செவ்வாய், 15 ஜனவரி, 2013

பஜ்ஜி -சொஜ்ஜி -11 White Culture



நெல்சன் மண்டேலாவிற்குப் பிறகு தென் அமெரிக்காவின் அதிபரான ஜேக்கப் ஜுமோ சமீபத்தில் உலகளாவிய ஒரு சர்ச்சைக்குள்ளானார் தெரியுமா? மேலை நாடுகள் மற்றும் அமெரிக்கா என அவர் கருத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. பத்திரிக்கைகள், முற்போக்கு சங்கங்கள், அமைப்புகள் என இவர் கருத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். அப்படியென்ன ஒரு பெரிய விஷயம் என்று தானே கேட்கிறீர்கள்?

விஷயம் இது தான் ஒரு பேட்டியில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் நவீன உலகில் குடும்பங்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார். தனது நாட்டினர் யாரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை விரும்பாத அவர், அது வெள்ளை மனிதர்களின் பகட்டு வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். இது போன்ற பகட்டு வாழ்க்கையால் குடும்பங்கள் அழிந்து கொண்டே போகின்றன ஆதலால் இது ஆப்பிரிக்காவின் கலாச்சாரம் அல்ல என்றும் வெள்ளையர்களின் கலாச்சாரம் (White Culture) சொல்லியிருக்கிறார். இதற்குத் தான் கிளம்பியிருக்கின்றன இத்தனை விமர்சனங்கள். இவரை மிகவும் பழமைவாதி, சரித்திரம் தெரியாதவர், பிற்போக்குவாதி என்றெல்லாம் தாக்கி பல ஊடகங்கள் விமர்சித்தன. அவரை தொடர்ந்து தன் கருத்துக்கு விளக்கம் தரும் நிலையில் தள்ளப்பட்டார். இந்தக் கட்டுரை ஜேக்கப் ஜூமாவைப் பற்றியது அல்ல, அவருக்கு வந்த விமர்சனத்தின் பின்னணியைப் பற்றியது.

வளர்ப்பு பிராணிகள் வீட்டில் இருப்பது தவறானதா?
இல்லை, வளர்ப்பு பிராணிகளில் முதலிடமான நாய்களுக்கும் மனிதனுக்குமான உறவு மிகவும் பழமையானது 15000 ஆண்டுகளுக்கும் மேலாக நாய்களுக்கும் மனிதர்களுக்குமிடையே உறவு இருந்து வருகிறது. எளிதாக மனிதனுடன் பழக ஆரம்பித்த நாய், அவனுடன் வேட்டைக்கு வருவதும், பாதுகாப்பாக இருப்பதும், கால்நடைகளை காவல் காப்பதும் என நண்பனாக வாழ்ந்து வருகின்றன. அதை தன் எஜமானனுக்கு கவ்விக் கொடுக்கும் அளவிற்கு விசுவாசம் கொண்டது தான். ஆனால் இன்று வெறும் பகட்டிற்காகவும், தங்கள் மேட்டிமையை எடுத்துக் காட்டும் கௌரவ அடையாளங்களாகவும் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் பிரச்சினைக்குரியவை. இவை தான் குடும்ப உறவுகளை பாதிப்பதாகவும், வீண் செலவுகளை தருவதால் பொருளாதாரம் பாதிக்கப் படுவதாகவும் ஜேக்கப் ஜுமோ வலியுறுத்தக் காரணம்.

இன்றைய ஊடகங்கள் உண்மையாக இல்லாததையும் பெரிதுபடுத்தி, குறுகிய வட்டம் தாண்டி விமர்சிக்காமல், ஆராயாமல் செயல்படுவதை இந்த விவாதத்திலும் அறிந்து கொள்ள முடியும், ஒரு சார்பு நிலையிலே மற்றொரு பக்கம் இருக்கும் நியாங்களை சுட்டிக் காட்ட பெரும்பாலான ஊடகங்கள் முனைவதில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களின் சுபாவமாகவும் மாறிவிட ஆரம்பித்துவிட்டது. எதிர்கருத்தை சொல்பவர்களாஇ அப்படியே ஒதுக்கி வைக்கும், முற்றிலும் புறக்கணிக்கும் பழக்கமாக மாரிவிட்டது. இப்படித் தான் இந்த விஷயத்திலும் மறு பக்கம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

முதலில், இது போன்ற வளர்ப்பு பிராணிகள் எப்படி குடும்ப அமைப்பை பாதிக்கின்றன என்று பார்ப்போம்.
நாய் வீட்டிற்கு வெளியே இருந்த வரை எந்தப் பிரச்சினையும் வந்துவிடவில்லை, ஆனால் நம்மோடு சமமாக சாப்பிடும் இடங்களிலும், படுக்கையறையில் பகிர்ந்து கொள்ளவும் ஆரம்பிக்கையில் தான் பிரச்சனை வருகிறது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது நம் எல்லோருக்கும் கடமையே, ஆனால் விலங்கினம் மீது செலுத்தப் படும் அதீத நேசம் குடும்ப உறவுகளை சிதைக்கும் என்பது ஏற்புடையது.

இன்று பல வீடுகளில் நான்கு பேருக்கு மேல் ஒரு காரில் அமர்வது அநாகரிகமாகவும் கௌரவக் குறைச்சலாகவும் ஆகிவிட்டது, ஆனால் அதே காரில் ஒரு நாய் சுகமாக பயணிக்கிறது. குழந்தை இல்லாத பலர் அனாதை விடுதிக்கு சென்று தத்தெடுப்பது வழக்கம் தான். ஆனால் இன்று பலர் தங்கள் குழந்தைகளாக ஒரு பொமரேனியனையோ இன்ன பிற இறக்குமதி நாய்களையோ வளர்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா? மேலை நாடுகளில் மட்டுமல்ல, இது நம் நாட்டிலேயே, நம் நகரத்திலேயே நடக்கிறது. அந்த அளவு சக மனிதயினம் மீது நம்பிக்கை குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட, தனியே விட்டுவிட்டு வந்த  எத்தனையோ மனிதர்களின் வீட்டின் சோபக்களில் நாய்களும், பூனைகளும் தான் அமர்ந்திருக்கின்றன.

இதில் அமெரிக்காவில்  சமீபத்தில் அரசின் புள்ளியியல் ஏடுகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியையும் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டு வென்ற சம்பவங்களும். எத்தனை செலவு செய்து வளர்த்தாலும், மிருகங்களை அடித்தால் சிறை தண்டனையும் உண்டு. இப்படி வளர்ப்பு பிராணிகள் பற்றிய புரிதல்கள் நவநாகரிக தாக்கத்தில் பல மாறுதல்களை அடைந்து விட்டது. குடும்ப அமைப்புகளை சிதைக்கும் பல்வேறு காரணிகளாக இவற்றையும் சேர்ப்பதற்கு எந்த தயக்கமும் தேவையில்லை. உளவியல் ரீதியாக இன்றைய மனிதன் உறவுகளுக்கு பயந்து, அவர்களிடம் உள்ள நம்பிக்கை குறைந்து இப்படி வளர்ப்பு பிராணிகளை குடும்ப உறவுகளாக பாவித்துக் கொண்டது இந்த வெள்ளையர்களின் கலாச்சாரம். 

சரி இந்த வளர்ப்பு பிரானிகள் ஏற்படுத்தும் பொருளாதார அசௌகரியங்கள் யாவை என அடுத்த பகுதியில் பார்ப்போம்.


- ஜீவ.கரிகாலன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக