வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பஜ்ஜி -சொஜ்ஜி 31 / வராகியின் காதல் (சிற்பத் தொகுதி) -மஹாபலிபுரம் -04

வராகியின் காதல்

சிற்பம்/ஓவியம் - ரசனை - மகாபலிபுரம் சிற்பங்கள் 04


சென்ற பகுதியில் கஜலட்சுமி தலைவனுக்காக காத்திருப்பது போன்ற காட்சியாக நான் உணர்ந்திருந்ததை, இந்த வராக மூர்த்தியின் தொகுதியுடன் எப்படி சம்பந்தப் படுத்துகிறேன்? ஏற்கனவே சொல்லியிருந்தது போல கஜலட்சுமியும், திருமாலும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற புனைவு கிடைத்திருந்தை இங்கு நினைவு கொள்ள வேண்டும். ஏனென்றால்  "உண்மையில் புனைவு என்பது என்ன?" என்று விளங்கும் முன்னரே, "உண்மையில் எது உண்மையானது" என்று அறிவது இன்னும் கடினமாகிறது. ஆக என்னைப் பொருத்தவரை உண்மை, புனைவு இரண்டுமே நம்பிக்கை. அவ்வாறே மதமும், ஆன்மீகமும்.

தலைவியின் காதல் ஒரு தலைவனுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா என்ன?? அதுவும் வேற்றினத் தலைவனுக்கு.  ஒரு சாகசம், அல்லது இரு யுத்தம்/போர்,  தலைவியை மீட்டல், கலைத தேர்ச்சி  என ஏதாவது ஒரு வலிய காரணம் வேண்டுமே, தலைவியின் காதல் கிடைக்கப் பெற . இந்த வராக மூர்த்தியின் சிலைத் தொகுப்பில் காதல் காட்சியைப் பற்றி விவரிப்பதற்கு முன், மற்றவைகளைப் பார்த்து விடுவோம். இத்தொகுதியை முழுமையாகப் பார்க்கும் பொழுது திருமாலின் தசாவதாரங்களுள் ஒரு அவதாரமான வராக அவதாரம் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பின்னர் நடந்த காட்சியாகப் படைக்கப்பட்டுள்ளது தெரியும்( அதாவது அந்த அவதாரத்தின் climax காட்சி).

பிரளயத்தின் போது நீரில் மூழ்கிய பூமாதேவியைக் காப்பாற்றிய வராக அவதாரம், தன் வலது காலினை பாதாள வாசிகளின் தலைவனின் (அவன் நாகர்களின் தலைவனாக இருத்தல் வேண்டும்) தலை மீது  ஒரு கால் வைத்து, அவ்வலக்காலின் மடியில் பூமாதேவியை அமர்த்தி, அவள் முகம் நோக்கிப் பார்க்கும் தலைவனின் சிற்பம். வராக மூர்த்தியின் வலப்பக்கம் ஒரு பெண்ணும், ஒரு ரிஷியும் வராக மூர்த்தியின் செயலுக்கு நன்றியுரைப்பது போல  இருக்கின்றது, நாக ராசனும் தன் தலையில் கால் வைத்திருக்கும் திருமாலை வணங்குவது போல்(ரட்சித்து அருள வேண்டுவது போல) கைகூப்பியிருக்கின்றான்.

தொகுதியின் மேற்புறத்தின் இரு மூலையிலும் சந்திரனும், சூரியனும் வானுலகத்திலிருந்தபடியே  வராக மூர்த்தியை வணங்குகின்றனர். இதே தொகுதியில் வராக மூர்த்தியின் இடது புறம் இருக்கும் இரு சிலைகள் பிரம்மனும் மற்றொரு முனிவர்(அது ஆண் சிற்பமா, பெண்ணின் சிற்பமா என்று கண்டறிவதே மிக சிரமம் -எனினும் ஒரு ரிஷியின் முகம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நம்ப முடியும்) என்றும் தெரிகிறது.
இதைப் புராணச் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, வைகுண்டத்தின் காவலர்களான ஜெயா-விஜயா ஆகிய இருவரும் பிரம்மக் குமாரர்களை வழி மறித்ததால்,   பிரம்மா குமாரர்களால், அவர்களுக்கு அசுரர்களாகப் பிறக்கும் சாபமிடுகின்றனர். அதனால், அவர்கள் காஷ்யப முனிவருக்கு மகன்களாகப் பிறக்கின்றனர். அசுரர்களாக பிறந்ததால் அவர்கள் பல தீமைகளைச் செய்ய, அவர்களில் ஒருவனான ஹிரன்யாக்‌ஷன்(மற்றொரு இரணியன் எனுன் ஹிரண்யசிபு நரசிம்மரால் வதம் செய்யப்படுகிறான்) பூமியை பிரளயம் ஏற்படுத்தி மூழ்கடித்து விடுகிறான். இங்கு பூமியை நிலப் பரப்பு என்று எடுத்துக் கொள்ளவும். பின்னர் திருமால் பூமாதேவியை நீரில் இருந்து மீட்டு மக்களையும் காக்கிறார்.  இந்தக் காட்சியை முழுவதுமாக நாம் புரிந்து கொள்வதற்கு  ஏதுவாக, இத்தொகுதியினை அவதாரத்தின் இறுதிக் காட்சியை வடித்துக் காட்டியிருப்பதன் மூலம் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள்.

இந்தக் காட்சியை புரிந்து கொண்டால், வராக மூர்த்தியின் இரு புறமும் இருக்கும் ரிஷியிம், பெண்ணும் காஷ்யப முனிவரும் என்று புரிந்து கொள்ளலாம். பின்னர் நாக ராஜன் போல கடலில் இருந்து தன் தவறை உணர்ந்து சாபல்யமடைபவன் நாக ராஜன் இல்லை ஹிரண்யாக்‌ஷன் என்றும்  புரிந்து கொள்ளலாம். அருகில் இருக்கும் பிரம்ம தேவனின் தலை சிதிலமடைந்து இருந்தாலும் நமக்கு இது புராண ங்கள்  மூலம் அறியும் வாய்ப்பு கிட்டுகிறது. அவர் நிற்கும் தொனி-யானது  சிற்பிக்கு மூன்று தலைகளைச் செதுக்கும் அவசியத்திற்கு பதிலாக இரண்டு தலைகளே தெரிந்தால் போதும் என முடுவெடுத்து காட்சிப் பரிமாணத்தை உணர்ந்து வடித்திருக்கிறார்கள், எனினும் துரதிர்ஷ்டவசமாக வலப்புறத் தலை முற்றிலுமாக சிதிலாமாகிவிட்டது. அவர் அசுரனுக்கு(ஹிரண்யாக்‌ஷ்னுக்கு) வரமளித்த - சாபல்யம் கொடுக்கும் காட்சியின் மற்றொரு பகுதியும் இத்தொகுதியில் அமைக்கப் பட்டிருக்கிறது. 
பிரம்ம தேவனின் கையில் கமண்டலமும், வராக மூர்த்தியின் இரு கைகளில் சங்கும், சக்கரமும் இருக்கின்றது. இவை எல்லாம் நாம் சிலைகளை அடையாளம் தெரிந்து கொள்ள உதவும் பொருட்கள் (objects).

கி.பி. நான்காம் நூற்றாண்டில் வடிக்கப்பெற்ற உதயகிரிக் குகைச்சிற்பத் தொகுதி, இச்சிற்பத் தொகுதியைக் காட்டிலும் முன்னோடியாக இருந்தாலும். மாமல்லையின் சிற்பத் தொகுதியின் நுட்பமும், அழகியலும் தனித்துவமிக்கது. ஆம். உதயகிரிக் கோட்டையின் சிற்பம் பிரம்மாண்டம் என்றால் இது மிகவும் அழகியல் தன்மைக் கொண்டது (Romantic). மற்ற எந்தச் சிற்பங்களிலும் இல்லாதது போல், இதில் வராகமூர்த்தி வலப்புறம் திரும்பியிருக்கிறார். அது மட்டுமின்றி மற்ற ஓவியங்களிலும், பிற சிற்பங்களிலும் தனது தந்தங்களால் மட்டுமே பூமியைத் தாங்கி இருப்பதாக  இருக்க, இத்தொகுப்பில் மட்டும் தன் மடியில் அமர்த்தி பின் புறமாய் தன் கரங்கொண்டு பூமாதேவியை அணைத்தபடி இருப்பார் வராக மூர்த்தி. வலது கரம் தேவியை அணைத்தபடியும், இடது கரம் தேவியின் கால்களை பற்றியடியும் இருக்க, வராக மூர்த்தியின் தேவியின் முகம் நோக்குகிறார். தலைவியும் தலைவனிடம் காதற்வயப்பட்டு முகம் மலர்ந்து இருக்க, தன் ஆடை நெகிழ்வதையும் மறந்து காதலில் மூழ்கியிருக்கிறாள். சற்று முன்னர் கடலில் மூழ்கியிருந்தது போலே!! (ஆடையின் ஒரு பகுதி தொடை தனில் வீழந்தது போல் இருக்கின்றது).

fiction: -
 யுத்தம் , போர், சாகசம், மீட்பு என சம்பவங்கள் பல  நிகழ்ந்திருக்கிறது வலிமையான ஒ ரு தலைவனின் அண்மை, அங்கும்  காதல் வாராது எப்படி இருக்க முடியும் ??? மற்ற வராக சிற்பங்களில் இல்லாத கலையம்சமாக நான் இந்த மாமல்லை வராஹ மண்டபத்து சிற்பத் தொகுதியைப் பார்க்கும் பொழுது அத்தகைய உணர்வைப் பெறுகிறேன். (மற்ற சிற்பங்களை என்னால் இணையம வாயிலாக மட்டுமே பார்க்க இயன்றாலும் நான் இதை ஆழ உணர்கிறேன்). வராகம் வலது புறம் திரும்பியிருப்பது ஆகட்டும், இந்த காதல் உணர்வு ஆகட்டும் ஒரு இக்காலக் கட்டத்தின் சிற்ப வேலைகளில் நடந்த ஒரு புதிய முயற்சியாக நான் பார்க்கிறேன்.

பெருவெள்ளம், தொடர் மழை, கடற்  தாக்குதல்,  புயல், பிரச்சினை , புயல்  பயம் கடலில் மூழ்கிவிடுதல், பிரளயம் குறித்த செய்திகள் மாமல்லையின் சிற்பங்களில் அநேக இடங்களில் வருகிறது. கடற்கோளினால் அதிகம் பாதிப்புகள் தமக்கு நேரும் என்பதை அறிந்து வைத்து தான், இம்மன்னன் இதை தன் சிற்பங்களில்  பதிய விரும்பினனோ?? இந்தப் பகுதியை இன்னொரு தொடரில், குன்றை விட்டு கீழிறங்கிய பின்னர் பார்த்துக் கொள்வோம். 

சிற்பத் தொகுதியில் வரும் இந்தக் காதல் போல, புராணங்களில் அநேகக் காதல்கள் இனக்கலப்பையும், களவு வாழ்க்கையையும் நம் வாழ்வின் அங்கமாகப் பதிகின்றன. காதல் என்பது திருமணத்திற்கு பிந்தைய வாழ்வாகவும், களவு என்பது திருமணத்திற்கு முந்தைய வாழ்வாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. இதில் களவு வாழ்க்கை மிக அழகானது, அதில் தான் அநேகக் கலைகள் முழுமையாக லயித்திருக்கின்றன.இப்போது இந்தச் சிற்பத் தொகுதியை அடுத்து புடைக்கப்பட்டிருக்கும் சிற்பத்துடன்  இத்தொகுதியை இணைத்துப் பார்க்க உங்களால் முடிகிறதா??? ஆனால் என்னால் முடிகிறது..... 

சமகாலத்தில் இவையாவுமே அந்நியப்பட்டுவிட்டன, சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல் இருப்பதை மட்டும் நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தப் பகுதியில் திரிவிகர்ம சிலைத் தொகுப்பை பார்த்து விடுவோம்.

நன்றிகளுடன் -
 ஜீவ.கரிகாலன்




பிற சிற்பங்கள் மற்றும் ஓவியம் : நன்றி விக்கிப்பீடியா
------------------------------------------------------------------------------------------------------------

1740-ஓவியம் - ஹிரன்யாக்‌ஷ்கா நன்றி :விக்கிபீடியா

உதயகிரிக் குகைச் சிற்பங்கள் CE 380-415




CE.850-900 ஆண்டு நாணயம்
ஹோசலேஷ்வரன் கோயில், கர்நாடகம்
12ம் நூற்றாண்டு


கஜுரஹோ வராகச் சிற்பம்
ஜெயா-விஜயா வைகுண்டத்தின் காவல் தேவர்கள்





2 கருத்துகள்: