ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அது - 04

எழுதப்படுபவைகளும் வாசிக்கப்படுபவைகளும் விதிவசத்தாலே தான் நிகழ்கிறது என்று முன்னாள் காம்ரேட் ஒருவன் சொன்ன நாளொன்றில் தான் இது நிகழ ஆரம்பித்தது.

எது
அது தான்

சொற்களில் இருக்கின்ற அயற்ச்சிக்கு மொழியையும் பயிற்றுனரையும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை, நாற்பது நாட்களுக்கொருமுறையாவது முடிவெட்டுவதற்கு சலூன் செல்பவர்களால் இவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெட்டுவது, வளரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதலீட்டு அனுமதி தான். அந்த முன்னாள் காம்ரேடின் பயணத்தில் ஒன்றில் சூனியக்காரி ஒருத்தியைக் கண்டதில் அவன் வியந்ததாகச் சொல்லியிருந்தான்.  அன்றிலிருந்து நான் அவனை நம்ப ஆரம்பித்தேன். அதுவரை இல்லாமல் இப்போதுவரை நான் அவனை காம்ரேட் என அழைக்க ஆரம்பித்தேன். இப்போது அவன் சொன்ன வாக்கியம் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது

இதில் சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த எழுத்துகளுக்கு ஆதாரமாக அவர் சொன்ன வாக்கியம் அமைவது தான். இன்று தன் ஆதர்ஸங்களின் ஒருவனின் மறைவை அனுஷ்டிப்பதற்காக மதுபுட்டியை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் அவன் என்னோடு பேசினார். அப்போது தான் அந்த வாக்கியத்தை உணர்வுவயப்பட்ட நிலையில் பேசினார். உணர்வுவயப்பட்டால் அதில் பொய் கலந்திருக்கமுடியாது அல்லவா? அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எந்த புத்தகம் வாசிக்கப்படவேண்டும் என்பதை உங்கள் விதி தான் தீர்மானிக்கிறது. என்ன நம்பவில்லை, ஆகச்சிறந்த்தென நீங்கள் நம்பும் ஏதோவொன்றினை விட்டுவிட்டு இப்போது இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை விதி தானே அனுப்பிவைக்கிறது. துரதிர்ஷடமாக இந்த வரிகளில் என் நண்பர் என்று அவரைக் குறிப்பிட்டதால், இவற்றிட்கு கொஞ்சமும் சம்பந்தமற்ற என்னை இந்தப் பக்கங்களில் நுழைத்து விட்டதற்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் நான் மட்டும் இங்கே தனியாக வரவில்லை, அதுவும் உடன்வந்துவிட்டது.

ஆர்கெஸ்ட்ராவில் ஒருங்கிணைப்பாளரின் கைகளைப் பார்த்துக் கொண்டே இசைப்பவனாய் என்னை இங்கே எழுதவைத்துக் கொண்டிருக்கும் ’அது’வே, உம்மை மன்றாடிக் கேட்கிறேன் என்னை இந்த சம்பாஷனைகளில் இருந்து உதிர்த்துவிடு, அப்படிச் செய்தால் இதை வாசிப்பவர்களுக்கு உன்னதமானது என்று நம்பும் ஏதோ ஒன்றினை கட்டமைத்துத் தரயியலும். அது இயல்பாகவே என்னை ஏளனமாகப் பார்க்கும், இப்போது அதனிடம் மன்றாடிக் கேட்கும் நிலையில் நான் இறங்கி வந்ததைப் பார்க்கும் போது அதன் சந்தோஷம் பன்மடங்கு பெருகிவிட்டதை உணர்கிறேன்.

வாசிப்பதன் வழியாக வருத்தப்பட்டு பாரஞ் சுமப்பவர்களே, இறைவன் இருப்பதை நம்புங்கள். விதி இருப்பதை நம்புங்கள்.. நீங்கள் வாசிப்பதை நிறுத்திவிட ஊழி மழை பெய்ய ஆரம்பிக்கலாம், பூமி அதிரலாம், கடல் பொங்கலாம் வேறெதுவும் ஆகலாம்… அப்போது உங்களுக்கும் எழுதுவதற்கு நிறைய கிடைக்கலாம். ஆம்..

இலக்கியத்தில் இருக்கும் PATTERN படி நான் இப்போது ஒரு ஃபிளாஷ் பேக் காட்சியைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நான் அந்த பேட்டர்ன்களை நம்பவில்லை, இந்த எழுத்துகள் யாவும் பிழைகள் கூட திருத்தப்படாமல் அப்படியே வரவேண்டும். ப்ரூஃப் ரீடர்கள் இந்த எழுத்துகளை பார்த்தால் விரைப்புவந்த சேவலாய் மாறி இந்த அற்பக் கோழியினை வன்புணர்வு செய்வார்கள். கோழிக்கு முட்டை போடும் ஆசையெல்லாம் வரவில்லை, அது தினமும் ஃபெமினிஸம் பேசும் ஆண்டி ஒருத்தி வீட்டின் கூரைக்கு சென்று வருவதால் அதன் நிலை அப்படி. ப்ரூஃப் ரீடரோ, எடிட்டரோ கைகளால் தொட்டுப்பார்க்காத கன்னியாகத் தான் இவ்வெழுத்துகள் உங்கட்கைகளைத் தேடி வரவேண்டும். ஏனென்றால், என்னால் முடிந்த குறைந்தபட்ச அன்பு அதுமட்டுந்தான். இந்தப் பகுதியை முன்னுரையாக எடுத்துக் கொள்ளுங்கள் இதற்கு முன்னே எழுதியிருக்கும் மூன்று பகுதிகளை ‘அது’ என் மீது செலுத்தி வரும் அதிகாரத்தின் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.


இனி நானும் உங்களுக்கு ஊழிகாலத்தின் கதை ஒன்றினை அறிமுகம் செய்யப்போகிறேன். ஆம் கிட்டதட்ட அதன் விளிம்புக்குள் நின்று கொண்டிருக்கும் நமக்கு அந்த காலத்தை முன் கூட்டியே அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

(முற்றும்)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அது - 3

அலுத்துவிட்டது என்று ஃபேஸ்புக்கில் பதியும் போது உண்மையில் அலுத்துதான் போனது…
 
பயணத்தின் போது செலுத்திக் கொண்டிருந்தவண்டியை ஓரங்கட்டிவிட்டு எங்கிருந்து, எங்கே பயணிக்கிறேன், எதற்காக, யாருடன் என்று கேட்கத் தோன்றியது. அத்துடன் எவற்றை சுமந்து செல்கிறேன், எவற்றை மறந்துவிட்டுவிட்டேனோ என்றும் குளம்பிய நிலையில் தான் பயணத்தின் அலுப்பு தெரிகிறது ஒவ்வொன்றின் விடைகளிலும். உச்சிவெயிலில், சூட்டுக்கொப்புளங்களின் சாத்தியத்துடன் கான்க்ரீட் பாலத்தில் அமர்ந்து எழும் போது வெயில் சற்றுத் தணிந்திருந்தது.

பசியில் என்னசெய்வதென்றே தெரியவில்லை, இதற்கு முன்பு வரை பசித்தால் சாப்பிடத்தான் தெரியும். அநேகமாக பசிக்க ஆரம்பிக்கும் கணத்திற்கு முதல் நொடியே சாப்பிட்டு முடித்திருப்பேன், மற்ற நாட்களில் பசித்த நேரத்திலிருந்து ஐந்து நிமிடத் தொலைவில் உணவிருக்கும். இப்போது என் ஞாபகத்தில் பசி மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறது, எவ்வளவு நேரமாக என்பதற்கான பதிலுக்கு கூட இடமில்லாமல் பசியாக என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறேன் நான்.

நீட்டிய கைகளின் முகத்தைப் பார்க்கவில்லை புசிக்கத் தொடங்கினேன். பசி நிரப்பியிருந்த நினைவுகள், உணவு சமன் செய்ய காலியாகிக் கொண்டிருந்தது. அது அங்கே தான் இத்தனை நேரம் இருந்திருக்க வேண்டும், வெற்றிடத்தில் தெரிந்தது அது.

அது என் ஞாபகத்தில் இருக்கிறது… ஆனால் அதை வைத்து என்ன செய்ய  வேண்டும் என்று தெரியவில்லை. அது இப்போது என்னோடு இருக்கிறது, என்னோடு அதுவாக வருமா, நான் தான் தூக்கிக் கொண்டு வரவேண்டுமா என்று தெரியவில்லை. கைகள் கோர்த்துக் கொண்டோம், யார் யாரை அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரியாத பயணம் ஒன்று துவங்கியதாய் தோன்றியது.

மெதுவாக சாலை இருக்கும் மேட்டிற்கு ஏறிச் சென்று ஒரு சிமென்ட் பாலத்தில் அமர்ந்து கொண்டோம். சாலை இரு புறமும் நீண்டு நெளிந்து சென்று கொண்டிருக்கிறது. மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டோம். பயணத்தை தொடங்க வேண்டும் என்று அது சொன்னது. மனதில் எழுந்த கேள்விகளின் சப்தங்கள் அகச்செவியின் சப்தங்கள் புரியாத பாஷையாக இருந்தது. இது நான் அனுபவித்திராத ஒன்று, நான் அனுபவித்தவை எவை என கேட்டுக்கொண்டாலும் அதற்கு விடையில்லை. முடிவெடுக்கத் தெரியாத நான் அதனை நம்பியாக வேண்டும். நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டதாய் அதன் புன்சிரிப்பு உணர்த்தியது.

“என்ன செய்யட்டும்?”
“பயணிப்போம்”
“சரி எங்கே செல்வோம்?”
“அங்கேதான்”
“சரி”
“இப்படியே செல்வோம்”



அது என்னை செலுத்த ஆரம்பித்தது, அது சொன்னத் திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றேன், தூசு படிந்த வாகனம் ஒன்று கேட்பாரற்று சாலையோரம் நிறுத்துவைக்கப்பட்டிருந்தது. எட்டிப் பார்த்தேன், தொடர்ந்து வந்த அது என்னை முறைத்தது.

“உள்ளே யாருமில்லை..”
“தெரியும்… நட.”

அந்த வாகனத்தைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். அது யாரையோ பார்த்து கையசைத்தது. பதிலுக்கு எங்களை வழியனுப்பியது ஒரு கையசைவு.


இத்தனை நேரத்தில் மிஞ்சியிருக்கும் ஒரே ஞாபகம், எங்களை வழியனுப்பிக் கொண்டிருக்கும் அந்தக் கரம்.. என் ஞாபகத்தில் இருக்கிறது, அதன் வளைகளின் சப்தம், அதே தொனியில் என் ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது… இன்னமும் இருக்கிறது

சனி, 13 பிப்ரவரி, 2016

ஞாபகம் - நினைவு



தற்செயலாக ஒரு விதியை

கண்டுபிடித்தேன்

 
‘நினைவுக்கும், ஞாபகத்திற்கும்’ இடையேயுள்ள LEXICON வேறுபாடுகளோ, Etymological விளக்கங்களில் கிடைக்கும் வியாக்கியானங்களில் அக்கறையில்லை

ஞாபகம் தப்பி விட்டது
நினைவு மறந்து விட்டது

எழுதமுடியாதவற்றை
TRANSITION EFFECT
என்று சொல்லி விடலாம்
எழுதியவற்றை கவிதை என்று
பொய் சொல்லலாம்
பகடி செய்யலாம்

கிழித்தவற்றை,
ஒட்டிப் பார்க்கலாம்
தைத்தும் பார்க்கலாம்

என்றைக்கோ
காலியான லஞ்ச் பாக்ஸை
தினம் தினம் சுமந்து செல்கிறேன்

எதற்கோ   
சிரிக்க ஒரு காரணமிருக்கிறது
அழுதிட ஒரு காரணமிருக்கிறது

 வலி கொஞ்சம் கொஞ்சமாய் 
முன்னேறி விபரீதத்தை நிகழ்த்தும்.

அஞ்சலிக் கட்டுரைகளில் 
எழுத்துப்பிழை இருக்கலாம் 
தவறில்லை.

ஆங்!!
ஞாபகம் வந்துவிட்டது
நினைவு தப்பிவிட்டது எனக்கு


ஜீவ கரிகாலன்
lonely - deviant art