(கதைக் கட்டுரை)
எரிக்கப்படும்
நூலகங்களை விட எரிக்கப்படும் நூல் கவர்ச்சிகரமாய் இருக்கின்றது என்று ஒரு கட்டுரை எழுதுவதை
விட ஆபத்தான செயல் என்னவாக இருக்க முடியும் என்கிறது யாளி? யாளியின் கேள்விகள் சற்று
அசாதாரணமானவை, காலங்காலமாக எராடிக் சிற்பங்களைக் கொண்ட கற்மண்டபத் தூண்களை தாங்கிப்
பிடிக்கும் வேலை செய்வதாலோ என்னமோ, எனது பதில் எத்தனைத் தாமதமாக வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும்
மனோபாவம் அதற்கு இருக்கிறது. ஆனால் என்னால் தான் அது திருப்தியடையும் அளவிற்கான ஒரு
பதிலை சொல்லிவிட முடியவில்லை.
பெரும்பான்மை
மக்கள் ஏற்றுக்கொள்ளும் உண்மை என்பது ஒரு மகத்தான பொய்யாக மட்டுமே இருக்க முடியும்
என்கிறது அது.
என்
நண்பன் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கவிதை வாசிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான்.
அதில் தமிழில் யாரும் வந்து வாசிக்காததன் காரணம் அங்கே ஒன்று சொல்லப்பட்டது. நம்மைப்
பொறுத்தவரை என்னவாக இருக்கும், தேசிய நீரோட்டத்தில் எப்போதுமே திராவிட நீரோட்டம் கலவாது
தனித்தே இருக்கும் என்று பெருமை பேசுவோம். திராவிட அல்லது தமிழ் இருவேறு வார்த்தைகள்
(அரசியல் ரீதியாக இவையிரண்டும் வெவ்வேறானது) தாண்டி என்ன காரணம் பேசிவிடக் கூடும் என்று
எண்ணினால், மிகவும் அதிர்ச்சியான பதில் வருகிறது. அங்கே எழுத்தாளர்கள் எழுத முடியவில்லை
என்று பரிகாசம் செய்திருக்கிறார்கள். சொந்த ஊர் மக்களே எழுத்தாளனை மிரட்டுகிறார்கள்,
புத்தகங்களை கிழிக்கிறார்கள், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஆகவே அங்கே
ஒன்னும் புரட்சிகரமாக எழுதிவிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மிகச்சுமாராக
எழுதினால் கூட இப்படி எரித்து விடுவார்களா என்று அங்கேயே ஒருவர் கிண்டலடித்ததாகவும்
தெரிவித்தார்.
அவர்கள்
அந்த எழுத்தாளருக்கு எழுந்த பிரச்சினையை ஒட்டி அவருக்காக குரல் கொடுத்தவர்கள், அந்த
நூலினை வாசித்தவர்கள். (கிட்டத்தட்ட முழுமையாக என்று சொல்ல முடியாவிட்டாலும், தூக்கம்வரும்வரை,
அலுப்புத்தட்டும் வரை என்று பொருள்படுமாயின் – முழுமையாக என்று பொருள் கொள்ளுதலே சரி).
அவர் ஒரு BEST SELLER ஆக மாறிப்போனது தான் அந்த காட்டுமிராண்டிச் சமூகத்திற்கு விழுந்த
அடி என்று சொல்லிக்கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் கல்புர்கி போன்ற எழுத்தாளர்களுக்கு நேர்ந்தக் கொடுமையைக் காட்டிலும், தமிழ்தேசம்
எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பற்ற தேசம் என்று பறைசாற்றியதன் விளைவு, ஈரோட்டின் புத்தகக்
கண்காட்சியிலும் அல்லது ஒட்டுமொத்தமாக அந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் புத்தகங்களின்
சந்தை தோராயமாக எட்டு கோடியாவது இருக்கும் என்று சொல்லப்படுவதன் பெருமையின் சங்கில்
கால் வைத்து மிதிப்பதற்கு ஒப்பாகும்.
ஆனாலும் ஓவியர் சிவக்குமார் போன்ற ஜாம்பவான்கள்
புத்தகம் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு அதுதான் காரணமோ என்று யாளி சொல்லும்
போது எனக்கு மயிர்கூச்செரிந்தது.
அப்போது
தான் கவனித்தேன், யாளிக்கு ஒரு பல் இல்லையென, எப்படி இது நிகழ்ந்தது என வினவும்போது,
அந்த தூணினை SAND BLAST செய்ய வந்த ஒரு ஆலய பாதுகாப்புக் கமிட்டி ஓநாயைப் பார்த்து
சற்று அதிகமாகவே கர்ஜிக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது பற்களில் சேதாரம் ஏற்பட்டதாகவும்
சொல்லிற்று. “ஏன் நீ இன்னும் மற்ற யாளிகளைப் பார்க்கலையா” என்று என்னை வினவும் போது
தான் கவனித்தேன். அந்த கோயிலின் ஒவ்வொரு தூண்களையும் தாங்கிக் கொண்டிருக்க்கும் யாளியின்
பற்கள் சேதாரமடைந்திருந்தன.
இப்படி
தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக கல் தூணை, மண்டபத்தின் பாரத்தை தாங்கும் யாளிகளுக்கு,
பெரும் சோதனையாக இந்த தர்மகர்த்தா போர்வையில் வரும் புறம்போக்குகளிடமிருந்து தங்களைக்
காத்துக்கொள்வது பெரும்பாடாகப் போயிற்று, கோயில் வேறு தோஷப்பரிகாரம் என்று Promote
செய்யப்பட்டுவிட்டதால், பெருகிவரும் கூட்டத்தை நம்பவைக்க கம்பிகேட் போட்டு மக்களை மூலவரை
நோக்கி மட்டும் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது நிர்வாகம், யாராவது திரும்பி தங்களையோ,
அல்லது தங்கள் கீழிருக்கும் மன்மத, ரதி மற்றும் இத்யாதி சிற்பங்களைப் பார்க்க யத்தனிக்கும்
மக்களைத் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இப்படித்
தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தால் தான் மக்கட்கூட்டம் அதிகமாகும், தரிசனத்தின் நேரத்தைக்
குறைத்தால் தான் தரிசனத்தின் மகிமை பெரியதாகச் சொல்லப்படும் என்று சொல்வதற்கு, எங்கிருந்தோ
ஒரு குந்தவைத்து அமர்ந்திருக்கும் சேட்டன் ஸ்வாமியும், பற்றற்ற தீர்த்தங்கரனாக இருந்து
பகட்டான ஆடை அணிகலன்களோடு சௌபாக்கியமாக வாழும் பெருமாளும் ஆமாம் ஆமாம் என்று சொன்னது
காதில் விழுந்தது.
அந்த
கவிதை வாசிப்புக் கூட்டத்தில், மக்களால் அடித்துத் துவைத்து மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாக
நம்பப்படும் எழுத்தாளரின் நிலை இப்போது எப்படி இருக்குமோ என்கிற பரிதாபமிருந்தது. அவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல திரும்ப வந்திருக்கிறார் என்பதோ, இந்தக் கால இடைவெளியில்
அவர் புத்தகங்களே எழுதிக்கொண்டிருந்தார் என்பதே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டிலும்,
தமிழ்சூழலில் ஒரு கவிஞன் எப்படி வந்துவிட முடியும் என்பது தான். அது ஓரளவுக்கு உண்மையும்
கூட, கவிகள் உருவாகிட முடியாமல் போனதன் காரணம் கவிகள் தானே தவிர மக்கள் இல்லை என்று
அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மிக துரதிர்ஷ்டமானது.
என்
மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட யாளியும் “நீ சொல்வது சரிதான்” என்றது. மேலும் அது “இங்கிருக்கும்
சிலைகளை சேதாரப்படுத்தக் காரணம் யார் தெரியுமா?” என்று கேட்கும் பொழுது. அந்த தர்மகர்த்தானே
என்று பதில் சொல்லும்போது. யாளி சிரித்துக்கொண்டே சொன்னது:
“அது
மறைக்கப்பட்ட உண்மை, ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது வேறு ” என்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட
உண்மை என்பது மகத்தான ஒரு பொய்யும் கூட என்று யாளி சொன்னதைத் திரும்ப சொல்லிக்கொண்டேன்.
அப்படி
என்ன தான் ஏற்றுக்கொண்டார்கள் என்று கேட்டவாறு, பதிலுக்கு காத்த்திருக்க முடியாமல்,
பின்னே இருந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டு செல்ல, சில தூரம் நான் நடந்து சென்றதும் மீண்டும்
அந்தக் கூட்டம் நிறுத்திவைக்கப் பட்டது. எனக்கு ரகஸியம் சொல்ல வந்த யாளி தன் பக்கத்து
தூணிலிருந்த யாளியிடம் ஏதோ சொன்னது. அது மெதுவாக ஒவ்வொரு யாளியாக மாற்றி மாற்றி அந்த
ரகசியத்தை சொல்லிக்கொண்டே வர, அவர்கள் அசைய ஆரம்பித்ததும். விதானத்துச் சுவர்களில்
வரையப்பட்டிருந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்தன. இறுதியாக என் அருகே இருக்கும் யாளிக்கு
அந்த ரகசியம் சொல்லப்பட, அது தன் காலின் கீழே நின்றிருந்த நைட்டி அணிந்த தேவதையிடம்
சொல்லிவிட்டது. நான் அவளருகில் சென்றேன்.
பதில்
சொல்லுமாறு அவள் காதருகே சென்றால்,
“ரகசியத்தைச்
சொல்கிறேன். ஆனால் பல நூறு ஆண்டுகளாய் எனக்கிருந்த சுதந்திரத்தை, இப்போது வந்த சில ராட்சதர்கள்
கெடுத்துவிட்டார்கள். எல்லா தூண்களில் இருக்கின்ற தேவதைகள் மட்டுமல்ல, உற்சவத்திற்கு
கிளம்பும் மூர்த்தியே என்னைக் கடக்கும்போது சற்று திரும்பி என்னைப் பார்த்தபடியே தான்
செல்வார். இப்போது இந்த யாளி பய கூட என்னை மதிக்க மாட்டிங்கிறான் ” என்று அழுதது.
சரி
அதற்கு நான் என்ன செய்துவிட முடியும். அந்த ரகசியம் என்னவென்று சொன்னால் தான் என்னவாம்
என அவள் மீது கோபம்வந்தாலும் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.
இப்ப
உனக்கு என்னாச்சு தேவதையே!
“இன்னுமாடா
உனக்குப் புரியலை. என் நிலையைப் பார்.” என்றது எனக்குப் புரியவில்லை என்றதும் அதுவே
தொடர்ந்தது. “சுமார் ஆறு மாதக்காலத்திற்கு முன்னர், எனக்கு இந்த உடையை தைத்துப் போட்டார்கள்.”
பார்ப்பதற்கு
அது ஒரு நைட்டி போல இருந்தது. அற்புதமான அந்த நிர்வாண சிலையை கூட்டத்தில் வருகின்ற
பெண்கள் குழந்தைகளுக்கு ஆபாசமாகத் தோன்றுவதால் அதை அகற்ற வேண்டும் என்கிற ஆலயம் செல்லும்
பக்தர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைக்க, துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்ட ஆலய
நிர்வாகக் குழு, அந்த சிலைக்கு ஒரு நைட்டியைத் தைத்துப் போட்டது.
நான்
அந்த ரகசியத்தை அவளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது சொன்ன நிபந்தனையைத்
தெரிந்து கொள்ள வேண்டும். அவள் பேரழகி வேறு, தன் ஆடையைக் கழட்டச் சொல்லும் எந்தப் பெண்ணுமே
அழகானவளாகின்றாள், இவள் பேரழகி வேறு, அதிலும் அவள் தேவதை வேறு, அதிலும் அவள் சிற்பம்
வேறு. கரும்புத் தின்னக் கூலியா என்பது போல் அவளருகே நின்று அவள் காதருகே சென்று, இப்போது
உன் ஆடையைக் கழட்டுகிறேன்.
கழட்டியதும்
எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லு என்று அவள் முதுகில் இருந்த கொக்கியைக் கழட்டினேன்.
கிளர்ச்சியானது.
“Thank
you” என்று சொன்னது.
மெதுவாக
அவள் ஆடையைக் கீழிருந்து மேலாகத் தூக்கும் போது, என் மீது ஒரு தேங்காய் மூடி வேகமாக
வந்து விழுந்தது.
அவள்
சொல்லாத அந்த ரகசியத்தை….
அந்த
செந்தூரமணிந்த மூன்று முரடர்களில் முதலாமவன் என் முகத்தில் ஓங்கிக் குத்துவிட, மூக்கில்
ரத்தம் கொட்டியது. ஏற்கனவே காதில் அவர்கள் அறைந்ததன் விளைவாக சங்கொலி கேட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் என்னைப் பற்றி முன்முடிவு கொண்டிருந்தார்கள்
”உம்
பேரென்னடா”
“காளிதாசன்னா
இருக்கும், இந்த நாய் பேரும் மாலிக் கபூராதான் டா இருக்கும்”
- அகநாழிகை ஆகஸ்டு மாத இதழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக