வெள்ளி, 30 நவம்பர், 2018

சுஜாதாவின் எந்திரனை இரும்பு வீரனாக்கிய குக்கூ..




எப்படியும் இரண்டு நாட்களில் காசுக்கு வேலை பார்க்கும் ரெவ்யூ புஜ்ஜிமாக்கள் அமைதியாகிவிடுவார்கள். 2.0 விற்கு வந்திருக்கும் நெகடிவ் விமர்சனங்களை மறைப்பதற்காக வழக்கம்போல் ரசிகக்குஞ்சுமணிகள் தான் அவ்ளோ வசூல், இவ்ளோ வசூல் என internal audit செய்துகொண்டிருப்பார்கள்.

அறிவியல் புனைவா? ஜோக் அடிக்காதிங்க பாஸ்

இதை SCI-FI என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள், அதேநேரம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் இப்படியான சிக்கல் இருப்பதில்லை. விக்கிபயலிடம் கேட்டால் சொல்லிவிடுவான் : IRONMAN, AVENGERS போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் வேறு TRANSFORMERS போன்ற அறிவியல் புனைவு படங்கள் வேறு வகையறா என்று. இந்தக் கலவை சாத குழப்பம் தான் 2.0 படத்தின் basement weak ஆன கதை. ஆனாலும் 2.0 அதிலும் ஒருபடி மேலே போய் ஆவியெழுப்பி கூடு விட்டு கூடு புகும் காட்சிகளை எல்லாம் காண்பித்து அதையும் அப்படியே தராமல் அறிவியல் ஆக்க ஒரு டாகுமெண்டரி எல்லாம் திரையிட்டு விளக்கம் தந்து பல்லிளிக்கிறது.


சவால்களைக் கடந்ததா 2.0.? சும்மா கிச்சுகிச்சு மூட்டாதிங்க பாஸ்

படம் வெளிவரும்போதே தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தானோடு சவால் வேறு, அப்படத்தில் அமிதாப் ஒரு கிழவனாகவே வந்து அத்தனை சாகசமும் செய்திருப்பார். தக்ஸ் அருகிலென்ன தொலைவில் வைத்து கூட ஒப்பிட முடியாத திராபையான உருவாக்கம் 2.0. வசீகரனுக்கு டயலாக் டெலிவரி உள்ளிட்ட பல முடியாமைகளின் தொகுப்பாக, சிட்டி ரோபோ முதல் காட்சியில் ஓடும்போதோ, 2.0 வில்லத்தனமாக சிரிப்பதாக மெனக்கெடும் போதோ, வடிவேலுவை ஞாபகத்தில் கொண்டு வருவதாக 2.0 நாக்கை தொங்கப்போடும் காட்சியோ சில உதாரணங்கள்

திரைப்படம் காட்டும் அரசியல்

இது அறிவியல் புனைவா, சூப்பர் ஹீரோ சாகஸமா என்று விவாதங்கள் ஒருபுறம். இந்தப் புனைவு நடக்கின்ற தளம் சென்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் போல் தோற்றம் கொண்ட ஆனால் பேச்சில் மலையாள வாசம்வீசும் ஒரு கேபினெட் அமைச்சரும், அவருக்கு பாஸாக இருக்கும் மற்றொரு அமைச்சர் அடில் ஹூசைன் ஒரு காட்சியில் வசீகரனிடம் பேசும் வசனத்தில், சட்டத்தை மீறினால் பிரச்சனை ஒன்றும் வாராது ஏன்னா தமிழகத்தில் இருக்கும் 40 எம்.பீ சீட்டுகளும் நாம தான் என்று பேசுவது போல காட்சியமைத்திருக்கிறார்கள். 

பீ.ஜே.பி அல்லது பீ.ஜே.பியின் ஆதரவுள்ள ஒரு அரசு ஆட்சி அமைத்திருக்கும் தமிழகமாக அதை கவனிக்கலாம். அரசாங்க அலுவலகத்தில் பிரதமர்கள் போட்டோக்களை காட்டும் காமிரா கோணம் வாஜ்பேயினைக் காட்டும் போது வேறு காட்சிக்கு செல்கிறது. 

இங்கிருக்கின்ற திராவிட கட்சிகளின் எந்த சாயலுமற்ற அரசியல் தலைவர்கள் படத்தில் வலம் வருவது என்பது ஷங்கரின் அபரிமிதமான அதிபுனைவாக இருக்கிறது.

தாமரை மலரும் என்கிறதா ஷங்கர் – ஜெமோ – ரஜ்னி கூட்டணி !

குழந்தைகளுக்கான படமா? ஐயோ சத்யமா இல்லைங்க

எந்த விதத்திலும் இது குழந்தைகளுக்கான படமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். கோரமாக உடல் வெடித்துக் கொல்லப்படும் மனிதர்களைக் காட்டும் காட்சி ஷங்கருக்கு புதிதல்ல. அந்நியனில் இதேமாதிரி தான், ஐ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளும் மிக அருவருப்பானவை தான். இந்தப் படத்தின் சாகஸ நாயகன் 3.0 வில்லனை தனது கண்ணிக்குள் சிக்க வைக்க புறாக்களை கொல்லப் போவதாக மிரட்டுகிறது.

குழந்தைகள் விரும்பும் படங்களில் வரும் சாகஸ நாயகன் Eco System குறித்தும், அதன் தகவமைப்புகள் குறித்தும் கவலைப்படுபவனாகவும் அதற்காகப் போராடுபவனாகவும் தான் இருக்கும்.

சுஜாதாவை மட்டம் தட்டும் ஆஸ்தான பீடம் பொறுப்பேற்றும், இத்தகைய மிகத்தவறான ட்ரீட்மெண்ட்டை உருவாக்கியிருப்பது என்பது திரைக்கதை அமைப்பைப் பொருத்தவரையில் அபத்தத்திலும் அபத்தம்.

இங்கே Eco சிஸ்டத்திற்காகப் போராடும் சூப்பர் ஹீரோவை (பக்ஷிராஜன்) தந்திரத்தால் கொலை செய்யும் 2.0. எது தேவையோ அது தர்மம் என்கிற மஹாபாரத வெண்முரசு suggestions தான் இப்படியான அபத்தமான காட்சியமைப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

எதற்கு தேவையில்லாமல் இதை இங்கே பேசுகிறேன் எனில், பீடத்தின் இணையதளத்தில் தொடர்ச்சியாக வலையேற்றி வரும் சினிமா சார்ந்த ரெகமண்டெஷன்கள் தான் காரணம்.

ஆக நிச்சயமாக இது ஒரு குழந்தைகள் படம் இல்லவே இல்லை.

கிராஃபிக்ஸ் காட்சிகள் எப்படி?

ஐயோ பாவம் அக்‌ஷய் குமார்.
படத்தில் ஒரேயொரு performerஐயும் நிறுவனத்திற்கு எதிராகப் போராடும், தீய ஷக்தியாக (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல?..) மாற்றி அதனையும் பாழாக்கிய உபயம் CGக்கே.

அக்‌ஷய் குமார் பெர்ஃபார்மென்ஸ் எப்படி ?
அதான் மேலயே சொன்னனே.

அப்படியென்றால் எமி ஜாக்ஸன் ?
அதுக்கென்ன இப்போ – அதான் மதராஸப்பட்டினம் பார்த்தாச்சுல்ல

அது சரி இது ஷங்கர் படமா?
யார் இல்லைன்னு சொன்னா, சத்தியமா இது ஷங்கர் படம்தான். சுஜாதா இல்லாத ஷங்கர் படம். அதனால்தான் தேவையற்ற வகையில் ஒரு மனிதனின் ஆரா குறித்த விளக்கங்களும், பாஸிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி பற்றி கொடுத்த விளக்கங்களும் இருக்கின்றன. ’பலேபாலு பாட்டில் பூதம்’ போல, உடலில் இருந்து ஆவி வெளியேறும் ஜமீன் கோட்டை காட்சிகளையெல்லாம் ஏன் வைக்கிறார்களோ தெரியவில்லை.
இப்படியான வெறுப்பேற்றும் அறிவியல் விளக்கங்கள் சுஜாதாவை தான் மிஸ் யூ சொல்ல வைக்கின்றன.

எந்திரன் படத்தில் ஒரு காட்சி, ’சிட்டியை’ டெமோ காண்பிக்கும் போது அதை அவர்கள் ரிஜக்ட் செய்து விடுகிறார்கள். பின்னர் இரண்டு மாத அவகாசம் கேட்டு சிட்டிக்கு மனித உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் feedings நடக்கிறது. எதுவுமே ரியாக்ட் செய்ய இயலாத சிட்டியைப் பார்த்து வசீகரன் திட்டுகிறார், நொந்தபடி நடந்து செல்கையில் அவரைப் பின்தொடர்கிறது சிட்டி, திடீரென வானத்திலிருந்து சிட்டி மீது ஒரு மின்னல் வெட்டுகிறது. உடனே சிட்டியை தூக்கிவந்து சரிசெய்கிறார்கள், ஆனால் இப்போது சிட்டிக்கு உணர்வு வந்துவிடுகிறது.

சுஜாதாவுக்கு எந்த மாயாபஜார் அதிரிபுதிரியும் தேவைப்படவில்லை – ஷங்கர் எதிர்பார்த்ததெல்லாம் இப்படியான ஒன்றைத்தான். சிவாஜியில் கூட காசை சுண்டும் போது இயற்கையோ தற்செயலோ என் பாதையைத் தீர்மானிக்கட்டும் என வசனம் வரும். ஒரு வெகுஜன எழுத்தாளன் என்கிற விமர்சனத்திற்கு பின்னிருக்கும் இத்தனை perfection தான் 2.0 படத்தில் இல்லை.

“என்னைப் படைத்த கடவுள்” என்றும், ”எம்பெருமானே” என்றும் சிட்டி வசீகரனை அழைக்கும் காட்சியில் எமோஷன்ஸ்க்கு பதிலாக எரிச்சலே வருகிறது.

எந்திரன் படத்தில் செய்தது போல 2.0 வில்லத்தன சிரிப்பைக் கூட செய்ய முடியாத அளவுக்கு இருக்கும் மனுஷனை கஷ்டப்படுத்துறது உலக அளவில் 10000 தியேட்டர்களில் ஒரு தமிழ்படம் திரையிடப்படணும் என்பதெல்லாம் ஒரு தமிழனின் கனவு என்றால் தமிழன் INSOMNIA விலேயே கிடந்து அவதியுறட்டும்.

2.0 is simply a flaw.

டாட்.

ஜீவ கரிகாலன்


ஞாயிறு, 25 நவம்பர், 2018

சென்னையில் வாழும் மெட்ராஸ்வாசி (பஜ்ஜி - சொஜ்ஜி 112)

(2018 தி இந்து தீபாவளி மலருக்கு எழுதிய கட்டுரை - ஊரும் தொழிலும்)


மெட்ராஸ் என்பது சென்னையாக மாறிய பின்னர்தான் வேலைத் தேடி ரயிலேறினேன். இப்போது நான் சென்னைவாசியாக வாழ்ந்து வந்தாலும், அப்போது மெட்ராஸ்காரனாகத்தான் என் வேலையைத் தொடங்கினேன். 

சென்னையின் நீண்ட வரலாற்றில் சென்னை ஒரு தொழில்நகரமாக உருவெடுத்து வந்த, வளர்ந்து கொண்டிருக்கும் கதையில் இரண்டு தசாப்தங்களின் மாற்றங்களை என்னால் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியும். 1990களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை, Y2Kவிற்குப் பின்னால் அடைந்த அசுர வளர்ச்சி, குறிப்பாக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட ராஜிவ்காந்தி ஆறுவழிச் சாலைக்குப் பின்னரான சென்னையின் வளர்ச்சி என்பது OMR (Old Mahabalipuram Road), ECR (East Coast Road) ஆகிய பிரதேசங்களை புதிய சென்னையாக உருமாற்றம் பெறச் செய்தவை.

2007:

ஆனால் நான் மெட்ராஸ்வாசியாகவே கையில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் எனது பயோ டேட்டாவைச் சுமந்தபடி, பாரிஸ் கார்னருக்குப் பின்னே இருக்கின்ற அரசு அலுவலகங்களின் பிரதானமான சுங்க அலுவலகத்தில், யாரோ ஒரு கஸ்டம்ஸ் குமாஸ்தாவிற்கு முன்னர் காத்திருக்கும்போது 15 கி.மீட்டர் தொலைவில் தகவல் தொழில்நுட்பத்துறை தனது அடுத்த கிளைகளுக்கான வான் நோக்கிய கட்டடங்களை எழுப்ப, சதுப்பு நிலங்களில் இடம் பார்த்துக்கொண்டிருந்தது.

நான் போக்குவரத்துத் தளவாடங்கள் துறையில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே மூன்று விதமான நபர்களைச் சந்திக்க வேண்டும், கஸ்டமர்கள் – ஏற்றுமதி & இறக்குமதி நிறுவனங்கள் ஒருபுறமும், அவர்கள் பொருட்களை கையாள்வதற்கான கப்பல், லைனர் நிறுவனங்கள், கிட்டங்கி மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன் இன்னொரு புறமும், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றொரு புறமும் இருப்பார்கள். இந்தத் தொழிலில் இருக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால் பாரம்பரியமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி அல்லது கொள்முதல் செய்யும் நிறுவனங்களும் வாடிக்கையாளராக இருப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளராக இருப்பார்கள். தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு இவ்வகையான தொழில்களைப் பிரித்து வைக்கிறது. அதுவே சமூகப் பொருளாதார விழுமியங்களுடனும் இம்மாநகரைப் பிரித்துப் பார்ப்பதற்கும் இடமளிக்கிறது. இவ்வாறே சென்னையின் மூன்று வகையான அடுக்குகளைப் பார்க்க முடிகிறது. வாழ்வியல் தரம், நுகர்வுப் பண்பு, அரசியல் அல்லது பொழுதுபோக்கு இவற்றைத் தகவல் தொழில்நுட்பப் புரட்சி வெவ்வேறாகப் பிரிக்கவும் செய்கிறது, சில பிரிவுகளை உடைத்தும் போட்டிருக்கிறது.

மெட்ராஸ்:

காலணிய ஆதிக்கத்தில், மாகாணத்தின் தலைமைப்பட்டணமாக இருந்த காலத்திலிருந்து 1990-கள் வரை மெட்ராஸ் என்பது துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட மாநகரமாகவே இருந்து வந்துள்ளது. அதன்பொருட்டே கிண்டி, அம்பத்தூர், மெப்ஸ் (MEPZ) ஸ்ரீபெரும்புதூர் என்கிற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் யாவுமே அமைக்கப்பட்டன. சரக்கு அல்லது உற்பத்திப் பொருளாதாரமே மையமாக இருந்து வந்தது. மெட்ராஸின் பெரும்பான்மை மக்கள் தொழிலாளர்களே. 90களுக்கு முன்னர் வரை அவர்களது பிரதான உடை காக்கி ட்ரவுசரும், சட்டையுமே. மத்தியத்தர வர்க்கம் என்பது இன்றைக்கு இருப்பது போன்ற உயர் மத்தியத்தர வர்க்கம், குறைந்த மத்தியத்தர வர்க்கம், மத்திய மத்தியத்தர வர்க்கம் என்றெல்லாம் பார்க்க முடியாத வடிவத்திலேயே இருந்தது. இன்றும்கூட அதன் பழைய கூறுகளைப் பார்ப்பதற்கு சென்ட்ரலுக்குப் பின்னால் இருக்கும் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, மிண்ட் ரோடு, யானைக்கவுனி முதல் தம்புச்செட்டி சாலை, ப்ராட்வே, செகண்ட் லேன் பீச் வரை தென்படும் உழைப்பாளர்கள் அதன் எச்சமாகவே இருக்கிறார்கள். என்ன? அவர்தம் கைகளில் செல்போனும், வாட்ஸப்பும் மட்டுமே வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் பெரிய பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார அழுத்தங்களால் நகரின் மையத்திலிருந்து வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் மக்கள் வாழ்ந்த இடங்களில் நவீன சவுகார்பேட்டைகள் GATED COMMUNITY ஆக மாறியிருக்கிறது, அவை சென்னை என்று அழைக்கப்படும்.

2008-ல் மெட்ராஸில் வேலை செய்ய ஆரம்பித்த எனக்கு 2010-வரை கஸ்டம்ஸ் அலுவலத்திற்கு வரும்போது ஃப்ளாப்பிகளில் கோப்பினை சேமிப்பதற்கு காலாவதியான தொழில்நுட்பங்கள் அங்கே தம்புச் செட்டி ஸ்டேஷனரி கடைகளில் கிடைத்தன. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு உடனடித் தகவல்களை அளித்திட எங்களைப் போன்ற முகவர்களுக்கு ப்ளாக்பெரி செல்போன்கள் வாங்கிக்கொடுத்தார்கள். சந்தைப் பொருளாதாரத்தில் தேய்-கலாச்சாரமும் (Credit card culture/Cashless culture) சூடுபிடித்த காலம் அது. அநேகமாக பிரபல தனியார் வங்கிகள், வேலைக்குச் சேரும் எல்லோருக்கும் டை கட்டிவிட்டு 3000 ரூபாய் சம்பளத்திற்குகூட எக்ஸிக்யூட்டிவ் என விசிட்டிங் கார்டு அடித்துக்கொடுத்து முடித்த காலம் அது. அவர்கள் எல்லோர் கையிலும் கிரெடிட் கார்டுகளை கொடுத்து முடித்த திருப்தியில் ஷேர் ஆட்டோ, செல்போன் கடை எனத் தப்பிவிட, தேய்த்துப் பார்த்து சுகம் கண்டவர்கள் லோக் அதாலத் வார்டுகளில் கடன்காரர்களாக அட்மிட் ஆகியிருந்தார்கள். அசுரப் பாய்ச்சலாக தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் ஆண்ட்ராய்டு போன்களை வாங்கி உபயோகிக்க, நாங்கள் அதற்கேற்ற கொரியன் மொபைல்போன் வாங்கி கானா பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு இரயில் நேரங்களில் உலாவர பாக்கெட் நாவல்கள் பரிதாபமாக ஊசலாடிக்கொண்டிருந்த காலம் 2005-2010.

ராஜிவ்காந்தி ஆறுவழிச் சாலை வந்த நேரம் என்று சொல்வதற்கு ஏதுவாய் நிகழ்ந்த இத்தனை மாற்றங்கள், 2007 அமெரிக்க சப்-பிரைம் இஸ்யூ என்று சொல்லப்பட்ட சில முக்கிய நிறுவனங்களின் திவால் நிலை.  2007க்கு முன்னர் கடந்த பத்தாண்டுகளாய் உருவாகி வந்த உச்சத்திலிருந்து இறங்குமுகம் கண்டது. அதற்கு முந்தைய ஆண்டு பொறியியல் பட்டம் படித்தவன் – கல்வியில் சுமாரான தேர்ச்சி பெற்றே வளாக நேர்முகத்தில் தேர்வாக, அதற்கடுத்த வருடம் நல்லத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட நேர்முகத்தில் தேர்வு பெற்றும் வேலைக்குச் செல்ல இரண்டு வருடங்கள் வரை காத்திருந்தார்கள். சிலர் சிம்கார்டு விற்றார்கள். அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு வளாக நேர்முகம் நடைபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை சென்னையிலேயே பாதியாகக் குறைந்தது என்றும் சொல்லலாம். ஆனால் இதை ஒரு வட்டமாகப் புரிந்து கொள்ளும் பொருளாதார வல்லுனர்கள், எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாற்றம் இருக்கும் என்று சொல்வது நிச்சயம் ஒரு ஆறுதல்தான்.

அரசாங்கம் e-governance, Rural BPO என்றெல்லாம் நிறையவே பேசிவிட்டாலும் 2000-லிருந்து சொல்லப்படும்படியான எந்த முன்னேற்றங்களும் நிகழவில்லை. நான்குநேரி போன்ற Decentralize என்று சொல்லும் எல்லாத் திட்டங்களும் கனவாகவே இருந்து வருகிறது. மெல்ல மெல்ல தமிழகத்து இளைஞர்கள் இஞ்சினியரிங் கல்லூரிகளால் சென்னைக்கே கடத்தப்படுகிறார்கள். ஆனால் மும்பைப் போல் அல்ல. சென்னை, தன்னை விரிவாக்கிக்கொள்ளும் நிலப்பரப்பைக் கொண்டது. ஆனால், சூழல் குறித்த அக்கறை அற்ற அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த வளர்ச்சியை நோயாகத்தான் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், தினமும் காலை ஐந்து மணிக்கெல்லாம், ஓம்னி பஸ்களில் தொழிற்சாலையிலிருந்து வரும் கொசுவர்த்தி வாசனையில் பல்லாவரத்தில் தூக்கம் கலைத்து கோயம்பேட்டில் இறங்குகிறார்கள் இளைஞர்கள்.

ஐ.டி நிறுவனங்களிலேயே இப்போது மத்தியத்தர வர்க்கங்களைப் போல் உயர்தர, மத்தியத்தர, கீழ்நிலை என வித்தியாசங்கள் இருக்கின்றன. வளாக நேர்முகங்கள் குறைந்து, கட்டணம் செலுத்தி பயிற்சி பெற்றவர்களையே நிறுவனங்கள் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற இன்ஸ்டிட்யூட்களும், பயிற்சி மையங்களும் அப்படியான நிறுவனங்களில் வேலைச் செய்யும் ஆட்களாலேயே பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. அதற்கும் மேலே நிறைய உப்புமா கம்பெனிகள், ஆறுமாத சம்பளமற்ற அப்ரென்டிஸ்களாக பொறியாளர்களை அமர்த்துகின்றன. 

ஆனால் இப்போது மூன்றாம்நிலை ஊழியர்கள் பலர் ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ், ஜொமேட்டோ போன்ற வாகன ஓட்டிகளாக இருப்பது எந்தத் தனித்திறனையும் வளர்க்காத மிகப்பெரும் தவறான முடிவை எடுக்கத் தூண்டுகிறது. இருந்தபோதும் நகரமயமாதல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

2005-க்குப் பிறகிலிருந்தே உலக அளவில் நகரமயமாதல் அதிகமாகும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் இருக்கிறது எனச் சென்னையைச் சுட்டுகிறது புள்ளிவிபரங்கள். சென்னையின் மக்கள்தொகைப் பெருக்கம் 2030-ல் மும்பையைத் தொடும் என்பது, உலக அளவில் பத்து இடங்களில் சென்னைக்கு அந்தஸ்து வந்துவிடும் என்பதாகும். இதில் சரக்கு உற்பத்தி துறையைவிட, சேவைத் துறையின் பங்கே அதிகம். அதிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மிகமிக அதிகம். அதே நேரம் உற்பத்தி துறையிலும் சென்னை முக்கியமான வளர்ச்சிகளை எட்டியிருக்கிறது. ஒரகடம் இந்தியாவின் டெட்ராய்ட் (Detroit) என்று சொல்லப்படுகிறது. பிரதான வாகனத் தொழிற்சாலைகள் போக கணிசமான துணை நிறுவனங்கள் (Ancilliary units, Original equipment manufacturing units) உருவாகியுள்ளன. இவை அனைத்தும் தலைநகரத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான சென்னைத் துறைமுகத்திற்கு வலுச் சேர்ப்பவை.

ஆனால் சில தனியார் துறைமுகங்களின் வரவு, தொலைநோக்கில் சென்னையின் வணிகத்தில் கணிசமான அளவைப் பிரித்து எடுத்துவிடும் என்பதும் உண்மை. தெற்கே காரைக்காலில் பன்னாட்டு நிறுவனமான MARG துறைமுகம், காட்டுப்பள்ளி எல் & டி துறைமுகம் மற்றும் ஆந்திராவின் கிருஷ்ணப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இப்போது போட்டிப்போடத் தொடங்கிவிட்டன, அடிப்படைக் கட்டுமான வசதிகள் மிகமிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது, அதுபோக, போக்குவரத்து நெரிசலும்.

மென்பொருள் துறை இந்தியாவில் வரும்போதே பெரும்பாலும் இரண்டு துறைகளில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒன்று நிதி மற்றொன்று தளவாடங்கள் (Logistics). பல பெரிய கப்பல் நிறுவனங்கள் (உதாரணம் : Maersk) தங்களுக்கான தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் பிரிவை அவர்களே தனியாக ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆனால், மற்ற நிறுவனங்கள் முழுமையாக மாறுவதற்கு 2015 வரை ஆகிவிட்டது. தற்போது சுங்கவரி ஆணையமும் முழுமையாகக் கணினிமயமாகி விட்டது. ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் எங்கள் அலுவலகங்களின் ப்ராஸசர்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன அல்லது புதிய கணினிகள் வந்துவிட்டன.

இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து உலகின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் சென்னையின் பங்களிப்பு ஏதோ ஓர் அளவில் இருந்து வருகிறது (2007 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னரும்). உலகப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி துறையிலும், சேவைத் துறையிலும் சென்னையின் பங்களிப்பு வளர்ந்துதான் வருகிறது. இதில் சுனாமி, பெருமழைக்கால வெள்ளம் போன்ற பேரிடர்களையும் சமாளித்து மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையும் மீண்டு எழுந்த வேகம் சென்னையின் பெரும்சாதனையில் ஒன்று.

இனி, வரும் காலங்களில் பேரிடர்களைச் சமாளிப்பதற்கு நிறுவனங்கள் தயாராக BCP [Business Continuity Plan]  போன்ற திட்டங்களுக்காக நிறையவே ஃபர்னிச்சர்களை இறக்குமதி செய்கின்றன. GST (General Sales Tax), டிஜிட்டல் பணம் போன்ற சில அதிரடித் திட்டங்கள் கணிசமான அளவு சிறுதொழில் மற்றும் சில துறைகளையே கடினமாகப் பாதித்தாலும் அரசின் அறிக்கைகளில் GDP (Gross Domestic Product) புள்ளிவிபரங்கள் முன்னேற்றம் கொண்டிருப்பதாகவே காட்டுகின்றன.  என்ன ஆனாலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் சென்னையின் எதிர்காலத் தொழில்வளத்தின் குறியீடுகளாகவும் புலனாகின்றன.

சர்வமும் டிஜிட்டல்மயமாகிவிட்ட சென்னைத் துறைமுகச் சுங்க ஆணைய அலுவலகத்தில் இனி கோப்புகளை எளிதாகக் கடத்தி ஒப்புதல் வாங்க முடியுமா? என்றால், இல்லை. அதற்கென இரு விஷயங்களை முக்கியமாகச் செய்ய வேண்டியிருக்கலாம்.

டிஜிட்டல் யுக லஞ்சப் பணமாக அரசாங்க அதிகாரிகளின் க்ளப் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யலாம் அல்லது இந்தியிலாவது சரியாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

மே மதராஸி ஹெ!!




****
-ஜீவ கரிகாலன்
சென்னை.



பதில் சொல்


ஒரு நதியைப் பற்றிய கதை இருக்கிறது

மோன நிலையில் தான் அதைச் சொல்ல முடியும் எனக் காத்திருக்கிறேன்.
பஞ்சகங்கா ஸ்தலம் என்று மகாபலேஸ்வரில் டாக்ஸியை நிறுத்திய பைய்யாவுக்கு, அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டால், அவன் கடவுளை பெயர் சொன்னான். என் தம்பியோ அங்கே ஒரு ஏ.டி.எமைச் சொன்னான். டிஜிட்டல் இந்தியா என்று ஏமாந்து தடவித்தடவி ரொக்கமாகக் கொடுத்தே சிவந்த கையும், தேய்ந்து போன கார்டுமாய் என்னுடன் வந்த சகோதரன் மூன்று நான்கு ஏ.டி.எம்களில் தேய்த்த பின்னரே பணம் கிடைத்தது. கிடைத்த சந்தோசத்தில் கோயில் செல்ல மனமில்லை, அப்படியே கடைமார்கமாக நடந்து வந்தால் தொலைவில் ஒரு மைல்கல்.

ஏதோ அவளின் சகவாசத்தால், ஒரு வரலாற்று லச்சினையை அடையாளம் கண்டுகொள்ளும் ஆர்வம் இருந்தபடியால் அது ASI பகுதி என்று அடையாளம் கொண்டோம். அந்த ஸ்ட்ராபெரி பண்ணையாகி மாறிப்போன குளுகுளு நகரில், ஒதுக்குபுறமாய் வயல்வெளியில் முள் வெட்டிப்போடப்பட்டு மறைவாய் இருக்கின்ற ஸ்தலம் கிருஷ்ணா நதியின் தோற்றுவாய் என்று நாங்கள் அறிந்திடவில்லை. டாக்ஸிவாலாவுக்கு அது கடவுளின் இடம், தம்பிக்கு ஏ.டி.எம் ஸ்பாட். 

ஆனால் உண்மையில் அது ஒரு அற்புதமான நிலம். ஒரு நதியின் தோற்றுவாயில் புதுத் தண்ணீரைக் கையில் பிடித்து பார்ப்பது, எனக்கு ஒரு போதும் சாத்தியமற்ற ஒப்பீடு, அது ஒரு புதிதாய்ப் பிறந்த சிசுவை கதகதக்க ஏந்துவது போன்றது.

பாதாளக் கரண்டியில் வாளிகளைத் தேடியே கைகளில் காப்பூ பூத்த தாயின் கரங்களைப் பற்றியவனுக்கு இப்படி புது நீரை அள்ளியணைப்பது வேறெந்த ஒன்றோடும் ஒப்பிடமுடியாதது. ஆனால் இங்கே என்னைக் கொண்டுவரச் செய்தமைக்கு அந்த நதி என்னோடு பழகியது தான் காரணம். நதியைத் தெரியாதவனுக்கு இது எப்படிப் புரியும். 

மேடைகளுக்காக கையேந்தும் ப்ளாஸ்டிக் வாட்டர் பபுள் இல்லையே அவள், ஒரு தொட்டி போன்ற தடுப்பில் விழுந்து, நிரம்பி வழிந்தோடி பயணித்து அம்மலையிலிருந்து குதித்து மற்ற ஆறு நதிகளையும் சங்கமிக்கும் க்ருஷ்ணா அவள்….

அந்த நதிக்கு மழை பிடிக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை,  அவள் மழையாகவும் ஆகிறாள் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதைத் தான் ஆச்சரியமாகப் பார்க்கிறேன். அவள் புதுமையானவள் இல்லவே இல்லை, அது இந்த கோளில் முதலில் முளைத்த புல்லின் தொடர்ச்சியில் அவள் தன் வரலாற்றை இணைத்து வைத்திருக்கிறாள்.

அவளுக்கு அந்த அறிவு இருக்கிறது, அவள் நதியாக வேறு பயணிக்கிறாள். உலகியலில் அங்கங்கே ஒருசில தடுப்பணைகள் அவளுக்கு இருந்தாலும், காதாலாகிய பெரும் அணைக்கட்டையே உடைத்த அவள், ஒரு விந்தை. ஆக்ரோஷமாய் போவதேயில்லை, சலசலப்பும் தெரிவதேயில்லை. என்ன facebook account வைத்திருக்கிறாள். மலர்களை, தத்தைகளை, விஞ்ஞானத்தை, ஞானத்தை, அறிவியலை, இலக்கியமாக்குகிறாள். PRINT ON DEMAND வசதி பற்றி எத்தனை எடுத்துச்சொன்னாலும் கூட கேட்பதில்லை, அவள் ஒருபோதும் அப்படியான hardboundகளுக்கு எதிரானவள். ஆனாலும் என்ன என்று அவளோடு மோதிப்பார்க்கிறேன் ஒரு தொகுப்புக்கு.

இரண்டு கைகளால் அள்ளி முகமருகே கொண்டு செல்லும் போது அவள் என் முகத்தை பிம்பமாகக் காட்டுகிறாள் 34க்கு வயதில் 64 வயது பழைய அரசியல் அழுக்குகளைச் சுட்டிக்காட்டுவாள், ”தண்ணீர் என்று சொல்லு” என்பாள். முகத்தில் தெளித்ததும் அழுக்கு போய்விடும். ஆனாலும் நான் இந்த ambient air qualityல் தானே வாழ வேண்டும். இந்த முரண்களைப் புரிந்து கொள்ளக் கற்றுகொடுப்பவள் தான் அந்த நதி.
க்ருஷ்ணா நதியானவள் நந்தி எதிர்நிற்கும் சிவனின் இல்லத்திலிருந்து உருவாகிறாள் என்கிற முரணோ, மீராவாகப் பிறந்து சிவனிடம் செல்பவளாகத் தன்னைச் சொல்லும் போதோ இப்படி முரண்களை புரிந்து கொண்டேன்.

ஆனாலும் அது ஒரு கை நீர் தான். இன்று சொன்னாள்
“மன்னிச்சுடு காளிதாஸ், உன் தடுப்பணைகள் என்னைத் தடுக்காது, I won’t Write for a Book” என்று, நான் கரிகாலனும் கூட அல்லவா.. ஆனாலும் பாண்டியன் என்பதாலும், ஏழைத் தாயின் மைந்தன் என்பதாலும் அணை கட்டுவதற்கு பதிலாக ஒரு நீரோடையைத் தூர்வாரி, வாய்க்காலாக இணைக்கலாமா?

சொல் நதியே.

உனக்கும் மனம் இருந்ததால் நீ நதியாகினாய், நதியின் மனதிலிருந்து மழையாகினாய் பொழியும்போது ஸ்பரிசித்த சாரலிடம் கேட்கிறேன், நாம் அதுவாக மாறிவிட முடியுமா என்ன?

- ஜீவ கரிகாலன்





சனி, 30 ஜூன், 2018

ஓய்வு பெறும் சுமை தாங்கி


வெறும் ஒரு கிலோ அல்வாவை ஒரு கல்யாண வீட்டு கும்பலுக்கே பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது நான் இதுவரை பார்த்த மனிதர்களில் என் சித்தியால் மட்டுமே முடியும்.

தாய்மாமாவின் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் தான் முதலில் அதனை கவனித்தேன், அந்த வீட்டிற்கு அவள் பெயரைச் சூட்டியிருந்தார். அதற்கான காரணம் என்ன என அம்மாவைக் கேட்டபோது அம்மா சித்தியைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள், அப்போது அவள் ஒரு தொடர்கதை படம் பார்த்திருந்ததால் என்னால் அதை தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது.

சித்தியைப் பார்த்தாலே, சந்தோஷ் நாராயணனின் ராக் பேண்ட் வாசிக்கும் “நெருப்புடா…” போன்ற ஒரு ஹெவி மெட்டல் பாடல் அச்சுருத்தும். அதிகப்பட்சம் ரெண்டே வார்த்தை தான் “ சீ… நாயே” எப்பேற்பட்ட குறும்பும் வாலைச் சுருட்டிவிடும். சிறுவர்களுக்கு தான் என்றில்லை, சில சமயம் சித்தியோடு பேசிவிட்டு என் தங்கையிடம் “போடி உன் அம்மா எப்பவும் இப்படியே இருக்கா” என்று அழுத அம்மாவையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் டெரர் மனுஷியாகவே வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறாள்.
ஆனாலும் அம்மா மட்டுமே சித்தியை நெருப்பு காலத்திற்கு முந்தைய சித்தியைத் தெரிந்தவள். இருவரும் குற்றாலத்தில் மலைமீது ஓட்டப்பந்தையம் வைப்பது முதல், சுடுகின்ற எண்ணைச் சட்டியில் கைவிட்டு வடையை எடுக்கும் சாகசங்கள் போல பல எபிஸோட்கள் கதை சொல்லியிருக்கிறாள்.

குடும்பத்தில் எப்பேற்பட்ட சிக்கலுக்கும் அவளிடம் ஒரு தீர்வு இருப்பதை நான் அறிந்து கொண்ட காலத்தில் சித்திக்கு காதோரம் நரைத்திருந்தது. மிக அழகானவள். அவளது சிரிப்புச் சத்தம் பிரத்யேகமானது. அதிக நேரம் சிரிக்க மாட்டாள் ஆனால் அவளே சிரித்துவிட்டாள் எனில் அது குடும்பத்தின் உச்சபச்ச மகிழ்ச்சியின் விளைவாக இருக்கும். ஆனால் பட்டென்று அழுதும் விடுவாள், அதெப்படி குடும்பத் தேரினை இழுப்பவள் இப்படி இலகுவாக இருக்கமுடியும் என்று நினைக்காதீர்கள். அவள் தனக்கு வரும் சோதனைக்கெல்லாம் அசந்துபோவதில்லை. ஆனால் நகைக்கடை விளம்பரத்திலோ, வாஷிங் பவுடர் விளம்பரத்திலோ வரும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கோ கண்ணீர் வழிந்தோடும். மற்றபடி தன் கையில் இரண்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தும், வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைக்குச் சென்றாள். அந்த கையிலிருக்கும் நீண்டத் தழும்பு, தன் வாழ்க்கையில் அவள் செய்திருக்கின்ற நிறைய தியாகங்களின் தடயமாக இருக்கிறது.

சுறுசுறுப்பு என்கிற சொல்லைப் பொதுவாக நெல்லை மாவட்ட பெண்கள் எல்லோரிடமும் பொதுவாகக் காணலாம், அதற்கென சிறப்பு குரோம்சோமகள் இருக்குமோ என்னவோ, இன்றுவரை அந்த ரகத்திலும் சற்று கூடுதலான பிறவியாய் அவளைப்பார்க்க முடிகிறது.

அந்த காலத்தில் 26, 27 வயதுவரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அது குடும்பத்தின் மிகக் கடினமான நிலை தான்.
சித்தி என் அம்மாவின் முதல் தங்கை, தாத்தா ஒரு ஏட்டையா. ரொம்பவே ஞாயவானாக இருந்ததால், அவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள், எங்கள் அம்மாவைத் தவிர மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் என அவர்கள் படிப்பு திருமணம் எல்லாமே கேள்விக்குறியாகிட, பட்டப்படிப்பை முடித்த என் சித்தி குடும்பப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு வேலைக்கு சென்றிருந்தார். முதலில் ஒரு நாளிதழில் எடிட்டோரியலில் பின்னர் அரசு வங்கியிலும் வேலை கிடைத்தது. குடும்பச்சுமை தேர்போல உயரமாகவும் பாரமாகவும் இருக்க, அந்த தேரை தன் வேலை என்கிற வடம் கொண்டு ஒற்றை ஆளாய் பல வருடங்கள் இழுத்து வந்திருக்கிறாள்.

அதனாலேயே அவள் தனிரகமாய் வாழ வேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம்.

என்னதான் சித்தியை கஞ்சாம்பட்டி என்று பலரும் கிண்டல் செய்தாலும் அதை அவள் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கும் அவளது மறுபக்கம் தெரியும். இருவருமே அரசு உத்தியோகம் பார்த்தாலும் ஆடம்பரச் செலவு என்பது துளியுமற்ற அக்குடும்பத்தில், மற்றவர்களுக்கு உதவி என்று சொல்லும்போது மிகப்பெரிய உதவியெல்லாம் செய்திருக்கிறார், இதில் சித்தப்பாவும் ஜெண்டில் மேனாக ஸ்கோர் செய்துவிடுகிறார். குடும்பத்தினர், தூரத்து சொந்தம் என்று மட்டுமல்லாது தன்னுடன் வேலை பார்க்கும் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட இப்படி நிறைய செய்திருக்கிறார்.

தனிப்பட்ட மனுஷியாய் பார்க்கும்போது சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் உலாவும் ஒரு அசாதாரணப் பெண்.
***

நடிகையர் திலகம் படம் பார்த்த களிப்பில் சில ஜெமினிகணேசன் பாடல்களை யூட்யூபிவிட்டதில் அந்தப் பாடலைக் கேட்டேன். ஹெல்லொ மிஸ்டர் ஜமீந்தாரில் ஒரு பாடல் “காதல் நிலவே கண்மணி ராதா” என்று ஜெமினி தெரு ஓரத்தில் நின்றபடி, மாடியிலிருந்து பாடலை ரசிக்கும் சாவித்திரியைப் பார்த்து ஆடுவார். அருமையான மேற்கத்திய இசையின் அடிநாதத்தில் மெல்லிசையாகி உருவான பாடல் இது..

ஒருநாள் அந்தப் பாடலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் சித்தப்பா. சித்தப்பா ஒரு போலீஸ், ஒரு காலத்தில் அவர் சிரிக்கவே சிரிக்காத மனிதர் என்கிற கற்பிதம் இருந்தது. நல்ல உயரம் இருந்தாலும் தொப்பை இல்லாததால் மஃப்டியில் இருந்தால் போலீஸாகவெல்லாம் கற்பனை செய்ய முடியாது.

வேண்டுமானால் தென்காசியில் வாழும் யாரோ ஒரு கண்ணியவான் என்று கடந்து செல்லலாம். அன்று இந்தப்பாடலை டீ வியில் லயித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், “என்ன சித்தப்பா முதல் காதல் ஞாபகமா” என்று கேட்டுவிட, ஆமாம் என்று சொன்னார். வேறு யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள் என்று ஆர்வமாக பதிலுக்கு காத்திருந்தால், ’அது வேறுயாருமில்லை உன் சித்தி தான்’ என்றார். நீங்கள் தான் உறவினராச்சே ஏன் இப்படி ஏக்கமாக வீட்டைச் சுற்றி, வீட்டைச் சுற்றி வந்தீங்க என்று நக்கலாகக் கேட்க, ”:எல்லாம் உன்னால தான் டா” என்றார்
ஏற்கனவே உறவினரான சித்தப்பாவோடு சில ஆண்டுகளுக்கு முன்னரே பேசி வைத்திருந்ததால், திருமணத்திற்கான நிர்பந்தத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் துரிதப்படுத்த, ஏழு ஆண்டுகளாய் காத்திருந்து பிரசவத்திற்காக வந்திருந்த அம்மாவைக் காரணம் காட்டி சற்றுத் தள்ளிப்போட வேண்டும் என சித்தி சொல்லியிருக்கிறாள். பெரிய பூகம்பமே கிளம்பியிருந்தும் சித்தப்பா ஒரு ஜெண்டில்மேனாக காத்திருந்திருக்கிறார். இதற்காக அவள் திருமணம் ஒரு ஆண்டுக்கும் மேலே தள்ளிப்போயிருக்கிறது. இந்த ஜெமினிகணேசன் சாகசங்களுக்கு காரணம் நானாகிய வரலாறு ஒன்றிருக்கிறது. 

பிறப்பதற்கு முன்னாலிருந்தே பலபேரோட லவ்ஸில் குறுக்கப்புகும் பழக்கம் இருப்பதை வரலாற்றில் பதிய முடியும் போல.

***

ஆதிச் சமூகத்திலிருந்து பெண்கள் உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்தக் காலக்கட்டத்தின் பொதுபுத்திகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தளைகளைத் தாண்டி பொறுப்பேற்பவர்கள் அரிது. அப்படியானவர்கள் என்றுமே பிறரது வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து போவார்கள்.

அதே சமயம் அத்தகைய திடம் உள்ளவர்களுக்கு தான் மலை போன்ற சோதனைகளும் வந்து சேர்கின்றன. ’அமைப்பு’ என்கிற விசித்திரம் அது.
தங்கையின் திருமணத்தின் போது தங்கைக்குச் சமமாக அவளையும் நிறைய காமிராவில் பதிவு செய்தேன்.. கண்டமேனிக்கும் போட்டோ எடுக்கிறேன் என்று அவளே திட்டக்கூடும், ஆனாலும் வியூ ஃபைண்டரில் அவளது நிம்மதியை, பதட்டத்தை, சந்தோசத்தை கவனிக்கும் நொடிகளில் பெரும்பாலும்  அதை படம்பிடிக்கத் தவறினேன். ஏன் எனில் அவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கை தேர்ந்தவள்.

ஒரு நீண்ட வாழ்க்கைக்கு எத்தனை பக்குவங்கள் தேவை பாருங்கள். முதலாவது பல நேரங்களில் மகிழ்ச்சியாய் இருப்பது போல காட்டிக்கொண்டிருக்க வைக்கவும் சொல்கிறது. சில நேரங்களில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அதையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் சொல்கிறது. இரண்டாவதும் ஒரு மனிதரின் வாழ்க்கையில் சாத்தியம் எனில் வாழ்க்கை அவருக்கு அத்தனை கடினமான பயணம் செய்திருக்கிறது என்று அர்த்தம், அன்றைக்கு சித்தியிடம் அப்படியான ஒரு அமைதி இருந்தது.

நேற்றுடன் பணி நிறைவு செய்து ரிட்டையர்ட் ஆகிறாள். அதற்கான விழாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தேன். அதே ப்ராண்டட் சிரிப்புடன் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தாள். தனது வேலை மூலம் இன்று ஆறு குடும்பங்களாக இருக்கின்ற, அன்றைய ஒரே குடும்பத்திற்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவள். எத்தனையோ வலிகளையும் சோதனைகளையும் கடந்து தன் பணியை நிறைவு செய்துவிட்டாள். இன்றைக்கு காலை அந்த அவசர கால உப்புமா (அவளது உப்புமா என் ஃபேவரைட்) செய்யத் தேவையில்லை என்றாலும், செய்வதற்கும் காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எழுதத் தெரிந்தவன் என்கிற ஒரேயொரு தகுதி மட்டும் உடையவனால் என்ன செய்ய முடியும்.

நீ வைத்த சீனித்தண்ணிக்கு நன்றியும், நலமோடு வாழ பிரார்த்தனைகளும்.

Stay calm and long live chithi!! Love u