நான் ஐயப்பனைக் குற்றம் சொல்லவில்லை - பாகம் 1
இது ஒரு சாமான்யன் சொல்லும் மாற்றம் பற்றியக் கதை
எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றம் ஏன் இங்கே பதிவாக்கப் பட வேண்டும்?நானும் சமூகக் கடலின் ஒரு துளி தானே! சாமான்யர்களின் ஒருவன் தானே! எனக்குள் இருக்கும் மாற்றம் ஒரு சமூக மாற்றத்தின் அடையாளமாய் ஏன் இருக்கக் கூடாது? என்று தோன்றியதில் தான் இதை எழுதுகிறேன்.
அந்த மலையின் சிறப்பே அது தான், அவ்வளவு கடுமையான மலைகளில் நம் மீதுள்ள நம்பிக்கை குன்றி, பக்தியைத் தவிர வேறு வழியில்லாமல் ஐயப்பனை மட்டுமே நினைத்து கண்ணீர் விட்டு, உருகி, மெய் மறந்து, பார்ப்போரை எல்லாம் அய்யனாக நினைத்து, சந்நிதானம் சென்று தரிசிக்கும் வேளைகளில் நம்மை பாண்டி என்று ஏளனப் படுத்தும் காவலர்களையும், ஐயப்பனுக்கு பூஜை செய்யும் நம்பூதரிகளையும், ஒரு இயற்கைப் பேரழகை கற்பழிக்கும் அவல நிலையையும் பார்க்க நேரும் போதும்.. எல்லாவற்றிற்கும் மேல் பல வருடங்களாக ஏமாற்றி வரும் மகர ஜோதி எனும் ஏமாற்று தந்திரமும்... தத்வமசி எனும் மிகப் பெரிய ஆன்மீகத் தத்துவத்தை பொய்த்துப் போக வைத்து விட்டன ..நானும் என் முதல் வருடத்தில் யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டிய தரிசனத்தினை எனக்குப் பயன்படுத்தியதன் பாவம் தான் இரண்டாம் வருடம் எனக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்கள்.
இது ஒரு சாமான்யன் சொல்லும் மாற்றம் பற்றியக் கதை
எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றம் ஏன் இங்கே பதிவாக்கப் பட வேண்டும்?நானும் சமூகக் கடலின் ஒரு துளி தானே! சாமான்யர்களின் ஒருவன் தானே! எனக்குள் இருக்கும் மாற்றம் ஒரு சமூக மாற்றத்தின் அடையாளமாய் ஏன் இருக்கக் கூடாது? என்று தோன்றியதில் தான் இதை எழுதுகிறேன்.
மனிதன் தன் வாழ்கையில் எந்த ஒன்றை அடைவதற்காக ஏறாத மலை ஏறி, எதையோ தேடி அடைந்ததாய் நினைத்துக் கொண்டும் , நம்பிக் கொண்டும் தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறான்?? இந்தக் கட்டுரையை எழுதும் நான் நாத்திகன் அல்ல, ஆனால் என்னை அந்த ஒரு சித்தாந்தத்தில் தள்ளும் வேலையை போலி ஆன்மீக வாதிகளும், எதற்கும் உதவாத சடங்குகளும், மதவாதங்களும் , சாதிப் பிரிவினைகளும் தான் செய்து கொண்டிருக்கின்றன.
சபரிமலை - தென்னிந்திய ஆண்களின் புனிதத் தளம். கோடான கோடி பக்தர்களை ஆட்கொண்ட ருத்ர மூர்த்தி சபரி சாஸ்தா, ஏழைப் பங்காளன் அய்யன் ஐயப்பன், மதங்களைக் கடந்தவன் காட்சி தரும் புனித ஸ்தலம் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
இந்த யாத்திரைக்கு நாம் சில நாட்கள் அல்லது ஒரு மண்டலம் விரதம் இருந்து நம் வயிற்றையும், புலன்களையும் கட்டுப்படுத்தி, பக்தியுடன், தூய்மையுடன் ஒரு மலைப் பயணம் செய்து வரும் போது, அந்த இயற்கை அழகிலும், இறைவன் நமக்கு அருள் செய்வான் என்கிற உறுதியான நம்பிக்கையும் நமக்கு battery- recharge செய்யப்பட்டது போல் ஒரு உணர்வைத் தருகின்றன. எனினும் கடும் விரதம் இருந்து, கடன் வாங்கி கஷ்டப்பட்டு தனக்கு ஒரு விடிவுகாலம் வேண்டும் என்று நம்பிக்கையுடன் செல்லும் சில பக்தர்கள் அந்த மலையிலேயே தங்கள் உயிரை விட்டு, தங்கள் குடும்பங்களுக்கு இன்னல் தருகின்றனரே ?? இது ஏன் ?? அவர்கள் குடும்பம் அதன் பின் யாரால் காப்பாற்றப் படும்??
இன்று நாம் சபரிமலை செல்வது அவசியம் தானா?
நாம் என்று அரசியல் ரீதியாக நான் தமிழனையேச் சொன்னாலும், ஆண்டவனை நம்பி சிலரின் சுயநலன்களுக்காக பலியாடாகும் யாவருக்கும் இது பொருந்தும்.
நானும் என் முதல் வருடத்தில் எந்த ஒரு பெரிய கஷ்டமும் இன்றி சென்றபொழுது, மெய்மறந்து நின்றேன் , ஐயப்பன் சந்நிதானத்தில் நின்று தரிசிக்கவே நொடிகள் தராத அந்த கோயிலில், அய்யன் முன் உட்கார்ந்து எழும் அளவு எனக்கு கிடைத்த அனுமதியில் அதை பாக்கியமாய்க் கருதி என்னையும் மறந்து அழுதேன், என் குருசாமிக்கு சன்னிதானத்தில் கிடைத்த அறிமுகங்கள் மூலம் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எல்லா தரிசனமும் சிறப்பாய் நடந்து முடிந்தது.அதை நினைக்கும் பொழுது சுகமான ஒரு பயணமாகவே தோன்றியது.
இரண்டாம் முறை நான் செல்லும் பொழுது தான் எங்கள் ஊரார்களுடன் செல்லும் பொழுது தான் நான் சபரிமலயினைப் பற்றி உணர ஆரம்பித்தேன். அதிலும், ஓய்வே இல்லாமல் பெரும்பாதையில் வந்த நான், சபரிமலையில் ஏறத் திராணியற்று நிற்க, என்னை (95 கிலோ) என்னுடன் வந்த இரு சாமிகள் என் தோள்களில் முட்டுக் கொடுத்து தூக்கிச் சென்றனர் , ஒருவர் என் அண்டை வீட்டு நடுத்தர வயது கொண்டவர், மற்றொருவன் என் பள்ளித் தோழன் சாரதி (50 கிலோவுக்கும் குறைந்தவன்) எங்கள் கூட்டத்தில் எல்லோருக்கும் உதவிகள் செய்து,என்னையும் தாங்கிக் கொண்டு மற்றொரு கையில் பூஜை நெய்யும் கொண்டு வந்தான்.
சபரிமலையின் சிறப்பே அந்த மலையின் இயற்கை அழகும் அதன் கடுமையும் தான், என்ன தான் வசதிகள் செய்து கொடுத்தாலும் அந்த மலையின் கடினத்தை யாராலும் மாற்ற முடியாது, அந்தக் கடினம் இருக்கும் வரை தான் அம்மலையின் கூட்டம் கட்டுக் கடங்காது போய்க்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்
நான் சென்ற இரண்டாம் ஆண்டு , என் கண் முன்னே கிட்ட தட்ட 5 பேரின் சடலங்களயாவது நான் பார்த்திருப்பேன், அருந்த மின்சாரம் தாக்கி இரண்டு பேர், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்ற போதும் சிகிச்சை செய்ய அனுமதிக்க தாமதித்ததால் ஒருவர், எல்லாவற்றிற்கும் மேல் பதினெட்டு படிகளில் தூக்கி விடும் பொழுது இடறி விழுந்த ஒரு மனிதர் ஒரு முதிய பாட்டியை தள்ளிவிட அந்த பாட்டியும் ஆவலுடன் நின்றிருந்த ஒரு சிறுவனும் படிகளில் விழுந்து மரணம் என்று என் நெஞ்சை உறைய வைக்க, அந்த கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி மிதி பட்டு, அடி பட்டு , தங்களுக்குள் சண்டையிட்டு, தன்னுடன் அழைத்து வந்த குழந்தைகளை இம்சித்து , அன்று நேர்ந்த துன்பங்கள் முழுதும் சொல்ல என்னால் முடியாது.(தான் நேரடியாக பாதிக்கப் படாதவரை வேறு யாவரின் துன்பங்களும் நம்மால் உணர முடியாது என்ற பேருண்மையையும் அப்பொழுதுக் கற்றுக் கொண்டேன்)
நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அன்று தான் எனக்குத் தெரிந்தது, 'சன்னிதானத்திற்குள் ஒரு மரணம் நிகழ்ந்தால் அந்தக் கதவுகள் அடைக்கப் பட்டு சன்னிதானம் முழுக்க கழுவி விடப்பட்டு சில பூஜைகள் செய்தபின் தான் திறக்கப் படுமாம்', என்ன கேவலம்.??. இறந்த ஒரு பக்தனின் உயிர் ஒரு தெய்வத்திற்கு தீட்டு ஆகும் என்றால், இறைவன் எப்படி மோட்சம் கொடுப்பான் எங்களுக்கு ???? அன்றிரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை நடை சாத்தப் பட்டதால், நெருக்கடி மிகவும் ஏற்பட்டது (அந்த வருடத்தில் மகர ஜோதிக்கு அடுத்து அன்று தான் அதிக கூட்டம் வந்ததாகத் தகவல்)..பதினோரு மணி வரை நீட்டிக்கப் பட்டு இருந்தாலும், அளவுக்கதிகமான தள்ளு முள்ளு ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கனோர் காயம் பட்டனர்.
எனினும் இந்த நெரிசலில் பல கொடி பிடித்த மலையாளச் சாமிகளும், போன வருடம் நான் சென்ற கூட்டம் போல் செல்வாக்கு பெற்ற கூட்டமும் குறுக்குவழியில்(வலப்புறமாய்) சென்றது. நாங்களும் கூட அப்படி செல்ல எத்தனித்தோம், அப்பொழுது நான் கண்ட காட்சி தான் என்னை மிகவும் பாதித்தது. ஒரு மூன்று வயது குழந்தையுடன் வலப்புறமாய் நுழைய முயன்ற ஒரு நடுத்தர ஆந்திர மாநில சாமியைக் கண்டுபிடித்து, அங்கு நின்றிருந்த கமாண்டோ காவலர்கள் அவரை கன்னத்தில் அறைந்து வெளியே வந்து இட்டனர், தன் தந்தை அடி வாங்கும் காட்சியைப் பார்த்த அச்சிறுமி மிகவும் அலறினாள், ஆனால் அவன் முயற்சிப்பதை நிறுத்தவில்லை, ஒரு துணை ராணுவப் பாதுகாவலருக்கு வேண்டிய ஒரு மலையாளக் கூட்டமொன்று எளிதாக உட்புகந்து செல்ல, அவர்களுடன் கலந்து கொண்டே அந்த தெலுங்குச் சாமி உள்ளே சென்றார். தங்களுடன் வேறு யாரோ உடன் வருகிறார் என்று புரிந்துக் கொண்ட ஒரு மலையாளச் சாமி, சன்னிதானத்தில் உள்ள தத்வமசி எனும் {யாவுளும் இருப்பது நீயே (இறைவன்) } தத்துவத்தின் பொருளை உணர்த்து, தன்னுடன் வந்த " கள்ளம் செய்த ஒரு தெலுங்குச் சேட்டனை " அங்கு நின்றிருந்த அதே கமாண்டோ சேட்டனிடம் பிடித்துக் கொடுக்க, அவனும், அவனுடைய குழந்தையும் மிருகத்தனமாய் தூக்கி எறியப்பட்டனர், மலையாளத்தில் அவனை திட்டியவை எனக்கு புரியவில்லை "ஒரு வேளை இல்லாத கடவுளைப் பார்க்க குறுக்கு வழியாடா உங்களுக்கு??" என்று இருக்கலாம்.
தன் தந்தையை அடிக்கும் போது தடுத்த அச்சிறுமிக்கும் வாயில் காயம் ஏற்ப்பட, இரத்தத் துளிகளை துடைத்துவிட்டு அவர் மறுபடியும் கியுவுக்குள் சென்றார்.என் மனம் கடும் உளைச்சலுக்குள் சென்றது. ஐயப்பன் என்ற மந்திரம் அப்படி நமக்கு என்ன செய்துவிடும் ? என்று தோன்றியது, எந்த ஒரு நாளிதழ்களிலும் அன்று நடந்த சம்பவங்கள் (10 பேர் மரணமுற்றதாக சன்னிதானத்தின் மருத்துவமனையில் எனக்கும் முதலுதவி அளிக்கும் போது சொல்லிக்கொண்டிருந்தனர்) பற்றி வரவில்லை. பத்திரிக்கைகள் அன்று ஏற்பட்ட மரணங்களை கோடிட்டு காட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளை சொல்லியிருந்தால், நெஞ்சை உழுக்கிய மகர ஜோதி விபத்து நிகழ்ந்திருக்காது. இது ஒரு வகையில் தேவஸ்தானம் ஏற்படுத்திய கொலையே!!
உண்மையில் ஐயப்பன் தான் கோடீசுவர நம்பூதரிகளிடமும், அரசியலிலும், இனவாதங்களிலும் சிக்கி தானும் - தன் வனமும் அழுக்காவதை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறான்.
உண்மையில் ஐயப்பன் தான் கோடீசுவர நம்பூதரிகளிடமும், அரசியலிலும், இனவாதங்களிலும் சிக்கி தானும் - தன் வனமும் அழுக்காவதை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறான்.
ஏனோ அன்று துளிர்ந்த ஒரு துளி பகுத்தறிவோ, இல்லை மரண பயமோ என்னை அந்த வரிசையை விட்டு விலகி சன்னிதானம் செல்லாமல் விடுதிக்குச் செல்ல பணித்தது, எல்லோரிடமும் நான் தரிசனம் செய்ததாய் பொய் சொன்னேன். அலுப்பில் அன்றிரவு நான் உடனேத் தூங்கிப் போனாலும் , விடியும் போது பெருத்த பாரத்துடன் விழித்தேன்,குற்றவுணர்வுடன் தவித்தேன். அப்பொழுது எல்லோரின் நெய்த் தேங்காயும் உடைக்கப் பட்டது, என் முறை வந்ததும் எங்கள் குருசாமி என் விரதம் மிகவும் சுத்தமாய் இருந்திருக்கிறது என்று சொல்லி என்னை பாஸாக்கினார். ஆனால் என்னையே தாங்கி வந்த என் பள்ளித் தோழன் மலையிறங்கிய இரண்டு மாதங்களுக்குள், எங்கள் ஊர் ஐயப்பன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள சாலையில் ஒரு லாரியின் சக்கரங்களுக்கு இரையாகினான். எட்டு வருடங்களாய் அவன் கொண்டிருந்த பக்தி அவன் குடும்ப பாரங்களை இனித் தாங்க போவதில்லை.
யேசுதாசைப் போலவே அரிவராசனம் பாடும் என் நண்பனின் மரணம் கூட அந்த சன்னதியில் நிகழ்ந்திருந்தால், அவன் ஆசைப்பட்ட மரணம் (அங்கேயே இறப்பவர்களுக்கு மோட்சம் என்று அவன் அடிக்கடி எனக்கு சொல்லி வந்தான்) கிட்டியிருக்கும், எங்கள் ஊரார்க்கும் அந்த பயம் சிலருக்காவது என்னைப்போல் கேள்வி எழுப்பியிருக்கும். எங்கள் ஊரின் ஐயப்பன் கோயிலில் எல்லா எலக்ட்ரிகல் வேலையும் செய்து, பக்தர்களுக்கும் மிகவும் பரிட்சயமான அந்த
சாமி இல்லாமல் இந்த வருடம் அவர்கள் செல்லும் பயணம் கண்டிப்பாக பேரிழப்பாக இருக்கும்.
சன்னிதானத்தில் அடி வாங்கிய சிறுமியின் இரத்தத் துளியும், என் நண்பனின் மரணமும் என்னை ஆன்மீகத்திலிருந்து என்னை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் ???
அடுத்தப் பதிவு - அய்யப்பனைச் சூழ்ந்துள்ள அரசியல் மற்றும் ஐயப்பனின் சன்னிதானத்தில் மறைந்துள்ள தமிழரின் பாரம்பரியம் .......
நன்றி
கரிகாலன்
(யாரையாவது என் பதிவு புண்படுத்தினால் மன்னிக்கவும்)
சிறப்பான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்
பதிலளிநீக்குnanri sago!!
பதிலளிநீக்குthangal padhilukku nanri
பதிலளிநீக்கு//சன்னிதானத்தில் அடி வாங்கிய சிறுமியின் இரத்தத் துளியும், என் நண்பனின் மரணமும் என்னை ஆன்மீகத்திலிருந்து என்னை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் ???//
பதிலளிநீக்குஎனக்கும் வலித்தது.. தொண்டையை ஏதோ அடைத்துக்கொண்டது..... அழுதுவிட்டேன்.... இன்றிரவு என்னால் நன்றாக தூங்க முடியுமா எனத்தெரியவில்லை....