வெள்ளி, 17 மே, 2013

பஜ்ஜி- சொஜ்ஜி 21 : கேன் குடிநீர் அரசியல்

சென்னை அடிக்கடி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாழத் தகுதியற்ற ஊர் என்று தன்னை நிரூபனம் செய்கிறது. திடீரென்று சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வந்துவிட்டது, கோடையில் குடிநீர் தட்டுப்பாடு என்று சொல்வது சாதாரண விஷயம் தான், ஆனால் இந்த பேக்கேஜ்ட் குடிநீர் வந்த பின்பு ரூபாய் 20-25-30-35 என 60 -70 ரூபாய் வரை விற்று வந்த கேன் குடிநீரின் வரத்து பெரும்பாலும் நின்றுவிட்டது. மடிப்பாக்கத்தில் ஒரு கடையில் ஒர் கேன் 200ரூபாய் என்று தன் கடையில் வைத்திருந்த கடைசி இருப்பை காலி செய்தார். இன்னும் சில கடைகளில் இரண்டு நாள் பொறுத்திருந்து நல்ல லாபத்தில் விற்கலாம் என்று சில கேன்களை நல்ல லாபம் எதிர்பார்த்து பதுக்கி வைக்கின்றனர். பசுமைத் தீர்ப்பாயத்தில் சரியான உரிமம் இல்லாத இந்த குடிநீர் நிறுவனங்களுக்கு விதித்த தடையை ரத்து செய்ய மறுத்தது.

************************************************************
ஒரு மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் ஒன்று நம் நாட்டிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. ஆமாம் நாடு என்ற மிகப்பெரிய நிலப் பரப்பில் இருக்கும் அதிகார வர்கத்திற்கும், எந்த எல்லைக்கோடுகள் பற்றிய அக்கறையும், அறிவும் இல்லாத/தேவைப்படாத ஒருவனின் சாமான்யனுக்கும் இடையேயான யுத்தம் இது. அதிகார வர்கத்தில் அரசாங்கங்கம், அரசியல்வாதிகள் இவர்கள் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் பண முதலைகள் இந்த மூவருக்கும் சேவகம் செய்யும் ஊடகத்திற்கும். தன் உழைப்பைத் தவைர எந்த நாட்டினையும், ஆட்சியையும், திட்டங்களையும் எதிர்பார்க்காமல் ஒருவன் உழைக்கிறான், வியர்வை சிந்துகிறான், பணம் சேர்க்கிறான், வீடு வந்து சேர்கிறான். இவர்களுக்கும் தான் நடந்து வருகிறது மாபெரும் யுத்தம்.


அதுவும் சென்னை போன்ற மாநகரங்களிலே நம் ஒவ்வொரு விடியலிலும் புதுப் புது பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கிறது இந்த நாடு. ஒதுங்கி, ஒடுங்கி சத்தமேயில்லாமல் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு இரு வேளை, சிலருக்கு மூன்று வேளை, இன்னும் சிலருக்கு உணவுடன், மது , களியாட்டம், சினிமா. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை 10%ற்கும் மேலே உயர்ந்திருக்கிறது. இது உலக அளவில் மந்த நிலையிலும் விளைந்திருக்கும் மிக முக்கியமான வளர்ச்சி. ஆனால் ஆதற்கு ஈடான வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. ஆண்டு தோறும் சுமார் 1.2 கோடி பேர் புதிதாக வேலை தேடத் துவங்கும் நேரம், வெறும் இரண்டு லட்சம் அளவிற்கு தான் அரசின் திட்டங்கள் வேலை போட்டுக் கொடுக்கின்றன என்பதும் அரசின் அறிக்கையில் காணப்பட்டது.

 இந்தியா மிகப்பெரிய சிறுவர்த்தகர்களைக் கொண்டுள்ள நாடு, இந்த சுயவேலைவாய்ப்பு செய்வோருக்கு அரசின் சலுகைகள் என்று பெரும்பாலும் (மின்சாரம், தொழிற் கடன், சாலை வசதி, தொழிற் கூட்டமைப்பு, அரசின் தகவல்/உதவி மையங்கள்) இருப்பதில்லை. ஆனால், சுயவேலை வாய்ப்பு என்று தொழில் தொடங்கி நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இதே 10 வருடத்தில் தான் 56.4% இருந்த சுயவேலைவாய்ப்பை 50.7% அளவுக்கு குறைந்து போகக் காராணமாக அமைந்துவிட்டது. இதற்கு மிக முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், திடீரன்று விஸ்வரூபம் எடுத்து விட்ட இந்தியத் தனியார் நிறுவனங்களும் தான் (ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல், கிங்ஃபிஷர், சன் குரூப் போன்றவை அவற்றுள் சில). இப்போது அவர்கள் சில்லறை வணிகம், மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் போன்ற தொழில் வாய்ப்புகளை பெரிதும் லாபம் கிட்டும் வாய்ப்பாகக் கருதுகின்றனர்.          

ஆக இந்த பெருவணிகர்கள் இறங்கும் தொழிலில் இருக்கும், இடஞ்சல்களான: கடனுக்கு பொருட்கள் கொடுக்கும், நுகர்வோருக்கு தெரிந்தவராக; வீட்டிற்கு அருகில் இருக்கும்; சுய தொழில் முனைவோரின் கழுத்தை நெருக்க வேண்டும். இவ்வளவு நாட்கள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அதிரடியாய் ஒரு ரெய்டு நடத்தி, உடனே 110 நிறுவனங்களுக்கு சீல் வைத்து; குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி; மக்கள் குடிநீருக்காக வேறு வழியின்றி தங்கள் பட்ஜெட்டை உயர்த்த வைத்து, அதன் மூலம் லாபம் அடையும் ஆர்.ஓ சுத்தகரிப்பு நிலையங்கள், பிஸ்லரி, டாட்டா குடிநீர் போன்ற பெரு வியாபாரிகள் தான் இன்றைய பிரச்சினைக்கு காரணமானவர்கள்.

ஸ்டெரிலைட் போன்ற அசுர ஆலைகள் ஒரு நாள் தன் உற்பத்திக்கு தாமிரபரணியில் எடுக்கும் தண்ணீர் சுமார் ஒரு கோடி லிட்டருக்கும் மேலே அதற்கு அரசின் சார்பில் எந்தத் தடையும் இல்லை, ஏனென்றால் 1300 பேருக்கு அவ்வாலை வேலை வாய்ப்பு அளிக்கிறதாம்!!! பாருங்கள் இந்த நகரில் அந்த நூற்று பத்து நிறுவனங்களின் தண்ணீரை விற்கும் சில்லறை வியாபாரிகள், டீலர்கள், சிறு ஆட்டோக்கள், வேன்கள் வைத்திருப்பவர்கள், ஓட்டுனர்கள் என்று கணக்கிட்டால். இந்த நிறுவனங்கள் அனைத்தும் எவ்வளவு பெரிய தொழில் அமைப்பைப் பெற்றிருக்கிறது என்று பாருங்கள்.


உரிமம் இல்லாமல் 110 நிறுவனங்களை வளர விட்டது தவறா?? அல்லது பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது தவறா???







- ஜீவ-கரிகாலன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக