திங்கள், 28 நவம்பர், 2011

ஆட்டோகிராப் ( நிறைவுக் கதை) - நிலவுக்கும் களங்கம்


            நிசப்தம் குடிகொண்டிருந்த அந்த அறையின் அமைதியை குலைக்கும் விதம் அந்த கருப்பு நிற பழைய டெலிபோன் சப்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அன்று தனக்கு மிகவும் மோசமான நாள் என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டும் , அந்த அழைப்பு தனக்கு வரும் என்று தெரிந்ததால், பயத்துடன் காத்திருந்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை நீலா மெதுவாக போனை எடுத்து காதில் வைத்தாள்.

              நீலா- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று ஒரு மாதம் தான் ஆகியுள்ளது ,  அம்மாவட்டத்தில் விருதிற்காக பரிசீலிக்கப்பட்ட பல ஆண் ஆசிரியர்களையும் தாண்டி அவ்விருது நிலாவை கௌரவப்படுத்தியது. அப்பொழுது மாவட்டக் கல்வி அதிகாரியையும் மீறி கல்வி அமைச்சரிடம் சென்று இடைநிலைப் பள்ளியினை, உயர்நிலைப் பள்ளியாக்க நீலா டீச்சர் எடுத்த போராட்டங்களும், அவள் மீது வளர்ந்து வந்த செல்வாக்கும், இன்று அந்த அதிகாரி நீலாவை வஞ்சம் தீர்ப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை அமைந்தது . பள்ளியின் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தார்.


எல்லா ஆசிரியர்களும் பள்ளியின் பெயர் ரொம்ப கெட்டுப் போனதாய் வருத்தம் தெரிவித்தனர்.இதில் சண்முகம் வாத்தியார் தன் வெறுப்பினை வெளிக்காட்ட யோசனை சொல்வது போல ஆரம்பித்தார்,
"பேசாம,  நம்ம பள்ளி இடைநிலைப் பள்ளியாகவே இருந்திருக்கலாம்" என்று புலம்ப,

"உங்க ஊருக்கு ஹைஸ்கூல் வந்ததனால தான் இப்ப கெடுதலாக்கும்? " என்று காட்டமாய் அவனைப் பார்த்து நீலா  கேட்டாள் ,

அதற்கு - ஆறுமுகம் வாத்தியார், "ஆமா மேடம், அந்த 2 பேரும் வீடு திரும்பலேன்னா, ஜாதிக் கலவரமே வந்துருக்கும் தெரியுமில்ல " என்று எகத்தாளமாய் பேச,

"சண்முகம் சார்! உங்க வகுப்பு மாணவி அவள், நீங்க எல்லாரையும் ஒழுங்க கண்காணிக்காம இப்போ பொறுப்பில்லாம பதில் சொல்றிங்க" என்று சற்று கோபாமாகவே அவனைப் பார்த்துக் கேட்டாள்.

 "ஆமா, நான் தான் காரணம், இனிமே ஒவ்வொரு பொண்ணு வீட்டுக்கும் போய் வாட்ச்மேன் வேலை தான் பார்க்கணும் " -சண்முகம் வாத்தியார்,

மேலும் ,"ரெண்டு ஸ்கூலா பிரிச்சிரிந்தா இந்த அவலம் வந்திருக்குமா? , இல்லைன்னா ,எட்டாம் வகுப்புக்கு மேல பசங்கள மட்டும் வச்சு பள்ளிக்கூடம் நடத்தியிருக்கலாம், அதை விட்டுட்டு இந்த மலைக்காட்டு கிராமத்துல வயசுக்கு வந்த பொண்ணுங்கள எல்லாம் படிக்க வச்சு இப்ப என்ன பெருசா மாறப் போகுது?, இதுல இவுங்களுக்கு கேம்ஸ் பீரியட் வேற, அந்த பெருமாயி இருக்காளே, அவளுக்கு  மனசுல பெரிய பீ.டி உஷான்னு நினைப்பு, அரை டவுசரு போட்டுக்கிட்டு ஓட்டப் பந்தயம், கபடின்னு ஊர் ஊரா சுத்துவா- எனக்கு அப்போதே பயம் வந்துச்சு "

"சார்! நீங்க உங்க பசங்கள சரியா கவனிக்காம, ஏதேதோ காரணம் சொல்லறிங்க? இனிமேலாவது நாம் என்ன செய்யலாம்னு சொல்றீங்களா? நாம் எடுக்கும் முடிவுகள் பற்றி நான் D.E.O கிட்ட சொல்லணும் " நீலா,

"மேடம் மறுபடியும் நீங்க எம்மேலேயே பழிய சுமத்துறிங்க, நீங்க தான் வயசுக்கு வந்த பெண்களைக்கூட விளையாட அனுமதிக்கிரிங்க, நீங்க தான் கண்டிப்பா நடந்துக்கணும். அவுங்க வந்தோமா படிச்சோமான்னு தான் இருக்கணும் " என்று மீண்டும் நீலா மீதே குற்றம் சுமத்தினார்.

           அந்த மீட்டிங்கில் ஒரு முடிவு எடுக்கப் பட்டது , பிரேம், பெருமாயி இருவரையும் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர், ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவோ தடை செய்யப்பட்டது , சந்தேகம் வருமாதிரியான மாணவர்களைப் பற்றி ஒரு பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது . அப்படி சந்தேகத்தில் உள்ளோர்கள் யாவரும் பாரபட்சமின்றி 'களை' எடுக்கப் பட வேண்டும் என்று சண்முகம் பிடிவாதமாய் நின்றார்.


           அப்படி தயாரிக்கப் பட்ட பட்டியலில் முதல் ஆளாக வெண்ணிலா இருந்தாள், வெண்ணிலா நன்றாகப் படிப்பாள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என்று எல்லா போட்டிகளிலும் முதலிடம் வாங்குவாள், பெருமாயியின் தோழி, சக விளையாட்டு வீராங்கனை. மேலும் ஒரு முக்கிய காரணம் காட்டி அவளைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடுமாறு சண்முகம் வாத்தியார் கூறினார்.

            அந்தக் காரணத்தை அறிந்த நீலாவோ கோபத்ஹ்டின் உச்சிக்கே சென்றாள் பின்னர் சற்றுக் கட்டுப்படுத்திக் கொண்டே, "அவளை டிஸ்மிஸ் செய்வது அவள் வாழ்க்கையை பாழாக்கி விடுமே , நாம் வேண்டுமானால் அவள் பெற்றோர்களை அழைத்துப் பேசலாமே" என்று நீலா சொல்ல,

"அவளை பள்ளிலேயே வச்சிங்கன்னா இன்னும் பல பிரச்சனைகள சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆணித்தரமாக எச்சரித்தார்.

             சண்முகம் வாத்தியார் மற்ற எல்லா ஆசிரியர்களையும் வெண்ணிலாவை பள்ளியில் இருந்த வெளியேற்ற வேண்டியதன் அவசரத்தை விளக்கினார்.எல்லோரும் ஒப்புக் கொண்டனர், நீலாவின் நிலைமையோ மிகவும் தர்ம சங்கடமானது, வெண்ணிலா நல்ல பெண், படிப்பிலும் கெட்டி இப்படி எதுவும் செய்ய மாட்டாள் என்று அவளுக்கு ஒரு திடமான  நம்பிக்கை இருந்தது , எல்லாவற்றிற்கும் மேல் சண்முகம் வாத்தியாரின் கொடூர எண்ணங்கள் அவளை மிகவும் எரிச்சலடையச் செய்தன.  வெண்ணிலா பெருமாயியின் தோழி என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமல்லாது, ஒரு பூப்படைந்த பெண் தொடர்ந்து 6 மாதங்கள் பள்ளிக்கு வருவது அவருக்கு சாதரணமாகத் தெரியவில்லை, அந்த பட்டிக்காட்டுப் பள்ளியில் பூப்படைந்த பெண்கள் யாவரும் அந்த நாட்களில் ஒன்றிரண்டு நாள் விடுமுறை எடுப்பது வழக்கமாய் இருந்தது, இதை எப்பொழுதும் கூர்ந்து கவனிக்கும் சண்முகம், ஆறு மாதங்களுக்கு முன்னரே அவள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்றிருந்ததால், அவள் விடுப்பின்றி வாரத்தின் ஆறு நாட்களும் வருவது சந்தேகத்தைக் கொடுத்தது. அவர் சொன்னதை மற்ற ஆசிரியர்களும் ஆமோதித்தனர்.

               வெண்ணிலாவும் விளையாட்டுகளில் பங்கேற்ப்பவள் என்பதால் பெருமாயியைப் போலவே சட்டையும்,கால் சட்டையும் அணிந்து பயிற்சி செய்வதையும், அவள் நிறைய ஆண்களோடு பேசிப் பழகுவதையும் ,எல்லாவற்றிற்கும் மேல் "அவள் நடத்தையே சரியில்லை'' என்றும் அடுக்கிக் கொண்டிருந்தார் .

"வெண்ணிலாவை நானே விசாரிக்கிறேன் அதன் பின் நாம் முடிவெடுப்போம்" என்று நீலா அவரிடம் சொல்லி, "இதைப் பற்றி வேறு யாருடனும் விவாதிக்க வேண்டாம்" என்றும் தீர்கமாய் சொல்லிவிட்டாள்.

                 அன்றிரவு , ஒரு வாரமாய் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை ஒரு கணம் நினைத்து பார்த்தாள், நடந்தவை யாவும் சினிமாவில் வந்ததைப் போலவே இருந்தன. அன்று காலை- திங்கட்கிழமை என்பதால் எப்போதும் போல கொடி ஏற்றத்துடன் பள்ளி ஆரம்பித்தது, சற்றும் எதிர்பாராமல் திடீரென்று ஒரு கூட்டம் ஆவேசத்துடன் பள்ளிக்குள் வந்து , பள்ளியின் வாசலில் கூச்சல் போட்டுக் கொண்டும், உதவித் தலைமை ஆசிரியருடன் பயங்கரமாக வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

        'என்ன விஷயம் ?' என்று கேட்கச் சென்ற தலைமை ஆசிரியர் மீது அந்தக் கூட்டத்தின் கோபம் திரும்பிக் கொள்ள, அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது, இன்று பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று.'ஒன்பதாவது படிக்கும் பெருமாயி என்கிற பெண்ணும், 10ஆம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் என்கிற பையனும் ஓடிப் போயினர்' என்றத் தகவல் தான் அது. பெருமாயி  படிக்கும் ஒன்பதாம் வகுப்பு 'D' செக்சனின் வகுப்பாசிரியர் என்பதால் உதவி ஆசிரியர் சண்முகம் மீது அம்மக்கள் அதிக வெறியுடன் இருந்தனர். அதே நேரம் பிரேம்குமாரின் சொந்தமும் திரண்டு வந்தது பள்ளிக்குள், கொஞ்ச நேரத்தில் இரண்டு கோஷ்டிகளும் செய்து கொண்டிருந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.  பெருமாயியின் தாய் மாமன் ஒரு கத்தியைக் கொண்டு பிரேம்குமாரின் தந்தையைக் குத்த முயற்சித்தான் நல்ல வேளையாக அங்கு வந்த காவலர் ஒருவர் அவனை தடுத்தார் , பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி போலீஸ் தான் என்பதை முன்னரே உணர்ந்து காவல் நிலையம் சென்று யாரேனும் அங்கு அழைத்து வர பியூனை அனுப்பியதால் இங்கே பெரும் பிரச்னை தவிர்க்கப்பட்டது.

       காவல்துறை ஆய்வாளர் அங்கு  வந்து அவர்களை முதலில் கண்டித்து, பின்னர் சமதானப் படுத்தினார். சற்று நேரத்தில் எல்லோரையும் பள்ளிக்கு வெளியே அனுப்பினார். ஓடிப்போன மாணவர்களை பிடித்துத் தருமாறு போலீசில் விண்ணப்பம் வைத்தார் தலைமை ஆசிரியர். சற்றைக்கெல்லாம், அந்த ஊரில் அந்த மாணவர்கள் ஓடிப்போன விஷயம் காட்டுத் தீயாக பரவியது. இரண்டு பேரும்  வெவ்வேறு ஜாதிக் காரர்கள் என்பதால் பிரச்சினை பெரிதாகி எதாவது ஜாதிக்கலவரம் ஆகிவிடுமோ என்று ஊரில் பதட்டம் நிலவியது. பள்ளியிலும் , இந்தப் பிரச்சனையை முன்னிட்டு மாணவர்கள் ஸ்ட்ரைக் பண்ணலாம் என்று பியூன் மூர்த்தி யூகித்து வந்தான்.

       ஒரே நாளில் ஊர்ப் பெரியவர்கள், அந்தக் குடும்பத்தினர்கள், காவல் துறையினர் என எல்லோரும் தலைமை ஆசிரியரிடம் பல கேள்விகள் எழுப்பி விட்டனர். எல்லாவற்றிற்கும் மேல், இந்த விஷயம் மாவட்ட தலைமை அதிகாரியிடம் சென்றடைந்தால் தன் பெயருக்கு பெறும் பங்கம் நேருமே  என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவரும் போனில் அழைத்து தன் வஞ்சம் தீர்த்துக் கொண்டிருந்தார், யாரோ அதற்குள் அவருக்கு இந்த செய்தி பற்றி அவரிடம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். ஒரு வழியாக இரண்டு நாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு அவரை டீ.ஈ.ஓ பணித்தார். அந்த ஊரிலும் எப்போது வேண்டுமானாலும் ஜாதிக் கலவரம் வந்து விடும் என்ற அபாயம் இருப்பதால், நீலாவுக்கும் அந்த முடிவு நல்ல முடிவாகத் தோன்றியது.

           நீலாவுக்குத் தெரியும் ,'அவருடைய வகுப்பு மாணவி தான் இப்படி செய்திருக்கிறாள்' என்ற ஒரே காரணத்தால் தான் உதவித் தலைமை ஆசிரியர் சண்முகம் சற்று அடக்கி வாசிக்கிறார்,  இல்லாவிட்டால் - தான் அரும்பாடுபட்டு முயற்சித்த தலைமை ஆசிரியர் பதவிக்குத் தடையாய் நின்ற தன்னை இந்த விஷயத்தை வைத்து வஞ்சம் தீர்த்திருப்பார் . 

               ஏனென்றால், அந்த ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே  இருந்த இடைநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்க அனுமதி கிடைத்த போது, இரண்டு பள்ளியாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனிப் பள்ளியை இருந்தால் தனக்கும் தலைமை ஆசிரியர் பதவி கிடைக்கும் என்று அவர் வைத்திருந்த திட்டம், நீலாவின் திடமான முடிவிலும், முயற்சியிலும் ஒரே உயர்நிலைப் பள்ளியாக மாறியது.

                   தன் வாழ்க்கையிலும், தன் பன்னிரண்டு வயதில் ஒருவனை நம்பி மோசம் போனதை எண்ணிப் பார்த்தாள்,  தான் முதலில் ஒருத்தனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி வந்ததும், ஒரு வாரத்தில் தனியாக குடும்பம் நடத்த பயந்து தன்னை அப்படியே விட்டுவிட்டு வேறு ஊர் ஓடிய தன் பழைய காதலனும், தன்னை அடித்து உதைத்த பெற்றோர்களும் நினைவிற்கு வந்தனர். அந்த அறியாத வயதுக் காதல், இரண்டு வருடங்கள் தன் படிப்பை முடக்கி விட்டதையும்,  பிறகு தன் தாய் மாமனின் அறிவுரைப்படி தன் படிப்பை தொடங்கச் சம்மதம் பெற்று வரும் போது, சமூகம் தன்னை அழைத்த பெயர்களான "ஓடுகாலி, மூதேவி, மோசம் போனவ " என்று தன்னை பழித்ததையும் நினைத்துப் பார்த்தாள். பல வருடங்களுக்கு முன் பெண்களுக்கு நேர்ந்துக் கொண்டிருக்கும் இம்மாதிரியான கொடுமைகள் இன்னும் தொடர்வதை எண்ணி பெருமாயியின் நிலையை எண்ணிக் கவலை கொண்டாள், அதற்கேற்றாற்போல் பெருமாயி , பிரேமுடன் ஓடிப்போன இரண்டாவது நாளே அவனால் கைவிடப்பட்டாள், முதலில் பெருமாயி வீடு வந்து சேர்ந்தாள், போலிசுக்குச் சென்ற பிரச்சினை கூட பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது, இருவரும் அவர்களுடைய வீடு திரும்பினர். ஊரிலும் கூட அமைதி திரும்பியது , ஆனால் பள்ளியில் மட்டும் அந்தச் சம்பவம் பல கொடுமைகள் நடைபெறக் காரணமாய் அமைந்தது.

                                       அடுத்தநாள் மதியவேளை, வெண்ணிலாவைத் தன் அறைக்கு நீலா அழைத்தாள், சற்றுக் கடுமையான குரலுடன் வெண்ணிலாவை நோக்கி  "கடைசியா உனக்கு எப்போ தீட்டு வந்தது" என்று அதட்ட , வெண்ணிலா - கண்களில் கண்ணீருடன்  - "மிஸ் என்னை மன்னிச்சிடுங்க மிஸ் " என்று அழுதாள் ,
 "அழாமல் ஒழுங்கா உண்மையச் சொல்லு !! இல்லன்னா பள்ளியிலிருந்தே உன்னை அனுப்பிடுவோம்"என்றாள் நீலா.
 மறுபடியும், வெண்ணிலா அழுதுக் கொண்டே, "மிஸ் என்னை மன்னிச்சிடுங்க மிஸ் !! எங்க அய்யாவுக்கு நெறைய கடன் இருந்துச்சு, அதனால நான் வயசுக்கு வந்ததா பொய் சொல்லி தெரட்டி  வச்சு மொய்ப் பணம் சேர்த்து கடனக் கட்டுச்சு ,அதனால தான் நான் காலாண்டுத் தேர்வுல லீவு போட்டேன், நான் இன்னும் வயசுக்கே வரல. என்னை ஒன்னும் செஞ்சுராதிங்க மிஸ்." என்று கதறினாள். நீலாவால் அதற்கு மேல் ஒன்னும் கேட்க முடியவில்லை , அந்த இடத்திலேயே சிறிது நேரம் கல்லாய் நின்றாள் .
 
             வெண்ணிலாவை வகுப்பிற்கு அனுப்பிவிட்டு,  தன் பழையக் காதலன், பிரேம் குமார், சண்முகம் வாத்தியார், டீ.ஈ.ஓ என்று நான்கு பேருக்கும் இணையாக நான்கு தலைவலி மாத்திரைகளை வாங்கி வர தன் பியூனை பணித்தவாறே, மறுபடியும் தலையில் கை வைத்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.

3 கருத்துகள்: