வெள்ளி, 3 டிசம்பர், 2010

நான் மிகவும் ரசித்து உண்ட பத்து பதார்த்தங்களின் கதை:(full version)

நான் மிகவும் ரசித்து உண்ட பத்து பதார்த்தங்களின் கதை:

என்னோட ப்ளாக்னா என் இஷ்டத்துக்கு எழுதலாம்னு கிடைச்ச சுதந்திரத்தின் வெளிப்பாடு தான் இது ...

இந்த பதார்த்தமங்கள் எல்லாம் மிக ருசியானவையாக இல்லாமல் போனாலும்,நான் உண்ட சூழ்நிலையும் இடமும் தான் அதை நினைவில் கொள்ள செய்கிறது.

கொடைக்கானல் Carlton ஹோட்டல் 
10 .கொடைக்கானல் - என் வாழ்க்கையிலே நான் நினைத்த கனவு வேலை கிடைத்த நேரம் அது.நான் ஒரு ஷேர் புரோக்கிங் கம்பெனியில் சேல்ஸ் வேலை கிடைத்தவுடனே , அந்நிறுவனத்தின் ஒரு get-together கொடைக்கானலில் நடந்தது,அதுவரை நான் பார்க்காத luxurious life பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்த தருணம்.
coffee, tea, ice-cream , juice, salad, soup , cooldrinks, chinese, continental,north indian என எல்லா வகை உணவுகளையும் ஒரு பிடி பிடித்த தருணம்.அதுவும் ஒரு மில்க்ஷேக் வாங்கி,தேன் ஊற்றி,ஜாமூன் வைத்து decorate செய்து,என் ரூமில் இல்ல பாத் டப்பில் இதமான வெந்நீரூற்றி படுத்துக் கொண்டே சாப்பிட்டது ......
.ம்ம்ம் மறக்க முடியல(அதுக்கப்புறம் வயிற்றுப்போக்கால் பட்ட அவதி ஒரு தனி கதை)
9.முட்டைக் குழம்பு:-
            சென்னையில் எனது பிரம்மச்சாரி வாழ்க்கை ஆரம்பித்த பின்னர், செத்து போன நாக்கு பல நாட்களுக்கு பின் உயிர்த்தெழுந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்( உபயம் : திரு .ரமேஷ்).அப்படி ஒரு முட்டைக்குழம்பு இனி என் வாழ்நாளில் நான் சாப்பிடுவேனா என்று காலம் தான் பதில் சொல்லும். . இரவு 11  மணி வரை சமையல் செய்து, சிறு குடலை பெருங்குடல் விழுங்கும் நிறம் பார்த்து , தட்டை எடுத்து அமர்ந்து ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தால் ...அனகொண்டா தீனி தான் ... வெஜிடேரியனாய் பிறந்ததற்கு இதனால் வருத்தப் படுகிறேன்..

8.கூட்டாஞ்சோறு:
      எல்லோர் வாழ்விலும் வசந்த காலமான கல்லூரி நாட்களில்,என் வகுப்புத் தோழி ஒருத்தியுடைய அண்ணனின் கல்யாணம் சென்று வந்து, சினிமா போகலாம் என்று திட்டம் போட்டோம். என் மிக நெருங்கிய தோழி ஒருத்தி எங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று யோசனை சொன்னாள். அது வரை, நான் யாரையும் வீட்டுக்கு அழைத்ததில்லை. தோழியின் விருப்பப்படி எல்லோரும் எங்கள் வீட்டுக்கு புறப்பட்டோம் (நான் அழைக்கவில்லை காரணம்  -என் பொருளாதார சூழ்நிலையில் அப்படி ஒரு கும்பலை அழைக்கவும்,அவர்கள் வருகிறேன் என்று சொல்லும் போது மறுக்கவும் தைரியம் வரவில்லை).

                 அம்மாவிடம் எப்படியாவது சொல்லி(கெஞ்சி),கடன் வாங்கியாவது உபசரிக்கனும்னு நினைத்துக்கொண்டே போனோம்.நாங்கள் போன பேருந்து பஞ்சர் ஆகிவிட நடந்தே போனோம் அவ்வளவு களைப்பு, வீட்டிற்கு முன் பார்த்தால் எங்க அப்பா ."என்னடா ? கிளாசுக்கு கட்டா?" என்று சிரித்தவாறே எல்லோரையும் வரவேற்றார்.(அவர புரிஞ்சுக்கவே முடியாது).எல்லோருக்கும் பெப்சி வாங்கி கொடுத்து உபசரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.எங்க அம்மாவும், அந்த சூழ்நிலையில் எங்க ஒரு வாரத்துக்கு தேவைப்படும் காய்கறியை அந்த ஒரே நாளில் போட்டு கூட்டாஞ்சோறு செய்தார்கள்.(அன்று மிகவும் சுமாரான சமையல் தான்).அதை நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத பசுமை நினைவுகள்.மீண்டும் கிடைக்காத சந்தோசம் ..அந்த வறுமையிலும் கூட எங்கள் நிலை யாருக்கும் தெரியாமல் வாழக் கொடுத்த என் அம்மாவை நினைத்து இன்றும் பெருமிதப்  படுகிறேன்

7. கணேஷ்,கார்த்தி,இத்யாதி - பொங்கல் தீபாவளி:- இந்த பொங்கல், தீபாவளி என்ற இரண்டு விழாக்களின் முழுமையே என் ஊர் நண்பர்களாகிய கணேஷ்,கார்த்திக் ஆகிய இவர்களுடன் நான் சாப்பிடும், பகிர்ந்து கொள்ளும் பண்டங்கள்.முக்கியமாக எங்க வீட்டு வடை,பஜ்ஜி,கேசரி,மஞ்சள் உப்புமா,சொதி, கார்த்திக் வீட்டு மைசூர் பாகு,கணேஷ் வீட்டு ரவா லாடு,வீட்டுக்குள்ளே கிரிக்கெட், இரவு முழுதும் அரட்டை.கேவலமான சிரிப்பு. கொஞ்சம் அடிதடி,நக்கல், திருட்டு கொய்யா என நவரசமும் ததும்பும்.
 மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்.

6.karur burger -முட்டை கரம் - செட்:-
என்னுடைய பருத்த தோற்றத்திற்கு முதன்மை காரணம்.

தட்டை போன்று சிறிய அளவில், ஒரு ருபாய் நாணய அளவில் உள்ள தட்டை அடையில் இரண்டு வகை சட்னியுடன், காரட்,பீட் ரூட் ,வெங்காய கலவையினை சேர்த்து தருவார்கள். இதையே , முட்டையுடன்,முறுக்குடன், அப்பளத்துடன் என்று பல வகையில் செய்வார்கள். ஏழைகளின் பீஷா எனலாம்.

வெவ்வேறு நபர்களுடன் வகை வகையாக வெவ்வேறு கடைகளிலும் நான் வாடிக்கையாளராக வாங்கித் தின்ற காலம் .இரண்டு வருடம் கழித்து நான் சென்றாலும் என் முகம் மறவாத கடை முதலாளிகளும் உண்டு.அப்பப்பா எத்தனை வகை- நானே சில வகைகளை எப்படி போடுவது என்று கடை வைத்திருப்பவரிடம் சொல்வதுண்டு.

ஜேம்ஸ் பான்ட் தன் படங்களில் எப்படி விஸ்கி ஆர்டர் பண்ணுவாரோ ? அதை விட அழகாக நான் கரம் பொரி ஆர்டர் பண்ணுவேன்.என் பெயர் சொல்லி அக்கவுன்ட்டில் திண்ணவர்களும் உண்டு.என் நண்பன் ஜெகன் ,கணேஷ் ,கார்த்தி என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கும் ஆசை வந்து விட்டதா? வாருங்கள் போகலாம் கரூருக்கு(ஆனால், விலைவாசி ஏற்றத்தில் எல்லாம் இரண்டு மடங்கு ஏறிவிட்டது - ஒருவரிடம் கேட்டால், அவர் சொல்கிறார், "கடலை,பொரி,முட்டை எல்லாம் விலை ஏறிடிச்சு ஏதோ receission -ஆம் அவன் வந்து ஏத்தி விட்டுப் போயிட்டானாம் படு பாவி !!!" என்று ...

5.ஜகன் வீட்டு பிரியாணி:
                    தொடர்ந்து ஒரு நான்கு வருடம் december 25 கிருஸ்துமஸ் அன்று நண்பர்களுடன் ஜகன் வீட்டில் விருந்து நடக்கும்.10௦ பேர் வந்தாலும் தனி ஆளா சமையல் செய்யும் அவரின் அம்மா,சாப்பாடு பரிமாறினால் சும்மா ரெண்டு கை நிறைய இருக்கும்,அப்படி ஒரு அள்ளு அள்ளும்போதே  நமக்கு எச்சில் ஊற ஆரம்பித்துவிடும் .இரண்டாம் தடவை சோறு வாங்கினா அவனுக்கு இன்னொரு வயிறு இருக்குன்னு அர்த்தம்.அந்த சாப்பாடு செறிப்பதற்கு பனை மரம் தான் ஏற வேண்டும்.
             
                    அதே சமயம், நான்,முரளி என சைவர்களுக்கு தனி சமையல்,அதுவம் தடபுடலாக கேரள பாயசத்துடன் நிறைவடையும்.

அசைவமோ,வகை வகையா இருக்கும்.சாப்பாடு முடிந்த பின் அனகோண்டா பாம்பு மாதிரி நெளிந்து வருவோம்.ஆனாலும் மாலை நான்கு மணிக்கெல்லாம் 10 -15 பஜ்ஜி,1/4 கிலோ மிச்சர், 350ml இஞ்சி டீ,ஏதாவது ஒரு பாலிவுட் படத்துடன்.கேக் சாப்பிட்டுக் கொண்டே டாட்டா காட்டுவோம்.


4.சதுரகிரி சாப்பாடு:

                   போனதோ ஒரு கடுமையான மலைப் பயணம், பயணம் ஆரம்பிக்கும் முன்னரே, என் ஆச்சி செய்து கொடுத்த சப்பாத்தியை லபக்கி விட்டு,மலையின் ஒவ்வொரு முனையிலும் பஜ்ஜி,போண்டா, சுக்கு காபி,என விழுங்கிவிட்டு நடந்து கொண்டிருந்தோம்.ஒரு சிற்றோடையில் நல்ல குளியல்,உச்சியை அடைந்த பின்னர் ஒரு சிறுபசி ஆற்றினோம்.போதாதைக்கு அரை மணி நேர இடைவெளியில், நாங்கள் தங்கிய ஒரு மடத்தில் ரசம் சோறும்,கூட்டும் - அடடா .... ரசம் சோற்றை பார்க்காதது போல் நாங்கள் எழுவரும் சும்மா வெழுத்து வாங்கினோம்.

ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க்
சிவபாலன் 
இவ்வளவு தின்னா என்ன ஆகும் ?... அதே தான், இரவு மீண்டும் ரசம் சோறு சாப்பிட்டு விட்டு தூங்கினால், ஏதேதோ சப்தங்கள் என் வயிற்றில் இருந்து, ராக்கெட் லாஞ்ச் கவுன்ட் டவுன் போல், எனக்கு ஒரு கெடு வைத்தது இயற்க்கை. Nature's call யாரால் தடுக்க முடியும்? ஆனால் நாங்கள் தங்கியிருந்த மடத்திலோ 8.30 மணிக்கு மேல் யாரையும் வெளிய அனுப்புவதாய் இல்லை, ஒரு ஐடியா உதித்தது -இருக்கவே இருக்கான் என் நண்பன், ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடும் சிவபாலன்."நைட் வாக்" போகலாம் நட்சத்திர கூட்டத்தில் பளிங்கு மலை போல் இம்மலை தெரியும் வாடா என்று அழைக்க எனக்கு துணையாய் வந்தான்.

அவதார் படம் பார்த்த பாதிப்பில், அந்த குளிரில், இரவில், நிலவொளியில், மலைச் சரிவில் நடந்து வந்து,.................... (நடக்க வேண்டியவை எல்லாம் நடந்து). அங்கிருந்த சிற்றோடையில் கால் நனைக்க விரும்பி மீண்டும் கொஞ்ச தூரம் நடந்து வந்தோம்.மின்மினிப் பூச்சி தேசத்தை கண்டு மெய் மறந்து நின்ற எங்களை தோசை மனம் அழைத்தது.ஆஹா, ஆட்டுக்கல்லில் அரைத்த மாவில் ஊற்றிய தோசையும்,சட்டினியும் சும்மா எங்களை ஏதோ ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது. அந்த பனி பெய்யும் இரவில் நாங்கள் உண்ட சாப்பாடு மறக்க இயலாதது.


3.ஸ்வீட் எடு கொண்டாடு காதலை:
             
                   ஒரு குட்டிக் கதை, மிகவும் திமிர் பிடித்த பகுத்தறிவுவாதி என்று பிதற்றிக் கொண்டும், கடவுள் இல்லை என்று உரைத்துக் கொண்டும் திரிந்த அவன் அன்று கோயிலில் நின்று கொண்டிருந்தான்."பெருமாளே !!" என் காதலை காப்பாத்து என்று கொஞ்சம் சப்தம் போடும் போது அருகில் இருந்த ஒரு கிழவி ,"ஏய் தம்!பி இது பெருமாள் இல்லை பிள்ளையார்" என்று என்னை கிண்டல் அடிக்க,களுக் என்ற சிரிப்புடன் எட்டிப் பார்த்தாள் ஒரு தேவதை. அவனுக்கு அப்படியே வெக்கம் வந்து விட்டது,ஆவலுடன் எப்படியாவது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் போது திடீரென்று அடைமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

                               மாலை 5 மணி,மழை பெய்கிறது,தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லை, அவனை பார்த்து கொஞ்சம் புன்னகை வேறு, அவனுக்கு இந்த வாய்ப்பை தந்த மழைக்கு நன்றி சொல்ல- ஆ ஆ வென்று வானத்தை பார்த்து மழைக்கு நன்றி சொல்லி திரும்பினான் - அவளைக் காணவில்லை . கோயிலின் இரு மருங்கிலும் தேடினான் கிடைக்கவில்லை. அப்படியே நொந்து போய் கோயிலின் அருகில் இருக்கும் ஒரு கடை அருகில் போய் ஒதுங்கி நின்றான். ஒரு கருப்பு குடைக்குள் - வெள்ளை நிலவு ஒன்று அவனைப் பார்த்து கை அசைத்தது."பெருமாளே இது அவள் தான், என்னை கூப்பிடுறாள்"  என்று வேகமாய் மழையில் நனைந்து அருகில் சென்றாள். "பிரசாதம் -வாங்காமல் வந்துட்டியோ"என்று தன் கையில் வைத்த அந்த சிறிய இலையில் ஒரு மூலையில் அவள் சுவைத்து மீதம் வைத்த பொங்கலும்,ஒரு மூலையில் 16-ஆக மடித்த ஒரு கர்சீப்பும், 1/4 மல்லிகைப்பூவும் இருக்க.இதில் எதை எடுக்க என்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருந்தான்."என்ன முழிக்கிற, இந்த என்று அவன் நெஞ்சுக்கு நேர் அவள் நீட்டினாள்" அதை சுவைத்துக் கொண்டே,இருவரும் அம்மழையில் வந்து கொண்டிருந்தனர்.அந்த நொடி தான் அவனுக்கு தன் காதலை சொல்ல வேண்டிய உத்வேகம் பிறந்தது.ஆம், அவன் அநேகமாக தன் காதலை சொல்ல முடிவுக்கே வந்து விட்டான்.ஆனால் அவன் தன காதலை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர்,அவர்கள் நடந்து வந்த பாதையில் இருந்த ஒரு அகலமான பள்ளமும் அவர்களை வரவேற்றது.
(வாழ்க !! இந்திய நெடுஞ்சாலைத் துறை)




2.திருடி தின்னா - லீவு கிடைக்கும்
             சிவா - என் அத்தை பையன், ஆனால் அவனை நண்பன் என்று அழைப்பது தான் எனக்கு பிடிக்கும்.அவன் பிறந்த நாள் தான் எங்கள் நட்பின் வயது.ஏதோ ஒன்றை சாதிக்க பிறந்தவர்களாய் இன்று வரை பிதற்றிக் கொண்டிருக்கும் எங்களுக்குள்,உணர்ச்சிகள் தோன்றுவதற்கு முன் நட்பு என்ற பழக்கம் வந்து விட்டது.காலக்கிரமத்தில் நாங்கள் என்னவாகப்போகிறோம் என்று தோன்றுவதற்குள் நட்பு வந்துவிட்டது.ஒருத்தன் நட்பு கிடைப்பதற்காக 7 வருடம் பொருத்து பிறந்தேன் என்றும் நினைப்பதுண்டு,(அதனால் எங்களை கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் என்று நினைக்க வேண்டாம்).ஒரே தட்டில் சாப்பிட்டது முதல்,கடைசியாக தாம்பரம் ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட்டதுவரை எல்லலாமே என் நினைவில் இருப்பவை தான்,என் நெஞ்சில் இருக்கும் சம்பவம் ஒன்று :

அப்பொழுது, எனக்கு ஒரு 6 வயது இருக்கும் போது, ஒரு ஞாயிறு மாலை அவன் வீடு சென்றோம். விடிந்தால் பள்ளிக்கு போகணும்னு ஒரே மனக் கஷ்டம்.எல்லோரும் தூங்கிய பின்னர், நான் அவனிடம் என் காணாமல் போன 'மீனா' என்ற பூனையை பற்றி சொல்லி அவனிடம் அழுதுக் கொண்டிருக்க,அவன் என்னை தேற்றி வீட்டில் இருக்கும் சீடை ,முறுக்கு,லட்டு என திருடிக் கொடுத்து தின்ணச் சொன்னான்.ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால், அவனுடய ஆச்சி - சும்மா M .N .ராஜம் effect -ல முறைத்துக் கொண்டு இருந்தார்.போச்சுடா,நாம மாட்டுனோம்னு திரு திருவென ரெண்டு பேரும் விழித்துக் கொண்டிருந்தோம்.எங்களுடைய ஆசையை புரிந்து கொண்டு அவனை லீவு எடுக்க சொன்னாங்க.அன்று நான் நினைத்தேன் திருடி தின்னா லீவு கொடுப்பாங்களோ என்று.
(என்னடா சிவா உனக்கு ஞாபகம் இருக்கா?)


1.அம்மாவும் - பால் சோறும் ,சப்பாத்தியும்:
கடைசியா நான் சொல்லப் போகும் உணவு எவ்வளவு மேம்பட்டதாய்,ருசியானதாய் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்?

நான் இங்கு உணவைப் பற்றி சொல்ல இந்த இடுகையினைப்(ப்ளாக்) பதியவில்லை.நான் சாப்பிட்ட தருணங்களை சொல்லி வருகிறேன்.

நான் ஒரு பால்யச் சிறுவனாய், என் எட்டுவயது வாழ்க்கையில் செல்கிறேன்.

அன்று:-அதுவரை நான் ராஜா வீட்டுக் கன்று குட்டியாக வாழ்ந்து வந்தேன்.நான் கேட்காமலேயே அல்லது நான் விரும்புவதற்கு முன்னரே என்னைத் தேடி அவரும் புதுப்புது ஆடைகளும், விளையாட்டு சாமான்களும், சாக்கலேட்டுகளும், கேக்குகளும், பண்டங்களும் - முக்கியமாக மக்ரூன் எனப்படும் ( தூத்துக்குடியில் பிரபலம்) இனிப்பு,பால் பன் ,ரஸ்க், என என்னைத் தேடி குவிந்த பண்டங்களும் சலிப்பினை மட்டுமே கொடுத்தன,நான் அவ்வூரை விட்டு வரும்வரையில்.

இனி எனக்கு அந்த உபசாரம் கிடைக்க போவதில்லை,பள்ளி வாகனத்தில் நான் எந்த நிறுத்தத்தில்(அருகருகே மூன்று நிறுத்தம் உள்ளது) இறங்கினாலும் என்னை சைக்கிளில் வைத்து ஆரிய பவனுக்கு கூட்டி செல்ல ஆட்களும் இல்லை.லாலிபாப் இல்லாமல் பார்க்க வராத சேகர் மாமாவும் இல்லை,பஜ்ஜி வாங்கித் தரும் கங்கா மாமாவும்,முட்டை வேக வைத்துக் கொடுக்க சங்கரி அக்காவும் இல்லை.ஒரு இட்லிக்கும் மேல் நான் சாப்பிட்டாலும் அதிசயமாய் என்னைப் பார்க்கும் என் சுற்றம் இங்கு இல்லை. இது ஒரு புதிய ஊர் - அன்று நான் D- for Desert என்று பாலைவனத்தின் அர்த்தம் புரிந்தது.

எங்கள் ஊரில் ஒரு நாள், விளையாடி முடித்து என் நண்பன் குட்டி செல்வதை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என் நாய் blacky-உடன் வீட்டிற்குள்ளே நுழைந்தேன்.என் அம்மா, கொஞ்சம் கண் கலங்கியவாறு ஆட்டுக் கல்லில் மாவாட்டிக்கொண்டே, என் அப்பாவைப் பார்க்க வந்த புது விருந்தாளிகள் சொல்லும் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு கடன் என்பதன் அர்த்தம் தெரியாது ?

1 .அந்த கடன் என்ற வார்த்தை என் வாழ்க்கையைப் புரட்டி போடும் அளவுக்கு சக்தி வாய்ந்ததா?.
2 .எப்போதும் எனது உணவில் பாதியை திருட்டுத் தனமாய் வந்து தின்று செல்லும் என் அடிமை,என் செல்லம் blacky -ஐ என்னிடம் இருந்து பிரிக்கும் அளவுக்கு அந்த கடன் சக்தி வாய்ந்ததா?
புதிய ஊர் எனக்கு என்ன ஆச்சரியம் அளிக்க இருக்கிறது என்ற தொலை நோக்கு சிந்தனை இல்லாத வயதில்." (அன்று மாற்றம் எனும் பண்டத்திணை தின்று ஜீரணிக்க எனக்கு தெரியவில்லை அல்லது  வயதில்லை)"

               என்னை விட 2 வயது சிறிய என் தம்பி எதை வைத்தாலும் சாப்பிடக்கூடிய குணம் படைத்தவன் (இன்று வரை ), எனக்கு நேர் மாறானவன்.எப்போதும் போல் எனக்கு இரவு ரஸ்க் தானே என்று வாங்கி கொடுக்க, நான் சப்பாத்தி கேட்டேன் . அது தான் நான் முதன் முதலில் விரும்பி கேட்ட பண்டம் .என் அம்மா அப்போது அழுதாளா? , இல்லை சந்தோசப் பட்டாளா ?என்பது ஞாபகம் இல்லை. ஏனென்றால் நானாக விரும்பி உண்பதற்கு என்று எதுவும் கேட்டதில்லை, வற்புறுத்தி ,கதை சொல்லி, பிரயர்த்தனப் பட்டால் மட்டுமே கொடுத்ததில் பத்தியை உண்பேன் அதனால் சந்தோசப் பட்டு இருக்கலாம். அதே சமயம், அம்மா இந்த ஊருக்கு வரும்போது சப்பாத்திக் கல்லை எடுத்து வரவும் இல்லை, மறந்து விட்டாள்.

                                    ஆனால்,என் அம்மா சந்தோசப் பட்டிருக்கவே வேண்டும் இல்லையெனில் அவளுக்கு அந்த யோசனை வந்திருக்காது.ஆம், சாப்பிடும் தட்டினை கவிழ்த்து, ஒரு தம்ளரைக் கொண்டு சிரித்து சிறிதாக உருட்டி ,நேர்த்தியான,மிருதுவான சப்பாத்தியை சுட்டு, எனக்கு பிடித்தமாதிரி மொத்தம் வாங்கிய 250௦௦ மில்லி பாலில் பாதியை விட்டு,சர்க்கரை போட்டுக் கொடுத்தாள்.இன்னும் ஒன்று கேட்டேன் அவளுக்கு சந்தோசம் இரட்டிப்பு ஆனது. ஆனால் அவளுக்கு தெரியாது நான் சாப்பிடுவது , அனாதையாக்கப்பட்ட  என் செல்ல நாய் blaacky-இன் பங்கு என்று . எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர்


(உணவு அதன் சுவையில் நினைவில் நிற்கவில்லை, அது கொடுத்த உணர்வில் நிற்கின்றது )     

8 கருத்துகள்:

  1. நான் அழைக்கவில்லை -என் பொருளாதார சூழ்நிலையில் அப்படி ஒரு கும்பலை அழைக்கவும்,அவர்கள் வருகிறேன் என்று சொல்லும் போது மறுக்கவும் தைரியம் வரவில்லை -

    எனக்கு புரியது. ஆனா, நீ எனக்காவது சொல்லிருக்கலாம். நீ சொல்லிருந்தாலும் நமக்கு அப்படி ஒரு நாள் கிடைத்திருக்காது. மலரும் நினைவுகள்:)

    பதிலளிநீக்கு
  2. i bet you u cant say like this on my second post.. i intentionally post this as mokkai.

    பதிலளிநீக்கு
  3. திரு.காளிதாசன் நினைவுகள் என்பதை விட, அவன் நினைவோடு ஒன்றி செல்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. Dass... Thanx for the comments on the Biriyani and esp Injee Tea. Ithellam iniyum thodarum.. intha ulagathil Injee azhiyum varai. Nanbargal enru koodukirargalo anrellam namaku pandikai thaan. he he he he

    பதிலளிநீக்கு
  5. //என் பொருளாதார சூழ்நிலையில் அப்படி ஒரு கும்பலை அழைக்கவும்,அவர்கள் வருகிறேன் என்று
    சொல்லும் போது மறுக்கவும் தைரியம் வரவில்லை///

    உண்மையிலே இந்த வார்த்தைகளை பார்க்கும் போது என்னுடைய வீட்டுக்கு ஒரு கல்லூரி நண்பன்(பெனிவன்) வந்தநாள் தான் நினைவுக்கு வருகிறது....

    பள்ளிகூட பருவத்தில் எத்தனையோ நண்பர்கள் என்னுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்ட போதும் அவர்களை அழைத்து செல்லவில்லை...
    காரணம் என்னுடைய வீடு வசதியாக இல்லை என்று....

    கல்லூரி படிக்கும் போதும் வீடு கொஞ்சம் வசதியானது...., இன்று வரை ஒரே ஒருவனை மட்டுமே வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறேன்.... என்னுடைய வீட்டில் எல்லோருக்கும் ஆச்சர்யம்( முதல் முறையாக நண்பனை வீட்டுக்கு அழைத்தது). அவனுக்காக வீட்டில் இரண்டு வாரமாக எல்லாரையும்(அம்மா அண்ணன் பாட்டி) தொல்லை கொடுத்து கோழி குழம்புக்கு தயார் செய்திருந்தேன்...
    நாட்டு கோழி வீட்டுலே காலையில் வெட்டியாச்சு, வாழை இலை வாங்கியாச்சு, எலும்பு கறிக்கு ரெடி பண்ணி ஆச்சு...
    ஆனால் அவனுக்கு தெரியாது என்னுடைய சாப்பாடு ஏற்பாடு...
    அவன் வந்த கொஞ்ச நேரத்தில் கெளம்ப வேண்டும் இன்று சொன்னதும் எனக்கு ரொம்ப வருத்தமாக (கண்ணீரை தவிர) இருந்தது...
    நல்ல வேளை..... அவன் கடைசியாக சாப்பிடும் படியான சூழ்நிலை( என்னுடைய ஊரிலிருந்து பேருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் தான் இருக்கு).
    அவன் அன்று சாப்பிட்ட போது நான் அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.
    அவன் தொலைபேசியில் சாப்பாடு ரொம்ப அருமை என்று சொன்னபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்..

    இன்று வரை மறக்க முடியாத மகிழ்ச்சியான சாப்பாடு அது மட்டும் தான் ..... :-))

    பதிலளிநீக்கு
  6. kana,

    என் படைப்பின் வெற்றியே உனது கருத்தில் தான் நான் கண்டேன்.
    உண்மையில் நாம் சாப்பிடும் உணவின் ருசியை விட அதை பகிர்ந்து கொள்ளும் உறவுகளின் சூழல் தான் அவ்வுணவை ரசிக்க வைக்கும். 105 ரூபாய் கொடுத்து நார்த் இந்தியன் தாலி மீல்ஸ் வாங்கினாலும் ருசிக்காது..... இப்போது புரிகிறது இல்லையா .

    life is beautiful.
    உமது கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  7. Hope you would have taken this as in different. Even i too be in same financial position like you as you well aware. In that you have mentioned a food at college days due to financial position. For that i said to god it's too bad. My fifty percent comments has missed.

    Although why you have left our NSS camp days and hope that also a special one... If not...

    பதிலளிநீக்கு