“நம்மோடு தான் பேசுகிறார்கள் நூல் விமர்சனம்”
டிஸ்கவரி புக் சிற்றரங்கம்; 26/07/14 - மாலை 06.30
யாவரும்.காம் நடத்திய 23ஆம் கூட்டம் குறித்து எழுத முடியாத அளவுக்கு
ஒரு நிறைவினைத் தருகிறது, உண்மையைச் சொல்லப் போனால் இரண்டு நாட்களாக இரவில் கூட இந்த
நிகழ்வினை சரியாக நடத்துவோமா என்ற அச்சத்துடனேயே கண்ணதாசனுக்கு நேரங்கெட்ட நேரத்தில்
கூட போனில் அழைத்துப் பேசுவேன். எனது புதிய நண்பரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெய்யிடம்
தான் இந்த நிகழ்வினைப் பற்றி பேசி புலம்பிக் கொண்டிருந்தேன். அவர் அதற்கு பதில் சொன்னார்
“இந்தக் கூட்டம் முடிவடையும் போது எப்படி முடிவடையும் என்று நினைத்துப் பாருங்கள்”
என்றார். உண்மையில் இத்தனை நிறைவு தரும் என்று நினைத்துக் கூட பார்க்கவேயில்லை. இங்கிருந்து
மிக கவனமாகவும், மிக நேர்த்தியுடனும், நேர்மையுடனும் பயணிக்க வேண்டும் என்று எங்களை
சிந்திக்க வைத்தது. இதைத் தான் இக்கூட்டத்தின் நிறைவு என்று பார்க்கிறேன்.
சரியாக 06.30 மணிக்கு வேல்கண்ணனின் வரவேற்புரையுடன் தொடங்கிய
இந்நிகழ்வு. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் 06.30 என்று ஈவெண்டில் போட்டு
06.30க்கே ஆரம்பித்தது இதுவே முதன் முறை என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
இந்த நூலின் ஆசிரியர்கள் இருவருமே ஓவியர்கள் தான். முழுவதும் கலை மற்றும் சமூக வாழ்வியல்
குறித்த உரையாடல்களாக பதிவு செய்திருக்கும் இந்த புத்தகம் பற்றி பேசுவதற்கு எல்லோருமே
கவிஞர்களாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எங்கள் குழுவின் தீர்மானமாக இருந்தது.
ஏனென்றால் ஓவியம் என்பது ஆதி மொழி, கவிதை என்பதோ ஒரு மொழியில்
இயங்குகின்ற தனி மொழி இந்த துறைகளுக்குள் இருக்கும் ஒரு தொடர்பினைப் புரிந்துகொள்ள
முடிகிறது, தீர்மானமாக கவிஞர்களையே அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
எங்கள் அண்ணன் அய்யப்பமாதவன் இந்த புத்தகத்தில் சிதறிக் கிடக்கின்ற
நுன்விஷயங்களையும், உரையாடலின் தொனி குறித்தும் பேசினார். மஹாராஷ்ட்ராவில் உள்ளவர்களின்
இயல்பான வாழ்வியலையும், அவர்களின் கலைகள் மீதான் ஆர்வம் குறித்து நூலில் பேசப்பட்டிருக்கும்
செய்தியோடு, அந்த புத்தகத்தின் அத்தியாயம் இப்படி முடிகிறது :
// தமிழகத்தின் எளிய உணவு, VALUE ADDED FOOD ஆக மாறிப் போனதைப் போல நடை, உடை, பாவனையும் மாறிப்போய்விட்டதைத் தொடர்ந்து கலை சம்பந்தமான படிப்புகள் அற்றுப்போய் எல்லா குழந்தைகளும் டாக்டராகவும், இன்ஜினியராகவும் இருக்கும் பட்சத்தில் மற்ற தொழில்களுக்கு நம் காப்பாளரை போல் பிற தேசத்திலிருந்து அழைத்து வரப்படும் நபர்கள், VALUE ADDED SERVICE ஆகவே இருப்பார்களேயன்றி இயல்பும், எளிமையும், தூய்மையும், மேம்பாடும் புலம் பெயர்ந்தால் மட்டுமே காணக்கிடைக்கும்//
சமகாலத்தில் அம்மா உணவகம் இருக்கின்ற பொழுது நல்லபடியாக கலைகளை வளர்த்தெடுக்கும், ஈடுபாடு கொண்ட சமூகம் வருமா என்கிற laughterஐ முன்வைத்து விட்டுச் சென்றார்.
இந்தக் கூட்டத்தில் அனைவருமே
அதிகம் எதிர்பார்த்தது அகரமுதல்வனின் பேச்சைத் தான் என்பதில் எனக்கும் ஐயமே இல்லை,
இந்த புத்தகம் பேசிவந்த அரசியல், சமூகம், கலையுணர்வு என்பதை வேறு ஒரு நிலத்திற்குள்
வைத்தும் பேச முடியும் என்பதை நிரூபத்துக் காட்டினார். கலையின் வடிவமானது ஒவ்வொரு நிலத்திற்குள்ளும்
வேறுபட்டாலும், அதன் ஜீவன் பொதுமையானதே. அகரமுதல்வனின் பேச்சு அங்கிருப்போரை மிகுந்த
இறுக்கத்திற்குள்ளாக்கியதை என்னால் அவதானிக்க முடிந்தது. “அட!! இவா நம்மாளுக தாண்டா”
என்று நூலின் ஆசிரியர்களை சொல்லும் கணத்தில் அகரமுதல்வன் இணைத்திருக்கும் விதமானதை
எத்தனை பரிமாணங்களில் சிந்திக்க முடிகிறது என்பது வியப்பு. அதே நேரம் அது வலியினை தரக்கூடியது
ஆசிரியர் பாலசுப்ரமணியம் ஒருபக்கம் நிறைவினையும் இன்னொரு பக்கம் வலியினை சுமந்து அமர்ந்திருந்ததை
என்னால் உணர் முடிந்தது.
ராஜேந்திரச் சோழனின் 1000ஆவது
ஆண்டு தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில் இந்த கலை, சிற்பம் ஓவியம் குறித்து பேசுவதையும்,
முன்னதன் நீட்சியாகப் பார்க்க முடிகிறது என்று தன் உரையை முடித்து வைத்தார்.
அமிர்தம் சூர்யாவுக்கென்ற தனி
பாணி, அவருக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது என்பது உண்மை, அது
எதிர்வினையாகவும் இருக்கக் கூடும் என்பதும் உண்மை. சூர்யா புத்தகத்தின் வடிவத்தினை,
அதன் கூர்மையான சொல்லாடல்களை, அதன் கட்டுமானங்களை என எல்லாவற்றையும் தன் அனுபவத்தோடு
இணைத்து அந்த புத்தகத்தின் உள்ளே நுழைத்துச் சென்றார். கோயிலின் தத்துவம், குடும்ப
உறவு, அரூப ஓவியங்கள் என தன் வீட்டிற்குள்ளே நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு இந்நூலின்
பேசப்பட்ட விசயங்களைக் கோர்த்துப் பேசியது பலரையும் ஈர்த்தது என்பதில் ஐயமில்லை.
அதிலும் அந்நூலில் வரும் அப்ஸ்ட்ராக்ட்
ஓவியங்கள் குறித்த பதிவினை எப்படி எளிமையாக புரியும் படி “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு,
கோழிக் குஞ்சு வந்ததென்று” பாடல் வழியாக ஆசிரியர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள்
என்பதனை தன் இளைய மகனோடு நடந்த உரையாடலையும் அதைக் கவிதையாக மாற்றிய அனுபவத்தையும்
சொல்லிய விதம் கலையினை எவ்வளவு எளிமையான இடத்திலும் பார்க்க முடியும் என்பதாக இருந்தது.
யவனிகா ஸ்ரீராம் பேசுவதற்கு
முன் அவர் சென்ற கூட்டத்தில் விட்டுச் சென்ற கேள்வியை மறுபடியும் தூசி தட்டி எடுத்துக்
கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் யவனிகா அண்ணன் பேசிய விதம் எல்லோருக்குமே புதிதாக இருந்திருக்கும்.
இந்நூலின் மையச் சரடினை எடுத்துப் போட்டவர்:
“கலைகளும் பண்பாடும் அழிந்தொழிந்துக் கொண்டிருக்கும் சமூகத்தில், மீட்கப்படுவதற்கான
கடைசி முயற்சியாகக் கூட ஒரு இயக்கம் தோன்றவில்லையே என்கிற கவலையைப் பதிந்துள்ளனர்”.
கலைவடிவம் யாரால் காபந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது,
யார் அதை வேறு வடிவத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர், இதை எப்படி மீட்டெடுக்க முடியும்
என்கிற விதையை ஊன்ற முடியும் என்பது போன்ற தொனியில் பேசத்தொடங்கிய அவர் ஓவியங்களின்
பல்வேறு நிலங்களையும், அது எப்படி மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற
பகிர்வுகளையும் மிக சுவாரஸ்யமாகப் பதிந்தார். ஸ்ரீநிவாசனின் நினைவுகளில் இருக்கும்
அந்தக்கால தமிழ்படங்களின் செவ்வியல் பண்புகளும் சுவாரஸ்யங்களுமாக தன் அனுவத்தையும்
சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, பானுமதி, ஜெமினி, சிவாஜி என்கிற நடிகர்கள் வழியே பேசிய விதம்
அரங்கினை அதுவரை இருந்த இறுக்கத்தில் இருந்து ஒரு சில நிமிடங்கள் வேறு எங்கோ கூட்டிச்
சென்ற விதமாக இருந்தது. இந்த இடத்தில் சினிமாட்டிக்காக “அரங்கம் அதிர்ந்தது” என்று
சொல்வதும் அழகு தான்.
சமகாலத்தின் தமிழ்மனம் சினிமாவில் வயப்பட்டிருக்கும்
விதமும், செவ்வியல் பண்புள்ள கலைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அம்சங்கள் குறித்தும்
பேசினார். தனது அரசியல் பார்வைகள் வழியாக மட்டும் பார்க்காமல் ஒரு சார்புமற்ற கலைஞனாய்
பொதுவில் நின்று பேசியதாய் அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதே உண்மை.
செவ்வியல் கலைகள் குறித்துப் பேசும் பொழுது, “நம் இன்றைய படைப்புகளை கணக்கிலேயே எடுத்துக்
கொள்ளாத மேலை நாட்டினர், குறுந்தொகை போன்ற க்ளாசிக்களைப் பேசும் பொழுது வியக்கின்றனர்”
என்று இவர் முன்வைக்கும் போதே கோயில்களை வெறும் மதச்சின்னமாகப் பார்க்கும் அரசியல்வாதிகள்
மற்றும் முற்போக்குவாதிகளுமே இன்னும் புரிந்து கொள்வதற்கான் வெளியை இந்த புத்தகம் பேசுகிறது
என்று சொல்ல முடிகிறது.
பவா செல்லதுரை பேசாமல் இக்கூட்டம் நிறைவடையாது என்று
நண்பர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். நிறைவானது. அமிர்தம் சூர்யா சொன்னது போல, இந்த
அற்புதமான நண்பர்கள் நடத்திய எளிய ஏற்புரையில் அன்பைத் தவிர வேறொன்றும் கலையின் ஜீவனாக
இருக்க முடியாது என்றெ நம்பிவிடத் தோன்றியது.
இறுதியில் பேசிய ஸ்ரீநிவாசன் மூன்று நான்கு வாக்கியங்களில்
ஏற்கனவே இறுகிப்போயிருந்த மனதை இன்னமும் கட்டிப்போட்டு விட்டார். மேலைநாடுகளுக்கு நம்
கலைகளைக் கொண்டு செல்லும் விற்பன்னர்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்று ஆரம்பித்தார்.
மிஞ்சியிருக்கின்ற எச்சங்களிலும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப்
போகின்ற சூழலில் இன்னமும் 30, 40 ஆண்டுகளாவது பேசிக் கொண்டுதான் இருக்கப் போகின்றோமா
என்று கேள்வியெழுப்பியபடி முடித்துக் கொண்டார். ஸ்ரீநிவாசன் எழுப்பிய குறியீடுகளின்
கனைகள் இன்னமும் என்னை எத்தனை நாளைக்கு தூங்க விடாமல் செய்யுமோ???
நிகழ்வுக்கு வந்திருந்த பவா சார், சைலஜா, சூரியதாஸ் அண்ணன், இயக்குனர் கீரா, நண்பர் கார்த்திக் இராமனுஜன், பரிதி, நண்பர் சொக்கலிங்கம், கவிஞர் கோசின்ரா, நண்பர் ஷான் கருப்பசாமி, கவிஞர் நரன், நண்பர் பாஸ்கரன், நண்பர் கவிஞர் ஆரா, என் ஆசிரியர் வானமாமலை என எல்லோருக்கும் என் நன்றிகள்.
முதன்முதலாக இந்த அரங்கினை ஒளிப்பதிவு செய்தோம். கிட்டதட்ட
மூன்றரை மணிநேரம் இந்த காணொளியை எடுத்த அந்த மனிதர் இறுதியாகக் கண்ணதாசனிடம் சொன்னார்
“சார், இவ்ளோ நேரம் எடுத்தேன், கைகள் வலிக்கவேயில்லை சார்”
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக