வெள்ளி, 31 மார்ச், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 2

நான் அதுவாக இருக்கிறேன்
ஜீவ கரிகாலன்


ந்த ஒரு விவாதத்திலும் அவனால் ஒரு கோட்பாட்டினை உருவாக்க முடியும். எப்போதும் அவன் தானே இறுதியில் ஏதோ ஒன்றை சொல்லும் அந்தஸ்த்தைப் பெற்றவனாக இருக்கிறான். அவன் நான் முந்நூற்றெம்பது மாதங்களாக முயற்சித்துப் பிடித்த ஒரு பட்டாம்பூச்சியைப் பற்றிய கதையொன்றைச் சொன்ன போது. அவன் மூன்னூறு பட்டாம்பூச்சிகள் பற்றிய கதை ஒன்றை எழுதி முடித்து இருப்பான். அவன் எனக்கு விகாரமாகத் தெரிவான் அப்போதெல்லாம். யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று என்னை தண்டித்தால், நடித்துக்கொண்டே நான் அவனைத் தேர்வு செய்வேன். ஆனாலும் அவன் என்னை மிஞ்சியவன் என்று சொல்வதில் முதல் ஆளாகப் பெருமை படுகிறேன்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல, பயணம், உடை, நாகரீகம், சினிமா, கதை, காதல், உடல் என எல்லாவற்றிலுமே அவனோடு நான் சற்றே அல்ல. சற்று கீழேயே இருப்பவன். அநேகமாக நான் யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றது புலப்பட்டால் உங்களுக்குத் தெரியும் அவன் எத்தனை மேலானவன் என்று. அதே போல அவன் யார் என்று தெரியாவிட்டாலும் உண்மை இது தான் அவன் என்னைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் மேலானவன் என்று.

ஒருவேளை இதைச் சொல்வதால் அவனுக்குத் தெரிந்து போய்விடுமோ என்கிற அச்சமிருந்தாலும் அதனால் என்ன என்று தோன்றுகிறது. பாருங்கள் சகமனிதன் மீது வைக்கின்ற பொறாமைக்கு தான் எத்தனை மெல்லிசான ராகமிருக்கிறது என்று.

உண்மையில் அவனுக்கு ஒருநாள் வேலை போய்விட்டதாக வருத்தத்துடன் சொன்னபோது, நான் பட்டாம்பூச்சிக்காக அலைந்து கொண்டிருந்தேன். மிகுந்த மனவுளைச்சலா என்று தெரியாது, அவனுக்குள் அவநம்பிக்கையும், வெறுப்பும், ஏமாற்றமும் நானோ ட்யூப்ஸில் சாக விரும்பாத கேன்ஸர் கிருமியாக பெருகிவருகிறது. அந்தப்பயலுக்கு மனதிடம் கொஞ்சம் அதிகம் என்பதால், அவன் தாக்குப்பிடிப்பான் என்று அவன் அழைக்கும் போதெல்லாம் நான் பட்டாம்பூச்சி பிடித்தபடி இருந்தேன்.

அவனுக்கு வேலை பறிபோனதில் இருந்த துக்கத்தை விட, அவனது நிலைமை தன் வீட்டிலுள்ள அம்மா அப்பாவிற்குத் தெரிந்து போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது. தன் பயத்தைப் பற்றி இரவில் சொல்லும் போது கூட பட்டாம்பூச்சியை பிடிப்பதாகக் கனவு கொண்டிருந்தேன். ஒருநாள் கிட்டதட்ட பட்டாம்பூச்சியைப் பிடித்தேன். அடுத்த நாள் அதுவே என்னை பிடித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அடுத்த நாள் அதனிடமிருந்து விடுதலை அடைய வேண்டுவதாக உணர்ந்தேன். அது என்னை நெருக்கிப்பற்ற ஆரம்பித்தது. பட்டாம்பூச்சியின் பிடியைத் தளர்த்த அவனிடம் யோசனை கேட்டேன், அவன் தன் வேலையால் வந்துகொண்டிருக்கின்ற பிரச்சினைகளை விட, தன் அம்மாவிடம் தன் நிலையை மறைப்பதைப் பற்றி மிகுந்த மனச்சோர்வடைந்ததாகத் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் என் பட்டாம்பூச்சியைப் பற்றிய என் புலம்பல்களைக் கேட்டுக்கொண்டான். பட்டாம்பூச்சியின் இயல்புகளைப்பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்ததும். அவன் மீது வழக்கம் போலவே எரிச்சல் வந்தது.

ஒரு நாள் அந்தப்பட்டாம்பூச்சி தன் வேலை முடிந்துவிட்டதாகவும், கிளம்பிவிட விரும்புவதாகவும் சொல்லிற்று, நான் அவனிடம் விழுந்தடித்து ஓடி என் கவலைகளைச் சொல்ல ஆரம்பித்தேன். அவன் அத்தனை கவலைகளோடும் மிகவும் பொறுமையாக என் புலம்பல்களைக் கேட்டு, பட்டாம்பூச்சியின் இயல்பினைச் சொல்ல ஆரம்பித்தான். அது லார்வாவாய் இருந்ததை நீங்கள் உணருங்கள் என்றான். நீங்கள் ஒரு மலரென்று உங்களை நினைத்துக்கொள்ளுங்கள் என்றான் . அந்த உதாரணம் என்னை குபீரென சிரிக்க வைத்தது. அவன் வசீகரமாகத் தெரிந்தான், அவனது கவலை குறித்துக்கேட்டேன். பட்டாம்பூச்சியை வழியனுப்பிவிட்டு வரச்சொன்னான்.

அப்படியான ஒரு நாளில், பாரமற்றும், பாரமாகவும் அவனிடம் வந்து சேர்ந்தேன். அவன் மிகவும் மனவுளைச்சலோடு தென்பட்டான். இன்று அவன் என்னை சந்திததும் என் நிலையைப் புரிந்துகொண்டதாய் கேள்வியெழுப்ப வந்தவனை நான் இடைமறித்து அவனது பாரத்தைக்கேட்டறிந்தேன். வேலையற்ற நிலையில் வீட்டிற்குப் பணமனுப்ப முடியாததைச் சொல்வதற்குத் தவித்தான். நான் அவனை வீட்டிற்குப் பேசுமாறு சொன்னேன். பணித்தேன். கட்டாயப்படுத்தினேன். சொன்னான்.

அவன் குரல் தளுதளுத்தது. அவனிடமிருந்து முதல்முறையாகக் கேட்கும்பொழுது சந்தோஷமாக இருந்தது. என் மீதே எரிச்சலாகவும் இருந்தது. அவனிடம் அம்மா என்ன சொன்னார்கள் என்றேன்.

அவனம்மாவும் அவனைப்போலவே உளவியல் ரீதியாக எதையும் முன்கூட்டியே புரிந்துகொள்பவர்கள் என்று சொல்லியிருக்கிறான். அப்போதும் அம்மா அவன் சொல்லவந்ததை முன்கூட்டியே புரிந்து கொண்டார்கள் என்றான். அவனுக்கு பாரம் இறங்கியதாகச் சொன்னான்.


அப்போது என்னை ஆச்சரியமாகப் பார்த்தவன். பின்னர் நான் எப்படி பட்டாம்பூச்சியாக மாறினேன் என்று என்னிடம் கேட்டான். அவசர அவசரமாகக் கண்ணாடியைத் தேடினேன். ஆம் உண்மை தான். இப்போது அவனைத் தேடினேன், அவன் ஒரு சிறுபுள்ளியாகத் தெரிந்தான். 

-  

வியாழன், 30 மார்ச், 2017

வீணாய்ப் போனவர்களின் கதை - 1


லெமன் ஜூஸ்

யுகாதித்திருநாள் அன்று சென்னையே விழாக்கோலம் பூண்டது என்று சொன்னாலோ, எழுதினாலோ காழ்ப்புணர்வுடன் தமிழ்தேசியத் தூய்மைவாதி என்று காழ்ப்புணர்வுடன் லைக்கிடும் என்று மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சாப்பிட்ட ஆம்லேட் வயிற்றினுல் தனித்தே இருப்பதன் சோகத்தை ஏப்பமாகப் பாட ஆரம்பித்ததால். ஒரு கடையில் எழுமிச்சை சாறு குடிக்க, வண்டியை ஓரங்கட்டினேன். கொஞ்சம் பந்தாவாக கடைக்குள் வருபவர்கள் லெமன் ஜூஸ் இருக்கா என்று கேட்டால் இப்போதெல்லாம் பெரும்பாலான கடைகளில் ரேஷன் கடை அலுவலரைப்போல் முறைக்கின்றனர். குறைந்தபட்சம் லெமன் மிண்ட் என்றாவது சொல்ல வேண்டும், ஒரு எழுமிச்சையோடு சில புதினா இலைகளும் சேர்க்க முப்பது ரூபாய் கொடுத்தால், ஒகே – நீங்க கஸ்டமர் தான்.

ஆர்டர் செய்த லெமன் ஜூஸை போட்டுக்கொடுத்துவிட்டு, சாப்பிட்டுக்கொண்டிருந்த அவன் வேலையாளை ரொம்ப நேரமாகத் தின்பதாகத் திட்டியபடியே வெளியே கிளம்ப ஆயத்தமானார்.

“இன்னைக்கு தான் கூட்டமே இல்லையே. லீவ் விட்ருக்க வேண்டியது தான” என்றான். அன்றைக்கு கவர்மண்ட் லீவ் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனதாகச் சலித்தார். அது ஒரு குடியிருப்புப் பகுதி தான், கடை விடுமுறை விடுமளவுக்கு அந்தப் பகுதியில் தெலுங்கர்கள் அதிகமா என்று ஆச்சரியமாக இருந்தது. ஹோலிக்கு சவுகார்பேட்டை சென்றால் தான் தெரியும்.

“பாய். எங்க புத்தாண்டுக்காவது லீவு கொடு”

“புத்தாண்டே!! ஒங்களுக்கு எப்ப புத்தாண்ட்டு” என்கிற நக்கல் தொனிக்கு நானே திருதிருவென முழித்தேன் என்னெதிரே வந்தமர்ந்தவரைப் போலவே. நான் ஒரு தேதியைச் சொல்லலாம் என்றும், என்னருகில் இருந்தவருக்கு மற்றொரு தேதியும் தோன்றியிருக்கலாம். எப்படியோ நல்லவிதமாக நாங்களிருவருமே வாய் திறந்து அவமானப்படவில்லை.
“ஏன் ஏப்ரல் 14 தான்” என்றான்.

 “ஓ….அது விஷுடே. இப்படியே எங்க ஃபங்கஷன காப்பியடிச்சு, எங்க செண்ட மேளத்த, எங்க ட்ரெஸ்ஸன்னு எல்லாத்தையும் காபியடிங்க” விழுந்து விழுந்துச் சிரித்தபடி… லுங்கியை மடித்துவிட்டபடி வெளியேறினார்.

“##தா லவுடே கபால்” என்றபடி கைகழுவிவிட்டு கல்லாவில் அமர்ந்தான்.
“இவுங்களச் சொல்லி என்னப் ப்ரயோஜனம். கவர்மெண்ட் எங்க லீவு கொடுக்குது” என்னெதிரே இருந்தவர் அவனைப்பார்த்து.

“தமிழன்னாலே கேணப்பைய தான சார். அந்த ##பீப்## வந்தா நல்லாருக்கும்னு புள்ளையார்மேல சத்தியம் செஞ்சி சொன்னான் ஒரு பாடு” அவன் தன் செந்தூர நண்பன் ஒருத்தனின் புகழ்பாடினான்.

”சரி ஒங்க மொதலாளி, விஷு அன்னிக்காவது லீவு கொடுப்பானா” என்றவர் முடிக்கும் முன்பே.

“###பீப்#### ### கஞ்சப்பைய. அதான் சொன்னான்ல ஒங்க புத்தாண்டு ஜனவரி மாசந்தான். நீ கடைக்கு வந்துடுன்னு சொல்வான். இவனுக்கு மோடியே தேவல”

“இந்த வருஷம் பொங்கலுக்கே லீவு இல்லன்னு சொல்லிட்டாங்கள்ல. எப்படிப்பாத்தாலும் நமக்குன்னு ஒரு மசிரும் இருக்கக்கூடாதுன்னு” என்று எதிருப்பவர் சொல்லும் போதே என்னைப் பார்த்து ஏதோ அவனிடம் சைகையைக் காட்டினார். அவனும் அத்தோடு பேச்சை நிறுத்திக்கொண்டான். அவர்கள் ஏன் பேச்சை நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.

யாருடைய சுவாரஸ்யமான உரையாடலுக்கு இடையூறாக நான் எப்படி இருக்கிறேன் எனத் தெரியவில்லை. நாய்களின் உல்லாசத்தின் போது அவற்றைக் கடந்து செல்லும் மனிதனின் நாகரிகத்தை அவை எப்படிப் பார்க்குமோ தெரியாது, ஆனால் எனக்கு அது நெருடியது. அவர்கள் ஏன் நிறுத்தினார்கள். கல்லாவிற்கு வந்து காசு கொடுக்கும்போது. அங்கேயிருந்த கண்ணாடியில் என் முகந்தெரிந்தது. காலையில் நண்பருடைய புதிய வாகனத்திற்கு பூஜை போட்டபோது, விபூதியும் மஞ்சளும் வைத்துக்கொண்டேன். விபூதித்தடம் மறைந்துவிட, வியர்வையில் மஞ்சள் சந்தனமாகப் பூத்திருந்தது. அதை கவனிக்கையில் சிரிப்பு வந்தது. வேகமாக அவற்றை அழித்தேன், அவன் நம்மிடம் பேச்சுக்கொடுப்பான் என்று தீர்கமாகத் தோன்றியது.

அவன் முகம் ஆக்ரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலையாய் விரிந்தது. அவன் கேள்வியை எதிர்கொள்ளத் தயாரானேன்.

“சார்.. நீங்களும் கேணப்பய கூட்டந்தானா”

ஆமாம் என்று சொல்லிவிட்டு சட்டென நகர்ந்தேன். அந்த கட்சிக்கு தேர்தலில் இந்த முறையும் டெபாஸிட் கிடைக்காது என்று என் நண்பர் பாலாஜி சொன்னதை மனம் ஒப்புக்கொண்டது.

- ஜீவ கரிகாலன்


செவ்வாய், 28 மார்ச், 2017

கனவு மெய்ப்படும் கதை - 4


பரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய விரும்பிய எனக்கு, ‘சந்நிதியில் கட்டும்கட்டியில்’ கவனம் கோர்க்கவில்லை. செயற்கையான பஜனையை செய்வதால் என்ன நஷ்டம் ஆகப்போகின்றது? ஆனால் எழுதப்போகும் பரிட்சைக்கு கேட்கப்படும் துணைப்பாடப்பிரிவில் முதல் மூன்று பாடங்களில் ஏதோ ஒன்று இறுதித்தேர்வில் வந்துவிடும் என்று வாசித்துச்செல்ல என்னால் இயலாது. விடுபடும் இடங்களில் தான் மனம் லயிக்கிறது. முட்டாளென்று உங்களைப் போலவே அவளும் என்னை ஏசுவது என் காதில் விழுகிறது. என்ன செய்ய சூஃபி இசையில் அடிபணிதலும், ஒப்படைத்தலும் இயல்பாக செலுத்துகிறது, பதினெட்டுப்படிகளேறும் போது களைப்பைக் காட்டிலும், வலியைக் காட்டிலும், தவறான இசையைக்கேட்டுவிட்டேனோ என்று குழம்பியபடியே தூக்கிவிடப்பட்டேன். மேலே ஏறியவுடன் முதலில் தெரிந்தது தத்வமஸி. நானே அதுவாக இருக்கிறேன் என்று அதுவே சொன்னது. ‘இன்ஷா அல்லா’ என்றும் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை, அதற்குப் பின்னர் தரிசனம் செய்ய அழைத்துச்சென்றார்கள் எதுவும் நினைவில் இல்லை. என்னைப் பொருத்தவரை ‘தத்வமஸி’ என்கிற தத்துவத்தைப் புரிவதற்கு தான் குறைந்தபட்சம் பதினெட்டு முறை வரவேண்டுமென்று காரணம் வைத்திருக்கலாம். உண்மையான தரிசனம் எதுவென்றால் அதுவே. எனக்கு இரண்டாம் முறை என்பதில் லேசான பெருமிதம் தான். அவளிடமும் அதைத்தான் சொன்னேன், நான் வேறுயாராகவும் இல்லை அதுவாக உருமாறிக்கொண்டிருக்கிறேன் என்று.

சூப்பர் ஈகோ, ஈகோவை அடுத்த கீழடுக்கில் தான் அது இருக்கிறது என்று ஃப்ராய்ட் சொல்கிறார். அது(ID) மேலான நிலையில் இருப்பது. சூப்பர் ஈகோவைத் துறந்து, ஈகோவை ஒப்படைத்தால் தான் அதுவாக இருக்க முடியும், அவளை அடையும் வழியும் கூட அதுதான். அவ்வாறே அந்தவழிமுறை தான் கலையாகிறதோ என்று பேசுமிடம், மனிதர்களற்றப் பகுதியில் ஓடும் தொந்தரவு அற்ற நதியைப் போன்றது.

கணபதியோடு அகமும்,புறமும் கலைவசப்பட்ட மாலையொன்றைப் பகிர்ந்த வேளையில், ஏதோ ஒரு வேலை ஒன்று தயாராவதைக் கடலுக்குச் சொல்லிவிட்டேன். அவர் சொந்தமாக தனக்கேயான ஒரு கதையை கிராஃபிக் பண்ணுவதற்காகத் தயாரித்து வைத்திருந்தார். அதில் சில பகுதிகளை வாசித்திருக்கிறேன். கைத்தறியில் இங்குமங்கும் போய்வரும் கட்டை போல் தத்துவங்களோடு தர்க்கங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு கதை அது, நாவலாகவும் சொல்லலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பத்துவருடங்களுக்கு மேலாகவும் அவர் கனவிலிருந்த கிராஃபிக் நாவல் வரும்போது தமிழில் என் கதை எனும் தற்செயலின் அற்புதம்.
கடந்த 19(மார்ச்17)ஆம் தியதி கூவ நதிக்கரையில் இருக்கின்ற சிவஸ்தலங்களை தொடர்ந்து கொண்டிருந்த என்னுடன் வரலாற்றறிஞர்களும், ஆர்வலர்களும் இருக்க, மனம் தனித்திருந்தது. கிட்டதட்ட நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தனது கிராஃபிக் நாவல் வேலைகளுக்காக, ஒரு ட்ரான்ஸ் கிரியேட்டராக தன்னைப் பாவித்துக்கொண்டு கதையினை உருவங்களாக்கிக் கொண்டிருந்த அவருக்கு அந்த மாலை சுமார் 4.30 மணி போல நாம் ஏன் இப்படி வரைந்து கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி எழுந்திருக்க வேண்டும். நானும் அதே கட்டத்தில் தான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமலே பயணித்துக்கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தின் ரஸவாத மோகத்தில் என்னை ஆழ்த்தியபடியும் குழம்பியபடியும் போய்க்கொண்டிருந்தேன்.

குசத்தலையும் கூவம் ஆறும் பிரியும் இடத்திலிருந்த கேசவராம் சிவன்கோயிலில் இருந்து தக்கோலம் நோக்கிச் செல்ல ஆரம்பித்த பாதை குசத்தலை நதியின் தடத்தில்.. ஆற்றினுள் இறங்கி செல்லும் வழியில் மேடும் பள்ளமுமாக இறங்கி ஏறிக்கொண்டிருந்தோம். புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகள் தென்படும் இந்நதியென்று உடனிருந்த ஆய்வாளர்கள் செல்ல வண்டி நின்றது. இப்போது மாஃபியாக்கள் மண்ணைச் சுரண்டியதால் மழைபெய்தால் கூட மண்ணில் மழை தங்குவதில்லை, ஆனால் அவ்விடத்திலிருந்து ஐம்பது அறுபது அடிக்கும் மேலே நதிநீர் ஓடிய தடயமிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

braking home ties - norman rockwell
அமெரிக்காவின் பிரபல இல்லஸ்ட்ரேட்டரான நார்மென் ராக்வெல் – தன் வாழ்நாளில் நிறைய அவமானங்களைச் சந்தித்ததாக அவரது நண்பரான உளவியலாளர் எரிக்சன் சொல்லியிருக்கிறார். ஒரு விபரணப்பட ஓவியராக இருப்பது சமகாலத்தில் தாழ்வாகப் பார்க்கப்படுவதாக அவர் மனம் வெதும்பியிருப்பதாக அவர் சொல்கிறார். அவரது ஓவியங்கள் யதார்த்த பாணியில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டின் மத்திமத்தில் உருவாகியிருந்த புதியபுதிய கோட்பாடுகளின் பின்னேயிருந்தும், அரூபங்களுக்கு மாறியிருந்த பல ஓவியர்களும் விமர்சகர்களையும் உருவாக்கியிருந்தார்கள். இன்றைக்கு அவரது ஓவியங்கள் யாவுமே கிளாஸிக்குகளாக சந்தையில் முக்கிய இடம்வகிக்கின்றன. அவரது ப்ரேக்கிங் ஹோம் டைஸ் எனும் ஓவியம் கிட்டதட்ட 90 கோடிகளுக்கு* விற்பனையாகி இருக்கிறது. இங்கும் கூட கே.மாதவனின் ஒர் சிற்றிதலில் கே.மாதவனின் ஓவியங்களைக் கிளாசிக்காக பாவித்துக் கட்டுரை எழுதமுடியும், கொண்டாட முடியும். (தமிழ் சிறுபத்திரிக்கையுலகில் அட்டைப்படத்தில் வந்தால் – வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சமானம் தானே). நார்மென் ராக்வெல் ஓவியத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி, சமூக மாற்றம், உலகப்போர், வாழ்வியல் மாற்றங்கள் குறித்த அவரது ஏக்கம் ஒன்று தென்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஒரு அரூபம் தருகின்ற உணர்வைப் போன்றே அவரது ஓவியங்களும் கலையம்சமானது என்று சொல்லலாம். இதைப்பற்றிய கவலை அவருக்கு இல்லை, தன் பாணியிலேயே அவர் தொடர்ந்தார். இன்று அவர் பெயரில் உள்ள அருங்காட்சியகம் உலக அளவில் பெயர்பெற்றது.
சிவில் சமூகத்தில் புதிய மாற்றங்கள் குடும்பத்தை
முன்வைத்து வருவதைச் சித்தரிக்கும்
அவரது மை இன்ஷுயரன்ஸ் பிளான் ஓவியம்

“அது ஒரு கனவு” இந்த இருபது பக்க கதையை, திரைக்கதை போல ஷாட் ஷாட்டாகப் பிரித்துக்கொடுத்தால் அதனை கிராஃபிக்காக மாற்றுவது சரியான பேட்டர்னாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் ஏற்கனவே சொன்னது போல வெறும் கதைக்கு உருவம் கொடுப்பதாக மட்டும் இந்த வேலை இருந்துவிடக்கூடாது. இப்படியான ஒரு வாழ்நாள் கனவு நனவாகும் போது,  தொடர்ந்து வேலை செய்ய பாதை அமைத்துக்கொடுக்குமா என்பது பிங்க் நோட்டு பத்து லட்ச ரூபாய் கேள்வி(எத்தனை காலம் மில்லியன் டாலர்னு மட்டும் சொல்ல – டினாமினேஷனையும் சேர்த்து சொல்வோம்).

தமிழ் வாசிப்புலகத்தின் எண்ணிக்கையைத் தெரிந்தும் இப்படியான முயற்சியில் இறங்கியபின்னர், இருபது பக்கங்களையும் கிராஃபிக்காக விரிப்பதற்காக அவர் இதுவரை அறுபது பக்கங்களைத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த அறுபது பக்கங்களில் சுமார் 350 சட்டகங்களில் ஓவியங்கள் வரையவேண்டும். அதுவும் அவர் திட்டமிட்டிருக்கின்ற பாணி முற்றிலும் பரிட்சார்த்த முறையும் கூட என்பது கூடுதலான சுமை.
  1. முதலில் கதைக்கான காட்சிகளுக்கு உருவம் கொடுக்கும் சாத்தியக்கோடுகளை உருவாக்குதல்
  2. நாவலுக்குத் தேவையான ஃப்ரேம்களின் எண்ணிக்கைகள், பக்க அளவுகள்
  3. முக்கியமான தருணங்களுக்கு ஏற்றவாறு பின்னர் மாற்றி அமைத்துக்கொள்ளுதல்
  4. உருவங்கள், நிலக்காட்சி எதுவும் மடிப்பினில் இருக்கின்ற விஷயங்கள் குறித்த முடிவு, திட்டமிடல்
  5. காட்சிகளை வரைதல்
  6. கதையோடு ஆசிரியரின் ஒப்பிடல் மற்றும் திருத்தம்
  7. இறுதி வடிவம் நோக்கி வரைதல்
  8. கணினித் தரவேற்றத்துடன் – அதை சரிபார்த்தல் மெருக்கூட்டல்
  9. புத்தகத்திற்கு ஏற்ற மாதிரியான வடிவமைப்பு
  10. அலங்காரங்கள் 
  11.  அட்டைப்படம்
அதற்குப்பின்னர் வேலை பப்ளிஷரின் கைக்கு மாறுகிறது.

உருவச்சித்திரங்களிலிருந்து அரூபத்திற்கு இயல்பாக நகர்ந்துக் கொண்டிருந்த கணபதியின் பயணத்தில், திடீரென்று ரோலர் கோஸ்டர் பயணமாக ஒரு பழமையான மாங்கா ஓவியரைப் போல தரையில் அமர்ந்து சமணமிட்டு வரைந்துகொண்டிருந்த நாளொன்றில் தான் இது தோன்றியிருக்க வேண்டும். அவர் சொன்ன போது நான் உணர்ந்து கொண்டேன். அவர் மனதிற்குள் தன் செயல்கள் குறித்த கேள்வியாய் எழுந்த சுயம்சார்ந்த கேள்வி அது.

*
ஒரு நூறு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலே, ஆற்றின் தடையமாக அங்கு குவிந்திருந்த கூழாங்கற்களை வெவ்வேறு வடிவத்தில் கண்டோம். சின்ன பால்ரஸ் குண்டுகளைப் போன்ற கற்களை, எங்கள் சாரிதியாக வந்திருந்த வைட்காலர் சம்சாரி தன் குழந்தைகளுக்காக சேமித்துக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கோ ஓவல் வடிவத்தில் தான் அந்த வெயிலில் பொறுக்க முடிந்தது. சுப்ரமணியசாமியாய் தெரிந்த ஒரு அன்பர் என்னை தேர்ந்த பொறுக்கியெனப் பாராட்டினார். பொதுவாக இந்த மாதிரியான கற்களை எடுத்து நாம் விரும்பும் தெய்வமாக நினைத்து வழிபட்டால், அது அதுவாகவே பலனளிக்கும் என்றார்.

அரூபம் ரூபம் என்கிற எல்லாவகையான அளவுமே மனிதனுக்குத் தானே, கற்களுக்கோ, பிரபஞ்சத்திற்கோ அதற்கான அக்கறை எதற்கு வைக்கனும் ? கல்லெனும் அரூபத்தில், ஒரு உருவத்தை மனதளவில் Install செய்வதற்கும், இன்றைய installation கலையைப் புரிந்துகொள்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன?  இப்படியே கேள்விகேட்டு எழுதிக்கொண்டிருந்தால் – எந்த இதழிலும் பத்தி எழுத வாய்ப்பே கிடைக்காது. பதிப்பிக்க வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று சொன்னபோது தான் அதுவாகவே ஆனேன். இப்போது என்னென்னவோ ஓடிகின்றது அந்த காலத்திற்குள் தன்னைப் புதைத்துவைத்த குசத்தலை நதியென அவை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சுப்ரமணியசாமியிடம் இந்தக் கல்லை நதியென நினைத்து வழிபட முடியுமா என்றேன் நதியை அழித்துவிட்டு கேன்சர் கிருமியாக உலகத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பவனாகிய நான்.

அன்றைய உலா முடித்து திரும்புகையில் திநகரில் பார்கிங்கில் போட்டிருந்த வண்டியை எடுக்கும்போது, ஏனோ பிள்ளையாராக வழிபடவிருந்த கூழாங்கல்லினை கணபதிக்கு கொடுக்கத் தோன்றிற்று. நேரே அவரிடம் சென்று கூழாங்கல்லினை நீட்டுகையில் அவர் உணர்வு வயப்பட்டிருந்தார்.

”நானும் நினைத்துக்கொண்டிருந்தேன் நான் வரைவது ஏன் கூழாங்கல்லைப் போல இல்லை” என அவர் என்னிடம் சொல்லும்போது அதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அக்கல்லினை அவரிடம் கொடுத்துவிட்டு மட்டும் வந்துவிட்டேன். அதை அவர் புத்தருக்கு அருகில்  வைத்திருப்பார் போல, முதன்முதலில் புத்தருக்கு அமைதி கிட்டியிருக்கும், என்று சிரிக்கையில் அதில் அரசியலும் கலந்திருந்தது.சித்தார்த்தருக்கும் சரி, நாமும் சரி எல்லாவற்றிட்கும் மொழியில் பதில்கூறிவிட முடியும் என்று முயற்சிக்கையில் தான் கலவரப்பட்டுக்கிடக்கிறோம்.

தத்வாக்களை நான் தெரிந்துகொள்ளும் போது தான் அவளையும் தெரிந்துகொண்டிருந்தேன் இருந்தபோதும் அவற்றை அடைவதற்கு முயற்சிக்கும் வினைகள் பயனற்றே போயின. ஆனால் ஒரே ஒரு சாத்தியம் அதுவாக ஆவதுதான்.

ஒரே சமயத்தில் கோடுகளோடு காகிதத்தில் உருவப்படங்களை வரைந்துகொண்டும் அதற்கிணையாக அரூப ஓவியத்தீட்டல்களை செய்துகொண்டிருந்தக் கலைஞன் ஏன் கூழாங்கல் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும். இத்தனை ஒலியாலும், காற்றாலும் மாசுபட்ட சூழலில் ஒருமித்த மனநிலையில் வேலை செய்யும் ஒருவன் கல் தானே, அதிலும் அவன் கலையைச் செய்பவனாக இருந்தால் அவனே கூழாங்கல் தானே. 



             * Isn't it amazing the Buddha and the pebble are same color and texture? amusing!
             * Stunned to see this... Pebbles are senior to Buddha..
             * Not only by ages... But also by the Zen

- ஜீவ கரிகாலன்

செவ்வாய், 21 மார்ச், 2017

கனவு மெய்படும் கதை - 3

சென்ற பதிவில் தமிழில் இது முதல் முயற்சி என்று சொல்லிவிட்டேன். எந்தவித Claiming அல்லது தலைக்கணத்திலிருந்து சொல்லாமல், ஒன்றை உருவாக்குகின்ற excitementல் இருந்துதான் சொல்லிச்சென்றாலும், அதற்கான கருத்து ஒன்றாக அமேசானில் கிடைக்கின்ற கிராஃபிக் நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றினைப் பட்டியலிட்டுக் கருத்திட்டத் தோழமை தான் இந்தப் பகுதி எழுதுவதற்கான காரணம். இப்படி தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும், விவாதம் நடத்தினால். அந்தப் பக்கம் கிராஃபிக் நாவல் உருவாகும் பொழுது இந்தப் பக்கம் நல்லதொரு supplementary ஒன்றை உருவாக்கிவிடலாம்.


நாங்கள் கொண்டு வரும் முயற்சி, தமிழில் வருகின்ற முதல் மாங்கா வடிவம். மாங்காவைப் புரிந்து கொள்ள கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள வேண்டும். கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள அவற்றை மற்ற காமிக்ஸ்களுடன் பிரித்துப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.
காமிக்ஸ் VS கிராபிக் நாவல்
ட்ராட்ஸ்கி மருது, கிங் விஷ்வா போன்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் இதற்கான விளக்கங்கள் அளித்து வந்திருக்கின்றனர். இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

காமிக்ஸ் எனும் சித்திரக்கதைகள் – பெரும்பாலும் ஒரு கதையை வரைவது என்கிற நோக்கத்தில் அல்ல, ஒரு கதாப்பாத்திரத்திற்கான கதையை என்று எடுத்துக் கொள்ளலாம். பேட்மேன், ஸ்பைடர்மேன், மாயாவி, மாடஸ்டி, இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லுக், மாண்ட்ரேக், சிக்பில் இப்படி யாரோ ஒரு கதாப்பாத்திரத்தின் சாகசங்களை அத்தியாயங்களாக பகுதிகளாகப் பிரித்துச் சொல்வது என்பது காமிக்ஸ் ஆகும்.
கிராஃபிக் நாவல் என்பது கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தி வரைவது. இது ஒரு நாவலென்றால் என்னவென்று நினைக்கிறோமோ அதையே கிராஃபிக் பண்ணுவது என்று புரிந்துகொள்ளலாம். வேறு எந்த வகையிலும் எடுத்துக்கொள்ள முடியாத வடிவங்களை நாவலென்று சொல்லலாம் என்று ஒரு சொலவடை இருக்கிறது இலக்கியத்தில். இதை நாவலின் இலகுத்தன்மைக்கு உதாரணமாகவும் சொல்லலாம். கிராஃபிக் நாவலின் சிறப்புத்தன்மை என்றும் இதையே சொல்லலாம். காமிக்ஸ் தனக்கென வைத்த எல்லைகளை தகர்த்தெறியும் போது தனக்குத் தானே சூட்டிய பெயராக கிராஃபிக் நாவலைச் சொல்லலாம்.
அதாவது கிராஃபிக் நாவலால் ஒரு எழுத்துவடிவம் சந்திக்கக் கூடிய அனைத்துச் சவால்களையும் சந்திக்க முடியும்.

அநேகமாக இந்த ஸ்டேட்மண்ட்டில் சிக்கல்களோ, சர்ச்சைகளோ எழலாம் என்பதால் இதை நானே அடிக்கோடிட்டு வைக்கிறேன். இதை விவாதிக்கும் முன் இன்னும் சில வித்தியாசங்கள்.
மாங்கா கதைகள்

நானும் கணபதியும் சென்ற பதிவிற்கு வந்த, அந்த சில கருத்துகளுக்கு பதிலைச் சொல்லிப் பார்க்க மேற்சொன்ன வித்தியாசமே கிடைத்தது. ஆனால் அந்த வித்தியாசம் தான் இணையத்தில் தேடினாலோ எந்த விவாத்தில் தேடினாலோ கிடைக்கக் கூடிய பதில். ஆனால் நேரடியாக ஒரு கிராஃபிக் நாவல் உருவாக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டு வரும் எங்களால் வேறு ஒருத் தகவலையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அது கதாசிரியருக்கும், ஓவியருக்குமானத் தொடர்பு.

காமிக்ஸில் கதாசிரியர் என்பவர், ஓவியர் என்பவர் இருவருமே பெரும்பாலும் commissioned வேலையாட்களாக தனித்தனியாகவே வேலை செய்வார்கள். ஒரு காமிக்ஸ் தொடர் முழுக்க ஒரே ஓவியர் தான் வரைய வேண்டும் என்றில்லை, அவர்கள் வேறுவேறாக இருக்கலாம்.

உதாரணம் கதாசிரியர் போனாலியும் (Gian Luigi Bonelli), ஓவியர் கலேப்பினியும்(Aurelio Galleppini) சேர்ந்து உருவாக்கியக் கதாப்பாத்திரம் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஹீரோக்களில் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் வைத்திருக்கும் திருவளர்.டெக்ஸ்வில்லர் அவர்களுக்கு கதாசிரியர்களாக 11 நபர்களும், இல்லஸ்ட்ரேட்டர்களாக 39 ஓவியர்களும் இதுவரைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் கிராஃபிக் நாவலுக்காக இப்படி நடைபெற வாய்ப்பில்லை உதாரணமாக விகடனில் வந்திருந்த சந்திரஹாசன் நாவலைச் சொல்லலாம் (சு வெங்கடேசன் கதையும், க.பாலசண்முகம் ஓவியமும்).
மாங்கா ஜப்பானிய வடிவம், மாங்காவின் தந்தை என அழைக்கப்படும் ஜப்பானிய ஓவியர் ஹோகுசாயின் காலக்கட்டம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றால், ஜப்பானிய சித்திரக்கதைகள் என்பது ஒரு மரபாகப் பார்க்கப்படுகிறது. அந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற எழுதுப்பொருட்கள் கொண்டு மினிமலிசமாக ஆனால் மிகவும் ஆழமானதாக உருவாக்கப்பட்ட ஓவிய வடிவங்களே மாங்காவாகக் கருதப்படும். நமது முயற்சி கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒன்றே, கிராஃபிக் நாவலென்று முத்து திரைப்படத்தின் ஸ்டோரி போர்டை அப்படியே அச்சில் கொண்டுவந்தது போலன்று.
சந்திரஹாசம் வெளிவந்தபோது அது எதிர்கொண்ட விமர்சனத்தை நினைத்துப் பார்த்தேன். உண்மையில் அப்படியானதொரு புத்தகம் மாங்கா போன்று எளிமையாக வந்திருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அந்த முயற்சி உருவாக்கிய தடத்தில் தொடர்ந்து நிறைய ஆக்கங்கள் உருவாகித் தொடர்ந்திருக்கும். ஒரு நிறுவனம் மேற்கொண்ட நல்ல முயற்சியாக அதைக் கவனத்தில் கொள்ளலாம் அவ்வளவு தான்.

இந்த நாவலுக்கான கதை ஒரு யதார்த்தப்பாணியிலான ஒரு புனைவு. ஆனால் கிராஃபிக் நாவலுக்கான சவாலாக சிலவற்றை அது ஓவியருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக “அது” என்கிற வார்த்தைப் பிரயோகம், எனது ஃபேஸ்புக் பதிவுகளிலேயே அது என்கிற பதிவுகளைப் பார்த்து எரிச்சல்கொண்டோர் பலரும் சிலாகித்த சிலரும் உண்டு. அது என்பது பல நேரங்களில் காதலாகவே எழுதப்பட்டாலும், அது ஆரம்பத்தில் ஒரு நோய்க்கு பயந்தே எழுதப்பட்டது, நோயினால் வந்த மரணபயம் அதுவானது, பின்னர் மரணபயத்தால் உருவான அல்லது அபயமளித்த ஆன்மீகம், எல்லாவற்றிட்கும் பின்னர் எஞ்சியிருக்கின்ற காமம் என அதுவாக எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது. இந்தக் கதை கூட “அது ஒரு கனவு மட்டும்” என்கிற தலைப்பு,, அது ஒரு பாதை மட்டும், அது ஒரு ஒளி மட்டும் என்கிற கதைகளைத் தொடர்ந்து எழுதப்பட்டிருந்த கதை தான். இப்படியான ஒரு வார்த்தைப் பிரயோகம் வருகின்ற இடங்களை, கணபதி எப்படி எதிர்கொள்கிறார். இந்த சவாலை மேற்கொள்ளும், கையாள்கின்ற இடமளிக்கும் வடிவம் தான் கிராஃபிக் நாவல், இதன் ஆன்மீக வடிவரீதியிலான கனெக்டிவிட்டி தான் ஜப்பானிய மாங்காவுடனானது.
புத்தா - கிராஃபிக் நாவல்
தொகுப்பிலிருந்து
புத்தா - கிராஃபிக் நாவல்
தொகுப்பிலிருந்து
மற்றபடி இது சந்தைக்கு வரும்வரை முழுக்க முழுக்க தன்னை அறிந்து கொண்டிருக்கின்ற ஒரு கலைஞனது யோகப்பயிற்சி என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் புரிய வேண்டுமென்றால் – ஒரு கூழாங்கல்லினை எடுத்துத் தடவிப் பாருங்கள்.

-(நன்றி : யாவரும்.காம்)

ஜீவ கரிகாலன்

புதன், 15 மார்ச், 2017

கனவு மெய்ப்படும் கதை - 2

SOME PAINTERS TRANSFORM THE SUN INTO A YELLOW SPOT, OTHERS TRANSFORM A YELLOW SPOT INTO THE SUN – PICASSO

தன் வாழ்நாள் முழுதும் ஒரே பாதையில் சீராக சென்றுக்கொண்டிருப்பவன் சாதாரணமாக பயணிப்பதாகக் கூட எடுத்துக்கொள்ளமுடியாது. மாற்றங்களை சூழலை தனது கலையில் தகவமைத்து வந்து கொண்டிருப்பவனது பயணமே நல்ல ஆக்கங்களைத் தரும்.

***
கிராஃபிக் நாவல் தமிழில் இதற்கு முன்னர் வந்திருக்கிறதா என்று பார்த்தால், சில குறிப்பிடத்தகுந்த கிராஃபிக் நாவல்கள் மொழிபெயர்ப்புக் கதைகளாக வந்துள்ளன பெரும்பாலும் அவை லயன்,முத்துவில் வெளிவரும் புகழ்பெற்றக் கதைகள் தான். முக்கியமான ஒரு படைப்பாக மர்ஜானோ சத்ரபியின் “ஈரான்” எனும் ’ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’யாக மொழிபெயர்க்கப்பட்டு விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்று கவிஞர் பழனிவேள். முன்னா எனும் காஷ்மீரிய வாழ்க்கையை குறியீட்டுச் சித்திரங்களோடு சித்தரித்த ஒரு கிராஃபிக் நாவலை கணபதி என்னிடம் காட்டுவதற்கு முன்னரே நாங்கள் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். இது முதன்முறையாக நேரடித் தமிழ் கிராஃபிக் நாவல் என்று சொல்லலாம், மாங்கா போன்றே எளிமையாகவும் சற்றே ஆழமாகவும் சித்திரங்களை உருவாக்கி வருகிறார் கணபதி. இதில் மிக முக்கியமாக நான் கருதுவது, கிராஃபிக் நாவல் உருவாகிவரும் கதையினை முடிந்தமட்டும் பதிவு செய்வது அவசியமாகப்படுகிறது...

“If you haven’t found it yet, keep looking” – Steve jobs
இந்த இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைச் சொல்வது பொருத்தமாக இருக்கிறது, ’அது ஒரு கனவு’ இதனோடு தொடர்பு கொண்டது தான். ஆனால் கணபதியின் வாழ்க்கையையும் அது சொல்வதாகவே நான் உணர்கிறேன்.
கணபதியின் வாழ்க்கையை, அவர் தேடலை, தாகத்தை அன்று அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகிட்டியது. வழக்கமான அவர் ஸ்டூடியோ முற்றிலுமாக மாறியிருந்தது. கீழே பாய் விரித்து தரையில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தார். ஒரு ஜப்பானிய மாங்கா ஓவியர் போல அந்த சூழல் அவரை Oriental கலைஞனாக orientation செய்து கொண்டிருந்தது..

அவர் விரித்திருந்த பாயில் அமர்வதற்கு என் தொப்பையோடு சற்று சூமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே அவரது Stationeryகளைப் பார்த்தவுடன் கிடைத்த உற்சாகம் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வார்த்தைகள்.

டிஜிட்டல் யுகத்திற்கு வந்த பின்னர், பேனா தேவையில்லை என்றாலும். கணிணி உபயோகிப்பது தான் உற்பத்திக்கான அதிக சலுகைகளை நேரம், அலங்காரம் உள்ளிட்ட சமாச்சாரங்களை வழங்குகிறது என்றாலும், கையினால் வரையும் பொழுது கிடைக்கின்ற உணர்வு அலாதி. ஏற்கனவே சொன்னது போல FUN அல்லது joy என்கிற வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன் என்றால், அதைவிட சிறந்த வார்த்தைகள் இதை justify செய்துவிட முடியாது. பல வருடங்களாக அவரது கனவில் இருந்த ஒரு பயணத்தை திடீரென்று ஒருநாள் தொடங்கும்போது கிடைப்பது ஆனந்தமின்று வேறென்ன இருக்க முடியும், ஆனந்தம் தெவிட்டாத ஒன்றாக ஒவ்வொரு ஃப்ரேம்களை அவர் வரையும்போது கதையினை காட்சிகளாக மாற்றும் போதும் அது தொடர்ந்துவருகிறது என்றால் அங்கே fun இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.


அவர் வரைவதற்காக வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன் அத்தனையும் கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இந்தப் பொருட்களை சேகரித்து வருவதாகச் சொன்னார், Orthodox fountain pen, கணிசமான எண்ணிக்கையில் பேனா நிப்புகள், கருப்பு மை புட்டி என அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தேன். அந்த பேனா மரத்தால் செய்யப்பட்ட பழமையான பேனா குறைந்தது அந்தப் பேனா தயாரிக்கப்பட்டு 150 வருடங்களாகியிருக்கும், ஒவ்வொரு நிப்புமே அப்படியான பழமையான ஒன்றே. ஒவ்வொரு நிப்பாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன், எத்தனை ஆண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட துருப்பிடிக்காத, உறுதியான நிப்புகள் தயாரிக்கப்பட உற்பத்திக்கான அடிப்படைத்தன்மை எத்தனை தரமானதாக இருந்திருக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த பழமையான பேனாவில் நிப் எப்படி செயல்படுகிறது, அதன் Flexibility ஆகியவற்றை ஆர்வமாக என்னிடம் விளக்கினார். எதற்காக நாம் Use and Throw என்கிற கான்செப்டிற்கு மாறினோம் என்கிற கேள்விக்கு வேறு ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அங்கிருந்த மை புட்டியை எடுத்துப் பார்க்கச்சொன்னார். அந்த மைபுட்டி வாங்கிப் பல வருடங்கள் இருக்கும் அதில் “specially made for manga drawing” என்கிற பொருள் வரும்படியான வாசகம் இருந்ததைக் காணும் போதே ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ஞாபகத்தில் வந்தது.








ஓவியங்கள் குறித்த சில கட்டுரைகளுக்காக ART VS WORK OF ART, ART & WORK OF ART என வெவ்வேறு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒன்றை அசலாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் அதன் உண்மையான சப்தங்கள் எழுந்து அதனை நிகழ்த்திக் காண்பிக்கின்றன. உண்மையில் கணபதி செய்து கொண்டிருந்த கிராஃபிக் நாவலுக்கான அடிப்படை செயல்பாடுகள், மேற்சொன்ன விவாதங்களின் நிகழ்த்துகலையாக அரங்கேறுவதாக உணர முடிந்தது. உண்மையில் அந்த பேனல்களில் இருக்கின்ற சில குறிப்பிட்ட ஃப்ரேம்களை அவர் தனி ஓவியமாகவும் வரையலாம், மிக முக்கியமான படைப்புகள் அவை.

இன்னும் The Story of Tamil Manga நீளும் என்றே நம்புகிறேன்…

-ஜீவ கரிகாலன்




ஞாயிறு, 5 மார்ச், 2017

கனவு மெய்ப்படும் கதை


காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் வெறி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது. பால்ய நண்பன் சிவாவுடன் சேர்ந்து எத்தனை கற்பனைக் கதாப்பாத்திரங்கள் உருவாக்கியிருப்போம். காமிக்ஸில் வரும் ஒவ்வொரு பேனலின் சித்திரத்தையும் மனப்பாடமாக பள்ளி நண்பர்களுக்குக் கதையாகச் சொல்வேன். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில், ஏனோ என் தந்தையும் நாராயணன் மாமாவும் எனக்காக காமிக்ஸ் புத்தகங்களை வாங்கித் தந்த காலக்கட்டம் தான் என்னை இன்றைக்கும் உந்திக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றின் பின்புலம். ஆனால் அவர்களும் காமிக்ஸ் வாசகர்களே, அவர்களுக்கு என்னை வைத்து, அவர்களும் வாசிக்க ஒரு வாய்ப்பாக மாறுகிறது.
கிராஃபிக் நாவலாக புதிய வடிவங்களில், கதைகளில் தீவிரத்தன்மையோடு அறிமுகமாகும் போது. அது நிரப்பிய என் வெற்றிடங்கள் தான் என்னை, என் எழுத்தை ஓவியங்களிடமிருந்து எழுத்தாய் எடுத்துக்கொள்ள உதவுகிறது என்று கூட நம்புகிறேன். சொற்ப அளவிலேயே சினிமாக்கள் பார்க்கிறேன் என்றாலும், காட்சி மொழி கிராஃபிக் நாவல் வழியாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தான் என் கதைகளிலும் PANELகளாகவே அமையுமாறு காட்சிப்படுத்த முயல்கிறேன்.
கிங் விஷ்வாவுடன் நடந்த சந்திப்பும் அதன் வாயிலாக அறிமுகமான கணபதியும் வேறு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என நினைக்கவில்லை.
ஆனால், ட்ராட்ஸ்கி மருதுவிற்கு நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். அவர் தொடர்ச்சியாகக் காட்சிமொழி பற்றியும், கிராஃபிக் மொழி பற்றியும் பேசி வந்த விஷயங்களைப் பதிவு செய்து வருகின்றேன் என்கிற முறையில். கிங் விஷ்வாவுடன் சேர்ந்து யாவரும்.காம் நடத்திய கிராஃபிக் நாவல்கள் பற்றிய முதல் கூட்டத்தில், பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கும் நமக்கு கிராஃபிக் நாவல் என்கிற ஆசையையாவது விதைத்துக்கொள்ள ஒரு நியாயம் கிடைத்தது.
ஆனால் அந்த நிகழ்வுக்கு தான் எத்தனை இடர்பாடுகள் இருந்தன, கிராஃபிக் நாவல் பற்றிய புரிதல் இல்லாமல் சில நட்புகள் என்னை எச்சரிக்க, காட்சிக்கலைகளை போற்ற வேண்டிய பீடங்கள் என நம்பிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து வந்த தீவிரமான விமர்சனம். மிக அதிகமாகவே என்னை பாதித்தது. அதன் கலைத்தன்மை குறித்த கேள்விகளுக்கு அப்போது என்னிடம் பதிலில்லை. ஆனால் ட்ராட்ஸ்கி மருதுவிடம் இருந்தது.
மேற்குலக தாதாயிஸத்தின் முக்கியக் கலைஞர்கள் பற்றிய ஒரு அறிமுக உரையை நிகழ்த்திய மருது சொன்ன விஷயங்களில் புரிந்து கொண்ட DRAUGHTMANSHIP, ஆயிரக்கணக்கான ஓவியங்களை அத்தனை அற்பனிப்புடன் வருடக்கணக்காக வரைந்து கொண்டிருந்த ஓவியர்களின் கலைப்படைப்புகளைத் தெரிந்து கொண்ட இடம், என் பயணத்தை மறுவரையறை செய்தது என்பது முற்றிலும் உண்மை. அதன்பிறகு தான் ஏ கே கூமாரசாமி போன்ற அறிஞர்களின் தத்துவங்களை நான் விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறேன்.

ஆக ட்ராட்ஸ்கி மருதுவிற்கு என் தனிப்பட்ட நன்றி.
கணபதியுடனான சந்திப்பு ஓவியர் செல்லம் அவர்களின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலில் நிகழ்ந்தது. பின்னர் கிராஃபிக் நாவலுக்கான எங்கள் கூட்டத்தில் அவரும் பங்கேற்றார். அவரது ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தேன், பிரமாதமான கோட்டுச் சித்திரங்களிலிருந்து அரூப ஓவியங்களுக்கு பெயர்ந்து கொண்டிருப்பதாக அவரது பயணத்தை அறிந்து கொண்டேன். அவ்வப்போது அவர் எழுதும் மற்றும் மொழிபெயர்க்கும் ஓவிய தத்துவங்கள் குறித்த பதிவுகள் மிக முக்கியமானவைகளாகப்பட்டன.
ட்ரங்குப்பெட்டிக் கதைகள் வழியாகக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக அவரது நட்பு.
அவரோடு ஒருநாள் பெசன்ட்நகரில் சந்திக்கும்போது என் புத்தகத்தை அவர் வாங்கிக்கொள்ளும் சந்திப்பாகத் தான் திட்டமிட்டிருந்தோம். காற்றாட நடந்து கடற்கரையில் அலைகளுடன் நடந்து வந்ததில் தான் தெரிந்துக்கொண்டேன், இரண்டு பேருக்கும் ஒரே WAVE-LENGTH என்று, அவரும் என்னைப் போலவே அல்லது அவரைப்போலவே நானும் சில INITIATIVEகளை நம்பியும், ஏமாந்தும் தாமாக உருவாக்கும் உத்வேகத்தில் இருப்பதையும் பரஸ்பரம் தெரிந்து கொண்டோம்.
GREATMINDS THINK ALIKEபோல இல்லை, ஆனால் உலக வரலாற்றில் ஏதோ ஒன்று புதிதாக உருவாகுவதற்கு முதன்மையான காரணம் அதன் தேவை தான். இது தான் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க PATTERN, எங்களிருவருக்கும் தத்தம் பாதைகளில் இருக்கின்ற ஏதோ ஒரு முக்கியமான தேவை ஒன்று, என்னவென்று எங்கள் சந்திப்பின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் நாங்கள் அதனைத் தொடங்கும் இடமென நிச்சயத்திருந்தது வேறு ஒரு இடமாக இருந்தது. ஆனால் இருவருக்குமான பாதைகளில் அதை ஆரம்பிப்பதற்கான நேரம் சற்றுத் தள்ளிப் போய்கொண்டிருக்க, கிராஃபிக் நாவல் என்கிற வேறொரு வடிவம் சாத்தியமாகியது.
யாவரும் பதிப்பகம் வாயிலாகக் கொண்டுவருவதே பெரிய விசயமென நம்பிய நான், எனது கதையே அதன் ஆரம்பமாக இருப்பது என்கிற ஆச்சரியம் இன்னுமே தீர்ந்துவிடவில்லை. அத்தனைக்கும் காரணம் கணபதியின் DEDICATION தான். கணபதியின் வீட்டிற்கு சென்றிருந்த போது மேற்கிலிருந்து கதையில் இருக்கின்ற ஒரு காட்சியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் , அந்த விநாடிகளை இன்னும் என் மனம் சேமித்து வைத்திருக்கின்றது.
காட்சி - ட்ரங்கு பெட்டிக் கதைகள்
மேற்கிலிருந்து - ட்ரங்குபெட்டிக் கதைகள்
காட்சி எனும் சிறுகதை ஒரு கிராஃபிக் நாவலாகவே கொண்டு வரலாம் என்று சொன்ன மறுகணமே. Y NOT என்கிற ஆரகிள்(அசரீரீ இல்ல ஆரகிள்) இருவருக்குமே வந்திருக்க வேண்டும். செயல்பட ஆரம்பித்துவிட்டோம். இந்தப் பரிசோதனைக்குப் பின்னர் சிறந்த தமிழ் சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவரலாமா என்றும் யோசனை. எப்படியோ அடுத்தடுத்துப் பேசிக் கொண்டிருந்தது, இன்று ஆக்கத்திற்குள் செல்ல வைத்துவிட்டது. இங்கே வா.மணிகண்டனின் நிசப்தத்திற்கும் அதன் வாயிலாகக் கிட்டிய வரவேற்பும், பின்னர் அதுவே தமிழ் இந்துவில் கவனம் பெற்று, பல நண்பர்களின் உற்சாக வாழ்த்துகளோடும், எதிர்பார்ப்புகளோடும் எங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.
FUN AT WORK என்கிற ஒரு தத்துவத்தை FUNஆக எடுத்துக்கொள்ளாமல் படுசீரியஸாக எடுத்துக்கொள்பவன் நான். கணபதியும் அவ்வாறு தான் சர்வேதச அளவிலும் அவரது ஓவியங்கள் கவனம்பெற்று வரத்துவங்கியிருக்கும் காலத்தில், ஆத்ம திருப்தி என்கிற ஒற்றை லாபத்தைத் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பாறாத அவரது கடும் உழைப்பு COMPLIMENTARY ஆக அவரது ஓவியவெளியிலும் அடுத்த இடத்திற்கு அவரைக் கொண்டு செல்வதாக நான் அவதானிக்கிறேன்.
கோடுகளில் நெருக்கமாக ஒரு வெளியிலும், வண்ணங்களோடு விளையாடும் அரூபப் படைப்புகளோடு ஒரு வெளியிலும் என ஒரே சமயத்தில் இருவேறு வேலைகளைச் செய்துவருவது எனக்கு வியப்பாகவும், புதிய திறப்புகளையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
குறிப்பிட்ட அளவு நாம் வேலை செய்தால் போதும், அதுவே அதனை கவனித்துக் கொள்ளும் என்று சொன்னார். (அதுவே அதனை அதுவாக என்று நாங்கள் தெளிவாக மற்றவர்களைக் குழப்பக்கூடாது என்பதால் ஒரு சின்ன இல்லஸ்ட்ரேஷன்{ஆம்} கீழே – ஆனால் என்ன வில்லத்தனம் என்று கேட்கக்கூடாது) 

ALL YOU NEED IS A PUSH

if ur Art = Madness (கண்டிஷன்ஸ் அப்ளை)
அதாவது குறிப்பிட்ட அளவு நாம் தீவிரமாக வேலை செய்தால் போதும், பின்னர் அந்த வேலையே தனக்கானதைத் தேடிக்கொள்ளும் என்கிற பொருள்படும்படியான சொல்லாடல் அது. ஆனால் அதனை மிகவும் நம்புகிறேன். வெற்றி பெற்றவர்களின் Patternகளின் ஒன்றாக இதையும் கவனிக்க முடிகிறது. 
<<Push>>
அவ்வளவு தான்.
இனித்தொடரும் பதிவுகளில் கிராஃபிக் நாவல் எப்படி உருவாகிறது என்கிற கதையையும் எழுத முயற்சிக்கிறேன். 
ஜீவ கரிகாலன்

நன்றி : யாவரும்.காம்
http://www.yaavarum.com/archives/3779