திங்கள், 24 டிசம்பர், 2012

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள்

 புத்தக விமர்சனம்



சமன்விதா(
SAMANWITA) என்ற திட்டம் ஒரிசாவிலுள்ள கோம்னா எனும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், தொண்டு செய்வதற்காக இறங்கிய ஒரு சில பிரபல நிறுவனங்களின் அரசு சாரா தொண்டு அமைப்புகளால் (NGO) 1978  1980ல் தீவிரமாக் கொண்டு வந்து செயல்படுத்தப் பட்ட திட்டம் ஆகும். இதன் படி , அங்குள்ள குடியானவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மாடுகள் யாவும் இப்போதைய நிலைமையை விட அதிகம் பால் சுரக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி, மாடுகளுக்கு ஜெர்ஸி காளைகளின் உயிரணுக்கள் செலுத்தப் பட்டன, மேலும் அவர்களுக்கு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதற்கு ஒரு ஏக்கர் நிலமும் அதில் பயிரிடுவதற்கு எனும் subabul  (கொன்றை மரம் போலிருக்கும் பூர்விகம்: ஐரோப்பா ஜெர்மனி) மரம் வைத்திடும் திட்டமும், அதற்காக சொற்ப ரூபாய்கள் ஊதியமும் கொடுக்கப் பட்டது.

அதே வேளை அந்தப் பகுதியில் பிரபலமான காரியார் எனும் காளை இனத்தை (நம் ஊர் காங்கேயம் காளை போன்ற சிறப்பு வாய்ந்த காரியார் காளை) இதே அமைப்பினர் விதையறுப்பு செய்து அடுத்த கன்று உருவாகுவதை முற்றிலுமாகவே தடுத்து விட்டார்கள், இன்று அந்த கார்யார் காளை இனம் முழுதுமாய் அழிந்துவிட்டது. அதற்கு பதிலாக உருவாக்கியிருந்த ஜெர்ஸியினமோ குறைவான பால் உற்பத்தியை கொடுத்ததுடன், பெரிய அளவில் கன்றுகள் இறந்து விட்டன, இறுதியில் அந்த திட்டத்தை படு தோல்வியடையச் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்த்து, ஒருமுறை வெட்டிவிட்ட(வெட்டிவிட அறிவுறுத்தப்பட்டு) subabul  மரங்கள் யாவும் மறுபடியும் தளைக்காமல் போக, புதிய கலப்பினம் மற்றும் புது வகை subabul மரங்கள் மூலம் வறுமை ஒழிப்பு என்ற குறிக்கோளில் கொண்டு வரப்பட்ட சமன்விதா (Samanwita) திட்டமும் அடுத்த மூன்று வருடங்களில் முடிவுக்கு வந்தது.

CAG எனப்படும் மத்திய தனிக்கைக் குழு செய்த கிராமப் புற மேம்பாட்டிற்காக செயல்பட்ட திட்டங்களில், சோதனை முறையில் தணிக்கை செய்ய அதில் செயல்நோக்கத்திற்காக அல்லாமல் திருப்பிவிடப்பட்ட நிதிகளைக் கொண்ட திட்டங்களுக்கான பட்டியலில் சமன்விதாவும் இருந்தது (16 கோடிக்கும் மேலேயுள்ள திட்டம்). அதில் குறிப்பிட்ட ஒரு தொண்டு நிறுவனமான BAIFக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருந்தது). இந்த வீணாய்ப் போன திட்டம் ஏற்படுத்திய வறட்சி பத்தாண்டுகள் வரை நேரிடையாக அந்த மாவட்டத்தில் பாதித்திருக்க, திட்டம் தோல்வியுற்றாலும் இதில் பலனடைந்த நிறுவனமோ?........ தொடர்ந்து படியுங்கள்

வறட்சியை(பஞ்சம்) விரும்பும் நல்லுள்ளங்கள் –முதலில் இந்த புத்தகம் பற்றி சிலாகித்து எழுத வேண்டிய அவசியம்இது 1996ல் வெளி வந்திருந்தாலும் இன்றளவும் நம் நாட்டின் வறுமையைப் பற்றிய முக்கிய ஆவனமாக இந்நூல் திகழ்கிறது. இன்றைய நிலையிலும் வறுமைக்கான அளவீடுகளை மிக முரணான வகையில் அமைத்து வைத்திருக்கும் நம் அரசின் போக்கிற்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கலாம் என்று யோசிக்க வைக்கும் நூல். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாய் வறுமைக் கோட்டின் எல்லையை கொஞ்சம் தளர்த்திக் கீழ் இறக்கி வைத்து சில விழுக்காடுகளை விழுங்கிக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் அரசின் இன்றைய நிலை இப்படி இருக்க பெரிதாக ஏதும் விழிப்புணர்வொ, நவீன ஊடகங்கள் இல்லாத அன்றைய நாட்களிலேயே வறுமையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சிப் பணி எந்த அளவு இருந்து வருகிறது என்று அவர்கள் தோலுரிக்கும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.

 நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புள்ளி விவரங்களோடு ஒவ்வொரு காலாண்டும் உலகிற்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறது நம் அரசு. ஆனால் நம் நாட்டின் வளர்ச்சியில் உள்ள புள்ளி விவரங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் இந்த தேசத்தில் பெரும் பகுதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?, இந்த தேசத்தின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான ஊடகங்கள் இந்தியாவின் வளர்ச்சியைப் பேசும் போது, ஒரு பெரிய அளவிலான மக்களின் வாழ்க்கை முறை மறைக்கப் பட்டு வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ? னீங்கள் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

மகசேசே போன்ற உயர்ந்த விருதுகளாக மொத்தம் பதிமூன்று விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் திரு.P.சாய்நாத் அவர்கள் தொகுத்திருக்கும் இந்த புத்தகம் வாயிலாக தனிப்பட்ட முறையில் இன்றிருக்கும் பொறுப்பற்ற ஊடக மாந்தர்கள் இதன் சிறப்பை உணர வேண்டும், அன்றைய நிலையிலேயே ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையை பெரிதும் கண்டித்திருந்திருக்கிறார். அதனால் தான் அவர் தன்னை ஒரு தன்னிச்சையான எழுத்தாளராகவே (free lance  journalist) நிறுவிக் கொண்டு தான் இந்த புத்தகம் எழுதுகிறார்.
இந்த புத்தகம் இந்தியாவின் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது. மொத்தம் உள்ள் 68 கட்டுரைகளும் வறட்சியையும், பஞ்சத்தையும் காரணமாக வைத்துக் கொண்டு நடக்கும் அதிகார வர்கங்களின் சுரண்டல்களையும், சீர்குலைந்த சமூக அமைப்புகளையும் மிக தைரியமாக ஆவனப் படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் என அவர் நம் நாட்டின் கடை நிலையில் உள்ள 5% சதவீதத்தினரை சந்தித்திருக்கிறார். கிட்டதட்ட 80000 கி.மீ வெவ்வேறு 16 வகையான வாகனங்களில் பயணித்த இவர், நடை பயணமாகவே நடந்த தூரம் மட்டும் கிட்ட தட்ட 4000 கி.மீ.

இது போன்ற பயணக் கட்டுரைகளில் பொதுவாக அவர்கள் சந்தித்த பெரிய இயற்கை பேரழிவுகளையோ, நோய்களையோ, விபத்துகளையோ தான் ஆய்வுப் படுத்தும் விதமாக அமைக்காமல் அம்மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் வாழும் முறையை பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் வளர்ச்சி என்று இத்தனை ஆண்டுகளாய் நமக்கு கிடைத்தவை எல்லாம் மிகச் சாதாரணமான எச்சங்கள் தான் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு பெருங்கூட்டம் ஒன்று “நம்மை ஒரு மக்களரசு தான் நிர்வகிக்கின்றது என்று கூட தெரியாமல் வாழ்வது புலனாகிறது. பஞ்சம், வறுமை, உடல்நலக் குறைவு, கல்வியின் இக்கட்டான நிலை என்று பகுப்பாய்வு செய்து அதை சமூகத்தின் சூழலோடு கணக்கிடப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு சொல்லக் காரணம், வெறும் செய்தி ஆவனமாக மட்டும் இவை உபயோகப்பட்டு நின்று விடக் கூடாது என்று, அவர் தன்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் புள்ளியல் விவரங்களோடும், ஒப்பீடுகளோடும் சொல்கிறார். ஆதலால் இவர் சென்று வந்திருக்கும் டெல்லி, கேரளா, உத்திர பிரதேச மாநிலத்தின் தரவுகளும் ஒரு குறிப்பாக பயன் பட்டிருக்கின்றன. இவை யாவுமே ஒவ்வொரு கட்டுரையினை வாசிக்கும் பொழுதும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எளிமையான மொழி நடையில் எழுதப் பட்டிருக்கின்றன. வறட்சியை தவறான கணக்கிடுதலில் உள்ள தீமையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்கிறார். எ.கா: கலாஹந்தி மாவட்டத்தில் (ஒரிஸ்ஸா) மொத்த நாட்டின் சராசரி மழை அளவை {800 மி.மீ} விடவும் அதிகம் {1250மி.மீ}, ஆனால் அங்கே வறட்சியைக் காரணம் காட்டி நீர்ப் பாசனத்திற்காக ஒதுக்கப் படும் தொகையென்பது தேவையற்றது. இந்த நிதி ஆதரத்திற்காகத் தான் தங்கள் ஊரிலேயே வறட்சியை விரும்புகின்றனரா ??


அண்டை மாநிலமான கேரளாவோடு ஒப்பிடுகையில், தமிழநாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பனையேறியான ரத்னபாண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்புக் கவசமும் இல்லை. சராசரியாக இருபது-இருபத்தைந்தடியுள்ள பனை மரமாக தினமும் நாற்பது மரங்கள் ஏறி இறங்கினால் தான் அவருக்கு மாதச் சம்பளமாக மாதம் ரூ.600/- கிடைக்கும், இந்த சொற்ப வருமானத்திற்காக அவர் பாதுகாப்பில்லாமல் ஏறும் படிகளை கணக்கிட்டால் அதன் உயரம் 5000 அடிக்கும் மேலே வரும், அது கிட்ட தட்ட 240 மாடிகள் ஏறுவதற்கு சமம், இத்தனை வருடங்கள் அவர் வேலை பார்த்து வந்தாலும் அவர் ஒரு பனை மரத்திற்கு கூட உரிமையற்றவராகவே இருக்கிறார். அதே ராம்நாடில் (இன்றளவும்) நடைபெற்று வரும் மிளகாய் வியாபாரத்தை  பார்க்கும் பொழுது, ஒரு அற்பத் தொகையை விவசாயிக்கு முன்பணமாகக் கொடுத்து மொத்த வற்றலையும் ஏமாற்றும் மண்டி ஆட்களும், கைகளில் துண்டு போட்டு பேரம் பேசி ஏமாற்றும் தரகர்களின் செயல்களும் நமக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி தருபவை. இப்படி ஒரு தட்டு மக்களின் வறுமையை முதலீடாகக் கொண்டு சுரண்டி வாழும் சமூகத்தை வெளிக்கொணரும் அத்தனை கட்டுரைகளும் நம் சமூகம் இவ்வளவு ஆபத்தானதா என்று அச்சத்தை மூட்டுகிறது.

வரும் வார இறுதியை உல்லாசமாய் கழிப்பதே குறிக்கோளாய் வாழும் பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் உயர்ந்து போன, நவீன வாழ்க்கை முறை என்பது தான் இந்த நாட்டின் நிலை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதைப் படித்தால் புரிந்து கொள்வார்கள், இந்தியா என்பது வேறு, இந்தியர்கள் வேறு என்று.

இக்கட்டுரையின் முதலில் சொன்ன திட்டத்தை (ஒரிஸ்ஸா - சமன்விதா) கையாண்டுக் கொண்டிருந்த தொண்டு நிறுவனம் BAIF, அன்று (1978) பெற்ற மூன்று கோடி நிதியைக் கொண்டு நிர்மானிப்பதாய் இருந்த செயற்கை முறை விலங்குகள் கருத்தரிப்பு நிலையங்கள் சுமார் 250ம் உண்மையில் கிராம மேம்பாட்டிற்கு என்று ஏதும் செய்யவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு சொல்லியது என்பதை நினைவில் வைத்து அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை இணையத்தில் தேடிய பொழுது வந்த அதிர்ச்சி, Bharathiyo Agro Industrial Foundation – இன்று BAIF Development Research Foundation என்ற பெயரில் இது வரை 60000 கிராமங்களில் செய்திருக்கும் உற்பத்தியின் அளவு மட்டும் (GDP) 2500 கோடி என்று பார்த்தபோது தான் இந்த புத்த்கத்தின் தலைப்பு எவ்வளவு பொருத்தமாய் போய்விட்டதே!! என்று வருந்துகிறேன்.
            
புத்தகத்தின் பெயர் : Everybody Loves a Good Drought
ஆசிரியர்          : P.Sainath
வெளியீடு         : Penguin Books
விலை            : Rs.399/-


- நன்றி 
ஜீவ.கரிகாலன்




செவ்வாய், 18 டிசம்பர், 2012

பஜ்ஜி -சொஜ்ஜி -09 தலித் நலனும் சில்லறை வணிகமும்


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றி போன பதிவில் பேசியவற்றின் தொடர்ச்சி:-


பாராளுமன்றத்தில் இந்த மசோதா வெற்றியடைந்ததற்கு காரணம் மாயவதியின் கடைசி நேர காய் நகர்த்தல் என்பது எல்லாருக்கும் தெரியும், நிலுவையிலுள்ள சி.பி.ஐ வழக்குகள் பற்றியெல்லாம் கேள்விகள் எழுப்பினாலும், இன்னுமொரு முக்கிய காரணம் இருக்கிறது அது தான் தலித் நல்வாழ்வுநோக்கம். இந்த சில்லரை வர்த்தகத்தில் பெரும்பான்மையான பகுதி குறிப்பிட்ட சாதியினரிடமே இருப்பது தான் காரணம், DICCI (Dalit Indian Chambers of Commerce and Industry)யின் சமீபத்திய சர்வேயின் படி இந்த சில்லறை வணிகத்தில் தலித் மக்களின் பங்கு 0% என்று (உ.பி) தானிய மற்றும் காய்-கனி மண்டித் தொழிலில் குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பே உள்ளது என்று தெரிய வருகிறது. மேலும் இவர்கள் தான் விவசாய மற்றும் நுகர்வோருக்கு இடையே உள்ள பெரும்பங்கு லாபத்தை சுருட்டி வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது.

இப்பொழுது சில்லறை வர்த்தகத்தின் போக்கு சமூக ஆதாயம் (social benefit)என்ற அளவில் அடுத்த கட்டத்தில் நிற்கிறது. இங்கே FDI என்பது ஒரு கருவியாக சமூக விடுதலைக்கு முன்வைக்கும் தலித் தலைவர்கள் தேசிய அளவில் தங்கள் பொருளாதார நிலைப்பாட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், (சந்திரபன் பிரசாத்) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை பெரும் சமூக விடுதலைக்கான வழியாக காண்கிறார். மாயவதியின் நிலைப்பாட்டை தலித் நல்வாழ்வை அடிப்படையாகக் (dalit pesrpective) கொண்டு மிக முக்கியமான முடிவாகக் கருதுகிறார்.

தலித் எழுத்தாளர்கள் (சந்திரபன் பிரசாத், பேராசிரியர் காஞ்சா) உலகமயமாக்கலினால் ஏற்படும் இது போன்ற மாற்றங்கள் அறுத்தெறியும் கலாச்சாரமே நம் சமூக அமைப்பை மாற்றும் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இந்த இடம் தான் மிக முக்கியமானது, ஒரு சமூக அமைப்பில் குறிப்பிட்ட சாதிகளை (பனியா, படேல், அர்ஹாத்திய, நாடார்) ஆதிக்கத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இவை உதவும் என்று நம்புகின்றனர். ஆக  சமூகம் தடை செய்யும் தொழில் முனைவை உலகமயமாக்கல் எனும் முயற்சி வீழ்த்திவிட்டு ஒரு திறந்தவெளியை உருவாக்கும், அந்த வெளியே தலித் நலனுக்கு வழி வகுக்கும் என்று முடிவிற்கு வருகின்றனர்.

இதை வைத்துப் பார்க்கும் போது மத்திய அரசு செய்து வரும் தந்திரம் மிகத் தெளிவாகப் புரிகிறது, ஒரு வகையில் தலித் நலன் என்ர பொய் பிரச்சாரத்தையும் லஞ்சமாகப் பயன்படுத்திய தோற்றத்தை உருவாக்குகிறது. இவை எப்படி தலித் நலனுக்கு கொஞ்சம் கூட உதவாது என்கிற பட்டியலைப் பார்ப்போம்.

1. திறந்துவிடப்படும் கதவு சில்லறை வனிகர்களை வெளியேற்றிடவே தவிர தலித் நலனென்றெல்லாம் யாருக்கும் வாய்ப்பை வழங்கிடாது. ஒட்டு மொத்த சந்தையையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிடும்.

2. FDI தரும் வேலைவாய்ப்பில் கூட இடஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை அனுமதிக்குமா என்று எளிமையாக வாதம் செய்ய முடியும், முடிவு எல்லோருக்கும் தெரிந்தது தான். Social liberalization என்பது வெறும் கண்கட்டு

3. தலித் விவசாயிகள் நலன் என்று பார்த்தால் கூட ஏமாற்றமே மிஞ்சும், ஆரம்பத்தில் கொஞ்சம் லாபகரமாகத் தோன்றினாலும் (முன் தொகையாகக் கொடுப்பதால்), மெல்ல, மெல்ல மண்டிக் காரர்களை விட கரார் விலை தான் நிர்ணயிக்கப் படும். ஏனென்றால் இன்னும் வால் மார்ட் போன்ற முதலாளிகளுக்கு காய்-கனி விற்கும் விவசாயிகள் பலர் உதவித் தொகை வாங்கி வருகின்றனர்.

4.இது முக்கியமாக கார்ப்பரேட் விவசாயத்தை ஊக்கிவிக்கும் என்பதால், சிறு விவசாயிகள், தலித் விவசாயிகளுக்கு ஆபத்தானதே.

5.சில்லறை வர்த்தகத்திற்கு மிகவும் தொடர்புடைய, சார்புடைய தொழில் என்றால் போக்குவரத்து தான், இதில் ஒரு சாதாரண் மூன்று சக்கர ஆட்டோ, ட்ராக்டர் வைத்திருக்கும் எண்ணற்ற தலித் மக்கள் கூட சேர்ந்தே பாதிப்பார்கள். காரணம் logistics எனும் தளவாடங்கள்  ஒப்பந்த முறையில் பெரிய அளவில் தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், தன் சொந்த வாகனங்களுக்கும் மாற்றப் படும். இதன் மூலமும் தலித் மக்களின் நலன் பாதிக்கப் படும்.

6. எல்லாவற்றையும் தாண்டி சந்தைப் பொருளாதரம், தாரளமயப் படுத்தப் பட்டும் உலகமயமாக்கப் படுவதும் தலித் மக்களின் நலன் என்ற அடிப்படை வாதத்திற்கு இருக்கும் பெரிய ஓட்டையே இதன் தொடர் நிலையாக வரும் தனியார்மயம் தான். உலகமயமாக்கலை ஆதரிக்கும் பட்சத்தில் தலித் அமைப்புகள் தனியார்மயத்தை ஆதரிக்க ஒருகாலும் முடியாது. 

7.எல்லாவற்றிற்கும் மேலாக FDIஐ தொடர்ந்து அரசு கொண்டுவர இருக்கும் சட்டங்களான விதைகள் திருத்தம் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தண்ணீர் மசோதா, கடற் பாதுகாப்பு சட்டம், பல்கலைக் கழகங்கள் திருத்த சட்டம் என எல்லாமுமே தலித் நலன்களுக்கும் எதிரானதே.

ஆக இன்றளவு இருக்கும் தலித் நலன்களுக்கான சலுகைகள் உலகமயமாக்கலினால் கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் சாசனப்படி தலித்களுக்கான சலுகைகள் போதுமானதாய் இருந்தும் அதை செயல்படுத்தும்( execution ) முறைகளில் தான் பிரச்சனை இருக்கிறது, இதற்கு தீர்வு என்பது நிச்சயமாக அந்நிய முதலீடு அல்ல என்பது உறுதி. 

 தேசம் முழுக்க எல்லா அமைப்புகளில் இருந்தும் எதிர்வினை புரிந்த இந்த பிரச்சனை இன்னும் சரியாக விவாதிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கு ஒரு சாமன்யனாக என்ன எதிர்வினையாற்ற முடியும் என்று வரும் கட்டுரைகளில் பார்ப்போம். (உங்கள் கருத்துகள் மட்டுமே என்னைத் துரிதப் படுத்தும்)




(மிக சுருக்கமாக எழுதவே விரும்புவதால், கருத்துகளுக்கேற்ப அடுத்த பதிவுகளிலும் இதைத் தொடர்ந்து விவாதிப்போம்)

                                                           
                                                                                                       நன்றி

அடுத்த பகுதியில்
இன்னும் காரமாக

ஜீவ கரிகாலன்










ஆதாரம்:
http://m.financialexpress.com/news/column-fdi-as-a-tool-of-social-liberation/1043291/ 
http://tehelka.com/fdi-in-retail-maybe-the-sign-for-a-fast-growing-india-but-will-the-dalits-benefit/
http://news.outlookindia.com/items.aspx?artid=783445

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி -08/ அந்நிய முதலீட்டில் அரசியல் கேளிக்கை

  இந்தப் பகுதியில் அந்நிய முதலீடு பற்றிய சில அம்சங்களை எழுதுகிறேன்
நன்றி : முகநூல் நண்பர்கள்

      
பாராளுமன்றம்# செயல்பாடு#பொறுப்பு  :
            முலாயம் சிங் யாதவ், மாயவதி, மு.கருணாநிதி போன்ற பல நல்ல உள்ளங்களின் சந்தர்ப்பவாத உதவியால் இன்று அந்நிய முதலீடு சில்லரை வர்த்தகத்தில் நுழைய இருந்த தடைகள் யாவும் அகன்றது. உண்மையைச் சொல்லப் போனால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை நுழைப்பதைக் காட்டிலும் FEMA சட்ட திருத்தமே மிகப் பெரிய தலைவலியாக இருந்து வந்தது, ஏனென்றால் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு தான். உண்மையில் எந்த ஒரு பெரிய மீடியாவிலும் இந்த சட்டத்தைப் பற்றி செய்தி வரவில்லை. அதாவது ஷர்மா என்ற நபர் தொடர்ந்த வழக்கில் FEMA  வில் சட்ட திருத்தம் இல்லாத பொழுது அந்நிய முதலீடு இருப்பதை அனுமதிக்க முடியாது என்று கோரிக்கை வைத்திருந்தார். இது அடிப்படையில் மிகப் பலமான சிக்கல் உடையது இப்பொது இருக்கும் FEMA(Foreign Exchange Management   Act ) அழுத்தமாக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து வந்தது (RBI guidelines).இதைப் பற்றி பெரிதாக வெகுஜன மற்றும் செய்தி ஊடகங்களே அலட்டிக் கொள்ளாமல் இருக்க, FDI யோடு சேர்த்து FEMA திருத்த மசோதாவும் நிறைவேறியாகிவிட்டது. 

                 இந்த திருத்தம் குறித்து முதலில்(ஜீரோ ஹவரில் ) எழும்பிய கேள்விகள் விவாதத்தில் FDIல் மட்டுமே கவனம் செலுத்தியதால், FEMA திருத்தம் குறித்த எதிர்ப்பை பிரதான எதிர்கட்சியே கூடுமானவரை விவாதிக்கவில்லை என்பது கடந்த வார பாராளுமன்ற நடவடிக்கைகளை அலசிப் (இணையம் வாயிலாக) பார்த்ததில் புரிகிறது (நிற்க -இவ்விடத்தில் மாற்றுக் கருத்து இருந்தால் உடனேயே தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கிறேன்). இதில் என்ன முக்கியம் என்றால் BJP, CPI எழுப்பிய கேள்விகளும் அதற்கு ப.சி அளித்த பதிலும் :
தேதி : December 06 - 0 hour : இந்த திருத்தம் இப்போதுள்ள சூழலுக்கு கொண்டு வரவேண்டிய அவசியத்தை நிதியமைச்சர் ஒரு அறிக்கை தர வேண்டும் என்கிற வாதம் வலுவாக வைக்கப் பட்டது, அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், “ இதைப் பற்றிய விளக்கம் கண்டிப்பாக அளிக்கப்படும் ஆனால்
அதற்கு சிறிது காலம் வேண்டும்என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

           ஆனால் அடுத்த நாளே நிறைவேறிவிட்டது சட்ட திருத்தம், இனி யாருக்கு தேவை அந்த அறிக்கை??. சாதாரணமாக மொக்கை மசாலா படங்களுக்கு கூட லாஜிக் இல்லை சரியில்லை என்றால் படம் குப்பை என்று சொல்லும் நமக்கு, இது போன்ற நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சட்ட திருத்தங்களைப் பற்றி போதிய அளவு விவாதங்கள் கூட நடத்தாமல் சட்ட திருத்தம் மேற் கொள்ளும் லாஜிக்கில்லா அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தான் நமது நிலை தான் பரிதாபகரமாக தோன்றுகிறது.

சட்டம்# பலவீனம்#விளையாட்டு:

              FEMA சட்டம் பற்றி பேசும் முன் அதன் வரலாறு தெரிந்து கொள்வோம் 1999ல் கொண்டு வந்த FEMAக்கு முன் இருந்த FERA (Foreign Exchange Regulatory Act) உலகமயமாக்கலுக்கு எதிராக இருந்து வந்தது. அதை மாற்றும் போது கிளம்பிய பெரும் எதிர்ப்பிற்கு பதிலாக நமது சிறு உற்பத்தியாளார்கள், வணிகர்கள் என பாதுகாப்பை உறுதி செய்த சட்டப் பிரிவு தான் இது. இப்போது பாருங்கள் மத்திய அரசின் சூது விளையாட்டை : 
1.    FEMA சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடை செய்கிறது.
2. மத்திய அரசின் அமைச்சர் குழு அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது,
      ஆனால் சட்டப்படி அதற்கு RBI ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம்
  இருக்கிறது. 
3.  FEMA-வின் சட்டப்படி அந்நிய முதலீட்டை அனுமதிக்க RBI n ஒப்புதல் தேவை
4. FEMA பிரிவு 47  மற்றும் பிரிவு 6 (3(B))ன் படி, RBI -FEMA வில் சட்ட திருத்தம் ஏதும்
  செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப் படவில்லை
5. ஆனால் தேவையான மாற்றத்தை RBI கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு
   FEMA பிரிவு 48ன் படி மத்திய அரசின் இரண்டு அவைகளிலும் (ராஜ்ய/லோக்)
   ஒப்புதல் பெற வேண்டும்  
6. ஆக கடைசியாக வேண்டுவதெல்லாம் FEMA திருத்தம் இரண்டு அவைகளிலும்
   ஒப்புதல் பெற வேண்டியது தான்.
இதற்கான விவாதத்தில் தான் நிதியமைச்சர்ஹோம்வொர்க் செய்தேன் வீட்டில் நோட்டை வைத்து விட்டேன்என்பது போல் அறிக்கையக் கொடுத்திட நேரம் தேவை என்று சாக்கு சொல்லிவிட்டு, தேர்விலும் பாஸாகிவிட்டார். இது நமது அந்நிய முதலீட்டுக் கொள்கையில் அடிப்படையை மாற்றியமைக்கத் தேவைப்படும் முக்கியமான சட்டதிருத்தம்... வாழ்க ஜனநாயகம்.

தேசியப் பிரச்சினை#சமூகப் பிரச்சினை#குறுகிய அளவீடுகள்:

இது நம் காலத்தில் மிகப் பெரிய அளவில் தேசம் சந்தித்துள்ள அரசியல் பிரச்சனை என்பதை மறுக்க முடியாது. இதில் பல்வேறு வகையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் (அரசியல் ஆதாயங்கள் போன்றவற்றையும் தாண்டி கம்யுனிஸ்டுகளும், BJPயும் ஒன்றாக நின்ற இடம்), எதிர்ப்புகளை மூன்று வகையாக பிரிக்கலாம் பொருளாதார ஆதாயம் (காங்கிரஸ் தலைவர்கள் ??? , தொழிலதிபர்கள், பங்கு வர்த்தகர்கள் ??), அரசியல் ஆதாயம் (கலைஞர், முலாயம் சிங், மாயவதி), சமூக ஆதாயம் (!!!).



(இதில் சமூக ஆதாயம் என்ற அளவில் தான் மிக முக்கியமான பிரச்சினை வருகிறது. இதையும், இதை எதிர்த்தவர்கள் இனி எப்படி இருக்க வேண்டும் என்கிற விஷயங்களை கண்டிப்பாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்)

அது வரை
Happy Reading

ஜீவ.கரிகாலன் 


செவ்வாய், 4 டிசம்பர், 2012

நீர்ப் பறவை


இந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது? இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா மக்களிடமும் கொண்டு போய் சேர்ப்பதே எவ்வளவு கடினம் என்று யோசித்துப் பார்த்ததால் இதன் குறைகளைச் சொல்வதற்கு மனம் வரவில்லை. ஆனால் இந்த படம் பேசிக் கொண்டிருக்கும், சந்தித்திருக்கும், சந்திக்கின்ற அரசியல் என்னைத் தூண்டுகிறது.

இந்த படம் வெளிவரும் முன்பே கிறுத்தவ அமைப்புகளிடம் இருந்து வந்த கடும் எதிர்ப்பு ஒரு வகையில் கடலோர அரசியல் குறித்து நிறையப் பேசும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பகுத்தறிவு பேசும் அறிஞர்கள் இந்த நாட்டில் முழுமையாக தன் கருத்தில் நிலையாக இருக்க முடியாது என்று காண்பிக்கிறது. எந்த கலையாக இருந்தாலும் அது எல்லோரையும் திருப்திப் படுத்தும் என்று உறுதியாக சொல்ல முடியாது. நிர்வாணங்களை சிலைகளாக சுமந்து கொண்டிருக்கும் கோயில்களில் வாழும் தேவ/தேவியரை நவீன ஓவியமாக கேன்வாசில் வரையும் பொழுது எதிர்ப்புகள் வரவே செய்யும்,  ஆனால் கலைஞன் அதற்கு மன்னிப்பு கேட்கும் சூழல் மிகக் கொடிது, அதற்கும் அரசியல் ஆதாயம் காரணமாக இருந்தால் அது அதனினும் கொடிது.

 ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சினை பற்றி ஒரு குரல் ஒலிக்கிறது என்ற
எதிர்பார்ப்பே இந்தப் படத்தை பார்க்கும் படி செய்துவிட்டது. சென்சாரைத் தாண்டி ஒரு படம் மீனவர் பிரச்சனையை இந்த அளவிற்கும் பேசும் என்று எதிர்பார்க்கவில்லை அதற்காகவே இந்தக் குழுவைத் தனியாக பாராட்டலாம். மீனவர்களின் சமகாலப் பிரச்சனைகளை ஆவனப்படுத்தும் பொழுது இரண்டு பிரச்சனைகள் வரும், 1. சென்சாரைத் தாண்டாது,  (மலையாளத்தில் ஒரு படத்தில் ஈழத்திற்கு ஆதரவாக செயல்படும் ஒரு தமிழனிடன் IPKF பிரதினிதியாக மம்முட்டி பேசும் வசனங்களுக்கு நம்மால் திரைப்படத்தில் ஒரு பதில் சொல்ல முடியுமா என்ற ஏக்கம் பல நாளாக இருக்கிறது - காரணம் சென்சார் தான்). 2. இப்படி மீனவர் பிரச்சினைகளை சொல்லும் பொழுது அது ஆவனப் படம் பார்க்கும் சாயலைக் கொடுத்துவிடும், பின்னர் அதை போக்க சில கிளை கதைகளை உருவாக்க வேண்டியிருக்கும் (அங்காடித் தெரு போல) இதனால் படத்தின் மையத்தில் ஒரு குழப்பம் வந்து விடும். 

இந்த இரு பிரச்சனைகளையும் களைய சமுத்திரக்கனியின் பாத்திரம் படைக்கப் பட்டுள்ளது இயக்குனரின் புத்திசாலித் தனம், அதே சமயம் அதை டீக்கடையில் வைத்து விவாதம் செய்யும் காட்சிகளில் நிறைவு இல்லை, வேறு மாதிரியாக அருளிற்கும்(விஷ்னு), சமுத்திரக்கனிக்கும் இடையில் வரும் சம்பாஷனைகளாக அரசியல் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. 

மீனவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய கிறுத்துவ ஆலயத்தின் செயல்பாடுகளை காண்பித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது, அவர்களின் வாழ்க்கை முறையில் எல்லா நிகழ்வுகளோடும் தேவாலயத்தின் தொடர்பு இருப்பதை மிக அருமையாக காண்பித்திருக்கிறார். அசன விருந்து, பஞ்சாயத்து, கதாபாத்திரங்களோடு உரையாடும் எல்லா இடத்திலும் பங்குத் தந்தையாக வரும் இயக்குனர் அழகம் பெருமாள் கச்சிதம்.

சுட்டிக் காட்டவே தேவயற்ற மிகப்பெரிய குறை சுனைனாவின் கதாப்பாத்திரத்தில் வயதானவரான தோற்றத்தில் நந்திதா தாஸை வைத்திருப்பது. நந்திதாதாஸ் ஒரு தேர்ந்த நடிகர் என்பதில் யாருக்கும்  சந்தேகம் இல்லை, ஆனால் சுனைனா, எஸ்தர் எனும் கேரக்டரில் ஒன்றியிருக்கும் விதத்தில் அங்கு நந்திதாதாஸ் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் கதையின் இடையிடையே வந்து செல்லும் கதை சொல்லியாக அவர் வந்து செல்வதால் கேரக்டரில் ஏற்படும் இந்த உருவ மாற்றம், சுனைனாவின் நேர்த்தியான நடிப்பில் நந்திதாவிடம் ஏமாற்றம் கிட்டுகிறது. விஷ்னுவின் கதாப் பாத்திரம் அவர் கொடுத்ததை நன்றாகச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. சுனைனாவைக் காதலிக்கத் தொடங்கும் தருணம் ( விஷ்ணு போதையில் இருக்கும் போது) சித்தரிக்கப் பட்ட விதம் நம்மைத் தொடவில்லை, ஒரு தலைமை கதாப்பாத்திரத்தின் மனமாற்றம் (காதல் அரும்பும் நேரம்) வெறும் காமிரா சுற்றி வரும் விதத்தில் காட்சிப் படுத்துவது மிகவும் பழைய பாணி, குறைந்தபட்சம் வேறு ஏதாவது காட்சியை வைத்திருக்கலாம், பைபிள் வசனத்தில் சதா குடித்துக் கொண்டிருப்பவன் காதலிக்க ஆரம்பிப்பது ஏனோ ஒட்டவில்லை. இருந்தாலும் அவர்கள் வரும் மற்ற காட்சிகள் நன்றாக இருக்கின்றது.

படத்தில் சரண்யா வரும் காட்சியில் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கின்றது, ஒரு சில காட்சிகளில் ( அடி வாங்கிய தன் மகனை அழைத்துக் கொண்டு வரும் பாடல் காட்சி) அது நிறைவேறுகிறது. ஆனால் தன் மகனை திருத்திட சேர்த்திருக்கும் போதை மறுவாழ்வு மையத்திலும் அங்கிருக்கும் உதவியாளரிடம் காசு கொடுத்து தன் மகனுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்க சொல்லும் இடத்தில் களவானி அம்மாவைப் போலவே  இருக்கிறார். யார் இந்த லூர்து சாமி ? (பூ ராம்) மிகக் கனமான பாத்திரப் படைப்பு மீனவனாக, பாசமுள்ள தந்தையாக மிக அற்புதமாய் கதையில் ஒன்றியிருக்கிறார், தன் மகனின் சடலத்தைப் பார்த்து நெகிழ வைக்கும் காட்சிகளில் பூராம் சரண்யாவை ஓவர் டேக் செய்கிறார் என்பது உண்மை.

பிண்ணனி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. பல கோணங்களில் சர்ச்சைக் காட்டியிருக்கும் விதம், கடற்கரையை காட்டியிருக்கும் விதம் அருமை. ஆனால் இயற்கை படத்தில் வந்தது போல கடல் சப்தங்கள் மனதில் தங்கவில்லை - குறை சொல்வதற்காக என்று சொல்லவில்லை அது போன்ற கிராமங்களில் சில நாட்கள் தங்கியிருப்பதால் அந்த அலைகளின் சப்தம் என்னவென்று உணர்ந்திருந்ததைச் சொல்கிறேன், அருள் காணாமல் போனது வரும் பாடலுக்கு பதிலாய் வெறும் வயலின் BGM மட்டுமிருந்தால் சோகத்தின் வீரியம் குறைந்திருக்காது, இருந்தாலும் சுனைனாவின் பிரயர்த்தனம் நமக்கும் இரு துளி வந்துவிடுகிறது.

வசனம் ஜெயமோகன் ???? ஒவ்வொரு கதாப் பாத்திரமும் மற்றொன்றை முழுப் பெயருடன் அழைக்கும் போதெல்லாம் ஆச்சரியம் வருகிறது “ஏன் இவ்வளவு சிரமம்” என்று?? “அருளப்பசாமி”, “பிரேம் நசீர்”, “எபெனேசர் அக்கா”. இந்த பெயர் உச்சாடனமே இயல்பாக பேசும் சம்பாஷனைகளாக வசனங்களை அமர்த்தாமல் போய்விட்டது.வசனம் ஜெயமோகன் ???? சர்ச் பஞ்சாயத்திலும் வசனங்களில் கூர்மை இல்லை. அது போல நகைச்சுவை துணுக்குகள் தேவையற்றவை.

இவ்வளவு குறைகள் இருந்தபோதும் அங்கே அருமையான காதல் இருக்கிறது, சொல்லப்படாத நம் சோகம் இருக்கிறது, கண்டிப்பாக சொல்ல வேண்டிய கடல் அரசியல் இருக்கிறது, அழகான பாடல் இருக்கிறது இவை போதாதா இதை ஒரு நல்ல படம் என்று சொல்ல, இந்த பிரயர்த்தனங்களில் திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதும் மகிழ்ச்சியே. அதற்கான credits உதயநிதிக்கு தான் என்பதும் மறுக்க முடியாதது தான்.

//இந்திய அரசால் மற(றை)க்கப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவனின் வாழ்க்கையை திரையில் காட்டிய பெருமை கலைஞரின் பேரனுக்கே சாரும்.  இவர் சம்பந்தப்படாவிட்டால் இப்படிப் பட்ட கதையை யாராவது தமிழில் எடுக்க முன்வருவார்களா என்றால் சந்தேகமே. இப்படி ஒரு தயாரிப்பாளர் மசாலா படம் எடுக்காமல் இப்படிப்பட்ட கதையை இயக்க சீனு ராமசாமி போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதால் இன்னும் பாராட்டுக்குரியவர் உதயநிதி ஸ்டாலின் //

இப்படியெல்லாம் பாராட்டும் பொழுது தான், இன்றைய மாறிவிட்ட கார்ப்பரேட் திரையிடுதலில், இது போன்ற சுழலை உருவாக்கிய புன்னியவான்கள் இவர் குடும்பத்திலும் உள்ளார் என்பதை மறுக்க முடியுமா ? அப்படி மாறாமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை படைப்புகள் வெற்றி பெற்றிருக்கும்? இது போன்ற கதை சொல்லும் தைரியம் எத்தனை பேருக்கு வந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். 

1. உச்சிதனை முகர்ந்தால்
2. பாலை 

என்ற படங்களெல்லாம் வந்து போனது






வியாழன், 29 நவம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி-08/ தேசிய முதலீட்டு வாரியம்


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.(குறள் 740, அதிகாரம் - நாடு )

சமீபத்தில் மத்திய அரசின் திட்டக் குழுப் பரிந்துரைத்த புதிய வாரியம் பற்றிய அறிவிப்பைக் காண்கையில், பொய்யா மொழிப் புலவர் இன்றைய நிலையை உணர்ந்து தான் அன்றே இப்படி சொல்லியிருப்பாரோ? என்று இந்த குறள் ஞாபகம் வருகிறது. இக்குறளுக்கு விளக்கம் இக்கட்டுரையின் இறுதியில் விளங்கும். தினமும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கை வளங்கள் மிக்க பாரதத் திருநாட்டின் இன்றைய நிலையில், மக்களுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் ??!! திட்டக் குழுவை சேர்ந்த மான்டெக் சிங் அலுவாலியா அவர்களின் மற்றுமொரு மக்கள் விரோத திட்டம் தான் இந்த தேசிய முதலீட்டு வாரியம் எனப்படும் National Investment Board(NIB) உருவாக்குவது. இன்று காங்கிரஸ் அரசிற்குள்ளே புகைச்சலை கிளப்பியிருக்கின்றது, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் திருமதி.ஜெயந்தி நடராஜன் இதற்கான முதல் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

NIB என்றால் என்ன?. முதலில் இது சிறிய தொழில் நிறுவனங்களுக்கோ அல்லது நேரடியாக மக்களுக்குப் பயன்படும் என்ற எந்த நம்பிக்கையையும் கொள்ள வேண்டாம். அதாவது பெரிய அளவில் முயற்சித்து கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள் எல்லாம் தேசத்தின் வளர்ச்சியைப் பின்நோக்கிக் கொண்டு செல்ல, தேசிய ஜன(பண)நாயக கூட்டணி இப்பொழுது தன் கவனத்தை உள்கட்டமைப்பில் தீவிரம் செலுத்தி வருகிறது. இது போன்ற முதலீட்டோடு உள்கட்டமைப்பு என்ற மாயத் தோற்றத்தில் தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வரப்போகின்றது என்பது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தான். ஆனால்இதே வாயிலை சற்று அகலப் படுத்தி, சாலை அமைத்தால் என்ன? என்று விவாதித்து கொண்டு வந்துள்ள மற்றுமொரு அபாயம் தான் இந்த வாரியம். இவ்வாரியம், நம் நாட்டிற்குள் ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்த ஒரு பணிக்கும் அல்லது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கும் எதேச்சையான அதிகாரம் வழங்கும் அமைப்பாக இருக்கம்படி நம் திட்டக் குழுவானது பரிந்துரைத்துள்ளது.

இந்த திட்டமானது சாலைகள், சுரங்கங்கள், மின்சாரம், இயற்கைவாயு, பெட்ரோலியம், துறைமுகம் மற்றும் ரயில்வே போன்ற திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று வரையறுத்துள்ளது. அதாவது, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படவேண்டிய முக்கியத் துறைகளுக்கு வாங்க வேண்டிய ஒப்புதல்களை எந்த அமைச்சகத்திற்கும் செல்லாமல் நேரடியாக இந்த புறவழிச் சாலை மூலம் (bye pass road) இந்த வாரியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதை மக்கள் மற்றும் தேச நலனுக்காக அறிவித்த மத்திய அரசிற்கு, எதிர்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் முன்பே தன் அமைச்சகத்திலும், கூட்டணியிலும் புகைச்சல் கிளம்பியது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த திட்டம் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பெரிய முதலீட்டாளர்களால் கோரப்பட்டு வந்துள்ளது. இதற்கான அடித்தளம் கடந்த ஜூன் மாதமே நமது பிரதமரால் உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீட்டை கண்கானிக்கும் திட்டம் (Investment Tracking System) ஒன்றை அமைக்கும் பொழுது யாருக்கும் இது போன்ற ஒரு வாரியம் ஒன்று அமைக்கப் படும் என்கிற எச்சரிக்கை வரவில்லை, இப்போது இந்த வாரியம் பிரதம்ர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கேபினட் அமைச்சர்களையும் உறுப்பினராகக் கொண்டு செயல்படும் நிலையில் இருக்கிறது.

பத்திரிக்கைகள் மற்றும் எதிர்கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கையில் இதை வளர்ச்சிக்கான படியாக எடுத்துரைக்கிறது மக்கள் நலனையும், தேசிய நலனையும் தனித் தனியாக பாவிக்கும் திட்டக் குழு. இதற்காக மத்திய அரசு முன் வைக்கும் காரணங்களாக சில புள்ளி விவரங்கள் தருகிறது. அதாவது உலகிலேயே தொழில் தொடங்குவதற்காக மிகவும் கடினமான முறைகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் (185 நாடுகள்) நம் நாடு 132ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலக வங்கியின் புள்ளிவிவரத்தினை முன்வைக்கிறது. பெரிய அளவில் நம் தேசத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் முறைகளை இந்தத் திட்டம் மாற்றிவிடும் என்றும் சொல்கின்றனர். நிதியமைச்சகம் கைவந்த வேகத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த திட்டம் நேரடியாக மற்ற அமைச்சகங்களின் அதிகாரத்தைக் குறைப்பதோடு, யாருடைய கருத்தையும் கேட்கப் போவதில்லை அதுபோல சுற்றுச்சூழல் விஷயங்கள், நில ஒதுக்கீடு, மக்களை வேறு இடங்களில் இடம் பெயரச் செய்யும் அதிகாரம் என மிக சக்தி வாய்ந்த அமைப்பாக இருக்கும். இதன்படி தனித்தனி அமைச்சகம், மாநில அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் எந்த ஒரு தலையீடும் இனி இருக்காது.

இந்த வாரியத்தின் பெயர் ஒன்றே போதும் இதன் விளைவுகளைத் தெளிவாக நமக்கு உணர்த்தும். இது வெறும் தேசிய முதலீட்டு வாரியம் தான், தேசிய ஒப்புதல் வாரியமோ அல்லது உள்கட்டமைப்பு வாரியமோ அல்ல, அதாவது முதலீட்டை மட்டுமே மையமாக வைத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாரியமானது ஒரே தேனீர் விருந்திலோ இல்லை கேபினட் சந்திப்பிலோ எல்லா அமைச்சர்களையும், சில அதிகாரிகளிடமும் கையெழுத்து வாங்கி எந்த ஒரு பூதத்தையும் கிணறு வெட்ட கிளப்பிவிடும். இந்த வாரியம் பெரிய முதலீடுகளை செயல்படுத்துவதில் இருக்கும் களைகளாகக் கருதுவது பல்வேறு மையங்களில் இருக்கும் அனுமதியைத் தானே தவிர, வேறு எந்த அடிவேரில் இருக்கும் பிரச்சனைகளையும் அல்ல.

ஒரு உதாரணமாக தற்பொழுது மத்திய அரசு தொடங்கவிருக்கும் நியூட்ரினோ அணு ஆராய்ச்சிக் கூடம்(neutrino obsevatory) தேனி அருகேயுள்ள மலைப்பகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை எடுத்துக் கொள்வோம், இதைச் செயல் படுத்தும் ஏழு அணுவாராய்ச்சி நிறுவனங்களும் இந்தத் திட்டத்தை (1350 கோடி) தொடங்கும் முன்பு பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப் பட்டு சுற்றுப் புறச் சூழல் அனுமதி, பழங்குடியினரை அப்புறப் படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி, நீலகிரி மலையில் செயல்படுத்த முயற்சித்து அதுவும் முடியாமல், சுருளி அருவியிருக்கும் வனப் பகுதியிலும் அணுமதி கிட்டாது போகவே இறுதியாக போடி மலைப் பகுதியில் எல்லா அனுமதியையும் பெற்றது. இப்போதும் பல ஆபத்துகள், கிட்டதட்ட நாற்பது அணைகள், வனப் பகுதி, பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்ற அருகிலே இருக்கும் சதுரகிரி மூலிகை மலைத்தொடர் போன்றன இருந்தாலும், இதுவே NIB போன்ற வாரியம் இருந்திருந்தால் மக்கள் வாழும் பகுதிகளில் கூட இந்த ஆய்வுக் கூடம் செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். இந்த மிகப் பெரிய ஆபத்தைக் கொஞ்சம் கூட உணரவில்லையெனில் கூடங்குளம் போன்ற எந்த ஒரு பகுதியிலும் மக்களை அப்புறப்படுத்தவும், அவர்கள் நிலத்தை கையகப்படுத்தவும் ஜனநாயக ரீதியான மரபு பற்றிய பேச்சே எழாது என்பது மிகப் பெரிய அச்சமாகிறது. இன்று தேசிய நலன் என்ற போதிலும் உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு கொடுக்கப் பட வேண்டிய முக்கியத்துவம் இனி தார்மீக ரீதியாக (பெயரளவிலும்) கொடுக்க வேண்டியதில்லை.

இதுவரை மக்களுக்குப் பயன்படும் சேவைகளான் மின்சாரம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, நிலக்கரிச் சுரங்கங்களில் எல்லாம் PPP எனப்படும் அரசு-தனியார் கூட்டு சரியாக செயல்படவில்லை என்ற குற்றம் வலுத்து வரும் நிலையில், இது போன்ற வாரியங்கள் அமைந்தால் இதை முழுவதுமாக தனியார் கைக்கு மாற்றுவதில் பெருத்த சிரமமிருக்காது, இதை அந்நிய நிறுவனங்களும் எளிதாக கைப்பற்றும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இதற்கென   கிளம்பி வரும் எந்த எதிர்ப்பையும் சட்டை செய்யப் போவதில்லை நம் நடுவண் அரசு. “இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரிய முதலீடுகளுக்கான வாய்ப்பை உருவாக்காவிட்டால் உலகம் முழுவதும் இருந்து நமக்கு வர வேண்டிய முதலீடு வராமல் போகும்என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.

இதன் வாயிலாக நடுவன் அரசு மொத்த நாட்டையும் உலக வங்கியிடமோ, IMF-இடமோ அடகு வைப்பதற்குச் சமம் என்று இதை எதிர்க்கும் சில வல்லுனர்கள் முன் வைக்கின்றனர். மேலும் இதை “உலக வங்கியிடம் சரணடையத் தேவையான கடைசி முயற்சி என்று இதன் மூன்று நேரடி நடவடிக்கைகளை பட்டியலிடுகின்றனர்.
1.           உலக வங்கியிடம் உள்ள நடப்பு கணக்கில் பெரிய பற்றாக்குறையை உருவாக்கியது(2003-04). இதை தனது செயல் திறனற்ற கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சாத்தியப்படுத்தியது.
2.           இரண்டாவதாக இதைத் தொடர்ந்து உருவாக்கிய நிதிப் பற்றாக்குறை. திவாலாகும் நிலை வந்துவிடும் என்று தெரிந்தும் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு சரியான மாற்றுத் திட்டங்களையும் அறிவிக்காமல் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் எப்படி தன் திட்டங்களை செயல் படுத்த விரும்பியதோ அதே வழியில் தொடர்ந்தது.
3.           கடைசிப் படியாக உள்கட்டமைப்புக்காக பெரிய அளவில் கடன் வாங்கியும், அயல்நாட்டு நிறுவனங்களை PPP (அரசு-தனியார் கூட்டு) மூலம் அனுமதித்து, அதை மத்திய லஞ்ச ஒழிப்புக் கமிஷன் மற்றும் மத்திய தணிக்கை அலுவலகத்தின் அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்துவிடும் பணியை செய்துக் கொண்டிருக்கிறது, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து திரும்பப்பெறும் முதலீடு, IMF மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து பெறப் படும் கடன்கள் அந்நிய நிறுவனங்களிடம் சென்றுவிடும்.
(நாம் வாங்கிய கடனில், நல்ல லாபத்தில் தொழில் செய்து நம்மையும் கடனாளியாக்கிவிட்டு திரும்பவும் உலகவங்கியிடம் அடமானம் வைப்பது இதை உறுதியாக்கிவிடும்.) இதில் நிதியமைச்சர் சொன்ன பல லட்சம் கோடி முதலீடு என்பது மிகப்பெரிய கடன் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் தடையின்றி நிறைவேற்றிட உதவும் அமைப்பு தான் இந்த வாரியம் (NIB). இது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வேறு எந்த செயலகத்தின் தடையும் இருக்காது. இப்பொழுது மத்திய தணிக்கைக் குழு கொடுத்து வந்த இடர்களுக்காக, அதன் அமைப்பை மாற்றி அமைப்பது (பாம்பின் பல்லைப் பிடுங்குவதைப் போல), இனி கேள்வி கேட்பதற்கு யாருமற்ற நிலையைக் கொணர்ந்து விடும் என்பதும் உறுதி.

இறுதியாக இந்த வாரியம் அமைக்க நடுவன் அரசு சொல்லும் “வளர்ச்சி என்னும் சொல்லை சற்று ஆராய வேண்டும், நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக சொல்லும் காரணங்களில் மையமாக இருப்பது பொது மக்களின் நலன். பொது மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட இறுக்கமான கொள்கைகள் (tighten policies) யாவும் தேசிய வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது என்று குறை கூறினால், நம் நாட்டை எந்தத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பது அதிமுக்கியம்  என்று கேள்வியெழுப்புதல் இங்கே அவசியம்.
முதலில் சொன்ன குறளுக்கு விளக்கம்: நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். (குறள் 740). வள்ளுவர் சொன்னது பொய்யா மொழியே!!

***********************************************************

இதை ஹிந்து, பிசினஸ் லைன், சி.என்.பி.சி போன்ற மீடியாக்கள் வரவேற்கின்றன, இன்னும் நமது ஹைவேஸ் தன் கூட்டாளார்களுக்கு(contractors) 9000ஆயிரம் கோடி இன்னும் பாக்கி வைத்துள்ளது, அதன் காரணமாக எத்தனையோ வளர்ச்சிப் பணிகளும், உள்கட்டமைப்புகளும் நிறைவேறாமல் இருக்கின்றன என்று முன் வைக்கும் பிரச்சனைகளையும் மறுக்க முடியாது.


#TAG
இதைப் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலாக - மான்புமிகு நிதியமைச்சர் ப.சிதம்பரம், “இது போன்ற ஒரு வாரியம் மட்டும் நம் நாட்டில் விரைவாக ஆரம்பிக்கப் பட்டால், நம் நாட்டில் முதலீடு செய்வதற்காக தேங்கியிருக்கும் சுமார் 1.45 லட்சம் கோடிகள் உடனே வெளிவந்துவிடும் என்று சொல்கிறார். (அந்த 1.76 லட்சம் கோடிகளைப் பற்றிய உண்மை எப்போது வெளிவரும்?)

- ஜீவ.கரிகாலன்

நன்றி: சுதேசிச் செய்தி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பஜ்ஜி –சொஜ்ஜி -07




     தொடர்ந்து தம் அடித்துக் கொண்டிருப்பவர்கள் என்றாவது ஒரு நாள் திடிரென்று தனது புகைப் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் பொழுது இது தான் கடைசி சிகரெட் என்று சொல்லி கடைசிப் பஞ்சு வரை இழுத்து குடிப்பார்கள், அவர்கள் கண்டிப்பாக தன் பழக்கத்தை மறுபடியும் தொடர்வார்கள் என்று சொல்லலாம். அதுபோலத் தான் நானும், மறுபடியும் டயட் இருக்கவேண்டும் என்று சங்கல்பம் எடுக்கும் நாளில் எல்லாம் வெளுத்துக் கட்டிவிடுவேன். இன்றும் அப்படித் தான் கடைசியாக அடையார் ஆனந்த பவன் சென்று வேண்டுமென்பதை வாங்கி தின்னும் முடிவுடன் உள்ளே சென்றேன்

      ஏற்கனவே சில்லி பரோட்டா சாப்பிடும் பொழுது பல்லில் ஸ்டேப்லர் பின் மாட்டிக் கொண்ட சம்பவம் நடந்து ஆறு மாதம் தான் ஆகிறது, சில நாட்கள் முன்னர் சென்ட்ரல் ஸ்டேசன் சரவண பவன் பிரியாணி சாப்பிட்டு மனதைப் பறிகொடுத்ததால், முதலில் பிரியாணியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பில்லிங் கியூவில் நிற்கும் பொழுது அலுவலகத்திற்கு பெர்மிஷன் போட்டு செல்லும் ரேசன் கடை கியூவாக கண் முன்னே வந்து நின்றது. ஞாயிறு மதியம் வந்து தினமும் நம் வீட்டில் கிடைக்கும் சாதாரண சவுத் இண்டியன் மீல்ஸை வாங்கி உண்ணும் குடும்ப நண்பர்களை பார்க்கும் பொழுது ஆச்சரியமும், கவலையும் ஒரு சேர வந்தது. 
ஆச்சரியம் அந்த அளவிற்கு ஒரு சாதாரண சாம்பார், ரசம் சாப்பிடக் கூட இத்தனை பணம் செலவழிக்க நாம் மாறிவிட்டோமா? சமையல் அந்த அளவு வெறுக்கும் கலையாக போய்விட்டதா? சோம்பல் பெருகி விட்டதா?; 
கவலை ஒருவேளை ருசிக்காகத்தான் வருகிறது இந்தக் கூட்டம் என்றால், நம் பாரம்பரிய சமையல் அந்த அளவு அருகிவிட்டதா?? 

     இதற்கிடையில் பில்லிங் கியூ, டெலிவரி கியூவெல்லாம் தாண்டி திரைப்படங்களில் வரும் ஜெயில் கைதி போல் அள்ளி வைத்த 85 ரூபாய் (உனக்கு இது வேணும்) பிரியாணியை வாயில் வைக்கும் கணம் என் முகம் மலர்ந்து(?) பிடித்த அபிநயங்களும், முத்ராக்களும் சொல்லின “என் அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி இனி உன் சமையலில் இனி குறை சொல்ல மாட்டேன்” என்று சத்தியம் செய்வேன் . எதிர் டேபிளில் இதே முகத்துடன் என்னோடு சேர்ந்து கியூவில் சண்டை (*01) போட்டு தயிர் சாதம் வாங்கியவரின் முகம் அதே அஷ்ட கோணலுடன்..கவனியுங்கள் அது வெறும் தயிர் சாதம் தான்..

***************************************************************************
        தயிர் என்றவுடன் தான் ஞாபகம் வருகிறது, தயிர், பால் போன்ற நம் தினசரி உணவில் முக்கிய இடம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய பாக்கெட் பாலோ, தயிரோ தன் நிலை திரியாமலே கெட்டு விடுகிறது. இதை எல்லோரும் கவனித்திருக்கலாம், அதாவது பாலோ, தயிரோ கெட்டுவிட்டால் ஏற்படும் நிறமாற்றம்  வருவதில்லை, ஆனால் உட்கொள்ளும் போது தான் வித்தியாசம் தெரிகிறது. ஏன் இந்த நிலைஎன்று அலசிப் பார்க்கும் போது தான் சில விபரீதங்கள் தெரிய வருகிறது.
 
தீவிரமாக பதப்படுத்தும் செயல்முறைகளில் என்னென்ன ரசாயனக் கலப்படங்கள் நிகழ்கின்றன என்று ஒரு பட்டியல் எடுத்தேன் தலை சுற்றியது. செயற்கை முறையில் உருவாக்கிய பகுதிப்பொருட்கள் (components) இந்த வெண்ணை நீக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட பாலில் இருக்கின்றன அவை யாவும் ஒன்று பதப்படுத்தும் முறையிலோ அல்லது பசுக்களின் வழியாகவோ கலந்து இத்தகைய கொடிய உணவாக பாலை மாற்றிவிட்டன. ஆண்டிபயோடிக் மருந்து, அளவிற்கு அதிகமான இரத்த அணுக்கள் (சாதாரணமாக 1 லிட்டர் பாலில் 15 லட்சம் வெள்ளை அணுக்கள் வரை இருக்கும்), இரைப்பை-குடலுக்குரிய புரதக் கூறுகளில் இருக்கும் கலப்படம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட rBGH, மற்றும் பாலுடன் கலக்கும் சீழில் இருக்கும் அணுக்களின் அபிரிதமான எண்ணிக்கை. என்ன வியப்பாக இருக்கிறதா? அதிகமாக பால் கறப்பதற்காக மரபணு மாற்றம் செய்தும், விஷேச உணவு வகைகளும்(*02) உருவாக்கிய மாடுகளில் சுரக்கும் பாலில் இருக்கும் அதிகப்படியான சீழ் செல்களின் எண்ணிக்கை என உரைய வைக்கிறது அந்த பட்டியல்.

மாஸ்டிடிஸ் எனும் நோய் மாடுகளுக்கு வருகிறது, அதுவும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பால் மாடுகளின் உணவாலும், இயந்திரம் கொண்டு அதீதமாக கறப்பதாலும் அவற்றிற்கு நம்பமுடியாத அளவிற்கு அழற்சி நோய் இருக்கிறது. அதன் காம்புகள் சிவந்து, வீங்கி, சீழ் படியும் நிலை. அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலோடு கலந்து வரும் சீழ் தடை செய்யப் படவில்லை (நம் அரசின் guideline count எத்தனை என்று தெரியாது).அதிகப் பாலிற்காக மாடுகளைப் சித்ரவதைப்படுத்துவது, பசுவை உணவுக்காகக் கொல்வதைக் காட்டிலும் கொடியது!  இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் புற்று நோய் வரை இட்டுச் செல்லும் என்றால், வேறு நோய்களைப் பற்றிய பட்டியல் அவசியமே இல்லாதது.

நீங்களே யோசியுங்கள் நூறு நாட்கள் கெடாத பால் என்று விளம்பரப் படுத்துகிறார்களே!! நூறு நாட்கள் கெடாமல் இருப்பது பால் தான ஐயா!!?? “ நிறைய பால் குடி, தோனி மாதிரி வருவ என்று யாராவது சொன்னால் இனி நம்பாதீர்கள் (பாலும் சரி தோனியும் சரி), இனி வரும் தொடர்களில் பால், பசு மாடு பற்றி இன்னும் சொல்கிறேன்.

*********************************************************************

 இந்த லிங்கை சொடுக்கவும்
http://in.news.yahoo.com/three-iim-indore-students-expelled-consuming-drugs-hostel-183000586.html

ஒரு உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆண்டு தோறும் படிக்கும் சில நூறு மாணவர்களில்  இத்தகைய நடத்தையுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?? ஒரு மேலாண்மை உயர்கல்வி படிக்கும் ஒருவன் போதைக்கு அடிமையாகிறான் என்றால் உண்மையில் கல்வி என்பது என்ன?? அதுசரி ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்ய மதுக்கடை வைத்து பிழைப்பு செய்யும் அரசுகள் நம்மிடம் இருக்கையில் இதனால் என்ன பெரிய தீங்கு என்ன கேள்வி எழும்??


*01 இப்போதெல்லாம் நம் ஊர் ஹோட்டலில் கூட தமிழில் ஆர்டர் செய்ய முடிவதில்லை, அங்கெல்லாம் வட இந்தியர்கள் இருப்பதால் உணவு சரியில்லை, தாமதமாகிறது என்று என்ன சொன்னாலும் “பெப்பேஎன்று தலையாட்டி விட்டு செல்கிறார்கள்.
*02 கரவை மாடுகளுக்கு என்று விஷேசமாக கொடுக்கப் படும் தீவனம் கூட ஒரு பெரிய உணவுச் சங்கிலியை அறுக்கின்றது வெறும் பொருளாதார லாபங்களுக்காக


இன்னும் சூடாக, சுவையாக தருகிறேன் வாசிப்பவர்கள் யாரேனும் விமர்சனம் செய்யுங்கப்பா!!
ஜீவ.கரிகாலன்