செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அது - 3

அலுத்துவிட்டது என்று ஃபேஸ்புக்கில் பதியும் போது உண்மையில் அலுத்துதான் போனது…
 
பயணத்தின் போது செலுத்திக் கொண்டிருந்தவண்டியை ஓரங்கட்டிவிட்டு எங்கிருந்து, எங்கே பயணிக்கிறேன், எதற்காக, யாருடன் என்று கேட்கத் தோன்றியது. அத்துடன் எவற்றை சுமந்து செல்கிறேன், எவற்றை மறந்துவிட்டுவிட்டேனோ என்றும் குளம்பிய நிலையில் தான் பயணத்தின் அலுப்பு தெரிகிறது ஒவ்வொன்றின் விடைகளிலும். உச்சிவெயிலில், சூட்டுக்கொப்புளங்களின் சாத்தியத்துடன் கான்க்ரீட் பாலத்தில் அமர்ந்து எழும் போது வெயில் சற்றுத் தணிந்திருந்தது.

பசியில் என்னசெய்வதென்றே தெரியவில்லை, இதற்கு முன்பு வரை பசித்தால் சாப்பிடத்தான் தெரியும். அநேகமாக பசிக்க ஆரம்பிக்கும் கணத்திற்கு முதல் நொடியே சாப்பிட்டு முடித்திருப்பேன், மற்ற நாட்களில் பசித்த நேரத்திலிருந்து ஐந்து நிமிடத் தொலைவில் உணவிருக்கும். இப்போது என் ஞாபகத்தில் பசி மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறது, எவ்வளவு நேரமாக என்பதற்கான பதிலுக்கு கூட இடமில்லாமல் பசியாக என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறேன் நான்.

நீட்டிய கைகளின் முகத்தைப் பார்க்கவில்லை புசிக்கத் தொடங்கினேன். பசி நிரப்பியிருந்த நினைவுகள், உணவு சமன் செய்ய காலியாகிக் கொண்டிருந்தது. அது அங்கே தான் இத்தனை நேரம் இருந்திருக்க வேண்டும், வெற்றிடத்தில் தெரிந்தது அது.

அது என் ஞாபகத்தில் இருக்கிறது… ஆனால் அதை வைத்து என்ன செய்ய  வேண்டும் என்று தெரியவில்லை. அது இப்போது என்னோடு இருக்கிறது, என்னோடு அதுவாக வருமா, நான் தான் தூக்கிக் கொண்டு வரவேண்டுமா என்று தெரியவில்லை. கைகள் கோர்த்துக் கொண்டோம், யார் யாரை அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரியாத பயணம் ஒன்று துவங்கியதாய் தோன்றியது.

மெதுவாக சாலை இருக்கும் மேட்டிற்கு ஏறிச் சென்று ஒரு சிமென்ட் பாலத்தில் அமர்ந்து கொண்டோம். சாலை இரு புறமும் நீண்டு நெளிந்து சென்று கொண்டிருக்கிறது. மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டோம். பயணத்தை தொடங்க வேண்டும் என்று அது சொன்னது. மனதில் எழுந்த கேள்விகளின் சப்தங்கள் அகச்செவியின் சப்தங்கள் புரியாத பாஷையாக இருந்தது. இது நான் அனுபவித்திராத ஒன்று, நான் அனுபவித்தவை எவை என கேட்டுக்கொண்டாலும் அதற்கு விடையில்லை. முடிவெடுக்கத் தெரியாத நான் அதனை நம்பியாக வேண்டும். நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டதாய் அதன் புன்சிரிப்பு உணர்த்தியது.

“என்ன செய்யட்டும்?”
“பயணிப்போம்”
“சரி எங்கே செல்வோம்?”
“அங்கேதான்”
“சரி”
“இப்படியே செல்வோம்”



அது என்னை செலுத்த ஆரம்பித்தது, அது சொன்னத் திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றேன், தூசு படிந்த வாகனம் ஒன்று கேட்பாரற்று சாலையோரம் நிறுத்துவைக்கப்பட்டிருந்தது. எட்டிப் பார்த்தேன், தொடர்ந்து வந்த அது என்னை முறைத்தது.

“உள்ளே யாருமில்லை..”
“தெரியும்… நட.”

அந்த வாகனத்தைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். அது யாரையோ பார்த்து கையசைத்தது. பதிலுக்கு எங்களை வழியனுப்பியது ஒரு கையசைவு.


இத்தனை நேரத்தில் மிஞ்சியிருக்கும் ஒரே ஞாபகம், எங்களை வழியனுப்பிக் கொண்டிருக்கும் அந்தக் கரம்.. என் ஞாபகத்தில் இருக்கிறது, அதன் வளைகளின் சப்தம், அதே தொனியில் என் ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது… இன்னமும் இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக