புதன், 8 பிப்ரவரி, 2017

தெளிவு

தெளிவு
**********

தமிழகத்தில் கொஞ்ச நாட்களாக செய்திகளுக்கு இடையே தான் அன்றாடங்கள் கழிகின்றன போலும், ஒரே நாள்ல ஒரு ஹீரோ உருவாகுவதும். அவரே ஒரு நாள் காமடியனாகுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம்.
செய்தித்தாள், பால் வாங்குவதிலிருந்து, தூங்கச் செல்லும் வரை எல்லா நடவடிக்கையுமே புரட்சிக்கு தான் இட்டுச்செல்கிறதோ என்கிற கலக்கம், இது என்ன வகை போபியா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ஊடகங்களும், அது தீர்மானிக்கும் ட்ரெண்டிங்கைப் பின்பற்றும் சமூக ஊடகங்களும் நம்மை குழப்பத்திலேயே தக்க வைத்துக்கொள்கிறது.
அதே சமயம் இன்றோ, பன்னீர்செல்வம் – என்கிற பெயர் சத்ரியன் விஜயகாந்தை விட கம்பீரமாய் இப்போது ஒலித்து வருகிறது. பேலியோ உணவாக காலையில் அம்மா பன்னீர் பொரியல் செய்துக் கொடுத்தார். அதுவே ஒரு குறியீடோ என்றும் தோன்றியது. பன்னீர் + சமைத்துக் கொடுப்பது அம்மா. பார்த்தீர்களா இப்படி எல்லாம் குழப்பம் நேர்கிறது எனும் போது சீக்கிரமாக அலுவலகம் செல்வதே சிறந்த உபாயமாகத் தோன்றியது.
வரும் வழியில் சத்குரு வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க அவருக்கு கம்பெனி கொடுப்பதாக சிவனும் அந்த ஃப்ளெக்ஸ் பேனரில். கிட்டதட்ட விகடன்ல முனிபட ப்ரொமோஷனுக்காக ஒரு நூறுபேரை வச்சு மாடலிங் சூட் நடத்தி விளம்பரம் பண்ணாங்களே, அந்த லெவலுக்கு சிவராத்திரி கொண்டாடுவதற்கு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மதத்தில் கலை வடிவத்திலோ தத்துவத்திலோ அல்லது அரூபமாகவோ வணங்கப்படும் கடவுளிற்காகன் மதிப்பீடுகளும் GOD MAN ஆக ஒரு அவதாரமாக வணங்க வைப்பதும் வெவ்வேறு படிநிலைகள். இரண்டாவது நிலையில் தான் மதம் தீவிரமான பிரச்சார இயக்கமாக மாறுகிறது. அதன் இன்றைய வடிவம் தான் சிவன் என்று கடவுளை (பெரும்பாலும் லிங்க வடிவத்தையே வணங்குவது தென்னாட்டு வழக்கம்) மனித அவதாரமாக ஆதியோகி என்று சொல்லி நெருக்கப்படுத்துவது.
SPIRITUAL EXPERIENCEக்கும் THEME PARK RIDEகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று என் நண்பன் சொன்னதை இன்னமும் நினைத்துப் பார்க்கிறேன். ஈஷா போன்ற ஒவ்வொரு ஆன்மீக அமைப்புகளும் அறக்கட்டளைக்காகவும், தொண்டு நிறுவனமாகவும் நடைபெறுவது போலத் தோற்றமளிக்கும் அதே சமயம் அங்கு சென்று வரும் நபர்கள் வாங்கும் பொருட்கள் சிலவற்றைப் பார்த்தால் அதில் ஒரு லிமிட்டட் கம்பெனியின் பில்லிங் வருமெனில், வந்தால் நமக்கென்ன, மீண்டும் குழப்பம். அதே தான் நித்யானந்தா பிரச்சினையிலும் அது அவருக்கும் அவரது பக்தர்களுக்குமான பிரச்சினை என்று விலகிவிடுவதே உத்தமமாகத் தோன்றுகிறது. ஏனென்றால் நமது பங்களிப்பு என்பது வேடிக்கை பார்ப்பது சமூக ஊடகத்தில் கருத்திடுவது.
ஆனால் நேற்று ஓபீஎஸ் மெரினாவில் அமர்ந்தது,
உணர்வுப்பூர்வமானதா அல்லது மாஸ்டர் பிளானா?
உணர்வுப் பூர்வம் ஆக்குவது தான் மாஸ்டர் பிளானா?
மாஸ்டர் பிளான் ஆனால் உணர்வுப் பூர்வமாகிவிட்டதா?
எந்த அரசியல் வரலாற்றிலாவது தொண்டர்களுக்கும் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இத்தனை முரண்கள் இருந்ததுண்டா? அது எல்லா புரட்சியிலும் மட்டுமே நடந்திருக்கிறது. மக்கள் அரசை கவிழ்த்து இராணுவ ஆட்சி வரும்போதோ அல்லது அதிகாரத்தை எதிர்த்து புரட்சி நடக்கும் போதோ தான் இத்தகைய பிளவுகள் ஏற்படுவதுண்டு.

மெரீனா புரட்சியில் மிச்சர் பன்னீர் இன்று ஒரேயிரவில் மிஸ்டர் பன்னீராக அநேகரின் ப்ரொஃபைல் படங்களாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்த திடீர் திருப்பத்தின் முக்கியக் காட்சியே, ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு நாற்பது நிமிடம் அமர்ந்திருந்தது தான் சில நிழற்படங்கள் மிகுந்த வலிமை கொண்ட மாற்றங்களை ஏற்படுத்தும். வீடியோ காட்சிகளை விட நிழற்படங்கள் வீரியமிக்கவை என்று பாலச்சந்திரனின் படுகொலையை உணர்த்திய நிழற்படங்கள் மக்களை ஊகங்களுக்குள் பங்கெடுக்க வைத்து பேச வைத்தன என்று ஒரு நிபுணர் சொன்னதை நினைவு கூர்ந்தால். இங்கே பன்னீர்செல்வம் இருந்த 40 நிமிட மவுனம் அத்தனை கவனத்தைப் பெறவும் ஒருங்கிணைக்கவும் மிகவும் உதவியிருக்கிறது.
ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இதுமாதிரியான மவுனத்தில் அல்லது இந்த வெற்றிடத்தால் தான் ஈர்க்கப்படுகின்றன. கிட்டதட்ட அவர் சசிகலாவுக்கு எதிராகத் திரும்புவாரா அல்லது சொதப்புவாரா என்று இருப்பக்கமும் 50 சதவீத வாய்ப்புடன் தான் காத்துக்கிடந்தோம். அது தான் நேற்றைய நள்ளிரவிலேயே ஒரு காமெடி நாயகனாகச் சித்தரிக்கப்பட்டவரின் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
காலையில் அலுவலகம் வரும்வழியில் எல்லோரது முகத்திலும் அப்படி அரசியல் நெடி தெரிகிறதா என்று வண்டியை ஓட்டியபடியே கவனித்துக்கொண்டிருந்தேன். ஆலந்தூர் தாண்டும் வரை ஒன்றும் அப்படித் தென்படவில்லை, வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு செல்லும் ரிங்சாலையொன்றில் வாய்க்காலுக்கு முன்னர் ஒரு நான்கைந்து பேர் வெள்ளை உடையில் காகிதங்களை ஏந்திக்கொண்டு கோசம் போட்டுக் கொண்டிருந்தனர்.

“மீண்டும் புரட்சி ஆரம்பித்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டே அவர்களை நெருங்கினேன்.
அவர்களைக் கடந்து செல்பவர்களையெல்லாம் தடுத்து நிறுத்தி தங்கள் கையிலிருந்த துண்டுப் பிரசுரங்களை அளித்தபடி இருந்தனர். நானும் அவர்கள் அருகிலேயே ஓரமாகச் சென்று கொண்டிருந்தேன். தை புரட்சி இன்னும் முடியவில்லையோ என்று அவர்களிடம் சென்றேன்.
ஒருவர் என்னிடம் வந்தார்.

ப்ரதர்
சொல்லுங்க ப்ரோ
இந்தியாவிற்காக நாம ஜெபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
அதுக்கு?
நாம………………………………………………………………………………………………….
கையிலிருந்த காகிதத்தில் ஒரு வசனம்
“ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள் மிருகத்தை வணங்குவார்கள் அவர்கள் அக்கினிக் கடலிலே மிதப்பார்கள்” என்றிருந்தது.

தெளிந்த மனதுடன் அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக