திங்கள், 20 மே, 2013

தூப்புக்காரி - பார்வை

தூப்புக்காரி

- இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்

தத்துக் கொடுக்கப்பட்ட தன் குழந்தையை தத்தெடுத்தவர்களிடம் இருந்து திரும்ப வாங்கியதும், தத்தெடுத்தவர்கள் அவளுக்கு போட்டிருக்கும் புது ஆடையைப் பார்த்து “இது முள் மாதிரி உடம்புல குத்துமே, என் செல்லத்திற்கு இது வேணாம்” என்று சொல்லும் இடத்தில் பூவரசிக்கு இருக்கும் நம்பிக்கையில், அன்பில், திமிரில் அது வரை விரவியிருந்த லேசான வலி சட்டென கண்ணீர் துளிகளாய் அகன்று முற்று பெறுகிறது கதையோடு.

கண்டிப்பாக இந்த நூல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று நம்புகிறேன். மனித மலத்தை மனிதனே அள்ளுவது “ஒரு காலத்துல தான்” என்று சொல்லித் திரியும் மனிதர்கள் இந்த சமகால பதிவாக வந்துள்ள இந்த கதையினைப் படிக்க வேண்டும். வெறும் புனைவாக இல்லாமல் இந்த கதை கொணர்ந்திருக்கும் அவலங்களின் ஆவனம்  என்றென்றும் நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் கரும் புள்ளியாக இருக்கும். வெறும் பாரம்பரியமான, புனிதமான, ஆன்மீக பலம் பெற்ற, ஜனநாயக நாட்டின் உடலில் போர்த்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள சீழ்வடியும் கொப்புளமாய் ஒரு சாரரை இழி நிலைக்கு தள்ளப்பட்ட தேசம் இது என்று உலகம் வியந்தோம்பும்.

கதையில் பீ, குண்டி, தூம இரத்தம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் அந்த மலம் அள்ளும் இடத்தை விவரிக்கும் இடத்தில் முகச்சுளிவோ, ஓங்கரிப்போ(வாந்தியோ) ஏற்பட்டிருந்தால் குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் வருந்துவதற்கு இவ்வுலகில் முக்கியமான சில தவறுகள் இருக்கின்றன. தினம் தினம் குளித்து உன் அழுக்கினைப் போக்கி ஊரினை நாறடிக்கும் பிரதிநிதியாக இருக்கும் நாம், அந்த துப்புரவு தொழிலாளர்களைக் காணும் போது மூக்கைப் பொத்திக் கொண்டோ, இல்லை விலகியோ கடந்து செல்வோமாயின் அதற்கும் நாம் தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கதைக் களமாக நாஞ்சில் தேசத்து கிராமம் இருக்கிறது. தூப்புக்காரியில் துப்புரவுத் தொழில் செய்யும் பாத்திரங்களின் வழியே சாதி, ஆணாதிக்கம், அதிகாரம், சமூக அவலங்கள் என பேச வைத்திருக்கிறார். மாரி பேசும் வாக்கியங்களில் மலர்வதியின் கோபமும், கேள்விகளும்,யதார்த்தமும், பகுத்தறிவும், தத்துவமும் கலந்து வருகிறது. அது இந்தக் கதைக்கு பொறுத்தமில்லாமல், அதே சமயம் அதை வைப்பதற்கான அவசியமும் இருக்கிறது. நாஞ்சில் தமிழென்பதால் ஒரு அகராதியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் காதலை எந்த சமரசமும் இன்றி யதார்த்தமாகப் படைத்திருக்கிறார், பூவரசி தோல்வியுறும் ஒவ்வொரு முறையும் வலி எளிதாக வாசகனுக்கு கடத்தி விடுகிறது. அதுவும் செருப்பில்லாமல் பூவரசி கழிவறைக்குள் மலம் அள்ள நுழையும் இடம் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது என்றால், மாரி மலம் அள்ளி குப்பை கூடையில் போட்டு அதைச் சுமந்து வ்ரும் பொழுது வடிந்து வரும் மலநீர் அவன் வாயிலும் நுழைகிறது என்று சாதாரணமாகச் சொல்லிப் போகும் இடத்தில் ஏற்படும் அதிர்வுகள் மிக மிக வீரியம். றோஸ்லினின் கடவுளோ, பூவரசியின், மாரியின் கடவுளர் யாவரும் இவர்களுக்கு உதவப் போவதுமில்லை.

இந்த நாவலிலும் ஒரு புளியமரம் வருகிறது, அதுவும் பீக்காட்டின் பகுதியாகக் காணப்படுகிறது. சின்னஞ்சிறு வயதில் கழிவறைகள் இல்லாத ஊரில் மலம் கழிக்கும் வேளைகளின் துயரங்கள் இருக்கின்றன, ஆனால் அப்பொழுது இப்படி ஒருவரின் மலத்தை ஒன்னொருவர் சுமக்க வேண்டியது இல்லை. ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் அடையாளக் கற்கள். நாகரிகத்தின், நகரங்களின் விளைவாக உருவாகும் கழிவறைகளுக்கென வேறு தொழில் செய்து வந்த சாதியினருக்கு கூடுதல் தகுதியாக இந்த வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஆனால் வேறு சாதியில் பிறந்தவளைக் கூட ஏழ்மை அந்த வேலையைச் செய்ய வைக்கின்றது என்பது முக்கியமான ஆவனம்.  “பொருள்(பணம்)”தான் மிகப் பிரதானமான மாற்றங்களை எல்லாம் வரலாற்றில் தீட்டுகிறது என்பதும் உண்மை.

கனகம் தன் மகளைத் தூப்புக்காரியாக்கும் இடத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசிக்கும் பொழுது இதயம் அதன் எடையை பல விகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாய மக்களின் திருமண வரதட்சனை அளவு மிக அதிகமாக இருக்கும் வழக்கம் உள்ளது. ஆக, பூவரசியின் தாய் கனகம் நாடார் சமூகத்தைச் சேர்ந்திருந்தும் தூப்புக் காரியாக வேலைக்கு சேர்ந்தவள், தன் மகளை மாற்றி விடுகிறாள்: அது போல அந்த மாவட்டத்தில் உணவுப் பயிர்களை அழித்து ரப்பர் தோப்பு அமைக்கும் முறைகளை கடுமையாகச் சாடுகிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்த காதலில், பெண்ணின் தவறு மட்டும் ஏன் காட்டிக் கொடுக்கிறது போனற வாக்கியங்கள் இந்த புத்தகத்தின் பெண்ணியக் கருத்துகளுக்கு சான்று. இடையிடையே கவி நடையும் வருகிறது. பெண்ணின் காதலை கூடவௌம் இல்லாமல், குறையவும் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்தது போல் நான் வாசித்து உணர்ந்தேன். அதில் மிக முக்கியமான காட்சியாக தன் தாய் உடல்நலக் குறைவில் அல்லலுறும் பொழுது கவலை கொண்டாலும், பூவரசியின் காமப் போராட்டத்தை அந்த இடத்தில் பதிவு செய்திருப்பது கதையின் உச்சம்


//மலத்தை பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார்.
தன்னை அசுத்தப்படுத்திக்கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்கான சமர்ப்பணம்தான் இந்த நாவல்//  என்று இந்த நாவலுக்கான முகாந்திரத்தை தன் கதை மூலம் முன் வைக்கும் மலர்வதிக்கு என் பாராட்டுகள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வட இந்திய அளவில் இப்பொழுது நிறைய தலித் தொழிலதிபர்கள் (அஷோக் காடே போன்ற!!) மற்ற சாதியினருக்கும் வேலை போட்டுக் கொடுக்கும் நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், இப்பொது டெல்லி போன்ற பெருநகரங்களின் வணிக மால்களில் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளும் பல பிரிவினரும் கூட வணிக விடுதிகளில், மருத்துவமனைகளில்  துப்புரவு வேலை செய்யத் தொடங்கியது எனும் செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ?  ஏழ்மையில் வாழ்பவனுக்கு சாதி அடையாளம் என்ற ஒன்று தேவையில்லை. ஆனால் மனிதன் ஏதொ ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மக்களிடையே இடைவெளி ஏற்படுத்துகிறான், இதுவும் வியாபாரம் தான் இதிலும் ஒரு பக்கம் கொழுத்த லாபம் இருக்கிறது.  இந்த சமூகத்திற்கு பொருளாதார விடுதலை  மட்டுமே உண்மையான விடுதலை எங்கிருக்கிறது என்பதைத் தெளிவாய்க் காட்ட முடியும். 

அது போல மாரி  பூவரசியின் கரம் பிடித்தவுடன் எங்கே சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேறுவானோ என்று தான் என்னை எதிர்பார்க்க வைத்தது, முடிவினில் இருக்கும் வலி இந்த எதிர்பார்ப்பினால் பன்மடங்காய் பெருகியது.  அதனால் இப்படி தேற்றிக் கொண்டேன் பரவாயில்லை மாரியின் விருப்பப்படி அவர்கள் குழந்தை இந்த துப்புரவு தொழிலார்களின் நிலை மாற்ற புரட்சி செய்யட்டும்!!

- ஜீவ.கரிகாலன்



வெள்ளி, 17 மே, 2013

பஜ்ஜி- சொஜ்ஜி 21 : கேன் குடிநீர் அரசியல்

சென்னை அடிக்கடி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாழத் தகுதியற்ற ஊர் என்று தன்னை நிரூபனம் செய்கிறது. திடீரென்று சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வந்துவிட்டது, கோடையில் குடிநீர் தட்டுப்பாடு என்று சொல்வது சாதாரண விஷயம் தான், ஆனால் இந்த பேக்கேஜ்ட் குடிநீர் வந்த பின்பு ரூபாய் 20-25-30-35 என 60 -70 ரூபாய் வரை விற்று வந்த கேன் குடிநீரின் வரத்து பெரும்பாலும் நின்றுவிட்டது. மடிப்பாக்கத்தில் ஒரு கடையில் ஒர் கேன் 200ரூபாய் என்று தன் கடையில் வைத்திருந்த கடைசி இருப்பை காலி செய்தார். இன்னும் சில கடைகளில் இரண்டு நாள் பொறுத்திருந்து நல்ல லாபத்தில் விற்கலாம் என்று சில கேன்களை நல்ல லாபம் எதிர்பார்த்து பதுக்கி வைக்கின்றனர். பசுமைத் தீர்ப்பாயத்தில் சரியான உரிமம் இல்லாத இந்த குடிநீர் நிறுவனங்களுக்கு விதித்த தடையை ரத்து செய்ய மறுத்தது.

************************************************************
ஒரு மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் ஒன்று நம் நாட்டிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. ஆமாம் நாடு என்ற மிகப்பெரிய நிலப் பரப்பில் இருக்கும் அதிகார வர்கத்திற்கும், எந்த எல்லைக்கோடுகள் பற்றிய அக்கறையும், அறிவும் இல்லாத/தேவைப்படாத ஒருவனின் சாமான்யனுக்கும் இடையேயான யுத்தம் இது. அதிகார வர்கத்தில் அரசாங்கங்கம், அரசியல்வாதிகள் இவர்கள் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் பண முதலைகள் இந்த மூவருக்கும் சேவகம் செய்யும் ஊடகத்திற்கும். தன் உழைப்பைத் தவைர எந்த நாட்டினையும், ஆட்சியையும், திட்டங்களையும் எதிர்பார்க்காமல் ஒருவன் உழைக்கிறான், வியர்வை சிந்துகிறான், பணம் சேர்க்கிறான், வீடு வந்து சேர்கிறான். இவர்களுக்கும் தான் நடந்து வருகிறது மாபெரும் யுத்தம்.


அதுவும் சென்னை போன்ற மாநகரங்களிலே நம் ஒவ்வொரு விடியலிலும் புதுப் புது பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கிறது இந்த நாடு. ஒதுங்கி, ஒடுங்கி சத்தமேயில்லாமல் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு இரு வேளை, சிலருக்கு மூன்று வேளை, இன்னும் சிலருக்கு உணவுடன், மது , களியாட்டம், சினிமா. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை 10%ற்கும் மேலே உயர்ந்திருக்கிறது. இது உலக அளவில் மந்த நிலையிலும் விளைந்திருக்கும் மிக முக்கியமான வளர்ச்சி. ஆனால் ஆதற்கு ஈடான வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. ஆண்டு தோறும் சுமார் 1.2 கோடி பேர் புதிதாக வேலை தேடத் துவங்கும் நேரம், வெறும் இரண்டு லட்சம் அளவிற்கு தான் அரசின் திட்டங்கள் வேலை போட்டுக் கொடுக்கின்றன என்பதும் அரசின் அறிக்கையில் காணப்பட்டது.

 இந்தியா மிகப்பெரிய சிறுவர்த்தகர்களைக் கொண்டுள்ள நாடு, இந்த சுயவேலைவாய்ப்பு செய்வோருக்கு அரசின் சலுகைகள் என்று பெரும்பாலும் (மின்சாரம், தொழிற் கடன், சாலை வசதி, தொழிற் கூட்டமைப்பு, அரசின் தகவல்/உதவி மையங்கள்) இருப்பதில்லை. ஆனால், சுயவேலை வாய்ப்பு என்று தொழில் தொடங்கி நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இதே 10 வருடத்தில் தான் 56.4% இருந்த சுயவேலைவாய்ப்பை 50.7% அளவுக்கு குறைந்து போகக் காராணமாக அமைந்துவிட்டது. இதற்கு மிக முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், திடீரன்று விஸ்வரூபம் எடுத்து விட்ட இந்தியத் தனியார் நிறுவனங்களும் தான் (ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல், கிங்ஃபிஷர், சன் குரூப் போன்றவை அவற்றுள் சில). இப்போது அவர்கள் சில்லறை வணிகம், மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் போன்ற தொழில் வாய்ப்புகளை பெரிதும் லாபம் கிட்டும் வாய்ப்பாகக் கருதுகின்றனர்.          

ஆக இந்த பெருவணிகர்கள் இறங்கும் தொழிலில் இருக்கும், இடஞ்சல்களான: கடனுக்கு பொருட்கள் கொடுக்கும், நுகர்வோருக்கு தெரிந்தவராக; வீட்டிற்கு அருகில் இருக்கும்; சுய தொழில் முனைவோரின் கழுத்தை நெருக்க வேண்டும். இவ்வளவு நாட்கள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அதிரடியாய் ஒரு ரெய்டு நடத்தி, உடனே 110 நிறுவனங்களுக்கு சீல் வைத்து; குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி; மக்கள் குடிநீருக்காக வேறு வழியின்றி தங்கள் பட்ஜெட்டை உயர்த்த வைத்து, அதன் மூலம் லாபம் அடையும் ஆர்.ஓ சுத்தகரிப்பு நிலையங்கள், பிஸ்லரி, டாட்டா குடிநீர் போன்ற பெரு வியாபாரிகள் தான் இன்றைய பிரச்சினைக்கு காரணமானவர்கள்.

ஸ்டெரிலைட் போன்ற அசுர ஆலைகள் ஒரு நாள் தன் உற்பத்திக்கு தாமிரபரணியில் எடுக்கும் தண்ணீர் சுமார் ஒரு கோடி லிட்டருக்கும் மேலே அதற்கு அரசின் சார்பில் எந்தத் தடையும் இல்லை, ஏனென்றால் 1300 பேருக்கு அவ்வாலை வேலை வாய்ப்பு அளிக்கிறதாம்!!! பாருங்கள் இந்த நகரில் அந்த நூற்று பத்து நிறுவனங்களின் தண்ணீரை விற்கும் சில்லறை வியாபாரிகள், டீலர்கள், சிறு ஆட்டோக்கள், வேன்கள் வைத்திருப்பவர்கள், ஓட்டுனர்கள் என்று கணக்கிட்டால். இந்த நிறுவனங்கள் அனைத்தும் எவ்வளவு பெரிய தொழில் அமைப்பைப் பெற்றிருக்கிறது என்று பாருங்கள்.


உரிமம் இல்லாமல் 110 நிறுவனங்களை வளர விட்டது தவறா?? அல்லது பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது தவறா???







- ஜீவ-கரிகாலன்




புதன், 15 மே, 2013

பஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்

அம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை, அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் மிக மலிவான விலையில் தங்கள் உணவை எடுத்துக்கொள்ளும் நுகர்வோர் இருந்தாலும். இது போன்ற உணவகங்களின் எண்ணிக்கை கூடுமாயின் இதனால் நஷ்டம் அடையும் சிறு வியாபாரிகளின் (தள்ளுவண்டி, கையேந்தி உணவகங்களிலும், சிறு உணவகங்களிலும்) எண்ணிக்கையும் அதிகரிக்கும். அம்மா உணவகத்திற்கு அருகில் ஏற்கனவே அமைந்துள்ள் காலை நேர இட்லிக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள். எவ்வளவு தூரம் தங்கள் வியாபாரத்தில் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்று. அதுவே அம்மா உணவகங்களில் பொங்கல், சப்பாத்தி என்று புது ஐட்டங்கள் சேரும் போது, ஒரு பக்கம் பொது மக்கள் நலன் என்ற பார்வை இருந்தாலும் இன்னொரு பக்கம் அதை விட சற்றே அதிகம் விலை வைத்து நடத்தப்படும் கடைகள் பல காணாமல் போகும் அபாயம் வந்துவிடும்.

இந்தக் கடுமையான விலைவாசி ஏற்றம் கொண்ட சந்தையில் இது போல ஒரு மலிவு விலை உணவகங்கள் திறப்பதற்கு ஆதாரமாக இருக்கும் நிதியை வழங்கும் துறை எதுவென பார்த்தால் மதுபானக் கடையே (டாஸ்மாக்). ஒரு பாமரன் அம்மா உணவகங்களால் பெற்றிடும் லாபத்தினை விட, டாஸ்மாக்கினால் இழக்கும் உடல் நலம், பண இழப்பு, குடும்ப அமைதி கெடுத்ல என இழப்பின் நிரை மிகுதி. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை பெருமளவு நாம் செய்ய வேண்டி இருந்தாலும், இது போன்ற அரசியல் லாபத் திட்டங்களினால் பாதிக்கப் படும் சிறுவியாபாரிகளின் நலனுக்காகவும் போராட வேண்டும், அது தான் சமூகத்தின் சமநிலையை

அரசியல் லாபங்களுக்காக இது போன்ற நற்பணிகள் செய்யும் நன்மைகளை ஆராய்ந்துப் பார்த்தால் தொலை நோக்குப் பார்வையற்றதாகத் தான் இருக்கும். இப்பொழுது இருபது ரூபாய்க்கு அரிசி கிடைக்க வழிவகுத்தாலும், குடும்ப அட்டையின்றி வாங்கலாம் என்ற சலுகை, அரிசி மூட்டைகளை கட்சிக் கொடி ஏந்திய டாட்டா சுமோக்களின் பின்புறம் ஏற்றுவதற்குத் தான் அதிகம் உதவுகிறது.

மாநகரங்களில் வேலைக்கு அதிகம் செல்லும் மக்களிடையே உணவகங்களில் தங்கள் மதிய உணவை முடித்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்டிருக்கும் நம் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பார்த்தால் எவ்வளவு தூரம் நாம் திசை மாறியிருக்கிறோம் என்று புரியும். தனிக் குடித்தனம் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி என்று இருவருமே வேலைக்கு செல்வதால், மதிய உணவுக்காக உணவகங்களைப் பெரும்பாலும் நாடுவது அவசியமாகிறது.

மாற்றம் 1.

சரவண பவன், ஆனந்த பவன், சங்கீதா போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் மதிய உணவுக்காக ரூபாய் 200 அல்லது அதற்கும் மேலே வசூலிக்கின்றனர். 30 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு கொடுத்து வந்த நடுத்தர உணவகங்கள் கூட இப்பொழுது 60 ரூபாய்க்கும் மேலே கூட்டி விட்டன. 50 ரூபாய்க்கும் கீழே நல்ல சுகாதாரமாக உள்ள உணவகங்களை தேடிப் படித்து உண்பது அரிதான ஒன்றாகிவிட்டது. கலவை சாதங்களுக்கான விலையே ஐம்பதினை எட்டிவிட்டது, பழச்சாறு, தயிர் போன்ற எல்லா மாற்று உணவும் இரண்டு மடங்கு ஏறிவிட்டது. வீட்டில் சமைத்து எடுத்து வர முடியாத அளவுக்கு நேரப் பற்றாக்குறையுடன் வேலைக்கு செல்லும் மக்கள் இனி மதிய உணவிற்கென ஒன்று நாம் சாப்பிடும் அளவைக் குறைக்க வேண்டும் அல்லது மாற்றம் 2 ஐ நோக்கி செல்ல வேண்டும்.

மாற்றம் 2

மெக்.டொனால்டு, பீஷா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிக முக்கியமாக நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. சாதாரணமாக குறைந்தபட்ச விலையே நூறு ரூபாய்க்கும் குறையாமல் இருந்த அவ்வுணவகங்களின் நிலையினை மாற்றம் பெற்று தீடீரென விலை குறைந்து மாபெரும் புரட்சியாக எழுந்துள்ளது. ஆம் அவர்கள் உற்பத்தி செய்து வந்த எல்லா பண்டங்களிலும் சிறிய அளவில்  பண்டங்கள் செய்து அதை ஐம்பது ரூபாய்க்கும் கீழே விலை நிர்ணயித்துள்ளன.


பீஷா  38 ரூபாய்க்கும், பர்கர் வகையறாக்கள்  25 ரூபாய்க்கும், மில்க் ஷேக்,
ஐஸ்கிரீம், ஃபிங்கர் சிப்ஸ், ஐஸ் டீ மற்றும் மிகவும் விலை உயர்ந்த ஃப்ரைடு சிக்கன் கூட 25 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது இந்திய மக்களுக்காவே செய்யப்பட்ட சிறப்பு பேக்கிங் மற்றும் பேக்கேஜ்கள். டொமினோஸில் ஆரம்பித்த இந்த விலை குறைப்பு புரட்சி இப்பொழுது கே.எஃ.சி வரை பரவியிருப்பது மிகப்பெரிய ஒரு கலாச்சார மாற்றத்தின் அறிகுறி எனச் சொல்லலாம்.

இந்த மாற்றம் கொஞ்சம் வேகமாக மாறி வரும் நம் உணவுப் பழக்க வழக்கத்தை லிஃப்ட்டில் ஏற்றி அருகில் கொண்டு வந்து, முற்றிலுமாகவே நம் அன்றாட உணவுப் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு அருகே கொண்டு வந்துள்ளது. அதுவும் காம்போ பேக்குகளில் 65 ரூபாய்க்கு நீங்கள் ஏதேனும் மூன்று வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருக்கும் பொழுது. அப்போ சரவண பவனில் இட்லி வடை சாப்பிடும் காசில் மோமோ,கோக்,பர்கர் சாப்பிடலாம் என்றால் உங்கள் வாய் திறக்குமா திறக்காதா?? இந்த பண்டங்களே அகல வாய் திறப்பு பண்டங்கள் தானே!!

இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தம்து ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளாவு வெற்றி கண்டு விட்டன என்று சொல்லலாம். இதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமென்றால் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தினைச் சுற்றி இந்த ஒரே வருடத்தில் முளைத்த சில பன்னாட்டு (கே.எஃப்.சி), மெக்டொனால்டு, டாமினோஸ், பீட்ஷா கார்னர், பீட்ஸா ஹட் மற்றும் சில ஐஸ்கிரீம் கடைகளைச் சொல்லலாம், ஒரு பெருநகரத்தின் வளர்ச்சியில் இது சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் பெரும்பானமை மத்திய தர, வேலை பார்க்கும் வர்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் விட முடியாது, ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ ஏற்றம், உடல்நலக் குறைவினைக், மிகச் சிறிய அவ்யதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து நமக்கு தெளிவு பிறக்கும்

இப்பண்டங்கள் பழைய(அதிக) அளவிலும், விலையிலும் விற்ற போது ருசி பார்க்காதவர்கள் கூட தங்கள் அன்றாட மதிய உணவாக மெக் டொனால்டு செல்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். அதே நேரம் நம் தென்னிந்திய உணவுகள் நம்மை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த மாற்றத்திற்கு நம் சம்பளத்தில் ஒரு பகுதியை ஃபுட் கார்டுகளாக, சொடெக்ஸோ(SODEXO) பாஸ்களாக கொடுக்கும் முறை வந்ததும் உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலே அந்த போலி பன்னாட்டு மோகம் பர்கர்களையும், பீஸாக்களையும் உண்பது நம் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்தது போல எண்ணத்தைக் கொண்டு வருகின்றது. ஆனால் நாம் தான் அவர்கள் விரித்த வலைக்குள் விழுந்திருக்கிறோம் என்பது புரியாது. முதலில் நாம் அடிமையாகி விட்டால் பின்னர் என்ன விலை இருந்தாலும் கொடுத்து வாங்கச் சொல்லும்.
உதாரணம் : இப்படித் தான் நம் சீயக்காயை விரட்டி ஷாம்புக்களும் (சாஷே முதன்முதலில் வந்தது இந்தியாவில் தான்), நீராகாரம், மோர், சுக்குத் தண்ணீரை விரட்டி காபி, டீ போன்ற பானங்களும் இடம் பெயர்ந்தன இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து வந்தாலும், இது மிகப்பெரிய உணவுக் கலாச்சார மாற்றத்தின் அடையாளம் என்பது மறுக்கவியலா உண்மை. இது மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில், ஆரோக்கியத்தில் என நம் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

-- 
ஜீவ.கரிகாலன்

செவ்வாய், 14 மே, 2013

ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??

ஸ்டெரிலைட் - அடுத்த யூனியன் கார்பைடு??

ஒரு நச்சு ஆலை பற்றிய ஆய்வுக் கட்டுரை (விமர்சனங்கள்/கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)



ஸ்டெரிலைட், பெரிய அளவில் சுற்றுப்புற சீர்கேட்டிற்கு காரணமாக இருக்கும் இந்த ஆலையை எதிர்த்து வரும் போராட்டங்கள் எந்த ஊடகங்களிலும் போதிய கவனம் கொடுக்கப்படாமல் உள்ளூர் மக்களின் ஞாயமான கோரிக்கைகள் எதுவும் மக்கள் மன்றத்தில் வைக்கப்படாமல் ஒரு பிராந்தியப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு உதாசீனப்படுத்தப் பட்டு வருகிறது. ஒரிசா மக்களைப் போல ஒற்றுமையாய் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி கொள்ள முடியாத தூத்துக்குடி மக்களின் நிலைக்கு காரணம் என்ன ??




ஸ்டெர்லைட் ஆலையினை மூடிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை நீக்கி கடந்த 2ஆம் தேதி வந்த உச்சநீதிமன்றத்தின் ஆனை, தூத்துக்குடி மக்களை மட்டுமல்லாமல், பல இயற்கை ஆர்வலர், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது ஒரு புறமிருக்க, வழக்கை விசாரிப்பதில் உள்ள சிக்கல்களை காரணப்படுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இன்னும் தொய்வடைந்து போய் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலே NEERI {National Environmental Engineering Research Institute}எனப்படும் அமைப்பு பசுமைத் தீர்ப்பாயத்தில் கொடுத்த மாசு பற்றிய அறிக்கையில் அரசு விதித்த மேலே மாசு அடையவில்லை என்ற அறிக்கை வருகிறது. இந்த வழக்கில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்கள் குறித்து சில கேள்விகளை பொதுவில் வைப்பது மிக அவசியமாகிறது.

ஸ்டெரிலைட்டின் செயல்பாடுகளில்/உரிமத்தில் எழும் சந்தேகங்கள்:
இப்பொழுது ஸ்டெரிலைட் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்  இருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு தனியார் தாமிர உறிஞ்சு(Copper Smeltor) ஆலை. 1992ல் திறந்து விடப்பட்ட தாராளமயமாக்கலில், தாமிர, அலுமனியம் உற்பத்தி செய்யும் துறைகளில் தனியார் பங்கு பெற அனுமதியளித்தது.1994ல் மஹாராட்டிரத்தின் இரத்தினகிரி மலைப் பகுதியில் அந்த ஆலை நிறுவக் கிளம்பிய எதிர்ப்பில், தமிழகத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது, கூடுதலாக துறைமுக வசதியும் சேர்ந்தே கிடைத்தது

ஆனால் தமிழ்நாட்டில் உரிமம் பெறும் இடத்தில் இருந்தே ஸ்டெரிலைட்டின்
சட்டவிரோதப் போக்கு தெரிகிறது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25
கிலோமீட்டர் தொலைவிற்குள் இது போன்ற பெரிய ஆலைகள் நடத்த மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் எப்படி அனுமதி வாங்கியது என்கிற 19 ஆண்டு கால விடை தெரியா கேள்வி ஒன்றிருக்கின்றது.

தெரியுமல்லவா மன்னார் வளைகுடா எவ்வளவு முக்கியமான பாதுகாக்கப்பட
வேண்டிய பகுதியென்று?? 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா  தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டர் முதல் 125 ஹெக்டர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் (2200இந்திய மீன் வகைகளில் 510 மன்னார் வளைகுடாவில் தான் இருக்கிறது) இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. இந்த ஆலை நல்லதண்னித் தீவு, வந்தீவு, காசுவார் தீவு, விலங்குச் சல்லி ஆகிய தீவுகளுக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த ஒரு காரணமே ஸ்டெரிலைட்டை மூடுவதற்கு போதிய காரணம் தான்.(#01) Rule 5 of the Environment (Protection) Rules 1986.

வணிகத்தில் Backward Integration என்று தொழில் முறையைப் பற்றி சொல்லுவதுண்டு, தாமிர ஸ்மெல்டர் ஆலையாக மட்டுமே செயல்பட்ட ஸ்டெரிலைட், இன்னும் சில பொறித் தொகுதிகளை(Plant) கந்தக ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் பொறி, ஆனோடு  பொறித் தொகுதிகளையும் சட்டவிரோதமாக – அனுமதி பெறாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்றும் சொல்லப் படுகிறது, இந்தக் குற்றத்தையும் சேர்த்து  தான் 2010-லேயே ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால்  இறுதியில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எல்லாம் வேலை வாய்ப்பு என்கிற காரணத்துடன், ஸ்டெரிலைட் நிறுவனம் மேற்கொள்ளும் சமூகப் பணிகளையும், தொழிற்சாலை விதிகளை தற்பொழுது கடைபிடித்து வருகிறதுஎன்றும் கருதியதாகக் கூறப்பட்டது.

இந்த இடத்தில் தான் அரசின் புள்ளியியல் விவரங்கள் மீதும் தணிக்கை முறை மீதும்  சந்தேகம் வருகிறது .இந்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் சில முரண்கள்:-

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற் வகைபடுத்துதலில் ஸ்டெர்லைட்
நிறுவனத்திற்கு அட்டவணையில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிவப்பு நிற வகையில் உள்ள ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு (இந்திய தொழிற்சாலைகள் வகை குறியீட்டு எண் :1012 – சிவப்பு) மாதத்திற்கு ஒருமுறை நேரடிச் சோதனையும், மாதிரிச் சேகரிப்பும் கட்டாயம் எடுக்க வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலிருந்து இந்திய தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இறக்குமதி
செய்யப்பட்டு தூத்துக்குடியில் நிறுவப்பட்ட அந்த மூன்றாம் அதிநவீன
கண்காணிப்பு நிலையத்தின் நிலை என்ன? (இதில் வைத்திருக்கப் பட்டிருக்கும்
இயந்திரமும் பரிந்துரைக்கப்பட்ட காற்றுக்கு எதிர்திசையில் வைக்கப் பட்டிருக்கிறது  என்று இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சரியான அளவு காற்றில் ஏற்பட்டிருக்கும் மாசுக்களை கண்டறிய முடியாது போகும் என்பது உறுதி)


நகரங்களில், புறநகரங்கள்/ தொழில் மையம்/ குடியிருப்பு பகுதிகளில்
காற்று மாசடைவதைக் கண்காணிக்க வைக்கப் படும் கண்காணிப்பு நிலையத்தை ஏன் தூத்துக்குடி சிப்காட்டில் நிறுவவில்லை என்பது முதல் கேள்வி?, ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் (Reuters) ஐந்து கிலோமீட்டர் தள்ளியே கண்கானிப்பு நிலையம் இருக்கின்றதை சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கண்கானிப்பு நிலையம் 2008ன் மாசுக் காட்டுப்பாட்டு அறிக்கையில் தூத்துக்குடியில் மொத்தம் 03 நிலையங்களாக இருக்கின்றது, அதுவே 2010ம் ஆண்டின் அறிக்கையைப் பார்க்கும் பொழுது எண்ணிக்கை மூன்று என இருந்தும். அதன் ரீடிங் (reading) கணக்கெடுத்துக் கொள்ளப் படவில்லை. SO2, NO2, PM10 என எல்லா பட்டியலிலும் இரண்டு நிலையங்களில் (இடம்: ராஜா ஏஜன்ஸீஸ், fisheries college) இருந்து தான் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நிலையத்தின் (இடம் :ஏ.வி.எம் நகைக்கடை) கதி என்ன? என்பது இரண்டாம் கேள்வி SO2 எனப்படும் சல்ப்யூரிக் ஆக்ஸைடு அளவு 2008ன் நிலையை விட 2010ல் உயராமல் இருக்க, கட்டுக்குள் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது மூன்றாம் கேள்வி? ஏனெனில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது, மார்ச் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காற்றில் கலந்திட்ட ஒரு கனமீட்டரில் 2941.82 மில்லிகிராம் அளவு, கண்காணிப்பு நிலையத்தின் சென்சாரின் அதிகப்பட்ச பதியும் திறனே 3000 மில்லிகிராம்/ஒரு கன மீட்டர் தான். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கேள்வி ஸ்டெரிலைட் ஆலையை ஆய்வு செய்த குழுவில் அங்கத்தினராக அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவரை சேர்த்தது எந்த விதத்தில் நியாயம் என்பது முக்கியமான கேள்வி ?

ஏற்கனவே சொன்னது போல, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாதம் ஒரு முறை தணிக்கை செய்து வரும் பொழுது, அவர்கள் ஆய்வு செய்யும் தகவல்கள் சரியானது தானா என்பதற்கு உத்திரவாதம் உண்டா ? இது போன்ற நவீன ஆலைகளில் மிக முக்கியமான பணி கருவிமயமாதல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் பங்கு. இதன்படி ஆலையின் மொத்த செயல்பாட்டையும் நவீன முறையில் கருவிமயமாக்கப் பட்டு அதை தொழிற்சாலை தரக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், கழிவு வெளியேற்றம், சுத்தகரிப்பு போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அது போலத் தான் ஸ்டெரிலைட்டிலும் இது போன்ற கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டு காற்றில் கலக்கும் மாசுகளை, கழிவுநீரை என கட்டுப்படுத்த இயலும். அதே சமயம் இதைக் கண்காணிக்கும் உணரி(சென்சார்)யின் தகவல்களையும் மாற்றவும் இயலும் என்பது சாத்தியமே. ஒரு நவீன ஆலை தமது தவறுகளை மாற்றியமைக்கும் (மறைக்கும்) தொழில்நுட்பம் இருக்கிறது என்பதால் அரசின் தீவிர கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும் என்பதும் உண்மை.

சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த நூறு கோடிகள் அபராதம் கூட 2005ல் எடுக்கப்பட்ட ஆய்வில், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகப்பட்ச நிர்ணயங்களை விட எட்டு மடங்கு அதிகமான அளவு தண்ணீரில் மாசடைய, கன உலோகங்கள் கலப்பதற்கு காரணமாய் ஸ்டெரிலைட் ஆலை இருக்கிறது என்று கூறிய 15 வருட தகவல்களை உடைய அறிக்கை தான் அபராதம் விதிக்கக் காரணமாகிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த அபராதம் (அதுவும் ஐந்து வருட அவகாசத்துடன்) பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும் மூன்று கோடி பங்குகளின் EPS (Earning Per Share)-இல் வெறும் ரூபாய் 0.3-ஐ மட்டுமே எடுத்துக் கொள்வதால் முதலீட்டாளர்கள் இதைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பது மேலும் வருத்தம் தருகிறது.

உலக அளவில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள்:-



தூத்துக்குடியைப் போலவே வேதாந்தா நிறுவனம்(ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம் 54% வீத பங்குகளை வைத்திருக்கிறது), உலகம் முழுவதும் சுரங்கங்களையும், ஆலைகளையும் நிறுவியும், வாங்கியும் உள்ளது, அதே போல உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் வலுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே ஒடிஸ்ஸா மாநிலத்தில் வரவிருக்கும் பாக்ஸைட் சுரங்கத்திற்கான திட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நிகழ்ந்து, தற்காலிகமாக அந்த ஆலை மூடப் பட்டது. அது போல கோவாவிலும் இந்நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நிகழ்ந்தது. ஒடிஸ்ஸாவில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக உள்ளூர் போலீஸை வைத்து மிரட்டியும், பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியும் கொடுமைப் படுத்தியதைக் கண்டு இங்கிலாந்தில் உள்ள தலைமை அலுவலகத்திலும், நியூயார்க்கிலும், ஒடிஸாவிலும் கடந்த ஜனவரி 11ல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் போராட்டங்கள் செய்து கண்டனம் தெரிவித்தன.

ஸ்டெரிலைட் நிர்வாகமோ இது போன்ற கசிவினால் யாரும் இதுவரை உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்று தனது வலைதளத்தில் எழுதி வைத்திருக்கிறது. அப்படியானால இதுவும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும் பொழுது மாசடைவதைக் குறைவாக காட்டுவது போலான கண்கட்டு வித்தை தானோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் கடந்த மே 11ம் தேதி அன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த ஆலைக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பினர் (NTCE) கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரே வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்று அச்சுறுத்தும் தகவல் ஒன்றை எடுத்து வைத்தனர்.

அடுத்ததாக ஸ்டெரிலைட்டின் கழிவுகள் ஏற்படுத்திய மண் மற்றும் நீரின் நிலை எப்படி இருக்கிறது என்று அவ்வூர் மக்களிடம் கேட்டறியும் பொழுது இந்நிறுவனம் பல பொது நீர் நிலைகளை, கிணறுகளை உபயோகப்படுத்த முடியா வண்ணம் ஆக்கியுள்ளது என்று சொல்லப் படுகிறது. அவ்வாலையின் திடக் கழிவு மேலாண்மையைப் பார்க்கும் பொழுது அது மண்ணில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தெளிவாக விளங்கும். தாமிர உற்பத்திக்குப் பின் கழிவாக வரும் மண் போன்ற துகள்கள் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப் பட வேண்டும். அதற்கு பெரிய அளவில் இடவசதியும், அதை பராமரிக்க கண்காணிப்பும் அவசியம். ஏனென்றால் அந்த மண்ணிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவார்கள் (பார்க்க பட்ம் -2). ஆனால் சுற்றியிருக்கும் கிராமங்களில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அங்கிருக்கும் குளங்களை அடைப்பதற்கு உதவுவதாக தன் செல்வுகளைக் குறைத்து லாபம் அடைந்திருக்கிறது. (படம் – 3)






(படம் -3)
ஸ்டெரிலைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்தித் திறன் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மிக ஆபத்தானவை. நீர், நிலம், மட்டுமில்லாமல் மண்ணிலும் விளைவை ஏற்படுத்திருயிருக்கிறது, பருவநிலையிலும் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தள்ளியிருக்கும் சமூக ஆர்வலர் தர்மராஜ் அவர்களின் வீட்டிலிருந்து பரிசோதனைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட மண்ணில் கலந்துள்ள ஒரு ரசாயன மூலகம் பிரிட்டனின் தர நிர்ணய அளவைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம் கலந்திருக்கிறது என்றும் தெரிய வந்தது.

அது போல தூத்துக்குடியின் கடலோரங்களில் அடிக்கடி மீன்கள், கடல்குதிரைகள் போன்றன அதிக அளவில் செத்து ஒதுங்குகிறது என்பதை உள்ளூர் மக்கள் அறிவர், பவளப் பாறைகளின் இன்றைய நிலைமையும் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே. தொழிற் கழிவுகளால் மாசடைந்து வரும் கடலில் வாழும் மீன்களை அன்றாட உணவாய் உட்கொள்ளும் பாமர மனிதர்களும் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்பது இன்னும் தீவிரமாக ஆராயப் பட வேண்டிய விசயம். ஏனென்றால் மாசடைந்த நீரில் வாழும் மீன்களை தினமும் உணவாக ஒருவன் உட்கொள்ளும் போது அதில் அதிக அளவு கன உலோகமான க்ரோமியம், கேட்மியம் போன்றன இருந்தால், அவனை கேன்சர் போன்ற கொடிய நோய்கள் தாக்குவது எளிது. நமக்குக் கிடைத்த தகவலின் படி அதே போன்ற ஒரு சூழ்நிலையைத் தான் இன்றைய நிலை இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. நமது சட்டப் படி மனிதனை வைத்து இத்தகைய ஆராய்ச்சி செய்வதற்கு அவ்வளவு எளிதாக நம் அரசு அனுமதி கொடுக்காது, அதைத் தான் இது போன்ற ஆலைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன

உச்சநீதிமன்றம் முன்வைத்தது இதைத் தான்: வளர்ச்சி எனும் நோக்கில் பெரிய அளவில் வேலைவாய்ப்பைத் தருவதையும், அரசுடன் சேர்ந்து நலத் திட்டங்கள செய்வதையும், இரண்டு ஆண்டுகளாக மாசுபடுதலை குறைப்பதற்கான முயற்சி எடுத்தலையும் மேற்கோள் காட்டி, மூடிய ஆலையைத் திறக்க உத்தரவிட்டது. தூத்துக்குடியின் பூகோள அமைப்பும், உலக மயமாக்கலில் மாறிவிட்ட தொழில் நிலைமையும் வேறு எந்தத் தமிழக நகரங்களுக்கும் இல்லாததால். தூத்துக்குடியின் வளர்ச்சியை ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியால் மட்டுமே மாற்றிட முடியாது என்பது திண்ணம்

பொருளாதார பாதிப்பு மற்றும் அதன் தீர்வு
இத்தனை ஆபத்துகளிலும் ஸ்டெரிலைட்டை உச்ச நீதி மன்றம் அனுமதித்திட காரணங்கள் நேரடியாக 1300 தொழிலார்களும், மறைமுகமாக சில ஆயிரம் தொழிலாளர்களும் சில ஒப்பந்தகாரர்களுக்கும் ஏற்ப்படும் பணியிழப்பு தான் என்றால், தூத்துக்குடியின் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், புதிய வேலை மற்றும் வருமான வாய்ப்புகளையும் மாநில அரசு சார்பில் சுட்டிக் காட்டவில்லை என்பது மிகப் பெரிய வருத்தத்தை தருகிறது. அதாவது தென்னிந்தியாவில் கப்பல் கட்டும் தளத்தோடு புதிப்பிக்க இருக்கும் துறைமுகமும் அது சார்ந்த துறைகளுமே இந்த வேலை வாய்ப்பினை ஈடுகட்ட வல்லது என்பது சாத்தியமே. இன்னும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து தூத்துக்குடி வரையிலான சாலை வழித்தடங்கள் விரைவு சரக்குப் போக்குவரத்திற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தாலே இன்னும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதும் உறுதி.

இதன் உற்பத்தியை நிறுத்தும் பொழுது வரும் தாமிரத்திற்கான உள்நாட்டுத் தட்டுப்பாடு, ஏற்றுமதிக் குறைவு, அரசின் வருமானக் குறைவு, வேலைவாய்ப்பு போன்றவற்றை வாதமாக முன்வைக்கும் பொழுது, அந்நிறுவனத்தின் நிதியறிக்கையைப் பார்க்கும் அவசியம் ஏற்படுகிறது.

1. வேலைவாய்ப்பு :- 2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே அதன் விற்பனை வருமாந்த்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், மிகப் பெரிய மீன்பிடித் துறைமுகம், வளமிக்க பவளப் பாறைகள், விலையில்லா காற்று,நீர் போன்றவற்றை மாசடையச் செய்வதன் மதிப்பைக் கணக்கிட்டால். ஸ்டெரிலைட்டை மூடுவதில் தவறில்லை

2. ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய வரிச்செலவுகளையும் மேல் சொன்ன காரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்

3. அந்நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பு முறையினைப் பார்த்தால், அந்நிறுவனத்தின் நிகர லாபத்தில் அதன் தாய்க் கம்பனியான வேதாந்தா குழுமத்திற்கு 57.24% சதவீதமும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) 16.18% போக மீதமிருக்கும் 16.11 % தான் பொது மக்களுடைய லாபம் . (அதுவும் 8.21 சதவீதம் தான் நேரிடையான பங்குகள்)

4. இந்தியாவில் தாமிரமானது பாதுகாப்பு, எரிசக்தி, மின்சாதனம், வாகனம், கட்டமைப்புத் துறைகளுக்கெல்லாம் அத்தியாவசியமாகத் தேவை படுவதால் இந்த ஆலை மிகப்பெரிய தேவையை உருவாக்கிவிடாதா என்றால் அதற்கும் பதில் இருக்கிறது. இந்தியாவைன் தற்பொதைய தேவை வெறும் 5,75,000 டன் தான். 2008லேயே படி நம் நாட்டின் உற்பத்தி 900000 டன்களுக்கும் மேலே வந்ததால், இந்த ஆண்டும் அது 7-11% சதவீதம் அதிகரிக்கும். ஸ்டெரிலைட் உற்பத்தி செய்யும் 400000 டன்களால் எந்த உள்நாட்டுத் தேவையும் பாதிக்கப் படாது.


ஸ்டெரிலைட்டின் அக்கறை போன்ற சூழ்ச்சி:-

ஸ்டெரிலைட்டின் நிறுவன-சமூகப் பொறுப்பு(Corporate Social Responsibility):-
தொடர்ந்து ஊடகங்களுக்கு விளம்பரம், கிராம அமைப்புகளுக்கு அடிப்படை வசதி, அரசியல்வாதிகளுக்கு நன்கொடை, தொண்டு நிறுவனங்கள், கோயில்களுக்கு தாராள நிதி, கல்வி நிறுவனங்களுக்கு கொடை என அக்கறை காட்டுவதை ஆவனப் படுத்தியது தான் சுப்ரீம் கோர்ட்டின் தடையை நீக்கக் கோரிய வழக்கில் வெற்றி கிட்டிடப் பெரிதும் உதவியது.

பொதுவாக உலகெங்கும் உள்ள எல்லா பெரிய நிறுவனங்களும் நிறுவன-சமூகப் பொறுப்பு எனும் விசயத்தில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் காண்பிக்கும். இன்றைய டோவ் கெமிக்கல் (போபால்-யூனியன் கார்பைட்) நிறுவனமும் இத்தகையப் பணியை செய்து வருகின்றது. ஒரு நிறுவனம் அமைவதற்கும் நிலம் கொடுக்கும் சமூகத்திடமிருந்து அந்நிறுவனம் நிலமட்டுமின்றி அங்கு தொழிலாளர்கள், வாழ்வியல் சூழல், உபதொழிலகள், போக்குவரத்து, இயற்கை வளங்கள் போன்ற பல வசதிகளை எடுத்துக் கொள்கின்றது (தினமும் இந்த ஆலைக்கு தாமிரபரணி அணையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர்கள் கொண்டு வரப்படுகின்றன), இதே சமுதாயத்திற்கு அந்த நிறுவனங்கள் ஓரளவுக்குத் திருப்பித் தரும் கடமையைத் தான் தாமாக முன்வந்து சமூகப் பொறுப்பாக நலத்திட்டங்கள் செய்கின்றது. இதைத் தான் ஸ்டெரிலைட்டும் செய்கின்றது, இது நமக்கு அண்டை வீட்டு மளிகைக் கடைக்காரர் நம் வீட்டின் சுகதுக்கங்களில் கலந்து கொள்வது போன்ற சாதாரண நிகழ்வே, இதைத் தான் எல்லா நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஆனால் ஸ்டெரிலைட் இதை மிகைப் படுத்தி தன்னை ஒரு அரசியல்வாதி போல காண்பிக்கின்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி
மேலும் ஸ்டெரிலைட் நிறுவனமும் தனது உரிமத்தினை சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு 1994ன் (Environmental Impact Assessment Notification)படி எந்த ஒரு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமல் ஆலையை நிறுவ முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது. அதற்கேற்றார் போல் இதற்கு பதிலளித்த மாசுக்கட்டுப்பட்டு வாரியமோ, வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்பட்ட 30 சுற்றுசூழல் பாதுகாப்பு அம்சங்களில் 29 வழிமுறைகளை ஸ்டெரிலைட் பின்பற்றுவதாக ஸ்டெரிலைட்டிற்கு ஆதரவான தகவல்களை அறிக்கையாகத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. ஸ்டெரிலைட் போன்ற பெரிய ஆலைகளைச் சுற்றி இருக்கவேண்டிய பசுமை வளையங்களை(Green zone) மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 250 மீட்டரிலிருந்து 25 மீட்டராகக் குறைத்தது ஏன் என்று தெரியவில்லை. இதுவே நீதிமன்றத் தீர்ப்பு ஸ்டெரிலைட்டிற்கு சாதகமாக அமைய முக்கியக் காரணம். இப்படி பொது மக்களின், சுற்றுப்புறச் சூழலின் நலனுக்கு எதிரியாக இருக்கும் இந்த ஸ்டெரிலைட் ஆலை மூடப்பட வேண்டியது மிக அவசியம் என இக்கட்டுரை முன் வைக்கிறது.


ஆனால் வளர்ச்சி என்பதை ஒரு தவறான அலகாகக் கொண்டு பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது சூழலினையும், உடல்நலத்தையும் விலையாகக் கேட்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் தேவை குறித்த வாதங்கள் எழ வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் எடுத்துச் செல்லப் படவேண்டும், அவ்வூர் பொதுமக்களிடம் பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற வேண்டும்.

அப்பொழுது தான் செயல்படாத மாசு கண்டறியும் நிலையத்தின் நிலையினையும், அதன் செயல்பாட்டையும் கண்டிப்பதுடன் ஆலையை மூடிவதற்கான பொது மக்களின் எழுச்சியைக் காண வேண்டும். ஒடிஸாவில் பொது மக்களின் எழுச்சியின் விளைவாக ஸ்டெரிலைட் சுரங்கத்தை மூடிய வரலாற்றை மறுபடியும் எழுதிப் பார்க்க வேண்டும். நமக்கு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சுத்தமான நீரையும், காற்றையும் நம் சந்ததிகளுக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா??

- ஜீவ.கரிகாலன்

பஜ்ஜி சொஜ்ஜி - 19 செல்லரித்துப் போன நான்காம் தூண்



நாட்டைப் பற்றிப் பேசும் பொழுது, எப்பொழுதும் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் குற்றம் சொல்லிப் பழகிய மனதுக்கு கடைசி நம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருந்த மீடியாக்கள் மீதுள்ள என் கோபம் தான் இந்த பதிவு.

முதன் முதலில் பிரஸ் மீட் ஒன்றை நேரில் பார்க்கப் போகிறோம், அதுவும் நம் சொந்த மண்ணின் பிரச்சனை என்பதால் முன்கூட்டியே சென்னை பிரஸ் கிளப் வளாகத்திற்கு சென்று விட்டேன். தூத்துக்குடியிலிருந்து ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான 32 பேர் அடங்கிய குழுவொன்று NTCE (National Trust of Clean Environment) சார்பாக வந்திருந்தது. அதில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், உடல்நலம் பாதித்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என வந்திருந்தனர். முதலில் பிரஸ் மீட்டாக ஒன்றரை மணி நேரமும், அதன் பின்னே தனித்தனியாக வெவ்வேறு பேட்டியெடுத்து முடித்தனர். மொத்தம் 31/2 மணி நேரம் இருக்கும் புதிய தலைமுறை, NDTV, AAJ THAK, கலைஞர், ஜெயா, தந்தி, வின், கேப்டன், தூர்தர்ஷன் என அனைத்து முன்னணி ஊடகங்களும், ஹிந்து, குரோனிகல் போன்ற நாளிதழ்களின் நிருபர்களும் பேட்டி எடுத்தனர்.

கிட்டதட்ட 2400க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள் ஒரு நகர எல்லைக்குள் ஒரு வருடத்தில் (ஒரே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தகல் உரிமை ஆவனம்) உருவாகியுள்ளனர் என்ற தகவலில் கூட அவர்களுக்கு செய்தி இல்லாமல் போய் விட்டதோ என்னவோ இந்த மூன்று நாட்களில் அந்த பிரஸ் மீட் பற்றிய ஒரு செய்தியும் வரவில்லை.

ஏற்கனவே அரசு அமைத்த ஆய்வுக்குழுவில் அங்கத்தினராக இருக்கும் ஆலையின் அதிபர் அனில் அகர்வால், டெல்லிக்கு மாற்றப்பட்டிருக்கும் வழக்கினை தன் பக்கத்திற்கு மாற்றி விடுவது உறுதி, அதற்கு உதவி செய்தார் போல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையிலும் மாசுபடுதல் குறைந்திருப்பதற்கான ஆவனம் சமர்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த செய்தி மட்டும் அனேக ஊடகங்களில் வெளிவந்து விட்டன.

ஒரு ஆர்வலர் கூறினார், ஸ்டெரிலைட் ஆலை வேண்டாம் என்று கையெழுத்து வாங்க வேண்டி பொது மக்களிடம் கையெழுத்து கேட்க செல்லும் பொழுது அம்மக்கள் சொன்னார்களாம், “போன வாரம் ஆலையை மூடக் கூடாதுன்னு கையெழுத்துப் போடச் சொல்லி நூறு ரூபா கொடுத்தாக, இப்போ நீங்க எவ்வளவு கொடுப்பீக”என்று. நானும் அதைத் தான் கேட்கிறேன் “மீடியாக் காரர்களே!! நீங்கள் அந்தச் செய்தியைப் போடாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்”.

உங்க உளுத்தம் பருப்பு மீடியாக்கள விட இணையங்களும், சமூக வலைதளங்களும் ஆயிரம் மடங்கு மேல்



- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 5 மே, 2013

கால இயந்திரம்

1.  இப்படிக்கு நான்


இன்று மே 05 2013,
நாளை மே 05 1945
காலங்காலமாய் பேசிவந்த
புனைவுகள் பொசுங்கப் போகின்றன
ஊழிக்காலத்திற்கும், கற்காலத்திற்கும்
இடையே கட்டங்கள் கட்டி
சதுரங்கம் விளையாடி மகிழ்வேன்.
நீங்கள் யாவருமே காய்களாக!!
இப்படிக்கு கடவுள் ஜெக்தீஷ்



***********************************
2. காலம் “0”

இன்று தான் டைம் ஜீரோவாம்
இன்று ஒரு கொலை நடக்க இருக்கிறது, 
முதல் முயற்சி இதே நாள் மே மாதம் 1927
அடுத்த முயற்சி இதே நாள் மே மாதம் 2014
இன்று நடக்க இருக்கும் கொலை :
தொடங்கும் நேரம் இன்னும் சற்று நேரத்தில் 
முடியும் நேரம் இன்னும் சற்று ஒளி ஆண்டுகளில்
ஆனால் கொலை மட்டும் நிச்சயம்

- ஜீவ.கரிகாலன்