ஞாயிறு, 25 நவம்பர், 2018

சென்னையில் வாழும் மெட்ராஸ்வாசி (பஜ்ஜி - சொஜ்ஜி 112)

(2018 தி இந்து தீபாவளி மலருக்கு எழுதிய கட்டுரை - ஊரும் தொழிலும்)


மெட்ராஸ் என்பது சென்னையாக மாறிய பின்னர்தான் வேலைத் தேடி ரயிலேறினேன். இப்போது நான் சென்னைவாசியாக வாழ்ந்து வந்தாலும், அப்போது மெட்ராஸ்காரனாகத்தான் என் வேலையைத் தொடங்கினேன். 

சென்னையின் நீண்ட வரலாற்றில் சென்னை ஒரு தொழில்நகரமாக உருவெடுத்து வந்த, வளர்ந்து கொண்டிருக்கும் கதையில் இரண்டு தசாப்தங்களின் மாற்றங்களை என்னால் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியும். 1990களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை, Y2Kவிற்குப் பின்னால் அடைந்த அசுர வளர்ச்சி, குறிப்பாக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட ராஜிவ்காந்தி ஆறுவழிச் சாலைக்குப் பின்னரான சென்னையின் வளர்ச்சி என்பது OMR (Old Mahabalipuram Road), ECR (East Coast Road) ஆகிய பிரதேசங்களை புதிய சென்னையாக உருமாற்றம் பெறச் செய்தவை.

2007:

ஆனால் நான் மெட்ராஸ்வாசியாகவே கையில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் எனது பயோ டேட்டாவைச் சுமந்தபடி, பாரிஸ் கார்னருக்குப் பின்னே இருக்கின்ற அரசு அலுவலகங்களின் பிரதானமான சுங்க அலுவலகத்தில், யாரோ ஒரு கஸ்டம்ஸ் குமாஸ்தாவிற்கு முன்னர் காத்திருக்கும்போது 15 கி.மீட்டர் தொலைவில் தகவல் தொழில்நுட்பத்துறை தனது அடுத்த கிளைகளுக்கான வான் நோக்கிய கட்டடங்களை எழுப்ப, சதுப்பு நிலங்களில் இடம் பார்த்துக்கொண்டிருந்தது.

நான் போக்குவரத்துத் தளவாடங்கள் துறையில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே மூன்று விதமான நபர்களைச் சந்திக்க வேண்டும், கஸ்டமர்கள் – ஏற்றுமதி & இறக்குமதி நிறுவனங்கள் ஒருபுறமும், அவர்கள் பொருட்களை கையாள்வதற்கான கப்பல், லைனர் நிறுவனங்கள், கிட்டங்கி மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன் இன்னொரு புறமும், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றொரு புறமும் இருப்பார்கள். இந்தத் தொழிலில் இருக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால் பாரம்பரியமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி அல்லது கொள்முதல் செய்யும் நிறுவனங்களும் வாடிக்கையாளராக இருப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளராக இருப்பார்கள். தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு இவ்வகையான தொழில்களைப் பிரித்து வைக்கிறது. அதுவே சமூகப் பொருளாதார விழுமியங்களுடனும் இம்மாநகரைப் பிரித்துப் பார்ப்பதற்கும் இடமளிக்கிறது. இவ்வாறே சென்னையின் மூன்று வகையான அடுக்குகளைப் பார்க்க முடிகிறது. வாழ்வியல் தரம், நுகர்வுப் பண்பு, அரசியல் அல்லது பொழுதுபோக்கு இவற்றைத் தகவல் தொழில்நுட்பப் புரட்சி வெவ்வேறாகப் பிரிக்கவும் செய்கிறது, சில பிரிவுகளை உடைத்தும் போட்டிருக்கிறது.

மெட்ராஸ்:

காலணிய ஆதிக்கத்தில், மாகாணத்தின் தலைமைப்பட்டணமாக இருந்த காலத்திலிருந்து 1990-கள் வரை மெட்ராஸ் என்பது துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட மாநகரமாகவே இருந்து வந்துள்ளது. அதன்பொருட்டே கிண்டி, அம்பத்தூர், மெப்ஸ் (MEPZ) ஸ்ரீபெரும்புதூர் என்கிற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் யாவுமே அமைக்கப்பட்டன. சரக்கு அல்லது உற்பத்திப் பொருளாதாரமே மையமாக இருந்து வந்தது. மெட்ராஸின் பெரும்பான்மை மக்கள் தொழிலாளர்களே. 90களுக்கு முன்னர் வரை அவர்களது பிரதான உடை காக்கி ட்ரவுசரும், சட்டையுமே. மத்தியத்தர வர்க்கம் என்பது இன்றைக்கு இருப்பது போன்ற உயர் மத்தியத்தர வர்க்கம், குறைந்த மத்தியத்தர வர்க்கம், மத்திய மத்தியத்தர வர்க்கம் என்றெல்லாம் பார்க்க முடியாத வடிவத்திலேயே இருந்தது. இன்றும்கூட அதன் பழைய கூறுகளைப் பார்ப்பதற்கு சென்ட்ரலுக்குப் பின்னால் இருக்கும் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, மிண்ட் ரோடு, யானைக்கவுனி முதல் தம்புச்செட்டி சாலை, ப்ராட்வே, செகண்ட் லேன் பீச் வரை தென்படும் உழைப்பாளர்கள் அதன் எச்சமாகவே இருக்கிறார்கள். என்ன? அவர்தம் கைகளில் செல்போனும், வாட்ஸப்பும் மட்டுமே வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் பெரிய பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார அழுத்தங்களால் நகரின் மையத்திலிருந்து வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் மக்கள் வாழ்ந்த இடங்களில் நவீன சவுகார்பேட்டைகள் GATED COMMUNITY ஆக மாறியிருக்கிறது, அவை சென்னை என்று அழைக்கப்படும்.

2008-ல் மெட்ராஸில் வேலை செய்ய ஆரம்பித்த எனக்கு 2010-வரை கஸ்டம்ஸ் அலுவலத்திற்கு வரும்போது ஃப்ளாப்பிகளில் கோப்பினை சேமிப்பதற்கு காலாவதியான தொழில்நுட்பங்கள் அங்கே தம்புச் செட்டி ஸ்டேஷனரி கடைகளில் கிடைத்தன. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு உடனடித் தகவல்களை அளித்திட எங்களைப் போன்ற முகவர்களுக்கு ப்ளாக்பெரி செல்போன்கள் வாங்கிக்கொடுத்தார்கள். சந்தைப் பொருளாதாரத்தில் தேய்-கலாச்சாரமும் (Credit card culture/Cashless culture) சூடுபிடித்த காலம் அது. அநேகமாக பிரபல தனியார் வங்கிகள், வேலைக்குச் சேரும் எல்லோருக்கும் டை கட்டிவிட்டு 3000 ரூபாய் சம்பளத்திற்குகூட எக்ஸிக்யூட்டிவ் என விசிட்டிங் கார்டு அடித்துக்கொடுத்து முடித்த காலம் அது. அவர்கள் எல்லோர் கையிலும் கிரெடிட் கார்டுகளை கொடுத்து முடித்த திருப்தியில் ஷேர் ஆட்டோ, செல்போன் கடை எனத் தப்பிவிட, தேய்த்துப் பார்த்து சுகம் கண்டவர்கள் லோக் அதாலத் வார்டுகளில் கடன்காரர்களாக அட்மிட் ஆகியிருந்தார்கள். அசுரப் பாய்ச்சலாக தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் ஆண்ட்ராய்டு போன்களை வாங்கி உபயோகிக்க, நாங்கள் அதற்கேற்ற கொரியன் மொபைல்போன் வாங்கி கானா பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு இரயில் நேரங்களில் உலாவர பாக்கெட் நாவல்கள் பரிதாபமாக ஊசலாடிக்கொண்டிருந்த காலம் 2005-2010.

ராஜிவ்காந்தி ஆறுவழிச் சாலை வந்த நேரம் என்று சொல்வதற்கு ஏதுவாய் நிகழ்ந்த இத்தனை மாற்றங்கள், 2007 அமெரிக்க சப்-பிரைம் இஸ்யூ என்று சொல்லப்பட்ட சில முக்கிய நிறுவனங்களின் திவால் நிலை.  2007க்கு முன்னர் கடந்த பத்தாண்டுகளாய் உருவாகி வந்த உச்சத்திலிருந்து இறங்குமுகம் கண்டது. அதற்கு முந்தைய ஆண்டு பொறியியல் பட்டம் படித்தவன் – கல்வியில் சுமாரான தேர்ச்சி பெற்றே வளாக நேர்முகத்தில் தேர்வாக, அதற்கடுத்த வருடம் நல்லத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட நேர்முகத்தில் தேர்வு பெற்றும் வேலைக்குச் செல்ல இரண்டு வருடங்கள் வரை காத்திருந்தார்கள். சிலர் சிம்கார்டு விற்றார்கள். அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு வளாக நேர்முகம் நடைபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை சென்னையிலேயே பாதியாகக் குறைந்தது என்றும் சொல்லலாம். ஆனால் இதை ஒரு வட்டமாகப் புரிந்து கொள்ளும் பொருளாதார வல்லுனர்கள், எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாற்றம் இருக்கும் என்று சொல்வது நிச்சயம் ஒரு ஆறுதல்தான்.

அரசாங்கம் e-governance, Rural BPO என்றெல்லாம் நிறையவே பேசிவிட்டாலும் 2000-லிருந்து சொல்லப்படும்படியான எந்த முன்னேற்றங்களும் நிகழவில்லை. நான்குநேரி போன்ற Decentralize என்று சொல்லும் எல்லாத் திட்டங்களும் கனவாகவே இருந்து வருகிறது. மெல்ல மெல்ல தமிழகத்து இளைஞர்கள் இஞ்சினியரிங் கல்லூரிகளால் சென்னைக்கே கடத்தப்படுகிறார்கள். ஆனால் மும்பைப் போல் அல்ல. சென்னை, தன்னை விரிவாக்கிக்கொள்ளும் நிலப்பரப்பைக் கொண்டது. ஆனால், சூழல் குறித்த அக்கறை அற்ற அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த வளர்ச்சியை நோயாகத்தான் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், தினமும் காலை ஐந்து மணிக்கெல்லாம், ஓம்னி பஸ்களில் தொழிற்சாலையிலிருந்து வரும் கொசுவர்த்தி வாசனையில் பல்லாவரத்தில் தூக்கம் கலைத்து கோயம்பேட்டில் இறங்குகிறார்கள் இளைஞர்கள்.

ஐ.டி நிறுவனங்களிலேயே இப்போது மத்தியத்தர வர்க்கங்களைப் போல் உயர்தர, மத்தியத்தர, கீழ்நிலை என வித்தியாசங்கள் இருக்கின்றன. வளாக நேர்முகங்கள் குறைந்து, கட்டணம் செலுத்தி பயிற்சி பெற்றவர்களையே நிறுவனங்கள் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற இன்ஸ்டிட்யூட்களும், பயிற்சி மையங்களும் அப்படியான நிறுவனங்களில் வேலைச் செய்யும் ஆட்களாலேயே பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. அதற்கும் மேலே நிறைய உப்புமா கம்பெனிகள், ஆறுமாத சம்பளமற்ற அப்ரென்டிஸ்களாக பொறியாளர்களை அமர்த்துகின்றன. 

ஆனால் இப்போது மூன்றாம்நிலை ஊழியர்கள் பலர் ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ், ஜொமேட்டோ போன்ற வாகன ஓட்டிகளாக இருப்பது எந்தத் தனித்திறனையும் வளர்க்காத மிகப்பெரும் தவறான முடிவை எடுக்கத் தூண்டுகிறது. இருந்தபோதும் நகரமயமாதல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

2005-க்குப் பிறகிலிருந்தே உலக அளவில் நகரமயமாதல் அதிகமாகும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் இருக்கிறது எனச் சென்னையைச் சுட்டுகிறது புள்ளிவிபரங்கள். சென்னையின் மக்கள்தொகைப் பெருக்கம் 2030-ல் மும்பையைத் தொடும் என்பது, உலக அளவில் பத்து இடங்களில் சென்னைக்கு அந்தஸ்து வந்துவிடும் என்பதாகும். இதில் சரக்கு உற்பத்தி துறையைவிட, சேவைத் துறையின் பங்கே அதிகம். அதிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மிகமிக அதிகம். அதே நேரம் உற்பத்தி துறையிலும் சென்னை முக்கியமான வளர்ச்சிகளை எட்டியிருக்கிறது. ஒரகடம் இந்தியாவின் டெட்ராய்ட் (Detroit) என்று சொல்லப்படுகிறது. பிரதான வாகனத் தொழிற்சாலைகள் போக கணிசமான துணை நிறுவனங்கள் (Ancilliary units, Original equipment manufacturing units) உருவாகியுள்ளன. இவை அனைத்தும் தலைநகரத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான சென்னைத் துறைமுகத்திற்கு வலுச் சேர்ப்பவை.

ஆனால் சில தனியார் துறைமுகங்களின் வரவு, தொலைநோக்கில் சென்னையின் வணிகத்தில் கணிசமான அளவைப் பிரித்து எடுத்துவிடும் என்பதும் உண்மை. தெற்கே காரைக்காலில் பன்னாட்டு நிறுவனமான MARG துறைமுகம், காட்டுப்பள்ளி எல் & டி துறைமுகம் மற்றும் ஆந்திராவின் கிருஷ்ணப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இப்போது போட்டிப்போடத் தொடங்கிவிட்டன, அடிப்படைக் கட்டுமான வசதிகள் மிகமிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது, அதுபோக, போக்குவரத்து நெரிசலும்.

மென்பொருள் துறை இந்தியாவில் வரும்போதே பெரும்பாலும் இரண்டு துறைகளில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒன்று நிதி மற்றொன்று தளவாடங்கள் (Logistics). பல பெரிய கப்பல் நிறுவனங்கள் (உதாரணம் : Maersk) தங்களுக்கான தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் பிரிவை அவர்களே தனியாக ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆனால், மற்ற நிறுவனங்கள் முழுமையாக மாறுவதற்கு 2015 வரை ஆகிவிட்டது. தற்போது சுங்கவரி ஆணையமும் முழுமையாகக் கணினிமயமாகி விட்டது. ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் எங்கள் அலுவலகங்களின் ப்ராஸசர்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன அல்லது புதிய கணினிகள் வந்துவிட்டன.

இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து உலகின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் சென்னையின் பங்களிப்பு ஏதோ ஓர் அளவில் இருந்து வருகிறது (2007 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னரும்). உலகப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி துறையிலும், சேவைத் துறையிலும் சென்னையின் பங்களிப்பு வளர்ந்துதான் வருகிறது. இதில் சுனாமி, பெருமழைக்கால வெள்ளம் போன்ற பேரிடர்களையும் சமாளித்து மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையும் மீண்டு எழுந்த வேகம் சென்னையின் பெரும்சாதனையில் ஒன்று.

இனி, வரும் காலங்களில் பேரிடர்களைச் சமாளிப்பதற்கு நிறுவனங்கள் தயாராக BCP [Business Continuity Plan]  போன்ற திட்டங்களுக்காக நிறையவே ஃபர்னிச்சர்களை இறக்குமதி செய்கின்றன. GST (General Sales Tax), டிஜிட்டல் பணம் போன்ற சில அதிரடித் திட்டங்கள் கணிசமான அளவு சிறுதொழில் மற்றும் சில துறைகளையே கடினமாகப் பாதித்தாலும் அரசின் அறிக்கைகளில் GDP (Gross Domestic Product) புள்ளிவிபரங்கள் முன்னேற்றம் கொண்டிருப்பதாகவே காட்டுகின்றன.  என்ன ஆனாலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் சென்னையின் எதிர்காலத் தொழில்வளத்தின் குறியீடுகளாகவும் புலனாகின்றன.

சர்வமும் டிஜிட்டல்மயமாகிவிட்ட சென்னைத் துறைமுகச் சுங்க ஆணைய அலுவலகத்தில் இனி கோப்புகளை எளிதாகக் கடத்தி ஒப்புதல் வாங்க முடியுமா? என்றால், இல்லை. அதற்கென இரு விஷயங்களை முக்கியமாகச் செய்ய வேண்டியிருக்கலாம்.

டிஜிட்டல் யுக லஞ்சப் பணமாக அரசாங்க அதிகாரிகளின் க்ளப் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யலாம் அல்லது இந்தியிலாவது சரியாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

மே மதராஸி ஹெ!!
****
-ஜீவ கரிகாலன்
சென்னை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக