நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்??
(இது சாப்ளினைப் பற்றிய பதிவு அல்ல)
ஒரு வாரமாக அடித்துக் கொண்டிருந்த ஃபேஸ்புக் புயலில் இந்த வாக்கியம் அலையடித்துக் கொண்டிருந்தது. இயந்திரத் தனமான உலகத்தில் தகவல் தொழில் நுட்பம் நம்மை இறுகக் கட்டிப் போட்டு விட்டு குறைந்தபட்சம் பத்து - பதினைந்து வருடம் ஆகிவிட்டது. அலைபேசியை மணந்து கொண்டு நமது தனிமை விலை போய்விட்டது. போனை எடுத்ததும் முதல் பேச்சே “எங்கே இருக்கிற?” போன்ற கேள்விகள் நம்மை சாதாரணமாகவே பொய் பேச வைத்து விடுகிறது. உலகம் முழுவதையும் ஒரு அலைவரிசையில் இணைக்கும் சாத்தியம் அறிவியலால் நிகழ்ந்து விட்ட போதிலும், சக மனிதர்களோடு நம் அலைவரிசை டியூனிங் ஆவது மிக அரிதாகிவிட்டது.
ரயில் சினேகிதம் என்கிற வார்த்தையெல்லாம் காலப்போக்கில் கரைந்து விடும் என்பது உறுதி. செல்போன் அந்த வேலையை உறுதியாகச் செய்யும். செல்போன் இருக்கையில் உனக்கு அருகில் அமர்ந்து இருப்பவன் என்றும் அறியப் படாமலே போய் விடுகிறான். அவன் வாழ்வின் சுவாரஸ்யங்கள் உனக்குப் பிடிபடப் போவதில்லை. ஒரு திடீர் நட்பில், எதிர்பாரா உதவி என்பது எல்லாம் சாத்தியமே இல்லாது போய்விடும். அரசியல், சினிமா, புத்தகம், ஆன்மீகம் என்றெல்லாம் தெரியாதவர்களோடு பேசுவதற்கு சலூன் கடைகள் மட்டும் தான் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் இப்போது நகரங்களில் இருக்கும் சலூன்கள் எல்லாம் நவீன வகை எலைட் சலூன்கள் ஆகிப் போய்விட, தெரியாத வட மாநிலத்து ஊழியரிடம், அரைகுறை ஆங்கிலம்-ஹிந்தி கலந்து கட்டிங்கா? சேவிங்கா என்று புரிய வைப்பதிலேயே அலுப்பு வந்து விடுகிறது.
ஆதித்யா, இசையருவி தான் சிரிப்பதற்கு இடமளிக்கும் போல, இதுவும் கூட தொழில்நுட்பத்தின் சாதனை தான் ஒரு படத்தினை துண்டு துண்டாக வெட்டி பாடலை, காமெடியை என்று பிரித்து கொடுத்து, அதுவும் சீக்கிரமே புளித்துப் போந் விடுகிறது. இந்த இறுக்கத்திலிருந்து சமூக வலைதளங்கள் வாயிலாவது நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் வெகு சீக்கிரமே பெரிய வன்முறைகளையும், விரோதங்களையும், ஏமாற்றங்களையும் தருகிறது. இதை எல்லாவற்றையும் தாண்டியும் ஒரு மனிதனுக்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், கொஞ்சமாவது மற்ற மனிதர்களோடு பழகவும் இடமளிக்கவும் செய்கிறது என்று நாம் மகிழ்வுறலாம். கலை மட்டுமே ஒருவனுக்கு இந்த விடுதலையை முழுமையாகச் சாத்தியப் படுத்திகிறது, கவிதை, ஓவியம், இசை, சமையல் என எந்த கலையினையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
------------------------------------------------------------------------
அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நட்பில் இருப்பவர், அவர் தமிழகத்தில் வாசகர்களிடையே நன்கு அறியப்பட்ட கவிஞர். அவரோடு பல வார இறுதி நாட்களில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு நானும் சேர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இங்கே நான் அவரது கவிதைகள் பற்றி பேச வரவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, எளிதில் யாருக்கும் கைவரப் பெறா கலை. உண்மையில் யாரையும் காயப் படுத்தாத எள்ளல், டைமிங்கான போட்டு வாங்கல், எதிர் கேள்வியில் சாய்த்தல், உல்டாவான ரைமிங் என அவ்வளவு எளிமையாக கையாள்வார்.
சென்ற வாரம் அப்படித் தான் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டிற்கு சென்றிருந்தேன், அங்கே நண்பர் கவிஞர் அமிர்தம் சூர்யா சிறுகதைகள் குறித்து மிக அருமையாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கையில் இரு சிறு தாள் இருந்தது, அதில் பேச வேண்டியவற்றை குறிப்பெடுத்து வைத்திருந்தார். கிட்ட தட்ட பேசி முடிக்கும் தருவாயில் ஃபார்மலாக சொல்லும் “எனக்கு அவ்வளவாக பேச வராது” எனும் சடங்கை அவரும் சொல்லும் பொழுது, அங்கே வந்திருந்த திரு.பாரதி கிருஷ்ணக்குமாரை குறிப்பிட்டு:
“பாரதி கிருஷ்ணக்குமார் இங்கே வந்திருக்கிறார், என்னால் அவரை போலவெல்லாம் சிறப்பாக உரையாற்ற முடியாது. என் கையில் இருக்கும் குறிப்பினை யாராவது பிடுங்கிக் கொண்டால், அவ்வளவு தான். அதற்கு மேல் என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது” என்றார் அமிர்தம் சூர்யா. அடுத்த நொடியே,
“அதே மாதிரி தான் பாரதி கிருஷ்ணகுமாரிடம் போய் ஒரு தாளைக் கொடுத்து அதைப் பார்த்துப் பேசச் சொல்லுங்கள், அதற்கு மேல அவராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாது” என்ற கமெண்ட் வந்தது, அந்தக் கவிஞர் தான் அதைச் சொன்னார்.
ஒரு நிமிடம் அந்த கூட்டமே அதை ரசித்து சிரித்தது. நிற்க, அதிர்ந்து சிரிக்கவில்லை, ரசித்து சிரித்தார்கள்.இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா?? நிறைய இருக்கிறது. சில புன்னகைகளின் நினைவுகள், நாம் விழுந்து விழுந்து சிரித்த கணத்தைக் காட்டிலும் நிலைத்து இருக்கும். Humor Sense என்பது வெறுமனே laughter அல்ல. இந்த வகையில் தான் நான் பெரும்பாலும் சந்தானம் மற்றும் வடிவேலு(ஆனால் ஆரம்ப கால வடிவேலுவிற்கு மட்டும் நான் ரசிகன் ) காமெடிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. இங்கே நகைச்சுவையில் high class, low class என்ற standard பற்றி எழுத நான் முனைய வில்லை. ஒரு பண்பட்ட ஹியூமர் சென்ஸ் தரும் நிறைவைப் பற்றி தான் எழுதுகிறேன்.
தனிப்பட்ட முறையில் தெரிந்ததாலேயே சொல்கிறேன், அவருக்கு மட்டும் இந்த நகைச்சுவை உணர்வு இல்லாமல் போனால் அவர் வாழ்வின் துயரங்களை, வலிகளை எப்படி கடந்து செல்ல முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத, அவர் கவிதைகள் அவர் பாதையில் எங்காவது நிற்கும் இடத்தில் எல்லாம் பிறக்கின்றன, அந்தப் பாதை எவ்வளவு கரடு, முரடாக வலி நிரம்பியதாக, நோய்மை கலந்து, ஏமாற்றம் தந்து, துரோகங்களாலும், சில பிரிவுகளாலும் நிரம்பியிருந்தாலும் அவர் தன் ஹியூமர் சென்ஸ் மூலமாகவே இதைக் கடக்கிறார். நான் வெறுமனே அந்த சம்பவத்தோடு இந்தப் பதிவை முடித்திருப்பேன், அதற்குள் நேற்று நடந்த சம்பவம் இந்தப் பதிவுக்கு மிகவும் தேவைப் படுகிறது.
அவருக்குப் பிரியமான ஒருவர் அன்பளிப்பாக கொடுத்திருந்த விலையுயர்ந்த செல்போன் ஒன்று அவர் நண்பர் அறையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது களவாடப் பட்டிருக்கிறது. களவாடிய திருடன் செல்போனை எடுத்து விட்டு திரும்ப செல்லும் அவசரத்தில் தன் செருப்பை மறந்து வைத்து விட்டுச் சென்றிருக்கிறான். இந்நிலையில் தன் செல்போன் காணாமல் போனதை அவர் முகநூலில் நண்பர்களுக்குப் பதிவிடும் பொழுது, “என் செல்போனை எடுத்து சென்றவன் அணிந்து வந்த செருப்பை விட்டு விட்டான், அவன் திரும்பி அதை எடுப்பதற்கு வருவான் என்று காத்திருக்கிறேன்” என்று தன் சோகத்தில் கூட ஒரு நகைச்சுவையுணர்வு இழையோடுவதை அவதானிக்கிறேன். சமீபத்தில் வந்திருக்கும் இவரது கவிதைத் தொகுப்பில் கூட அவரது humor ஐ ரசித்தேன். உண்மையில் அது மிகவும் அவநம்பிக்கை தரும் வாழ்வின் தருணம். (மன்னிக்க அந்த கவிதையை நான் இங்கே பதிய இயலாது - தொகுப்பு : குரல்வளையில் இறங்கும் ஆறு). ஆம், அந்தக் கவிஞன், என் நண்பர் அய்யப்ப மாதவன் தான்.
வாழ்வில் அவர் பெற்றிருக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவை உணர்வை பக்குவமாக அளித்திருக்கும், இதனால் சில இடங்களில் அவருக்கு பகைமை கூட தோன்றிருக்கலாம், ஏதேனும் இழப்புகள் கூட ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் இந்த உலகு நல்ல நகைச்சுவைக்கு எதிரானதும் கூட என்று சாப்ளினின் சோகமான வாழ்க்கை எனக்கு உணர்த்தியிருக்கிறது.
வேறு சில மனிதர்களோடு
இன்னொரு பதிவில் உங்களுடன்
ஜீவ.கரிகாலன்.
super athilum iyappa maathavanin anubavam ..unmaiyaana nakai suvai ...
பதிலளிநீக்குyes. thanks for ur comment
பதிலளிநீக்கு*
பதிலளிநீக்குஆம். ஜீவா..!
நீங்கள் குறிப்பிட்ட கூட்டத்தில் உட்கார்ந்திருந்த நானும் அந்த Timing -ஐ ரசித்தவர்களில் ஒருவன்.
அய்யப்ப மாதவனின் பல தருணங்களில் அவரிடமிருந்து வெகு இயல்பு போலவே அந்த வேறொரு Point of View சட்டென்று வெளிப்படும்.
நல்ல பகிர்வு..
ப்ரியங்களுடன்
இளங்கோ
இந்த சந்திப்பில் இருந்து தான் நாமும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம்
நீக்கு- ஜீவ.கரிகாலன்