ஒரு நதியைப் பற்றிய கதை இருக்கிறது
மோன நிலையில் தான் அதைச் சொல்ல முடியும் எனக் காத்திருக்கிறேன்.
பஞ்சகங்கா ஸ்தலம் என்று
மகாபலேஸ்வரில் டாக்ஸியை நிறுத்திய பைய்யாவுக்கு, அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டால்,
அவன் கடவுளை பெயர் சொன்னான். என் தம்பியோ அங்கே ஒரு ஏ.டி.எமைச் சொன்னான். டிஜிட்டல்
இந்தியா என்று ஏமாந்து தடவித்தடவி ரொக்கமாகக் கொடுத்தே சிவந்த கையும், தேய்ந்து போன
கார்டுமாய் என்னுடன் வந்த சகோதரன் மூன்று நான்கு ஏ.டி.எம்களில் தேய்த்த பின்னரே பணம்
கிடைத்தது. கிடைத்த சந்தோசத்தில் கோயில் செல்ல மனமில்லை, அப்படியே கடைமார்கமாக நடந்து
வந்தால் தொலைவில் ஒரு மைல்கல்.
ஏதோ அவளின் சகவாசத்தால், ஒரு வரலாற்று லச்சினையை அடையாளம்
கண்டுகொள்ளும் ஆர்வம் இருந்தபடியால் அது ASI பகுதி என்று அடையாளம் கொண்டோம். அந்த ஸ்ட்ராபெரி
பண்ணையாகி மாறிப்போன குளுகுளு நகரில், ஒதுக்குபுறமாய் வயல்வெளியில் முள் வெட்டிப்போடப்பட்டு
மறைவாய் இருக்கின்ற ஸ்தலம் கிருஷ்ணா நதியின் தோற்றுவாய் என்று நாங்கள் அறிந்திடவில்லை.
டாக்ஸிவாலாவுக்கு அது கடவுளின் இடம், தம்பிக்கு ஏ.டி.எம் ஸ்பாட்.
ஆனால் உண்மையில் அது
ஒரு அற்புதமான நிலம். ஒரு நதியின் தோற்றுவாயில் புதுத் தண்ணீரைக் கையில் பிடித்து பார்ப்பது,
எனக்கு ஒரு போதும் சாத்தியமற்ற ஒப்பீடு, அது ஒரு புதிதாய்ப் பிறந்த சிசுவை கதகதக்க
ஏந்துவது போன்றது.
பாதாளக் கரண்டியில் வாளிகளைத் தேடியே கைகளில் காப்பூ பூத்த
தாயின் கரங்களைப் பற்றியவனுக்கு இப்படி புது நீரை அள்ளியணைப்பது வேறெந்த ஒன்றோடும்
ஒப்பிடமுடியாதது. ஆனால் இங்கே என்னைக் கொண்டுவரச் செய்தமைக்கு அந்த நதி என்னோடு பழகியது
தான் காரணம். நதியைத் தெரியாதவனுக்கு இது எப்படிப் புரியும்.
மேடைகளுக்காக கையேந்தும்
ப்ளாஸ்டிக் வாட்டர் பபுள் இல்லையே அவள், ஒரு தொட்டி போன்ற தடுப்பில் விழுந்து, நிரம்பி
வழிந்தோடி பயணித்து அம்மலையிலிருந்து குதித்து மற்ற ஆறு நதிகளையும் சங்கமிக்கும் க்ருஷ்ணா
அவள்….
அந்த நதிக்கு மழை பிடிக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை, அவள் மழையாகவும் ஆகிறாள் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதைத்
தான் ஆச்சரியமாகப் பார்க்கிறேன். அவள் புதுமையானவள் இல்லவே இல்லை, அது இந்த கோளில்
முதலில் முளைத்த புல்லின் தொடர்ச்சியில் அவள் தன் வரலாற்றை இணைத்து வைத்திருக்கிறாள்.
அவளுக்கு அந்த அறிவு இருக்கிறது, அவள் நதியாக வேறு பயணிக்கிறாள்.
உலகியலில் அங்கங்கே ஒருசில தடுப்பணைகள் அவளுக்கு இருந்தாலும், காதாலாகிய பெரும் அணைக்கட்டையே
உடைத்த அவள், ஒரு விந்தை. ஆக்ரோஷமாய் போவதேயில்லை, சலசலப்பும் தெரிவதேயில்லை. என்ன
facebook account வைத்திருக்கிறாள். மலர்களை, தத்தைகளை, விஞ்ஞானத்தை, ஞானத்தை, அறிவியலை,
இலக்கியமாக்குகிறாள். PRINT ON DEMAND வசதி பற்றி எத்தனை எடுத்துச்சொன்னாலும் கூட கேட்பதில்லை,
அவள் ஒருபோதும் அப்படியான hardboundகளுக்கு எதிரானவள். ஆனாலும் என்ன என்று அவளோடு மோதிப்பார்க்கிறேன்
ஒரு தொகுப்புக்கு.
இரண்டு கைகளால் அள்ளி முகமருகே கொண்டு செல்லும் போது அவள்
என் முகத்தை பிம்பமாகக் காட்டுகிறாள் 34க்கு வயதில் 64 வயது பழைய அரசியல் அழுக்குகளைச்
சுட்டிக்காட்டுவாள், ”தண்ணீர் என்று சொல்லு” என்பாள். முகத்தில் தெளித்ததும் அழுக்கு
போய்விடும். ஆனாலும் நான் இந்த ambient air qualityல் தானே வாழ வேண்டும். இந்த முரண்களைப்
புரிந்து கொள்ளக் கற்றுகொடுப்பவள் தான் அந்த நதி.
க்ருஷ்ணா நதியானவள் நந்தி எதிர்நிற்கும் சிவனின் இல்லத்திலிருந்து
உருவாகிறாள் என்கிற முரணோ, மீராவாகப் பிறந்து சிவனிடம் செல்பவளாகத் தன்னைச் சொல்லும்
போதோ இப்படி முரண்களை புரிந்து கொண்டேன்.
ஆனாலும் அது ஒரு கை நீர் தான். இன்று சொன்னாள்
“மன்னிச்சுடு காளிதாஸ், உன் தடுப்பணைகள் என்னைத் தடுக்காது,
I won’t Write for a Book” என்று, நான் கரிகாலனும் கூட அல்லவா.. ஆனாலும் பாண்டியன்
என்பதாலும், ஏழைத் தாயின் மைந்தன் என்பதாலும் அணை கட்டுவதற்கு பதிலாக ஒரு நீரோடையைத்
தூர்வாரி, வாய்க்காலாக இணைக்கலாமா?
சொல் நதியே.
- ஜீவ கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக