வியாழன், 28 ஜனவரி, 2016

அது - 02

இன்று : 

ஜாய்ஸ்டிக்கில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேட்டரில் இருந்து சிலந்தி வலை பின்னத் துவங்கியது.


இதுவரை:


ஹார்ட்கோர் GAMERஆக அவள் பிரிவினை சகித்துக் கொள்ள இயலாமல் தன்னை மாற்றிக் கொண்ட பின், அவனது உலகத்தில் ஒரு PARADIGM SHIFT இருந்தது. அவனது மெய்மையின் தளமும் வீடியோ கேமும் ஒன்றுக்கொன்று இடம் பெயர்ந்தது. சம்பள தினத்தன்றே ஒரு பெரும்பகுதியை புதுப்புது கேம்கள் வாங்க செலவிட ஆரம்பித்தான். பீ.எஸ்கள் பல முறை மோதித் தெறித்த தடம் இன்னும் சுவற்றில் இருக்கின்றது. ஆனால் புதிய பீ.எஸ்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. எல்லாவற்றிலும் அவன் தோற்றிடவே விரும்பினான். ஆனால் அவனால் தோற்க முடியவில்லை. அவன் அலுவலக நண்பர்களிடம் தன் நிலையைச் சொன்ன போது யாரும் அவனைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.


அவன் மெய்மையை மாற்றிவிட்ட அவள் இல்லாத உலகமாக அவ்விளையாட்டுகள் அவனுக்கு நிம்மதியளித்தன, கடமைகளால் தோய்த்தெடுக்கப்பட்டு எண்ணெயில் பொறித்து எடுக்கப்பட்ட எண்ணெய் வடியும் பக்குவம் தவறிய பஜ்ஜியின் உடல் தான் அவனுடையது. களைத்திருக்கும் அவனை, வீடியோ கேம் - அவன் உடலை பிளிந்து எடுத்துச் சக்கையாக்கிப் போடும் போது பக்கத்துவீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பக்கத்து வீட்டுப் பையன் ஸ்கூலுக்குப் போகும் ஆட்டோ வரும் வரை தான் தூக்கம், அவன் நிம்மதி எல்லாமுமே. அன்றாடங்களில் நகரும் எல்லாப் பொருண்மையிலும் அவன் காணும் அவளுடைய கைரேகைகளின் படிமம் இவனை அலைகளிக்கச் செய்கின்றன. தற்கொலை தான் தப்பித்தலின் வழி என்று செய்திகளும், ஆன்மீகம் தான் ஒரே மார்கம் என்று விளம்பரங்களும் பரவிக் கிடக்கும் நகரத்தில் தானும் கோடியில் ஒரு கரப்பான்பூச்சி என்கிற அறிவில் தனக்குப் பணியில் கிடைக்கின்ற அங்கீகாரங்கள் ஒரு பொருட்டாகப் படவில்லை.

கேம்களில் தன் கட்டுப்பாட்டை எப்படி, எப்போது இழந்தான் என்று அவனாலேயே உறுதியாகச் சொல்ல முடியாது. கட்டுப்பாடை இழந்தான் என்றால் அவனது தோல்விகள் அல்ல, அவனது வெற்றியை. தன் நிஜ உலகத்தில் தான் வேண்டுவதும் கிடைப்பதும் வெவ்வேறாக இருக்க, தன் மாய உலகத்தில் தன் இச்சைகளுக்கு மாறான தோல்விகள் பெறுவதே அவனது இலக்காக மாறியது. அவனால் விபத்துகளை ஏற்படுத்த முடியவில்லை, குறி தவறிச் சுட முடியவில்லை, கால் இடறிக் கீழே விழமுடியவில்லை, எல்லா லெவல்களையும் கடந்து சென்று கொண்டேயிருந்தான். இதற்கு மாறான நிஜ உலகிலோ அதற்கு நேர்மாறான வாழ்க்கை. அவன் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பயம் கொண்டிருந்தான், அவன் டூவிலர் மெக்கானிக்கின் காரைப் பற்களையே மனநல மருத்துவரும் கொண்டிருந்ததால் அவர்கள் மீது நம்பிக்கை இழந்திருந்தான். தன் அலுவலகத்தில் ஒரு சேச்சி “ஓஜோ” போர்டுகள் பற்றி அறிமுகம் செய்திருந்தாள். அவளைப் பிரிந்த கணத்திலிருந்து யாருடைய பேச்சினையும் கேளாத UNIFORM அணிந்தவன் அன்று மாற்று ஆடை அணிந்திருந்தான். ஒவ்வொரு மாதமும் சந்தைக்கு வரும் பெரும்பாலான கேம்களின் எண்ணிக்கையால், அறையிலேயே சுற்றிக் கொண்டிருந்த டிஜிட்டல் அக்ரலிக் வாசனையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆவிகள் அவனுக்கு ஆறுதலாக அமையலாம் என்று நம்பினான். 


“சேச்சியும் ஆறுதலாக இருக்கலாம்” என்று ஒரு குரல் கேட்டது… அந்த குரல் போலிபோனிக்கா !! மோனோடோனா என்று அவதானிக்க முடியவில்லை. அதே சமயம், அந்தக் குரல் எதன் எதிரொலி என்று யோசிக்க வாய்ப்பளித்தது. தனது மனதுக்கும், அறிவுக்கும் உள்ளேயிருக்கின்ற உயிர்த்தன்மையோடு ஆழப் புதைந்திருக்கும் செல்களின் செய்தியாக தனக்குள்ளே கேட்ட குரல் அது.. 

மீண்டும் அது.



செவ்வாய், 19 ஜனவரி, 2016

அது - 01

அவள் கடைசியாக என்னிடம் சொல்லிய வார்த்தை ஞாபமிருக்கிறதா என்று அதனிடம் கேட்டேன். அது மிகச் சரியாக சொன்னது, “விட்டுவிடாதே தொடர்ந்திடு”. அவளின் குரலுக்குத் தெரியாது, அதற்கடுத்ததாய் நான் உதிர்த்த வார்த்தைகள் எல்லாவற்றையும் மாற்றிவிடப் போகிறது என்று.



“விட்டுவிடாதே தொடர்ந்திடு” அவள் சொன்னாள், நானும் சொன்னேன். இப்போது அதுவும் சொல்கிறது

சரிதான், என் கேள்விக்கு சரியான பதில் சொன்ன மகிழ்ச்சியில் குதித்தது. அதே போலா நான் அவளிடம் இறுதியாக என்ன சொன்னேன் தெரியுமா என்றேன். இன்னமும் நான் அவற்றைச் சொல்லவில்லை என்றது. ஆம் இன்னும் அவற்றைச் சொல்லவில்லை. நான் அவளிடம் சொன்ன சொற்கள் இறுதியானவை அல்ல, இறுதியாய் சொல்வதற்கு என்னிடம் சொற்கள் இருக்கின்றன. அதனை அது மறைத்து வைத்திருக்கிறது, இப்பொழுது எனக்கிருக்கும் குழப்பமெல்லாம், அவற்றைத் தேடிக் கண்டடைவதா? இல்லை அப்படியே இருக்கட்டுமா என்று தான். பூட்டி வைத்திருக்கும் ட்ரங்க் பெட்டியினுள் புறாவின் சிறகசைப்பு போன்ற ஓசை எதிரொலியோடு கேட்கின்றது. அதன் ACOUSTICS மனதில் ஒலிக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்ட என் சொல்லின் பரிதவிப்பு தான். இப்போது நான் என்ன செய்யட்டும்.

பகலில் அந்த சொற்களைப் பற்றி நான் கண்டுகொண்டதில்லை, அவை பற்றிய நினைவு வராமல் என் வேலைகள் என் கழுத்தைச் சுற்றியிருக்கின்றன. இரவில் அவற்றைத் தேடியெடுக்கப் புறப்படுகிறேன், ஞாபகம் வந்தவுடனேயே அந்த தேடல் ஒன்று தான் என்னை அசைப் போடுகின்றது. ஆனால் அந்தச் சொற்களை மறைத்து வைத்திருக்கும் அது, மாலையில் விழித்துக் கொள்கிறது. அது விழித்திருக்கும் பொழுது என்னால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது, மிகவும் நூதனமாக அவற்றை என்னிடம் இருந்து மறைத்து வைத்திருக்கின்றதாய் அது என்னிடம் சொல்லியிருக்கிறது. அது என் மீது கொஞ்சமும் கரிசனமற்றது என்பது எனக்கு நன்றாகப் புரிந்திருந்தது. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டாமலா போய்விடும். காத்திருக்கிறேன். அது என் நினைவுக்கும், மறதிக்கும் நடுவே உண்டு களித்து உறங்கி தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

அவற்றைக் கவர்வது எப்படி?

முதல் உபாயம் : 
அது உறங்கும் கணத்தில் அச்சொற்களைக் கண்டு கொள்ள வேண்டும்

இரண்டாம் உபாயம் : 
அதனைக் கொல்ல வேண்டும்.

இதில் சில அபாயங்களும் இருக்கின்றன –
  • நான் கவர்ந்தது உண்மையில் என்னுடைய சொற்கள் என்று யார் ஊர்ஜிதம் செய்வார்கள்.
  • ஒருவேளை அந்தச் சொற்கள் என்னையே கொன்று விட்டால்…. 
உபாயம், அபாயம் பற்றிக் கவலைப்படும் நிலையில் நானில்லை. நேரமில்லை, பொறுமையில்லை, தைரியமில்லை என பட்டியல் நீள்கிறது. இல்லாது போனவற்றிட்கும், இருக்கின்றவைகளுக்கும் மத்தியில் ஒன்று தெரிகிறது, வார்த்தை விளையாட்டு அல்ல, அது வளர்பிறையோ தேய்பிறையோ அல்ல.. அந்நிலையில் அது வளரவும் செய்யும், தேய்ந்தும் போகலாம். அது தான் அது

மழையின், கடற்கரையின் உப்புக்காற்றில், வெயிலின் கானல் நீரில், நிலவின் தகிக்கும் florescent வண்ணத்தில் நிற்கதியாய் தொங்கிக் கொண்டிருக்கும் துருப்பிடித்த கிட்டார் ஒன்றினை யாரோ வெறித்தனமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். Luckily or lustily , those lightning electrified the strings.That's how my pineal gland pierced on the very moment

வியாழன், 14 ஜனவரி, 2016

சிவில் சமூகத்தில் நாஷ்டா தயாரிக்கும் முறை



இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எந்தப் பக்கம் ( E-BOOK VERSION )
Preface
உன் பெயரென்ன
XXXXX XXXXXX
ஓ அந்த சாதியா
You’re Admitted.

Content
1.கொஞ்சம் சமூகப் பிரச்சினை
2.கொஞ்சம் அரசியல்
3.கலாச்சாரம்
4.அரசியல்
5.மதம்
6.சாதி
7.போகி
8.பொங்கல்
9.மாட்டுப் பொங்கல்
10. ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு – ஏறுதழுவுதல் – பொங்கல் விழா
என்ன வேணும்னாலும் சொல்லு

“கவிதை சொல்லவா? கனவை சொல்லவா””
“கணக்கு சொல்லு”
”தோடா நான் என்ன ரஸ்ஸல் மாணவனா”
உனக்குத் தெரிஞ்சத சொல்லு

நான் சொல்லப் போறது
இடியாப்பம் செய்யும் முறை

A –என்றால் மாட்டுக் கறி கூடாதுன்னு சொல்லனும்
இடியாப்பத்துக்கு பாயா தான வேண்டும்??
B-என்றால் ஜல்லிக்கட்டு கூடாதுன்னு சொல்லனும்
C-என்றால் மாட்டுத்தோல் ஏற்றுமதி வேண்டாம்னு சொல்லனும்

A, B,C  மூணுக்குமே எதிரா நிக்கிறவனின் பெயரென்ன

ஏ மற்றும் பி க்கு மட்டும் எதிரா நிற்பவனின்
கணக்கு தான் வெற்றி பெற்ற சூத்திரம்

”ஏ”க்கு ஏற்றுக் கொண்டு, “பீ”க்கு இசைவு சொல்லும்
முட்டாள்களால் ஒன்றும் நிகழப்போவதில்லை

“ஏ”க்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீ” இசைவு சொல்பவன்
தோழர்களாக அறியப்படுவான் (”சீ”க்களின் ஆசீர்வாதத்தில்)

“ஏ”க்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீ” எதிர்ப்பு சொல்பவன்
கண்டு கொள்ளப்படமாட்டான் (”சீ”க்களின் ஆசீர்வாதத்தில்)

“ஏ”க்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீ” எதிர்ப்பு தெரிவித்து
“சீ”யையும் எதிர்ப்பவர்கள்
குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கும் அல்லது
பைத்தியமாகிக் கொண்டிருப்பார்கள்

“சீ”க்கள் நடத்தும் அரசாங்கத்தில்
காளைகளுக்கு காயடிப்பதும்,
சுவற்றுக்கு வண்ணம் பூசுவதும் இயல்பு

சிவப்பு தூசி படிந்தால் காவி
காவியில் மாசு படிந்தால் கருப்பு

“ஐயோ வகுப்பு மாதிரி உட்கார்ந்துட்டேன்”






செவ்வாய், 12 ஜனவரி, 2016

மீண்டுமது #




·         அது என் கடிகாரத்தை ஒளித்து வைக்கும் பிரயர்த்தனத்தில் தூங்க ஆரம்பித்துவிட்டது.. இந்தமுறை தலையனை வைத்தல் கழுத்தை நெறித்தல் இரண்டிற்குமே ஆசைப்படுகிறேன்..
*****
·         அது என்னைக் கட்டுப்படுத்துகிறது, சாந்தப்படுத்துகிறது, சமாதானப்படுத்தவும் செய்கிறது... பின்னர் தூங்கிவிட்டேனா என்று எழுப்பிப் பார்க்கிறது ஒவ்வொரு முறையும்...
*****
·         அவன் தந்த யோசனைப்படி தான் கச்சிதமாக அடக்கம் செய்துவிட்டு வந்தேன்.. ஆமென்!! வீட்டிற்கு வந்தால் கதவைத் திறந்து விடுகிறது அது
*****
·         நீ உண்மையில்லை என்றேன், அதனால் தான் அனுமதிக்கப்படுகிறேன் என்கிறது அது
*****
·          என்னதான் வேண்டுமென்றேன் , முதுகில் தன் பெயரெழுதிக் கண்டுபிடி என்றது, அது. 
*****
·         கதை சொல்லித் தூங்க வைக்கிறேன் என்றது. பின்பு அது சொல்லத் துவங்கியது என்னைப் பற்றிய கதை ஒன்றினை.
*****
·         என் கனவுகளில் தன் இஷ்டத்திற்கு ரீரிகார்டிங் செய்கிறது அது
*****

·         இறுதி வாய்ப்பு தரலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் பயமின்றி அலட்சியமாய்  மல்லாக்கப் படுத்திருக்கிறது அது.
*****
·         ஒரேயொரு பொய் சொன்னேன். அது சம்பவித்தது. இப்போது, அவள் அதனைக் கடந்து செல்கிறாள், நான் அவர்களை கடந்துவிட்டேன். அஸ்தமனத்திலும் ஒலித்த குரலைப் பத்திரப்படுத்துவிட்டேன். இனி இங்கில்லை அது
*****
·         அது சாகவில்லை துடிக்கின்றது
*****
·         அது துடித்திருக்கவும் இல்லை. மௌனிக்கிறது
*****
·         அது நான். நானே அது.... தந்திகள் மீட்டப்படட்டும்
*****
·         மவுனித்திருந்தது மறைந்து கொண்டது... அது
*****
·         அதனை வெல்ல அதுவாகவே இரு
·          

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பஜ்ஜி - சொஜ்ஜி 92 - தலைவன் இருக்கிறான்

முன் குறிப்பு:

ஆம் விகடனில் சிறுகதை வந்தால் அது பெருமை தரும் விஷயமாகத் தான் இருந்தது. நானும் சில மாதங்கள் முன்பு வரை அதற்கு கதைகள் அனுப்பியிருக்கிறேன்.


பல மாதங்களுக்குப் பிறகு விகடனை இரவல் வாங்கிப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிட்டியது. MAIN STREAM பத்திரிக்கை 25 ரூபாய் மாறியது தெரியாது, நான் கடைசியாக வாங்கும் போது 17 ரூபாய். நண்பர் அகரமுதல்வனின் கதை இந்த இதழில் வெளியாகி இருப்பதால் அதை வாசிக்கும் பொருட்டு இரவல் வாங்கினேன். விகடன் விருதுச் சிறப்பிதழாக இவ்விதழில், சினிமா கலைஞர்கள், ஊடக நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், சிறந்த பைக், சிறந்த கார், சிறந்த விளம்பரம் ஆகியவற்றுடன் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் விருது வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஒரு வருடத்தில், விருதுகளை முன்வைத்து விருதுகளையும், விருது அமைப்புகளையும் விஜயகாந்தை விட அதிகமாகவே காரித் துப்பிக் கொண்டிருக்கும் கூட்டமாக பல அமைப்புகள் இருக்கத் தான் செய்கிறது. நானும் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ள நாட்டமில்லை என்பதால் இப்போதைக்கு பாராட்டுகிறேன்.. சிலர் துரதிர்ஷடவசமாக அந்த பட்டியலில் சேர்ந்திருப்பதும் அவர்கள் பிழையல்ல. எத்தனையோ நல்ல பாடல்கள் வந்திருந்தாலும், ஏ.ஆர். ரகுமானின் மகனென்பதால் தான் இந்த விருது(சிறந்த ஆண் பாடகர்) அந்தச் சிறுவனுக்கு வழங்கப்படுகிறது என்கிற லாஜிக் சாமான்யனுக்குப் புரியாது என்கிற விகடன் விருதுத் திட்டக் குழுவிற்கு பாராட்டுகள். இந்த வருடம் ”சிறந்த வில்லி” என்கிற விருது வேறு, அடுத்த வருடம் வில்லி கதாப்பாத்திரம் உள்ள படங்கள் வராவிட்டால் இந்த விருதுக்கான ஆப்ஷன்?? இது போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட விகடன் விருது பற்றி ஆய்வுக் கட்டுரை எழுத நேரம் விரயம் செய்ய இயலாது இருந்தாலும்,   "பாக்ஸ்" எனும் நூலிற்கான விருது குறித்து சற்றே சஞ்சலமடைகிறது. ஷோபா சக்தியின் படைப்புகள் குறித்தும் அவர் அரசியல் குறித்தும் வாசிப்புத் தளத்தில் தீவிரமாக இயங்கும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். விகடன் மட்டுமில்லாமல் முக்கிய ஊடகங்கள் இந்நாவலை முன் வைக்கின்றன.

ஷோபாசக்தியை புலம்பெயர் இலங்கைத் தமிழனாக முன்னிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அவரது படைப்புகள் எந்த அரசியலோடு வேண்டுமானாலும் இருக்கலாம் இது அவரது உரிமை. ஆனால் ஊடகங்களும், விமரச்கர்களும் அங்கீகரிப்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியலைப் பற்றி என்னவென்று சொல்வது. பிரச்சார இலக்கியங்களுக்கு பிரச்சாரம் செய்வது ஊடக அரசியல் தான் என்று திட்டவட்டமாக எப்படிச் சொல்ல முடிகிறது என்றால். இந்த இதழில் வந்திருக்கும் அகரமுதல்வனின் சிறுகதையை வைத்து தான். அதாவது கணக்கை டேலி செய்துவிடுகிறார்களாம். இது கதை விவாதக் குழு, தேர்வுக் குழு போன்றோர்கள் எடுக்கும் முடிவு என்று உள்விவகாரம் பற்றியெல்லாம் கேள்வி கேட்கவும் வேண்டாம்.

பரிசு கொடுக்கும் இவர்கள் (விகடன்) , இந்நூலினைக் குறித்து என்ன சொல்கிறார்கள் தெரியுமா “வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டவர்களின் வலியை உரக்கச் சொன்ன வகையில், பாக்ஸ் ஒரு முக்கியமான நாவல்”. ஷோபாசக்தியின் குரல் தோற்கடிக்கப்பட்டவர்களின் சார்பாகவா இருக்கிறது? புலிகள் மீதான விமர்சனம் இன்று ELITE ஆக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் மீதான விமர்சனமே மெல்ல தமிழீழம் என்கிற கருத்தாக்கத்தையே எதிர்க்கும் குரலாக மேதாவிகளாலும், புரட்சியாளர்களாலும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த DISESTABLISHMENT, அண்மைக்காலத்தில் மிகத் தீவரமாகப் பரவி வருகிறது. ஓஷோவை எதிர்க்கும் பொழுது நாத்திகர்களும், மத நிறுவனங்களும் ஒன்றாக ஒரே வரிசையில் நிற்பது போல, வலதும், இடதும் பாரபட்சமின்றி ஒன்றாக நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது இயக்கத்தையும், ஈழ உணர்வையும் ஆதரித்து எழுதியவர்கள் பலர் தங்கள் நிறத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிவிட்டனர். இவர்களுக்காக வெள்ளை நிற சொகுசு கேரவேன்களில் அந்த ஆப்ரேஷன்கள் நிபுணர்களால் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிறம் மாறியதும் ரத்தம் - சர்பத் ஆகிவிடுகிறது. சர்பத் சிவப்பிற்கும், காவிக்கும் மத்தியிலிருக்கும் நிறம்.

தமிழ் இந்துவும் இந்நாவலைச் சிறந்த நாவலாகக் கொண்டாடுகிறது, // நமது அரசியல் சார்புகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் அப்பாற்பட்டு எல்லாத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட வதைகளின் கதைகளைத்தான் இந்த நாவல் சொல்கிறது. // இது தமிழ் இந்துவின் குரல். தமிழ் இந்து, தி இந்து குழுமத்தின் அங்கம் என்பது அவ்வப்போது மறந்துவிடுகிறது. இதற்கு மேல் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இங்கே நடுநிலை என்று எதனையும் சொல்ல முடியாத போது. ”இவற்றையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்?” என்றும் சொல்லத் தோன்றுகிறது..


பிரபாகரனின் முகம் பதித்தக் காலண்டர் ஒன்றினை எடுத்துச் சென்றேன். என் வீட்டின் படிக்கும் அறையில் என் கணினியின் முன்னே தொங்கவைத்து விட்டு வேலைக்குச் சென்றேன். பின்னர், வீட்டிற்குத் திரும்புகையில் அந்தக் வரவேற்பறைக்கு மாறியிருந்தது. இதற்கு முன்னர் அவ்விடத்தில் பிள்ளையாரும், பாலாஜியும், ஏசுநாதரும் தான் இருந்திருக்கிறார்கள். ”இங்கே ஏன்” என்று கேட்டேன், ”இங்க தான் இது இருக்கணும்” என்று பதில் வந்தது.



மன்னார்குடியில் பத்துக்கு ஒன்பது டீக்கடைகளில் பிரபாகரனின் படத்தைப் பார்க்க முடியும். வத்திராயிருப்பில் எம்.ஜி.ஆர், பிரபாகரன் இவர்கள் மரணமடைந்ததை இன்னும் ஏற்கமாட்டார்கள். எத்தனை லங்காதி, அமெரிக்க, இந்துத்வ, ருஷியக் கோட்பாடுகளாலும் பிரபாகரனை மறக்கடிக்கச் செய்ய முடியாது.. ஏனென்றால் இது ஒரு இனத்தின் நீண்ட கால தாகத்தின் அடையாளம்.