செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி - 64 / தேடல் உயிர்ப்பானது



தேடலென்பது என்ன?? விளக்கம் தெரியாது. ஒரு செயலைப் பற்றிய விவரணைகள் எனக்கு எப்போதும் தேவைப்படவில்லை, செயல் வெறுமனே செய்யப்படும் போது அதில் பற்றிருக்காது என்று இன்று உபநிஷதத்திலிருந்து ஒரு செய்தியை உணர்ந்து கொண்டேன்.

வலைப்பூவிற்கு பெயர் தேட ஆரம்பித்ததிலிருந்து மேலோட்டமாக எத்தனை தளங்களில் நுனிப்புல் மேய்ந்திருப்பேன் என்ற வியப்பிலிருந்து தான் இந்தப் பதிவு தொடங்குகிறது. நுனிப்புல் மேய்வதால் விளைச்சல் காரனுக்கும், குதிரைக் காரனுக்கும் நஷ்டம் உண்டு, பசியாரும் அளவுக்கு நுனிப்புல் மேய முடிந்ததால் மேய்ச்சலில் திருப்திபட்டுக் கொள்ள குதிரையால் முடிகிறது என்பது சந்தோஷம்.

இந்த வலைப்பூவிற்கான பெயரைத் தேடும்போதே மொழிச் சிக்கலில் இருந்து தான் ஆரம்பித்தேன், தனித்தமிழ் எனப்படும் தனித்த தமிழின் நடைமுறைச் சிக்கலிலிருந்து விவாதம் தொடங்கியது. பல நண்பர்களுடன் இதைப் பற்றி பேசும்பொழுது, நிச்சயமாய் நான் ஒன்று சொல்லிட வேண்டும். ஜெயமோகன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆங்கில லிபியில் தமிழ் மொழியை எழுதிப் பழகுவதை ஆதரித்தவற்றை கண்மூடித்தனமாய் நான் எதிர்த்திருக்கிறேன் என்று. ழகரம், றகரம் என்ற எழுத்துகளை சுத்தமாக உச்சரிக்க வரும் என் உறவினரின் மகனுக்கு தனது 10 வயதிற்குப் பின்னர் தான் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுத்தரப்படுகிறது. அவன் பேச்சு வழக்குக்கு, ஆங்கில லிபியில் தமிழ் எழுத ஆரம்பித்திருந்தால்?? - பெரிய ஆபத்தாகியிருக்கும், இந்த மூன்றாம் மொழியாகக் கூடக் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப் படும் அளவிற்கு மோசமான சூழல் உருவாகுமென்பது ஜெ.மோவின் கணக்கு.

இப்படி ஒரே அலைவரிசையில் பயணிக்காமல், கலித்தொகை, பெரிய புராணம், சில ஓவிய புத்தகங்கள் என்று சுழற்றிப் பார்த்தேன். சங்க இலக்கியங்களில் மது வகைகளுக்கு இருக்க்கும் பெயர்கள், நீர்நிலைகளுக்கு இருக்கும் பெயர்கள், சிற்பக் கலையிலிருந்து ஏதாவது ஒரு சொல் என்று தேடிக் கொண்டிருந்தேன்.

ஒரு கதைசொல்லியாக இருக்க ஆசைபட்டாலும், நண்பர்களுக்கு மட்டுமே இது வரை என் கதைகள் வாசிக்கப்பட்டு இருப்பதால் “ட்ரங்குப் பெட்டி என்று வைக்கலாமே” என்று யோசித்தேன். மறுபடியும் ட்ரங்கு எனும் மொழி இடித்தது.

கல்வெட்டியல் படித்துக் கொண்டிருப்பதால், அத்துறை சார்ந்து ஏதாவது கிடைக்கின்றதா என்றும் சில கல்வெட்டு வாசிப்புகளையும் எடுத்துப் பார்த்தேன் கிட்டவில்லை.

நான் தேடும் பெயர் மயக்கநிலை தருவதாக இருக்க வேண்டும், அல்லது அழகியலின் உச்சபட்ச நிலையில் இருக்க வேண்டும் தீர்மானமாக இதில் நின்று கொண்டேன்.

மயக்க நிலை என்றால்; வள்ளுவனின் மயக்க நிலை போல

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

இப்படி ஒரு மயக்கநிலையை வள்ளுவன் சொல்லியிருக்கின்ற இடத்திலிர்ந்து தான், துகில் எனும் வார்த்தைக்கு அருகில் சென்றேன்.

முலைமேல் துகில் - இலக்கியங்களில் தொய்யில் என்ற ஒரு கலை பற்றிய பதிவு நிறைய கிடைக்கிறது.

தொய்யில் - மருதாணி இடுதல் போன்றே உடலில் வண்ணமேற்றும் கலை தான். பெண்களின் மார்பு மற்றும் முதுகு தனில் வரையப்படும் அழகுச் சித்திரங்களோ?கோலங்களோ? அவை ஆடையைப் போல உடலை மறைக்கும் தன்மையில் வரையப் பட்டவை; அவை பெரும்பாலும் காதலனால், காதலிக்கு வரையப்பட்டவை; அவை பெரும்பாலும் கூடி முடித்த நிலையில் அளவிலாக் காதலோடு வரையப் பட்டவை. 

சங்க காலத்தில் புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பிலும் தோளிலும் முகத்திலும் குங்குமம் மற்றும் சந்தனக் குழம்பால் ஆன கலவையைக் கொண்டு ஓவியம் வரைவது மரபு. ஓர் இரவில் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியிலும் வெவ்வேறு வகையான தொய்யில் எழுதுவர். தொய்யிற் கலையை கூத்தர்கள்(கூத்தாடுபவர்கள் ) தலைவனுக்கு கற்ப்பிப்பார்கள். இவ்வ்வாறு தொய்யில் எழுதுவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் மிகுந்த அன்பை விளைவிக்கும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

தொய்யில் எனும் வார்த்தை வள்ளி, கரும்பு என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
1.
(தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் வெண்ணிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்டிருந்தது.)
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள் - நெடுநல்வாடை 36 - (விக்கிப்பீடியா -தமிழ்)

2.
உழுந்து உடைக் கழுந்தில் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே.

(குறுந்தொகை 384, ஓரம்போகியார்,  மருதம்  திணை – தோழி தலைவனிடம் சொன்னது)

3.
(அகநானூறு 389, நக்கீரனார், பாலை திணை தலைவி சொன்னது)
அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும்
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்



4.
(நற்றிணை 225, கபிலர்,  குறிஞ்சி  திணை – தலைவி சொன்னது)முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே.


என் எழுத்தில் நான் அதிகம் கவனமாகக் கையாள வேண்டியதாக நினைக்கும் அழகுணர்வின் காரணமாக, என் படைப்பு முயற்சிகளை இனி தொய்யில் எழுதுவது போலத் தான் அணுகவேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே,தொய்யில் என்ற பெயரை என் வலைப்பூவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். இனி thoyyil.blogspot.com தான்

- ஜீவ.கரிகாலன்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பஜ்ஜி-சொஜ்ஜி/ 63 கலித்தொகைப் பாடலும் Contemporary காதலும்

சீரியஸாக ஒரு funny attempt.....

சுடர் தொடீ இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்மணல்
சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்கச் செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லீரே!

உண்ணுநீர் வேட்டேன் என்வந்தார்க்கு அன்னை,
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணுநீர் ஊட்டுவா என்றாள்; என் யானும்
தன்னை யறியாது சென்றேன்; மற்று என்னை
வலை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர் தரத் தென்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக் கூட்டம் 
செய்தான் என் கள்வன் மகன்

(கலி:51)

மேற்கண்ட கலித்தொகைப் பாடலுக்கு விளக்கம் கூறுவதற்கு எண்ணற்ற உரைகள் இணையத்திலும் கிடைக்கின்றன.

சங்க இலக்கியங்களில் இருக்கும் அகத்திணைப் பாடல்கள் அப்படியே இன்றளவும் சமூகத்தில் நிலவும் உண்மைகளை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன என்பதை இப்பாடலின் உணர்ந்து கொள்ள முடிகிறது. சமகாலத்தில் ஒரே ஒரு வித்தியாசம் தான் கருப்பொருள் மட்டும் மாறி விடுகிறது,  உரிப்பொருள் அப்படியே தான் இருக்கிறது.

சங்க காலத்தில் வரும் தலைவன், தலைவிக்கு  இந்த நாட்களைப் போலில்லாது விடலைப் பருவம் முடிந்த சில காலங்களுக்குள்ளாகவே திருமணம் நடந்து விடுகிறது. அதனால் இன்றைய காலத்தோடு ஒப்பிட்டால் சங்க இலக்கியங்களில் தலைவன் வினைப் பயணால் தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடி திரும்பும் காலத்தில் தான் இன்று திருமணமே நடைபெறுகிறது, ஆனால் நம் எல்லோருக்கும் இருக்கும் விடலைப் பருவத்து முதல் காதலை தான் சங்க இலக்கியங்களில் காண்பதாக உணர முடிகிறது.

நமது முதல் காதலில் தான் குருட்டு தைரியம், பைத்தியக் காரத்தனம், நிதானமற்ற நிலை என மனதின் வசம் இருக்கும் காதலாக தெரிகிறது. அது  மட்டுமே அகம்பாவம் இல்லாத காதல். ஆனால், படித்து முடித்து வேலை தேடும் பருவத்திலெல்லாம் நமக்கு ஒரு நிதானம் வந்து விடுகிறது, அறிவின் கட்டுப்பாட்டிற்கு மாறி விடுகிறது. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் காதலுக்கும், நமது காலத்தில் திருமணமாகும் போது வரும் 25வயதுக்குப் பிறகான காதலும் வேறு வேறு. அதனால் நமது டீன் ஏஜ் காதல் நினைவுகளுடன் கலித்தொகைப் பாடலில் வலம் வருவோம்.

தோழியிடம் தலைவி தலைவனைப் பற்றிக் கூறுவதாய் அமைகின்றது: 
“தோழி!! நாம் தெருவினில் மணல் வீடு(சிற்றில் வீடு) கட்டி விளையாடும் போது அதை மிதித்துக் கலைத்து விட்டவன்; நமது மாலைகளை அறுத்து மகிழ்ந்தவன்; விளையாடிக் கொண்டிருந்த வரிபந்தினை பிடுங்கிச் சென்றவன்; பின்னர் ஒரு நாள் நானும் என் அன்னையும் மட்டும் வீட்டில் இருந்த பொழுதில், எங்கள் வீட்டிற்கு வந்து தாகமாக இருப்பதாகச் சொன்னான், என் அன்னை அவனுக்கு நீர் கொடுக்கச் சொல்லி என்னைப் பணித்தாள். அவனோ தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் போது என் முன்கையினையும் பற்றி முறுவலித்தான். அங்கணம் நான் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த அன்னையிடம் ‘விக்கினான்’ என்று பொய்யுரைத்தான்; அதைக் கேட்ட அவள் தாய் அவன் முதுகை நீவி ஆற்றிட முனைந்தாள்; அந்நேரத்திலும் தன் கடைக்கண்ணால் எனைப் பார்த்து நகைத்தானே என் கள்வன் மகன்”

*****
இப்படி ஒரு காட்சியை ஒரு 15-20 வருடங்களுக்கு முன்னர் நானும் உணார்ந்திருக்கலாம்:

 “அவன் நான் தினமும் வாசலில் வந்து கோலம் போடும் போதே என்னிடம் சைக்கிளில் பெல்லடித்தவாறே அங்குமிங்கும் சென்று என் கோலத்தை அழித்து விடுவான்; நான் படிக்கும் நேரங்களிலெல்லாம் உரக்க கத்தி விளையாடியும் என் புனைப் பெயர் சொல்லியும் என்னை அழவைப்பான்; பள்ளி விட்டு வீடு திரும்பும் வேளைகளிலெல்லாம் தன் நண்பர்களுடனே வந்து கேலி பேசுவான்; ஒரு நாள் பூக்கூடையுடன் என் வீட்டிற்கு வந்த அவன், பூ விப்பதாகச் சொல்லி வீட்டிற்கு வந்த அவன், என் அன்னையிடம் கேட்கும் விலைக்கு பூ தருவதாகச் சொல்ல, பூ வாங்கிட காசெடுக்க அடுக்களைக்குள்  அவள் தாய் நுழைந்து நேரத்தில், ஒரு ரோஜாவை எடுத்து என் கையில் வைத்து அழுத்தி விட்டு ஓடி விட்டான் அந்த திருட்டுப் பயல். என் அம்மா ‘அந்த பூக்காரப் பயல் எங்கே, இந்த ரோஜா எப்படி வந்தது?’ என்று கேட்கிறாள்”


-
ஜீவ.கரிகாலன்





சனி, 8 பிப்ரவரி, 2014

தனியறைக் கொலைக் களம்

புதிதாய் வாங்கிய மின்விசிறியின்
டெசிபல்கள் செவிடாக்கிய பின்னும்
மிச்சமிருக்கிறது அவள்
சொல்லாத வார்த்தையின் ஒலி
தற்கொலைக் கருவிகளான
எழுதுபொருட்களைக் கொண்டு
கொண்டை ஊசிப் பயணம்
ஆறுதல் கிடைக்காத வெறுமையில்
சுயவதை மட்டுமே தீர்வாக இருக்கிறது.
கவிதைகளின் வழியெ இறந்து பார்த்தபின்
பிழைகள் வழியே ஜனனம் நேரிடுகிறது.
நீண்டு தனித்த மலைப்பாதையில்
என்னைத் தொலைக்க நினைக்கும் நேரம்
கைகளுக்கு வலிப்பு..

நிர ந்தரமா கட்டும்

-ஜீவ.கரிகாலன்

பஜ்ஜி-சொஜ்ஜி-62 என்ன பெயர் வைக்கலாம் என் ப்ளாகிற்கு


மொக்கையாக ப்ளாக் எழுத ஆரம்பித்த காலத்தில்(இப்ப மட்டும் என்னவாம்!!), அலுவலகத்தில் கிடைத்த சொற்ப LEISURESம், வாசிப்பதற்கு கிடைத்த எனது நண்பர்களும்(கல்லூரி நண்பர்கள் ரூமில் உடனிருப்போர்கள்) தான் மூலதனம். இதை வைத்துக் கொண்டு மனதில் எழுத்தாளர் ஆகி காரில் கை காட்டிய படியே வண்டி ஓட்டுவோம் நண்பர்கள் போஸ்டர்கள் ஒட்டுவார்கள் என்றெல்லாம் கனவு காணவில்லை. ஹாபி என்று பொழுதுபோக்கிட வேறு எந்த வழியும் இல்லாத போது, ‘நாம் தான் ஊரெல்லாம் அரட்டை அடிக்கிறதுலையும், கதை சொல்லுறதுலயும் பெரிய ஆளாச்சே’ என்று மனதுக்குள் ஒரு சுயபிம்பம்.

2005லயே ஒரு வலைப்பூவை ஆரம்பித்து தங்க்லீஸுலையே பதிவுகளிட ஆரம்பித்தேன், நம்ம காதல் வாழ்க்கையெல்லாம் அதில் டைரி குறிப்பு போல எழுதினேன். அப்புறம் 2008 பொருளாதாரச் சிக்கலில், நான் மட்டும் விதிவிலக்கா என்ன சுமார் ஏழு கம்பெனிகள் ஒரே வருடத்தில் மாறிவிட்டு, வாழ்க்கையை மறுபடியும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிட்டதட்ட 5 : 2 என்ற அளவில் எனது சம்பாத்திய விகிதத்தை விட்டுக் கொடுத்து நிம்மதியான வேலையொன்றை வாழும் ஊரை விட்டு மாநகரத்தில் தஞ்சம் புகுந்தேன். எழுதுவது மூலமாக எனக்கு ஆறுதல் கிடைத்தது. எனக்கான எழுத்தாக என் சுபாவத்தை மகிழ்வுடன் வைத்துக் கொள்ள என்று ஆரம்பித்தேன். வலைப்பூவிற்கான எந்த அணியிலும் சேர்ந்து இயங்க விருப்பமில்லை, வார வாரம் 2-3 சினிமாக்கள் சென்றாலும் எல்லாவற்றிற்கும் விமர்சனம் எழுதும் ஆசையும் வரவில்லை. ஆனாலும் வாரத்துக்கு 02-03 பேர் பார்த்து வந்தார்கள். 

2012 மார்ச் மாதம் ஒரு நண்பர் என்னுடைய ப்ளாகில் இருந்த பதிவை திருத்தி, இதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றார், அடுத்த மாதமே அதை அச்சில் பார்த்தேன். ப்ளாகில் எழுதுவதற்காக வாசிக்கக் கிடைக்கும் புத்தகங்கள், இணையத் தரவுகள் என்று தேடியதில் தான், புது நண்பர்கள்; யாவரும்.காம், ஓவியக் கலை வரலாறு என்று என்னை தக்க வைத்துக் கொண்டேன் ஒரு 30 கட்டுரைகளாவது பிரசுரமாகியிருக்கும், தினமும் 50பேர்களாவது வலைப்பூவை வாசிக்கிறார்கள். நிற்க. இந்த சுயபிரதாபங்கள் எல்லாம் எதுக்கு??

ஆரம்பத்தில் வலைப்பூவிற்கு ஒரு நல்ல பெயர் கூட வைக்கத் தெரியாது என் பெயரையே வைத்துவிட்டேன் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் 20000 பேர்களாவது வாசித்திருப்பார்கள் இப்போதாவது ஒரு நல்ல பெயர் சூட்டலாமே என்று தோன்றுகிறது.

பேசாமல் பஜ்ஜி-சொஜ்ஜி என்று வைத்து விடட்டுமா??

அல்லது கரிகாலன் என்று வைக்கட்டுமா??, நல்ல தமிழில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்ததால். “காலன்” என்பது வடமொழி என்று ஒரு நண்பர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, இப்படியெல்லாம் மொழி மீது வடிகட்டிக் கொண்டிருந்தால் நாம் நமது வழக்கு மொழியையே இழந்து விடும் அபாயம் இருக்கிறது. என்னைப் போல ஏழு ஊர்களில் நாடோடி போல வாழ்ந்தவனுக்கு தாய்மொழி உண்டென்றாலும் தாய்மொழி வழக்கு சரியாக இராது, கரூரிலேயே வாழ்வின் பெரும்பகுதி இருந்ததால் எனக்கு கொங்கு வட்டார வழக்கின் சாயலே இருக்கும், அதிலும் கொஞ்சம் மதுரைக் கலப்பு கலந்திருக்கும். தனித்தமிழ் முயற்சி என்று நண்பர்கள் பேசும் தெளிவான உரைநடைத் தமிழால் மற்ற மொழியின் ஆதிக்கத்தை விரட்டும் போது உடன்சேர்ந்து நம் வட்டார வழக்குமல்லவா ஓடிவிடுகிறது. வட்டார வழக்குகளில் நம்மையே அறியாமல் நம் முன்னோர்களிடமிருந்து காலங்காலமாக கடத்தி வந்த சில் சொற்றொடர்களின் பின்னேயிருக்கும் செய்திகள், இது போன்ற நல்ல தமிழுக்கு மாறும் பொழுது அறுபட்டுப் போய்விடுமே என்கிற அச்சம் இருக்கின்றதென்றாலும். இந்த விவாதம் இந்த பதிவுக்கானது அல்ல. கரிகாலன் என்ற பெயரை தேர்ந்தெடுக்காததால் இதையும் நிறுத்தி விடுகிறேன்.

சரி கரிகாலன் வேண்டாம் என்றாலும் ஏதாவது குறியீட்டுத் தன்மையுள்ள பெயரை பட்டினப்பாலையிலிருந்து தேர்ந்தெடுக்கலாமா என்றும் யோசித்தேன். 

ஏதாவது மதுவின் பெயர் இலக்கியங்களில் இருக்கிறதா என்றால்:தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள்,பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள்தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர். கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன. (நன்றி ஆதித்த இளம்பிறையன்.
இத்தனை குழப்பமாகி விடுகிறது. 

சரி இன்றிரவுக்குள் பெயர் மாற்ற வேண்டும், இதை வாசிக்கும் நண்பர்கள் யாராவது பரிந்துரைத்தாலும் சரி.

-ஜீவ.கரிகாலன்





வியாழன், 6 பிப்ரவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 61 ; அசுரன் ஆளும் உலகு

        


ஆதார் தேவையில்லை
முந்தைய பதிவுகளுக்கான சுட்டி இங்கே

ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தினால், யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கப்படக் கூடாதுஎன ஆதாருக்கு எதிரான வழக்கில் செப்.23 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.  ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு என்று அத்தியாவசியமான அடையாள அட்டையாக இருக்க வேண்டிய ஆதார் கார்டு நாட்டின் ரகசியங்களை உலகிற்கு விற்கப் பயன்படும் கருவியாகவும், மக்களைச் சுரண்டுவதற்குத் தேவைப்படும் கருவியாகவும் மட்டுமே செயல்படும் என்பது மட்டும் உண்மை.

ஆதார் அட்டையை எதிர்ப்பது நாட்டின் பாதுகாப்பை எதிர்ப்பது என்று ஒருபோது ஆகிவிடாது, மாறாக உலகின் வளரும் நாடுகளின் மக்களை, மக்களின் சேமிப்புகளை, அந்நாட்டின் ரகசியங்களை எல்லாம் உலக வங்கியின் நிர்பந்தம் என்ற பெயரில் நேட்டோ நாடுகள் போன்ற ஒரு சில நாடுகள் மற்றும் அந்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில் இருந்து மீட்டெடுத்து நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும்.

சமீபத்தில் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய நந்தன் நிலேகனி, 19-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்க கண்டத்திற்கு பிழைக்க வந்த ஐரோப்பியர்களை, கனடாவின் எல்லிஸ் தீவைச் சேர்ந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அங்கு குடிவந்த வெவ்வேறு நாட்டினரின் பெயர்களையெல்லாம் ஆவனங்களில் இருந்து நீக்கி விட்டு, ஒவ்வொருவருக்கும்  அந்த அதிகாரிகளே ஒரு பெயரை சூட்டி, இனி இந்த நாட்டில் இதுதான் உன் பெயர் என்று அறிவித்தார்கள். ”ஆதார் என்பது உலகின் பிரம்மாண்டமான பெயர் சூட்டும் விழாஇது 21-ஆம் நூற்றாண்டின் எல்லிஸ் தீவுஎன்றார் நிலேகனி
வெவ்வேறு மொழி பேசும், இனம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களை பார் கோடு ஆக்கும் முறை தான் ஆதார் கார்டு என்று விளங்குகிறது.

சென்ற மாதம் கூட மதுரை ஹைகோர்ட்டு, ஒரு குடும்பத்திற்கு சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது. உண்மையில் ஆதார் அட்டையின் தொழில்நுட்பம் அத்தனை பாதுகாப்பானதா?? ஒரு நிபுணரிடம் விசாரித்தேன்.

நுகர்வோர் நல ஆர்வலரான திரு.விசுவநாதன் பகிர்ந்து கொண்ட தகவலின் படி
ஆதார் கார்டு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்ற போதிலும், அந்தப் பாதுகாப்பு அம்சத்தை ஒப்படைத்திர்க்கும் கைகள் தான் பிரச்சினைக்குரியதாகத் தெரிகிறது. WWW போர்டலில் இருக்கும் நமது அரசாங்க இனையங்களின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் இல்லாத நிலைமையில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்களில் எந்த உத்திரவாதமும் இல்லை.
·         அடிப்படையில் ஆதார் கார்டு மூன்று அம்சங்களைத் தகவலாகத் திரட்டுகிறது:1. பயோ மெட்ரிக் எனப்படும் கண்கள் மற்றும் விரல்களின் ரேகைகள் ஆகியவற்றின் தகவல்கள், நிழற்படம் மற்றும் குடிமகனின் இதர் ஆவனங்களின் தகவல்கள். இதில் ஒரு குடிமகனின் கைரேகைகள் எந்த ஒரு குற்றமும் இன்றி பதியப் படுவது ,ஒரு தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை மீதான அத்துமீறல் என்று அரசியல் சாசனமே கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் பயோ மெட்ரிக் தகவல்களையும் சேமித்து வைத்திருப்பதற்கு முன்பு நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றிட வேண்டும், ஆனால் இதற்கான சட்ட திருத்தம் இன்னும் செய்யப் படவில்லை.
·         உண்மையில் தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சினையாக இதில் வரும் உறுதியளிப்பு எவ்வளவு தூரம் நடை முறையில் இருக்கிறது என்றால் அதற்கு பதிலில்லை தான். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னால் அளிக்கப்பட்ட தகவல்களை உறுதிப் படுத்த அவருக்கு 4 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது, ஆனால் இதைத் திருத்துவதெற்கென்ற சிறப்புக் கவுண்டர்களோ, இந்த தகவல்களை (முக்கியமாக பயோ மெட்ரிக்) உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எந்த ஒரு குடிமகனுக்கும் வாய்ப்பு வழங்கப் படுவதில்லை. இதனால் வரும் ஆபத்து தான் DATA MIS-MATCH, ஒரு குடிமகன் சங்கேத எண்ணாகப் பதியப் பட்ட பின் அவனாக நினைத்தாலும் தவறான தகவல்களை மாற்றிவிட முடியாது.
·         ஒருவர் தன் தகவல்களை ஆதார் மூலம் பதிவு செய்தால், இணையத்தில் சென்று அதை சரிபார்த்துக் கொள்ள இடமிருந்தும், வழங்கப்பட்ட பல அட்டைகளுக்கு இன்னமும் இணையத்தில் தகவல்கள் சேமிக்கப்படவில்லை.
·         பல ஊர்களின் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதார் கார்டு, திரும்பப் பெறப்பட்டு, புதிய அட்டையாக வழங்கப்பட்ட விதம் தான் இது குறித்த சந்தேகத்தை எழுப்பியது. அதாவது இந்த அட்டை 2010ல் வழங்கப் பட்ட போது வெறும் அடையாள அட்டையாகவும், இப்போது SMART CARD ஆகவும் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.
·         50% சதவீத மக்களின் அடையாளங்கள் இந்த திட்டத்திற்காக சேமிக்கப்பட்டாலும், பொதுவாக குடும்பத் தலைவருக்கு மட்டும் இந்த அட்டை வழங்கப்படுவதற்கு தாமதம் ஆவதாகத் தெரிகிறது, இதற்காக நடைபெற்ற ஒரு சிறிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தாமதம் குடிமைப்பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை குடும்பத் தலைவரின் பெயரிலேயே வழங்கப் படுவதால், இதில் சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அரசு தரும் மானியங்கள் -குடிமகனைச் சேர்வதற்கு வழியில்லாமல் போய் விடும்
·         எல்லாவற்றிற்கும் மேலாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிற்கும் குடிமக்களுக்கு மட்டுமின்றி அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்குமே இதில் பிரச்சினைகள், உறுதியளிக்க இருக்கும் அவகாசம், அட்டை வழங்கப்படும் முன் இணையத்தில் ஏற்றப் பட வேண்டிய தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் கவலைக்குரிய விசயம். இதனால் பாதிப்படையப் போவது நடுத்தர மற்றும் ஏழை ஜனங்களே.

  எல்லா வகையிலும் ஆதார் அட்டைக்கான எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நன்றி

-ஜீவ.கரிகாலன்