திங்கள், 28 அக்டோபர், 2013

அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சிவனின் காதல்



காதல் தரும் துயரத்தில் மீள முடியாத நிலை அது, உலகையே அழித்து விடச் சொல்லும் வெறி மட்டுமே அதில் மேலோங்கியிருக்கும். அதுவரை கண்களுக்கு அழகாக பிரசன்னமாகியிருந்த இயற்கையின் அழகுகள் எல்லாம் வெறுப்பாக மாறி விடும். எத்தனை கனவுகள்?, எத்தனை போராட்டங்கள் ? எல்லாமுமே ஒரு வாழ்வுக்கான ஆரம்பத்திற்காகத் தான், ஆனால் அப்படி துளிர் விட்ட காதல் தான், அதற்குள் கருகிப் போனது எத்தனை கொடுமையானது??

இனம் மாறித் திருமணம் செய்து கொண்டது தானே ஒரு சமூகத்திற்கு அவமானகரமாய்ப் போய்விட்டது? ஒட்டுமொத்த நாடும் ஒரு காதலைப் புறக்கணித்தது.  காதலில் மூழ்காமல் இருந்தது பாசப்போராட்டம், இறுதியில் தான் வாழும் சமூகம் தன்னை அவமதிப்பதைத் தாளாது தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தூண்டியது. ஒரு பக்கம் தன் காதலி இறந்த சோகமும், மற்றொரு பக்கம் தங்களை ஒதுக்கிய, தூற்றிய சமூகத்தின் கோபமும். காதல் தரும் துயரத்தில் ஆற்ற முடியாத கோபம் இது, சர்வமும் நிர்மூலமாக்கப் பட்டது.

தீக்கிரையான தன் காதலியின் உடல் கருகித் தான் கிடக்கிறது. தனது வலிமையான தோள்களை கெஞ்சிடச் சொல்லிப் பணித்த அந்த மென்மையான உடலும், கருமையான விழிகளும் கருகித் தான் கிடக்கிறது. தன் ஏழ்மையை, கடின வாழ்க்கை முறையினை, தன் குறைகளை என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட மேன்மை பொருந்திய அரசிளங்குமரி தன்னை விட்டு அகன்று விட்டாள்.

”நம் இத்தனைக் கால காதல் வாழ்க்கையில் அதிகப்பட்சமாய் ஒரேயொரு கடுஞ்சொல், ஆனால் அது உண்மையாகிப் போய்விடும் என்று யாருக்குத் தெரியும்?. அந்த சொல்லுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட சக்தி? அப்படியென்றால் எத்தனை முறை சொல்லியிருப்பேன், ’நீயின்றி நானில்லை ’ என. ஒருவேளை நானும் இறந்து விட்டேனா என்ன??.
’நீ என்னுள் பாதி’ என்றேனே, இனி எப்படி உனக்கு நான் இடம் தருவது? நீ எப்படி என் இடம் பெயர்வாய்??”...

 ”சொல் தாட்சாயினி!! நீ ஏன் அப்படி செய்தாய்”.
 ”என் ஒரு பாதியாகிய நீ மரித்துப் போன பின்பு நான் மட்டும் எப்படி சிவம்?? நான் என்பது இனி ஒரு சவம். எனினும், இப்பொழுதும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியாது.”

தன் கையில் வைத்திருந்த சூலத்தால், கருகிய நிலையில் இறந்து போன சதியின் உடலை ஏந்திய படி எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் நாடு முழுதும் அலைந்து திரிகிறான்...

இப்படி ஒரு ஓவியத்தில் மறைந்திருந்த முன் கதையானது என் கண் முன்னே வந்து போனது, புராணக் காலங்களில் இருந்தே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் தனியுலகத்தின் பொது எதிரியாகவே சமூகம் இருந்து வருகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இது புராணச் செய்தியாக இருந்தாலும் இதை வரையும் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சூலத்தின் கூர்மைகளில் கிழிந்தபடி தொங்கும் சதியின் நிலை அவ்வோவியருக்கு எத்தனை துயரத்தை தந்திருக்கும்?

அந்த ச(வி)தியின் கோடுகளே, சிவனை உலகைப் பற்றிய பிரக்ஞை இல்லாத ஒரு மனிதனாகவும், தன் காதலி சவமாக இருக்கும் நிலையினை மறந்தவனாகவும், தான் எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாதவனாகவும் இருக்குமாறு அவன் முகத்தின் வெளிறியத்தன்மை காணப்படுகிறது. பின்னர் ஒருநாள் மரணம் பற்றியத் தெளிவு, வாழ்வினை மீச்சிறிய ஒரு  குறிக்கோள் ஒன்றின் பகுதியாகவும் எல்லையற்ற,  முடிவற்ற ஒரு வாழ்வின் ஒரு துளியாகவும் இருக்கும் பிறவியின் மீது ஒரு தெளிவு உண்டாகிறது. பின்னர் இந்தக் காதலே இவர்களை புராணங்களின் வாயிலாக வழிபடச் செய்யும் தெய்வங்களாக்கிறது என்பது வேறு கதையாகின்றது. இப்போது, இந்தக் கதையைப் போலவே இந்நாட்டில் காதல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது, இன்றைய போராட்டங்கள் நாளைய வரலாறாக மாறவே செய்யும்..



கிட்டதட்ட இவ்வோவியம் வரைந்து முடித்த நிலையில் ஓவியருக்கு கிடைத்திருக்கும் அமைதி நிலை. இதைக் கடக்கும் பொழுது நமக்கும் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது, அந்த நீண்ட நெடிய துயருக்குப் பின் வரும் அமைதி நிலை, அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது!. எத்தனை யுகங்களானாலும் இன்னும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நிம்மதியில் விளையும் அமைதி தான் அது.

18ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஒரு ஓவியம் தான் இது,
நீர்வண்ணங்களைக் கொண்டு காகிதத்தில் வரையப்பெற்ற இவ்வோவியத்தில் தங்கத்தினையும் அழகிற்காகப் பயன்படுத்தியுள்ளார் இதை வரைந்தவர். இதை வரைந்தவர் பெயர் தெரியவில்லை, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா பகுதியில் வரையப்படும் மினியேச்சர் ஓவியங்கள். இப்போது இந்த ஓவியம்  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அரசுப் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அதை மீட்டுக் கொண்டு வர நம்மால் ஏதும் செய்ய முடியாது தான், மீண்டும் கொண்டு வந்து நம் நாட்டில் வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆனால் நம் அருங்காட்சியங்களில் படிந்திருக்கும் தூசிகள் அவ்வோவியத்தில் வேறு யாரின் படத்தினையும் கூடுதலாக வரைந்து விடக் கூடும்

இந்த ஓவியத்தைப் பார்த்துச் செல்லும்  ஒரு அமெரிக்கனுக்கு இந்தப் புராணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதல் என்பது உலகில் ஒன்று தானே!! சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.


(பஜ்ஜி -சொஜ்ஜி - 44, ஓவியம் -01)
ஜீவ,கரிகாலன்

4 கருத்துகள்:

  1. சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.//அருமை ..காதலின் தாத்பரியம் ....நெகிழ்ந்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  2. சிவனின் துயரம் எந்த மொழி பேசுபவனுக்கும் புரியும்.

    அருமையான ஓவியத்தை கண்முன் தோற்றுவித்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு