வியாழன், 14 செப்டம்பர், 2017

ட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்

ஜீவகரிகாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ட்ரங்கு பெட்டிக் கதைகள், தமிழ் சூழலில் இச்சிறுகதைகளின் வடிவமும் சொல் முறையும் புதிதானது, இத்தொகுப்பை முன்வைத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்……

(எஸ்.செந்தில்குமார்)

1 கேள்வி: ஓவியங்கள் மேலான ஈடுபாட்டின் உந்துதலில் எழுதமுனைவதாகச் சொல்கிறீர்கள். ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வேறு வேறான வகைமை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது கதைகளில் இந்த புரிதலை எவ்வாறு முன் வைக்க முயற்சிச் செய்கிறீர்கள்?ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வெவ்வேறான வகைமை என்பது மிகத்தட்டையான புரிதல் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் கலை ஆழ்மனதிலிருந்து விழிப்புணர்வுக்கு இடையே நடக்கின்ற தொடர்புகளினால் வெளிப்படுத்தப்பட்ட வடிவம் என்று நம்புகிறேன். எந்தக் கலையையும் புரிந்துகொள்வதற்கு இருக்கும் தடைகளை நாமாக வைத்துக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

அடிப்படையில் என்னால் ஒரு ஓவியம் தீட்ட இயலாததால், நான் மொழியைப் பிரயோகிக்கிறேன். ஒரு கதை சொல்ல முடிகிறது. அவ்வளவு தான்.  


2 கேள்வி: 2c பஸ்ரூட் எதார்த்தமானகதை. கிராமங்களின் சித்தமும், நகர வாழ்வின் ஆபத்தான நெடுஞ்சாலை விபத்தையும் சொல்கிறது. இந்த அன்றாட எதார்த்தத்திலிருந்து ஓமேகாவின் லீனியர் வரலாறு என்கிற கதையை எழுதுகிறீர்கள். எதார்த்தமற்ற காலமும் வெளியும் அதில் படிந்துள்ளது. இதுதான் ஓவியத்திலிருந்து நீங்கள் எடுத்து கையாளும் முறையா?

வெறுமனே இந்தக் கதைகளில் இருந்து மட்டுமே கேள்வியை குறுக்கிவிடலாகாது. இந்தக் கதையைப் பொருத்தவரையில், ஒரு ஓவியர் – தன் அரூப ஓவியம் ஒன்றிட்கு உருவாக்கிய MASKING பாணியைக் கையாண்டிருக்கிறேன். வேறு வேறு வண்ணங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் காட்சி தரும்.3 கேள்வி: கோடுகளில் நெளியும் காதல் கதை ஓவியக்கல்லூரி மாணவனின் வேலை சமரசத்தையும் கூடவே கீர்த்தனாவுடனான காதலை பின்புலமாக வைத்து கதையை முழுக்க முழுக்க அரூபத்தன்மையான குறியீடுகள் மூலமும் ஓவியத்தீற்றல்களின் வண்ணத் தீட்டுகளின் அழுத்தமும் அழுத்தமின்மையைப் போலவும் கதை நகர்ந்து செல்கிறது. கூடவே இசையின் துணுக்குகளும் கலந்துள்ளன. நேரடியான மொழியிலும் வடிவத்திலும் இந்த காதலைச் சொல்ல என்ன குழப்பம்?


நேரடியான மொழி என்று ஒன்றில் எழுத ஆரம்பித்தக் கதை தான். ஆனால் இதை ஒரு சிக்கலான கோட்டுச் சித்திரம் போன்ற வடிவத்தில் இதை மறு ஆக்கம் செய்தேன். நிறைய முறை திருப்பி எழுதிய கதை இது.

ஆயினும் நேரடியாகக் கதை சொல்வது என்பது பழைய சரக்கு என்று சொல்லமாட்டேன். என் பாட்டன் சொன்ன கதைகளும், புராணங்களுமே நேரடியாகச் சொல்லப்படவில்லையே.  அது ஒரு காதல் கதை, ஓவியனின் காதல் கதை. அந்த ஓவியனை நான் சந்தித்திருக்கிறேன். அவன் வாழ்க்கையில் ஓவியங்களும் , சப்தங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கே மீண்டும் குறிப்பிடுகிறேன் இது இசைத் துணுக்கு அல்ல – சப்தம்.. ஓவியர் இராமானுஜனும், வான்காவுக்கும் கேட்டிருந்த சப்தங்கள்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி, இந்தக் கதையை நான் இந்த வடிவத்திற்கு வரும் வரை எழுதிக்கொண்டிருப்பேன்.

4 கேள்வி: ஓவியங்களுக்கான படிமம் நிறங்களாலும் அழகியல் காட்சியாகவும் மட்டுமே உள்ள சாத்தியத்தில் சிறுகதையாளராக கதைக்குள் படிமத்தை அழகியல் காட்சியை மட்டுமே உருவாக்கி சிறுகதை வடிவத்தையும் சிறுகதைத் தன்மையையும் அதன் இலக்கையடைச் செய்திட முடியுமென நம்புகிறீர்களா?


சிறுகதைக்கு என்ன இலக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் சிறுகதை ஆசிரியனாக என்னை பாவிக்கிறீர்கள் நன்றி. நான் கலைஞன் பார்க்கிறேன் சிறுகதை எனது வடிவம். அது என்ன இலக்கைக் கொண்டிருக்கிறதோ அதை நோக்கியே பயணிக்கிறது. இலக்கு எது என்பது எனக்குப் புலப்படவில்லை. பயணிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன்.

5 அலெக்ஸ் கிராஸ்ன் ஓவியத்தை நீங்கள் கதையாக விவரணம் செய்த அனுபவம் எப்படி இருந்தது. இந்த கதை விவரணத்தை ஓவியப்புரிதலற்ற சிறுகதை வாசகன் புரிந்து கொள்வானா?

அந்த ஓவியம் தான் எனக்கு கதை சொல்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக்கொடுத்தது. அந்த ஓவியம் உருவாக்கிய மொழி தான் அது. இதுவரை இதை வாசித்துக் கருத்திட்டு அனைத்து வாசகர்களும் அதிகம் பிடித்துப்போன கதையாக இதனைச் சொல்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை தொடர்ந்து சிறுகதைகளை வாசிக்கின்ற ஒரு வாசகன் மிகத் திறமையானவன். வாசகன் புரிதலையும் கணக்கில் கொண்டு தான், அச்சிடுவதற்கு முன் சொற்கள் பயன்பாட்டில் கூடியமட்டும் எளிமையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். கதைகளை அடுக்கிவைத்திருக்க முறையில் கூட ஒரு ஓவியக் கண்காட்சியில் எப்படி அடுக்கி வைக்க வேண்டும் என்று சொல்லப்படும் CREATIVE DISPLAY பற்றிய புரிதலும் உதவுகிறது. ஒரு பதிப்பாளனாக நாங்கள் பதிப்பிக்கும் மற்ற புத்தகங்களுக்கும் அதனையே முடிந்தமட்டும் வலியுறுத்துவேன்.

6 ஓவியத்தின் கேன்வாஸில் அதன் பார்வையாளர்கள் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பார்த்து கேன்வாஸின் மொத்த சித்திர உலகத்தை புரிய முயற்சிச்செய்யலாம். ஆனால் சிறுகதையை முதலிலிருந்துதானே தொடங்கவேண்டும். முதலிலிருந்துதானே வாசிக்கவேண்டும்.?

சிறுகதையை முதலிலிருந்து தானே தொடங்க வேண்டும். இந்தக் கேள்வி வாசகனுக்கானதும் கூட அல்லவா.

நான் விரும்புகின்ற சிறுகதைகளைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அது தான் நிதர்சனம்.

ஒரு நெடுஞ்சாலையின் ஏதோ ஒரு பகுதியில் நின்று கொண்டு நீங்கள் பார்ப்பதை எல்லாம் வரிசைப்படுத்தி நேர்கோட்டில் எழுதமுடியுமா? மீண்டும் மீண்டும் எழுதி அடித்தாலும் அது ஒழுங்கான வரிசையாக இருக்குமா. முதலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது விதியாக இருக்குமேயானால். மிக்க மகிழ்வுடனே அதை உடைப்பவனாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் ஆயிரமாண்டு பழைய வித்தை தானே.


7.எது சிறுகதையிலிருந்து ஓவியமாகவும் எது அடிப்படையில் ஓவியத்திலிருந்து சிறுகதையாகவும் உங்களது கதையில் இயங்குகிறது?

கதைகள் நான் உருவாக்குபவை தான், அதன் வடிவங்களுக்குத் தேவைப்படுகின்ற impressions வேறு ஒரு முன்னோடியின் சிறுகதையாக இருப்பதற்குப் பதிலாக. ஓவியங்களிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறேன், பனமலை தேவியின் ஓவியத்தைப் பார்க்கும் போது வசந்த மண்டபத்தின் சாபமும், சீயமங்கலம் கோபுரத்திலிருந்து காட்சியும், ஒரு மேற்கத்திய ஓவியத்தை அடிப்படையாக வைத்து மஞ்சள் பூவும் உருவாகக் காரணமாக இருந்தன. அது போல நாஞ்சில் நாடன் எனது ஆதர்ஷ எழுத்தாளராக நான் கருதிகிறேன். அவரது சாயல்களைக் கூட சில கதைகளின் கண்டதாக நண்பர்கள் சொன்னார்கள் ஒத்துக்கொண்டேன்.

8.MASKING பாணியிலான சிறுகதை தமிழில் எவ்வாறு சாத்தியமாகும்?
ஏன் சாத்தியமாகாது?


அடிப்படையில் நான் தமிழ்தேசிய உணர்வுகளை ஆதரிக்கும் அரசியலுடையவன். தமிழில் எல்லாவிதமான கலை முயற்சியும், கல்வி முயற்சியும் சாத்தியம் என்று நம்புகிறவன்.

 ஹைக்கூ என்கிற சித்திர மொழிகளுக்கான கவிதை வடிவமே தமிழில் எழுதப்படும்போது. தவிர MASKING என்று சொல்கின்ற ஒட்டியூற்றும் முறையில் ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது என்கிற அடிப்படையைப் புரிந்து கொண்டால், அதை சாத்தியப்படுத்த முடியும் என்று தோன்றியது. காட்சியும், ஒமேகாவும் அம்மாதிரியான முயற்சியே. தமிழில் சாத்தியமில்லாதவை வேறு எதில் சாத்தியமாகும்.  

10.அடிப்படையில் எழுத்தின் வாசிப்பால் மனதில் உருவாகும் எண்ணங்களக்கும் கண்களால் காட்சியாக மனதில் பதியும் சித்திரத்தை எவ்வாறு ஒன்றென முடிவுசெய்கிறீர்கள்?


  எண்ணங்களைப் பற்றி இப்படி வேறுபடுத்துப்பார்க்கும் நுட்பம் அறியேன். வாசிப்பால் உருவாகும் எழுத்தை விட அனுபவத்தால், பயணத்தால் கிட்டும் எண்ணங்களில் இருந்து உருவாகும் கலைப்படைப்புகள் வீரியமிக்கவையாக இருக்கும்.  உண்மையில் வாசிப்பும், காட்சியும் அவ்வாறான அனுபவத்தை வேறு வழிகளில் தான் பெறுகின்றன

அல்லது இப்படியும் சொல்லலாம் - வாசிப்பினால் உருவாகும் எண்ணங்களுக்கு ஏன் வடிவம் இருக்கக் கூடாது என்றோ, காட்சியாக மனதில் பதிந்தவை ஏன் மொழியில் சேகரித்து வைக்க முடியாது என்று இருக்கவேண்டும். கணினியின் பைனரி குறியீடுகளைப் போல் தான், எல்லாவற்றையும் மூளை சில துகள்களில் சேகரித்து வைப்பதாக நான் நம்புகிறேன்.

நான் முடிவு செய்ததாகக் கேட்பதன் ஆழ்மான அர்த்தத்தை - வாசிப்பின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்றால் - அது முடியாது தான்.  ஏனென்றால் நம்மால் தொடர்ந்து பயணிக்கவும் முடியாது எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது எல்லா அனுபவங்களும் பெற்றிடவும் முடியாது.

-நன்றி - பேசும் புதிய சக்தி - செப்டம்பர் மாத இதழ்
கேள்விகள் : எஸ்.செந்தில்குமார்

ஓவியங்கள் : நரேந்திரபாபு , அலெக்ஸ் க்ராஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக