வியாழன், 22 மார்ச், 2012

நமக்குள் என்ன இருக்கிறது ?

மெல்லிய தென்றலில்
என் தலை மேல் விழும்
பூக்களின் ஸ்பரிசமும் ;
அரிதாய் பெய்யும்
குளிர் மழையின் ஈரமும்
நீ தந்த ஒற்றை முத்தத்தை
ஞாபகமிட்டுக் கொண்டே
இருக்கிறது!!

கனவுகளில் என் கை விரல் பற்றும் நீ
விழித்த பின்பும் விடுவதே இல்லை !!
காற்றாய் வந்து என்னை கட்டி அணைக்கும்
மாயக் கரங்கள் மருதாணி வாசம் தருகிறது !!

என்னை ஏற்றுக் கொண்ட நாளிலேயே
என் ஆன்மாவில் கலந்துவிட்ட
உன்னை- என் கனவுகளில் இருந்தும்
என் கனவுகளை- என்னில் இருந்தும்
பிரிக்க முடிவதில்லை!!

நித்தமும் என்னைத் தழுவிடவும்,
முத்தமிடவும், ஊடல் கொள்ளவும்
தவறாத நீ !!
நம்முடன் யாரையும் அனுமதிப்பதில்லை!!

இருந்தும் நீ ,
சில சமயம் அவனுடனோடு
சுற்றிக் கொண்டிருப்பதும் ,
அவனைக் கணவன் என்று
சொல்வதும் சிரிப்பைத்தான் தருகிறது !!
நான் பயப்படவில்லை
அவன் நிழலோடு வாழ்க்கை நடத்தும் முட்டாள் !!

அவன் மட்டுமல்ல
இதை இல்யூஷன் என்று சொல்லும்
யாவரும் முட்டாள்


வெள்ளி, 16 மார்ச், 2012

ருதுவின் காலம்


பிரபஞ்சம் தன்னைத் தானே 
உமிழ்ந்ததும் கூட பூப்படைதல் தான் !!
ஒரு மாஞ்செடியின் முதல் மொட்டாய்
நேற்றின் மழை கொடுத்த பசும்புல்லாய்!!
தொடங்கியது தான் ருதுவின் காலம் >>
அங்கே தன்னைத் தொலைப்பவள் 
தனக்கான வேறு உலகம் பெறுகிறாள் ,
அதில் அவள் ராணியாக தன்
கனவைத் தொடங்க ,
இப்பிரபஞ்சத்தின் மற்றொரு மாதிரியாய்
ஒரு சிறுமி குமரியாகிறாள்!

சனி, 10 மார்ச், 2012

கூடங்குளம் மட்டுமா வேண்டாம் நமக்கு ??

கூடங்குளம் மட்டுமா வேண்டாம் நமக்கு ??

மன்னித்துக் கொள்ளுங்கள் ..... இப்பொழுது நான் வசை பாடுவது என்னையும் சேர்த்துத் தான் அடிப்படையில் எந்த ஒரு பெரும் தொழிற்சாலையும் மனித இனத்திற்கு விரோதமானது என்பதை முன் வைத்து தான் எழுதுகிறேன், ஜடுகோடா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் அணுக்கழிவினால் பாதிக்கப் பட்டு வரும் நம் மக்களை பற்றி நான் கிட்ட தட்ட ஐந்து வருடங்களாகவே பேசி வருவதை என்னோடு தனிப்பட்ட முறையில் பழகியவருக்கு நன்கு தெரியும்.


இங்கு கூடங்குளம் பிரச்சனையை அணுகும் முறை குறித்து நான் உங்களிடம் முக்கியமான விவாதம் எடுத்து வைக்கிறேன் ...


கூடங்குளம் அணுவுலை , இன்று நம்முள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் உளவியல் ரீதியாக வீரியம் கொண்டதாய் தோன்றும் அதே வேளையில் இதுவும் ஒரு விளம்பர மாயைக்குள் சிக்கியத் தந்திரமாய் பாவிக்க நமக்கு இடம் தருகிறது என்பதைத் தான் இந்த கட்டுரை வழியாக சொல்ல விளைகிறேன்.......



இரண்டுப் பெரிய அறிவார்ந்தோர் கூட்டம் கூடங்குளம் வேண்டாம் என்றும், வேண்டும் என்றும் வாதம் செய்து வருகின்றனர். பொதுமக்களோ இந்த அணியில் ஏதோ ஒன்றில் பலவந்தமாகவாவது தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே வருகின்றனர்..உளவியல் ரீதியாக இதை எடுத்துக் கொள்ளும் பொழுது, இந்த பிரச்னையில் நாம் அணுகும் முறை மீது மிக முக்கியமான கேள்விகளை சிலவற்றைக் கேட்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது. இன்று இந்த பிரச்னை சுற்றுச் சூழல், மற்றும் தனி மனிதனின் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் படும் போது கீழே வரும் செய்தியுடன் ஒப்பிடுதல் அவசியமாகிறது.



தினமலர் பிப்ரவரி 22 ஆம் தேதி காரைக்கால் கடல் பகுதியில் கூட்டம் கூட்டமாய்  செத்து ஒதுங்கிய மீன்கள் பற்றிய செய்தி ஒன்று தான். அநேகமாக, இந்த செய்தி மற்ற செய்தித்தாள்களிலோ, மற்ற ஊடகங்களிலோ வராமல் போயிருக்கலாம், இந்த செய்தி அதே நாளிதழில் கூட மறுபடியும் வராமல் போயிருக்கலாம்.



sensational பகுதிக்கு வராமல் போனதற்கு என்ன காரணம் என்று புலனாய்வு செய்யத் தேவையில்லை, அதே சமயம் பன்னாட்டு குளிர்பானக் கம்பெனியில் அடிக்கடி வரும் ரெய்டுகள் போல இது மூடி மறைக்கப்படும் அளவிற்கு மக்களுக்கு இன்றியமையாத பானங்களாக இல்லாதபடியால் கவனிப்பாரற்றுப் போய்விட்டது என்று சொன்னால் வெட்கக் கேடு.


* ஆம், மீன் பூமியில் தோன்றிய மனிதனின் முதல் உணவு என்றும், பூமியின் கடைசி மனிதனின் உணவும் இதே மீன் தான் என்றும் சொல்லக் கேட்டுள்ளோம்.
*இன்றைய உலகில் பாமர மக்களுக்கு கிடைக்கவேன்டியப் புரதச் சத்துக்கள் அதிக அளவில், குறைந்த விலையில் மீன்களாலே சாத்தியம்.
*சில கலாச்சாரங்களில் மீன் சைவப் பொருளாகவும், உயர்ந்த உணவாகவும் போற்றப்பட்டு வருகிறது.
*எந்த ஒரு நாட்டிலும் விவசாயம் இன்றி ஏற்படும் பஞ்சம் கூட மீன்களால் மீட்கப் படலாம். ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்தே, அந்நாட்டின் கடலில் வாழும் உயிரினங்களும், அதன் பாறைப் படிமங்களும் தான்


இன்று அந்த இடத்தில் தான் நாம் பெரிய அளவில் பிரச்சனையை சந்தித்து வருகிறோம், ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக் கரை ஒதுங்கக் காரணம் என்ன என்று சில கடல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட பொழுது சொல்லும் தகவல் தான் நெஞ்சை உறைய வைக்கிறது.
 நம் கடல் பகுதியில் பெரிய அளவில் மீன்கள் வாழும் நிலையை இழந்துக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி தான் அது.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன என்றும், இந்த முறை காரைக்காலில் ஒதுங்கிய மீன்களில் ஹெவி மெட்டல் என்று சொல்லப் படும் உலோகமான  காட்மியம் (cadmium) அளவு அதிகரித்துள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.அதுவும் அதிகப்பட்சம் புள்ளி அரை சதவீதம் வரை தான் இருக்கலாம் என்றும், இதில் இரண்டு சதவீதம் வரை இருப்பதாகவும் கூட சொல்கின்றனர், (ஒவ்வொரு வகை மீன்களுக்கும் ஒவ்வொரு அளவீட்டில் இதன் வரையறை இருக்கும்).



இப்படிப்பட்ட உலோகங்கள் மீனின் வாயிலாக நமக்கு உணவாகச் செல்லும் பொழுது அது நடத்தும் விளைவுகளோ மிகப் பயங்கரம். புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மனிதன் கூட இத்தகைய மீன்கள் சாப்பிடுவதன் மூலம் கான்சர் போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகிறான். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நாம் எப்படிப் பட்ட வலிமையான பாரதத்தை கட்டுமானம் செய்து வருகிறோம் என்று, ஏற்கனவே அரிசியிலிருந்து, தண்ணீர் வரை அவ்வளவும் வணிக ரீதியிலும், கலப்படத்துடனும், ரசாயன தாக்கத்துடனும் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கின்றன.



காரைக்காலைப் பொறுத்த வரை, பல ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்திருப்பதை நாம் அறிவோம். இப்படி ரசாயனத் தொழிற்சாலைகள், சிமென்ட் தொழிற்சாலை ஆகியவற்றுடன் ஒவ்வொரு தனி மனிதனின் மாறிவிட்ட கலாச்சாரமும் இந்த சீர்கேடுகளுக்கு காரணம் எனலாம். நமது நுகர்வுத் தன்மை மாறிவிட்டது, பிளாஸ்டிக் என்றும் அரக்கனை நாம் எல்லோரும் உபசரிக்க ஆரம்பித்துவிட்டோம் , தேவைக்கு அதிகமான, ஆடம்பரமான நுகர்வு போதை நம்மை இந்த சீர்கேட்டினை உருவாக்கும் காரணிகளாய் அமைந்துவிட்டதை நாம் ஒத்துக் கொள்ளும் மனப் பக்குவம்
வந்து விட்டதா?? இல்லையா ??



இந்தப் பிரச்னை வெறும் காரைக்கால் பகுதி கடல் சார்ந்தது என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், கூடங்குளம் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இல்லை. ஏன் கூடங்குளம் கூட ஒரு பிராந்திய பிரச்னையாக மட்டுமே பல சந்தர்ப்பவாதிகளால் கையாளப் படுவதை மறுக்க முடியுமா ? ஜார்கண்ட் -ஜடுகோடா அணுக்கதிர்வீச்சு பற்றி ஊடங்கங்களில் செய்தி வரும் பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பெரும்பான்மைச் சமூகம் என்ன செய்துக் கொண்டிருந்தது?


காரைக்காலிலோ, தூத்துக்குடியிலோ இது போன்ற தனியார் நிறுவனகளுக்கு எதிராக உங்களால் போராட்டம் செய்ய இயலுமா? செய்தித்துறை ஊடகங்கள் கூட கண்டு கொள்ளாத இந்த நிகழ்ச்சிகளில் உங்கள் நேரங்களை அறிவார்ந்தோர் கூட்டங்களிலும், வதனபுத்தக போராட்டங்களிலும் (Facebook Campaigns) செலவிடுவீர்களா?
அணுவுலை கதிர்வீச்சு மற்றும் அதன் கழிவுகளைக் காட்டிலும் இது ஆபத்தானது என்பதை உணர்ந்து, உங்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்றுவீர்களா?


காரைக்கால்  பிரச்சினை அவர்கள் மாநிலத்திற்குத் தான் என்றும், தூத்துக்குடிக்கு இது போன்ற பிரச்சினை வரும் வரை பொறுத்திருப்போம் என்று சொன்னால் , அது , கடையில் விலை கேட்டு விலை அதிகம் என்பதால் அடுத்தமுறை வாங்கலாம் என்று நினைத்த CFL பல்புகளைப் போல் அல்லவா இருக்கும் ?


"அணுசக்திக்கு" பதிலாக "மாற்று சக்தி " என்று விலை அதிகமான சோலார் முறையையோ, இல்லை உலக சுகாதார நிறுவனத்தால் உலகை மாசுபடுத்தும் நிறுவனம் என்று விருது அளித்த NTPC (மாசுபடுத்துதலில் உலக அளவில் 6ஆம் இடம்) போன்ற வகைகளை ஆதரிப்பது போல், நீங்கள் மீன்கள் வாங்குவதை தவிர்த்து புரதச் சத்திற்காக பன்னாட்டு மார்கெடிங் நிறுவனம் ஒன்று விற்கும் ப்ரோட்டீன் பவுடரை நீங்கள் அந்த ஏழைகளுக்கு வாங்கிக் கொடுப்பீர்களா ??
இல்லை இதில் உங்களது கண்டனங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்து, கவிதைகள் பாடி இந்தியாவைத் துண்டாடும் ஆருடம் பேசுவீர்களா ??


இதோ தன்மானத் தமிழினத் தலைவர் கலைஞர் ஆதரித்ததால் நீங்களும் கூடங்குளத்தை ஆதரித்துவிட்டு உங்கள் வேலையைப் பார்க்க சென்று விடுவீர்களா ? இல்லை அதை உடனடியாக திறப்பதற்கு அவரையே உண்ணாவிரதம் இருக்க நீங்கள் வேண்டுவீர்களா?



இதில் மிக முக்கியமாய் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், காரைக்கால் பகுதியில் கடலை ஒட்டிய கிராமங்களில் வாழும் பெரும்பான்மையோர் தங்கள் வீட்டில் வாரத்தில் ஆறு நாட்கள் கட்டாயம் தங்கள் உணவில் மீனைச் சேர்த்து வருகின்றனர். இதற்கு வெறும் மத்திய அரசையும், மாநில அரசையும், தனியார் முதலைகளையும் மட்டும் குறை கூறாதீர்கள், சற்றே கண்ணாடியைப் பாருங்கள் ஒரு முக்கியப் புள்ளியும் அகப்படுவான் ..

திங்கள், 5 மார்ச், 2012

ஏன்

ஏன் நீ முறைக்கவில்லை 
ஒரு அன்னியனாய் நான் 
உன் பெயர் கேட்ட பொழுது,

ஏன் நீ மறுக்கவில்லை 
உன் கைகளில் நான் 
ரோஜாவைத் திணித்த பொழுது, 

ஏன் நீ தடுக்கவில்லை 
ஒரு இளவேனில் மாலையில் 
என் விரல் வந்து 
உன்னைத் தீண்டிய பொழுது,

ஏன் நீ மறக்கவில்லை,
நான் வேண்டாம் என்று, 
என்னை மாற்றிய பின்பும் 
உன் மணவோலை அனுப்ப  

அது

உடல் முழுக்க 
ரணம் மட்டும் வியாபித்திருக்க 
ஏதோ ஒன்று வலியையும் 
மீறி அதை உற்றுப் 
பார்க்கிறது ....

சில நேரம் மட்டும் தான் 
அது இருக்கிறது,
சில நேரம் அது இல்லை 
சில நேரங்களில் தான் 
அதை உணர அது
கற்றுக் கொடுக்கிறது ..


சில நேரம் வலியுடனும் ,
சில நேரம் அதனுடனும் 
நான் இருக்கிறேன் ..
ரணம் இல்லாத பொழுது 
அது தெரிவதும் இல்லை 
பின்னர் புரிவதும் இல்லை