திங்கள், 21 ஜனவரி, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 13 பெட்கேரும் பெங்களூருவும்

 WHITE CULTURE - பாகம் 2

முதல் பாகம் http://kalidasanj.blogspot.in/2013/01/11-white-culture.html


முன்னர் நாம் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான நாய், பூனை என எந்த விலங்குகளுக்கும் தனியாக உணவு செய்வது என்பதே வழக்கில் இல்லை. மனிதன் உட்கொள்ளும் உணவில் மீந்ததோ, பழையதோ அல்லது இறைச்சிகளின் எலும்புகள் மற்றும் எடுத்துக்கொள்ள முடியாத பாகங்களையும் இவ்விலங்குகள் உண்டு அவை ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்தன. இவை யாவும் எந்த ஒரு பொருளாதாரச் சுமையையும் ஒரு விளிம்பு நிலை மனிதனுக்குக் கூட கொடுக்காமல் அவை வாழ்ந்தன.

ஆனால் மேலை நாட்டு கலாச்சாரமாக மேல் தட்டு வர்கம் உபயோகிக்க ஆரம்பித்த  பிறகு தான், செல்லப் பிராணிகளாக அயல்நாட்டு இனங்களை கௌரவ அடையாளங்களாக மற்றவர்களும் வளர்க்க ஆரம்பிக்க, வளர்ப்பு பிராணிகளின் உபயோகங்கள் குறைந்து, அவை சுமைகளாக ஆரம்பித்துவிட்டன. ஜேக்கப் ஜுமோவின் மீது வந்த விமர்சனங்களால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பிராணிகள் மீதான மோகம் தெளிவாகிறது, இதற்கு கொடி பிடிக்கும் ஊடகங்களின் பிரயர்த்தனமும் சொல்வது வெறு குடும்ப அமைப்பில் சிக்கல் என்ற பேச்சுக்காய் வந்தவையல்ல மிகப்பெரிய சந்தையை பின்புலமாகக் கொண்டுள்ள வளர்ப்பு பிராணிகள் சந்தையின் (PET CARE MARKET)அளவு தான் காரணம்.


பெட்கேர் சந்தையில் இருக்கும் தொழில்களின் பட்டியல் மிகப் பெரியது உயர்ந்த ஜாதி இனங்களாக வளர்ப்பது பிரதானமான தொழில் ஆகும். பல நாடுகளின் நாய் வகைகள் உலகம் முழுக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப் படுகின்றன. நவீன உலகில் பல இனங்கள் மரபணு மாற்றம் செய்யப் படுகின்றன, கலப்பினம் செய்யப்பட்டு பல புதிய இனம் உருவாக்கப் படுகின்றன. பின் அவற்றிற்கான கிளினிக் மற்றும் உணவுச் சந்தையும் பெரிய தொழிலாக இருந்து வருகிறது. செல்லப் பிராணிகளின் தினசரி உணவிற்காக செலவிடும் தொகை பல இடங்களில், அந்தக் குடும்பத்தில் உள்ள தனி மனிதனின் உணவுக்கான செலவை விட அதிகம். இது போக செல்லப் பிராணிகளுக்காக காப்பகம், அழகுப் பொருட்கள், உடைகள் என ஆடம்பரமாக வாழும் எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டன இந்த நவீன யுக நாய்கள்.

ஆம் பொருளாதாரத்தில் இந்தச் செல்லப் பிராணிகளின் பங்கு என்னவென்று பார்க்கும் போது தான் இதன் வீரியம் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கும். அமெரிக்கா சந்தித்து வந்த கடும் பொருளாதார நெருக்கடிகளிலும் அதன் பொருளாதார வளர்ச்சியானது சீராகவே வளர்ந்து கொண்டிருக்கிறது. 2001ல் 37.3 பில்லியன் டாலர்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பு சாதனங்கள் மற்றும் உணவுக்காக செலவிடப் பட்டு வந்த நிலையில், இத்தனை மந்தநிலையிலும் 52.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது(உலகம் முழுமைக்குமே 81 பில்லியன் டாலர்கள் செலவிடப் படுகின்றது). நாய்கள் மற்றும் பூனைகள் தங்கள் வாழ்நாளில் 7240 டாலர்களில் இருந்து 12700 டாலர் வரையிலும் மற்றும் 8620 டாலர்களில் இருந்து 11275 டாலர்கள் தன் எஜமானருக்கு (குடும்ப உறுப்பினருக்கு)செலவு வைக்கின்றன என்றால் இவை எவ்வளவு பெரிய சொந்தக்காரர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை விடவும், பணவீக்கத்தை விடவும் இரு மடங்கு உயர்ந்திருந்தது செல்லப் பிராணிகளுக்கு ஆகும் செலவு.

மேலை நாடுகளை மட்டும் பார்த்தால் போதுமா? இந்தியாவுக்கும் வருவோம் தற்பொழுது முந்நூறு கோடி ரூபாய் சந்தையை உருவாக்கியிருக்கும் இந்த சந்தை இரட்டை இலக்க வளர்ச்சியுடன் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. 2015ல் எல்லாம் இந்த சந்தையை 800 கோடி பெருமானமுள்ள சந்தையாக மாற்றும் சாத்தியம் இருக்கிறது என சில நிறுவனங்கள் சொல்கின்றன. நம் நாட்டினைப் போலே சீனா, பிரேசில், ரசியா, தென் அமெரிக்கா என BRICS நாடுகள் எல்லாவற்றிலும் கடை விரித்துள்ளன சில பெட் கேர் ஜாம்பவான்கள்.
அவர்கள் இலட்சியம் எல்லாம் நம் தாய் சமைக்கும் உணவிலிருந்து, நாய்க்கு வைக்கும் உணவு வரை எல்லா உணவுப் பொருட்களும் நமது நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்பது தான். அந்த BRICS அமைப்பின் ஒரு நாட்டின் அதிபரின் குரல் தான் இந்த விவாதத்தை எடுத்துச் செல்லும் முக்கியம் அளிக்கிறது

அதனால் தான் உங்கள் குடும்ப அங்கத்தினராக வயதான பெற்றோர்களையோ இல்லை வறிய உறவினரையோ வைக்கும் இடங்களில் இறக்குமதி செய்யப் பட்ட வளர்ப்பு பிராணிகளை அமர வைக்கிறீர்கள். ஈமு கோழி போல, எத்தனையோ வகை நாய்கள் இந்தியச் சூழலில், நெருக்கடியில், குடும்ப அமைப்பில் வாழத் தகுதியில்லாதவை. நீங்கள் ஒரு நீண்ட விடுமுறையோ அல்லது உறவினர்களின் வீட்டு விழாக்களுக்கோ எங்காவது ஊருக்கு செல்ல வேண்டுமாயின், நீங்கள் ஒரு வருடத்திற்கான வளர்ப்பு செலவுகளை சில நாட்களுக்கு செலவிட நேரிடும், அதற்கு பதிலாக உங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப் படலாம். அதிலும் ஹட்ச் டாக் எனப்படும் பக்ஸ் இன நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு செய்யும் மருத்துவ செலவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.

நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் அனேக கேலிக்கூத்துகளுக்கும் பெங்களூருவைத் தான் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது, இப்பொழுதும் கூட ஏனென்றால் பெங்களூரு தான் இந்த புதிய சந்தையின் தலைநகரம் கீழே சில சேவைகளும் அதன் விலைப் பட்டியலும் கொடுக்கப் பட்டுள்ளன பார்க்கவும்

#நிறுவனத்தின் பெயர் பெட்ஸ்பேஸ், கோரமங்ளா, பெங்களூரு
 தொழில் பெட் கேர் (விலங்குகள் காப்பகம்(creche), விலங்குகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் {செலவு கு.பட்சம் 3000/-ரூபாய்}
   வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 20-30 சதவீத வளர்ச்சி

#நிறுவனத்தின் பெயர் வேக்ஸ் அண்டு விக்கில்ஸ், கோரமங்ளா, பெங்களூரு
  தொழில் செல்லப் பிராணிகளுக்கான அழகு நிலையம் (நகம் வெட்டுதல், பாலிஷ் செய்தல், ரோமங்களுக்கு வண்ணம் பூசுதல், ஆயில் மஸாஜ் செய்தல், முடி வெட்டுதல்)
  வருமானம் கிட்டதட்ட 5000/-ரூபாய் பேக்கேஜ்களில், 30-40 சதவீத வருமான வளர்ச்சியை காட்டுகிறது


#நிறுவனத்தின் பெயர் பெட் தாபா, பெங்களூரு
  தொழில் செல்லப் பிராணிகளுக்காக வித விதமாக ருசிகரமாக உணவு சேவை, பார்ட்டி ஆர்டர்கள்
  வருமானம் கிட்டதட்ட மாதச் செலவாக கு.பட்சம் 3000/-ரூபாய் பேக்கேஜ்களில், 30-40 சதவீத வருமான வளர்ச்சியை காட்டுகிறது.

#நிறுவனத்தின் பெயர் க்லெணாண்ட், பெங்களூரு
  தொழில் செல்லப் பிராணிகளுக்கான் சூப்பர் மார்கெட்
  வருமானம் கிட்டதட்ட 20 சதவீத வருமான வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் காட்டுகிறது

இப்பொழுது மாநகரங்களில் நீங்கள் நாய் வளர்க்க மாதம் ரூபாய் 10000/-ஆவது குறைந்தபட்சம் செலவிட வேண்டும்.

 சென்னையிலும் பல இடங்களில் இது போன்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. செல்லப் பிராணிகளுக்கென இன்ஷ்யூரன்ஸ், பயற்சி நிறுவனம், இனை சேர்க்கும் தரகர்கள் என முனைப்போடு வளர்ந்து வருகிறது நம் நாடு முழுக்க, ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் கதாநாயகர்களுக்கென கம்பீர நாய்களும், நாயகிக்கேன செல்ல, குள்ள நாய்களும் நடிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது அழகுப் பொருட்கள் நுகர்வைப் பெருக்கிட தொடர்ந்து வந்த உலக அழகிப் போட்டிகளில் எல்லாம் இந்தியப் பெண்களுக்கு வந்திட, ஐஸ்வர்யா,சுஸ்மிதா,பிரியங்கா என்று படம் போட்டு விற்கப் பட்டு வரும் வீண் அழகு சாதனப் பொருட்களைப் போல, டால்மேஷன்களும், பக்ஸ்களும், பொமரேனியன்களும் நீங்கள் கடினப்பட்டு உழைக்கும் வாழ்வில் இன்னும் பாரமேற்றும்.

நமக்கு முதியோர் இல்லங்களும் வேண்டாம், அல்ட்ரா மாடர்ன் பெட் கேர்களும் வேண்டாம்!!

பஜ்ஜி -சொஜ்ஜி
இன்னும் மசாலா சேர்த்து அடுத்த பகுதியில்

- கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக