திங்கள், 18 அக்டோபர், 2010

ஆட்டோகிராப்-4 ; (அம்பாசமுத்திரம் நினைவுகள்)

     அம்பை -என் சொந்த ஊர், இப்பொழுது சென்னையில் வசிக்கிறேன்.இயந்திர வாழ்க்கையில் தன்னைத் தொலைத்து, தன் இயல்பினை மறந்து பணம் சேர்க்கும் எண்ணம் மட்டுமே முக்கியமாய் இருக்கும் பல லட்சம் நாடோடிகளில் நானும் ஒருவன். பணத்தை தவிர வேற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத எனக்கு , இடையில் என்றாவது ஒரு நாள் மட்டும்  என் சுயநினைவுக்கு வர சிறிது உற்சாக பானம் தேவைப் படும் , அன்று மட்டும் நான் இழந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவது உண்டு .எனினும் இந்நகர வாழ்க்கை எனும் கோரப் பிடியில் சுறுசுறுப்பாக இயங்குவது எனக்கு பிடித்தமான ஒன்று தான். 

               ஞாயிற்றுக் கிழமை மனைவியின் அனுமதிபெற்று கொஞ்சம் மதுவுண்டு, நிறைய நினைவுண்டு, பாட்டுப் பாடி- கதை சொல்லி; அடுத்த நாள் காலை 'நான் அவளைப் பற்றியா பேசினேன்?' என்று ஒன்றுமே தெரியாதது போல் அவளிடம் கேட்டு, அதற்காக கேட்கும் இன்ஸ்டன்ட் மன்னிப்புகளும், எமர்ஜென்சி சால்ஜாப்புகளும் இல்லாத காவிய வாழ்க்கை தனை நான் வாழ்ந்து சரித்திரம் படைக்க விரும்பவில்லை.

   இது என் அலுவலகம், என்னுடய ஜூனியர் எப்பொழுதும் வேலை செய்யத் தெரிவது போல் காட்டிக் கொண்டே இருக்கும் ஒரு ஜீவி, அவன் என்னை அன்று அவசரமாக அழைத்தான்,
"தங்கபாலன் சார்!! தங்க பாலன் சார்!!",
   "என்னப்பா ?"-நான்.
அவன் ,"சார் காலர் tune மாத்திட்டேன், கேட்டுப் பாருங்கோ !!" என்றான்.
அவன் எப்பொழுதுமே அப்படித் தான், சரியான காலர் tune பைத்தியம், வாரம் ஒரு tune வைப்பான்,ஆபீசில் காலர் tune வைக்க கூடாது என்று சட்டம் போட்டதால்,அந்த கிறுக்கு அதற்கென ஒரு புது போன் வாங்கியது.

அவன் தன்னுடைய ஆபீஸ் மொபைலில் இருந்து தன் மொபைலுக்கு கால் பண்ணினான்."என் கிராமத்திலிருந்தும வெகு தொலைவில் வந்த நான்; அந்த பாட்டைக் கேட்டவுடன்  சட்டென்று திரும்பினேன் அம்பைக்கு".அந்த பாட்டு ..........

"மயிலாடும் பாறையிலே, நாங்க ஆடிருக்கோம்........"

நான் மறந்து போன பாடல், குறைந்தது பத்து வருடம் இருக்கும் அந்த பாடலைக் கேட்டு, அது மற்றவருக்கு சாதாரண கரகாட்டப் பாடல் போல் இருக்கலாம். சினிமா நம் நாட்டில் வந்தபின்பு நம் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதியை ஆட்கொள்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது மாயை என்றும், பூதம் என்று சொன்னாலும் சினிமாப் பாடல்களின் தாக்கங்கள் நம் வாழ்வோடு ஒன்றிவிட்டன , மேற்சொன்ன அந்த பாடல் தூண்டில் போல் கொத்தி வந்தது அவளைப் பற்றிய நினைவை .

அவள் "கயல்விழி ............."
---------------------------------------------------------------------------------------------------                            
என் பள்ளி வாழ்க்கை,10ம் ௦வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அன்று நான் படித்த பள்ளியின் ஆண்டுவிழா,'பாண்டி நாட்டுத் தங்கம்' எனும் படம் அப்பொழுது மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது.அந்த படத்தில் வரும் பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தாள், என் தங்கை. ஆம், என் தங்கையின் ஜோடி தான் கயல் விழி.

குறுக்கே இழுத்துக் கட்டிய வேஷ்டியும்,சட்டையும், தலையில் ஒரு துண்டும் அணிந்து , கண் மையினால் மீசை வரைந்து.என் தங்கையோடு நடனமாடிக் கொண்டிருந்தாள் என் கயல்விழி. என்னுடைய விசில் தான் அங்கு ஓங்கி ஒலித்தது. பிரம்புடன் எப்பொழுதும் காட்சி தரும் சண்முகம் பீ.டீ சார் (B.Phed ) , எங்களை அடக்க முயன்று தோற்றுப் போனார். ஆட்டம் முடிந்தது, அவளைக் கிண்டலடிப்பதை நினைத்துக் கொண்டு முறைத்த படியே சென்றாள்.    

கயல், சினிமாவில் வரும் காந்திமதியின் மகள் ஸ்ரீதேவி அல்ல. இன்றளவும் என் கிராமத்தில் ஆற்றில் துணி துவைக்கும் பெண்களிலோ ,பத்தாம் வகுப்புத் தேர்வில் பெயிலாகித் திரும்பும் பெண்களிலோ, முதல் வரிசையில் அம்மன் கோயிலில் பொங்கலிடும் பெண்களிலோ அவள் சாயல் தெரியும்.ஆனாலும் எனக்கு இவள் அன்று ஸ்ரீதேவிதான்.

         பள்ளிக்கு அணிந்து வரும் தாவனியைவிட, சட்டை பாவடையில் தான் அவள் மிக லட்சணமாய் இருப்பாள். பச்சை நிறப் பாசிமனியும், சிவப்பு ரிப்பனும், நீளமாக(ஆச்சரியக் குறி போல் {!})இடும் சாந்துப் பொட்டு, அவள் கொண்டு வரும் மஞ்சள் நிறக் கூடை என இன்று வரை எல்லாமே என் நினைவில் நிரந்தரமாய் இருக்கும்.  அவளைப் பார்க்காத நாட்கள், நான் வாழாத நாட்கள் என்று வாடிய நாட்களும் உண்டு. இருந்தும் எனக்குத் தெரியும் எனது ஆசை மிகவும் ஆபத்தானது என்று. காரணம் என்ன என்று அசட்டுத் தனமாய் கேட்காதிர்கள்? பதினாலு வயதில் காதலித்தேன் என்று சொன்னால், என்னை என்ன பாட்டுடைத் தலைவனாய் வைத்து அகநானூற்று பாடலா வடிப்பார்கள்? அதுவும் அந்த 1990களில் இருந்த கிராமங்களில்.    

                ஆம்.காதல் என்பது கெட்ட வார்த்தையாய் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த காலத்தில் காதலித்த தொண்ணூறு சதவீத ஆண்களில் நானுமொருவன்.கயல், ஏனோ ஆங்கிலத்தில் நான் என் பெயரை எழுதக் கூட தடுமாறும் நாட்களிலும், அவள் பெயரை ஆங்கிலத்தில் என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தேன். என்னை நீங்கள் தமிழ் பற்று இல்லாதவன் என்று கூட சாடலாம், அதைப் பற்றி நான் கவலைப் படமாட்டேன். ஏன் என்றால், எங்கள் கூட்டத்திலே எவனுக்கும் ஆங்கிலம் வராது, தமிழில் எழுதினால் என்னை எல்லோரும் கண்டு பிடித்துவிடுவார்களே.

            அந்த நாட்களில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடு இருந்தது, பூப்படைந்த பெண்கள் முற்றிய சோளக்கதிர் போல் தலை கவிழ்ந்தே இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் சாத்திரம் சொல்வார்கள். ஆனால், கயலின் தலை கவிழ்ந்திருந்தாலும் தன பெயருக்கு ஏற்றாற்போல் மிக வேகமாக என்னை பார்த்துவிட்டு, நாம் பதிலுக்கு பார்வை வலையை  வீசும் முன் நழுவிடும், கயல் கொண்ட கயல் விழி.

                        அந்த ஓரப் பார்வையை என் வலைக்குள் சிக்கவைக்க நான் எடுத்த முயற்சிகள் தான் எத்தனை?

                 சித்தப்பாவின் சைக்கிள் - அந்த ரதத்தில் நான் ஏறினால் போதும், எனக்கும் காற்றுக்கும் தான் பந்தயம் நிகழ்வது போல் ஒரு வேகம் வரும் . அவர் சைக்கிள் ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. ஏதாவது ஒரு வேலை சொல்லி தான் எனக்கு சைக்கிள் கொடுக்கப்படும். பக்கத்து ஊரில் இருக்கும் மதுக்கடை தான் நான் அடிக்கடி அவ்வூர் செல்ல என் காரணம், என் சித்தப்பா அவ்வூர் வாத்தியார் என்பதால், பிராந்தி வாங்குவதற்கு என்னைத் தான் அனுப்புவார். எல்லாம் தாமரை வசிக்கும் ஊர் என்கிற ஒரே காரணத்துக்காக தான் நானும் சம்மதிப்பேன். அவள் கோலம் போடும் போதும், தண்ணீர் எடுக்கும் போதும், கடைக்கு போகும் போதும், கோயிலுக்கு போகும் போதும், ரேஷன் கடைக்கு போகும் போதும் என வீட்டை விட்டு வெளியே வரும் பெரும்பாலான சமயங்களில் , அவளை இருவர் பின் தொடர்வர். ஒன்று அவள் பொய் நிழல், இன்னொன்று அவள் நிழலாகிய நான்.


               தன்னைச் சுற்றி சுற்றி வரும் என்னை அவளுக்கும் பிடிக்கிறது என்று எனக்கு புரிந்தது. என் தங்கையுடன் பேசும் சாக்கில், வகுப்பு இடைவெளிகளில் அவள் வகுப்பிற்குச் சென்று எதாவது பேச்சு கொடுப்பேன். இங்கே காதல் என்ற வார்த்தை மிகவும் அநாகரிகமான வார்த்தை என்றபோதிலும், எம்மைப் போன்ற பலர் அதைச் செய்ய மட்டும் தவறுவதில்லை. ஆனால் இந்த காலத்தில் ?....ஏன் ? நான் இன்று அலுவலகம் வரும் வழியில் கூட ஒரு காட்சி கண்டேன். ஒரு ஆறு வயது சிறுவன் பள்ளிக்கு நடந்து செல்லும் பொது , ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஒரு வாகனத்தின் கண்ணாடியில், தன் காதலியின் பெயரை எழுதிவிட்டு ஒரு அம்புக்குறியினையும்  பதித்து விட்டான், இந்த உலகத்தில் நான் பிறக்கவில்லையே. என் காதலி அவளுக்குத் தெரியப் படுத்த நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்திருப்பேன்?


         எங்கள் காதல் வளருவதற்கு மற்றுமொரு பெரும் காரணம் "செந்தில் முருகன் டாக்கீஸ் ", செந்தில் முருகன் டாக்கீஸ்-இல்  1990-ஆம் ஆண்டு தீபாவளிக்கு "விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன்-ம், கார்த்திக் நடித்த பாண்டி நாட்டுத் தங்கமும் அந்த தியேட்டரில் திரையிடப்படும் என்று அறிவிப்பு வந்தது..எங்கள் ஊரில், எம்.ஜி.ஆர் படத்துக்கு அடுத்ததாக விஜயகாந்த் படம் தான் திருவிழாபோல் கூட்டத்தை தியேட்டருக்குள் வரவழைக்கும். அந்தப் படத்துக்கான போஸ்டர்களை எங்கள் சங்கங்களே கவனிக்க தொடங்கியது,  நான் விஜயகாந்த் ரசிகன், இந்தப் படம் தீபாவளிக்கு எங்கள் தியேட்டரில் திரையிடப்படும் என்றவுடன் போஸ்டர் ஓட்டும் வேலை, படம் பார்க்க வரும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய சாக்கிலேட்களுக்கான நிதி வசூல் என்று மும்மூரமாய் இருந்தேன், மன்றத்  தலைவர் என்னை பாராட்டி ஒருநாள் மன்றக் கூட்டத்தில்,"ஒரு ஸ்கூல் பையன் தலிவர் படம் வரப் போகுதுன்னு இவ்வளவு வேலை செய்றான், எல்லாம் இவனை பார்த்து கத்துகோங்க!!" என்று, அவ்வளவு தான் அந்த புகழ் போதையில் அப்போதெல்லாம் தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்தேன், வீட்டில் இருந்து ஒரு சில்வர் குடம் காணமல் போனதுக்கு நான் காரணம் இல்லை.


        பிரபு , பக்கத்து ஊரில் வசிப்பவன், தாமரைக்கு முறைப்பையன் என்பதால் நீண்ட நாளாகவே அவன் மீது குரோதம் இருந்தது,அவன் கார்த்திக் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்.தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்கள், பள்ளிக்கு செல்லும் விருப்பே இல்லாமல் மெதுவாக நான் ஒட்டிய போஸ்டர்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாத்துக் கொண்டே சென்றுக் கொண்டிருந்தேன். பஸ் நிறுத்தத்தில் சில போஸ்டர்களை கிழித்துக் கொண்டிருந்தான் அந்த பிரபு. அடுத்த கணமே, அவன் சட்டையை பிடித்துக் கொண்டு அவனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க, அவன் தங்கள் தலைவர் படமும் வருகிறது, இப்படியே எல்லா சுவற்றிலும் விஜயகாந்த் படமே ஓட்டினால், கார்த்திக் போஸ்டரை எங்கே ஓட்டுவது என்று என்னிடம் வம்புக்கு வந்தான். ஏற்கனவே கயலின் முறைப்பையன் என்ற வெறி வேறு இருந்ததால், நாடு ரோட்டில் வைத்து அவனை நையப்  புடைத்துவிட்டேன். அவனை அடிக்கும் பொழுது என்னை சுட்டெரிக்கும் விழிகளை நான் கவனிக்கவில்லை, கடமையில் காதல் தெரியாது தானே!!.

 
        ஆனால், பள்ளியில் இடைவேளையின் போது மரத்தடிக் கிழவியிடம் நெல்லிக்காய் பிஞ்சு வாங்கிக் கொண்டிருக்கும் பொது அவளை பார்த்தேன், என்னை கொன்று விடுவது போல் அவள் பார்க்க, அவளை விழுங்கி விடுவது போல் நான் பார்க்க. தவறான நோக்கத்தில் நோக்கியதால், "சீ"என்று சொல்லியது போல் முகம் திருப்பிச் சென்றாள். ஏன் இப்படி செய்கிறாள், என்று ஏன் நண்பன் மணியிடம் புலம்ப, அவன் தான் சொன்னான் தான் பிரபுவை அடித்ததை அவள் பார்த்திருப்பாள் என்று. எனக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை, மாலைக்குள் அவள் மனதை மாற்றிட ஒரு திட்டம் போட்டேன், இது வரை என் வாழ்நாளில் யாருக்காகவும் மன்னிப்பு கேக்காத  நான், முதல் முறை என்னை விட ஒரு வயது குறைந்த பிரபுவை சமாதானம் செய்ய மன்னிப்பு கேட்டேன், சுவற்றில் அவனின் தலைவர் படம் ஒட்ட இடம் தருவேன் என்ற வாக்குறுதியும் கொடுத்தேன்.

 
        வரைபடம் வாங்க மணி வைத்திருந்த காசினைத் திருடி, பிரபுவுக்கு பால் ஐஸ் வாங்கி கொடுத்தேன், சரியாக அதையும் அவள் பார்க்கும் வேளையில் கொடுத்தேன். கயல்விழி என் அருகில் வந்து தான் வீட்டுக்கு கிளம்புவதைச் சிரித்துக் கொண்டே கூறினாள், பின்னர் ஓரக்கண்ணிலே, ஒரு குறும்பு கலந்த புன்னகையுடன் விடைபெற்றாள். அதை விட சந்தோஷம், போஸ்டர் ஒட்ட இடம் கொடுத்ததால் தன் உயிரையும் உங்களுக்கு கொடுப்பேன் என்று பிரபு உத்திரவாதம் கொடுத்தான். அப்போ தன்னுடைய ஒரே இடைஞ்சல் சரியாகிவிட்டதை உணர்ந்தான்.

    தீபாவளியும் வந்தது


         



               







1 கருத்து: