அற்புதமானவைகளின் படிமம் அவள். யாழ் மீட்டும் வேளையிலும் மண்புழுவின் நெளிதல் மேல் அவளுக்கு காதலிருக்கிறது. யோசுவாவின்
தத்துவங்களை நேசிக்கிறாள், அழிப்பவர்களை சமன் செய்பவர்கள் என்கிறாள். அமுதமாய் இசைப்பவளின் குரலும் அதுவாய்
இருந்தும், அவள் விஷ்னுவின் கழுத்தில் நின்று நீலகண்டனைப் பருகும் Fluorescent
விஷம். அந்த ஐந்து விநாடி ‘களுக்’ சிரிப்பும் அவ்வப்போது தொடர்ந்து வரும்.
மரமும், செடியும் அவளைத் தழுவத் துடிக்கின்றது, மாவும், பலாவும்
அவள் விரல், பல் படக் காத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
மொழி அவளுக்கானது, அவள் கட்டமைத்தது, சட்டை உரித்த பாம்பென
எப்போதும் வழுவழுப்பானது, மென்மையானது, ஒளிர்வது அல்லது தீப்தமானது அந்தச் சர்பங்களால்
தீண்டப்படுவது ஒரு நல்ல மரணம் எனப்படும், சில கணங்கள் ஒரு மரணத்தை சுகிப்பது, நமது
வாழ்க்கையின் முக்கியத் தருணங்கள். மற்றபடி அவள் மொழியில் பயணிக்க அவள் இடம் தரும் ஓடம் மிகவும் கலைநயமிக்கது, ஓடத்தில் ஏறியதுமே பூக்களின் நறுமனங்களும், செல்லோவின் தந்தியோசையும் உங்களை மகிழ்விக்கும்.
அவள் நேசிக்கிறாள் – பட்டாம்பூச்சி, மகிழம்பூ, தாழம்பூ, பூக்காரி,
மாதரசி, மாசாத்தி, இளவரசன், காளிதாசன், கண்ணதாசன், பாரதி, பெரியார், மார்க்ஸ், மணிகண்டன்
என கணக்கில்லாமல் நேசிக்கிறாள்.
அவளுக்காக மொட்டு திறக்கிறது, கவிதை எழுதப்படுகிறது, தூரிகைகள்
சமைக்கப்படுகிறது, வேகம்கள் கீறப்படுகின்றன, பாடல் இசைக்கப்படுகிறது, மழை பெய்கிறது,
பொழிகிறது, தூறுகிறது, கொட்டுகிறது, நனைக்கிறது, அந்தச் சிறுமியும் பாடுகிறாள், யாரோ
வந்து தழுவுகிறார்கள், யாருக்கு காதல் கைகூடுகிறது, யாரேனும் தங்கள் அரசியலை சுயவிமர்சனம்
செய்திருக்கலாம், பொறாமைக்கும் மேலே ஒரு ‘உச்’ கொட்டியிருக்கலாம்,
அவள் பெயராலேயே வேறு யாராவது சந்தோஷித்து இருக்கலாம், கவிதை
எழுதியிருக்கலாம், தன்னை மறந்திருக்கலாம், நன்றாக உண்டிருக்கலாம், அல்லது நடனமாடியோ,
இசைத்தோ , ரசித்தபடியே இருந்திருக்கலாம் , யாருக்கோ, யாரிடமிருந்தோ, யாரோலோ முத்தங்கள்
பரிமாறப்பட்டிருக்கும், கூடியிருப்பர், மழையில் நனைந்திருப்பர், விழிப்புணர்வு அடைந்திருப்பர்,
காதல் கொண்டிருப்பர், சிரித்து இருப்பர், தற்கொலை முயற்சியிலிருக்கலாம், வேறு காதல்
கைகூடியிருக்கலாம்.
அவளைப் பற்றியும், அவளைச் சுற்றியும் தான் என்னென்னவெல்லாம்
நடக்கட்டும், அவளை அவளாய் இருக்க விடுங்கள்..
அவள் காலம் சுகமாய்ப் பிரசிவித்த தேவி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக