வியாழன், 9 அக்டோபர், 2014

பஜ்ஜி - சொஜ்ஜி -73 (AN ILLUSTRATION) ஒரு விபரனப் படைப்பின் கதைகடைசியாக ஜூலை மாதம் தான் ஒரு பதிவு செய்திருந்தேன், எழுதுவதில் சில மாதங்களாகவே சுனக்கம் ஏற்பட்டிருந்தது. தினமும் ப்ளாகில் லாகின் செய்து ஏதாவது ஒரு டாபிக்கை தேர்வு செய்து ஆரம்பித்தவுடன் அலுப்பு வந்து விடுகிறது. வா.மவை திட்டிக் கொண்டே லாக் அவுட் செய்து விடுவேன். போகிற போக்கில் ப்ளாக் போஸ்ட் போடுபவன் என்றெல்லாம் யாரையும் சொல்லி விட முடியாது, எல்லாவற்றிற்கும் ஒரு உழைப்பு தான் அடிப்படை. எப்படியோ எனது வலைப்பூவையும் தொடர்ந்து வாசித்து வந்த நூற்றிசொச்சம் பேரையும் கைவிட்டாகி விட்டது. ஆனாலும் சமீபத்தில் ஒரு மனிதரைப் பற்றி எப்படியாவது எழுத வேண்டும் என்று ஒரு வாரமாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.


ஓவியங்கள் குறித்தும், சிற்பங்கள் குறித்தும் நான் நிறைய எழுதவதாகத் தோன்றினாலும், கலைஞன் என்பவன் யார்? கலை என்பது என்ன ? என்கிற அடிப்படைக் கேள்வியிலேயே இன்னும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது தான் உண்மை. ஏனென்றால், இங்கே தவறாகக் கற்றுக் கொண்டவையால் நிகழ்ந்து வரும் விபரீதங்கள், கற்றுக் கொள்ளாமையால் உருவான சூழலைக் காட்டிலும் குறைவு தான்.

*
அந்த ஓவியரின் வீட்டில் நுழையும் பொழுதே அவரது நண்பர்கள் அவரது வீட்டைப் பற்றி சொல்லிவற்றை நினைத்துப் பார்த்தேன். வீட்டில் அவர் வைத்திருந்த நூலகம் பற்றிய கதை தான் அது, வீட்டின் எல்லா அலமாரிகளும் போக மூட்டை, மூட்டையாய் கட்டி வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் நண்பரின் பதிவுகளில் கண்டிருக்கின்றேன். ஆனால் வீடோ அந்தப் பதிவுக்கு மாறாக வெறிச்சோடியிருந்தது, புத்தக வாசனை தவிர. ஓவியங்கள் குறித்து அவரோடு பேசலாம் என்று நினைத்திருந்தவை, புத்தகங்கள் குறித்த பேச்சாக மாறியது.

க்ளிஷேவாக இருக்கிறதென்றாலும் சொல்ல வேண்டியிருக்கிறது, தன் வருமானத்தில் பெரும்பகுதி புத்தகங்களாகவே வாங்கும் பாரதி பரம்பரை தான் அவர். அவரின் சேகரிப்பு மிகத் தனித்துவம் வாய்ந்தது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆங்கிலமும், தமிழுமாக பல்வேறு துறைகளில், துறைவாரியாக (ஒரு ப்ரொஃபசனல் லைப்ரரியனாகவே) அடுக்கப்பட்டுருக்குமாம் அவர் வீடு முழுவதும். புத்தகங்கள் மட்டுமின்றி முக்கியமான அத்தனை சஞ்சிகைகளும், நாளிதழ்களும் பல்வேறு தலைப்புகளாகப் பிரிக்கப் பட்டு கோப்புகளாக்கப்பட்டிருந்தன என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்படி நூலகம் அமைக்கும் முறையை ரோஜா முத்தையாவிடமிருந்தே கற்றிருந்தேன் என்றும் அவர் என்னிடம் சொன்னார். அவரின் நண்பர்களுக்கு இவர் வீடு நூலகமாகவும் இருந்திருக்கும். கலை, கட்டடக்கலை, சூழலியல், அறிவியல், இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம் என எல்லாத் துறைகளிலுமே இருந்தன என்று அவரும் சொன்னார். புத்தகங்களை தான் சேகரித்த விதம், அதை ஒழுங்கு படுத்தி வரிசைப் படுத்தியவை என்று சொல்லும் போதே அந்த புத்தகங்களின் வாசனையை உணர ஆரம்பித்தேன்..

வீடு முழுக்க நிரம்பியிருக்கும் புத்தகங்களையெல்லாம் வாசித்திருக்கும் அவர் நிறைய பேசாதவர்நான் வந்திருந்ததோ அவர் ஓவியங்கள் பற்றி பேசுவதற்கு. ஆனால் நான் ஓவியங்கள் குறித்து கேட்கவேயில்லை. 25 வருடங்களுக்கும் மேலாக அவர் சேகரித்த புத்தகங்கள் எங்கே போயின என்று என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை கேட்டுவிட்டேன்.

இப்போது அத்தனை புத்தகங்களும் ஒரு தொண்டு நிறுவனத்தில் இருக்கிறது, அந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஒரு முறை அந்த வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் தன் குழந்தைகளுக்கும் இது போன்ற ஒரு சூழல் வேண்டுமே என்று கேட்டிருக்கிறார்கள், இவரும் கொடுத்துவிட்டார்.

”25 ஆண்டுகளாக கொஞ்சமாக இப்படி சேகரித்த அத்தனை புத்தகங்களையும் எப்படி இந்த ஒரே நொடியில் மனம் மாறி கொடுத்திட முடியும்?” என்று கேட்டேன். மிகவும் உணர்ச்சி வயப்பட்டு பேச ஆரம்பித்தார்,  “எவ்வளவு பிடித்த புத்தகமாயினும் மூன்று, நான்கு தடவை வாசிக்கப் போகிறோம், அதிகப் பட்சம் பத்து முறை அதற்கும் மேல் பிரியமான புத்தகமென்றால் நம் தலையனைக்கு அருகில் வைத்துக் கொள்வோம். அதையும் மீறி ஒரு புத்தகத்தை நாமே வைத்துக் கொள்வதும் ஒரு சுயநலம் தான் இல்லையா?” என்றார். அவருக்கு மிகவும் அவசியப்படும் சில துறை சார்ந்த ரெஃபரன்ஸ் புத்தகங்களைத் தவிர அனைத்தையுமே அனுப்பி வைத்து விட்டார்.

நான் கேட்காமலே ஓவியங்கள் குறித்த அவரது மனநிலை வெளிப்பட ஆரம்பித்தது, தன் படைப்புகளை அவரது வாழ்க்கையில் இருந்து அவர் அந்நியப்படுத்த விரும்பவில்லை, அவர் வாழ்க்கையை இந்த சமூகத்திடம் இருந்து அந்நியப் படுத்த விரும்பவில்லை. இப்படி தனது படைப்புகள் யாவுமே Illustrations என்று சொல்லும் துணிச்சலை அவருக்கு இந்த புத்தகங்கள் தான் கொடுத்திருக்கின்றன. தனது படைப்புகளை, தனது வாழ்க்கையோடும், சமூகத்தோடும் பின்னல் போட்டுக் கொண்டவரால், தன் படைப்புகளுக்கென ஒரு ஆசனம், தனியறை கொடுத்து வைக்க தோன்றவில்லை. அந்த மனம் தான் இவருக்கு தன் வாழ்நாளின் பெரும் சேகரிப்பானவற்றை ஒரு கணத்தில் கொடையளிக்க மனம் வந்திருக்கிறது. வாழ்வியலே கலை என்று தன் புத்தகத்தில் (நம்மோடு தான் பேசுகிறார்கள்), தன்னை ஒரு வாழ்வியலின் Illustrationஆக அவர் வரைந்திருக்கிறார் (Art of selfie!!)அவரது அடுத்த படைப்பும் இது தான் புத்தகங்களைப் பகிர வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட கலைப் படைப்பு அது. இதில் எழுத்தாளர்கள், ஓவியர்கள் மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்த விற்பன்னர்கள் மற்றும் தீவிர வாசகர்கள் என தங்கள் பங்களிப்பைத் தர, தங்களோடு அதிகம் பயணம் செய்த புத்தகங்களில் அவர்கள் கையெழுத்துடன் பகிரப்படுவதே ஒரு படைப்பாகப் போகின்றது. இந்த கண்காட்சியும் விரைவில் (அநேகமாய் நவம்பர் மாதத்திலேயே) சென்னையிலேயே அரங்கேறப் போகின்றது. இப்படைப்பிற்காக் தம் நண்பர்களிடமிருந்து பெற்றிருந்த சில புத்தகங்களை என்னிடம் காண்பித்தார், தம்மோடு 60 வருடங்களாக பயணம் செய்த புத்தகத்தைக் கூட இந்த காரணத்திற்காக ஒருவர் கொடுத்திருக்கிறார் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

என்னிடமும் கேட்டார், “உங்களோடு அதிகம் பயணம் செய்த புத்தகத்தை தர முடியுமா??” என்றார். “தருகிறேன் சார், என்னோடு மிக நெருக்கமாய் இருக்கும் புத்தகத்தின் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர் தான்” என்றேன். 


அந்த புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான ஓவியர் பாலசுப்ரமணியன் அடுத்ததாக என்னிடம் ஒரு விண்ணப்பம் செய்தார். ”அப்படியென்றால் என் படைப்பிற்காக நீங்களும் உதவ வேண்டும்” என்றார். இப்படைப்பில் சேர்க்கப்படும் நூல்கள் யாவுமே கண்காட்சி முடிந்ததும் அந்த தொண்டு நிறுவனத்திற்கே அனுப்பப்படும். அங்கிருக்கும் மாணவர்கள், குழந்தைகள் வாசிக்கும் முன்னர்,  “இது யார் வாசித்த புத்தகம்” என்ற ஆவலில் தான் ஒவ்வொரு நூலுமே திறக்கப்படும் அல்லவா? . அங்கிருந்தபடியே என் நண்பர்களான வேல்கண்ணன், அமிர்தம் சூர்யா, கண்ணதாசன் ஆகியோரிடம் ஒப்புதலைப் பெற்றேன், உடன்வந்திருந்த தம்பி அகரமுதல்வனும் தன் புத்தகத்தைப் பகிர்ந்தான். ஆனால் இவையெல்லாம் பத்தாது தான்.


*
அவர் சேமித்திருந்த புத்தகம் தொண்டு நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான தொகைக்காக சில மாதங்களாக அவர் சேமித்து வைத்ததாக அவர் சொன்னார். ஏனென்றால் அது ஒரு 20” கண்டெயினரில் பாதியளவு நிரம்பியிருந்ததாம். புத்தகங்களை லாரியில் ஏற்றியதும் அவற்றைப் பிரிந்தநிலையில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவர் நின்றிருக்க, அங்கு வந்த அந்த பார்சக் சர்வீஸின் மேலாளர் இவரின் கொடையினைப் பற்றி கேட்டறிந்திருக்கிறார். 

பின்னர் தன் கையிலிருந்த பில்புக்கை லாரியிலேயே விட்டெறிந்துவிட்டு, “நாங்களும் மனிதர்கள்தானே சார்!! நீங்கள் இவ்வளவு உதவி செய்யும் பொழுது நாங்களும் செய்ய மாட்டாமோ?? எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவ்வளவு தான்!!” என்று சுமைகூலி முதற்கொண்டு எந்தக் கட்டணமும் வாங்காமல் புத்தகங்களைக் கொண்டு சென்று சேர்ப்பித்ததாக அவர் என்னிடம் பகிர்ந்த போது....

இப்போழுது அவர் செய்யவிருக்கும் கலைப்படைப்பும் அவர் சொன்ன உணர்வுகள் தான் அந்த பார்சல் சர்வீஸ்  மேலாளரின் உணர்வு தான் இன்று படைப்பாகப் போகின்றது. அதற்காக ஒருவரிடமிருந்தே அவர் பல நூல்களைப் பெற முடியும். ஆனால் அது முக்கியமல்ல பல்வேறு மனிதர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டவையாக அவர் இருந்தால் தான் ஓவியர் பாலசுப்ரமணியனின் விருப்பம் பூர்த்தியாகும். வாருங்கள் நாமெல்லாம் சேர்ந்து கட்டுவோம்.
*

நானும் அவருக்கு புத்தகம் சேரித்துக் கொடுக்க விரும்புகிறேன், என் நண்பர்கள் என்னுடன் இருப்பார்கள்……..
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக