இந்த வருடத்தின் ஏப்ரல் 1 என நினைக்கிறேன் கைகளில்
ஜெஹாங்கீர் ஆர்ட் கேலரி என்கிற லோகோவுடைய உறையினை கையில் வைத்திருந்தார். “மே மாதம்
3ஆம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு என்னுடைய SOLO SHOW” என்று சொல்லும் போதே துள்ளிக்
குதித்தேன். நான் அடுத்த மாதம் அசலான வடா பாவ், பாவ் பாஜி எல்லாம் சாப்பிடப் போகிறேன்
என்று, ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி பற்றி விட்டல்ராவ் தன் ‘காலவெளி’ நாவலில் சொல்லியிருந்ததை
தான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் நாயகன், பாட்ஷா, தலைவா என்று சினிமாக்களில் மட்டும்
தான் பார்த்திருக்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு தான் அந்த ஊரின் அழகைப்
பற்றிய தகவல்கள் மனதில் பதிந்தன என்பது ரஸிக்கக் கூடிய வரலாறு அல்ல.
ஆனால் அன்று சொன்னத் தகவலோடு சரி, மனுஷன் நெருப்பாய்
மாறிவிட்டார். அவருடைய தொனியில் சொல்லப் போனால் TOTAL DETACHMENT, இந்த பதத்தை அடிக்கடி
பிரயோகித்திருக்கிறார். அப்போது தான் நாங்கள் அதை உணர்ந்தோம். டியர் – ரீடர்ஸ் இந்த
இடத்தை டாக் செய்துக் கொள்ளுங்கள் மறுபடியும் இந்த இடத்தை நினைவு கொள்ள வேண்டி வரும்.
அதற்குப் பின்னர் சேர்ந்த மாதிரி இரண்டொரு வாக்கியங்கள் கூட சேர்ந்துப் பேச முடியாத
படி மாறிவிட்டார், மும்பை சென்று பார்க்காத வரை அதற்கான நியாங்கள் புலப்படவில்லை. ஒரு
கலைஞன் தன்னை அற்பனிப்பது பற்றியும் எது எத்தனைத் தீவிரமானது என்பதையும் அன்று தான்
உணர்ந்தேன். இந்த ஒரு மாத இடைவெளியில் அவர் தன் கல்லூரியில் ஆண்டுத் தேர்வையும் எழுதி
முடித்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது. (ஆம் அவர் மாணவராகவும் இருக்கிறார்??!!).
நானும் மும்பை வருகிறேன் என்று சொல்லும் போதெல்லாம் அதை அவர் சட்டை செய்யவில்லை – அதற்கான(பதில்
சொல்லும்) நேரம் அவருக்கு இல்லை என்பதும் தெரியும்.
மும்பைக்கு எப்படித் தனியாகச் செல்வது என்று கொஞ்சம்
தயக்கம் தான், அலுவல் ரீதியாகவோ, இல்லை தெரிந்தவர்கள் என்று யாரும் இருந்தார்கள் எனில்
போய் வரலாம், சுற்றுலா என்றாலாவது அதைத் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இங்கே இருக்கும் எல்லா கேலரிகளுக்குள்ளும் அவ்வளவு எளிதாகச் செல்ல முடியாது, RSVP போல ஏதாவது மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்ய
வேண்டி வரும் என்று நானாக முன்முடிவு வைத்திருந்தேன். நமக்குத் தெரிந்ததோ “ஏக் காவ்
மே ஏக் கிஸான் ரகுதாதா” என்கிற வாக்கியமும், அண்மைக்காலமாக அறிந்து கொண்ட “ஆப் கி பார்
மோடி கி சர்கார்” என்கிற சொலவடையும் தான். பாலசுப்ரமணியன் சார் வேறு தினமும் இரண்டு
போட்டோக்களாக மும்பை கண்காட்சியைப் பற்றி தன் ஃபேஸ்புக் சுவரில் போட்டப் பதிவுகள் ஆர்வத்தை
அதிகரிக்க வைத்தது.
என் தம்பி ஒருத்தனிடம் இதைப் பற்றியெல்லாம் எடுத்தியம்பி,
ஏதேனும் அவசரமென்றால் என் வங்கிக் கணக்குக்கு கொஞ்சம் பணம் மாற்றிப் பெற்றிடும் நம்பிக்கையைப்
பெற்றதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த ஒரு மாதத்தில் யார் அழைத்தாலும் தலைவர் போனை
எடுப்பதாக இல்லை, அடித்துப் பிடித்து ப்ரீமியம் தட்காலில் டிக்கெட் எடுத்தாகிவிட்டது,
கணையாழிக்குச் சென்று இந்த மாதிரிக் கண்காட்சிக்கு செல்கிறேன் என்று ஐயாவிடம் சொல்லும்
போது, ஐயா திடீரென்று என் பயணச் செலவை கணையாழியே ஏற்கும் என்றும் – ஓவியங்கள் பற்றி
எழுத ஆரம்பித்த பின் கிடைத்த முதல் ஷ்பான்சர்சிப் என்பதிலும் அதைத் தரும் கரங்கள் மீதிருந்த
மரியாதையும் மகிழ்ச்சியின் வால்டேஜை ஏற்றியது.
சென்னை எக்ஸ்பிரஸில் கிளம்பலானேன், 50 டிகிரியைத் தொடும் வெப்பத்தை வரலாற்றில்
பதிவு செய்து கொண்டிருந்த காலம் அது – தண்ணீருக்கே இந்தப் பயணத்தில் அதிகம் செலவழிக்கப்
போகிறேன் என்று உறுதி செய்துக் கொண்டேன். “நான் மும்பை வந்துக் கொண்டிருக்கிறேன்” என்று
ஒரு குறுந்தகவல் –அழைத்தார் – ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஸன் இருந்தாலும், வந்திறங்க வேண்டிய
இடத்தைச் சொல்லி வந்தவுடன் அழைக்குமாறு சொல்லி போனை வைத்தார். நினைத்த அளவுக்குச் சிரமம்
இருக்காது என்று மனம் சாந்தி அடைந்தது. உடன்பயணித்து ரயில் சிநேகிதர்களாக்கிக் கொண்ட
நண்பர்களுடன் ஒரு டாக்ஸியை ஷேர் பண்ணி ரீகல் தியேட்டரில் வந்து இறங்கினேன்.
அதிகாலையில் ரீகல் தியேட்டரில் இருந்து பாரம்பரியமிக்க
கட்டங்களையும், கேட்வே ஆஃப் இந்தியாவையும் பார்ப்பதில் மனம் லகுவாகி விட்டிருந்தது.
பார்ஸிக்களின் கட்டுப்பாட்டில் தான் இன்றளவும் பெரும்பாலும் இருப்பதாக அறிந்தேன். அதிகாலை
என்பதால் சலனமற்று இருந்த அந்தப் பகுதியில் ஒரு போலீஸ்வாலா மட்டும் என்னைப் பார்த்துக்
கொண்டே ஜீப்பில் அமர்ந்திருந்தார். அப்புறம் அவரை சந்திதேன், அவரை சந்திக்கும் போது
முதன்முறை ஒரு தீபாவளிக்கு முந்தைய மாலைப் பொழுதை மீண்டும் நினைவில் கொண்டு வந்தது.
2013, நவம்பர் – 02, சனிக்கிழமை. ஒரு சிற்றிதழில்
வெளியாகியிருந்த சுமாரான கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்து என்னை அடையார் பக்கம் வரும்பொழுது
அவரது ஸ்டூடியோவிற்கு வருமாறு அழைத்திருந்தார். அதற்கு முன் சில ஓவியர்களின் ஸ்டூடியோவிற்கு
சென்றதால், இவரை முதன் முதலில் சந்திக்கும் போதே எனக்கு ஆச்சரியம் அளித்தது. எங்கேயும்
பெயிண்டிங் இல்லை, “இழைத்தலின் மேல் எனக்கு நம்புக்கை இல்லை” என்று வேறு சொன்னார்.
குழம்பினேன். அவரது ‘நம்மோடு தான் பேசுகிறார்கள்’ புத்தகம் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’
போன்ற ஒரு நாஸ்டால்ஜிக் லேயராகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சந்திப்பு தான் என்னை –
என் பயணத்தை எல்லாம் திசை திருப்பிய நாளாக அமைந்தது என்பதை இப்போது எழுதிக் கொண்டிருக்கையில்
உணர முடிகிறது. இந்தச் சம்பவம்- என் அனுபவத்தை சொல்வதற்காக நான் பதியவில்லை. முக்கியமாக
நான் அவரிடம் கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதிலுக்கான தொடர்ச்சியை நான்
இந்த மும்பைக் கண்காட்சி வரை பார்க்கிறேன்.
“உங்க அடுத்த திட்டம் என்ன?”
ஒரு நீண்ட உரையாடலாக அந்தக் கேள்விக்குப் பின்னான
பதிலாய் அது மாறியது. இணையத்தில் தேடிப் பார்த்த அவரது சில ஓவியங்களை வைத்து அவரோடு
பேசிக்கொண்டிருந்தேன், அவை யாவும் “Figurative” ஓவியங்கள். அவ்வுரையாடல் முடியும் தருவாயில்
சொன்னார் “நாம் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், மறந்து போற விஷயங்களுக்கும் இடையில்
இருப்பதைக் கொண்டு வர விரும்புகிறேன்” என்றார். அதை ஒட்டி சில உருவாக்கங்களையும் காண்பித்தார்
– அவரது டிஜிட்டல் படைப்புகள்.
இன்று மும்பைக் கண்காட்சி அவரது கனவின் மெய்ப்பொருளாக
உருவாக்கம் பெற்றிருப்பது நான் கண்ட தரிசனம். என்னால் இங்கு ஒரு சாட்சியாக இவரது ஒரு
பயணத்தின் 18 மாத காலமாக இருந்த வந்த தேடலை இப்போது ஆவனப்படுத்தமுடிகின்றது. அது இன்னமும்
சொல்லப்போனால் “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் புத்தகத்திலிருந்தே தொடங்குகிறது
என்று சொல்லலாம், ஒரு குளத்தின் GEOMETRICAL வடிவத்தைப் பற்றிப் பேசியபடியே துவங்கும்
நூல், அரூபங்களைப் பற்றி பேசியபடிதான் முடிகிறது. அப்படியாயின் அது ஒரு நீண்ட தேடலை
அடிப்படையாய் கொண்டிருக்கின்ற பயணம் என்பதை உணர முடிகிறது.
இன்று கணையாழியில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும்
கட்டுரைகளில் பதிவு செய்து வரும் விஷயம், பல்வேறு ஓவியர்களின் TRANSITIONஐ அடிப்படையாக
வைத்து உருவான கட்டுரைகளே. இப்படியான TRANSITIONஐ நானே நேரடியாகக் கண்டுணர்வது என்னளவில்
தொடர்ந்து எழுதப்போகும் கட்டுரைகளுக்கும், பிற செயல்பாடுகளுக்கும் பேருதவி செய்யும்
என்று நம்புகிறேன். அதற்காகத் தான் எப்படிப்பட்டேனும் மும்பை செல்லவேண்டும் என்கிற
தீர்மானம் உருவாகிற்று..
அதே நேரம்....
(அப்படி ஒரே பதிவுல எல்லாம் முடிக்க முடியாது.. )
ஜீவ கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக