செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி ஸ்பெஷல் - சிறுகதை டாம் - டாம் ..

அன்று ஒரு நாள்- வெள்ளிக்கிழமை, அந்தி வேளையில் பள்ளி விட்டு வந்து,  என் நண்பர்களுடன் ஒரு சிறிய பட்டாளம் திரட்டிக்கொண்டு, இரண்டு நாளில் வரும் தீபாவளிக்கு ஆயத்தமானோம் , இரண்டு மாதங்களாய் சேர்த்த பணத்தில் எங்கள் ஊரிலேயே தயாரிக்கும் டாம் டாம் ( பார்ப்பதற்கு சிறிய லட்சுமி வெடி போல் இருப்பினும் அனுகொண்டு வெடியின் சத்தம் கொடுக்கும், பாறையை உடைக்க பயன்படும் மருந்து வாங்கி illegal -ஆக விற்பனை செய்யும் வெடி என்று கூட சொல்வார்கள் ) எனும் வெடியினை வாங்கி, வீட்டிற்குத் தெரியாமல் மூன்று நாட்களுக்கு முன்னரே தன் வீட்டில் ஒளித்து வைத்திருந்த வெடியை எடுத்து என்னை பெருமையாக பார்த்துக் கொண்டேன்.

                    இந்த பட்டாசை வாங்க நான் என்னவெல்லாம் செய்தேன், தெரியுமா ? 

முதலில், எங்கள் தெருவில் உள்ள எல்லோர் வீட்டிலும் எங்கள் பெற்றோர்களிடையே ஒரு பொது உடன்படிக்கை நடந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.ஆம், எல்லாப் பெற்றோர்களும் தீபாவளிக்கு முதல் நாள் தான் எங்களுக்கு பட்டாசு வாங்கித் தருவதாக சொல்லியுள்ளார்கள். பட்டாசு வங்கித் தருவதை deal-ஆ வைத்துக் கிட்ட தட்ட காலாண்டுத் தேர்வு முடிந்ததிலிருந்து இன்று வரை எங்களை தினமும் படிக்க வைத்து விட்டனர்கள். மேலும், எங்களை ஒன்று சேர்ந்து விளையாடாமல் இருக்கவேறு கட்டளையிட்டனர்(ஒன்று சேர்ந்தால் நாங்கள் ஊரையே அதகளம் பண்ணுவோம் என்று அண்டை வீட்டுக் கிழவன் ஒருவன் புகார் செய்து விட்டான்). இது ,எல்லாம் அவங்க காட்டும் தீபாவளி Blackmail தான் என்று புரிந்து கொண்டேன், வீட்டிற்குத் தெரியாமல் பக்கத்துச் சந்தில் போய் கிரிக்கெட் விளையாடப் போனதால், அந்த அண்டை வீட்டுக் கிழவன் எங்களை மேலும் ஒருமுறை போட்டுக் கொடுத்துவிட்டான். அவனால் தான் ஒருவாரம் முன்பு ஒரு பாக்கெட் பிஜிலி வெடியாவது வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையும் போனது.

              ஆனால் இந்த அய்யா எப்படி, ஆண்டவர் மெட்ரிகுலேசன் ஸ்கூல் ஸ்டார் ஸ்டூடன்ட்-னா சும்மாவா ? இதற்காக ஒரு சிறிய சிறுசேமிப்பு நிருவனத்தினையே தொடங்கினேன். எப்படி இந்த யோசனை வந்தது தெரியுமா?? ஒரு நாள் மாலை - அப்பொழுது பிரபலமாக டீவீயில் விளம்பரம் பண்ணும் கலைமகள் சபா, அனுபவ் என்று பல நிறுவனங்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்று ஒரு சிவப்புத் துண்டு கோஷ்டி, கூட்டம் போட்டுக் கொண்டு கத்திக் கொண்டிருந்தனர், கடையில் பஜ்ஜி வாங்க சென்ற எனக்கு அப்பொழுது தான் உதித்தது அந்த யோசனை.

                       எங்கள் வீட்டுப் புழக்கடையில் வைத்திருந்த தோட்டத்திற்கு VGP என்று பெயரிட்டு நிறைய சாமந்திப் பூக்களும், டேபிள் ரோஜாக்களும், தக்காளிச்செடிகளையும் காலாண்டுத் தேர்வுக்கு முன்னரே நட்டுவைத்து, அதில் வளரும் ஒவ்வொரு செடிக்கும் என் நண்பர்கள் பெயர் வைத்து 25 பைசா , 50 பைசா என்று சேர்த்து வைத்து வந்தேன். இதில் சில சமயம் என் அம்மா வாங்க சொல்லும் காய்கறி லிஸ்ட்டில் தக்காளி இருந்தால் அன்று 2 , 3 ருபாய் வரை லாபம் கிடைக்கும். இதில் கூடப் பிறந்த தம்பியை வேறு சமாளிக்க அப்பப்போ mangobife , bigfun என்று கமிசன் கொடுக்க வேண்டும்..

                             இப்படி எல்லாம் சேர்த்த ஒரு 20 ரூபாயில், 10 ரூபாய்க்கு டாம் டாம் கட்டும் (25 உருப்பிடி), ஒரு பாம்பு மாத்திரை பாக்கெட், இரண்டு கலர் தீப்பெட்டி, அரை பாக்கெட் சாட்டைக் கயிறும் வாங்கும் போது, ஒரு கார்டூன் பொம்மை வெடியினையும் லபக்கினேன். வீட்டிலிருந்து கார்த்திக் ஒரு ஊது பத்தியை கொண்டுவந்தான்.

                 அம்மா வருவதற்கு எப்பவுமே ஆறு மணி ஆகும், இன்று போனஸ் போடணும் அதனால வர எழரையாகும் என்று காலையிலே சொல்லிவிட்டுப் போனார்கள். ஆகவே , திங்கள் கிழமை வரும் தீபாவளிக்கு இன்றிலிருந்து விடுமுறை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. வேலைக்கு சென்ற அம்மா இன்னும் திரும்பவில்லை, நானும் எனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த டாம், டாம் பட்டாசினை எடுத்து கொட்டாங்குச்சியில், மரப் பொந்தில், பாறை இடுக்குகளில் என்று வித விதமாக வெடித்து மகிழ்ந்தோம்.

             அப்பொழுதுதான் எங்கள் பாதையில் அடிக்கடி குறுக்கிடும் கிழவனைப் பழி வாங்கும் திட்டம் உருவானது. கணேஷ், மிக புத்திசாலி, அழகு , அறிவு , நல்ல சிவப்பு அவன் கொடுத்த திட்டம் தான் அது. அருகிலிருந்த மாட்டுச் சாணத்தை எடுத்து அந்தக் கிழவனின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு, அதற்க்கடியில் இரண்டு வெடியை எடுத்துத் திரியைக் கிள்ளி வைத்து விட்டு நகர்ந்தான், அந்தப் புனிதமான காரியத்தினை செய்ய என் தம்பியை அழைக்க யாரும் அந்தத் தெருவில் நடமாடாத நேரம் மெகு விரைவாகச் சென்று பற்ற வைத்து விட்டு வந்துவிட, நாங்கள் எதிர்பார்த்த சாண மழை அந்தக் கிழவனின் வீட்டுச் சுவற்றில் ஓவியம் வரைந்தது.

                 எங்கள் சிரிப்பொலி அடங்குவதற்கு ஒரு அரைமணி நேரமானது, (கணேஷின் சட்டையில் விழுந்த சாணியின் கறை, அவன் வீட்டில் அடி வாங்கும் வரைத் தெரியாது). இப்படி கோலாகலமாகத் தொடங்கிய அந்த தீபாவளிக் கொண்டாட்டம் எனக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ச்சி தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

                       மிஞ்சி இருந்த இரண்டு டாம் டாம் வெடியினையும் , ஒன்றாக இணைத்து தெருவின் முச்சந்திக்கு அருகில்,சாலையின் நடுவே வைத்தேன். கையிலிருந்த ரோஜா அகர்பத்தியை ஊதிவிட்டு, அந்த வெடியின் நுனியில் கொண்டு வைக்கும் பொழுது, "அறிவிருக்காடா உனக்கு ! ஆள் வர்றது உன் கண்ணுக்கு தெரியலையா !" என்று ஒரு பேய்க்குரல் ( அந்தக் குரலை பின்னர் நான் குயிலின் குரலோடு ஒப்பிட்டு பாடிய வரலாறு உங்களுக்கு தெரியாது).


                மஞ்சள் நிறச் சட்டையும்,வெள்ளை நிற கவுனும் போட்டுக் கொண்டு, கோபிப் பொட்டும், டிசம்பர் பூவைச் சூடியும் ஒரு பொண்ணு , முகத்தினை மட்டும் ஆனந்தராஜ்ஜை பார்க்கும் கௌதமி மாதிரி முறைத்துக் கொண்டு என் முன்னே நின்றாள். ஒரு பொண்ணு என்னை முறைப்பது, எனக்கு மிக அருகில் இருப்பது, கோபப் படும் பொழுது நெற்றி சுருங்கி அந்த கோபிப் பொட்டு பாம்பு போலே நெளிவது இவையெல்லாம் எனக்கு அன்று தான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு அப்போ நிரோஷா மாதிரி இருந்தாள், நானும் உடனே ராம்கி மாதிரி ஏதாவது பண்ணனும் என்று தோன்றியது . ஆனாலும், என்னை அத்தனை சிறுவண்டுகளுக்கு மத்தியில் அவள்"டா" என்று அழைத்துவிட்டாள் அல்லவா, அதனால் நான் அவளை பழிவாங்க வேண்டும். 

                   ஸ்கூல் டிராமா-வில் கூட நான் கட்டபொம்மனாய் நடிக்கும் பொழுது, எனக்கு சேவகர்கள் போதவில்லை என்று என் சீனியர்களே எனக்கு சாமரம் வீசினர், அப்படிப்பட்ட என்னை 'டா' என்று அழைத்த அவளுக்கு பாடம் புகட்டனும் என்று மீண்டும் அந்த டாம் டாம் வெடியை பற்ற வைக்க குனிந்தேன். ..இந்த நொடிதான் என் கதையினையே மாற்றிவிட்டது . ஆம் , நான் அந்த வெடியினை ஏற்கனவே பற்ற வைத்திருக்க வேண்டும், ஏனோ மெதுவாக எரிந்து வந்த திரி , நான் சரியாக குனியவும் அந்த இருவெடிகளும் என் மூஞ்சிலே வெடிக்கச் செய்தது . மூஞ்சிலே புகையும்,கரியும் , கையிலே அந்த வெடியில் இருக்கும் கல் தெறித்த வலியும், தலையிலே பேப்பர் சுருளும், காதில் "கொய்.." எனும் ரிங்காரம் மட்டும் ஒலிக்க, மெதுவாகத் திரும்பினேன், அன்று அந்தக் கிழவனின் நிலையை விட எனக்கு மோசமாக இருந்தது. எல்லோரும் ஒரே சிரிப்பு தான், அவளும் சேர்ந்து சிரித்தாள்.. அதற்கு பின் அந்த தீபாவளி எனக்கு சிறப்பாக இருக்கவில்லை .....ஏன், அவள் கூட இன்னும் அந்த சம்பவத்தினை மறக்காமல் என்னை பார்க்கும் போதெல்லாம் "களுக்'' என்று சிரிக்கிறாள். இப்போ வடிவேலு சொல்லும் "வடை போச்சே " என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது.

         ஹலோ , நீங்களே சொல்லுங்க ! அந்த டாம் டாம் வெடி கொஞ்ச நேரம் கழித்தோ , இல்லை நான் குனியும் முன்னரோ வெடித்திருக்கலாம் அல்லவா ?? 
  "என்ன சொல்றிங்க !!??? "
"அட சத்தமா சொல்லுங்க" .. 
 ஓ அதுவா "Wish you the same , Happy deepavali " -- 
----------
நன்றியுடன் கரிகாலன்

5 கருத்துகள்:

 1. oh thank you nanba, it's all started from our childhood... but now only i think that i got pass mark.... but you are great writer (but yet to write) than me. Am sure...

  If u write, u can grow like chetan bhagat... (that kind of fire in u)..It's my duty to remembet u..

  I too say very honestly

  பதிலளிநீக்கு
 2. அட்ரா சக்க.. அட்ராசக்க அட்ராசக்க... பரவால்லியே பயங்கர ஞாபக சக்தி தான் உனக்கு... :))))

  பதிலளிநீக்கு
 3. //( அந்தக் குரலை பின்னர் நான் குயிலின் குரலோடு ஒப்பிட்டு பாடிய வரலாறு உங்களுக்கு தெரியாது).//
  இந்த கதையையும் சொன்னாதான் என்னவாம்? கொறஞ்சா போயிடுவிங்க?

  பதிலளிநீக்கு