திங்கள், 14 நவம்பர், 2011

கடைசிச் சங்கிலியையும் கால்களுக்கு கொடுத்தவள்


கைக் குழந்தையாக 
பேருந்தில் தாய் மடியில் ,
முகத்தில் அறையும் காற்று 
மூச்சுத் திணற வைக்க 
மார்போடு எனை அணைத்து 
மீண்டும் உயிர் கொடுத்தவள் !!.

எனக்குச் செலுத்த வேண்டிய 
மருந்தை அவள் எடுத்து ,
அம் மருந்தையும் பாலாய்க்
கொடுத்தவள்!!

எத்தனையோ முறை 
வாந்தி எடுக்கும் வேளை!
தன் கரங்கொண்டு ஏந்தினாள்..
நானோ - ஒரு குவளை தண்ணீர் 
கேட்டாலும் சலிப்புடனே கொடுக்கின்றேன்.

படுக்கையில் வீழ்ந்தாலும்
நான் தடுக்கினாலே 
பதறுகிறாள்.
நானோ கடமை செய்ய 
தயங்குகிறேன் 

கழுத்தில் இருந்த 
கடைசிச்  சங்கிலியையும் 
என் உடைபட்ட 
கால்களுக்கு கொடுத்தவள்.

தம் மகவைச் சிரமப்படுத்தும்
தன்னை இன்னும் 
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாள்.
சொல்லாதத் துயரில் 
துஞ்ச முடியாது அழுகின்றாள் ..

நானோ கொசுவலைக்குள் உறங்கி 
கனவுக்குள் அவளுடன் 
தொலைந்துகொண்டிருந்தேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக