வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பஜ்ஜி சொஜ்ஜி - 76 * நைட்டி அணிந்த தேவதை

சிவகாசி  கந்தகபூமியை குட்டிஜப்பனாக்கி வைத்திருக்கும் மண்ணில், அங்கிருந்து 35 மைல் தூரத்தில் பிறந்த எனக்கு கலைச்சின்னங்கள் பாதுகாப்பு பற்றி பேச வாய்ப்பு கிடைத்திருக்கும் போது, இடிக்கப்பட்ட என் சொந்த வீட்டின் சிதிலங்கள் பற்றிய நினைவு எழாமலில்லை  வெங்கலத்திலான கலைநயமிக்க பல பானைகளும், வித விதமான பாத்திரங்களும் எவர்சில்வர் என்று எளிமையாய் கையாளப் பழகியிருந்த பாத்திரங்களுக்கு விற்கப்பட்டதும் வேறு எந்த அடுக்குமாடி நாகரிக அங்காடிகளிலோ நினைத்துப் பார்க்க முடியா விலைக்கு வாங்கி  என் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் கொடுக்காய் புளியோடு ஒப்பிட்டுப் பேசுவதும் ஒன்று தான். கலையுணர்வு அகன்று விட்ட சமூகத்தில் மிஞ்சியிருக்க ஒன்றுமில்லை. ஆம் இப்போது எங்கள் வீடிருந்த இடம் வெற்று நிலம்.
*
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அருங்காட்சியகம் இருப்பது  அரசாங்கம் அமைக்கும் போது உறுதிமொழியாகச் சொல்லப்படும் ரகசியக் காப்பு பிரமானங்களிலும் வைத்திருப்பார்கள் போல, நான் இருபது வருடமாக வாழ்ந்து வந்த ஊரில் அப்படி ஒரு அரங்கம் இருந்தது எனக்குத் தெரியாமலே போனது. அப்படி அந்த ஊரை விட்டு மாற்றலாகிப் போன பின்பு அவ்வரங்கம் பற்றி அறிய வந்ததும், ஒரு திருமணத்திற்காக அதே ஊருக்கு விடுப்பில் சென்ற போது  அந்த மியூசியத்தின் அரங்க அதிகாரியும் அதற்குப் பக்கத்து மண்டபத்திலுள்ள அவரது நெருங்கிய உறவின் திருமணத்திற்கு சென்றிருப்பதாக அந்த அரங்கத்தின் காவலாளி சொன்னான் சார் !! அப்படி அங்க ஒன்னுமில்லை சார்  வெறும் தூசி தான் படிஞ்சுகிடக்கு” – அரங்கம் பூட்டப்பட்டிருந்தது.

சென்னை அருங்காட்சியத்தில் எங்கள் சொந்தவூரில் வறட்சியின் காரணமாய் ஒரு புதிய கிணறுவெட்ட முனையும் போது கிடைக்கப்பெற்ற ஜக்கம்மாவின் சிலை,கட்டபொம்மனின் பாசறை அங்கிருந்ததற்கான சாட்சியாக கேள்விப்பட்டிருந்த நான், அந்த சிலை அகழ்ந்தெடுக்கப்பட்டதும் அதற்குப் பாத்தியமென்று உரிமை கொண்டாடிய கட்டபொம்மனின் இனத்தை சேர்ந்த மக்களின் கோரிக்கையான அச்சிலையை வைத்து ஒரு கோயில் எழுப்ப முயற்சித்த மக்களிடமிருந்து  தேசியம் மீது நம்பிக்கை கொண்ட கணவான்கள், சென்னை மியூசியத்தில் சேர்த்துவிட்டதாய் சொன்னார்கள். இன்று விசாரித்தால் அப்படியொரு ஆவனமே வரவில்லை என்ற பதில் எனக்கு ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை  ஏனென்றால் வேறென்னவொன்றை எதிர்பார்க்க முடியும். இதற்கு நானும் ஒரு காரணம் என்று என்னிடமிருந்து தான் எண்ணிக்கையைத் துவங்குகிறேன்.

பனமலை ஓவியம் பற்றி கேட்டுக்கொண்டிருந்த நான், அதைத் தேடுவதற்கான முகவரியை திருவண்ணாமலையில் இருந்து தேடிக்கொண்டிருந்த போது அதை இணையத்தில் பதிந்துவைத்தவர்களில் எந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் அல்லது பயணக் கட்டுரை எழுத்தாளர்களின் கட்டுரைகளில் கிடைக்காத தகவலெல்லாம் வாரவழிபாட்டுக் கூட்டத்தில் அங்கத்தினராய் இருந்தவரின் வலைப்பதிவில் மட்டுமே கிடைத்ததும்; திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்கு சஞ்சலத்தை உருவாக்குமென்ற குரங்குச்சிலையின் ஆண்குறியை உடைத்துவிட்டு அதில் ஒரு மின் முரசை அமைத்தவர்கள் செயலும் முரண். அடிப்படைக்கலையுணர்வு என்பது துளியுமற்ற சமூகத்தில் இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வது இயல்பு தான்.
சிவகாசியில் இருக்கும் நமக்கு ஊர் வரலாற்றைச் சொல்லித்தருவதற்கு கோயில் தல வரலாற்றைத் தவிர வேறொன்றுமில்லை என்பது ஆறுதலான சேதி தான். திருத்தங்கலில் இருக்கும் டெரகோட்டா மண்பாண்டங்கள் பற்றியோ அல்லது சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை திருத்தங்கலில் வைத்து நடைபெற்ரது என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். ஆறாம் நூற்றாண்டுக் குடைவரை என்று சொல்கிறார்கள், கோயிலின் நிழற்படங்கள் இணையத்தில் கிடைக்கும் பொழுது அது கவலையளித்தது. குறைந்தபட்சம் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலின் பழமை எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்று. ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவை கேட்பாரற்று சிதிலமாகிவிடுகின்றன என்பது ஒருபுறமும், மற்றொரு பக்கம் அப்படி அவர்களை கையில் சிக்காமல் மக்களோடு இணைந்திருக்கும் கோயில்களை நான் புது வர்ணப்பூச்சுகளாலும், கிராணைட்களைக் கொண்டும் முறையற்ற மறுவுருவாக்க வேலைகளில் தன் தொன்மையை இழக்கின்றது. எத்தனையோ முறையற்ற கிராணைட் குவாரிகளில் லாபக்கணக்கில் கல்வெட்டுகளும், வரலாற்றுச் சின்னங்களும் அழிந்து போகின்றன.

 அர்ஜுனா நதி எனும் நதி இம்மாவட்டத்தில் தான் பாய்கிறது இன்று வரை அதில் அகழ்வாய்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அகழ்வாய்வுகளைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் செய்திகள் வந்தாலும் அது நம்மைச் சேரப்போவதில்லை. ஏனெனில் நாம் தான் வைப்பாறு, அர்ஜுனா நதியை பாதுகாப்பதற்காக நிர்மாணம் செய்யப்பட்ட கோயிலான இருக்கண்குடியில் சாமியின் பெயர் சொல்லியே அதன் வழிகளை அடைத்து விட்டோமே. வேடந்தாங்கள் போன்ற புகழ்பெற்ற சரணாலயங்களுக்கு வரும் வாய்க்காலில் எப்படி புதிய வீட்டு மனைத்திட்டங்களின் வரவு பறவைகளை ஏமாறச் செய்தன என்பது புதிய செய்தி, நம் ஊருக்காக இறக்குமதி செய்யப்பட்ட சீமவேலி மரங்கள் அதையே செய்ய ஆரம்பித்து சில பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

கழுகுமலை தமிழகத்தின் எல்லோரா என்று சொல்லப்படுகிறது, அர்ஜூனா நதியின் ஆற்றுப் படுக்கைகளில் கிடைத்து வரும் டெர்ரகோட்டா (மண்பாண்டங்களின் சிதிலங்கள்) அது கலக்கும் வேம்பார் கடல் பகுதி வரை நீண்டிருக்கலாம் பெரிய பொக்கிஷங்கள் சீமைவேலிக் காடுகளுக்குள் இருக்கலாம் (அவை தான் கொற்கைத் துறைமுகம் வரை நீண்டிருக்கும் நாகரிகத்தின் சுவடுகளாக இருக்கலாம்) ஆனால் சுரண்டப்பட்ட மணல் மாஃபியக்களின் இயந்திர ஓந்திகளின் பெரிய சக்கரங்களில் நசுக்கப்பட்டிருக்கும். தங்கள் காதல் வரலாற்றைச் செதுக்காமல், வரைவதற்கு ஏதுவாய் - கழுகுமலையின் வெட்டுவான் கோயிலில் வெள்ளையடித்தது நற்செயலே என்று சொல்லலாமா??
திருத்தங்கலின் சுதைச் சிற்பங்களில் இருப்பது இயற்கையான வண்ணம் தானா ? என்று அந்தப் பச்சை வண்ணத்தைப் பார்த்தபடி, குடைவரையைத் தேடினேன். ஒருவேளை நமக்குக் கிடைத்தத் தகவல் பொய்தானா ??

அத்தனை பிரம்மாண்டக் கோயில் ஒரு குடைவரையைத் தொடர்ந்து எழுப்பப்பட்டது என்று எனக்குத் தந்த அந்த மனிதர் பொய் சொல்லிவிட்டாரா என்றபடு கதவுகள் பூட்டப்பட்டிருந்த தெப்பத்தின் சிதிலமடைந்துக் கொண்டிருக்கும் படித்துறையை கவனித்தபடி.. இது இயற்கையான குளம் தான், வணிகத்தூது செல்லப் புறப்பட்டிருக்கும் சமணத் துறவி இந்தக் குளக்கரையைக் கடந்திருந்தால், இங்கே நிச்சயம் ஒரு குடைவரையை வைத்திருப்பான் என்று தெப்பத்திற்கு எதிரே இருந்த பள்ளி கொண்ட பெருமாளை மீண்டும் தரிசிக்க சென்றோம். மேற்கூரை மண்டபத்தை பார்த்தபடி சென்றோம், உள்மண்டபம் ஒரு குடைவரையின் தோற்றத்தைத் தந்ததுஅது ஒரு கிராணைட் கோயிலாகப் புதிப்பிக்கப்பட்டிருந்தது. குடைவரைகான எந்தச் சுவடும் பெருமாளை அடித் தொழ வரும் பக்தர்களுக்குக் கிடைக்காது. “சமணன் வெற்றி கண்டான், கடைசியில் சிவகாசி வணிகர்கள் இயற்கையைச் சுரண்டிய பாவத்திற்கு பரிகாரம் தேடியிருப்பார்கள் போலஎன்று சொல்ல, மண்டபத்தின் முதல் தூணில் இருந்து ஒரு பெண் குரலில் சிரித்த ஒலி. அந்தச் சிற்பம் எந்த தேவியோ, யக்‌ஷியோ தெரியவில்லை ஆனால் அவளுக்கு நைட்டி அணிவிக்கப்பட்டிருந்தது.

நைட்டி அணிந்த அந்த தேவதையிடம் விடை பெற்றேன்

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பஜ்ஜி-சொஜ்ஜி -- எத்தனையாவதோ??


ஒரு DISTORTED கவிதையும் - ஒரு ILLUSTRATIONம்
இளங்கோ - REDEFINED



என்னளவில் - கவிதை எழுத முயற்சித்தவைகளை எல்லாம் அடியோடு நிறுத்திய பின்பு தான் கவிதை மொழியுடனான நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. Xpress கமெண்டுகளைக் கேட்கும் மின்னுலகில் கவிதைகளைப் போகிறபோக்கில் வாசித்துச்செல்லுதலில் உடன்பாடு இல்லாததால் நிதானமாகவும், குறைவாகவும் வாசித்து வருகிறேன். இருந்தபோதும் கவிதையையோ அல்லது வேறு எந்த கலைவடிவங்கள் குறித்தும் பேசுவதற்கான குறைந்தபட்ச தைரியத்தை ஓவியங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
**

ஒருவனின் கவிதைச் செயல்பாடுகளில் இருக்கும் தொடர்ச்சி சுவாரஸ்யம் அளிப்பவையா?? சுவாரஸ்யம் என்ற அடிப்படையை தவிர்த்தால் கூட, தொடர்ச்சியான ஒரு வடிவம், தொனி, சொற்கள், ஏன் தத்துவங்கள் கூட நீர்த்து தான் போகின்றது. அவை STATIC ஆக இருந்தால்.

இளங்கோ (கவிதைக்காரன்), இவனுடைய கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பவும் - விவாதங்கள் செய்துவருவதும், எங்களுக்கிடையேயான வரவு – செலவுச் சிட்டை போலே அடிக்கடி மாற்றிக் கொள்ளப்படும். நிறையவே விமர்சனங்கள் செய்வதுண்டு, சில சமயம் அலுப்பூட்டும் படிமங்களில் நொந்து கொள்வதுமுண்டு – இந்தக் குதிரையை ஃபாலோ செய்யும் பாவ்ன்களின் மூன்று கட்ட நகர்வுகள் மீதும் குற்றச்சாட்டு வைப்பதுண்டு. ஆனால் அசலான ஒரு கலைஞனுக்கு நிகர்வது தான் இவையெல்லாம். இதுவரை தனிப்பட்ட வியாக்யானங்கள். இவரது கவிதை ஒன்றைப் பொதுவில் வைத்துப் பேசினால் என்ன என்று தோன்றியது.

**

இளங்கோவிடம் – நேற்று கேட்டேன், உங்களை உங்கள கவிதைகளின் தற்போதைய இருப்பிடத்தை Dislocate செய்ய முடியுமா என்று? 

மெட்ரோ கவிதைகள் எழுதிய இளங்கோவாக இல்லை என்று சிலர் இவரை விம்ர்சிப்பது போன்றே, இளங்கோ தற்பொழுது நிற்கின்ற இடத்தை திடுமென மாற்றிவிட்டால் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். இதற்கு முன் அவர் எழுதிய ஐ ஆம் சாரிகவிதைகளில் அதற்கான முயற்சி இருந்தது. சென்ற Pleats அமர்வில் அதுபற்றி விவாதித்தோம். நேற்றைக்கு இளங்கோ எழுதியிருந்த கவிதையைக் குறித்து நான் எழுத முனைவதற்கு காரணம் அவர் அப்படி தன்னை DISLOCATE செய்துவிட்டார் என்று நம்புகிறேன்.

கவிதை நல்லா இருக்கு – நல்லா இல்லை – என்பது போன்ற தீர்ப்புகள் இயங்கும் வெளி வேறு. இது ஒரு ஜீன் டெஸ்ட்.


ரொம்ப காலமா..
*
இந்த இரவை பசியோட கடத்தனும்னு தீர்மானம் செஞ்சப்போ
பசி என்னக் கொஞ்சங் கொஞ்சமா சாப்பிடத் தொடங்கிச்சு
இத வேடிக்கைப் பார்க்கிற 'நான்' வெளியே நிக்கனும்
உடம்போட பெயர் அழியறத மூளைக்குத் தகவல் அனுப்பனும்
ரெண்டுமே வெவ்வேற கருத்துங்கற கட்டளை எங்கருந்து வருதுன்னு ஞாபகத்தைக் கேக்கறேன்
கட்டுமானத்தைக் குலைக்கும்போது ஒரே சீர்ல அது சரியாது -ங்கற சமிக்ஞையின் திசையிலேருந்து வர்ற குரலை இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்டிருக்கேன்
பாதி நிரம்பின வயிறோட, 'கனவைத் தேடு - நிற்காதே போ 'ன்னு கையசைச்சு என்ன விரட்டுது, என் பசி
அய்யோ..! 'என் பசின்னு' சொல்லிட்டேனே-ங்கற பதட்டத்துல மொழிய மறக்கறேன்
சிக்மண்ட் ஃபிராயிடுன்னு ஒரு பெரியவர் இங்க பக்கத்து ஊருல நகுலன்ற புனைப்பேர்ல கடைசி காலத்துல தனியா வாழ்ந்திட்டிருந்தாரு
ஆனா அவரு என் மொழிக்காரர் கிடையாது
அவரோட வீடு இருக்கிற இடம் தெரியும்
பலமுறை கதவைத் தட்டிட்டு அது முழுசா திறக்கறதுக்குள்ள பயத்துல ஓடி வந்திருக்கேன்
வாசல்ல மௌனின்னு பேர் பலகை கூட இருக்கும்
இப்போ முழுசா மொழி மறந்து ஒரேயடியா தீர்ந்து போறதுக்குள்ள அந்த வீட்டோட கொல்லைப்புறத்துக்கு எப்படியாவது போயிடனும்
காஞ்ச சருகு சத்தங்கள உருட்டுற கனவோட அடையாளம் - அங்க வாசனை இல்லாம மட்கி கிடக்குதுன்னு ராமச்சந்திரன் சொன்னான்
எந்த ராமச்சந்திரன்?-ன்னு கேக்க கூடாதுல்ல..!
'பசிக்கு' வயிறு ரொம்பிருச்சு
காதுக்கு தான் சுத்தமா சாப்பாடே இல்ல
மே மாசம் ஆரம்பிச்சதும் கொளுத்த போற வெயில்ல தலையில துண்ட போட்டுக்கிட்டு
இத பொய்யின்னு எப்படி கத்தறது
சே..!
முதல் ஷிப்டு சங்கு சத்தத்தை நகலெடுக்குது இந்தப் பசியோட ஏப்பம்
வெளியே நிக்கிற 'நான் '-ஐ உள்ள கூப்பிட முடியல
உடம்பு மறந்து போச்சு
பசி சத்தம் காத அடைக்குதுன்னு இனி சொல்ல முடியாதே
சருகோட வாசனைல பேரு மட்கி போற அடையாளத்தை புதுசா அடுக்கி அத ஒரே சீர்ல குலைக்கிறதுக்கு
கனவையெல்லாம் தேடச்சொல்லி கிளாஸ் எடுக்க வேண்டாம்ன்னு
சிக்மண்ட் தாத்தாக்கிட்ட தகவல கடத்த
ராமச்சந்திரன அனுப்பி வச்சா..
அவன் மௌனியோட வாசல்ல போயி பேசாம உட்கார்ந்துட்டான் ரொம்ப காலமா

- கவிதைக்காரன் இளங்கோ

 *******

இளங்கோ என்ன செய்திருக்கிறான் இங்கே?? வேறு வடிவம், சொற்கள், படிமங்கள் இவற்றைக் குறித்து தனித்தனியாக பேசாமல் – ஒட்டுமொத்தமாக இந்தக் கவிதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் இது ஒரு DISTORTED FORM. அப்படியென்றால் ??

SKILL ஒரு தொந்தரவாக நவீன கவிஞனுக்கு இருக்கிறதா என்று ஒரு கேள்வி எழுந்தது. POST MODERN ERA – அதற்கான வெளியைத் தருகிறதா? ,  ஒரு ஓவியரோடு ஒர் இரவில் ஆரம்பித்த அவரது ஓவியமொன்றை பார்த்துக் கொண்டே இருந்தேன் – அவர் தொடர்ச்சியாக வரைந்த  17 மணி நேர உழைப்பில் உருவாக்கிய கான்வாசில் அவர் அதிகச் சிரமங்களை எடுத்துக் கொண்டது இதற்குத் தான் - DISTORTION... அங்கு ஒரு போலியான ட்ரிப்பிங்கை உருவாக்கினார். 

புரிந்து கொண்டேன்.
அதற்குப் பெயர் தான் Distortion.

இளங்கோவின் இந்தக் கவிதை ஒரு டிஸ்டார்சன் ஃபார்ம் தான், தனது கவிதைகளுக்கு இல்லஸ்ட்ரேஷனாக நவீன ஓவியங்களைத் தொடர்ந்து போடும் இளங்கோவின் இந்தக் கவிதைக்கு நான் ஒரு விபரணைப் படைப்பைத் தேர்வு செய்கிறேன். பிகாஸோவின் குவெர்னிகா ஓவியத்தின் தொடர்ச்சியாக அவர் வரைந்த அழும் பெண் (WEEPING WOMEN) ஓவியம். க்யூபிசம் பற்றிப் பேசும் போது எல்லோர் நினைவுக்கும் வருவது குவெர்னிகா ஓவியம் தான். அடுத்ததாக அவர் வரைந்த ஓவியம் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டிய அவசியம் பிகாஸோவுக்கு ஏன் வந்தது?? இதைச் செய்யாவிட்டால், குவெர்னிகா மாஸ்டர் பீஸ் ஆகியிருக்குமா?? 

ஒரு பெண் அழுகின்ற VISUAL , ஒரு போரின் நினைவுகளாகுமா?? நேரடியாக ஆகாது தான். ஆனால் ஒரு யூனிட் வலியை பிரபஞ்சப்படுத்தும் போது (பொதுத்தன்மைப் படுத்தும் போது) அது ஒரு ஊரின், நாட்டின், உலகின் வலியாக தன்னை represent செய்து கொள்கிறது.

தனிமனிதனின் ராட்சஸ, அகோரப் பசி அதைச் செய்கிறது – இதற்கு முன் எழுதிய அவர் கவிதையை மாஸ்டர் பீஸ் ஆக்குகிறது. தன்னை
DISLOCATE செய்து, தன் நண்பர்களுடன் (ஃபாலோயர்ஸ்) முரண்படுகிறது. 

ஒரு கவிதைக்கான விளக்கம் கொடுப்பதை விட துயரமான வேலை ஒரு கவிஞனுக்கு இருந்துவிடாது, இன்றைய முகநூல் பதிவேற்றங்களில் இரண்டைத் தவிர்த்தால் கவிதைக்கு நல்லது - ஒன்று விளக்கம் தருவது, அதை விட முக்கியமான ஒன்று கவிதைக்கு TAG செய்வது..

Well done Elango - உங்களுக்கு ஒரு முட்டை போண்டா, அப்புறம் ஒரு மசால் போண்டா. எனக்கு மசால் போண்டா மட்டும்.



---

பஜ்ஜி -சொஜ்ஜி இன்னும் வேற FLAVOR-இல்
ஜீவ கரிகாலன்



திங்கள், 9 பிப்ரவரி, 2015

தூத்துக்குடி கேசரி

ருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு  நம்மை அழைத்துச் செல்லும் முதல் சக பயணி,  நண்பன்தானே!

என் பெற்றோரைத் தாண்டி இருக்கும் மனிதர்கள், வேலைகள், விவசாயம், கிணறு, சினிமா, ஹோட்டல், கடை, பெண்கள், படிக்கட்டுப் பயணம்... என எல்லாம் அவனால்தான் அறிமுகம் ஆனது. அவன் ஒரு கோயில் பூசாரியாக இருந்ததால், அவனை 'நல்லவன்’ என என் தாய் நம்பினார். ஆகவே, அவனோடு சேர்ந்து ஊர்சுற்றக் கிளம்புவது எனக்கு எளிதில் சாத்தியம் ஆனது.
நான் வசிக்கும் ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கும் கட்டையன்குளத்துப்பட்டியில் உள்ள எந்த வீட்டுக்கும் சென்று 'அருள்’ என்ற பெயரைச் சொல்லிக் கேட்டால், மூன்று விதமான பதில்கள் வரும்.

'அட... இதுக்குப் பொறத்தாண்டி இருக்குதுல அதுதாம்பா அவன் வீடு!’
'ஓவ்... யாரு அருளா? இந்த... முன்னாடி இருக்குல்ல, அதான் அவன் வூடு. நீங்க யாரு?’
'ஆமா... அருள் களத்துக்குப் போயிருக்கான். நீங்க அவருக்கு சிநேகிதமா?’
ஆம், அந்த ஊரில் மொத்தம் இருப்பதே மூன்று வீடுகள்தான். இவன் பார்ட் டைம் பூசாரி மட்டும் அல்ல, பார்ட் டைம் விவசாயி; பார்ட் டைம் டிராக்டர் ஓட்டுநர்; பார்ட் டைம் கந்து வசூல் அதிபர்... இதுபோக பார்ட் டைம் கம்ப்யூட்டர் கோர்ஸும் படித்து வருகிறான்.
ன்றும் அப்படித்தான்... என்னை வெளியே கூட்டிச்செல்ல அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டான். அருளின் குலதெய்வத்துக்குக் கிடா வெட்டும் நிகழ்வு அடுத்த வாரம். அதற்கு உறவினர்களை அழைப்பதற்காகச் செல்கிறான். என்னுடன் படித்த செந்தமிழ்ச்செல்வி வீட்டு வழியாகத்தான் போகிறேன் என்றான். நான் 'தமிழ்’ப்பற்று உடையவன் என்பதால், அவனுடன் கிளம்பினேன். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அவனின் ஒன்றுவிட்ட மாமன் வீட்டுக்கு முதலில் போனோம்.

ரத்னம் மாமா இரும்பு வியாபாரம் பற்றி பேசியபடி, ''சமையலுக்கு யாரு? செட்டி இப்பல்லாம் நம்ம ஆளுங்களுக்கு சமைக்க வர்றது இல்லையாமே?'' என்றார்.

அருள் என்னை முறைத்தபடியே, ''அப்பா எதுக்கும் ஒரு எட்டு போய்ப் பார்க்கச் சொல்லிருக்காரு. போய்த்தான் பார்ப்போமே!'' என்றான்.

''டேய், நாம அந்தத் தவசிப்பிள்ளை வீட்டுக்குமா போறோம்?'' என்றேன்.

பதில் எதுவும் சொல்லாமல், அங்கிருந்து சமத்துவபுரம் வளைவில் திரும்பி தன் அம்மாவின் சொந்த ஊரான வரப்பட்டிக்கு வண்டியைச் செலுத்தினான். பீக்காட்டைத் தாண்டியதும் ரயில்வே பாலமும், பின்னர் தனியார் சிமென்ட் ஆலையின் ரயில்வே கிராஸிங்கையும் தாண்டி வண்டியை நிறுத்தினான். அங்கு இருக்கும் அடி பைப்பில் தண்ணீரை அடித்து, பிறகு அதன் முன்னே சென்று குழாயில் வரும் தண்ணீரைப் பிடித்துக் குடித்தபடி, ''இந்த முறை நீ கொஞ்சம் பேசாம இருக்கணும்'' என்றான்.

''அப்போ என்னையும் கூட்டிக்கிட்டுத்தான் அங்க போவியாடா?''
அருளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. வண்டி மெதுவாக மட்டப்பாறையைத் தாண்டி, அடுத்து வரும் நாலு ரோட்டில் நின்றது. நாலு ரோடு என்றால், நான்கு பக்கமும் சாலைகள் அல்ல; நாங்கள் வந்த சாலை இடதுபுறம் திரும்புகிறது. வலதுபுறம் திரும்பினால், வெள்ளியணை சின்னக் குளம். நேராகச் சென்றால், கன்னிமார்பட்டி / வரப்பட்டி  கிராமங்களுக்குச் செல்லும் சாலை. வரப்பட்டியில்தான் அவனுக்கு முக்கியமான சொந்தங்கள் இருந்தன. அவன் அம்மாயி, பாட்டன், தாய்மாமன், அத்தை, பெரியம்மா, அருகில் இருக்கும் கணேசன் சார்... என ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி அழைப்புகள். அங்கே வரக்காபி, டீ, மோர், இளநீர் என உபசரிப்புகள்; எல்லோர் வீட்டிலும் அரைச் செம்பு தண்ணீர் வேறு.

அங்கிருந்து கிளம்பிய நாங்கள், மூக்கணாங்குறிச்சியில் உள்ள பெரியப்பா வீடு, அவன் பங்காளிகள் இரண்டு பேர் வீட்டுக்கும் அழைப்புவிடுத்து, இன்னும் மூன்று லோட்டா தேநீர் குடித்து முடித்திருந்தோம். அங்கிருந்து கிளம்பி, திருமக்கம்பட்டியில் அவன் தங்கை திலகா வீட்டுக்குச் சென்று அங்கேயும் ஒரு வரக்காபி. அப்புறம் அங்கே இருக்கும் அவனது மச்சான் முறை வீட்டுக்குச் சென்றதும் உபசரிப்பு பலமாக இருந்தது. 'கடைக்குப் போய் கலரு வாங்கிட்டு வர்றேன்’ எனப் போனார். இதற்கிடையில், அருளுக்குக் கல்யாணம் கட்டயிருக்கும் பெண் எங்க ரெண்டு பேருக்கும் டம்ளரில் தண்ணீர் கொடுக்க, அருள் தண்ணீரைக் குடிப்பதும் அவளைப் பார்ப்பதுமாக இருந்தான். கடையில் கலர் வாங்கிக்கொண்டு திரும்பி வந்த மச்சான், மஞ்ச கலருல இரண்டு பாட்டிலை நீட்ட, எனக்குப் புரிந்தது. 'இல்லங்க வவுறு சரியில்ல’ எனத் தப்பித்தேன். மறுக்க முடியாமலும், அதேநேரம் இதுவரை ஜிஞ்சர் பானத்தைப் பார்த்திராத அருள், வாயில் ஊற்றியதும் இஞ்சி தின்னக் குரங்குபோல் ஆனான். அவனைப் பார்ப்பதற்குக் கொஞ்சம் பாவமாக இருந்தது. 'இவன் வூட்ல பொண்ணா?’ என்று முனகிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

நாங்கள் அடுத்து சென்ற ஊர் முஷ்டகிணத்துப்பட்டி. அங்கு எனக்கு இரண்டு அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதலாவது, எங்கள் வகுப்பு செந்தமிழ்ச்செல்விக்குத் திருமணம் ஆகியிருந்தது. இரண்டாவது, நாங்கள் அடுத்து செல்லும் வீட்டில் இருக்கும் நபர் மூக்குத்திக்காரர்.

மூக்குத்திக்காரர், ஒரு செட்டியார்; அந்தப் பகுதியில் மிகப் பிரபலமான தவசிப்பிள்ளை. கரண்டியோடு அவர் ஆஜராகும் எந்த விசேஷ வீட்டிலும் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது.  வட்டாரத்தில் மிகப் பிரபலமான தவசிப்பிள்ளை என்பதால், எல்லார் வீட்டு சங்கதி, பூர்விகம், வரலாறு என அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டு வம்பு இழுப்பார். அவரிடம் மாட்டினால் நம் ரகசியம் வெளிப்பட்டுவிடும் என எல்லோருமே எச்சரிக்கையாக இருப்பார்கள்.

வாசலில் நின்றிருந்த அவர் மனைவிதான் முதலில் வரவேற்றார். ''வாங்க... வாங்க!'
'செட்டியார் இருக்காரா?' என்றான் அருள்.
'ஆருப்பா அது? பெரியவுக எல்லாம் வூட்டு பக்கம் வந்துருக்காக. அட... அந்தத் தம்பியும் வந்துருக்குபோல. வாங்க... உள்ள வாங்க' - வீட்டினுள் இருந்து எங்களைப் பார்த்துப் பேசியபடி கீழே இறங்கினார் மூக்குத்திக்காரர்.
'ஏ! இந்தெ... அந்தக் கட்டிலை இப்படி எறக்கிப் போட்டுட்டு, காபித்தண்ணி போடு.'
''என்ன... பொழப்பு எப்படிப் போகுது செட்டியாருக்கு?' 
அருள்தான் முதலில் பேசினான். நாங்கள் கட்டிலில் அமர்ந்துகொண்டோம். அவன் கேள்விக்கு விடை அளித்தாலும், என்னையே பார்த்தபடிதான் பேசிக்கொண்டிருந்தார்.
'இப்ப என்ன பொழப்பு... பெரிசா பொழப்பு! எல்லாரும் இப்ப பெரிய கான்ட்ராக்ட் எடுக்கிறவனைத்தான் தேடிப் போறானுக. அவன் என்ன செஞ்சாலும் சாப்பிடுறானுக. ஏன்னா, எல்லா கல்யாணமும் சத்திரத்துலதான நடக்குது. சமையலும் அவுங்க சத்திரத்துலயே முடிவு பண்ணுறானுக. நம்ம சாதி, சனம் மாதிரி பழகினாலும், வொறமொற (உறவுமுறை) ஆயிடுவோம்மா?
'பெரிசுக்கு இன்னும் என்ன கோபம்? எல்லாம் நடந்தது நடந்துருச்சு. அதை அப்படியே வுட்டுரு...' என்றவன், 'அப்பாதான் சொல்லுச்சு... 'மூக்குத்திக்காரரு சமையல் மாறி வராது’னு. அதனால இப்ப நீதான் வரணும். நம்ம கிடா வெட்டுக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்து ஆக்கிப்போடணும். தங்கச்சி வொறமொறலாம் வருவாங்க, மூக்குத்திக்காரரு யாருனு காமிச்சிடுவோம்' என்றான்.
முகம் மலர்ந்த பெரிசு, என்னையே பார்த்தது, 'அதான் அருள் கூப்பிடுறான்ல, சம்மதம் சொல்லுங்க' என்றேன்.
'அது என்னமோ, மூணு ஊர், 84 மந்தையில ராசு மேல நா வெச்சிருக்கிற மருவாத தனிதான். இப்பவும் உங்கய்யாவுக்காக நான் சம்மதம் சொல்றேன்.'
எங்கள் முகங்கள் மலர்ந்தன. எதிர்பாராத விதமாக மறுபடியும் அந்தப் பழைய பேச்சை எடுத்தார் அவர்.
'இந்த அசலூர்க்காரத் தம்பி தெரியாமப் பேசினதை, பெருசா எடுத்திருக்க வேணாம்தான். ஒரு கோவத்துல விருட்டுனு கிளம்பிட்டேன்' என்றார்.
எனக்கும் சட்டெனக் கோபம் வந்தது. 'பெரிசு... நான் அசலூர்க்காரன்தான்... இல்லைனு சொல்லலை. ஆனா, எங்க ஊர் பேரை வெச்சு நீரு ஏமாத்துனதைத்தான் நான் சொல்லிக் காமிச்சேன். அது என் தப்பு இல்லை' என்றேன்.
'அப்போ நான்தான் கல்யாண வூட்ல ஏமாத்தினேனா?'
'என்ன செட்டியாரே! இப்ப எதுக்கு அதெல்லாம்... டேய், நீயும் ஏன்டா?'
'பரவாயில்லை அருளு, நான் கோவப்படலை. தம்பியே சொல்லட்டும்... நான் ஏமாத்திட்டேன்னு சொல்றியா?'
அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை. ''நீங்க ஏமாத்துனிங்களா, இல்லையானு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அன்னிக்கு செஞ்சது தூத்துக்குடி கேசரி கிடையாது' என்றேன். அப்படிச் சொல்லியதுதான் தாமதம், விருட்டென அங்கிருந்து எழுந்தார். அடுத்து அவர் என்ன செய்வாரோ என நாங்கள் பயந்தோம்.
'இன்னும் என்ன நம்ப மாட்டல்ல. அருள், உன் வண்டிச் சாவியைக் குடு. தோ... விசயபுரம் வரை போயிட்டு வந்துர்றேன்.'
'அட... எதுக்குப் பெரிசு இதைப் பெரிசாக்குற? டேய், நீ சும்மா இருடா!'
'இல்ல... தம்பி மேல தப்பு ஒண்ணும் இல்லை. நான் விசயபுரத்துல இருக்குற நம்ம கடைக்குப் போயிட்டு வர்றேன்! தூத்துக்குடி கேசரினா என்னன்னு, தம்பி கண்ணு முன்னாடியே செஞ்சு காமிக்கிறேன்.''
அருள் எவ்வளவோ சமாதானப்படுத்தினான். கடைசியில் சாவியை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு என்னோடு அமர்ந்துகொண்டான். அவரும் சாவியை வாங்கிய வேகத்தில் விஜயபுரத்துக்குக் கிளம்பினார். காத்திருந்த சமயத்தில் அந்தச் சம்பவம், என் நினைவுகளில் மீண்டும் வந்துபோனது!
ன்று, அருளின் தங்கை திருமணத்துக்கு முந்தைய நாள்.  திருமணம் பழநியில். மொத்தம் மூன்று டெம்போக்கள் பழநி மலைக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தன. கூட்டம் தடபுடலாக இருந்தது. இரவு பழநிக்குக் கிளம்பும் முன்னர் நடந்த விருந்தில் ஏகக் களேபரம். அன்றுதான் மூக்குத்திக்காரரைப் பார்த்தேன்.
கடைசிப் பந்தியில் நிறையப் பேருக்கு சாம்பார், ஸ்வீட், பொரியல்... தீர்ந்துபோய்விட, ஒரே சலசலப்பு. பிரச்னையை அருளின் அப்பாவும், அவன் பாட்டனும் தீர்த்துவைக்க முடியாது தோற்றுப்போய்விட, மூக்குத்திக்காரரே ஒவ்வொருத்தரையும் சமாதானப்படுத்தினார்.
'ஏ மாரி... உனக்கு என்ன இப்ப பிரச்னை? செட்டி சமையல் அப்படி. எல்லாரும் சாம்பாரை அள்ளிக் குடிச்சிட்டாங்க. மொத பந்தியிலேயே உக்காந்துருக்கலாம்ல. விசயபுரத்துல பால்காரன் எப்படா வீட்டைவிட்டுக் கிளம்புவான்னு யாரோ காத்துக்கெடந்தது மாதிரில கடைசிப் பந்திக்கு வந்துருக்க. இந்தா ரசம், விட்டுக்கோ!'
'அது யாரு... கோம்பைக்காரரா? உங்க ஐயனுக்குச் சக்கரைனு சீக்கு வந்து காலையே வெட்டி எடுத்தீங்களே, மறந்துபோச்சா? இப்போ 'கேசரி வேணும்... கேசரி வேணும்’னு சண்டை பிடிக்கிறியே இது ஞாயமா? ரொம்ப ஸ்வீட் சாப்பிடாத... அதுவும் இன்னிக்கு நான் பண்ண ஸ்வீட்டை எல்லாரும் 'நல்லாருக்கு... நல்லாருக்கு’னு ரெண்டு, மூணு தடவை வாங்கிட்டாங்க. கேக்கும்போது தராமலா இருக்க முடியும்?'
இப்படி, பிரச்னை செய்த ஒவ்வொருவரின் ரகசியத்தையும் அம்பலப்படுத்துவது மாதிரி பயமுறுத்தி, பந்தியை முடித்துவைத்தார்.
வர் போதாத காலம், அந்தக் கடைசிப் பந்தி ரவுசு பார்ட்டிகள் இருக்கும் கடைசி டெம்போவில் ஏறினார். நானும் அதில் இருந்தேன்.
என்னிடம்தான் ஆரம்பித்தார் அவர். 'தம்பி யாரு... புதுசா? நீயும் சல்லகுளமா?'
'இல்ல, வெள்ளியணை.'
'ஓ! நம்ப அருளு தோஸ்த்தா?'
'ம்ம்...'
'எல்லாம் நம்ப ஆளுகதானே!'
'ந்தா செட்டி, நீ என்னிக்கு நம்ப ஆளு ஆன? அவரு கதையும் உனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணப்போற?' - ஆரம்பித்தார் கோம்பைக்காரர்.
'அப்புறம், பெருசு என்னிக்குப் பந்திக்கு அளவா சமைச்சிருக்கு? இப்படிக் கதை பேசியே எல்லாரையும் கரெக்ட் பண்ணிதான பொழப்பை ஓட்டுது!'' என்று அவருக்கு கம்பெனி கொடுத்தான் சீரங்கன் மைந்தன் குணசேகரன்.
'தண்ணியடிச்சிட்டு, கொஞ்சம்கூட மருவாத இல்லாமப் பேசுறியே... உங்கப்பன் எவ்ளோ நல்லவன்' என்றார் தவசிப்பிள்ளை.
'பேச்சை மாத்தாத பெரிசு!'
'நான் எங்க பேச்சை மாத்துறேன்! உங்க சாதில தவசிப்பிள்ளைங்க எத்தனை பேர் இருக்கானுங்க. எதுக்கு மொதல்ல என்ன வந்து கூப்பிடுறாங்க? அதிகமா செஞ்சு வீணாக்கவும் கூடாது; யாரும் இல்லைனு சண்டைபோடவும் கூடாது. சமையல்ல உப்பு, வொறப்பு இல்லைனு எந்த வீட்லயாவது பஞ்சாயத்து நடந்துருக்கா? இல்ல... வாங்குற சாமான்ல கை வெச்சுட்டான் தவசிப்பிள்ளைனு பேரு வந்துருக்கா? எதையும் பார்த்து, யோசிச்சுப் பேசணும் சிறுவண்டுகளா' என்றார் கோபமாக.
'அட, அதை வுடு பெரிசு. இன்னைக்குக் 'கேசரி’னு வெறும் சக்கரையை அள்ளிப்போட்டு பண்ணியே வெள்ளக் கலரு கேசரி, இது ஊரை ஏமாத்துற வேலைதான?'
'அடேய்... அது சாதாரண கேசரி இல்லை. தூத்துக்குடி கேசரிடா தம்பி. பெரிய பெரிய  கல்யாணத்துக்கு எல்லாம் போனாதானே இதுமாரி ஏதாவது தெரியும்!'
'தூத்துக்குடி கேசரியா... கேள்விப்பட்டதே இல்லியே!'
'ஆமா... இவரு பெரிய சீமைத்துரை. எல்லாத்தையும் தெரிஞ்சுவெச்சிருப்பாரு.'
'என்ன பெரிசு, நான்வேணா சீமைத்துரை கிடையாது. அந்தத் தூத்துக்குடிக்காரனையே கேப்போம். என்ன பங்கு... நீங்க தூத்துக்குடிதானே?'
எல்லோரும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தீர்ப்பு என் கையில் இருப்பது எனக்குப் புரிந்தது. நானும் சிரித்துக்கொண்டே, 'ஆமாம். ஆனா, தூத்துக்குடி கேசரினு இவர் சொல்றதை நான் கேள்விப்பட்டதே இல்லை. கேசரி என்னமோ நல்லாத்தான் இருந்தது. ஆனா, அது தூத்துக்குடி கேசரினு சொல்ல முடியாது. ஒருவேளை, தூத்துக்குடி ஸ்பெஷல்னா சீனிக்குப் பதிலா உப்பைத்தான கொட்டிருக்கணும். அப்ப வேணும்னா நம்புவேன்' என்று சொல்லிவிட்டுச் சிரிக்க, டெம்போவில் இருந்த அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்தோம். அதற்குள் அவர்கள் இன்னும் கொஞ்சம் ஓவராக...
'யோவ் பெருசு, தூத்துக்குடி எங்க இருக்குதுனு உனக்குத் தெரியுமா?'
'இருப்பா. நான் அன்னிக்கு தஞ்சாவூர்ல ஒரு கல்யாணத்துக்குப் போனப்பதான்... அந்தக் கேசரிய...'
'பாத்தியா... தூத்துக்குடி, தஞ்சாவூர் பக்கம் இருக்குதுனு செட்டி சொல்றாரு. நான் அப்பவே சொல்லைல, இந்த ஆளு சரியான ஃபிராடுரா!' என்றான்.
இந்த வாக்குவாதம், சற்றைக்கெல்லாம் பெரிய சண்டையாக மாறிவிட, குஜிலியம்பாறை அருகே செல்லும்போது டெம்போ வண்டி நிறுத்தப்பட்டது. மற்றொரு டெம்போவுக்குத்தான் செல்கிறார் என அனைவரும் எதிர்பார்க்க, துண்டை உதறியபடி, ''உங்க பொழப்பே வேணாம்' என்றார்.
பலரும் அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போக, வேறு வழியின்றி அவரை மட்டும் விட்டுவிட்டு டெம்போ கிளம்பியது. அவர் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த டெம்போவில் இருந்து விஷயத்தைக் கேள்விப்பட்ட அருள், என்னிடம் வந்து தலையைச் சாய்த்தபடியே 'ஏன்டா..?' என்றான்.
ன்றும் அதே மாதிரி 'ஏன்டா..?’ என்று அருள் கேட்கும்போது, டி.வி.எஸ்-50 திரும்பிவரும் ஓசை கேட்டது. ஒரு மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் நுழைந்த தவசிப்பிள்ளை, ஒரு வாணலியை எடுத்து வீட்டின் முன்வாசலில் வைத்திருந்த விறகு அடுப்பின் முன்பு வைத்தார்.
'இப்ப என்ன செய்ற பெரிசு?' என்றான் அருள்.
'அந்தத் தூத்துக்குடி தம்பிக்கு இந்த மூக்குத்திக்காரன் யாருனு காமிக்க வேணாம். அதனாலதான் இன்னிக்கு உங்க கண் முன்னாடியே செஞ்சு காமிக்கிறேன். கேசரில மட்டும் எத்தனை வகை செய்வேன் தெரியுமா? சாதா கேசரி, பைனாப்பிள் கேசரி, சேமியா கேசரி, வாழைப்பழக் கேசரி, ஆப்பிள் கேசரி, தூத்துக்குடி கேசரி.'
'அது என்ன தூத்துக்குடி கேசரினுதான் நானும் கேட்கிறேன். எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒண்ணும் கிடையாது. தூத்துக்குடி ஸ்பெஷல்னா, உப்பைத்தான் அதுல கொட்டணும்' அடக்கிவைக்க முடியாமல் மறுபடியும் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
'ஏன்டா...  நீ பேசாம இருக்கவே மாட்டியா?' - அருளுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த வசனம்தான்.
'அந்தத் தம்பிய வுடு. நான் அவருக்குச் செஞ்சுகாட்டுறேன்.'
'அய்யா... செஞ்சு காட்ட வேணாம்... சொல்லிக்காட்டுங்க அதுபோதும். அதுக்குத்தான் போறிங்கனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் உங்ககிட்டயே கேட்டிருப்பேன். பரவாயில்லை மொதல்ல பக்குவத்தைச் சொல்லுங்க.'
'ம்க்கும்...' தொண்டையைக் கணைத்தார்.
'மத்தவங்க மாரி இல்ல இந்த மூக்குத்திக்காரன். சரி, பக்குவத்தைச் சொல்றேன்... மொதல்ல ரவையை ஒண்ணுக்கு ரெண்டு தடவை சலிச்சு, சட்டியில் போட்டு வறுத்து எடுக்கணும்.'
'ம்ம்ம்... அப்புறம்!'
'ரொம்பவும் தங்க நிறத்துல வறுத்துறக் கூடாது. ரவை வறுக்கும் வாசம் வந்ததும்தான் எடுக்கணும்.'
'ம்ம்ம்ம்....'
'இன்னொரு சட்டியில முந்திரி, ஏலக்காய், திராட்சை எல்லாத்தையும் நெய்ல வறுக்கணும். தேவைப்பட்டா கொஞ்சம் நிலக்கடலைகூட போட்டுக்கலாம். நெய் இல்லாட்டி, டால்டா. அன்னிக்குலாம் நான் நெய்லதான் வறுத்தேன்.'’
'சரி, மேல சொல்லுங்க.'
'அப்புறம்... ஒரு பங்கு ரவைக்கு இனிப்புக்குத் தகுந்த மாதிரி தண்ணி ஊத்தணும். இதுலதான் தொழில் ரகசியம் இருக்கு. இனிப்பும் நெய்யும் கம்மியா இருக்கணும்னா, ஒரு பங்கு ரவைக்கு சக்கரையும் தண்ணியும் ரெண்டு பங்கு சேர்க்கணும். இதுவே கேசரி நல்ல இனிப்பா, பெஷலா இருக்கணும்னா, ஒரு பங்கு ரவைக்கு ரெண்டரை மடங்கு அல்லது மூணு மடங்கு வரை சக்கரையும், தண்ணியும், நெய்யும்விட்டு நல்லா கிண்டணும்.'
'ம்ம்...'
'நல்லா கிண்டிட்டு... கரெக்டா எறக்கி வைக்கும்போது, அதுல கையளவுக்கு அள்ளி தூத்துக்குடியைக் கொட்டணும்.'
'என்னது... தூத்துக்குடியா? அதான் உப்பா?'
'யார்றா அவன்? மறுபடியும் மறுபடியும் உப்பா, சப்பானு கேக்குறான். நான்தான் 'தூத்துக்குடி’ங்கிறேனே.'
'அதான்... தூத்துக்குடினா என்ன பெரிசு? எங்களுக்குதான் மட்டுப்படலையே?' - நான் கேட்பதற்கு முன்பே அருள் கேட்டுவிட்டான்.
'அட, இதுதாம்பா' என்று சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்த பையில் கையைவிட்டுத் துழாவினார்.
'த பாரு... இது மாதிரியே மஞ்ச, பச்சைக் கலரு தூத்துக்குடினு கடைல கேட்டா கிடைக்கும். நான் என்ன பொய்யாச் சொல்றேன்?'
அவர் சொன்னதுதான் தாமதம், 'அய்யோ! மூக்குத்திக்காரரே... இதை அன்னிக்கே தெளிவா சொல்லிருக்கலாமே. இதுக்குப் பேரு தூத்துக்குடி இல்லை... டூட்டி ஃப்ரூட்டி.'
''ம்ம்ம் என்னாது?'
'டூட்டி ஃப்ரூட்டி' என்றேன் நான்!

-ஜீவ கரிகாலன்
(ஓவியங்கள் : ஷ்யாம்)