இணையத்தில் தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரணமான விசயம் இல்லை, தள்ளுவண்டி பவன்களின் வியாபரத்தைப் பார்த்து பொறாமைப் படும் மனநிலையை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களாயின், நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் வியாபாரம் முடித்து 2000-3000 வரை கையில் கொண்டு போகும் ஒரு திருவண்ணாமலை பிரஜையோ, வடநாட்டு இளைஞனோ நம் கண்களில் ஆச்சரியமாகப் படுவதுண்டு. ஆனால் அவன் கார்ப்பரேஷன், போலீஸ் மாமுல்( அதிலும் தின வசூல் மற்றும் மாதச் சந்தா), ஏறி இறங்கும் காய்கறி விலையில். மழை, கார்த்திகை, புரட்டாசி மாத விரதக் காலங்கள் போன்ற இடர்களையும் தாண்டி வீட்டிற்குப் போனதும் உறங்குபவனா?? அடுத்த நாளுக்கு தேவையானவற்றை வாங்கி வைப்பது, ஊறல் போடுவது, காய்கள் வெட்டுவது என்ற உற்பத்தி சார்ந்த வேலைகளும் அவனுக்கு 08 மணி நேரம் இருக்கும். உற்பத்தி, பண்டங்களை சேல்ஸ் பாயிண்ட்டிற்கு அனுப்பும் தளவாட வேலைகள் என 16 மணி நேரமாவது உழைக்கிறான் என்பதை நாம் உணர்வது கிடையாது.
தினசரி ப்ளாக் எழுதும் என் நண்பர்களையும், சில வலைப்பதிவர்களையும் பார்க்கும் பொழுது இன்னும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் அன்றைய சமாச்சாரங்களை பிடிப்பதைக் காட்டிலும் கஷ்டமான விஷயம் இரண்டு இருக்கிறது.
முதலாவது - கிடைக்கும் மேட்டரை, எப்படி முலாம் பூசி, வெங்காயம் தூவி , சாஸ் வைத்து என்று ஏதோ ஒரு வண்ணத்தோடு கலந்து கொடுக்கும் ஓபனிங் வரிகளைத் தேர்ந்தெடுப்பது தான் (அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று). தொடர்ந்து எழுதலில் மட்டுமே இந்த வடிவம் அவர்களுக்கு எளிதாகக் கைகூடும். பெரும்பாலான வாசகர்கள் அலுவலகத்தில் Alt + Tab கீகளில் கை வைத்துக் கொண்டே தான் வாசிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பதால், சொல்ல வேண்டிய மேட்டரில் அதிகப்பட்ச இன்ட்ரஸ்டிங் ஸ்பாட்-ஐ நாடி பிடித்துக் கண்டுபிடித்து எழுத ஆரம்பிக்கிறார்கள். இது தொடர்ந்து எழுதும் பளாகருக்கு சாதாரன(ண)மாகி விடுகிறது.
இரண்டாவது - இது மிக முக்கியமானது அவர்கள் குடும்பத்தை சமாளிப்பது, “ இராப்பாடி மாதிரி லொட்டு லோட்டுன்னு தட்டுறான்” என்பன போன்ற விமர்சனங்களை எல்லாம் கடந்து சென்று நிற்பது, வா.மணிகண்டன் போன்று அடிக்கடி பைக்ல விழுந்து எந்திரிப்பவர்களுக்கு வீட்டில் இரவு விழிப்பதற்கான எதிர்ப்பை சமாளிப்பது எத்தனைக் கடினம்??
மூன்றாவது -
அதான் முதலிலேயே இரண்டு காரணங்கள் என்று தானே சொன்னேன்.. மூன்றாவது என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் இந்தப் பதிவு ப்ளாகரின் மெனக்கெடல் மற்றும் அவர்களின் தொழில் ரகசியம் பற்றி அலசுவதற்காக அல்ல.
****************
இப்படி உரைநடை எளிமையாக, சின்ன சின்ன அங்கதங்கள் மற்றும் ஆங்கிலக் கலப்புடன் இருக்கும் சுவாரஸ்ய எழுத்து உண்மையில் ஆரோக்கியமானதா?? இது கிட்டதட்ட ப்ளாக் எழுத்து என்பது போல் மாறி விட்டது. ஒரு முக்கிய எழுத்தாளாரிடம் பேசும் பொழுது இது போன்ற எழுத்துகள் தமிழ் உரைநடையை முற்றிலுமாக அழித்து விடும் என்று கவலைப் பட்டார், ஏனென்றால் இன்னும் சில ஆண்டுகளில் வலை எழுத்தே அதிகம் கவனம் கொள்ளப் படும் என்பது அவரது நம்பிக்கை. அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பொதுவாகவே வலையெழுத்து என்பதால் நெடும் பதிவாக எழுதுவது மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால் அதைக் குற்றம் சொல்லவும் முடியாது, ஒருவருக்கு சுருங்கச் சொல்ல வருகின்றது என்பதில் எந்தத் தவறும் இருப்பதாக என்னால் கருத முடியவைல்லை.
ஆனால் அவர் மொழியின் அழகை -உரைநடையின் CONTENT மீது வாசகர்களுக்கு வரும் தவறான மோகம், மெல்ல மெல்ல வாசிப்பின் தரத்தை கரையான்கள் போல் கரைத்து விடும் என்று சொன்னார். இதை அப்படியே புறக்கணிக்க முடியாது, ஏனென்றால் என் வலைதளத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளைப் பார்த்தாலே தெரியும். சாதாரணமாக எந்த மெனக்கெடலும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய முடிவதால், பிழைகளைப் பற்றிய அக்கறை குன்றி விடுகிறது (கு.பட்சம் :- பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியம் செய்தல்).
இந்த வடிவம் பாக்கெட் நாவல் காலத்தில் இருந்தே இருக்கிறது என்று இந்த வடிவத்தின் வரலாற்றை ஆராய்வதும் முக்கியமானதே, 1960-1970களில் இருந்த தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் உரைநடையின் தரத்தை மட்டுமல்ல அன்றைய CONTENTஐ பார்த்தோமேயானால், இன்றைய நிலையில் அதுவும் குறிப்பாக non-Fiction எழுத்துகள் குறிப்பிடும் படியாக இல்லவே இல்லை. ஆனால் இந்த Parellel journey இருந்தே வருகின்றது.
ஒரு பக்கம் தீவிரமாக வரலாற்று நாவல்கள் கல்கி, சாண்டில்யன், விக்ரமாதித்தன், அகிலன் = இன்னொரு பக்கம் சு.ரா, தி,ஜ, மௌனி, நகுலன், கி.ரா, அ.மி என்கிற வரிசை சரியாகவே அமைந்தது. பின்னர் - பாக்கெட் நாவல், பாலகுமாரன், சுஜாதா (சுஜாதாவை ஒரு வரிசைக்குள் அடக்க முடியாது, இது பெரும்பான்மையான வாசகர்களை அடைந்திருக்கும் எழுத்தை வைத்து கோர்த்திருந்த வரிசை) அவர்களோடும் தொடர்ந்து வந்த தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
இப்பொழுது கமர்சியல் எழுத்து என்று சொல்லப்படும், வெகுஜனத்திற்கு எளிதில் சென்றடையும் எழுத்து இணையத்தை நன்கு பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. தீவிர இலக்கிய எழுத்தும் உயிரோசை, மலைகள், வல்லினம் போன்ற வலைதளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அன்றிருந்த தீவிர இலக்கியப் படைப்புகளைப் போல, இன்றும் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குரியதே!!
ஏனென்றால் இன்னமும் க்ளாசிக் நாவல்கள் தான் அதிகப்படியான ரீப்ரிண்டுகள் போடப் படுகின்றன. ஓவியங்கள் - சிற்பங்கள் பற்றி 1970களிலும், 1990களிலும் பேசிக் கொண்டிருந்தவர்கள் தான் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள் (வெங்கட சாமிநாதன், இந்திரன், சி,மோகன், ரவி.சுப்ரமணியம்). ஆனால் வணிக எழுத்து இன்று வரை வணிகம் செய்து கொண்டு தான் இருக்கிறது. இணைய எழுத்தினையோ, சுவாரஸ்யமாக எழுதுவதையோ குறை சொல்வதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. உடம்பு நன்றாக இருக்கும் வரை, மருத்தவரிடம் செல்லும் அவசியம் வரும் வரை நம் சமையலில் அஜினோ மோட்டோ போட்டுக் கொள்ளலாம். காலம் எல்லா மாயங்களையும் நிராகரித்து விடும். எஞ்சி விடுவது அசலான, உண்மையை பிரதிபலிக்கும், வலிமையான படைப்புகள் மட்டுமே, அவை மட்டுமே CLASSIC என்று போற்றப் படும்.சிலருக்கு 30, சிலருக்கு 35, சிலருக்கு 40-60என எந்த வயதிலாவது கட்டுப்பாடு செய்து கொள்ளத் தோன்றும், அப்பொசுது மாறிக் கொள்வார்கள்... So இணைய எழுத்தாளன், முகநூல் எழுத்தாளன் என்றெல்லாம் சொல்லி எரிச்சலூட்டாதீர்கள் நண்பர்களே!!
*************************************
நீங்கள் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாயின் உங்களுக்கு நான் எழுதப் போகின்றவை புரியும். (குறிப்பாக முத்து மற்றும் லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு)
காமிக்ஸ் கதைகளை விட கதைக்கு முன்னே -பின்னே வரும் சமாச்சாரங்கள் எனக்கு அலாதி தான், ஹார் லைன், காமிக்ஸ் -டைம், ட்ரையிலர், மாதம் ஒரு வாசகர் போன்றவை தரும் பரவசம் எப்போதுமே ஹையர் தான். மூன்றாம் வகுப்பு படிக்கையிலேயே - என்னையும் அறியாமல் என்னுள் நுழைந்து விட்ட சில ஆங்கிலச் சொற்களெல்லாம் - விஜயன் மாம்ஸின் எழுத்தினாலே தான். நேராக ஒரு கோடு, முழுதாக ஒரு வட்டம் கூட வரையத் தெரியாத மக்குப் பையனாகிய எனக்கு டெக்ஸின் ஓவியங்கள் பற்றி, ஏஜெண்ட் XIIIன் சோகம் ததும்பும் இமேஜ்கள், ஓவிய பாணிகள் -வெளிநாட்டில் ஓவியர்களுக்கு இருக்கும் மதிப்பு பற்றியெல்லாம் நம்ம விஜயன் சாப் எழுதிய வரிகளே, நான் சித்திரங்கள் மீது காதல் கொள்ளச் செய்தது.
என்னிடம் பழகும் சில பேருக்கு மட்டும் தான், என்னோட ஹ்யூமர், டைமிங் ஜோக்குகள், சுய-எள்ளல் மற்றும் ரசனை பற்றித் தெரியும்(ஆமா தற்புகழ்ச்சி தான்). அவை எல்லாவற்றிட்கும் காரணம் இந்த ஆசான் விஜயன் தான். இந்த வாயில் கதவு தான், என் சிறுவயதில் நான் பார்த்த உலகின் சாளரம். எத்தனை சோகமான நேரங்களிலும் விட்டு (ஜோக்கு) அடிப்பது நம்ம விஜயனின் அசாத்திய திறமை தான்
அதற்கு ஒரு எ.கா: (சமீபத்தில் வந்திருந்த ஒரு சிப்பாயின் சுவடுகள் - கிராபிக் நாவலின் - ஆசிரியர் பக்கமான காமிக்ஸ் டைமிலிருந்து :
கடந்த 2 மாதங்கள் முன்பாகவே சலூனில் வில்லன்களின் தாடையில் டெக்ஸ் விடும் குத்துக்களின் பாணியில் - காகித விலைகளும் - அயல்நாட்டுப் பணங்களின் மதிப்பும் நம்மைத் துவைத்துக் காயப்போட்டு வருவதால் -புக்கின் விலையினை உயர்த்தாமல் தாக்குப் பிடிப்பது துளியும் முடியவில்லை
(டெயில் பீஸ்: இனி தொடர்ந்து காமிக்ஸ் பற்றிய பதிவுகள் போடலாம் என்று நினைக்கிறேன், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்)
நன்றி
ஜீவ.கரிகாலன்
//இனி தொடர்ந்து காமிக்ஸ் பற்றிய பதிவுகள் போடலாம் என்று நினைக்கிறேன், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்)//
பதிலளிநீக்குPlease Continue....
i bless you..... (Yes,தற்புகழ்ச்சி தான்) )