ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??
ஒரு நச்சு ஆலை பற்றிய ஆய்வுக் கட்டுரை (விமர்சனங்கள்/கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)
ஸ்டெரிலைட், பெரிய அளவில் சுற்றுப்புற சீர்கேட்டிற்கு காரணமாக இருக்கும் இந்த ஆலையை எதிர்த்து வரும் போராட்டங்கள் எந்த ஊடகங்களிலும் போதிய கவனம் கொடுக்கப்படாமல் உள்ளூர் மக்களின் ஞாயமான கோரிக்கைகள் எதுவும் மக்கள் மன்றத்தில் வைக்கப்படாமல் ஒரு பிராந்தியப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு உதாசீனப்படுத்தப் பட்டு வருகிறது. ஒரிசா மக்களைப் போல ஒற்றுமையாய் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி கொள்ள முடியாத தூத்துக்குடி மக்களின் நிலைக்கு காரணம் என்ன ??
ஸ்டெர்லைட் ஆலையினை மூடிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை நீக்கி கடந்த 2ஆம் தேதி வந்த உச்சநீதிமன்றத்தின் ஆனை, தூத்துக்குடி மக்களை மட்டுமல்லாமல், பல இயற்கை ஆர்வலர், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது ஒரு புறமிருக்க, வழக்கை விசாரிப்பதில் உள்ள சிக்கல்களை காரணப்படுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இன்னும் தொய்வடைந்து போய் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே NEERI {National Environmental Engineering Research Institute}எனப்படும் அமைப்பு பசுமைத் தீர்ப்பாயத்தில் கொடுத்த மாசு பற்றிய அறிக்கையில் அரசு விதித்த மேலே மாசு அடையவில்லை என்ற அறிக்கை வருகிறது. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்கள் குறித்து சில கேள்விகளை பொதுவில் வைப்பது மிக அவசியமாகிறது.
ஸ்டெரிலைட்டின் செயல்பாடுகளில்/உரிமத்தில் எழும் சந்தேகங்கள்:
இப்பொழுது ஸ்டெரிலைட் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு தனியார் தாமிர உறிஞ்சு(Copper Smeltor) ஆலை. 1992ல் திறந்து விடப்பட்ட தாராளமயமாக்கலில், தாமிர, அலுமனியம் உற்பத்தி செய்யும் துறைகளில் தனியார் பங்கு பெற அனுமதியளித்தது.1994ல் மஹாராட்டிரத்தின் இரத்தினகிரி மலைப் பகுதியில் அந்த ஆலை நிறுவக் கிளம்பிய எதிர்ப்பில், தமிழகத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது, கூடுதலாக துறைமுக வசதியும் சேர்ந்தே கிடைத்தது
ஆனால் தமிழ்நாட்டில் உரிமம் பெறும் இடத்தில் இருந்தே ஸ்டெரிலைட்டின்
சட்டவிரோதப் போக்கு தெரிகிறது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25
கிலோமீட்டர் தொலைவிற்குள் இது போன்ற பெரிய ஆலைகள் நடத்த மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் எப்படி அனுமதி வாங்கியது என்கிற 19 ஆண்டு கால விடை தெரியா கேள்வி ஒன்றிருக்கின்றது.
தெரியுமல்லவா மன்னார் வளைகுடா எவ்வளவு முக்கியமான பாதுகாக்கப்பட
வேண்டிய பகுதியென்று?? 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டர் முதல் 125 ஹெக்டர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் (2200இந்திய மீன் வகைகளில் 510 மன்னார் வளைகுடாவில் தான் இருக்கிறது) இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. இந்த ஆலை நல்லதண்னித் தீவு, வந்தீவு, காசுவார் தீவு, விலங்குச் சல்லி ஆகிய தீவுகளுக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த ஒரு காரணமே ஸ்டெரிலைட்டை மூடுவதற்கு போதிய காரணம் தான்.(#01) Rule 5 of the Environment (Protection) Rules 1986.
வணிகத்தில் Backward Integration என்று தொழில் முறையைப் பற்றி சொல்லுவதுண்டு, தாமிர ஸ்மெல்டர் ஆலையாக மட்டுமே செயல்பட்ட ஸ்டெரிலைட், இன்னும் சில பொறித் தொகுதிகளை(Plant) கந்தக ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் பொறி, ஆனோடு பொறித் தொகுதிகளையும் சட்டவிரோதமாக – அனுமதி பெறாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்றும் சொல்லப் படுகிறது, இந்தக் குற்றத்தையும் சேர்த்து தான் 2010-லேயே ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் இறுதியில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எல்லாம் வேலை வாய்ப்பு என்கிற காரணத்துடன், ஸ்டெரிலைட் நிறுவனம் மேற்கொள்ளும் சமூகப் பணிகளையும், தொழிற்சாலை விதிகளை தற்பொழுது கடைபிடித்து வருகிறதுஎன்றும் கருதியதாகக் கூறப்பட்டது.
இந்த இடத்தில் தான் அரசின் புள்ளியியல் விவரங்கள் மீதும் தணிக்கை முறை மீதும் சந்தேகம் வருகிறது .இந்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் சில முரண்கள்:-
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற் வகைபடுத்துதலில் ஸ்டெர்லைட்
நிறுவனத்திற்கு அட்டவணையில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிவப்பு நிற வகையில் உள்ள ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு (இந்திய தொழிற்சாலைகள் வகை குறியீட்டு எண் :1012 – சிவப்பு) மாதத்திற்கு ஒருமுறை நேரடிச் சோதனையும், மாதிரிச் சேகரிப்பும் கட்டாயம் எடுக்க வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனியிலிருந்து இந்திய தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இறக்குமதி
செய்யப்பட்டு தூத்துக்குடியில் நிறுவப்பட்ட அந்த மூன்றாம் அதிநவீன
கண்காணிப்பு நிலையத்தின் நிலை என்ன? (இதில் வைத்திருக்கப் பட்டிருக்கும்
இயந்திரமும் பரிந்துரைக்கப்பட்ட காற்றுக்கு எதிர்திசையில் வைக்கப் பட்டிருக்கிறது என்று இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சரியான அளவு காற்றில் ஏற்பட்டிருக்கும் மாசுக்களை கண்டறிய முடியாது போகும் என்பது உறுதி)
நகரங்களில், புறநகரங்கள்/ தொழில் மையம்/ குடியிருப்பு பகுதிகளில்
காற்று மாசடைவதைக் கண்காணிக்க வைக்கப் படும் கண்காணிப்பு நிலையத்தை ஏன் தூத்துக்குடி சிப்காட்டில் நிறுவவில்லை என்பது முதல் கேள்வி?, ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் (Reuters) ஐந்து கிலோமீட்டர் தள்ளியே கண்கானிப்பு நிலையம் இருக்கின்றதை சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கண்கானிப்பு நிலையம் 2008ன் மாசுக் காட்டுப்பாட்டு அறிக்கையில் தூத்துக்குடியில் மொத்தம் 03 நிலையங்களாக இருக்கின்றது, அதுவே 2010ம் ஆண்டின் அறிக்கையைப் பார்க்கும் பொழுது எண்ணிக்கை மூன்று என இருந்தும். அதன் ரீடிங் (reading) கணக்கெடுத்துக் கொள்ளப் படவில்லை. SO2, NO2, PM10 என எல்லா பட்டியலிலும் இரண்டு நிலையங்களில் (இடம்: ராஜா ஏஜன்ஸீஸ், fisheries college) இருந்து தான் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நிலையத்தின் (இடம் :ஏ.வி.எம் நகைக்கடை) கதி என்ன? என்பது இரண்டாம் கேள்வி SO2 எனப்படும் சல்ப்யூரிக் ஆக்ஸைடு அளவு 2008ன் நிலையை விட 2010ல் உயராமல் இருக்க, கட்டுக்குள் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது மூன்றாம் கேள்வி? ஏனெனில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது, மார்ச் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காற்றில் கலந்திட்ட ஒரு கனமீட்டரில் 2941.82 மில்லிகிராம் அளவு, கண்காணிப்பு நிலையத்தின் சென்சாரின் அதிகப்பட்ச பதியும் திறனே 3000 மில்லிகிராம்/ஒரு கன மீட்டர் தான். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கேள்வி ஸ்டெரிலைட் ஆலையை ஆய்வு செய்த குழுவில் அங்கத்தினராக அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவரை சேர்த்தது எந்த விதத்தில் நியாயம் என்பது முக்கியமான கேள்வி ?
ஏற்கனவே சொன்னது போல, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாதம் ஒரு முறை தணிக்கை செய்து வரும் பொழுது, அவர்கள் ஆய்வு செய்யும் தகவல்கள் சரியானது தானா என்பதற்கு உத்திரவாதம் உண்டா ? இது போன்ற நவீன ஆலைகளில் மிக முக்கியமான பணி கருவிமயமாதல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் பங்கு. இதன்படி ஆலையின் மொத்த செயல்பாட்டையும் நவீன முறையில் கருவிமயமாக்கப் பட்டு அதை தொழிற்சாலை தரக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், கழிவு வெளியேற்றம், சுத்தகரிப்பு போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அது போலத் தான் ஸ்டெரிலைட்டிலும் இது போன்ற கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டு காற்றில் கலக்கும் மாசுகளை, கழிவுநீரை என கட்டுப்படுத்த இயலும். அதே சமயம் இதைக் கண்காணிக்கும் உணரி(சென்சார்)யின் தகவல்களையும் மாற்றவும் இயலும் என்பது சாத்தியமே. ஒரு நவீன ஆலை தமது தவறுகளை மாற்றியமைக்கும் (மறைக்கும்) தொழில்நுட்பம் இருக்கிறது என்பதால் அரசின் தீவிர கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும் என்பதும் உண்மை.
சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த நூறு கோடிகள் அபராதம் கூட 2005ல் எடுக்கப்பட்ட ஆய்வில், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகப்பட்ச நிர்ணயங்களை விட எட்டு மடங்கு அதிகமான அளவு தண்ணீரில் மாசடைய, கன உலோகங்கள் கலப்பதற்கு காரணமாய் ஸ்டெரிலைட் ஆலை இருக்கிறது என்று கூறிய 15 வருட தகவல்களை உடைய அறிக்கை தான் அபராதம் விதிக்கக் காரணமாகிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த அபராதம் (அதுவும் ஐந்து வருட அவகாசத்துடன்) பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும் மூன்று கோடி பங்குகளின் EPS (Earning Per Share)-இல் வெறும் ரூபாய் 0.3-ஐ மட்டுமே எடுத்துக் கொள்வதால் முதலீட்டாளர்கள் இதைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பது மேலும் வருத்தம் தருகிறது.
உலக அளவில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள்:-
தூத்துக்குடியைப் போலவே வேதாந்தா நிறுவனம்(ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம் 54% வீத பங்குகளை வைத்திருக்கிறது), உலகம் முழுவதும் சுரங்கங்களையும், ஆலைகளையும் நிறுவியும், வாங்கியும் உள்ளது, அதே போல உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் வலுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே ஒடிஸ்ஸா மாநிலத்தில் வரவிருக்கும் பாக்ஸைட் சுரங்கத்திற்கான திட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நிகழ்ந்து, தற்காலிகமாக அந்த ஆலை மூடப் பட்டது. அது போல கோவாவிலும் இந்நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நிகழ்ந்தது. ஒடிஸ்ஸாவில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக உள்ளூர் போலீஸை வைத்து மிரட்டியும், பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியும் கொடுமைப் படுத்தியதைக் கண்டு இங்கிலாந்தில் உள்ள தலைமை அலுவலகத்திலும், நியூயார்க்கிலும், ஒடிஸாவிலும் கடந்த ஜனவரி 11ல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் போராட்டங்கள் செய்து கண்டனம் தெரிவித்தன.
ஸ்டெரிலைட் நிர்வாகமோ இது போன்ற கசிவினால் யாரும் இதுவரை உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்று தனது வலைதளத்தில் எழுதி வைத்திருக்கிறது. அப்படியானால இதுவும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும் பொழுது மாசடைவதைக் குறைவாக காட்டுவது போலான கண்கட்டு வித்தை தானோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் கடந்த மே 11ம் தேதி அன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த ஆலைக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பினர் (NTCE) கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரே வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்று அச்சுறுத்தும் தகவல் ஒன்றை எடுத்து வைத்தனர்.
அடுத்ததாக ஸ்டெரிலைட்டின் கழிவுகள் ஏற்படுத்திய மண் மற்றும் நீரின் நிலை எப்படி இருக்கிறது என்று அவ்வூர் மக்களிடம் கேட்டறியும் பொழுது இந்நிறுவனம் பல பொது நீர் நிலைகளை, கிணறுகளை உபயோகப்படுத்த முடியா வண்ணம் ஆக்கியுள்ளது என்று சொல்லப் படுகிறது. அவ்வாலையின் திடக் கழிவு மேலாண்மையைப் பார்க்கும் பொழுது அது மண்ணில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தெளிவாக விளங்கும். தாமிர உற்பத்திக்குப் பின் கழிவாக வரும் மண் போன்ற துகள்கள் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப் பட வேண்டும். அதற்கு பெரிய அளவில் இடவசதியும், அதை பராமரிக்க கண்காணிப்பும் அவசியம். ஏனென்றால் அந்த மண்ணிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவார்கள் (பார்க்க பட்ம் -2). ஆனால் சுற்றியிருக்கும் கிராமங்களில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அங்கிருக்கும் குளங்களை அடைப்பதற்கு உதவுவதாக தன் செல்வுகளைக் குறைத்து லாபம் அடைந்திருக்கிறது. (படம் – 3)
(படம் -3)
ஸ்டெரிலைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்தித் திறன் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மிக ஆபத்தானவை. நீர், நிலம், மட்டுமில்லாமல் மண்ணிலும் விளைவை ஏற்படுத்திருயிருக்கிறது, பருவநிலையிலும் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தள்ளியிருக்கும் சமூக ஆர்வலர் தர்மராஜ் அவர்களின் வீட்டிலிருந்து பரிசோதனைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட மண்ணில் கலந்துள்ள ஒரு ரசாயன மூலகம் பிரிட்டனின் தர நிர்ணய அளவைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம் கலந்திருக்கிறது என்றும் தெரிய வந்தது.
அது போல தூத்துக்குடியின் கடலோரங்களில் அடிக்கடி மீன்கள், கடல்குதிரைகள் போன்றன அதிக அளவில் செத்து ஒதுங்குகிறது என்பதை உள்ளூர் மக்கள் அறிவர், பவளப் பாறைகளின் இன்றைய நிலைமையும் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே. தொழிற் கழிவுகளால் மாசடைந்து வரும் கடலில் வாழும் மீன்களை அன்றாட உணவாய் உட்கொள்ளும் பாமர மனிதர்களும் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்பது இன்னும் தீவிரமாக ஆராயப் பட வேண்டிய விசயம். ஏனென்றால் மாசடைந்த நீரில் வாழும் மீன்களை தினமும் உணவாக ஒருவன் உட்கொள்ளும் போது அதில் அதிக அளவு கன உலோகமான க்ரோமியம், கேட்மியம் போன்றன இருந்தால், அவனை கேன்சர் போன்ற கொடிய நோய்கள் தாக்குவது எளிது. நமக்குக் கிடைத்த தகவலின் படி அதே போன்ற ஒரு சூழ்நிலையைத் தான் இன்றைய நிலை இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. நமது சட்டப் படி மனிதனை வைத்து இத்தகைய ஆராய்ச்சி செய்வதற்கு அவ்வளவு எளிதாக நம் அரசு அனுமதி கொடுக்காது, அதைத் தான் இது போன்ற ஆலைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன
உச்சநீதிமன்றம் முன்வைத்தது இதைத் தான்: வளர்ச்சி எனும் நோக்கில் பெரிய அளவில் வேலைவாய்ப்பைத் தருவதையும், அரசுடன் சேர்ந்து நலத் திட்டங்கள செய்வதையும், இரண்டு ஆண்டுகளாக மாசுபடுதலை குறைப்பதற்கான முயற்சி எடுத்தலையும் மேற்கோள் காட்டி, மூடிய ஆலையைத் திறக்க உத்தரவிட்டது. தூத்துக்குடியின் பூகோள அமைப்பும், உலக மயமாக்கலில் மாறிவிட்ட தொழில் நிலைமையும் வேறு எந்தத் தமிழக நகரங்களுக்கும் இல்லாததால். தூத்துக்குடியின் வளர்ச்சியை ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியால் மட்டுமே மாற்றிட முடியாது என்பது திண்ணம்
பொருளாதார பாதிப்பு மற்றும் அதன் தீர்வு
இத்தனை ஆபத்துகளிலும் ஸ்டெரிலைட்டை உச்ச நீதி மன்றம் அனுமதித்திட காரணங்கள் நேரடியாக 1300 தொழிலார்களும், மறைமுகமாக சில ஆயிரம் தொழிலாளர்களும் சில ஒப்பந்தகாரர்களுக்கும் ஏற்ப்படும் பணியிழப்பு தான் என்றால், தூத்துக்குடியின் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், புதிய வேலை மற்றும் வருமான வாய்ப்புகளையும் மாநில அரசு சார்பில் சுட்டிக் காட்டவில்லை என்பது மிகப் பெரிய வருத்தத்தை தருகிறது. அதாவது தென்னிந்தியாவில் கப்பல் கட்டும் தளத்தோடு புதிப்பிக்க இருக்கும் துறைமுகமும் அது சார்ந்த துறைகளுமே இந்த வேலை வாய்ப்பினை ஈடுகட்ட வல்லது என்பது சாத்தியமே. இன்னும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து தூத்துக்குடி வரையிலான சாலை வழித்தடங்கள் விரைவு சரக்குப் போக்குவரத்திற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தாலே இன்னும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதும் உறுதி.
இதன் உற்பத்தியை நிறுத்தும் பொழுது வரும் தாமிரத்திற்கான உள்நாட்டுத் தட்டுப்பாடு, ஏற்றுமதிக் குறைவு, அரசின் வருமானக் குறைவு, வேலைவாய்ப்பு போன்றவற்றை வாதமாக முன்வைக்கும் பொழுது, அந்நிறுவனத்தின் நிதியறிக்கையைப் பார்க்கும் அவசியம் ஏற்படுகிறது.
1. வேலைவாய்ப்பு :- 2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே அதன் விற்பனை வருமாந்த்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், மிகப் பெரிய மீன்பிடித் துறைமுகம், வளமிக்க பவளப் பாறைகள், விலையில்லா காற்று,நீர் போன்றவற்றை மாசடையச் செய்வதன் மதிப்பைக் கணக்கிட்டால். ஸ்டெரிலைட்டை மூடுவதில் தவறில்லை
2. ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய வரிச்செலவுகளையும் மேல் சொன்ன காரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்
3. அந்நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பு முறையினைப் பார்த்தால், அந்நிறுவனத்தின் நிகர லாபத்தில் அதன் தாய்க் கம்பனியான வேதாந்தா குழுமத்திற்கு 57.24% சதவீதமும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) 16.18% போக மீதமிருக்கும் 16.11 % தான் பொது மக்களுடைய லாபம் . (அதுவும் 8.21 சதவீதம் தான் நேரிடையான பங்குகள்)
4. இந்தியாவில் தாமிரமானது பாதுகாப்பு, எரிசக்தி, மின்சாதனம், வாகனம், கட்டமைப்புத் துறைகளுக்கெல்லாம் அத்தியாவசியமாகத் தேவை படுவதால் இந்த ஆலை மிகப்பெரிய தேவையை உருவாக்கிவிடாதா என்றால் அதற்கும் பதில் இருக்கிறது. இந்தியாவைன் தற்பொதைய தேவை வெறும் 5,75,000 டன் தான். 2008லேயே படி நம் நாட்டின் உற்பத்தி 900000 டன்களுக்கும் மேலே வந்ததால், இந்த ஆண்டும் அது 7-11% சதவீதம் அதிகரிக்கும். ஸ்டெரிலைட் உற்பத்தி செய்யும் 400000 டன்களால் எந்த உள்நாட்டுத் தேவையும் பாதிக்கப் படாது.
ஸ்டெரிலைட்டின் அக்கறை போன்ற சூழ்ச்சி:-
ஸ்டெரிலைட்டின் நிறுவன-சமூகப் பொறுப்பு(Corporate Social Responsibility):-
தொடர்ந்து ஊடகங்களுக்கு விளம்பரம், கிராம அமைப்புகளுக்கு அடிப்படை வசதி, அரசியல்வாதிகளுக்கு நன்கொடை, தொண்டு நிறுவனங்கள், கோயில்களுக்கு தாராள நிதி, கல்வி நிறுவனங்களுக்கு கொடை என அக்கறை காட்டுவதை ஆவனப் படுத்தியது தான் சுப்ரீம் கோர்ட்டின் தடையை நீக்கக் கோரிய வழக்கில் வெற்றி கிட்டிடப் பெரிதும் உதவியது.
பொதுவாக உலகெங்கும் உள்ள எல்லா பெரிய நிறுவனங்களும் நிறுவன-சமூகப் பொறுப்பு எனும் விசயத்தில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் காண்பிக்கும். இன்றைய டோவ் கெமிக்கல் (போபால்-யூனியன் கார்பைட்) நிறுவனமும் இத்தகையப் பணியை செய்து வருகின்றது. ஒரு நிறுவனம் அமைவதற்கும் நிலம் கொடுக்கும் சமூகத்திடமிருந்து அந்நிறுவனம் நிலமட்டுமின்றி அங்கு தொழிலாளர்கள், வாழ்வியல் சூழல், உபதொழிலகள், போக்குவரத்து, இயற்கை வளங்கள் போன்ற பல வசதிகளை எடுத்துக் கொள்கின்றது (தினமும் இந்த ஆலைக்கு தாமிரபரணி அணையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர்கள் கொண்டு வரப்படுகின்றன), இதே சமுதாயத்திற்கு அந்த நிறுவனங்கள் ஓரளவுக்குத் திருப்பித் தரும் கடமையைத் தான் தாமாக முன்வந்து சமூகப் பொறுப்பாக நலத்திட்டங்கள் செய்கின்றது. இதைத் தான் ஸ்டெரிலைட்டும் செய்கின்றது, இது நமக்கு அண்டை வீட்டு மளிகைக் கடைக்காரர் நம் வீட்டின் சுகதுக்கங்களில் கலந்து கொள்வது போன்ற சாதாரண நிகழ்வே, இதைத் தான் எல்லா நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஆனால் ஸ்டெரிலைட் இதை மிகைப் படுத்தி தன்னை ஒரு அரசியல்வாதி போல காண்பிக்கின்றது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி
ஆனால் வளர்ச்சி என்பதை ஒரு தவறான அலகாகக் கொண்டு பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது சூழலினையும், உடல்நலத்தையும் விலையாகக் கேட்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் தேவை குறித்த வாதங்கள் எழ வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் எடுத்துச் செல்லப் படவேண்டும், அவ்வூர் பொதுமக்களிடம் பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற வேண்டும்.
- ஜீவ.கரிகாலன்
ஸ்டெரிலைட் என்ற நச்சு ஆலையை பற்றிய உங்கள் ஆய்வு கட்டுரை பெரிதும் கவனிக்க படவேண்டிய நல்ல பகிர்வு .வளர்ச்சி என்பதை ஒரு தவறான அலகாகக் கொண்டு பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது சூழலினையும், உடல்நலத்தையும் விலையாகக் கேட்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் தேவை குறித்த வாதங்கள் எழ வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் எடுத்துச் செல்லப் படவேண்டும், அவ்வூர் பொதுமக்களிடம் பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற வேண்டும்.// நல்லதோர் கருத்து அருமையான பகிர்வு ஸ்டெரிலைட்டினால் ஏற்படும் தீமைகளை இக்கட்டுரைகள் முன்வைக்கிறது . சுற்றுப்புறச் சூழலின் நலனுக்கு எதிரியாக இருக்கும் இந்த ஸ்டெரிலைட் ஆலை மூடப்பட வேண்டியது மிக அவசியம் என இக்கட்டுரை முலம் அறிந்துக்கொண்டேன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு