செவ்வாய், 14 டிசம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 3
பாண்டிய நாட்டுத் தங்க நாணயம் 

சோணாடு கொண்ட சுந்தர பாண்டியன்.

நொண்டி முத்தன் என்று அவனை நாம் அழைப்பது அவன் மட்டும் அவன் காதில் விழுந்திருந்தால், இந்நேரம் நம் கழுத்து அவன் இடக்கையில் வைத்திருக்கும் ஒரு சிறு கத்தியால் கீறப் பட்டிருக்கும், அதுவே அவனை முத்துராஜா என்று அழைத்திருந்தோமானால்,அவன் கச்சையில் இருக்கும் தங்க நாணயம் அடுத்த கணம்  நம் கையில் விழுந்து விடும்.என்ன, இப்பொழுது நாம் முத்துராஜாவின் தங்க நாணயத்தினை பார்ப்போமா?

 அந்த இரட்டை மீன் பொறிக்கப்பட்டிருக்கும் நாணயத்தின் மறுபக்கம் "சோநாடுகொண்டான்" என்றும் பொறிக்கப் பட்டிருந்தது.இந்த நாணயத்தின் வரலாற்றில் இம்முத்தனின் பங்கும் ஒரு கடுகளவேனும் உண்டு.ஆனால் அது பெருமையான வரலாறு அல்ல.ஆம்,யார் இந்த முத்தன்?அவன் அன்று சோழ நாட்டின் பிரதான ஒற்றன். குலோத்துங்க சோழனின் பிரதான ஒற்றர்களில் ஒருவன் தான் இந்த முத்தரசன். அவன் எப்படி பாண்டியனின் அதிகாரி ஆனான் ?.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

 இன்றிலிருந்து கிட்டத்தட்ட 1882 ஆண்டுகட்கு முன் ஒரு நாள், ஆயிரட்டளி ( இன்றைய தஞ்சை மாவட்ட) எனும் ஊரின் சோழ அரண்மனையின் மகுடாபிசேக மாளிகை மிகவும் ஆரவாரத்துடனும்,ஒரு வித பரபரப்புடனும் நிரம்பப்பட்டிருந்தது.வாகைப் பூமாலை சூடி யாக குண்டத்தின் எதிரே ஒருவன் அமர்ந்திருந்தான்.அவ்வூர் அன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வுக்காக காத்திருந்தது.

வெற்றித் திலகமிட்ட அந்த இளைஞனின் உடலில் சில காயங்கள் இருந்தாலும், அவனுக்கு அணிவிக்க இருக்கும் மகுடத்தின் ரத்தினங்களை விட உயர்ந்ததாக காட்சி அளித்தது.ஆம் அது மதுரையை மீட்டு, சோழனை முடி கொண்ட அதிசய பாண்டிய தேவன் அல்லவா ?பொன் அமராவதியில், மூன்றாம் குலோத்துங்கனை வீழ்த்தி கலியுக ராமனென்றும்,சோணாடு கொண்டு முடி கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியத் தேவர் என்று வீரபிஷேகம் சூட்டப் பட்டது.

பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒளிர்ந்து வந்த பாண்டியனின் மகுடம்,தனது அண்ணனான குலசேகர பாண்டியன் காலத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் வீரத்தில் வீழ்ந்து,  அழிக்கப்பட்ட தமது பரம்பரையின் மகுடாபிசேக மண்டபம் தகர்க்கப் பட்ட போது சுந்தர பாண்டியன் எடுத்த சத்தியம் நிறைவேற்றப் பட்டது.

எந்த அரசும் தந்திரம் செய்யாமல் பிழைப்பதில்லை, தன் வீரத்தால் மட்டுமின்றி தன் விவேகத்தாலும் வெற்றி கண்ட பாண்டியனின் மகுடத்தில் முத்துக்கள் இருப்பது போல்,தமது ஆட்சியில் முத்துராசனுக்கும் ஒரு பதவி கொடுத்தான் பாண்டியன்.மணப்பாறையில்(இன்றும் திருச்சி அருகே உள்ள ஒரு ஊர்),குலோத்துங்க சோழனை வீழ்த்த தான் செய்த சூழ்ச்சிக்கு உதவியாக, பகடையாக உருட்டப் பட்டது குலோத்துங்க சோழனின் பிரதான ஒற்றர்களில் ஒருவரான முத்துராசன் எனும் நொண்டி முத்தன் தான்.

தான் செய்த ராஜ துரோகத்திற்கு பரிசாக, பாண்டியனிடம் லட்சம் பொன் அடங்கிய முடியும், தன் கீழுள்ள சேர நாட்டு மண்டலத்தில் ஆலயப் பணிகளை மேற்பார்வையிடும் வேலைக்காக சுந்தர பாண்டியனிடம் உரிமை பெற்ற மீன் பொறி பதித்த இலட்சினை கொடுக்கப் பட்டது. தனக்கு கொடுக்கப் பட்ட பரிசுகளை பார்க்கும் போது தனது வெட்டப் பட்ட காலின் காயத்தினையும் மறந்து பெருமிதத்தோடு உறுமினான்.

தான் வெட்டி வீழ்த்திய தன் சக ஊழியனான தன் எதிரி அருள் முருகனின் ஞாபகம் தான் அவனுக்கு வந்தது.,குலோத்துங்கன், ஆலோசகனான ஸ்ரீனிவாச ராகவ நம்பி எனும் அந்தணர் ஒருவரை- தன் பிரதான ஆலோசகராய் வைத்திருந்தார்.என்னதான் முத்தன் குலோத்துங்கனின் பிரதான ஒற்றனாய் இருந்தாலும், வேங்கி நாட்டு யுத்தத்திற்கு பின் வந்த இளம் வயது வஞ்சி வாலிபன் அருள் முருகனை அந்த அந்தணரின் அறிவுரையின் பெயரில் தலைமை ஒற்றனாக நியமித்தார்.

தன் வயதுக்கும், தனது இத்தனை நாள் விசுவாசத்துக்கும் மரியாதை தராத குலோத்துங்கனுக்கு பாடம் கற்பிக்கும் குரோத விஷச்செடி முத்தனுக்கு  முளைத்தது. தன் விசுவாசத்தினை பாண்டியனிடம் காட்டினான், குலோத்துங்கனிடம் தன் வேஷத்தினை காட்டினான். ஆம் , சோழனை வீழ்த்த குறிக்கப்பட்ட ஒரு நாளில், முதல் பலியாக - தன் எதிரியான அருள் முருகனின் முதுகில் தன் இடை வாளினைக் கொண்டு தன் பழியினை தீர்த்தான். முதுகினில் குத்திவிட்டு ஓடிக் கொண்டிருந்த முத்தனின் காலில் அருள் முருகனின் வேல் பாய்ந்தது.முத்துராசன் நொண்டி முத்தனாக உருவானான், அருள் முருகன் மறைந்தான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------.
பத்துப் பனிரெண்டு வருடங்கள் நொடிகளாய் கரைந்தன ,தனக்கு கிடைத்த மரியாதையை மிகவும் சுயநலமாக பயன் படுத்த தொடங்கிய முத்துராசனுக்கு தான் பழி வாங்க வேண்டிய ஒரு ஆள் நினைவில் வந்தார்.பெயர் -ஸ்ரீனிவாச ராகவ நம்பி. பத்து ஆண்டுகட்க்கும் மேலாகிவிட்டது அவரை பற்றிய செய்தி அறிந்து, குலோத்துங்கனின் அரசு கவிழ்ந்த பின், பெருமாளுக்கு சேவை செய்வதை தன் கடமையாய் ஏற்று புதுப்பித்து கட்டப் பட்டு வரும் வெள்ளியனை பெருமாள் கோயிலில் பனி புரிந்து வந்தார்.

கிட்ட தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு தன் பழைய எதிரி ஒருவனைப் பார்க்க வெள்ளியனை வந்து சேர்ந்தான். நொண்டி முத்தனுக்கு ஒரு எதிரி உருவாகப் போவது இங்கே தான் என்று தெரியாமல்,கட்டப் பட்டுவரும் கோயிலை பார்த்துக் கொண்டே வர,ராகவ நம்பி அவன் எதிரிலே வந்து நின்றார்.ஆனால், அப்பொழுது நொண்டி முத்தனின் பார்வை அவருக்கு பின் நின்றுகொண்டிருந்த மஞ்சள் நிறப் பாவை கோதையை நோக்கியது...விஷமப் பார்வை காமப் பார்வையாய் மாற உத்தேசித்த நேரத்தில் ஒரு பெருஞ்சப்தம் ஊரின் கிழக்கு பகுதியில் இருந்து கேட்டது.

ஐயோ ஐயோ!! என்ற கூச்சல் ஊரிலே இருந்து எழ,உடம்பில் சிறு சிறு காயங்களுடன் ஊருக்குள்ளே  பாய்ந்து பாய்ந்து ஓடி வந்த ஒரு புலி ஒன்று முத்தனின் கண் முன்னே தோன்றியது..

(தொடரும்)