வெள்ளி, 27 டிசம்பர், 2013

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் - பஜ்ஜி-சொஜ்ஜி - 52

கிராஃபிக் நாவல் vs காமிக்ஸ் 


கிராஃபிக் நாவலுக்கும்,காமிக்ஸிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? "என்னடா இன்னும் காமிக்ஸ் வாசிச்சுக்கிட்டு இருக்கிற?" என்று என்னைக் கேட்கும் நண்பர்களுக்குத் தெரியாது தமிழ்நாட்டின் காமிக்ஸ் சாம்ராஜ்யம் பற்றி. விக்கிப்பீடியாவில் சென்று டெக்ஸ்வில்லர் என்று தேடினால் அந்த ஸ்பானிய கௌபாய்க்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பற்றிய தகவல் இருக்கும். பெரிய ஹீரோக்களான டெக்ஸ், லக்கிலுக்,ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி மட்டுமின்றி காமிக்ஸ் உலகில் பெரிதாக சோபிக்க முடியாத மாயஜால மன்னன் மான்ட்ரேக், கார்த், ப்ளாஸ்மா போன்றவர்களுக்கும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ரசிகர்கள். ஆனால், 25-15 வருடங்களுக்கு முன்பு யாரெல்லாம் வாசித்து வந்தார்களோ, இன்றும் அவர்கள் தான்  தமிழ் காமிக்ஸ் வாசிக்கும் பெரும்பான்மையானவர்கள்.

சீரியஸ் Literature இல் இல்லாத மரியாதை இதுபோனற படக்கதை Illustratorகளுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே, காமிக்ஸ் ரசிகர்களின் taste என்னவென்று உங்களுக்குத் தெரியும். காரணம் இந்த illustratorகளை மதிக்கக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் விஜயனின் முயற்சிகள் தான்,  Aurelio Galleppini, Jesus Blasco போன்ற Illustratorகள் பற்றி காலச்சுவடு எனக்கு அறிமுகமாகும் முன்னரே தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று வரை illustratorகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மரபினை சிறுபத்திரிக்கைகளில் பார்க்கவில்லை, அதில் விஜயன் மிகக் கவனமாய் செயல்பட்டிருக்கிறார்.

 கிராஃபிக் நாவல் என்றால் அட்டைப்படம், வண்ணங்கள், பக்கங்கள் என எல்லாவற்றிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் அது கிராஃபிக்ஸ் நாவலுக்கான விளக்கமல்ல. கிராஃபிக்ஸ் நாவலும் காமிக்ஸ் இதழில் வருவது தான், ஆனால் மற்ற தொடர்களைப் போன்று ஒரு கதாநாயகரின் சாகசம் என்றில்லாமல் ஒரு தனிக் கதை மட்டும் காமிக்ஸில் வருவதை கிராஃபிக் நாவல் என்று தெரிந்து கொள்ளலாம். அது காமிக்ஸ் எனும் வடிவத்திற்காக எழுதப்படாமல், எழுதி வைத்திருந்த நாவலை கிராஃபிக்ஸ் ஃபார்மில் கொண்டு வருவது என்று எளிதாகச் சொல்லலாம். சில பப்ளிகேஷன்ஸ் தனிப் பிரதியாய் ஒரு கிராஃபிக்ஸ் நாவலை உருவாக்கும், அதே சமயம் இவை தொடராகவும் வரும். முதன்முதலில் அமெரிக்காவில் 1960லிருந்தே புளங்கப்பட்ட வார்த்தை தான் கிராஃபிக்ஸ் நாவல் - நமக்கு இப்போது தான் அறிமுகமாகிறது.


சமீபத்தில் நான் வாசித்த ’சன்ஷைன்’ கிராஃபிக்‌ஸ் நாவலான  -”சிப்பாயின் சுவடுகள்” வாசித்த பின், கிராஃபிக்ஸ் நாவலின் scope பற்றி உணர்ந்தேன். கதை ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை, தொடர்ச்சியாக வாசித்து வந்த காமிக்ஸ்களைப் போன்றில்லாமல் அதிரடி தாக்குதல்கள், கொடூர முகம் கொண்ட வில்லன்கள், பஞ்ச் வசனங்கள் என எதுவில்லாமல் ஒர் சோகப் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் கதைக்களமது. 70களில் இருந்த ரயில் பாதை செல்லும் தாய்லாந்தின் நெல் வயல்கள், மறு ஆக்கம் பெற்ற ஜெர்மனியின் பெர்லின் என காட்டும் Landscapeகளிலிருந்து. கதையில் வரும் FLASHBACK காட்சிகளிலிருந்து, கதை நடக்கும் காலத்திற்கு பயணிக்கும் காட்சிகளின் கிராஃபிக் யுக்திகளை உணரும் பொழுது, உங்களுக்கு ஒரு திரைப்படத்தின் அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

 தாய்லாந்து வயல் வெளி  

  இந்த பீரியட் நாவல் வழியாக கிடைக்கப்பெறும் சில செய்திகள், நமக்குத் தெரியாத வரலாறு தான். ஆனாலும் ஒரு நாட்டுப் புரட்சியில் மற்றொரு நாடு தலையிடுவதும், அக்கிரமம் செய்வதும், அதே அணியில் ஒரு துரோகி - இன்னொரு நாட்டின் தலைவன் ஆக்கப்படுவதும். இனப்படுகொலை, அத்துமீறல்கள், ஊழல் என்பனவற்றை இயல்பாகத் துப்பறியும் ஒரு ரிப்போர்ட்டரின் கதையாக உருவாக்கப் பட்டிருக்கின்றது. 1963 வியன்னா ஒப்பந்தம் போன்று  உலக விஷயங்களைப் பேசும் இந்நாவலில் சுவாரஸ்யம் என்பது வேறு ஒரு தனிச்சுவை .

இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் அது - மீண்டும் தேவனின் கதைகளோ, சுஜாதா, அ.மி போன்றோரின் கதைகள், இது போன்ற கிராஃபிக் நாவலாக வரும் சாத்தியம் உருவாகலாம் அல்லது சில பப்ளிஷர்கள் test drive பண்ணுவார்கள்.



-ஜீவ.கரிகாலன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக