(கல்கியில் வெளியான எனது சிறுகதை)
நள்ளிரவு பன்னிரெண்டைத் தாண்டியும் அந்த வால்வோ
பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன் . அது ஒரு தனியார் பஸ்
கம்பெனியின் பார்சல் அலுவலகம், என்னுடன் அந்த பேருந்தில்
ஏறுவதற்காக நான்கு பெண்களும், சில, பல மூட்டைகளும் காத்துக்கொண்டிருந்தன. அந்த நிறுவனத்தின் மற்ற ஆம்னி பேருந்துகள் கிளம்பி
குறைந்த்து 01.30 மணி நேரமாவது ஆயிருக்கும். இது சொகுசு வால்வோ என்பதனால்
தாமதமாகவே கிளம்பி வருகிறது, கிட்டதட்ட மற்ற பேருந்துகளோடு ஒப்பிடும் போது இரண்டு
மணி நேரம் தாமதமாகக் கிளம்பினாலும் சென்னைக்குள் முதலில் நுழைவது இந்த வால்வோ
பேருந்து தான்.
மழைக்கான எத்தனிப்போடு மேகம் கூடிக் கொண்டிருந்ததால்,
நட்சத்திரங்கள் மறைந்து இருந்தன. லேசான காற்று பதமாகவும் மேகத்தைக் கலைக்காத
பொறுமையுடனும் ஊர்ந்து கொண்டிருந்தது. பேருந்தில் செல்வதற்கு தயராய் வெளியே
எடுத்து வைக்கப் பட்டிருந்த இரண்டு மூட்டைகளுக்கு இடையேயான பொந்தினுள் தன் உடலைப்
புகுத்தியிருந்த நாய் ஒன்று அழகாகத் தலையை மட்டும் மூட்டையில் வைத்து மிகச்
சௌகரியமாய் படுத்திருந்தது, நமக்கும் இன்றைக்கு இதே போன்ற ஒரு சௌகரியமான தூக்கம்
வேண்டுமென்று பிள்ளையாருக்கு ஒரு ஸ்மைலி போட்டு வேண்டுகோள் செய்தேன்.
இரைச்சலின்றி வந்து சேர்ந்த வால்வோ
பேருந்தினுள் அவசரமாக நுழைந்தேன் மற்ற நால்வருக்கும் முன்பாக, நீல வண்ண விளக்கின்
வெளிச்சத்தில் – ஜன்னலோர இருக்கை எண் 20. என் சீட்டில் ஒரு பெண் அமர்ந்திருந்தார்,
தனியாளாக வந்தாலே இந்த அவஸ்தையை எதிர் கொள்ள வேண்டுமென்பது எழுதப்படாத விதி.
“என்னங்க இது என் சீட்…. எங்க மாறி
உக்காரணும்னு சொல்லுங்க?”
“கடைசி வரிசைல மட்டும் உட்கார மாட்டேன், அதுல
சாய முடியாது.” என் வாழ்க்கையில் அடிக்கடி வால்வோ வாய்ப்புகள் கிடைக்காது
என்றெல்லாம் சொல்ல வந்து நிறுத்திக்கொண்டேன்.
அப்போது தான் அந்தப் பேருந்தினுள் கவனித்தேன்
கடைசி வரிசையில் இருந்த நான்கு ஆண்களைத் தவிர மூன்று ஆண்கள் தங்கள் ஜோடியுடன்
அமர்ந்திருந்தனர். எனக்கு அவ்வளவு எளிதாக மாற்று இருக்கை கிடைக்காது. என்
இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணியின் இருக்கை கடைசி வரிசைக்கு முந்தைய வரிசை
அதில் 11 அல்லது 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி இருந்தாள், எனது இருக்கைக்கு
அருகிலிருக்கும் அந்தப் பெண்ணின் மகளுக்கும் பத்து வயது தான் இருக்கும். நான்
ரிசர்வ் செய்த சீட்டிலோ அல்லது அந்தக் கடைசி வரிசைக்கு முந்தைய சீட்டிலோ அமர
வேண்டும்.
என் சீட்டையே விட்டுத் தரலாமென்று அதை அவருக்கு
விட்டுக் கொடுத்து விட்டு பின்பக்கம் சென்றேன். அங்கே அந்தச் சிறுமி தூங்கிக்
கொண்டிருந்தாள், உள்ளே நுழைய முற்பட்ட என்னைத் தடுத்து நிறுத்திய அச்சிறுமியின்
தாய்.
“அது லேடீஸ் சீட்டுங்க”
அப்பெண்மணியின் பார்வையிலே என்னைத் தவறான
கண்ணோட்டத்தில் பார்ப்பதாகத் தோன்றியது. அவளிடம் வாதம் செய்ய விரும்பவில்லை. நான்
என் சீட்டுக்கே திரும்பினேன்.
“சார்.. ப்ளீஸ் சார்!!”
“ஏங்க அவங்க அத லேடீஸ் சீட்டுன்னு சொல்றாங்க –
நீங்க தான் உட்காரணமுமாம்”
“சார் நான் போய் அங்க உட்கார்ந்தா, இவ அழுகுறா
சார்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்”
“நான் என்னம்மா செய்யட்டும் – அந்தம்மா பிரச்னை
செய்யுறாங்கல்ல, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா வால்வோல ஏறி வந்தேன்”
என் குரல் உயர்ந்ததும், பேருந்தில் இருந்தோர்,
தூக்கம் கலைவதால் ‘உச்’ கொட்டத் தொடங்கினர். அந்தப் பெண்மணி அவ்விருக்கை அருகே
சென்று என்னிடம், “சார்!! இங்க வாங்க. சின்னப் பொண்ணு தானே”
என்று சொன்னாள். மீண்டும் சென்றேன். அதற்குள்ளாக இரு பெண்களுக்கும் வாக்கு வாதம்
முற்றியது.
“நான் லேடீஸ் சீட்டுன்னு சொல்லி தான் –புக்
பண்ணுனேன்”
“அவ சின்னப் பொண்ணு தானங்க!!”
“ஏன் உங்க பொண்ணு கூட தான் சின்னப் பொண்ணு, அவர
அங்கனையே உக்கார சொல்லுங்க”
“ஏன் ஹஸ்பெண்ட் லாஸ்ட் ரோல இருக்கார். ஒன்னு
இவர உள்ள விடுங்க இல்லாட்டி என் ஹஸ்பெண்ட இங்க உட்காரச் சொல்லிட்டு நான் லாஸ்ட்ல
போறேன்”
நானும் அந்தப் பெண்மணியும் கடைசி இருக்கையைப்
பார்த்தோம், அநேகமாக எங்களுக்குள் நடந்து வரும் விவாதத்தை கவனிக்காத ஒரே பயணி அப்பெண்ணின்
கணவராகத் தான் இருக்க வேண்டும். குறட்டை சத்தமே பலமாக இருந்தது.
ஆனால் இந்த முறை அந்தப் பெண் புதிய யுக்தியைக்
கையாண்டார், குரலை சற்று தாழ்த்திக் கொண்டு.
“என் பொண்ணு இப்போ மேஜராயிட்டா” என்றாள்.
கொஞ்சம் கூட தாமதியாமல்,
“என் பொண்ணும் தான்” என்றாள் என் இருக்கையைக்
கேட்டவளும்.
”ஏங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிங்க ரெண்டு
பேரும்? என்னையப் பார்த்தா என்னன்னு உங்களுக்குத் தோணுது? ஆம்பிளைங்கனாலே
மோசமாதான் நடப்பாங்களா?” என் குரலின் சத்தம் கேட்டு பேருந்தினுள் வெள்ளை விளக்கும்
எறிய ஆரம்பித்தது. எனக்கு ஆதரவாக சில ஆண் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. இறுதி
முயற்சியாக தனக்குப் பக்கத்திலிருக்கும் மற்றொரு பெண்ணிற்கு அருகிலிருக்கும்
சீட்டில் என்னை அமர வைக்கலாமா என்று அப்பெண்ணிடம் கேட்டுப் பார்த்தாள், அவளும்
தலையை இடமிருந்து வலமாக ஆட்டினாள்.
“ஒண்ணு என் பக்கத்துலேயே உட்காரட்டும், இல்லை
கீழ பெட் விரிச்சு படுக்க வச்சுக்கோங்க” என்றேன்.
தன் மகளை எழுப்பிவிட்டாள், நான் உள்ளே சென்று
அமர்ந்துகொண்டேன். அவளுக்குப் போர்த்திவிடுவது போல் அச்சிறுமியின் காதினில் முணுமுணுத்து
விட்டு தம் இருக்கையில் அமர்ந்தாள். அச்சிறுமியும் இடதுபக்க ஓரமாக ஒடுங்கிக்
கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அவள் தாயோ இன்னும் என்னைப் பார்த்து முணுமுணுத்துக்
கொண்டும், தம் கையில் இருந்த ஸ்மார்ட்போனில் அந்த ஆம்னி பஸ் கம்பெனி இணையதளத்தில்
புகார் செய்து கொண்டும் இருந்தாள்.
ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும் போட்து கூட
இப்படி இடம் மாற்றித் தரச் சொல்லி ஒரு பெண் தம்மை இம்சித்ததாகச்
சொல்லியிருக்கிறான் என் நண்பன். அவன் அடிக்கடி விமானத்தில் செல்வான், நமக்கு இந்த
வால்வோ பயணமே அரிதுதான். இதிலும் இப்படி மூட் அவுட் செய்கிறார்களே என்று எரிச்சலாக
இருந்தது. தூக்கத்தில் என் இடது கையை வைக்கும் பிடியில் வைக்க, அதில் வைத்திருந்த
தன் கையை விருட்டென்று எடுத்தாள் அச்சிறுமி, சங்கடமான சூழ்நிலையை உருவாகி விட்டது.
இருக்கையின் வலது ஓரத்தில் என் பெரிய உருவத்தை எவ்வளவு தள்ளி வைக்க முடியுமோ
அவ்வளவு தள்ளி வைத்தேன்.
ஒரு அரை மணி நேரம் தான் கடந்திருக்கும், ஏதோ
இரண்டு பேர்கள் சண்டையிட்டுக் கொள்வது போல் காதில் விழுந்தது. கண்களை திறந்தால்
பேருந்தின் அனைத்து விளக்குகளும் எறியவிடப்பட்டிருந்தன. என்னுடன் பேருந்தில் ஏறிய
நான்கு பெண்களின் ஒருவர் தான், தன் பின்னால் அமர்ந்திருந்த ஒரு ஆணோடு
சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த ஆண் முன்னே இருக்கும் பெண்ணின் காலை
உரசியதாக அந்தப் பெண்மணி சண்டையிட்டாள், அந்த ஆணுடன் வந்த பெண் அவருக்கு பதிலாக
சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். தூக்கத்திலிருந்து கலையாதவனாய் என்னைப் போலவே
இரண்டு பெண்களின் சண்டையை அந்த மனிதன் கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர்
மீது குற்றம் சுமத்தியவள், தன்னோடு வந்த மற்ற மூன்று பேரையும் துணைக்கு
சேர்த்துக்கொண்டாள். சுவாரஸ்யமாகத் தான் சண்டை போய்க் கொண்டிருந்தது, அதை
கவனித்துக்கொண்டிருந்த எனக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை? ஆனால் இந்த சண்டையை
வைத்து என்னையும் யாராவது பார்ப்பார்களா என்று தோன்றியது. என்னருகிலிருக்கும்
சிறுமியின் தாயினைப் பார்த்தேன் அவள் என்னை ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்தாள்
போலும். அதே நேரம் இந்த இருக்கையை மாற்றிக் கொடுத்த பெண்ணும் எழுந்து என்னை
நோட்டம் விட்டாள். அதற்குள் அந்த சண்டை ஓய்ந்திருந்தது, அந்த மனிதர் தன்
செருப்பைக் கழட்டிப் போட்டதன் காரணமே அத்தனை சண்டைகளுக்கும் மூலமாய் அமைந்தது
என்று பஞ்சாயத்து முடிந்தது.
இது போன்ற ஒரு இரவை நான் எதிர்பார்க்கவில்லை,
இத்தனை அசாதாரணமான சூழலா? அன்றைய நாளின் அலைச்சலிலும், பேருந்துக்காகக்
காத்திருந்த சோர்விலும் படுத்தவுடன் தூங்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால்
அந்த இரு பெண்களும் என்னைப் பார்த்த விதத்தையும், பேசிய வார்த்தைகளையும் மீண்டும்
மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் மீது வெறுப்பு கூடியது.
இருந்தாலும் இந்தச் சிறுமியிடம் நான் என்ன செய்வேன் என்று நினைத்துக்கொண்டாளோ
என்று அவள் தாயைப் பார்த்தேன். அவள் எங்கள் இருவரையும் பார்த்தபடி தூங்காமல்
விழித்துக்கொண்டிருந்தாள். இனிமேல் இவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் நான்
தூங்க முடியாது என்று கண்களை மூடினேன்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும், அப்போது தான்
தூங்கியிருப்பேன். என் தலையில் யாரோ ஓங்கித் தட்டுவது போல் ஒரு ஓசை.
“அட நான் ஒன்னும் செய்யலப்பா!!” என்று
கத்தியபடி எழுந்தேன். பேருந்து ஒரு பயணவழி விடுதியில் நின்றிருந்தது. பேருந்தின்
ஜன்னல்களின் கீழே தம் கைகளால் ஓங்கித் தட்டியபடி ஒருவன் பயணிகளை எழுப்பிக்
கொண்டிருந்தான். அவன் தட்டியதற்குத் தான் நான் அப்படிக் கத்தினேனோ என்று
எண்ணினேன். இருந்தபோதும் அவ்வளவு சத்தம் போட்டிருக்க மாட்டேன் என்று நம்பினேன்.
பேருந்தினுள் இருந்து யாரும் இறங்கியது மாதிரி தெரியவில்லை. சிறுநீர்
வரவில்லையென்றாலும் கூட அவன் எழுப்பும் வேகத்தில் நமக்குப் போக வேண்டும்
தோன்றிவிடும். நான் எழுந்ததைக் கண்டு அந்தச் சிறுமியே வழி விட்டாள், அவள் தாய்
இன்னும் என்னை முறைப்பதை விடவில்லை.
இரண்டு ரூபாய் வாட்டர் பாக்கெட்டில் காவேரி
என்று எழுதியிருந்தது, முகம் கழுவிக் கொண்டு, கொஞ்சம் குடித்தபடி, கழிப்பிடம்
சென்றேன். அவன் மூன்று விரல்களை நீட்டினான், போய் வந்தேன். பத்து ரூபாய் கொடுத்து
ஒரு டீயை வாங்கி வாயில் வைத்தால், ப்ளீச்சிங் பவுடர் வாசம். யாராவது
பார்க்கிறார்களா என்று ஒரமாகச் சென்று அந்தக் கப்பை வீசிவிட்டுக் கோபமாக நடந்தேன்.
கையில் தாராளமாகக் காசு இருந்தால் அந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் மொத்தக்
கேசட்டையும் வாங்கி தீயிட்டுக் கொளுத்தியிருப்பேன் என்று எனக்குள்ளேயே அவர்களை மிரட்டியபடி
உள்ளே சென்றேன். மீண்டும் அந்த சிறுமியை எழுப்பாமல் உள்ளே நுழைந்து விடுவோம் என்று
முயற்சித்தேன், முடியவில்லை. திடீரென்று, அவள் தொடையில் ஒரு தட்டு தட்டினாள் அவள்
தாய். அவள் திடுக்கிட்டு விழித்து எனக்கு இடம் கொடுத்தாள். அவள் தாய் மீது
எல்லையற்ற கோபம் வந்தது.
“என்னமோ இவுங்க தான், அதிசயமா பிள்ளை பெத்த
மாதிரி..” என்று அவள் காதில் விழுமளவு முனகினேன். பதிலெதுவும் வரவில்லை. வெகுநேரமாகியும்
மனம் அமைதி பெறவில்லை. முடிந்தளவு ஒரு பக்கமாக சாய்ந்தே படுத்துக்கொண்டேன்.
எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
விழித்துப் பார்த்த பொழுது பேருந்து சென்னை
கிழக்குக் கடற்கரைச் சாலையில் நுழைந்தது. இடது தோளில் ஈரத்தை உணர்ந்தேன்,
அச்சிறுமி என் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தாய் நன்றாகத்
தூங்கிக் கொண்டிருந்தாள். என் டீஷர்டில் அவளது எச்சில் இடது தோளை நனைத்து
இருந்தது. சட்டென எனது தோளைக்கொண்டே அவளை நகர்த்திவிட்டு நான் என் இருக்கையில்
சாய்ந்துவிட.
“அப்பா….” என்று சிணுங்கிக் கொண்டே தோளில்
சாய்ந்தாள். தனது இடது கரத்தையும் கொண்டு என்னைப் பற்றிக் கொண்டாள். வெளிச்சம்
ஜன்னலின் வழியே என் மீது விழுந்தது.
- ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக