனக்குப் புரிந்தது. 'இல்லங்க வவுறு சரியில்ல’ எனத் தப்பித்தேன். மறுக்க
முடியாமலும், அதேநேரம் இதுவரை ஜிஞ்சர் பானத்தைப் பார்த்திராத அருள், வாயில்
ஊற்றியதும் இஞ்சி தின்னக் குரங்குபோல் ஆனான். அவனைப் பார்ப்பதற்குக்
கொஞ்சம் பாவமாக இருந்தது. 'இவன் வூட்ல பொண்ணா?’ என்று முனகிக்கொண்டே
வண்டியைக் கிளப்பினான்.
நாங்கள் அடுத்து சென்ற ஊர் முஷ்டகிணத்துப்பட்டி. அங்கு
எனக்கு இரண்டு அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதலாவது, எங்கள் வகுப்பு
செந்தமிழ்ச்செல்விக்குத் திருமணம் ஆகியிருந்தது. இரண்டாவது, நாங்கள்
அடுத்து செல்லும் வீட்டில் இருக்கும் நபர் மூக்குத்திக்காரர்.
மூக்குத்திக்காரர்,
ஒரு செட்டியார்; அந்தப் பகுதியில் மிகப் பிரபலமான தவசிப்பிள்ளை.
கரண்டியோடு அவர் ஆஜராகும் எந்த விசேஷ வீட்டிலும் கலகலப்புக்குப் பஞ்சம்
இருக்காது. வட்டாரத்தில் மிகப் பிரபலமான தவசிப்பிள்ளை என்பதால், எல்லார்
வீட்டு சங்கதி, பூர்விகம், வரலாறு என அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டு
வம்பு இழுப்பார். அவரிடம் மாட்டினால் நம் ரகசியம் வெளிப்பட்டுவிடும் என
எல்லோருமே எச்சரிக்கையாக இருப்பார்கள்.
வாசலில் நின்றிருந்த அவர் மனைவிதான் முதலில் வரவேற்றார். ''வாங்க... வாங்க!'
'செட்டியார் இருக்காரா?' என்றான் அருள்.
'ஆருப்பா அது? பெரியவுக எல்லாம் வூட்டு பக்கம்
வந்துருக்காக. அட... அந்தத் தம்பியும் வந்துருக்குபோல. வாங்க... உள்ள
வாங்க' - வீட்டினுள் இருந்து எங்களைப் பார்த்துப் பேசியபடி கீழே இறங்கினார்
மூக்குத்திக்காரர்.
'ஏ! இந்தெ... அந்தக் கட்டிலை இப்படி எறக்கிப் போட்டுட்டு, காபித்தண்ணி போடு.'
''என்ன... பொழப்பு எப்படிப் போகுது செட்டியாருக்கு?'
அருள்தான் முதலில் பேசினான். நாங்கள் கட்டிலில்
அமர்ந்துகொண்டோம். அவன் கேள்விக்கு விடை அளித்தாலும், என்னையே
பார்த்தபடிதான் பேசிக்கொண்டிருந்தார்.
'இப்ப என்ன பொழப்பு... பெரிசா பொழப்பு! எல்லாரும் இப்ப
பெரிய கான்ட்ராக்ட் எடுக்கிறவனைத்தான் தேடிப் போறானுக. அவன் என்ன
செஞ்சாலும் சாப்பிடுறானுக. ஏன்னா, எல்லா கல்யாணமும் சத்திரத்துலதான
நடக்குது. சமையலும் அவுங்க சத்திரத்துலயே முடிவு பண்ணுறானுக. நம்ம சாதி,
சனம் மாதிரி பழகினாலும், வொறமொற (உறவுமுறை) ஆயிடுவோம்மா?
'பெரிசுக்கு இன்னும் என்ன கோபம்? எல்லாம் நடந்தது
நடந்துருச்சு. அதை அப்படியே வுட்டுரு...' என்றவன், 'அப்பாதான்
சொல்லுச்சு... 'மூக்குத்திக்காரரு சமையல் மாறி வராது’னு. அதனால இப்ப நீதான்
வரணும். நம்ம கிடா வெட்டுக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்து
ஆக்கிப்போடணும். தங்கச்சி வொறமொறலாம் வருவாங்க, மூக்குத்திக்காரரு யாருனு
காமிச்சிடுவோம்' என்றான்.
முகம் மலர்ந்த பெரிசு, என்னையே பார்த்தது, 'அதான் அருள் கூப்பிடுறான்ல, சம்மதம் சொல்லுங்க' என்றேன்.
'அது என்னமோ, மூணு ஊர், 84 மந்தையில ராசு மேல நா வெச்சிருக்கிற மருவாத தனிதான். இப்பவும் உங்கய்யாவுக்காக நான் சம்மதம் சொல்றேன்.'
எங்கள் முகங்கள் மலர்ந்தன. எதிர்பாராத விதமாக மறுபடியும் அந்தப் பழைய பேச்சை எடுத்தார் அவர்.
'இந்த அசலூர்க்காரத் தம்பி தெரியாமப் பேசினதை, பெருசா எடுத்திருக்க வேணாம்தான். ஒரு கோவத்துல விருட்டுனு கிளம்பிட்டேன்' என்றார்.
எனக்கும் சட்டெனக் கோபம் வந்தது. 'பெரிசு... நான்
அசலூர்க்காரன்தான்... இல்லைனு சொல்லலை. ஆனா, எங்க ஊர் பேரை வெச்சு நீரு
ஏமாத்துனதைத்தான் நான் சொல்லிக் காமிச்சேன். அது என் தப்பு இல்லை' என்றேன்.
'அப்போ நான்தான் கல்யாண வூட்ல ஏமாத்தினேனா?'
'என்ன செட்டியாரே! இப்ப எதுக்கு அதெல்லாம்... டேய், நீயும் ஏன்டா?'
'பரவாயில்லை அருளு, நான் கோவப்படலை. தம்பியே சொல்லட்டும்... நான் ஏமாத்திட்டேன்னு சொல்றியா?'
அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை. ''நீங்க
ஏமாத்துனிங்களா, இல்லையானு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அன்னிக்கு
செஞ்சது தூத்துக்குடி கேசரி கிடையாது' என்றேன். அப்படிச் சொல்லியதுதான்
தாமதம், விருட்டென அங்கிருந்து எழுந்தார். அடுத்து அவர் என்ன செய்வாரோ என
நாங்கள் பயந்தோம்.
'இன்னும் என்ன நம்ப மாட்டல்ல. அருள், உன் வண்டிச் சாவியைக் குடு. தோ... விசயபுரம் வரை போயிட்டு வந்துர்றேன்.'
'அட... எதுக்குப் பெரிசு இதைப் பெரிசாக்குற? டேய், நீ சும்மா இருடா!'
'இல்ல... தம்பி மேல தப்பு ஒண்ணும் இல்லை. நான்
விசயபுரத்துல இருக்குற நம்ம கடைக்குப் போயிட்டு வர்றேன்! தூத்துக்குடி
கேசரினா என்னன்னு, தம்பி கண்ணு முன்னாடியே செஞ்சு காமிக்கிறேன்.''
அருள் எவ்வளவோ சமாதானப்படுத்தினான். கடைசியில் சாவியை
எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு என்னோடு அமர்ந்துகொண்டான். அவரும் சாவியை
வாங்கிய வேகத்தில் விஜயபுரத்துக்குக் கிளம்பினார். காத்திருந்த சமயத்தில்
அந்தச் சம்பவம், என் நினைவுகளில் மீண்டும் வந்துபோனது!
அன்று,
அருளின் தங்கை திருமணத்துக்கு முந்தைய நாள். திருமணம் பழநியில். மொத்தம்
மூன்று டெம்போக்கள் பழநி மலைக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தன. கூட்டம்
தடபுடலாக இருந்தது. இரவு பழநிக்குக் கிளம்பும் முன்னர் நடந்த விருந்தில்
ஏகக் களேபரம். அன்றுதான் மூக்குத்திக்காரரைப் பார்த்தேன்.
கடைசிப் பந்தியில் நிறையப் பேருக்கு சாம்பார், ஸ்வீட்,
பொரியல்... தீர்ந்துபோய்விட, ஒரே சலசலப்பு. பிரச்னையை அருளின் அப்பாவும்,
அவன் பாட்டனும் தீர்த்துவைக்க முடியாது தோற்றுப்போய்விட, மூக்குத்திக்காரரே
ஒவ்வொருத்தரையும் சமாதானப்படுத்தினார்.
'ஏ மாரி... உனக்கு என்ன இப்ப பிரச்னை? செட்டி சமையல்
அப்படி. எல்லாரும் சாம்பாரை அள்ளிக் குடிச்சிட்டாங்க. மொத பந்தியிலேயே
உக்காந்துருக்கலாம்ல. விசயபுரத்துல பால்காரன் எப்படா வீட்டைவிட்டுக்
கிளம்புவான்னு யாரோ காத்துக்கெடந்தது மாதிரில கடைசிப் பந்திக்கு
வந்துருக்க. இந்தா ரசம், விட்டுக்கோ!'
'அது யாரு... கோம்பைக்காரரா? உங்க ஐயனுக்குச் சக்கரைனு
சீக்கு வந்து காலையே வெட்டி எடுத்தீங்களே, மறந்துபோச்சா? இப்போ 'கேசரி
வேணும்... கேசரி வேணும்’னு சண்டை பிடிக்கிறியே இது ஞாயமா? ரொம்ப ஸ்வீட்
சாப்பிடாத... அதுவும் இன்னிக்கு நான் பண்ண ஸ்வீட்டை எல்லாரும்
'நல்லாருக்கு... நல்லாருக்கு’னு ரெண்டு, மூணு தடவை வாங்கிட்டாங்க.
கேக்கும்போது தராமலா இருக்க முடியும்?'
இப்படி, பிரச்னை செய்த ஒவ்வொருவரின் ரகசியத்தையும் அம்பலப்படுத்துவது மாதிரி பயமுறுத்தி, பந்தியை முடித்துவைத்தார்.
அவர் போதாத காலம், அந்தக் கடைசிப் பந்தி ரவுசு பார்ட்டிகள் இருக்கும் கடைசி டெம்போவில் ஏறினார். நானும் அதில் இருந்தேன்.
என்னிடம்தான் ஆரம்பித்தார் அவர். 'தம்பி யாரு... புதுசா? நீயும் சல்லகுளமா?'
'இல்ல, வெள்ளியணை.'
'ஓ! நம்ப அருளு தோஸ்த்தா?'
'ம்ம்...'
'எல்லாம் நம்ப ஆளுகதானே!'
'ந்தா செட்டி, நீ என்னிக்கு நம்ப ஆளு ஆன? அவரு கதையும் உனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணப்போற?' - ஆரம்பித்தார் கோம்பைக்காரர்.
'அப்புறம், பெருசு என்னிக்குப் பந்திக்கு அளவா
சமைச்சிருக்கு? இப்படிக் கதை பேசியே எல்லாரையும் கரெக்ட் பண்ணிதான பொழப்பை
ஓட்டுது!'' என்று அவருக்கு கம்பெனி கொடுத்தான் சீரங்கன் மைந்தன் குணசேகரன்.
'தண்ணியடிச்சிட்டு, கொஞ்சம்கூட மருவாத இல்லாமப் பேசுறியே... உங்கப்பன் எவ்ளோ நல்லவன்' என்றார் தவசிப்பிள்ளை.
'பேச்சை மாத்தாத பெரிசு!'
'நான் எங்க பேச்சை மாத்துறேன்! உங்க சாதில
தவசிப்பிள்ளைங்க எத்தனை பேர் இருக்கானுங்க. எதுக்கு மொதல்ல என்ன வந்து
கூப்பிடுறாங்க? அதிகமா செஞ்சு வீணாக்கவும் கூடாது; யாரும் இல்லைனு
சண்டைபோடவும் கூடாது. சமையல்ல உப்பு, வொறப்பு இல்லைனு எந்த வீட்லயாவது
பஞ்சாயத்து நடந்துருக்கா? இல்ல... வாங்குற சாமான்ல கை வெச்சுட்டான்
தவசிப்பிள்ளைனு பேரு வந்துருக்கா? எதையும் பார்த்து, யோசிச்சுப் பேசணும்
சிறுவண்டுகளா' என்றார் கோபமாக.
'அட, அதை வுடு பெரிசு. இன்னைக்குக் 'கேசரி’னு வெறும் சக்கரையை அள்ளிப்போட்டு பண்ணியே வெள்ளக் கலரு கேசரி, இது ஊரை ஏமாத்துற வேலைதான?'
'அடேய்...
அது சாதாரண கேசரி இல்லை. தூத்துக்குடி கேசரிடா தம்பி. பெரிய
பெரிய கல்யாணத்துக்கு எல்லாம் போனாதானே இதுமாரி ஏதாவது தெரியும்!'
'தூத்துக்குடி கேசரியா... கேள்விப்பட்டதே இல்லியே!'
'ஆமா... இவரு பெரிய சீமைத்துரை. எல்லாத்தையும் தெரிஞ்சுவெச்சிருப்பாரு.'
'என்ன பெரிசு, நான்வேணா சீமைத்துரை கிடையாது. அந்தத் தூத்துக்குடிக்காரனையே கேப்போம். என்ன பங்கு... நீங்க தூத்துக்குடிதானே?'
எல்லோரும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தீர்ப்பு
என் கையில் இருப்பது எனக்குப் புரிந்தது. நானும் சிரித்துக்கொண்டே, 'ஆமாம்.
ஆனா, தூத்துக்குடி கேசரினு இவர் சொல்றதை நான் கேள்விப்பட்டதே இல்லை. கேசரி
என்னமோ நல்லாத்தான் இருந்தது. ஆனா, அது தூத்துக்குடி கேசரினு சொல்ல
முடியாது. ஒருவேளை, தூத்துக்குடி ஸ்பெஷல்னா சீனிக்குப் பதிலா உப்பைத்தான
கொட்டிருக்கணும். அப்ப வேணும்னா நம்புவேன்' என்று சொல்லிவிட்டுச் சிரிக்க,
டெம்போவில் இருந்த அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்தோம். அதற்குள் அவர்கள்
இன்னும் கொஞ்சம் ஓவராக...
'யோவ் பெருசு, தூத்துக்குடி எங்க இருக்குதுனு உனக்குத் தெரியுமா?'
'இருப்பா. நான் அன்னிக்கு தஞ்சாவூர்ல ஒரு கல்யாணத்துக்குப் போனப்பதான்... அந்தக் கேசரிய...'
'பாத்தியா... தூத்துக்குடி, தஞ்சாவூர் பக்கம்
இருக்குதுனு செட்டி சொல்றாரு. நான் அப்பவே சொல்லைல, இந்த ஆளு சரியான
ஃபிராடுரா!' என்றான்.
இந்த வாக்குவாதம், சற்றைக்கெல்லாம் பெரிய சண்டையாக
மாறிவிட, குஜிலியம்பாறை அருகே செல்லும்போது டெம்போ வண்டி நிறுத்தப்பட்டது.
மற்றொரு டெம்போவுக்குத்தான் செல்கிறார் என அனைவரும் எதிர்பார்க்க, துண்டை
உதறியபடி, ''உங்க பொழப்பே வேணாம்' என்றார்.
பலரும் அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போக,
வேறு வழியின்றி அவரை மட்டும் விட்டுவிட்டு டெம்போ கிளம்பியது. அவர் என்னைப்
பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த டெம்போவில் இருந்து விஷயத்தைக்
கேள்விப்பட்ட அருள், என்னிடம் வந்து தலையைச் சாய்த்தபடியே 'ஏன்டா..?'
என்றான்.
இன்றும்
அதே மாதிரி 'ஏன்டா..?’ என்று அருள் கேட்கும்போது, டி.வி.எஸ்-50
திரும்பிவரும் ஓசை கேட்டது. ஒரு மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் நுழைந்த
தவசிப்பிள்ளை, ஒரு வாணலியை எடுத்து வீட்டின் முன்வாசலில் வைத்திருந்த விறகு
அடுப்பின் முன்பு வைத்தார்.
'இப்ப என்ன செய்ற பெரிசு?' என்றான் அருள்.
'அந்தத் தூத்துக்குடி தம்பிக்கு இந்த மூக்குத்திக்காரன்
யாருனு காமிக்க வேணாம். அதனாலதான் இன்னிக்கு உங்க கண் முன்னாடியே செஞ்சு
காமிக்கிறேன். கேசரில மட்டும் எத்தனை வகை செய்வேன் தெரியுமா? சாதா கேசரி,
பைனாப்பிள் கேசரி, சேமியா கேசரி, வாழைப்பழக் கேசரி, ஆப்பிள் கேசரி,
தூத்துக்குடி கேசரி.'
'அது என்ன தூத்துக்குடி கேசரினுதான் நானும் கேட்கிறேன்.
எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒண்ணும் கிடையாது. தூத்துக்குடி ஸ்பெஷல்னா,
உப்பைத்தான் அதுல கொட்டணும்' அடக்கிவைக்க முடியாமல் மறுபடியும்
சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
'ஏன்டா... நீ பேசாம இருக்கவே மாட்டியா?' - அருளுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த வசனம்தான்.
'அந்தத் தம்பிய வுடு. நான் அவருக்குச் செஞ்சுகாட்டுறேன்.'
'அய்யா... செஞ்சு காட்ட வேணாம்... சொல்லிக்காட்டுங்க
அதுபோதும். அதுக்குத்தான் போறிங்கனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான்
உங்ககிட்டயே கேட்டிருப்பேன். பரவாயில்லை மொதல்ல பக்குவத்தைச் சொல்லுங்க.'
'ம்க்கும்...' தொண்டையைக் கணைத்தார்.
'மத்தவங்க மாரி இல்ல இந்த மூக்குத்திக்காரன். சரி,
பக்குவத்தைச் சொல்றேன்... மொதல்ல ரவையை ஒண்ணுக்கு ரெண்டு தடவை சலிச்சு,
சட்டியில் போட்டு வறுத்து எடுக்கணும்.'
'ம்ம்ம்... அப்புறம்!'
'ரொம்பவும் தங்க நிறத்துல வறுத்துறக் கூடாது. ரவை வறுக்கும் வாசம் வந்ததும்தான் எடுக்கணும்.'
'ம்ம்ம்ம்....'
'இன்னொரு சட்டியில முந்திரி, ஏலக்காய், திராட்சை
எல்லாத்தையும் நெய்ல வறுக்கணும். தேவைப்பட்டா கொஞ்சம் நிலக்கடலைகூட
போட்டுக்கலாம். நெய் இல்லாட்டி, டால்டா. அன்னிக்குலாம் நான் நெய்லதான்
வறுத்தேன்.'’
'சரி, மேல சொல்லுங்க.'
'அப்புறம்... ஒரு பங்கு ரவைக்கு இனிப்புக்குத் தகுந்த
மாதிரி தண்ணி ஊத்தணும். இதுலதான் தொழில் ரகசியம் இருக்கு. இனிப்பும்
நெய்யும் கம்மியா இருக்கணும்னா, ஒரு பங்கு ரவைக்கு சக்கரையும் தண்ணியும்
ரெண்டு பங்கு சேர்க்கணும். இதுவே கேசரி நல்ல இனிப்பா, பெஷலா இருக்கணும்னா,
ஒரு பங்கு ரவைக்கு ரெண்டரை மடங்கு அல்லது மூணு மடங்கு வரை சக்கரையும்,
தண்ணியும், நெய்யும்விட்டு நல்லா கிண்டணும்.'
'ம்ம்...'
'நல்லா கிண்டிட்டு... கரெக்டா எறக்கி வைக்கும்போது, அதுல கையளவுக்கு அள்ளி தூத்துக்குடியைக் கொட்டணும்.'
'என்னது... தூத்துக்குடியா? அதான் உப்பா?'
'யார்றா அவன்? மறுபடியும் மறுபடியும் உப்பா, சப்பானு கேக்குறான். நான்தான் 'தூத்துக்குடி’ங்கிறேனே.'
'அதான்... தூத்துக்குடினா என்ன பெரிசு? எங்களுக்குதான் மட்டுப்படலையே?' - நான் கேட்பதற்கு முன்பே அருள் கேட்டுவிட்டான்.
'அட, இதுதாம்பா' என்று சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்த பையில் கையைவிட்டுத் துழாவினார்.
'த பாரு... இது மாதிரியே மஞ்ச, பச்சைக் கலரு தூத்துக்குடினு கடைல கேட்டா கிடைக்கும். நான் என்ன பொய்யாச் சொல்றேன்?'
அவர் சொன்னதுதான் தாமதம், 'அய்யோ! மூக்குத்திக்காரரே...
இதை அன்னிக்கே தெளிவா சொல்லிருக்கலாமே. இதுக்குப் பேரு தூத்துக்குடி
இல்லை... டூட்டி ஃப்ரூட்டி.'
''ம்ம்ம் என்னாது?'
'டூட்டி ஃப்ரூட்டி' என்றேன் நான்!
-ஜீவ கரிகாலன்
-ஜீவ கரிகாலன்
(ஓவியங்கள் : ஷ்யாம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக