புதன், 8 ஏப்ரல், 2020

நகரம் -

ஓவியம் : கோயா  


தையின் முடிவில் கதையின் மொத்த சாரம்சத்தைச் சேர்த்து ஒரு தத்துவமாகச் சொல்வதற்கு ஒரு வாக்கியம் தேவைப்பட்டது அவனுக்கு. அதற்கு முன், அவன் கதையின் முடிவை வேகமாகத் தட்டச்சு செய்தான். கதையை எப்போது எழுத ஆரம்பித்தான் என்பதே அவன் நினைவில் இருப்பதில்லை. வெட்டாமல் விட்ட விரல் நகங்கள், கதையின் முடிவில் தட்டச்சின் வேகத்தினால் விசைப்பலகையில் கீறல்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

“உன் சிறு சிறு அசைவுகள் தான் என் பெரும் நகர்வையும், இயக்கத்தையும் தீர்மானிக்கின்றன கண்ணம்மா”

ஆனால் கதையில் ஏதோ ஒரு குழப்பம் நிகழ்ந்துவிட்டது. அயற்சியிலோ, கிளர்ச்சியிலோ கதையில் வரும் அவளது முடிவில் ஏதோ தவறிழைத்துவிட்டேன். கதையின் முடிவு அவ்வாறு நிச்சயித்ததில்லை. ஆனால் வந்துவிட்டது. என்னை மீறியச் செயல் அது. ஆனால் கதைக்கான நியாயம் கிட்டாமல் போனதாய் எனக்குத் தோன்றியது.

எழுத்து ஏன் இப்படி என் மேல் வன்மம் கொண்டிருக்கிறது? எழுத்து எப்படி வன்மம் கொள்ளும்? எழுத்து என்பது என்ன?

எனது ஆழ்மனத்திலிருந்து, விழித்திருக்கும் மனதிற்கு அல்லது மனதின் மேல் தளத்தில் அல்லது மூளையால் சேகரிக்கக்கூடிய வடிவமாக மாற்றிச் சேமித்து வைக்க நிகழும் ஒரு நூதனத் தொடர்பு. அவை தான் கலை வடிவங்கள், கணிதம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

எதற்கு இப்படிப் பிதற்றுகிறேன்? எப்படி என் கதை இப்படி உருமாற்றம் பெற்றது?

அவளது ஏதோ ஒரு சிறிய தவறை அவளிடம் இழைத்திருக்கிறேன். அதனால் கதையின் போக்கையே மாற்றிவிட்டாள். கதை எத்தனை மகிழ்வுடன் இருந்தது! ஒரு மெலடி பாடலின் முடிவில் நீண்டுக்கொண்டிருக்கும் தந்தி ஒலியின் மகிழ்வைத் தரும் கதையை அல்லவா எழுதிக்கொண்டிருந்தேன்.

எப்படி இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது?

“உன் சிறு சிறு அசைவுகள் தான் என் பெரும் நகர்வையும் இயக்கத்தையும் தீர்மானிக்கின்றன கண்ணம்மா”

ஒரு வேளை கதை முடியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? இன்னும் நீட்டிக்க முயற்சிக்கலாமா?

இயலாது. நிகழ்ந்துவிட்ட ஒன்றை எதுவும் செய்ய இயலாது.

அதற்கு மேல் அதில் மாற்றம் செய்தால் அது ஒரு வன்புணர்வு. அவளது ஏதோ ஒரு சிறு அசைவைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அதுதான் என் கதையைக் கொன்று வேறு உடலுக்குள் புகுந்துக்கொண்டு இப்போது என் முன்னே வந்து கொக்கரிக்கிறது.

தலைவலியின் மிகுதியில் இருக்கிறேன். அவளை எப்படி எழுத ஆரம்பித்திருந்தேன்?

மெட்ரோ நகரத்தின் இறுக்கத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தும், அதை இலகுவாக சமாளிக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களில் இவளும் ஒருத்தித்தான். ஆனாலும் அவள் அவர்களைப் போலல்ல (இப்படி அவளைப் பற்றிப் பேசத் தொடங்கும்போதே உங்களுக்கு… ஒரு மெல்லிய கிட்டார் ஒலி கேட்கத் தொடங்கியிருக்கும். எப்படி நன்றாக இருக்கிறதா..? கேட்கவில்லையென்றால் நீங்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டு அவளைத் தேடிச் செல்லுங்கள்)

அவள் அவளைப் போல் மட்டுமே இருக்கிறாள். எங்கே தவறு நிகழ்ந்திருக்கும் என்று அங்குமிங்கும் கதையைப் புரட்டினேன்.

“ம்ஹூம்… என்றாவது ஒரு நாள் நேர்வகிடு எடுத்து உன்னிடம் வரும்போது என்னை முத்தமிடு. அதுவரை..ம்ஹூம் தான்”

என்னை உதறிவிடுவது அவளுக்கு மிகவும் எளிதான கலை. ஆனால் மறுபடியும் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் தூரத்தில் தான் தள்ளிவிடுவாள். அவள் ரொம்பவே CALCULATIVE.

இதிலா?

“எல்லாம் மனசுதான்..

இதிலா?

இந்த உலகமே ஒரு தனியறை தான். இந்தத் தனியறையும் ஓர் உலகந்தான். புரியுதாடா மக்கு?

இதிலா?

“இன்னும் கொறஞ்சது பத்து வருஷமாவது பொறுத்துக்கோ”

அவளது கூர்மையான மூக்கைப் போல் இந்த முடிவில் தெளிவாக இருந்தாள். ஊறலில் புளித்துக்கொண்டிருந்தது காமம்.

இதிலா?

“இந்த நகரத்தில நீயும் நானும் மட்டுந்தான் இருக்கோம்னு நெனச்சியா.. கொறஞ்சப்பட்சம் உனக்குப் போட்டியா வேற ஒருத்தனாவது இருப்பான்” -என்று சிரித்துக்கொண்டிருந்தாள்.

ஒரு சிறு அசைவு ஏற்பட்டது.
*
தை இந்த இடத்தில்தான் திசை திரும்பியிருக்கிறது. என்னவாகவோ மாறிவிட்டது. சிலநாட்கள் தூங்காமலிருந்த என்னை, திடீரென்று இருக்கையிலிருந்து  யாரோ தள்ளிவிட்டது போல் இருந்தது.

எழுந்து சோஃபாவில் உட்கார்ந்தபோது, முழுமையாகத் தூக்கம் கலைந்திருந்தது. சோஃபாவின் வெப்பம் மிகவும் ஆறுதலாக இருந்தது. கையருகே கிடந்த ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை இயக்கினேன். அது ஒரு செய்தி சேனல். செய்திகள் கேட்கும் பழக்கத்தை விடுத்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. அரசாங்கம் நினைக்கின்ற, பெரும் நிறுவனங்கள் நினைக்கின்ற என்னைச் சேர வேண்டிய செய்திகளும், விளம்பரங்களும் மட்டுமே என்னை வந்தடைகின்றன என்பதைத் தெரிந்துகொண்ட நான், அன்றிலிருந்து செய்திகள் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

திடீரென்று ரீமோட் வேலை செய்யாமல் போனது.

இசை அல்லது கார்டூன் இவற்றைத் தாண்டி வேறெதுவும் பார்ப்பது இல்லை. சோஃபாவில் இருந்து எழுந்து போய் டிவிக்கு பின்னால் இருக்கும் பொத்தான்களை இயக்கினால் கார்டூன் சேனலுக்குப் போகலாம். ஆனால் உடல் அயற்சியில், இருந்த இடத்தில் இருந்தபடி செய்திகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சேனலில் நேரலை ஓடிக்கொண்டிருந்தது. வசீகரமான பெண் குரல். அவளது குரலும் இப்படித்தான் இருக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னணி குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. அவளது தோற்றம் வரவேயில்லை. எப்படியும் வராமலா போய்விடுவாள் என்று காத்துக்கொண்டிருந்தேன். அவள் குரல் மட்டும் கேட்டுக்கொண்ருந்தது.

“டேய் லூசுப் பயலே… ஒழுங்கா செய்திய கவனி”

இல்லை. இது அவள் குரல் இல்லை. என் குரல். என்னுள்ளிருந்து எனக்கே கேட்ட குரல். ஓர் உடலில் இரண்டு அலைவரிசையா? சிரித்துக்கொண்டேன். இந்த விஷயம்தான் நம்ம அடுத்தக் கதைக்கு.

தொலைக்காட்சியில் மக்கள் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக, சாரைச் சாரையாக எல்லோரும் முதுகுப்புறம் காட்டியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். காணொளி ஒரு நிலைக்கண்ணாடி போல் அசையாமலிருந்து கொண்டிருந்தது.

சமையலறை சென்று, ஒரு கோப்பையைக் கழுவி, அதில் பால் பவுடரை கொட்டிவிட்டு, ஒரு தேனீர் வடிகட்டி, இரண்டு சர்கரைக்கட்டி எல்லாவற்றையும் போட்டுவிட்டு. வெந்நீரும் ஊற்றினேன்.

வெந்நீர் குளியல் போட்டாலென்ன என்றுத் தோன்றியது. தேநீர் குடித்துவிட்டுக் குளிக்கலாம் என்று ஹாலுக்கு சென்றேன்.

இன்னும் அதே செய்திதான் – மக்கள் சாரைச் சாரையாக, கூட்டங்கூட்டமாக, ஒன்றன் பின் ஒன்றாக எங்கோ சென்றுகொண்டிருந்தனர். அதே இடத்தில்தான். ஆனால் மக்கள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், பெண்கள், சிறுவர், சிறுமியர், கால்நடைகள் என எல்லோருமே..

மொத்த நகரமும் காலி செய்துக்கொண்டு போகிறதா என்ன?

அவளது குரல் இன்னும் ஒலித்துக்கொண்டு தான் இருந்தது. எனினும் ஒரு வார்த்தைக்கூட புரியவில்லை. இத்தனைக்கும் அவள் நான் பேசும் பாஷையில் தான் பேசுகிறாள். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அவள் முகம் இன்னும் காட்சிப்படுத்தப்படவேயில்லை. உண்மையில் அது ஒரு பெண்தானா? அல்லது கணினி / ரோபோ போல செயற்கைக் குரலா?

இருந்தும் ஏன் செய்தியை விளங்க முடியவில்லை? பழக்கம் போய்விட்டதாலா? சே..! என்ன ஓர் அபத்தச் சிந்தனை?

இருந்தாலும் செய்திகள் எனக்குப் புரியாமலேயே இருப்பது என்னைச் சிறுமைப்படுத்தியது. டிவியை அணைத்து மீண்டும் இயக்கினேன். அதுவே தொடர்ந்தது. அதே செய்தி. அதே குரல். அதே காட்சி. மீண்டும் அணைத்தேன். அப்படியே காலாற நடந்து வெளியே போய் வரலாம் என்றுத் தோன்றியது.

நகரம் காலி செய்யப்பட்டிருந்தது.          
                                                   
இது என்ன கனவா? அல்லது அவள் குரலா?

ஆள் அரவமற்ற நகரத்தின் கதையின் முடிவில் கதையின் மொத்த சாரம்சத்தைச் சேர்த்து ஒரு தத்துவமாகச் சொல்வதற்கு ஒரு வாக்கியம் தேவைப்பட்டது அவனுக்கு. அதற்குமுன் அவன் கதையின் முடிவை வேகமாகத் தட்டச்சு செய்தான்.

கதையை எப்போது எழுத ஆரம்பித்தான் என்பதே அவன் நினைவில் இருப்பதில்லை….

*****கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக