திங்கள், 20 மே, 2013

தூப்புக்காரி - பார்வை

தூப்புக்காரி

- இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்

தத்துக் கொடுக்கப்பட்ட தன் குழந்தையை தத்தெடுத்தவர்களிடம் இருந்து திரும்ப வாங்கியதும், தத்தெடுத்தவர்கள் அவளுக்கு போட்டிருக்கும் புது ஆடையைப் பார்த்து “இது முள் மாதிரி உடம்புல குத்துமே, என் செல்லத்திற்கு இது வேணாம்” என்று சொல்லும் இடத்தில் பூவரசிக்கு இருக்கும் நம்பிக்கையில், அன்பில், திமிரில் அது வரை விரவியிருந்த லேசான வலி சட்டென கண்ணீர் துளிகளாய் அகன்று முற்று பெறுகிறது கதையோடு.

கண்டிப்பாக இந்த நூல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று நம்புகிறேன். மனித மலத்தை மனிதனே அள்ளுவது “ஒரு காலத்துல தான்” என்று சொல்லித் திரியும் மனிதர்கள் இந்த சமகால பதிவாக வந்துள்ள இந்த கதையினைப் படிக்க வேண்டும். வெறும் புனைவாக இல்லாமல் இந்த கதை கொணர்ந்திருக்கும் அவலங்களின் ஆவனம்  என்றென்றும் நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் கரும் புள்ளியாக இருக்கும். வெறும் பாரம்பரியமான, புனிதமான, ஆன்மீக பலம் பெற்ற, ஜனநாயக நாட்டின் உடலில் போர்த்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள சீழ்வடியும் கொப்புளமாய் ஒரு சாரரை இழி நிலைக்கு தள்ளப்பட்ட தேசம் இது என்று உலகம் வியந்தோம்பும்.

கதையில் பீ, குண்டி, தூம இரத்தம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் அந்த மலம் அள்ளும் இடத்தை விவரிக்கும் இடத்தில் முகச்சுளிவோ, ஓங்கரிப்போ(வாந்தியோ) ஏற்பட்டிருந்தால் குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் வருந்துவதற்கு இவ்வுலகில் முக்கியமான சில தவறுகள் இருக்கின்றன. தினம் தினம் குளித்து உன் அழுக்கினைப் போக்கி ஊரினை நாறடிக்கும் பிரதிநிதியாக இருக்கும் நாம், அந்த துப்புரவு தொழிலாளர்களைக் காணும் போது மூக்கைப் பொத்திக் கொண்டோ, இல்லை விலகியோ கடந்து செல்வோமாயின் அதற்கும் நாம் தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கதைக் களமாக நாஞ்சில் தேசத்து கிராமம் இருக்கிறது. தூப்புக்காரியில் துப்புரவுத் தொழில் செய்யும் பாத்திரங்களின் வழியே சாதி, ஆணாதிக்கம், அதிகாரம், சமூக அவலங்கள் என பேச வைத்திருக்கிறார். மாரி பேசும் வாக்கியங்களில் மலர்வதியின் கோபமும், கேள்விகளும்,யதார்த்தமும், பகுத்தறிவும், தத்துவமும் கலந்து வருகிறது. அது இந்தக் கதைக்கு பொறுத்தமில்லாமல், அதே சமயம் அதை வைப்பதற்கான அவசியமும் இருக்கிறது. நாஞ்சில் தமிழென்பதால் ஒரு அகராதியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் காதலை எந்த சமரசமும் இன்றி யதார்த்தமாகப் படைத்திருக்கிறார், பூவரசி தோல்வியுறும் ஒவ்வொரு முறையும் வலி எளிதாக வாசகனுக்கு கடத்தி விடுகிறது. அதுவும் செருப்பில்லாமல் பூவரசி கழிவறைக்குள் மலம் அள்ள நுழையும் இடம் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது என்றால், மாரி மலம் அள்ளி குப்பை கூடையில் போட்டு அதைச் சுமந்து வ்ரும் பொழுது வடிந்து வரும் மலநீர் அவன் வாயிலும் நுழைகிறது என்று சாதாரணமாகச் சொல்லிப் போகும் இடத்தில் ஏற்படும் அதிர்வுகள் மிக மிக வீரியம். றோஸ்லினின் கடவுளோ, பூவரசியின், மாரியின் கடவுளர் யாவரும் இவர்களுக்கு உதவப் போவதுமில்லை.

இந்த நாவலிலும் ஒரு புளியமரம் வருகிறது, அதுவும் பீக்காட்டின் பகுதியாகக் காணப்படுகிறது. சின்னஞ்சிறு வயதில் கழிவறைகள் இல்லாத ஊரில் மலம் கழிக்கும் வேளைகளின் துயரங்கள் இருக்கின்றன, ஆனால் அப்பொழுது இப்படி ஒருவரின் மலத்தை ஒன்னொருவர் சுமக்க வேண்டியது இல்லை. ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் அடையாளக் கற்கள். நாகரிகத்தின், நகரங்களின் விளைவாக உருவாகும் கழிவறைகளுக்கென வேறு தொழில் செய்து வந்த சாதியினருக்கு கூடுதல் தகுதியாக இந்த வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஆனால் வேறு சாதியில் பிறந்தவளைக் கூட ஏழ்மை அந்த வேலையைச் செய்ய வைக்கின்றது என்பது முக்கியமான ஆவனம்.  “பொருள்(பணம்)”தான் மிகப் பிரதானமான மாற்றங்களை எல்லாம் வரலாற்றில் தீட்டுகிறது என்பதும் உண்மை.

கனகம் தன் மகளைத் தூப்புக்காரியாக்கும் இடத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசிக்கும் பொழுது இதயம் அதன் எடையை பல விகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாய மக்களின் திருமண வரதட்சனை அளவு மிக அதிகமாக இருக்கும் வழக்கம் உள்ளது. ஆக, பூவரசியின் தாய் கனகம் நாடார் சமூகத்தைச் சேர்ந்திருந்தும் தூப்புக் காரியாக வேலைக்கு சேர்ந்தவள், தன் மகளை மாற்றி விடுகிறாள்: அது போல அந்த மாவட்டத்தில் உணவுப் பயிர்களை அழித்து ரப்பர் தோப்பு அமைக்கும் முறைகளை கடுமையாகச் சாடுகிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்த காதலில், பெண்ணின் தவறு மட்டும் ஏன் காட்டிக் கொடுக்கிறது போனற வாக்கியங்கள் இந்த புத்தகத்தின் பெண்ணியக் கருத்துகளுக்கு சான்று. இடையிடையே கவி நடையும் வருகிறது. பெண்ணின் காதலை கூடவௌம் இல்லாமல், குறையவும் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்தது போல் நான் வாசித்து உணர்ந்தேன். அதில் மிக முக்கியமான காட்சியாக தன் தாய் உடல்நலக் குறைவில் அல்லலுறும் பொழுது கவலை கொண்டாலும், பூவரசியின் காமப் போராட்டத்தை அந்த இடத்தில் பதிவு செய்திருப்பது கதையின் உச்சம்


//மலத்தை பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார்.
தன்னை அசுத்தப்படுத்திக்கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்கான சமர்ப்பணம்தான் இந்த நாவல்//  என்று இந்த நாவலுக்கான முகாந்திரத்தை தன் கதை மூலம் முன் வைக்கும் மலர்வதிக்கு என் பாராட்டுகள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வட இந்திய அளவில் இப்பொழுது நிறைய தலித் தொழிலதிபர்கள் (அஷோக் காடே போன்ற!!) மற்ற சாதியினருக்கும் வேலை போட்டுக் கொடுக்கும் நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், இப்பொது டெல்லி போன்ற பெருநகரங்களின் வணிக மால்களில் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளும் பல பிரிவினரும் கூட வணிக விடுதிகளில், மருத்துவமனைகளில்  துப்புரவு வேலை செய்யத் தொடங்கியது எனும் செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ?  ஏழ்மையில் வாழ்பவனுக்கு சாதி அடையாளம் என்ற ஒன்று தேவையில்லை. ஆனால் மனிதன் ஏதொ ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மக்களிடையே இடைவெளி ஏற்படுத்துகிறான், இதுவும் வியாபாரம் தான் இதிலும் ஒரு பக்கம் கொழுத்த லாபம் இருக்கிறது.  இந்த சமூகத்திற்கு பொருளாதார விடுதலை  மட்டுமே உண்மையான விடுதலை எங்கிருக்கிறது என்பதைத் தெளிவாய்க் காட்ட முடியும். 

அது போல மாரி  பூவரசியின் கரம் பிடித்தவுடன் எங்கே சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேறுவானோ என்று தான் என்னை எதிர்பார்க்க வைத்தது, முடிவினில் இருக்கும் வலி இந்த எதிர்பார்ப்பினால் பன்மடங்காய் பெருகியது.  அதனால் இப்படி தேற்றிக் கொண்டேன் பரவாயில்லை மாரியின் விருப்பப்படி அவர்கள் குழந்தை இந்த துப்புரவு தொழிலார்களின் நிலை மாற்ற புரட்சி செய்யட்டும்!!

- ஜீவ.கரிகாலன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக