புதன், 12 அக்டோபர், 2016

மோன நிலையிலே - 2

தத்தை நெஞ்சம்




இந்த இரண்டு மூன்று வருடங்களில் துருப்பிடித்து முறிந்து விழுமளவு மனம் சோர்ந்து போகும் நேரமெல்லாம் மீட்டெடுப்பு நிகழ்கிறது அம்முவால் தான். 

குறுட்டுக் கற்பிதங்களும், சீழ் பிடித்த வரலாற்று அறிவும், நுனிப்புல் கோட்பாடுகளும், 90 கீமீட்டர் ஆரமே பயண அனுபவமும் கொண்டவனின் துலாபாரத்தில் கொழுப்பு, திமிர் இரண்டும் எடைக்கு சரிநிகர். ஆனால் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளியவள் அவள். அவள் கரிசனமிக்க அன்பு என்பது பாரபட்சமற்றது கீழத்தஞ்சையில் ஏதோ ஒரு பம்புசெட்டில் ஒற்றை நாளில் தன்னுடன் சேர்ந்து குளித்த ஒரு தோஸ்து(தோழி)க்கும் பல நாட்களாக இலக்கியம் குறித்து தீவரமாக தர்கம் புரியும் எந்த மானுடருக்கும் ஒரே அன்பு தான், அதே அளவு தான் பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் அவளுக்கு. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து, மேலை நாட்டு, மலையாள, மராட்டிய என ஏதாவது ஒரு இலக்கியத்துடன் தான் ஒரு உரையாடல் நிகழும், ஆனாலும் அவள் தன் சமையலில் மோர்க்குழம்பு வைத்த விதம் பற்றி ஒன்றொன்றாக விவரிக்கும் போதோ, வழக்கமான சுலைமானியை விடுத்து என்றாவது ஒரு ஏலக்காய் தேநீர் குடிக்கும் போதோ என்னிடம் பேசினால் என் நிலைமை உதறல் ஆகிவிடும்.

காக்கைகளற்ற ஊரில் தற்பொழுது வசிக்கிறாள் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன், அடுத்த பதிவிலும் அதே ஊர் தான் இதற்குள் கிடைத்த சில் நாட்கள் ஓய்வில் பல நூறு கி.மீட்டர்கள் அனுபவங்கள் சேர்ந்திருக்கும். காக்கைகளற்ற ஊரில் கிளிகளுக்கு பஞ்சமில்லையாம்.
போனில் பேச ஆரம்பிக்க வந்தாலே, ஒரு தத்தை அவளை பேச விடாமல் தடுக்கிறது. நான் பேசும்போது அவள் கேட்டுக்கொண்டிருக்கையில் எந்த சப்தமும் போடாமலிருக்கும் தத்தை, அவள் பேச ஆரம்பிக்கையில் சத்தம் போடுகிறது. ரொம்ப நேரம் அதே இடைஞ்சல் தான். பின்னர் அந்த தத்தைக்கு அவள் ஒரு பெயரை உச்சரிக்க சொன்னாள்.

ஆஹா டங் டிவிஸ்டரா என்று அலைவரிசையை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து கொண்டது. (என் பெயர் தான் அந்த டங் ட்விஸ்டர்)

அந்த தத்தைக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் தத்தை தனக்குப் பரிச்சயமில்லாத மொழியைப் பேச வேண்டும் என்று சொன்னதும் அமைதியாகி விடுகிறது. ஆனால் எனக்கு ஒரு மொழியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதால் சத்தம் போடுகிறேன், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நான் கூச்சல் போடுகிறேன். 50 வருடமாக எங்கள் ஊரில் எனக்கு முந்தைவர்களிடமிருந்து கற்றது இது தான், கூச்சல் போட. நான் எழுதினாலும் அது கூச்சலாகத் தான் இருக்கிறது. அந்த கூச்சலை விட உராய்ந்து போன பேனாவை காகிதங்களில் உராய்க்கும் சப்தம் மேலானது. பகுத்தறிவு என்று எழுத ஆரம்பித்த எங்கள் பேனாவின் கூச்சல் எழுத்துப்பிழையாக பார்ப்பனிய எதிர்ப்பை போதிக்க கூச்சலிட்டது.

இந்த இம்பொசிஷன் கூச்சல் ஒரு பக்கமிருக்க, இதற்குப் பழி வாங்கும் கூச்சல் இன்னொரு புறம். இடையில் அல்லேலூயா கூச்சல் வேறு.
இந்த கூச்சல் அருவருப்பாக மாற்றம் பெற்ற வரலாறு, இசையை கவின்கலையை ஒரு சமூகம் தொலைத்த வரலாற்றிட்கு இணையானது. 

ட்ராக்டர்களை எதிர்த்து பண்ணையார்களைக் கொன்றுபோட்டு மற்ற கணவான்களைத் துரத்திவிட்ட அரசியலின் வாரிசுகள் ட்ராக்டர் கடன் தள்ளுபடி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கும் மான்பு அரசியல் வரலாறுகளை உள்ளடக்கியது அந்த கூச்சலில் விளைந்தவை - கூச்சலின் மகசூல்களான இரைச்சல்கள். இரைச்சல்களாலும், கூட்டல்களாலும் கட்டியமைக்கப்பட்ட பெருங்குடும்ப கனவுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிடினும் எந்த பலகீனமும் ஏற்படவில்லை என்பது தாஜ்மஹால் வரை நீண்ட தூரப்பயணம் சென்று வந்த தத்தையின் கீச்ச் கீச்சு.

இப்போது தத்தைகளை அந்த கிராமம் இடைஞ்சலாகப் பார்க்கிறதாம், விவசாயத்திற்கு பெரும் எதிரியாம். இப்படித்தான் மயிலைக் கொன்று ஒரு கூறு நெல் போனஸாக வாங்கிய கரிசல் காட்டு வாழ்வியல் திரிபினை நான் சேகரித்துக் கொண்டிருந்த கதையில் அழகியலாக நினைத்துக்கொண்டிருந்தேன். உணவுச் சங்கிலியில் மனிதன் செய்கின்ற குளறுபடி தான் தத்தையினையும், மயிலையும் மனிதன் விரோதியாகப் பார்க்க வைத்திருக்கிறது.

மனிதன் முற்றிலும் இயற்கைக்கு எதிராக வாழ் ஆரம்பித்த பொழுதும், சென்னையில் நடந்திருந்த இயற்கைப் பேரிடரில் உண்மையிலேயே அரசு கொஞ்சம் மெத்தனமாய் இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். சே!! ஒரு தொற்று நோய் கூடப் பரவவில்லை.

ஏற்கனவே நசித்துப்போன ஒரு சிறிய இனமாக ஜைனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவர்களின் சுவடுகளைக் கூட அவர்களே மறந்து கொண்டிருக்கும் காலமிதில் ஓணம்பாக்கம் போன்ற தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனிதநடமாட்டமுள்ள பகுதிகளில் பலநூறு அடிகள் குவாரிகள் குடைந்து கொண்டிருக்கப்படுகின்றன.

காவிரியைத் தவிர வேறு விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று PRIMEஊடகங்களும், அவர்களது SUB PRIME ஊடகங்களும்(WATSAPP, FACEBOOK,TWITTER) ஏன் ஒரு போதும் கூவவில்லை.
சரி, “இந்த ட்விட்டரைப் பற்றி தத்தையிடமாவது கேட்டுச் சொல்” என்று அம்முவிடம் கேட்டேன். 

பாவம் அந்த தத்தை கீச்சும் ட்வீட்டுகள் உனக்குப் புரியாது போடா என்றாள்

உண்மை தான் எனக்குப் புரியாது தான். 

அவளிருக்கும் ஊருக்கு ஒரு புத்தகத்தை வாசிக்க அனுப்பலாம் என்று முகவரி கேட்டால், அந்த ஊரின் விலாசம் அவளுக்குத் தெரியவில்லை என்றாள், அவளுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள மனிதர்களுக்கே அந்த விலாசம் தெரியவில்லையாம். அந்த அளவுக்கு தொடர்பற்று இருக்கும் கிராமம் என்று சொன்னாள் வெறும் காக்கைகள் இல்லாத, எருமைகள் இல்லாத ஊர் என்று நினைத்திருந்தேன் - கதவு எண், அஞ்சல் எண் கூட இல்லாத ஊராக இருக்கிறது.


ஆனால் அந்த ஊரில் 2ஜி கற்றை அலைவரிசையிலிருந்து அவளுடன் கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேச முடிகிறது என்பதில் எத்தனை ஆச்சரியம்? அவளுக்குத் தொலை தொடர்பு வாய்த்திருக்கிறது, ஆனால் கிட்டவே இருந்தாலும் அவள் நினைத்தால் தான் தொடர்பு கொள்ளவே முடியும். எனக்குத் தோன்றும் வியப்பு எல்லாம், அவள் அந்த ஊரை விட்டு சில மாதங்களில் கிளம்பிய பின் அந்த ஊரில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்று தான், குறிப்பாக அந்த தத்தைகளின் நிலை…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக