என் வாழ்க்கையிலே அப்படிப்பட்ட சங்கடமான நாளை நான் சந்தித்ததே இல்லை, எல்லோரும் என் கையைப் பிடித்து வாழ்த்துகள் என சொல்லும் போது எனக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
எட்டாம் வகுப்பு வரை நான் படித்தது ஆங்கில வழி தனியார் பள்ளிக்கூடம். ஒன்பதாம் வகுப்பிற்கு எங்கள் குடும்ப சூழல் காரணமாக, எங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். இப்பொழுது நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையைப் பற்றி உங்களிடம் சொல்லி, புலம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏனெனில், நான் இங்கே அவளைச் சந்தித்துவிட்டேன் -எனவே எனது கதையின் களம் தேர்வாகிவிட்டது, அந்த வகுப்பில் அது வரை அவள் தான் ஸ்டாராக இருந்தாள், படிப்பு, ஓவியம், ஆடல், பாடல், விளையாட்டு என்று எல்லா துறைகளிலும் மற்ற மாணவர்களுக்கு இரண்டாம் இடம் தான் கனவாகவே இருந்து வந்தது, நான் வரும் வரை.
பள்ளி ஆரம்பித்த சில நாட்களிலேயே பெரும்பான்மையான ஆசிரியர்களின் அபிமானத்தைப் பெற்றேன்.அதிலும் ,குறிப்பாக பள்ளியில் நான் கொஞ்சம் கொஞ்சம் பேசிவந்த ஆங்கிலமே எனக்கு மிகப் பெரிய கௌரவம் அளித்து வந்தது. மற்றப் பசங்களுக்கும் 'ஆம்பிள ஜெயிச்சா பெருமை தான்னு' எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. ஆனால் நானோ? ஒருத்தனுடனும் நட்பு கொள்ளவில்லை, எல்லோரிடமும் சற்றுத் தள்ளியே இருந்தேன். அதனால் அந்த வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும் எதிரியின் எண்ணிக்கை இரண்டாக ஆனது. இரண்டு என்ற எண்ணிக்கை மிகவும் வசதியாகப் போனதால், என்னுடன் அவளை இணைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தனர். அப்பொழுதெல்லாம் காதல் என்ற வார்த்தை கெட்டவார்த்தை அகராதியில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அவர்களுக்கோ எங்களை இணைத்து கிசு கிசுப்பதே பள்ளிக்கு வருவதன் நோக்கமாய் ஆகிவிட்டது. இனியும் அவர்களைப் பற்றி என்ன பேச்சு??!! ,அவளை பற்றி சொல்கிறேன் .. அவளோட அழகு பிரமிக்கதக்கது அல்ல . ஆனால் எனக்கு அழகான பெண் என்று தெரிஞ்ச முதல் ஆளே அவள் தான் !!!
அந்த வட்ட முகம்,கன்னத்துல குழி, ரெட்டை ஜடை, ரெட்டைச் சரம் கொலுசு என இன்றுவரை தினம் ஒரு முறையாவது என் கண்ணில் வந்து போய்க் கொண்டிருக்கிறது . நல்ல பையன் என்கிற இமேஜ் இருந்ததால் , அவளாகவே என்னிடம் பேசினாள்; ஆங்கிலப் பாடங்களில் சந்தேகம் தீர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .கிசுகிசு உண்மையாகிவிடுமோ என்று பசங்கள் மத்தியில் புகைச்சல் ஆரம்பித்தது, 'இவள் சும்மாவே ரொம்ப அலட்டுவா, இவன் கூட சேர்ந்து இன்னும் ஆட்டம் ஜாஸ்தியா இருக்குமே 'என்று புலம்பினான் காளிமுத்து.(இவன் ஒரு குட்டி ரவுடி ). இதுவரை சேர்த்துவைத்துக் கதை பின்னியவர்கள்,பின்னர் எங்களைப் பிரிப்பதற்காக திட்டம் போட்டனர். ஆதலால் என்னை அவளுக்கு முன்பாக கேலி செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தனர். முதலில் என்னைக் கிண்டலடிக்கும் பொழுது அவளுக்கு கோபம் வந்தது. ஆனால், போகப் போக அவளும் என்னை கிண்டலடிப்பதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
படிப்பில் மட்டும் தான் நான் கெட்டி, விளையாட்டுல, பசங்களோட சண்டை போடுறதுல எல்லாம் எப்போதுமே ஒதுங்கிச் செல்பவன். அதனால் என்னை அவர்கள் மட்டம் தட்டிக் கொண்டே இருந்தனர். அவளுக்காகவாது என்
இமேஜ் - ஐத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன் . ஒரு நாள் விளையாட்டு வேளையில் கிரிகெட் ஆடினோம் ஆள் குறைகிறது என்பதனால் வெறும் அல்லக்கையாக நான் சேர்க்கப் பட்டேன். அன்றைய விளையாட்டில் டீம் ஜெயிக்கும் தருவாயில் கோட்டை விட, கடைசியாக என்னிடம் மட்டை அளிக்கப்பட்டது. அவளும் என்னை வேடிக்கை பார்க்கிறாள் என்பதை அறிந்துக் கொண்டேன், என் வீரத்தை காண்பிக்கும் நேரம் இதுதான் என்றாலும் -என் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டிருந்தது.ஏனென்றால், எனக்கு பந்து போடுபவன் எங்க ஊரு வாசிம் அக்ரம். அவனும் என் பல்லைப் பெயர்க்கவேண்டும் என்மீது ஆக்ரோசமாக புல் டாசாக பந்தை எறிந்தான். கண்ணை மூடிக்கொண்டு ஓங்கி ஒன்று கொடுக்க, பந்து காணமல் போனது. அவ்வளவு தான் கதையின் திசை மாறியது. டீம் ஜெயித்ததால் என்னைக் கொண்டாடினர்.
'அன்றைக்கு சாயங்காலம் வீட்டிற்கு போகும் வழியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே சென்றோம்.15 நிமிஷத்தில் செல்ல முடியும் அவள் வீட்டிற்கு 40 நிமிசமாக பேசியபடி சென்றோம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவள் என்னுடன் என்ன பேசினாள் என்று ஒரு வார்த்தைக் கூட என் ஞாபகத்தில் இல்லை. ஆனால், அவள் கைகளில் இருந்த ஊதா நிற வளையல் ஒன்று , நடந்து போகும் போது என் கை உராய்ந்தவுடன் பட்டென்று உடைந்த சத்தமும்; உடைந்துப் போன வளையலுக்காக பதறிய அவள் கண்களும்; உராய்ந்து நின்ற என் கைகளால் அவள் மெல்லக் கடித்த அவள் நாக்கின் நுனியும் கண்ட எனக்கு நெஞ்சிற்கு கீழே முதன் முதலாய் ஒரு அமிலம் சுரந்த ஞாபகம்.நித்தமும் என் படுக்கையறையிலே ரீவைண்ட் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் முழு வண்ணக் கனவுப் பாடல்.
அடுத்த நாள் தான் எனக்கு ஒரு surprise காத்திருந்தது.
வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன், வகுப்பில் இருந்த எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர்.திடீரென்று எல்லோரும் என் கை பிடித்து வாழ்த்துகள் சொல்ல ,"டேய்! என்னடா ஆச்சு இப்போ !! ஏன்டா இப்படி சொல்லுறிங்க" என்றேன்.
என் வாழ்க்கையிலே அப்படிப்பட்ட சங்கடமான நாளை நான் சந்தித்ததே இல்லை, எல்லோரும் என் கையைப் பிடித்து வாழ்த்துகள் என சொல்லும் போது எனக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
"என்னடா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற" என்று கேட்டான் ஒருவன். அப்புறம் மறுபடியும் ஒரு மூன்று நான்கு பேர் கூடி ஒன்றாக கத்தினார்கள்"டேய்!! உன் ஆளு வயசுக்கு வந்துருச்சு டா".....அவ்வளவுதான் ஒட்டு மொத்த வகுப்பும் என்னையே பார்த்தது...எல்லா பெண்களும் என்னை முறைத்த படி பார்த்தனர், அதில் ஒரு புன்னகை அரசி என்னைப் பார்க்கும் போதே தோன்றியது, அவள் நிச்சயமாக வீட்டிற்குச் சென்று என்னைப் போட்டுக் கொடுப்பாள் என்று. அதை அவள் முறைக்கும் கண்கள் தீர்க்கமாய் உண்மை என்று பறை சாற்றின.
எனக்கு சற்றைக்கெல்லாம் என்ன செய்வதென்றே தெரியவில்லை , பல நாள் திட்டம் தீட்டி என்னை மாட்டி விட்டுட்டாங்களோ என்று அப்போது உறைத்தது. என்னை வகுப்பறையில் கிண்டலடித்த விவரம் காட்டுத் தீ போல் பரவியது. நான் பயப்படுவதை கண்டு அவர்களுக்கு கொண்டாட்டம் ஆனது.
"ஐய்யோ!! இந்த விஷயம் அவளுக்கு தெரிந்தால் என்னை என்ன நினைப்பாளோ" என்று பதறினேன். நாட்கள் வேகமாகக் கரைந்தது, ஒரு பத்து நாட்களுக்கு பிறகு அவள் வருகிறாள் என்று கேள்விப் பட்டேன்.அவளை பார்க்கவே என் மனம் துடித்தாலும், என்ன பிரச்சனை வருமோ என்று பயந்து கொண்டே பதுங்கிப் பதுங்கி வந்தேன்.
எப்பொழுதும் பள்ளி ஆரம்பிக்க கொஞ்சம் முன்னரே வரும் நான், அன்று மட்டும் சரியாக பள்ளி ஆரம்பிக்கும் போது தான் வந்தேன். காலை வழிபாட்டின் போது கூட, அவள் என் எதிரில் உள்ள பெண்கள் வரிசையில் நிற்பதை அறிந்து, குனிந்து கொண்டேன். எனினும் அவளை பார்க்கும் ஆவல் என்னை தூண்டியது. சற்று ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன், எப்பொழுதும் நிமிர்ந்த படி பராக்கு பார்த்து கொண்டே நிற்கும் அவள் சற்று கீழ் நோக்கி முகத்தை வைத்து கொண்டிருந்தாள். ஆனால் முகம் மட்டும் அளவுகடந்த பிரகாசமுற்றிருந்தது. இந்த அழகு அதற்கு பின்னர் அவளை நான் பார்த்த எந்த நாளிலும் அவளிடம் இல்லை.(இன்று வரை நான் தான் அவளின் மிக அழகான முகத்தின் ஒரே சாட்சி).
எனக்கு என்னவென்றுத் தெரியாதப் புது புது யோசனைகளும் , எண்ணங்களும் அவளை பற்றி தோன்றின.காலை வழிபாட்டில் ஒரு காக்கா எச்சமிட்டால் கூட துடைக்கும் உணர்வு இல்லாத அளவிற்கு என்னை மறைந்துக் கொண்டிருந்தேன் . சட்டென்று ஒரு உணர்வு, என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது,'அவள் தான், அவளே தான் '.
என்னை பார்த்தாள்,
புன்னகைத்தாள்,
கண்களால் எதோ கேட்டாள்!!
புரியவில்லை ..
நானும் கேட்டேன் என்
கண்களை கொண்டு
"எப்படி இருக்கிறாய் என் இளவரசி!! (அவள் பெயர் அது அல்ல)''என்று ,
பதில் வருமா ? அவளிடமிருந்து.
பதில் மட்டும் இல்லை ,
குரலே வந்தது.
"தம்பி! அவள் நல்ல இருக்காளாம்!
Prayer முடிஞ்சது நாம் போகலாம்"என்றான்
ஒருவன்.
(அட !!நான் கண்களால் கேட்டது அத்தனை பேருக்கா புரிகின்றது)
வகுப்பிற்கு சென்றோம்,மறுபடியும் அவள் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டேன். வகுப்பு ஆரம்பித்தது, அவளைப் பார்க்க தைய்ரியம் இல்லாமலோ அல்லது வெக்கத்தினாலோ காளிமுத்துவிற்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவள் என்னைத் தான் தேடுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். அதே சமயம் நான் இடம் மாறி அமர்ந்ததால் காளிமுத்துவும் என்னிடம் சண்டைக்கு வந்தான். பசங்களுக்கு மத்தியில் ஒரே சலசலப்பு. "டேய் !! என்னடா சத்தம் அங்கே ?" என்று கணக்கு வாத்தியார் வேலுச்சாமி என்கிற மண்டையன் எங்களை அதட்டினார். காளிமுத்து தன கைகளை கட்டிக்கொண்டே எழுந்து சொன்னான்,"சார் ! சார் இவன் தான் சார் எப்பவும் அந்த ஓரத்துல உக்கார்ந்து இருக்கிற அவன் இன்னைக்கு என் இடத்துல உக்கார்ந்துகிட்டு , பாட வேளையில தூங்குறான் சார்! " என்று என் மீது பழி போட, வாத்தியார் என்னைப் பார்த்து ,"வர வர மாமியா!! கழுத போன மாதிரி இருக்குடா உன் பொழப்பு, காலாண்டுத் தேர்வில் நீ எவ்வளவு மதிப்பெண் தெரியுமா ?? வெறும் 45 தான் .என்ன ஆச்சுடா உனக்கு ?" என்று காரமாக கேட்டார்..
ஆம், இந்தக் காலாண்டுத் தேர்வு முழுதும் குறைவான மதிப்பெண்களை என் வாழ்க்கையில் முதன் முதலாகப் பெற்றிருந்தேன். எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. கணக்கு வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர், அன்று பரீட்சை பேப்பர் திருத்தி கொடுத்தார். "பாசானவுங்க மட்டும் என்கிட்டே விடைத்தாளை வாங்குங்க , மத்தவுங்களுக்கு எல்லாம் வேட்டு வச்சுட்டு தான் கொடுப்பேன்" என்று சொன்னார்.
முதலில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு கொடுத்தார், என் முறை வந்து நானும் திரும்பினேன், என் காது சிவந்து இருந்தது, கண்கள் கலங்கி இருந்தது. அடுத்தது fail ஆனவர்கள், அவர்களுடன் சேர்த்து பரீட்சைக்கு வராத அவளும் நின்று கொண்டிருந்தாள்.வாத்தியார் தன் மூங்கில் கம்பினை தரையில் ஒரு வட்டமிடுவது போலத் தேய்த்து எடுத்தார்.
"சார் !! "என்று எழுந்தேன் ."என்னடா?" -அவர்."அவள் பரீட்சைக்கு வராததால் தான் நிக்கிறா, அவள் fail ஆகல அதனால அவளை அடிச்சுராதிங்க " என்று சொல்ல விளைந்தேன் ஆனால் பேச்சு வரவில்லை, ஆதலால் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு அப்படியே அமர்ந்தேன்.ஃபெயில் ஆனவர்களுக்கு அடி சரமாரியாக விழுந்துக் கொண்டிருந்தது. அந்த காளிமுத்துவும் நிறைய அடிகள் வாங்கினான். என் மனசுக்குள் அவ்வளவும் பயம் , ஐயோ இந்த மண்டையன் அவளையும் அடிப்பானோ ?? என்ற பயம், "அவள் எப்படி தான் வயதிற்கு வந்ததை சத்தமாகச் சொல்லுவாள்" என்ற பயம்.
அவள் முறையும் வந்தது, அவள் கண்களை மூடிக் கொண்டு கைகளை நீட்டினாள். மறுபடியும் நான் எழுந்து 'சார்' என்றேன். "என்னடா ??, உனக்கு என்ன ஆச்சு , என்னடா வேணும் ???'' என்றார்."ஒண்ணுமில்லை சார் !!" என்றேன். கண்டிப்பா மறுபடியும் கூப்பிட்டால் எனக்கு அடி விழும், ஆனா அவளை அடிக்கும் போது என்னால் சும்மா உக்காந்து வேடிக்கைப் பார்க்க முடியாது என்று கண்களை மூடிக்கொண்டேன்.
அவர் கேட்டார், " உனக்கென்ன வந்துச்சு நீ நல்லா தான படிப்ப? ", "அது இல்ல சார்!! நான் லீவ் போட்டுட்டேன்" என்று சொன்னாள்.திடீரென்று கோபப்பட்ட வாத்தி," ஏய் களிசட !! அப்படியே மினுக்கிக்கிட்டு டிரஸ் பண்ற , உன்னை பார்த்த உடம்பு சரியில்லாத ஆள் மாதிரி தெரியவில்லையே!! பொய் சொல்லாதே என்னிடம் " என்று தொண்டை கிழியக் கத்தினார்." சார் !!! அது வந்து வந்து .."என்று இழுத்துக் கொண்டிருந்தாள் அவள்.
இனிமேலும் என்னால் பொறுக்க முடியாது , மறுபடியும் எழுந்து ,"சார்..ர் ..ர் " என்று கத்தினேன்.அடுத்த வினாடி என்னை நோக்கி அவர் பிரம்பு வந்து விழுந்தது."உனக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு டா !!"என்று ஓங்கி என் கன்னத்தில்இரு பக்கங்களிலும் மாறி மாறி தன் கைரேகையினை பதித்தார்.
வகுப்பு முழுதும் ஒரே சிரிப்பொலி, கண்ணீர் தாரை தாரையாய் எனக்குப் பெருக்கெடுத்தது, இருந்தும் அவள் reaction எப்படி இருக்குது என்று ஓரக்கண்ணால் பார்த்தேன். ஆனால், அவளோ என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். மதிய உணவு இடைவேளை மணி அடித்தது, அப்பொழுது, என்னிடம் கோபமாக பேச வந்தாள், அதற்குள் நான் வெளியே சென்று விட்டேன். பின்னர், மதிய இடைவேளையின் போது அரை நாள் லீவாக அப்படியே வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
அந்த மாலை வேளை தான் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மாலை. அடி வாங்கி அழுததால், காய்ச்சல் வந்திருந்தது, மூன்று விரல் பதிந்த என் கன்னங்களை ஒரு வாசமுள்ள கை ஒன்று தொடுவது போல் இருந்தது, அவள் தான். என் கனவுகளில் முதன் முதலாக ஒரு பெண் வந்த நேரம். நானும் வயசுக்கு வந்துவிட்டேனோ!! என்ற நினைப்பு.அந்தக் கனவினை மறுபடியும் , மறுபடியும் இழுத்து கொண்டே அந்த இரவைக் கழித்தேன். ஒவ்வொரு இரவும் அந்த கனவு தான் என்னைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக நான் பழகிக் கொண்டேன். என் கல்லூரியிலும், உயர் கல்வியிலும், அலுவலகத்திலும், சிலா நாள் மருத்துவமனையிலும் என் வழிகளை மறக்கச் செய்யும் அனஸ்தீசியா ஆனது. அந்த மருதாணிக் கைகள் என் கன்னம் வருடிவிட்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் கற்றுத் தந்தது.
வாழ்க்கையிலே அப்படிப்பட்ட சங்கடமான நாளை நான் இன்று மறுபடியும் சந்திக்கிறேன்,
எல்லோரும் என் கையைப் பிடித்து வாழ்த்துகள் என சொல்லும் போது எனக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எல்லோரும் என் கை பிடித்து வாழ்த்துகள் சொல்லும் போது ,எனக்கு மீண்டும் அவள் ஞாபகம் தான் வந்தது.மேற்கூறிய நிகழ்சிகளுக்குப் பின் எங்கள் நட்பு தொடங்கிய காலம், சண்டை வந்த காலம், சலனம் வந்த காலம் எல்லாம் கண் முன்னே ஒரு கணத்தில் வந்து போனது.
சைக்கிளில் பறந்த அவள் தாவனியின் வேகம், தண்ணீர் பிடித்து செல்லும் போது தெரியும் "ந" போன்ற நளினம், ஓரக்கண்ணால் பார்த்த தருணம், அவள் சமைத்த உப்பில்லா உணவு, ஒரு நாள் அவள் கண்ணீர், லேசாக மோதிய அவள் விரல்கள், வாசம் பிடித்த அந்த துப்பட்டா, திருவிழாவில் அவள் கொடுத்த சந்தனம்,அவள் மீது பட்டு தெறித்த மழைச் சாரல், கீழே விழுந்த கண்ணாடி உடைசல்கள், எல்லாவற்றிற்கும் மேல் அந்த திமிர் பிடித்த அவள் குணம் என்று எல்லா ஞாபகமும் இன்று எனக்கு வாழ்த்துகள் சொல்கின்றன.
ஆம் இன்று எனக்கு திருமணம்.
|
Love is important in our life but not the everything |
|
நன்றி !!!