திங்கள், 23 டிசம்பர், 2013

பஜ்ஜி-சொஜ்ஜி - 51, கொற்றவையின் காலம்

கொற்றவையின் காலம்


முதல் பகுதியைப் பார்க்க

மாமல்லை அர்ஜூனன் தபசு வழியாக மேலேறினால் பழைய கலங்கரை விளக்கத்திற்கு கீழே இருக்கும் குகைக் கோயிலில் தான் மகிஷாசுரமர்த்தினியின் போர் சிற்பக் காட்சித் தொகுதி அமைந்திருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆட்சியில் கடைசியாக செதுக்கப்பட்ட தொகுதி என்று ஒரு வழிக்காட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன், அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மகிஷாசுரனை எதிர்த்து கொற்றவை செய்யும் உக்கிரமான போர்க் காட்சி புடைப்புச் சிற்பமாக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுதும் பல கோயில்களில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் மஹிஷாசுரமர்தினியின் சிற்பமும், போர் காட்சியும் படைக்கப்பட்டுள்ளது, வராக சிற்பமத் தொகுதியை நாம் பார்த்தது போலவே மற்ற படைப்புகளில் இருந்து மாமல்லையின் படைப்புகள் எவ்வளவு தூரம் வித்தியாசமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சிற்பங்கள் கடலில் இருந்து வீசும் உப்புக் காற்றினாலும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களின் மாசினாலும் தன் பொலிவை இழந்து கொண்டே இருக்கின்றன என்பதும் வருத்தப் படவைக்கும் விஷயம்.

இந்த போர் காட்சி சிற்பங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஓவியர் சந்ருவின் ஓவியம் எனும் மொழி, நா.பாலுச்சாமியின் அர்ஜூனன் தபசு போன்ற நூல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது, இவற்றோடு இணையம் வாயிலாக கொற்றவையின் பல்வேறு சிற்பங்களைப் பார்த்து வரலாம். இணையத்தில் கிடைக்கும் பல்வேறு கொற்றவை குறித்த சிற்பங்களில் மகிஷாசுரனின் சிரத்தை வெட்டிய பின்பு இருக்கும் காட்சி தான் உருவாக்கப் பட்டுள்ளது. மாமல்லையின் சிற்பங்கள் தான் அந்தப் போரின் உச்ச கட்டத்தை காட்சிப் படுத்தியுள்ளது.

மகிஷாசுரமர்தினி சிற்பத் தொகுதி, மாமல்லை


அர்ஜூனன் தபசு எனும் நூலில் இந்த போர் காட்சியானது நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஒரு போர்க் காட்சியோடு ஒப்பிடப்பட்டு, இரண்டு போர் காட்சிகளுக்கும் இடையேயான ஒற்றுமையை ஆசிரியர் கூறுகிறார் (பக்கம்:395), இது ஒரு முக்கியமான ஒப்பிடல். இது பல்லவ மன்னர்களின் கலைத் தேடல்களைப் பற்றிய ஒரு பிரக்ஞையை நம் மனதில் உருவாக்கிவிடுகிறது. இந்த தேடலைச் சாதாரணமான தேடல் என்று எண்ணிவிட முடியாது, ஏனென்றால் அந்தத் தேடலின் காலம் முழுமை பெற ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருந்தது என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாகத் தான் கிட்டதட்ட 200 (590லிருந்து -730 வரை)ஆண்டுகளாக , அதாவது ஏழு தலைமுறைகளாக ஒரு கலை அதன் முழு வேகத்தில் இயங்க வேண்டுமட்டும் தேவைப்படும் ஒரு அதியுன்னத லட்சியத்தை அவர்கள் மனதில் வைத்திருந்தனர். மன்னர்களும் சிற்பத்துறையில் வல்லுனர்களாகவே இருந்துள்ளனர்கள் என்றும் தெரிந்து கொள்ள இடம் வகுக்கிறது.  ஏனென்றால் இங்கிருக்கும் முக்கிய சிற்பப் படைப்புகள் 02ம் நூற்றாண்டு வாக்கில் உருவான மாபெரும் கலைப் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு( நாகர்ஜுனகோண்டா, மகேந்திரபுரி, அஜந்தா- எல்லோரா) ஒரு நாட்டினையே கலைவளமிக்க நாடாக உருவாக்கி வந்திருந்தனர் இந்த பல்லவ மன்னர்கள். சிற்பங்கள், ஓவியங்கள், ஆடைகள் நெசவு என பல்லவர்களின் தேசம் சிறப்புற்றிருந்தது. இந்த தாகம் தான் அங்கோர்வாட் எனும் உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படைப்பின் அடித்தளம்.

இந்த சிற்பத் தொகுதியில் நாம் பார்க்கும் காட்சி போரின் உச்சக்கட்டம்; மகிடன் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் காட்சி உடனிருக்கும் அசுரர்கள் யாவரும் தோல்வி முகத்தோடு இருக்க, மகிடன் மட்டும் அடுத்தடுத்த தந்திரங்களை கையாண்டு கொற்றவையோடு போர் புரியும் பாவனையுடன் இருக்கிறான். தன் இடக் காலை சிறிது மடக்கி, வலக்காலை சாய்வாக ஊன்றி ஒரு கையில் ஆயுதத்தைத் தூக்கியபடியும் மற்றொரு கையால் அதைத் தாங்கியபடியும் நிற்கின்றான். புராணத்தின் படி பல உருவங்கள் மாறி உருப்பெற்று போர் புரிகின்றான்.  எல்லா நிலைகளிலும் உக்கிரமான  போர் புரியும் கொற்றவை மற்றும் அவளது கணங்கள் சூழந்த படை வெற்றி பெற்று வருகிறது. இறுதியில் மகிடனும் கொற்றவையும் நேருக்கு நேர் போர் புரிகிறார்கள்.

சிற்பக் காட்சியில் நீங்கள் பாருங்கள் கொற்றவையின் படையைச் சேர்ந்த கணங்கள் முகத்தில் இறுதி வெற்றியை நோக்கி முன்னேறும் பரவசம் தெரியும், கொற்றவையின் முக்கிய படை வீரராக முன்னே நின்று போர் செய்யும் மற்றொரு பெண் கையில் வாளினைச் சுழற்றியபடி கீழே அமர்ந்து எழும் நிலையிலும், ஒரு அசுரன் தேவியின் தாக்குதலில் உயிரிழந்து கீழே விழும் காட்சியும் நம்மை ஒரு நிமிடம் போர்க் காட்சியை நம்மை பயமுறுத்தத் தான் செய்கிறது என்பது உண்மை, மகிடனின் பின்புறம் நிற்கும் சில அசுரர்கள் புற முதுகுக் காட்டி போகிறார்கள். மகிடனின் சிற்பம் அழகுணர்வையும் (Aesthetic) தருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் ஒரு தாக்குதலில் இருந்து தந்திரத்தால் தப்பித்து அடுத்த தாக்குதலைத் தொடங்குவதற்கு எத்தனிப்பது போல மகிடனின் சிலை அமைந்திருப்பது ஒரு சிற்பத் தொகுதி மூலமாக கடத்தப்படும் அற்புத உணர்வு, ANTI-HEROக்களின் பலம் தான் HEROக்களின் திறனை வெளிக்கொணரப் பயன்படுகிறது என்பதால் தானோ மகிடனின் சிற்பம் அத்தனை கலையுணர்வோடு நம்மைக் கவர்கிறது??

கொற்றவை போர் புரியும் காட்சி, தன் நான்கு ஜோடி கைகளில் ஒரு கை வில்லினை ஏந்திக் கொண்டும் மற்றொரு கை அடுத்த அம்பை எடுப்பதற்கும் தயாராக இருக்க, மற்ற கரங்களிலெல்லாம் பல ஆயுதங்கள் இருக்கின்றன. சிவனிடமிருந்து பெற்ற சூலம், விஷ்னுவிடம் பெற்றிருந்த சக்கரம், பிரம்மனிடம் பெற்றிருந்த வில் அம்பு , இவற்றுடன் கதை, வட்டு, கேடயம், சுருக்குக் கயிறு, சங்கு என இருக்கின்றது. கொற்றவை மற்றும் போர் புரியும் மற்ற யாவரின் கைகளிலிம் உலோகங்களால் ஆன ஆயுதம் என்று சொல்லப் போனால் வாளாக மட்டும் இருக்கக் கூடும் மற்ற ஆயுதங்கள் யாவும் உலோகமின்றி தயாரிக்கக் கூடியதே அவை கற்களாலும், மரத்தினாலும், யானைத் தந்தத்தினாலும், கடற்பாறைகள்/ஓடுகள்/விலங்கினங்களின் எலும்பினைக் கொண்டோ தயாரிக்கப் படும் (புராணத்தின் படி இந்திரனின் ஆயுதமான வஜ்ரமும் ஒரு முனிவரின் தியாகத்தால் அவரது முதுகெலும்பில் இருந்து எடுக்கப்பட்டது தான்). அதே சமயம் வாள்களும் கற்களினால் வடிக்கப் பட்டிருக்கின்றன, அவை வரலாற்றிட்கு முந்தைய காலக் கட்டத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இந்த சிற்பக் காட்சியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மொத்த ஆயுதங்களையும் கணக்கில் கொண்டால் இந்தப் புராணம் உலோகக் காலத்திற்கு (Metal Age)முந்தைய காலக்கட்டத்தையே குறிக்கின்றது என்பது இந்த மாமல்லையின் சிற்பக்காட்சி வாயிலாகவும், அதனையொட்டி வாசித்த சில புத்தகங்கள் மட்டும், இணைய வாசிப்பினையும் வைத்து வரும் முடிவு.. எதற்காக நான் இந்த முடிவுக்கு வர வேண்டும்?? என்ன அவசியம் இருக்கிறது ? என்று நீங்கள் கேட்டால் - நான் மீண்டும் சொல்லப் போவது  - புராணம் எனும் கருவியில் புதைத்து வைத்து தலைமுறை, தலைமுறைகளில் ஒளிந்திருக்கும் நமது வரலாறுகள், இன்றைய காலத்தின் தேவை என்பதை நான் உணர்வதாலேயே. ஆக கொற்றவையின் காலமாக நாம் வழிபடுவது 10000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்வதற்கு இடமிருக்கிறது

ஆம், ஆங்கிலத்தில் Syncretism என்று ஒரு சொல் உள்ளது, அது பல்மத தன்மைக் கொண்ட ஒரு பொருளையோ, தத்துவத்தையோ அல்லது சடங்கினையோ குறிக்கும் தன்மை. இந்தியத் துணைக் கண்டம் போன்ற  பெரும் நிலப்பரப்பு பல்வேறு வகையான வழிபாடுகள் மற்றும் சடங்குகளையும், மத நடவடிக்கைகளாலும் பல்வேறு மாறுதல்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டே உருவானது தான் என்பதை பல வரலாற்றாய்வாளர்கள் கருதுவதற்கு இந்த SYNCRETISM எனும் பரிமாணம் தான் அடிப்படை. இந்த அடிப்படை தான் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு நான்கு திசைகளில் இருக்கும் பல்வேறு வித்தியாசங்களுக்கும் மத்தியிலும் ஒரு மையப் புள்ளியை கண்டுணர வகை செய்கிறது. இதற்கு கொற்றவை வழிபாடும் ஒரு எடுத்துக் காட்டு என்று சொல்ல இடமிருக்கிறது. ஆனால் இந்த வழிபாடு வாயிலாகக் கிடைக்கும் ஒரு உண்மை தமிழர்களின் தொன்மையை இந்த மண்ணில் மிக முக்கியமான ஆதாரத்தோடு நிரூபிக்கிறது அதை அடுத்தப் பகுதியில் காண்போம்...



9ம் நூற்றாண்டு சிற்பம் - ஜாவா தீவு
இந்தோனேஷியா
ப்ரூக்லின் அருங்காட்சியகம் - 18ம் நூற்றாண்டு ஓவியம்
image courtesy: Wikipedia

நன்றி
ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக