ஞாயிறு, 27 ஜனவரி, 2013

என் அமைதி எங்கே இருக்கிறது ?

சும்மா ஒரு  கதை சொல்லலாமேன்னு தான் இந்தப் பதிவு : 

உலக வாழ்வை வெறுத்த சன்னியாசி ஒருவர் மக்களோடு இணைந்து வாழ்வதை வெறுத்தார்.
அவர் கிட்டதட்ட இருபது வருடங்களாக இமாலயத்தில் வசித்து வந்தார். அந்த வருடங்களில் அவர் அகங்காரம் அறவே அழிந்து, முற்றிலும் அமைதியடைந்து விட்டதாகத் தோன்றியது. பின்பு அவரது சீடர்கள் ஒருமுறை அவரிடம், “அடிவாரத்தில் ஒரு விழா நடக்கிறது, தாங்கள் வந்து அருளாசி தாருங்கள்” என்று விண்ணப்பம் வைக்க, அவரும் ஒப்புக் கொண்டார்.

கீழே வந்து அவர் நடத்திய யாகத்திற்கு ஏராளமான மக்கள் கூட்டம் வந்திருந்தது, அவரது சாந்தமான முகம் எல்லா மக்களுக்கும் ஒரு நிம்மதியையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால் அது அந்த யாகத்தின் போது ஒருவன் தும்மல் போடும் வரையில் தான்.

அவர் நடத்திய யாகத்தில் ஒருவன் தும்மல் போட்டு விட்டான் என்றதும் அவ்வளவு தான், அந்த சாதுவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லாமல் போனது. யாகக் குண்டங்கள் கவிழ்ந்தன, சீடர்களுக்கு அடி விழுந்தது. கோபத்தில் மாலைகளைப் பிய்த்து எறிந்தார், பூஜை சாமான்களை எட்டி உதைத்தார், கமண்டலத்தைத் தூற எறிந்தார். மக்களைப் பார்த்து சாபமிட்டார்.மக்கள் யாரோ அசுரன் என்று பயந்து அங்கிருந்து ஓடினர்.

 பின்னர் தன் யாகம் கலைந்தது, அமைதி குலைந்தது என்று தோன்றியதும் மனம் வெதும்பினார்.தன் சீடர்களை வெளியேற்றினார்..தன் கோபம் அடங்கவில்லை, மனம் அமைதியடையவில்லை, தன்னையே நிந்தித்தார். கடைசியாக, தன்னந்தனியாக காட்டினுள்  நடந்து சென்று தன் பழைய குருநாதரைக் கண்டார்.

தன் குருவை வணங்கி விட்டு, அவரிடம்,“குருவே!! இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமாயினும் தனியாக தவமிருக்கிறேன், எனக்கு அந்த உன்னதமான அமைதி மீண்டும் கிடைக்கவேண்டும், மக்களிடம் இருந்து விலகியிருக்க இமயத்தை விட உயர்ந்த மலைப் பகுதி எங்கிருக்கிறது என்று காட்டுங்கள்”


(முன்பெல்லாம் இப்படிப்பட்ட சின்ன சின்ன கதைகள் சிறுவர் மலர் போன்ற இதழ்களில் நிறைய வரும், ஆனால் சமீபத்தில் அந்த தரம் எல்லாம் காணாமல் போய்விட்டது. அதனால் தான் இந்தக் கதை, இது எனக்காக எழுதப் பட்டது)



- ஜீவ.கரிகாலன்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 14/ விஸ்வரூபம்
























Arvind Swaminathan

(- பார்த்ததில் பிடிக்காதது -)

”சமணர்களைக் கழுவேற்றினார்கள்” என்று சொல்லி இது போன்ற புகைப்படங்களை ஆதாரமாகக் காண்பிக்கின்றனர் ஒரு சிலர்.

சரி... எந்தச் சமணராவது ”கைகளில்” திருநீற்றுப் பட்டையை அடித்துக் கொண்டிருப்பார்களா? முற்றும் துறந்து முடி களைந்து வாழ்ந்த அவர்கள் ”தாடி” வைத்துக் கொண்டிருப்பார்களா?

இவர்கள் சமணர்களே அல்ல: உண்மையில் சிவத் தொண்டர் வேடம் பூண்டு பசுக்களைக் கொல்தல், மனிதர்களைக் கொலை செய்தல், கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற பாவச் செயல்களைச் செய்த கயவர்கள். திருடர்கள். கொள்ளைக்காரர்கள்.
அதுபோன்ற மா பாதகம் செய்தவர்களே பெரும்பாலும் கழுவில் ஏற்று கொல்லப்படுவர். அதனாலேயே இவர்களுக்கு அத்தண்டனை.

சிலர் ”எண்ணாயிரம் சமணர்” என இலக்கியத்தில் இருந்து ஆதாரம் கூறுவர்.

“எண்ணாயிரம்” என்பது மதுரை அருகே இருக்கும் ஒரு ஊர். (விழுப்புரம் அருகே கூட ஒரு எண்ணாயிரம் இருக்கிறது)

”8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்” என்பது எந்த வரலாற்று, இலக்கிய ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல். ஒரு சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். அவ்வளவுதான். 8000 என்பதெல்லாம் சும்மா...

(மறுப்போர் ஆதாரங்களுடன் மறுக்கவும்)

(என் நண்பர் இணையத்தில் சொன்ன ஒரு அருமையான பகிர்வு)
------------------------------------------------------------------------------------------------------------

மற்றொரு நபருடன் பேசிக் கொண்டிருக்கையில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொன்னவர் கணியன் பூங்குன்றனார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் பூங்குன்றனார் என்பதே பூங்குன்றன் எந்த ஊரைக் குறிப்பதாகும், தன் சாதியையும், தன் ஊர்ப் பெயரையும் வைத்தவரா இப்படிப் பாடியிருக்க முடியும் என்று கேட்டார்.

“யாதும்” என்ற பதம், சமய நம்பிக்கையான முற்பிறவியை வைத்து எழுதப் பட்டமையை சொல்கிறார்.

யாதும் ஊரே என்பது தமது முற்பிறவியில் பிறந்திருக்கக்கூடிய வேறு ஊர்கள் எதுவாக வேண்டுமாயினும் இருக்கலாம் என்கிறார்.

மேலும் இதைக் ஏற்றுக் கொள்ளும் விதமாக “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது மிகப் பொருத்தமாய் கர்ம வினையினை ஏற்று வருகிறது. “சாதலும் புதுவது மன்றே வாழ்தல்” கூட சமய நெறியை ஒட்டிய வரிகளே என்று அவர் சொல்லும்பொழுது என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது...

மேலும் பண்ணாகப் பாடும் பொழுது இச்சமயக் கருத்துகள் போலச் செய்து, இன்னும் சொல் பொருளை மிஞ்சிவிட்டதாகக் கூறுகிறார்.

என்ன (யாதும் ஊரே!! யாவரும் கேளிர் என்ற வரி 500 ஆண்டுகள் வயதான கம்யுனிசத்தை விட மிகப் புரட்சியாய் இருக்கிறதே என்று நினைத்திருந்தேன்)

-----------------------------------------------------------------------------------------------------------


இந்த இரண்டுக் கருத்துகளிலுமே நாம் முரன்படலாம், ஆனால் ஏற்றுக் கொள்வோரை தடுத்திடவும் முடியாது. வரலாறு மட்டுமல்ல உலகின் எல்லா பொருளுக்கும் மறைபொருளாகவோ, எதிர்த் திசையில் பிம்பமாகவோ அல்லது எதிர்வினையோ பதியலாம்.

வரலாற்றின் ஒவ்வொரு உண்மைகளின் அடிவாரத்திலும் மற்றொரு உண்மையின் சமாதியாகியிருக்கிறது. உண்மையும், பொய்யும் தானே நாணயத்தின் இருபக்கங்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு பூவுக்கும், தலைக்குமே குறைந்தபட்சம் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. இது தான் இறுதி உண்மை.

ஆனால் நாம் பல இடங்களில் உண்மையைக் கண்டறிதலோடு முடித்துவிடுகிறோம், இன்னொரு உண்மை எட்டிப் பர்த்துக் கொண்டேதான் இருக்கிறது.

அப்படித்தான் விஸ்வரூபம் படம் கூட அவரது செக்யூலர் மற்றும் தேசிய அளவீடுகளில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. இப்பொழுது எந்த அணியும் (சினிமா ரசிகனைத் தவிர) கமலுக்கு உதவ முன்வரவில்லை. ஆதரவு தெரிவிக்க எந்த அணியாவது ஒரு அடி எடுத்து வைக்கிறார்களா என்றால் vote bank தான் காரணம். இதில் என்னப் புது விஷயம் இருக்கிறது, அநாவசியமாக ஒரு feature filmஐ documentary film ஆகக் காட்டுகிறது. இவர்களுக்கு திடீர் ஆதரவு தெரிவுக்கும் சில பார்ட்டிகளால் இன்னும் பெரிய விவகாரம் ஆகிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எதிர்ப்பில் இருப்பவர்கள்”ரிலீஸ்” ஆன பின்பு போய் பார்த்த பின் முடிவுக்கு வருவார்கள். ”கமல்”, சேம் சைடு தானே கோல் அடித்திருக்கிறார் என்று!!


கஜூரஹோ, அஜந்தா ஓவியங்கள் மீது நடந்தவை
ஓவியர் MF Hussain,
சல்மான் ருஸ்டி, போன்ற எல்லாமுமே கலாச்சாரத் தாக்குதல் தானே!!

நான்கு முதல்வர்களையும், நாற்பது முதல்வர் கனவுகளையும் உருவாக்கிய இந்த மண்ணில்

சினிமா ஒரு பவர்புல் மீடியா அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று சொல்ல முடியாது. கமலஹாசனால் நீக்க வேண்டும் என்று சொன்ன அத்தனைக் காட்சிகளுக்கும் இணையத்தில் ஆதாரம் (உண்மையில் இதைப் போன்ற சம்பவம் பற்றிய தகவல்கள்)கிடைக்கும், ஆனால் அவை உண்மையாகி விடாது.

அதே சமயம் இந்த அரசியலில் நான் கமலஹாசனை விட தர்ம சங்கடமான இடத்தில் பகுத்தறிவுப் பகலவனையும், உபகோள்களையும், மணிகளையும் தான் பார்க்கிறேன். பாவம் எப்படி சமாளிப்பாங்க என்று பார்க்கிறேன். ”காதலா, காதலா” என்ற படம் எனக்குப் பிடித்திருந்தாலும் அதில் வரும் சில முருகக் கடவுளரைப் பற்றிய காட்சிகள் மிக மோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும்(மிகக் கொடுமையாக). அன்பே சிவம் படம் பார்த்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் புத்தகம் வாங்கினேன் dosage அதிகம் தான், ஆனால் தசாவதாரத்தில் பேசப்படும் நாத்திகக் கருத்துகள், intelligent design போன்றவை ஓவர் டோசேஜ் ஆகிவிட்டது, அதற்கு பின் தன்னையறிதல் என்ற வழியே மீண்டும் ஆன்மிகத் தேடலில் சென்றுவிட்டேன் என்பது வேறு கதை.

இவர் தன்னையும் ஒரு பெரியாரிஸ்டாய் முன்னிருத்திய இடமெங்கும் இனி மௌனம் மட்டுமே நிற்கும். கமலுடன் நட்பு கொண்டாடி வந்த கழகங்கள் சிறுபான்மை இனத்தை தட்டிக் கேட்கவும் முடியாமல், தன் தோழரை சமரசம் செய்யவும் முடியாமல் cultural fascism பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் பட்சத்தில் கிடைத்திருக்கும் எக்கச்சக்க hype கமல் ஹாசனைப் காப்பாற்றும்









------------------------------------------------------------------------------------------------------------------------------









அடுத்த பகுதியில் பார்ப்போம்
ஜீவ.கரிகாலன்





திங்கள், 21 ஜனவரி, 2013

பஜ்ஜி - சொஜ்ஜி 13 பெட்கேரும் பெங்களூருவும்

 WHITE CULTURE - பாகம் 2

முதல் பாகம் http://kalidasanj.blogspot.in/2013/01/11-white-culture.html


முன்னர் நாம் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான நாய், பூனை என எந்த விலங்குகளுக்கும் தனியாக உணவு செய்வது என்பதே வழக்கில் இல்லை. மனிதன் உட்கொள்ளும் உணவில் மீந்ததோ, பழையதோ அல்லது இறைச்சிகளின் எலும்புகள் மற்றும் எடுத்துக்கொள்ள முடியாத பாகங்களையும் இவ்விலங்குகள் உண்டு அவை ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்தன. இவை யாவும் எந்த ஒரு பொருளாதாரச் சுமையையும் ஒரு விளிம்பு நிலை மனிதனுக்குக் கூட கொடுக்காமல் அவை வாழ்ந்தன.

ஆனால் மேலை நாட்டு கலாச்சாரமாக மேல் தட்டு வர்கம் உபயோகிக்க ஆரம்பித்த  பிறகு தான், செல்லப் பிராணிகளாக அயல்நாட்டு இனங்களை கௌரவ அடையாளங்களாக மற்றவர்களும் வளர்க்க ஆரம்பிக்க, வளர்ப்பு பிராணிகளின் உபயோகங்கள் குறைந்து, அவை சுமைகளாக ஆரம்பித்துவிட்டன. ஜேக்கப் ஜுமோவின் மீது வந்த விமர்சனங்களால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பிராணிகள் மீதான மோகம் தெளிவாகிறது, இதற்கு கொடி பிடிக்கும் ஊடகங்களின் பிரயர்த்தனமும் சொல்வது வெறு குடும்ப அமைப்பில் சிக்கல் என்ற பேச்சுக்காய் வந்தவையல்ல மிகப்பெரிய சந்தையை பின்புலமாகக் கொண்டுள்ள வளர்ப்பு பிராணிகள் சந்தையின் (PET CARE MARKET)அளவு தான் காரணம்.


பெட்கேர் சந்தையில் இருக்கும் தொழில்களின் பட்டியல் மிகப் பெரியது உயர்ந்த ஜாதி இனங்களாக வளர்ப்பது பிரதானமான தொழில் ஆகும். பல நாடுகளின் நாய் வகைகள் உலகம் முழுக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப் படுகின்றன. நவீன உலகில் பல இனங்கள் மரபணு மாற்றம் செய்யப் படுகின்றன, கலப்பினம் செய்யப்பட்டு பல புதிய இனம் உருவாக்கப் படுகின்றன. பின் அவற்றிற்கான கிளினிக் மற்றும் உணவுச் சந்தையும் பெரிய தொழிலாக இருந்து வருகிறது. செல்லப் பிராணிகளின் தினசரி உணவிற்காக செலவிடும் தொகை பல இடங்களில், அந்தக் குடும்பத்தில் உள்ள தனி மனிதனின் உணவுக்கான செலவை விட அதிகம். இது போக செல்லப் பிராணிகளுக்காக காப்பகம், அழகுப் பொருட்கள், உடைகள் என ஆடம்பரமாக வாழும் எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டன இந்த நவீன யுக நாய்கள்.

ஆம் பொருளாதாரத்தில் இந்தச் செல்லப் பிராணிகளின் பங்கு என்னவென்று பார்க்கும் போது தான் இதன் வீரியம் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கும். அமெரிக்கா சந்தித்து வந்த கடும் பொருளாதார நெருக்கடிகளிலும் அதன் பொருளாதார வளர்ச்சியானது சீராகவே வளர்ந்து கொண்டிருக்கிறது. 2001ல் 37.3 பில்லியன் டாலர்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பு சாதனங்கள் மற்றும் உணவுக்காக செலவிடப் பட்டு வந்த நிலையில், இத்தனை மந்தநிலையிலும் 52.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது(உலகம் முழுமைக்குமே 81 பில்லியன் டாலர்கள் செலவிடப் படுகின்றது). நாய்கள் மற்றும் பூனைகள் தங்கள் வாழ்நாளில் 7240 டாலர்களில் இருந்து 12700 டாலர் வரையிலும் மற்றும் 8620 டாலர்களில் இருந்து 11275 டாலர்கள் தன் எஜமானருக்கு (குடும்ப உறுப்பினருக்கு)செலவு வைக்கின்றன என்றால் இவை எவ்வளவு பெரிய சொந்தக்காரர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை விடவும், பணவீக்கத்தை விடவும் இரு மடங்கு உயர்ந்திருந்தது செல்லப் பிராணிகளுக்கு ஆகும் செலவு.

மேலை நாடுகளை மட்டும் பார்த்தால் போதுமா? இந்தியாவுக்கும் வருவோம் தற்பொழுது முந்நூறு கோடி ரூபாய் சந்தையை உருவாக்கியிருக்கும் இந்த சந்தை இரட்டை இலக்க வளர்ச்சியுடன் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. 2015ல் எல்லாம் இந்த சந்தையை 800 கோடி பெருமானமுள்ள சந்தையாக மாற்றும் சாத்தியம் இருக்கிறது என சில நிறுவனங்கள் சொல்கின்றன. நம் நாட்டினைப் போலே சீனா, பிரேசில், ரசியா, தென் அமெரிக்கா என BRICS நாடுகள் எல்லாவற்றிலும் கடை விரித்துள்ளன சில பெட் கேர் ஜாம்பவான்கள்.
அவர்கள் இலட்சியம் எல்லாம் நம் தாய் சமைக்கும் உணவிலிருந்து, நாய்க்கு வைக்கும் உணவு வரை எல்லா உணவுப் பொருட்களும் நமது நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்பது தான். அந்த BRICS அமைப்பின் ஒரு நாட்டின் அதிபரின் குரல் தான் இந்த விவாதத்தை எடுத்துச் செல்லும் முக்கியம் அளிக்கிறது

அதனால் தான் உங்கள் குடும்ப அங்கத்தினராக வயதான பெற்றோர்களையோ இல்லை வறிய உறவினரையோ வைக்கும் இடங்களில் இறக்குமதி செய்யப் பட்ட வளர்ப்பு பிராணிகளை அமர வைக்கிறீர்கள். ஈமு கோழி போல, எத்தனையோ வகை நாய்கள் இந்தியச் சூழலில், நெருக்கடியில், குடும்ப அமைப்பில் வாழத் தகுதியில்லாதவை. நீங்கள் ஒரு நீண்ட விடுமுறையோ அல்லது உறவினர்களின் வீட்டு விழாக்களுக்கோ எங்காவது ஊருக்கு செல்ல வேண்டுமாயின், நீங்கள் ஒரு வருடத்திற்கான வளர்ப்பு செலவுகளை சில நாட்களுக்கு செலவிட நேரிடும், அதற்கு பதிலாக உங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப் படலாம். அதிலும் ஹட்ச் டாக் எனப்படும் பக்ஸ் இன நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு செய்யும் மருத்துவ செலவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.

நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் அனேக கேலிக்கூத்துகளுக்கும் பெங்களூருவைத் தான் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது, இப்பொழுதும் கூட ஏனென்றால் பெங்களூரு தான் இந்த புதிய சந்தையின் தலைநகரம் கீழே சில சேவைகளும் அதன் விலைப் பட்டியலும் கொடுக்கப் பட்டுள்ளன பார்க்கவும்

#நிறுவனத்தின் பெயர் பெட்ஸ்பேஸ், கோரமங்ளா, பெங்களூரு
 தொழில் பெட் கேர் (விலங்குகள் காப்பகம்(creche), விலங்குகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் {செலவு கு.பட்சம் 3000/-ரூபாய்}
   வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 20-30 சதவீத வளர்ச்சி

#நிறுவனத்தின் பெயர் வேக்ஸ் அண்டு விக்கில்ஸ், கோரமங்ளா, பெங்களூரு
  தொழில் செல்லப் பிராணிகளுக்கான அழகு நிலையம் (நகம் வெட்டுதல், பாலிஷ் செய்தல், ரோமங்களுக்கு வண்ணம் பூசுதல், ஆயில் மஸாஜ் செய்தல், முடி வெட்டுதல்)
  வருமானம் கிட்டதட்ட 5000/-ரூபாய் பேக்கேஜ்களில், 30-40 சதவீத வருமான வளர்ச்சியை காட்டுகிறது


#நிறுவனத்தின் பெயர் பெட் தாபா, பெங்களூரு
  தொழில் செல்லப் பிராணிகளுக்காக வித விதமாக ருசிகரமாக உணவு சேவை, பார்ட்டி ஆர்டர்கள்
  வருமானம் கிட்டதட்ட மாதச் செலவாக கு.பட்சம் 3000/-ரூபாய் பேக்கேஜ்களில், 30-40 சதவீத வருமான வளர்ச்சியை காட்டுகிறது.

#நிறுவனத்தின் பெயர் க்லெணாண்ட், பெங்களூரு
  தொழில் செல்லப் பிராணிகளுக்கான் சூப்பர் மார்கெட்
  வருமானம் கிட்டதட்ட 20 சதவீத வருமான வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் காட்டுகிறது

இப்பொழுது மாநகரங்களில் நீங்கள் நாய் வளர்க்க மாதம் ரூபாய் 10000/-ஆவது குறைந்தபட்சம் செலவிட வேண்டும்.

 சென்னையிலும் பல இடங்களில் இது போன்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. செல்லப் பிராணிகளுக்கென இன்ஷ்யூரன்ஸ், பயற்சி நிறுவனம், இனை சேர்க்கும் தரகர்கள் என முனைப்போடு வளர்ந்து வருகிறது நம் நாடு முழுக்க, ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் கதாநாயகர்களுக்கென கம்பீர நாய்களும், நாயகிக்கேன செல்ல, குள்ள நாய்களும் நடிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது அழகுப் பொருட்கள் நுகர்வைப் பெருக்கிட தொடர்ந்து வந்த உலக அழகிப் போட்டிகளில் எல்லாம் இந்தியப் பெண்களுக்கு வந்திட, ஐஸ்வர்யா,சுஸ்மிதா,பிரியங்கா என்று படம் போட்டு விற்கப் பட்டு வரும் வீண் அழகு சாதனப் பொருட்களைப் போல, டால்மேஷன்களும், பக்ஸ்களும், பொமரேனியன்களும் நீங்கள் கடினப்பட்டு உழைக்கும் வாழ்வில் இன்னும் பாரமேற்றும்.

நமக்கு முதியோர் இல்லங்களும் வேண்டாம், அல்ட்ரா மாடர்ன் பெட் கேர்களும் வேண்டாம்!!

பஜ்ஜி -சொஜ்ஜி
இன்னும் மசாலா சேர்த்து அடுத்த பகுதியில்

- கரிகாலன்

பஜ்ஜி -சொஜ்ஜி - 12/ Life After Death


   ஒரு மாமனிதரின் நினைவுப் பதிவு

கரூரிலிருந்து விசுவானதன் சார் என்னை இன்று அழைக்கும் பொழுது நானும் அந்த செய்தியை அறிந்திருந்தேன். அந்த இரவு என் நினைவில் வந்தது.

அவரை சந்திக்க ஏற்பாடு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை, அப்பொழுது அவர் தன் ஆன்மீக பயணத்தில் கரூர் வந்திருந்தார். வாழ்க்கையின் இறுதிப் பயணமாக அவர் ஆன்மீகத் தேடுதலில் இருந்த காலம் அது. எங்கள் கண்களின் தேங்கியிருந்த கற்பனைகள் யாவும், கனவுகள் ஆகவும் பின்னர் எண்ணங்களாகவும் வலிமை கொடுத்தவர் அவர். அவரைப் பார்ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் அது விசு சார் தான் ஏற்படுத்திக் கொடுத்தார். அது 2005, கல்லூரியில் நான் இறுதியாண்டு, கிட்டதட்ட பத்து பேருக்காவது அவர் எழுதிய “எண்ணங்கள்ஐ வாங்கி கொடுத்திருப்பேன். நாங்கள் எதிர்பார்த்தது எல்லாம் அவரைப் பார்க்க வேண்டும் என்பது தான்.

நான், என் சீனியர் ஜெகன், எனது நண்பர் நந்தகுமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்றார் விசு சார். தளர்வான உடையில், மெல்லிய உடல் கொண்ட அந்த மாமனிதர் எங்களை புன்னகைத்தார். “என்னால் எதுவும் பேச முடியாது, எனக்கு உடல்நிலை சரியில்லை, அது போல நான் இப்போழுது பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆன்மீக நிமித்தம் வந்துள்ளேன்என்று தன் அறைக்கு செல்ல விரும்பினார். அவரை சந்தித்ததே பெரிய விஷயம் தான், அப்பொழுது என் நண்பர் ஒரு கேள்வியை அவருக்கு கேட்டார், “எண்ணங்களின் வலிமையை பற்றி எத்தனையோ பாமரர்களும் இன்று உங்கள் எழுத்துகளைப் பார்த்து வாழ்ந்து வருகின்றனர்,எப்படி எண்ணங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று ஆரம்பித்த நீங்கள் ஆத்ம தரிசனம் என்று முடிக்கிறீர்கள் ??(அது அவருடைய கடைசி புத்தகம்) என்று கேள்வியை முன்வைக்க. அவர் எங்களோடு பேச தன் அறைக்கு அழைத்தார்.

மீப்பெரும் வாழ்வின் போராட்டங்களின் இறுதியில், எல்லா வெற்றிக்கும், எல்லா தோல்விக்கும் பின்னர் தன்னையறிதலில் செலவிடும் நேரம் தான் முழுமையான வாழ்ந்த கனங்களாக இருக்கும் என்பது அவரது வாழ்வைப் பற்றிய அவரது உரையாடலில் தெரிந்தது. எங்களைப் போன்ற ஒரு இளைஞனாக அவர் கனவில் இருந்து, இமயமலை பற்றிய அவர் சிந்தனை வரை சில வார்த்தைகள் கேட்டோம். வெறும் ஜேம்ஸ் ஆலனின் மொழி பெயர்ப்பாக மட்டுமே அவர் வார்த்தைகள் இருக்கவில்லை, இந்தியச் சூழலில் அரசியல், மதம், பிரிவு, கலாச்சரம் என எல்லாவற்றையும் தாண்டியும் அவர் பல மனிதர்களின் சுயமுன்னேற்ற தூண்டுகோலாய் இருக்கிறார். அந்த காலங்களில் அவர் “முடியும்(possible)” என்கிற வார்த்தையை எவ்வளவு அழுத்தமாக அரசியல், சாதி, சமய பாகுபாடின்றி இளைஞர்களின் மனதில் பதித்திருந்தார், கரூரை ஒட்டிய, நாமக்கல்லை ஒட்டிய சில கிராமங்களில் அவர் பெயரில் கல்வி நிறுவனங்களும், அரசியல் அமைப்பு கலைந்த பின்னும் செயல் பட்டு வரும் எண்ணற்ற இளைஞர் நற்பணி மன்றங்கள், கல்வி நிற்வனங்கள், தொழிற்சாலைகள் என பெரிய பட்டியல் ஒன்று நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பின் வாழ்ந்த நல்ல மனிதர்களின் பட்டியலில் இருக்கிறது !!!

இன்று நாம் சாப்பிடும் பீட்ஸாவில் அவர் ஏற்படுத்திய மாற்றம் அதை உலக அளவில் பிரபலமாக்கியது என்ற ஆச்சரியமும், கரூர் போன்ற தொழில் நகரங்களில் அவர் எழுத்தால் தூண்டப்பட்டு வாழ்வில் சாதித்த பலரின் பிம்பங்கள் வந்து போயின,  “உன்னால் முடியும் தம்பி என்ற பாடல் மெல்லிதாய் மனதில் ஒலித்தது. பாரதிக்குப் பின் நதி நீர் இணைப்பின் சாத்தியத்தை எடுத்துச் சொல்லி சலித்த தேய்ந்து போன உடல், தேயாத சொற்கள் எங்களுக்கும் சமூகத்தின் பாதையில் ஒரு முள்ளையாவது அகற்றும் சிந்தனையை விதைத்தது. அதற்கு சுயமுன்னேற்றம் என்ற ஒன்று மிக அவசியம் என வலியுறுத்தியது. அவர் அமெரிக்காவின் தெருக்களில் நடந்து சென்று மருந்து விற்றதும் பின்னர் அவரது மருந்து நிறுவனம் நாஸ்டக்கில் லிஸ்டிங் ஆனதும் என , சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலே பேசிய ஞாபகம்.. அன்று, அவர் சில விளக்குகளின் திரிகளை அன்று தூண்டியது ஞாபகம் இருக்கிறது, பிரகாசிப்பது விளக்கின் கைகளில்......

#இன்று அந்த மனிதர் உலக வாழ்க்கையை விடுத்துவிட்டார், ஆத்ம தரிசனத்திலிருந்து சில பக்கங்களை புரட்ட விரும்புகிறேன்.

#Life After Death அவரைப் பின்பற்றும் இன்னும் எத்தனையோ மனிதர்களின் நம்பிக்கையில், நல்லெண்ணங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.



செவ்வாய், 15 ஜனவரி, 2013

பஜ்ஜி -சொஜ்ஜி -11 White Culture



நெல்சன் மண்டேலாவிற்குப் பிறகு தென் அமெரிக்காவின் அதிபரான ஜேக்கப் ஜுமோ சமீபத்தில் உலகளாவிய ஒரு சர்ச்சைக்குள்ளானார் தெரியுமா? மேலை நாடுகள் மற்றும் அமெரிக்கா என அவர் கருத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. பத்திரிக்கைகள், முற்போக்கு சங்கங்கள், அமைப்புகள் என இவர் கருத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். அப்படியென்ன ஒரு பெரிய விஷயம் என்று தானே கேட்கிறீர்கள்?

விஷயம் இது தான் ஒரு பேட்டியில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் நவீன உலகில் குடும்பங்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார். தனது நாட்டினர் யாரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை விரும்பாத அவர், அது வெள்ளை மனிதர்களின் பகட்டு வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். இது போன்ற பகட்டு வாழ்க்கையால் குடும்பங்கள் அழிந்து கொண்டே போகின்றன ஆதலால் இது ஆப்பிரிக்காவின் கலாச்சாரம் அல்ல என்றும் வெள்ளையர்களின் கலாச்சாரம் (White Culture) சொல்லியிருக்கிறார். இதற்குத் தான் கிளம்பியிருக்கின்றன இத்தனை விமர்சனங்கள். இவரை மிகவும் பழமைவாதி, சரித்திரம் தெரியாதவர், பிற்போக்குவாதி என்றெல்லாம் தாக்கி பல ஊடகங்கள் விமர்சித்தன. அவரை தொடர்ந்து தன் கருத்துக்கு விளக்கம் தரும் நிலையில் தள்ளப்பட்டார். இந்தக் கட்டுரை ஜேக்கப் ஜூமாவைப் பற்றியது அல்ல, அவருக்கு வந்த விமர்சனத்தின் பின்னணியைப் பற்றியது.

வளர்ப்பு பிராணிகள் வீட்டில் இருப்பது தவறானதா?
இல்லை, வளர்ப்பு பிராணிகளில் முதலிடமான நாய்களுக்கும் மனிதனுக்குமான உறவு மிகவும் பழமையானது 15000 ஆண்டுகளுக்கும் மேலாக நாய்களுக்கும் மனிதர்களுக்குமிடையே உறவு இருந்து வருகிறது. எளிதாக மனிதனுடன் பழக ஆரம்பித்த நாய், அவனுடன் வேட்டைக்கு வருவதும், பாதுகாப்பாக இருப்பதும், கால்நடைகளை காவல் காப்பதும் என நண்பனாக வாழ்ந்து வருகின்றன. அதை தன் எஜமானனுக்கு கவ்விக் கொடுக்கும் அளவிற்கு விசுவாசம் கொண்டது தான். ஆனால் இன்று வெறும் பகட்டிற்காகவும், தங்கள் மேட்டிமையை எடுத்துக் காட்டும் கௌரவ அடையாளங்களாகவும் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் பிரச்சினைக்குரியவை. இவை தான் குடும்ப உறவுகளை பாதிப்பதாகவும், வீண் செலவுகளை தருவதால் பொருளாதாரம் பாதிக்கப் படுவதாகவும் ஜேக்கப் ஜுமோ வலியுறுத்தக் காரணம்.

இன்றைய ஊடகங்கள் உண்மையாக இல்லாததையும் பெரிதுபடுத்தி, குறுகிய வட்டம் தாண்டி விமர்சிக்காமல், ஆராயாமல் செயல்படுவதை இந்த விவாதத்திலும் அறிந்து கொள்ள முடியும், ஒரு சார்பு நிலையிலே மற்றொரு பக்கம் இருக்கும் நியாங்களை சுட்டிக் காட்ட பெரும்பாலான ஊடகங்கள் முனைவதில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களின் சுபாவமாகவும் மாறிவிட ஆரம்பித்துவிட்டது. எதிர்கருத்தை சொல்பவர்களாஇ அப்படியே ஒதுக்கி வைக்கும், முற்றிலும் புறக்கணிக்கும் பழக்கமாக மாரிவிட்டது. இப்படித் தான் இந்த விஷயத்திலும் மறு பக்கம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

முதலில், இது போன்ற வளர்ப்பு பிராணிகள் எப்படி குடும்ப அமைப்பை பாதிக்கின்றன என்று பார்ப்போம்.
நாய் வீட்டிற்கு வெளியே இருந்த வரை எந்தப் பிரச்சினையும் வந்துவிடவில்லை, ஆனால் நம்மோடு சமமாக சாப்பிடும் இடங்களிலும், படுக்கையறையில் பகிர்ந்து கொள்ளவும் ஆரம்பிக்கையில் தான் பிரச்சனை வருகிறது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது நம் எல்லோருக்கும் கடமையே, ஆனால் விலங்கினம் மீது செலுத்தப் படும் அதீத நேசம் குடும்ப உறவுகளை சிதைக்கும் என்பது ஏற்புடையது.

இன்று பல வீடுகளில் நான்கு பேருக்கு மேல் ஒரு காரில் அமர்வது அநாகரிகமாகவும் கௌரவக் குறைச்சலாகவும் ஆகிவிட்டது, ஆனால் அதே காரில் ஒரு நாய் சுகமாக பயணிக்கிறது. குழந்தை இல்லாத பலர் அனாதை விடுதிக்கு சென்று தத்தெடுப்பது வழக்கம் தான். ஆனால் இன்று பலர் தங்கள் குழந்தைகளாக ஒரு பொமரேனியனையோ இன்ன பிற இறக்குமதி நாய்களையோ வளர்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா? மேலை நாடுகளில் மட்டுமல்ல, இது நம் நாட்டிலேயே, நம் நகரத்திலேயே நடக்கிறது. அந்த அளவு சக மனிதயினம் மீது நம்பிக்கை குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட, தனியே விட்டுவிட்டு வந்த  எத்தனையோ மனிதர்களின் வீட்டின் சோபக்களில் நாய்களும், பூனைகளும் தான் அமர்ந்திருக்கின்றன.

இதில் அமெரிக்காவில்  சமீபத்தில் அரசின் புள்ளியியல் ஏடுகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியையும் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டு வென்ற சம்பவங்களும். எத்தனை செலவு செய்து வளர்த்தாலும், மிருகங்களை அடித்தால் சிறை தண்டனையும் உண்டு. இப்படி வளர்ப்பு பிராணிகள் பற்றிய புரிதல்கள் நவநாகரிக தாக்கத்தில் பல மாறுதல்களை அடைந்து விட்டது. குடும்ப அமைப்புகளை சிதைக்கும் பல்வேறு காரணிகளாக இவற்றையும் சேர்ப்பதற்கு எந்த தயக்கமும் தேவையில்லை. உளவியல் ரீதியாக இன்றைய மனிதன் உறவுகளுக்கு பயந்து, அவர்களிடம் உள்ள நம்பிக்கை குறைந்து இப்படி வளர்ப்பு பிராணிகளை குடும்ப உறவுகளாக பாவித்துக் கொண்டது இந்த வெள்ளையர்களின் கலாச்சாரம். 

சரி இந்த வளர்ப்பு பிரானிகள் ஏற்படுத்தும் பொருளாதார அசௌகரியங்கள் யாவை என அடுத்த பகுதியில் பார்ப்போம்.


- ஜீவ.கரிகாலன்



திங்கள், 14 ஜனவரி, 2013

புத்தகக் கண்காட்சி பகுதி -1


என் வலைப்பூவிற்கு அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் வணக்கங்கள் மற்றும் தமிழர் திருநாள், பொங்கல் வாழ்த்துகள்.

சில புத்தகங்களை நான் recommend செய்கிறேன்.. கவிதைகளில் என் வாசிப்பு பற்றி அவ்வளவு தூரம் நம்பிக்கை இல்லாததால், முதல் பதிவாக சில சிறுகதைத் தொகுப்புகளை முன் வைக்கிறேன்

1. தானாய் நிரம்பும் கிணற்றடி: - அய்யப்ப மாதவன்

ஒரு கதாப்பாத்திரத்திற்கு கூட பெயர் இல்லை, நீங்கள் தான் வைத்துக் கொள்ள வேண்டும். அமானுஷ்யமாக ஆரம்பித்து,  பல தளங்களில் உளவியல் பார்வையோடு அடுத்தடுத்து நகரும் கதைகளில் நம் வாசிப்பு புது பயணம் கொள்கிறது. ஒரு கவிஞனின் மனநிலையில் சில கதைகள் நகர்கிறது. நட்பு, இல்லறம், காதல், பிரிவு என்று எல்லாமே வார்த்தைகளால் காட்சிப் படுத்தப்பட்டவையே...

வந்து மூன்று வருடங்கள் ஆகியும் கவனம் கொள்ளப் பெறாத சிறுகதைத் தொகுப்பு.
இந்த சுட்டியைப் பாருங்கள்:-
http://kalidasanj.blogspot.in/2011/10/1.html

2.பெருந்திணைக்காரண் - கணேச குமாரன்

கும்கியில் மக்களைக் கொல்லும் கொடூரனாக கொம்பனைப் பார்க்கும் பொழுது இந்த தொகுப்பு கண் முன் வந்து சென்றது

இந்த புத்தகம், சென்ற வருடம் சிறுகதைக்கென தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு வாசகனாக அத்தனை விருதுகளின் நம்பகத்தன்மை மீதும்  இழந்திருக்க காரணமாக இருக்கிறது, இனி விருதுகள் தன். ஒரு கதை போல் இன்னொரு கதை இருக்காது, ஆனால் பெரும்பாலானக் கதைகளில் இதயத்தில் கத்தி சொருகும் அபாயம் இருக்கிறது. ஏன் இப்படி எழுதியிருக்கிறார் என்று முகம் சுழித்தால் அது தான் வெற்றி. இப்படி முகம் சுழிக்க வைக்கும், அதிர்ச்சியுற வைக்கும் சமூகத்தில் தான் நாம் நம் பொழுதை நல்ல படியாக தூங்கிக் கழிக்கிறோம். ஆனால் நமது படுக்கை நமக்கானது அல்ல, Music chair விளையாட்டு போல் சிலர் தூக்கத்தை தள்ளி விட்டு தான் நாமும் அமர்ந்து கொள்கிறோம்.

இந்த தொகுப்பை வாசித்து முடிக்கும் போது தெரியும் கொம்பன் உண்மையில் யார் என்று?

இந்த சுட்டியைப் பாருங்கள் :-
http://kalidasanj.blogspot.in/2012/05/blog-post_04.html

- ஜீவ.கரிகாலன்

சனி, 5 ஜனவரி, 2013

பஜ்ஜி-சொஜ்ஜி (10) - 2013

2012 எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு

இது வரை 8 கட்டுரைகள் வெளி வந்துள்ளன, இரண்டு புத்தக விமர்சனம், இரண்டு மொழி பெயர்ப்பு கட்டுரை, ஒரு சிறுகதை ஆகியன வெளி வந்துள்ளன.

அதையும் தாண்டி நான் மகிழ்வுறக் காரணம் முகநூலில் நான் பெற்ற சிறத்த நட்புகள் தான். அந்த நட்பு கொடுத்த வடிவம் தான் www.yaavarum.com. தொடர்ந்து ஐந்து நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியது மிகவும் நிறைவாக இருக்கிறது கவிஞர் ஐயப்ப மாதவன் கொடுத்த உற்சாகம் தான் என் கையிலும் ஒரு பேனாவை கணையாழியாக மாற்றும் நிலை. நண்பர்களாக சாத்தப்பன் அவர்களும்,அன்பு சிவன் அவர்களும் தலை அசைக்காவிட்டால் இந்த இணையம் தொடங்கப் பட்டிருக்காது. நண்பர் ரமேஷ் அவர்களின் உழைப்பு( எந்த பிரதிபலனும் எதிர்பாராது) இந்த கனவை நனவாக்கியது. அது போல கண்ணதாசனும், இளம்பிறை பாலாவும் கூடுதல் பலமாக அமைந்துவிட்டனர். இப்போதைக்கு எல்லா சுமைகளையும் தாங்கியபடி navigate செய்யும் மாலுமியாக ஒரு உயர்ந்த மனிதன் வேல் கண்ணன் இருப்பது பயணத்தை சுமூகமாகக் கொண்டுச் செல்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் எப்பொழுது கவிஞர் ஐயப்ப மாதவன் கைகளுக்கு மைக் வரும் என்று ஆவலாக நாங்கள் எதிர் பார்ப்பது போல் 2013ல் யாவரும்.காம் செய்யவிருக்கும் பயணம் குறித்து ஆவலாக இருக்கிறது. ஈழக் கவிஞரின் புத்தகத்தை விமர்சனம் செய்யும் நிகழ்வு மூலம் கடல் தாண்டியும் தமிழ் நெஞ்சங்களை இணைக்கும் இணையமாக இதை நிறுவுவதில் ஒரு மகிழ்ச்சி.

தொடர்ந்து எங்கள் நிகழ்வுகளுக்கு வருகை தந்து ஊக்கமளித்து வரும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம், இயக்குனர் சூரியதாஸ், கவிஞர் கனேச குமாரன், விசுவநாதன் கனேசன், ஸ்ரீதர் கதிர் பாரதி, பாலசுப்ரமணியன், கவின் மலர், நிலா ரசிகன், மழைக் காதலன், ரமேஷ் மற்றும் பலருடன் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, யாவரும்.காமிற்கு வருகை புரியும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி.

இது போக இந்த வருடம் ஆரம்பிக்கும் வேளையிலே எனக்கு வந்த இரட்டிப்பு சந்தோஷம், வெவ்வேறு சிற்றிதழ்களில் என் இரு வேறு கட்டுரைகள் வெளி வரவிருக்கிறது என்கிற சந்தோசம் தான். வலைப்பூவிலும் இந்த வருடம் மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமான பேர் வருகை புரிந்துள்ளனர்கள். குறிப்பாக இது பஜ்ஜி-சொஜ்ஜியின் விளைவாக நேர்ந்தது என்பது மிகையல்ல. ஒரு கட்டுரையாளராக, வலைபதிவராக இந்த பஜ்ஜி-சொஜ்ஜி தொடருடன், சீனா தானா என்ற சீரியஸ் தொடர் ஒன்றையும் எழுத ஆரம்பிக்க (நாள், நட்சத்திரம்) பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பஜ்ஜி-சொஜ்ஜியில் ஏன் இன்னும் FDI பற்றி அதிகமாக பேசுகிறாய் அது தான் முடிந்து போன விஷயம் ஆயிற்றே என்ற ஒரு நண்பருக்கும் இங்கு பதில் சொல்கிறேன். செய்தித் தாள்களைப் போல் டாப் பிரியாரிட்டி கொடுத்து எழுத வேண்டிய கட்டாயம் எனக்கில்லை என்றாலும், இன்னும் ஒரு வருடம் முழுக்க எழுதினாலும் அதன் பின்னால் உள்ள அரசியல் நிறையவே தோண்டப் படாமல் இருக்கும் என்பதால் தான் இதை பற்றி எழுதுகிறேன். இதை ஒரு yard stick ஆக வைத்துக் கொண்டு கூட பல பிரச்சனைகளில், அரசின் கொள்கைகள், திட்டங்கள் போன்றவற்றை விவாதிக்க முடியும்.

உதாரனமாக, சில்லறை வணிகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு இன்று பல மனிதர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் மீதான பார்வையை மாற்றியுள்ளது, இதை சிலர் சமூகவலைதளங்களில் புத்தாண்டு தீர்மாணமாக அந்நியப் பொருட்களின் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற நிலைச்செய்திகளில் வாயிலாக உணர முடிந்தது. அது வெகு சிலரிடம் தான் என்றாலும் வரவேற்கப் பட வேண்டிய மாற்றமே. மொத்த வணிகம், அந்நியப் பொருட்கள், தரமான உள்நாட்டு சந்தைப் பொருட்கள், தேவையான அளவு மட்டும் நுகர்தல், ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல் என்று தனிமனித நடவடிக்கை சார்ந்த மாற்றங்கள் ஆங்காங்கே துளிர்விடுகின்றன.

நானும் எழுத வேண்டியதற்காக எழுதாமல் ஒவ்வொன்றாக சுய பரிச்சயத்தை அடிப்படையாக வைத்து எழுதவதைத் தீர்மானமாகக் கொண்டுள்ளதால், டாபர் (ரெட்) டூத் பேஸ்ட், மைசூர் சேண்டல், பவண்டோ என்று மாறினாலும், பெப்சி-கோக், ஜீன்ஸ் பாண்ட் (தேவையற்ற நுகர்வு) போன்ற சமாச்சாரங்களை சில காலமாய் தவிர்த்து வருகிறேன். ஆனால் இதைக் கொண்டு சில முடிவுகளுக்கு வந்துவிடமுடியாது என்பதால் நேரடீயாக இந்த பட்டியலைப் பற்றி பேச இன்னும் தொடர்கள் சில பாக்கியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, எனக்கு ஊக்கமளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும், வருகை புரிந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

- அடுத்த பகிர்வில்
இன்னும் சுவையாக
பஜ்ஜி -சொஜ்ஜி


ஜீவ.கரிகாலன்