தேடலென்பது என்ன?? விளக்கம் தெரியாது. ஒரு செயலைப் பற்றிய விவரணைகள் எனக்கு எப்போதும் தேவைப்படவில்லை, செயல் வெறுமனே செய்யப்படும் போது அதில் பற்றிருக்காது என்று இன்று உபநிஷதத்திலிருந்து ஒரு செய்தியை உணர்ந்து கொண்டேன்.
வலைப்பூவிற்கு பெயர் தேட ஆரம்பித்ததிலிருந்து மேலோட்டமாக எத்தனை தளங்களில் நுனிப்புல் மேய்ந்திருப்பேன் என்ற வியப்பிலிருந்து தான் இந்தப் பதிவு தொடங்குகிறது. நுனிப்புல் மேய்வதால் விளைச்சல் காரனுக்கும், குதிரைக் காரனுக்கும் நஷ்டம் உண்டு, பசியாரும் அளவுக்கு நுனிப்புல் மேய முடிந்ததால் மேய்ச்சலில் திருப்திபட்டுக் கொள்ள குதிரையால் முடிகிறது என்பது சந்தோஷம்.
இந்த வலைப்பூவிற்கான பெயரைத் தேடும்போதே மொழிச் சிக்கலில் இருந்து தான் ஆரம்பித்தேன், தனித்தமிழ் எனப்படும் தனித்த தமிழின் நடைமுறைச் சிக்கலிலிருந்து விவாதம் தொடங்கியது. பல நண்பர்களுடன் இதைப் பற்றி பேசும்பொழுது, நிச்சயமாய் நான் ஒன்று சொல்லிட வேண்டும். ஜெயமோகன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆங்கில லிபியில் தமிழ் மொழியை எழுதிப் பழகுவதை ஆதரித்தவற்றை கண்மூடித்தனமாய் நான் எதிர்த்திருக்கிறேன் என்று. ழகரம், றகரம் என்ற எழுத்துகளை சுத்தமாக உச்சரிக்க வரும் என் உறவினரின் மகனுக்கு தனது 10 வயதிற்குப் பின்னர் தான் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுத்தரப்படுகிறது. அவன் பேச்சு வழக்குக்கு, ஆங்கில லிபியில் தமிழ் எழுத ஆரம்பித்திருந்தால்?? - பெரிய ஆபத்தாகியிருக்கும், இந்த மூன்றாம் மொழியாகக் கூடக் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப் படும் அளவிற்கு மோசமான சூழல் உருவாகுமென்பது ஜெ.மோவின் கணக்கு.
இப்படி ஒரே அலைவரிசையில் பயணிக்காமல், கலித்தொகை, பெரிய புராணம், சில ஓவிய புத்தகங்கள் என்று சுழற்றிப் பார்த்தேன். சங்க இலக்கியங்களில் மது வகைகளுக்கு இருக்க்கும் பெயர்கள், நீர்நிலைகளுக்கு இருக்கும் பெயர்கள், சிற்பக் கலையிலிருந்து ஏதாவது ஒரு சொல் என்று தேடிக் கொண்டிருந்தேன்.
ஒரு கதைசொல்லியாக இருக்க ஆசைபட்டாலும், நண்பர்களுக்கு மட்டுமே இது வரை என் கதைகள் வாசிக்கப்பட்டு இருப்பதால் “ட்ரங்குப் பெட்டி என்று வைக்கலாமே” என்று யோசித்தேன். மறுபடியும் ட்ரங்கு எனும் மொழி இடித்தது.
கல்வெட்டியல் படித்துக் கொண்டிருப்பதால், அத்துறை சார்ந்து ஏதாவது கிடைக்கின்றதா என்றும் சில கல்வெட்டு வாசிப்புகளையும் எடுத்துப் பார்த்தேன் கிட்டவில்லை.
நான் தேடும் பெயர் மயக்கநிலை தருவதாக இருக்க வேண்டும், அல்லது அழகியலின் உச்சபட்ச நிலையில் இருக்க வேண்டும் தீர்மானமாக இதில் நின்று கொண்டேன்.
மயக்க நிலை என்றால்; வள்ளுவனின் மயக்க நிலை போல
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
இப்படி ஒரு மயக்கநிலையை வள்ளுவன் சொல்லியிருக்கின்ற இடத்திலிர்ந்து தான், துகில் எனும் வார்த்தைக்கு அருகில் சென்றேன்.
முலைமேல் துகில் - இலக்கியங்களில் தொய்யில் என்ற ஒரு கலை பற்றிய பதிவு நிறைய கிடைக்கிறது.
தொய்யில் - மருதாணி இடுதல் போன்றே உடலில் வண்ணமேற்றும் கலை தான். பெண்களின் மார்பு மற்றும் முதுகு தனில் வரையப்படும் அழகுச் சித்திரங்களோ?கோலங்களோ? அவை ஆடையைப் போல உடலை மறைக்கும் தன்மையில் வரையப் பட்டவை; அவை பெரும்பாலும் காதலனால், காதலிக்கு வரையப்பட்டவை; அவை பெரும்பாலும் கூடி முடித்த நிலையில் அளவிலாக் காதலோடு வரையப் பட்டவை.
சங்க காலத்தில் புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பிலும் தோளிலும் முகத்திலும் குங்குமம் மற்றும் சந்தனக் குழம்பால் ஆன கலவையைக் கொண்டு ஓவியம் வரைவது மரபு. ஓர் இரவில் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியிலும் வெவ்வேறு வகையான தொய்யில் எழுதுவர். தொய்யிற் கலையை கூத்தர்கள்(கூத்தாடுபவர்கள் ) தலைவனுக்கு கற்ப்பிப்பார்கள். இவ்வ்வாறு தொய்யில் எழுதுவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் மிகுந்த அன்பை விளைவிக்கும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.
தொய்யில் எனும் வார்த்தை வள்ளி, கரும்பு என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
1.
(தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் வெண்ணிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்டிருந்தது.)
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள் - நெடுநல்வாடை 36 - (விக்கிப்பீடியா -தமிழ்)
2.
உழுந்து உடைக் கழுந்தில் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்நலனுண்டு துறத்தி யாயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே.
(குறுந்தொகை 384, ஓரம்போகியார், மருதம் திணை – தோழி தலைவனிடம் சொன்னது)
3.
(அகநானூறு 389, நக்கீரனார், பாலை திணை தலைவி சொன்னது)
அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும்
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும்
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
4.
(நற்றிணை 225, கபிலர், குறிஞ்சி திணை – தலைவி சொன்னது)முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே.
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே.
என் எழுத்தில் நான் அதிகம் கவனமாகக் கையாள வேண்டியதாக நினைக்கும் அழகுணர்வின் காரணமாக, என் படைப்பு முயற்சிகளை இனி தொய்யில் எழுதுவது போலத் தான் அணுகவேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே,தொய்யில் என்ற பெயரை என் வலைப்பூவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். இனி thoyyil.blogspot.com தான்
- ஜீவ.கரிகாலன்
செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
பதிலளிநீக்குமெய் அராகம் அழிய, துகில் நெக,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 19
எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன; ஊடலில் கனன்று
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30
தொய்யில் வெய்ய முலை, துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல், ஓர் நங்கைதான்,
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்,
'உய்யும், உய்யும்!' எனத் தளர்ந்து ஓய்வுற்றாள். 35
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட,
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என, கடல் மேனியில்,
தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75
மேலே உள்ள கம்பராமாயணப் பாடல் அடிகளிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள ”ஆர்ட்” ஆளப்பட்டுள்ளது. கரிகாலன், இனி உங்கள் பதிவுகளில் காதலுடன் (Your Blog) கவனமாக வரையப்பட்ட சித்திரங்களை (Blogs) எதிர்பார்க்கலாம் என்று குறிப்பால் உணர்த்துகிறீர்கள்... நன்று...
உங்கள் பதிவுகள் கலைகளைப் பிரதானமாகக் கொண்டிருந்தாலும் மற்ற பதிவுகளும் சிறப்பானவையே... அவற்றையும் கவனத்தில் கொள்ளவும்.. ஏனெனில், நதியாகிய நீங்கள் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்..
வசீகரிக்கும் உங்கள் கலைப்படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறோம்...
வாழ்த்துகள்...